மின் நூல்

Thursday, May 24, 2012

பார்வை (பகுதி-47)

முந்தாநாள் அரைத்து வைத்திருந்த இட்லி மாவு மீதம் இருந்தது.   அதை ஊத்தப்பமாக உருவாக்கிக் கொடுத்த பொழுது, "அற்புதம், வித்யா..  இன்னொண்ணு போடு"ன்னு விரும்பிக் கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு ரிஷி எழுத்துப் பட்டறைக்கு போய் விட்டான்.  அப்பா வீட்டில் இருந்தால், மகனும் அப்பாவோடேயே கூட உட்கார்ந்து சாப்பிட்டு விடுவது வழக்கம். அப்பொழுது தான் குழந்தைகளுக்கு சாப்பாட்டுப் பழக்கம் பழக்கமாகும் என்று கெளதம் சின்னக் குழந்தையாய் இருக்கும் பொழுதே செய்த ஏற்பாடு இது.

ஞாயிற்றுக் கிழமை.  கெளதமுக்கு ஸ்கூல் கிடையாது.  பக்கத்து வீடு சீனு தான் இவனுக்கு எல்லா விளையாட்டுகளுக்கும் வழிகாட்டி.  அவன் கூப்பிட்டான் என்று போயிருக்கிறான்.  "வெளியே போகும் பொழுது உன்னை வந்து கூட்டிப் போகிறேன்" என்று அவனிடம் இவள் சொல்லியிருந்தாள்.

சுடச்சுட தனக்கும் வார்த்து தட்டில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.  எண்ணையில் குழைத்த மிளகாய்ப்பொடி கிண்ணத்தில் ரிஷி போட்டுக் கொண்டது போக மீதமிருந்தது. அந்த காம்பினேஷன் அவளுக்கும் பிடித்திருந்ததில் இரண்டு ஊத்தப்பம் உள்ளே போனதே தெரியவில்லை.  டிபன் சாப்பிட்டால் ஒரு வாயாவது காப்பி குடிக்க வேண்டும் அவளுக்கு.  அவள் அம்மாகிட்டேயிருந்து தொற்றிக் கொண்ட பழக்கம்.  'என்னம்மா, இது ஒரு பழக்கம்?' என்று வித்யா ஒரு நாள் தன் அம்மாவிடமே கேட்டிருக்கிறாள்.  'ஒண்ணுமில்லேடி.. எங்கம்மா அப்படித்தான்; தான் போட்டுக் குடிச்சிட்டு எனக்கும் ஒரு டோஸ் கொடுப்பாளா?.. அப்படியே பழக்கமாயிடுத்து' என்றாள்.
இன்னொண்ணையும் அவள் அம்மா சொன்னாள்.  'வாக்கப்பட்டு இங்கே வந்து பாத்தா, என் மாமியாருக்கும் இதே பழக்கம்.  தான் குடிக்கறச்சேலாம் நானும் குடிச்சாகணும், அவருக்கு. கேக்கணுமா? என் பாடு குஷி தான்' என்றாள்.

வாழ்க்கையின் பலன் சந்தோஷம் தான் போலிருக்கு.  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணில் சந்தோஷம்.  தூர இருந்து பார்க்கிறவர்களுக்குத் தான், இன்னொருத்தர் சந்தோஷம் தெரியறதில்லே.  தெரிஞ்சாகணும்ன்னும் ஒண்ணுமில்லே. ஆனா, தெய்வப்பிறவிகள் போல இன்னொருத்தர் சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தையும் பார்க்கறவங்க இருக்காங்க;  லஷ்மணன் போல. ஏன், ஊர்மிளாவும் கூடத் தான்.

ஊர்மிளாவின் ஞாபகம் வந்ததும், நினைவிழை படக்கென்று அறுந்தது. 'இப்பவே சொல்லிவிட்டால் தேவலை.. வேறெங்காவது இருந்தால் வந்து விடுவார்' என்கிற நினைவில் செல்லெடுத்து அந்த ஆட்டோ பெரியவருக்கு அழைப்பு விடுத்தாள்.  ரெண்டே ரிங்கில் எடுத்து விட்டார்.

"பெரியசாமி தானே?.. நேத்திக்கு சாயந்தரம் மேட்லி பிரிட்ஜ் பக்கத்திலிருக்கிற கல்யாண சத்திரத்திற்கு..." என்று சொல்லும் பொழுதே, "சொல்லுங்கம்மா.. பெரியசாமி தான் பேசறேன்..  ஆட்டோ வரணுமா?"

"ஆமாம். திருப்பியும் அந்தக் கல்யாண சத்திரத்திற்குப் போகணும்.. இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்தாப் போதும்.  வீடு ஞாபகம் இருக்கில்லையா? அங்கேயே வந்திடுங்க.."

"சரிம்மா.. கரெக்டா வந்திடறேன்."

"வரும் போது ஞாபகமா உங்க பையன் ஜாதகம் இருந்தா அதையும் எடுத்து வந்திடுங்க.. உங்க குடும்ப விவரங்களும் அதிலே இருக்கட்டும்.."

"அப்படியாம்மா..  எல்லாத்தையும் குறிச்சு ஜெராக்ஸ் போட்டு வைச்சிருக்கேன்.  எடுத்தாந்திடறேன்." என்று பதில் சொன்ன குரலின் சந்தோஷம் அவளுக்கும் தொற்றிக் கொண்டது.  முன்னே பின்னே பார்த்ததில்லை.  அந்தப் பெண் யார் என்ன என்று தெரியாது.  தெரியாட்டா என்ன?.. ஒரு கன்னிப் பெண்ணிற்கு கல்யாணம் ஆவதில் தன் ஒரு சிறு முயற்சி கலந்திருப்பத்தில் ஒரு சின்ன சந்தோஷம்.  தெய்வ சங்கல்பத்தில் எல்லாம் நல்லபடி முடிந்தால் சரிதான்.

'உஷா கிளம்பத் தயாராகி விட்டாளா என்று பார்த்து விட்டு வரலாம்' என்று வித்யா அவள் வீட்டிற்குப் போனாள்.

முன் ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவள் கணவர் இவளைப் பார்த்ததும், "வாங்க.. வாங்க.." என்றார். "இதோ வந்திடுவா, உட்காருங்களேன்" என்று சோபாவைக் காட்டி விட்டு, "உஷா.. என்ன செய்றே? வித்யா வந்திருக்காங்க.." என்று குரல் கொடுத்தார்.

"இதோ வந்திட்டேன்.." என்று உள்பக்கமிருந்து உஷாவின் குரல் வந்தது.

உஷாவின் கணவர் கையில் இருந்த பேப்பரைப் பார்த்து விட்டு, "இது என்ன நியூஸ் பேப்பர், டிபரண்ட் கலரில் இருக்கிறதே.." என்று ஆச்சரியப்பட்டாள்.

"இது எக்னாமிக் டைம்ஸ்..  ஷேர் பத்தின விவரங்கள் இருக்கும்..." என்றவர் "உங்களுக்கு ஷேர் மார்க்கெட்லாம் பத்தி தெரியுமோ?"

"ஷேர்லாம் வாங்குவா, விப்பான்னு கேள்விப்பட்டிருக்கேன்.   அவ்வளவு தான் இது பத்தின என் நாலட்ஜ்.  டீடெயில்லா தெரியாது.." என்று சொல்லி சிரித்தாள். ஒரு வினாடி கழிச்சு, "தெரிஞ்சிக்கணும்னு எண்ணம் உண்டு. இப்போத்தான் எல்லாத்தையும் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்க வேண்டியிருக்கே.." என்றாள்.

"ஷ்யூர்.." என்றார் அவர்.  "முதல்லே ஒரு டிரேடிங் அக்கவுண்ட்டும் அப்பாலே டிமேட் அக்கவுண்ட்டும் ஓபன் பண்ணிடுங்க.. ஆரம்பத்திலே ஒரு பத்தாயிரம் ரூபா முதலீடா இருந்தாக் கூடப் போதும்..  விளையாட்டு போல வீட்லேந்தே சம்பாதிக்கலாம்.  ஒத்து வந்தா முதலீட்டை கொஞ்ச கொஞ்சமா அதிகரிச்சிக்கலாம்.  உஷாவை கேட்டாக்கூட இதுபத்தி நிறைய சொல்லுவா.  கொஞ்ச நேரம் டிவி முன்னாடி செலவழிச்சா போதும்..  மிஸ்டர் ரிஷி கிட்டே சொல்லுங்க.. வேண்டிதெல்லாம் செஞ்சு கொடுத்திடுவார்" என்றார்.

"அவருக்கு கதை எழுதவே நேரம் பத்தலே.  நான் உஷாகிட்டேயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்.."

"தாராளமா.  ஆனா, ரிஷி கிட்டே சொல்லிட்டு நீங்களும் அவரும் ஜாயிண்ட் அக்கவுண்ட்டா ஆரம்பிக்கறது நல்லது. இந்த மாதிரி ஷேர் மார்க்கெட் ஈடுபாடெல்லாம் இப்போ கொஞ்சம் வசதியிருந்தாலே முடியும்.  ஆனா, ரிஷி மாதிரி கதையெல்லாம் எழுதறது ஒரு சிலராலே தானே முடியும்? இட் ஈஸ் எ கிப்ட்!  அதுனாலே அந்த நேரத்தை இதுலே செலவழிச்சான்னு சொல்ல மாட்டேன். யார் யாருக்கு எது எதிலே விருப்பமும் ஆசையும் இருக்கோ, அதிலே அட்டகாசமா ஜொலிப்பாங்க.  இது அடிப்படை உண்மை. அதுனாலே அந்த விருப்பமும்,  திறமையும் உங்களுக்கு இதிலே இருந்தா இன்னிக்கு விலைவாசி இருக்கற நிலைமைலே குடும்பம் நடத்த கொஞ்சம் பொருளாதார சுதந்திரம் கிடைக்கும். அதுக்காகச் சொல்ல வந்தேன்.." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே உஷா வந்து விட்டாள். "வா, வித்யா..  வாஷிங் மெஷின்லே துணிலாம் போட்டிண்டிருந்தேனா,  சட்டுன்னு வர முடிலே.. சாரி.." என்றாள்.

"பரவாயில்லை, உஷா!  நீ வர்றத்துக்குள்ளே சார் நிறைய உபயோகமான தகவல்கள் சொன்னார்."

கணவர் கையிலிருந்த நியூஸ் பேப்பரைப் பார்த்தவுடனேயே, எதைப் பத்தி தகவல்கள் சொல்லியிருப்பார் என்று உஷாவிற்கு புரிந்து விட்டது. "ஷேர் மார்க்கெட் பத்தி தானே, வித்யா?..  அதுலே இவர் புலி.  இந்தப் புலியைப் பாத்துட்டு ஷேர் மார்க்கெட்லே வர்ற கரடி, காளையெல்லாம் பயந்து ஓடிடும்னா பாத்துக்கோயேன்!" என்று சொல்லி குழந்தை போலச் சிரித்தாள். அடுத்த நிமிடம் அவளே,"யார் கிட்ட என்ன திறமை இருந்தாலும் நாம் அதை ஒத்துக்கணும், இல்லையா?.. இன்னிக்கு இந்த ஷேர் இந்த அளவுக்குப் போகும்ன்னு இவர் சொன்னா, அது என்ன மாயமோ தெரிலே, இவர் சொன்ன மாதிரியே அப்படியே அது நடக்கும். மார்க்கெட்டை ஸ்டடி பண்றதிலே அப்படி ஒரு நிபுணர்த்துவம்! இந்த மாதிரி கணக்குப் போடறது அத்தனையும் கடுமையான சுயமுயற்சிலே இவராத் தெரிஞ்சிண்டது தான்.  ஸ்ரீராமஜெயம் எழுதற மாதிரி, ஒவ்வொரு கம்பெனியா பேர் அதோட ஏறி இறங்கின ஷேர் விலைன்னு நோட்டு நோட்டா எழுதி வைச்சிருக்கார்! பத்தாததுக்கு கிராஃப்லாம் வேறே.  பாத்தா மலைச்சிடுவே" என்றாள்.

"அப்படியா?.. உஷா! நீ சொல்லச் சொல்ல எனக்கும் இதையெல்லாம் பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னு ஆசையா இருக்கு.  சொல்லித் தர்றையா?"

"ஓ. எஸ்.." என்ற உஷா, "இதிலே இருக்கற ரிஸ்க்கையும் சொல்லித் தரேன்.  அப்புறம் உன் பாடு; அந்த ஷேர் உலகம் பாடு" என்றவள், "உள்ளே வாயேன்.." என்று உள்பக்கம் வித்யாவை அழைத்துக் கொண்டு போனாள். "'எழுத்துப் பட்டறை'க்குப் போகணுமில்லையா?.. பத்தரை பதினொண்ணு வாக்கிலே கிளம்பலாமா? சாப்பாட்டுக்கு திரும்பிடலாமிலையோ?"

"அதுவும் அங்கேயே ஏற்பாடு பண்ணியிருக்கறதா சொன்னார்.  அதையும் அங்கேயே முடிச்சிண்டு வந்திடலாமே.. என்ன சொல்றே?"

"இவருக்கு வேணுமில்லையோ?..  கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருந்து நான் எல்லாத்தையும் முடிச்சிட்டேன். பாக்கலாம்.  அங்கே நிலவரம் எப்படியிருக்குன்னு அதுக்கேத்த மாதிரி பாக்கலாம்."

"நான் ஆட்டோக்கு சொல்லிட்டேன்.  அந்தப் பெரியவர் ஆட்டோ தான். இன்னும் அரைமணிலே வந்திடுவார்."

"சரி, வித்யா.. அதுக்குள்ளே நானும் ரெடியாடறேன்."

 கெளதமையும் அழைத்துக் கொண்டு இரண்டு பேரும் வெளிவாசல் பக்கம் வருவதற்கும், பெரியசாமியின் ஆட்டோ வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

ஆட்டோவிலிருந்து இறங்கி வந்த பெரியசாமி, ரொம்ப பவ்யமாக வித்யாவிடம் ஒரு கவரை நீட்டினார்.  கவரின் நான்கு முனைகளிலும் குங்குமம் தடவியிருந்தது.

"ஜாதகம் தானே?" என்று கவரைப் பிரித்துப் பார்த்தாள் வித்யா. "தெரிஞ்சவர் ஒருத்தர் கேட்டிருந்தார்.  நீங்களும் அன்னிக்கு பையன் கல்யாணத்திற்கு இருப்பதாகச் சொல்லியிருந்தீங்களா?.. அதான்.  அவங்க கிட்டே கொடுக்கலாமேன்னு கேட்டேன்.. எல்லாம் நல்லபடி நடக்கணும்.."

"ரொம்ப சந்தோசம்மா.." என்று பெரியசாமி நெகிழ்ந்தார்.

எல்லோரும் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததும், உஷா பக்கம் திரும்பி, "நம்ம ஊர்மிளா தான் கேட்டிருந்தாங்க.. அவங்க ஆபீஸ்லே வேலை செய்யற ஒரு பெண்ணோட அக்காவாம். அதான் கொடுக்கலாம்ன்னு.."

கொஞ்ச நேரம் யாரும் பேசவில்லை. திடீரென்று, "பொண்ணு வேலை செய்துங்களா?.." என்றார் பெரியசாமி.

"இல்லைன்னு தான் நெனைக்கிறேன்.." என்றாள் வித்யா. "ஏன், உங்க பையன்னுக்கு வேலைக்குப் போற பெண்ணா இருக்கணுமா?"

"அப்படில்லாம் இல்லீங்க.. கல்யாணம் ஆனதும் எங்களை ஒதுக்கிடக் கூடாது.  தன் புருஷனைப் பெத்தவங்க இவங்கன்னு ஒரு மரியாதை இருந்தாப் போதும்" என்றார் பெரியசாமி.

லஷ்மி தெரு திருப்பம் வந்தாச்சு.  ஸ்பீட் பிரேக்கரின் மேல் மெதுவாக ஆட்டோவை ஏற்றிய பெரியசாமி, "பொண்ணு பேரு தெரியுங்களா?" என்றார்.

"பொண்ணு பேரு தானே?  லஷ்மின்னு சொன்னாங்க.."

"ரொம்ப சந்தோசம்ங்க.." என்று சொன்னபடியே, "பாத்தீங்களா.." என்று அந்தத் தெருவின் பெயர் எழுதியிருந்த சிமிண்ட் பலகையைக் காட்டினார்.  "இதைத் தாங்க சூசகமா தெரிவிக்கறதுன்னு சொல்லுவாங்க போலிருக்கு... ரெண்டு பக்கமும் சாதகம் மாத்திக்கணும்னும்பாங்க..  அதெல்லாம் பொறவு பாத்துக்கலாம்ங்க.  சாதக பொருத்தம் கூட அவங்க பாத்தா சரி.  எங்களுக்குப் பாக்கணும்ன்னு இல்லீங்க" என்றார்.

உஷாவுக்கும் என்ன தோன்றியதோ தெரியவில்லை. இத்தனை நேரம் மெளனமாக இருந்தவள் சடக்கென்று, "இந்த வரன் அமைஞ்சிடும்ன்னு நெனைக்கறேன்.." என்றாள்.

"அப்படியாம்மா.. ரொம்ப சந்தோசம்மா.. நீங்க சொன்னது நடக்கட்டும்மா.
சிறுசுங்க சந்தோசமா இருக்கணும்.  அதான் நான் வேண்டறது.."

மேட்லி பிரிட்ஜ் வந்தாச்சு;  வலது பக்கம் திரும்பி சத்திர வாசலில் வண்டியை நிறுத்தினார் பெரியசாமி..

பர்ஸைத் திறந்து வித்யா பணம் எடுத்த பொழுது, "இருக்கட்டும்மா.  பொறவு வாங்கிட்டாப் போச்சு.." என்றார் பெரியசாமி.

"இல்லை.. இல்லை.. இந்தாங்க.." என்று வற்புறுத்தி காசைக் கொடுத்து விட்டு, "அவங்க கிட்டே ஜாதகத்தைக் கொடுத்திடறேன்.  மத்த விவரத்தை போன் பண்ணிச் சொல்றேன்.." என்றாள் வித்யா.

"சரிம்மா.. ரொம்ப நன்றிம்மா.." என்று அவர் கும்பிட்டது அவரை விட ரொம்ப சிறியவர்களான அவர்களுக்குக் கூச்சமாக இருந்தது.

"சரிங்க.. நாங்க வர்றோம்.. எல்லாம் நல்லபடி நடக்கட்டும்" என்று நகர்ந்தாள் வித்யா.. அவளுக்கு சற்று முன்னால் சென்ற உஷா திரும்பி யதேச்சையாக ஆட்டோவின் முகப்பைப் பார்த்த பொழுது, மஞ்சள் எழுத்துக்களில் "லஷ்மி நாராயணர் துணை" என்று எழுதியிருந்ததைப் படித்தாள்.

அவள் நின்று அந்த எழுத்துக்களைப் படித்துப் பார்ப்பதைப் பார்த்த பெரியசாமி, "எங்க குலதெய்வங்க.." என்றார்.


(இன்னும் வரும்)

































  

20 comments:

Geetha Sambasivam said...

கணவர் கையிலிருந்த நியூஸ் பேப்பரைப் பார்த்தவுடனேயே, எதைப் பத்தி தகவல்கள் சொல்லியிருப்பார் என்று வித்யாவிற்கு புரிந்து விட்டது.//

உஷாவிற்குப் புரிந்து விட்டதுனு வந்திருக்கணுமோ? :))))

ஷேர் மார்க்கெட் பற்றிய குறிப்புகள் படித்தேன். என்னதான் காமர்ஸ் படித்திருந்தாலும் எனக்கென்னவோ இதிலே ஆர்வம் இல்லை. அதிலும் இப்போ சென்செக்ஸ் :)))))))

ஸ்ரீராம். said...

சந்தடி சாக்கில் ஷேர் மார்க்கெட் பற்றிய விவரங்கள். லக்ஷ்மி என்னும் பெயர் சகல விதத்திலும் கூடி வருவது போல தோற்றம் கொடுக்கும் நம்பிக்கைகள்.... இயல்பாகப் போகிறது!

சென்னை திரும்பி விட்டீர்களோ...?

இராஜராஜேஸ்வரி said...

தெய்வப்பிறவிகள் போல இன்னொருத்தர் சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தையும் பார்க்கறவங்க இருக்காங்க; லஷ்மணன் போல. ஏன், ஊர்மிளாவும் கூடத் தான்.

சந்தோஷப் பார்வைகள் ...

சிவகுமாரன் said...

மன்னிக்க வேண்டும் ஜீவி சார். அடிக்கடி வலைப்பக்கம் வர முடியாததால், தொடரை தொடர இயலவில்லை.

G.M Balasubramaniam said...

கடவுள் அமைத்த மேடை அதில் மாறும் கல்யாண மாலைகள் சிலர் நினைக்காமலேயே பெறப்படுவதும் கொடுக்கப் படுவதும் உண்டு. தொடர்கிறேன்.

அப்பாதுரை said...

வாழ்க்கையின் பொருள் சந்தோஷம் தான் - வாழ்வின் பலனை இத்தனை எளிமையாக எழுதி இதுவரை படித்ததில்லை.

ஸ்ரீராம் சொல்வது போல் சந்தடி சாக்கி ஷேர் மார்கெட். டீமேட் என்றால் என்ன? team mate?

கோமதி அரசு said...

வாழ்க்கையின் பலன் சந்தோஷம் தான் போலிருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணில் சந்தோஷம். தூர இருந்து பார்க்கிறவர்களுக்குத் தான், இன்னொருத்தர் சந்தோஷம் தெரியறதில்லே. தெரிஞ்சாகணும்ன்னும் ஒண்ணுமில்லே. ஆனா, தெய்வப்பிறவிகள் போல இன்னொருத்தர் சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தையும் பார்க்கறவங்க இருக்காங்க; லஷ்மணன் போல. ஏன், ஊர்மிளாவும் கூடத் தான்.//

உண்மையான சந்தோஷம் பிறரை சந்தோஷபடுத்தி பார்ப்பது தான்.
அது ஒரு பெரியகலை.

பிறர் மனது புண்படாமல் பேசுவது, பிறர் சந்தோஷத்தை பார்த்து பொறாமை படாமல் இருப்பது எல்லாம் உயர்ந்த உள்ளங்களின் செயல்.
ஊர்மிளா, லக்ஷ்மணன் பாத்திர படைப்பு அற்புதமானது.

ஜீவி said...

ஆமாம். திருத்தம் செய்து விட்டேன். நன்றி.

//என்னதான் காமர்ஸ் படித்திருந்தாலும்//

ரசித்தேன். அடுத்து ஸ்ரீராம் ஏதோ சந்தடி சாக்கு என்கிறார், பாருங்கள்!
:)))

//அதிலும் இப்போ சென்செக்ஸ்..//

எதற்கும் உஷாவின் கணவரிடம் கேட்டு விடலாமே என்று கேட்டேன்.
சிரமம் பார்க்காமல் சாங்கோபாங்கமாக அவர் சொன்னார். "'விழுவது எழுவதற்காகவே'ன்னு ஒரு பழமொழி தெரியுமில்லையா?.. அதுபோலத்தான் 'இறங்குவது ஏறுவதற்காகவே'ங்கறது இந்த உலகத்து மொழின்னார். அப்புறம் இன்னொண்ணும் சொன்னார்.
"எல்லாரும் விற்கும் பொழுது வாங்குங்கள்; எல்லாரும் வாங்கும் போது விற்றுவிடுங்கள்!" என்றார்.
சொன்னது அழகாக இருந்ததே தவிர,'எல்லாரும் இப்படியே நினைத்து விட்டால் எப்படி?' என்கிற புரிபடாத சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார் யாருமில்லை. அவரிடமே கேட்கலாம் தான்! எத்தனை தான் கேட்பது என்று பேசாமல் இருந்து விட்டேன்.. காமர்ஸில் இது பத்தி ஏதாவது இருக்கான்னு நீங்க தான் சொல்லணும்.

எந்தச் செய்தியையும் விட்டுவிடாமல் பகிர்ந்து கொள்ளும் தங்கள் ஆர்வத்திற்கு நன்றி, கீதாம்மா!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சந்தடி சாக்கில் இல்லை, ஸ்ரீராம்! அதுவும் காரணத்தோடத் தான்!

ஆமாம், லஷ்மி என்ற அந்தப் பெயருக்கு இருக்கும் மெளசே தனி தான்! ஆரம்பித்தில் அந்தப் பெயர் வைக்கும் பொழுது அந்த மகிமை தெரியவில்லை; அப்புறம் பார்த்தால், அதுபாட்டுக்க என்னன்னவோ தொடர்பான புதுப்புது செய்திகள் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னும் இல்லை. வந்தவுடன் மெயில் அனுப்புகிறேன். "தூறல்கள்" வாங்கிப் படிக்கும் ஆர்வம் கூடிக் கொண்டே இருக்கிறது.

தொடர்வதற்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்!

Geetha Sambasivam said...

காமர்ஸில் இது பத்தி ஏதாவது இருக்கான்னு நீங்க தான் சொல்லணும். //

காமர்ஸ் படிக்கிறச்சே கம்பெனி அக்கவுன்ட்ஸும் அவங்க நிதி ஆதாரங்கள் பற்றிய இந்த ஷேர் மார்க்கெட்டும் ஒரு பேப்பராக வ்ந்திருக்கு. எனக்கும் ஒவ்வொரு முறையும் இந்தக் கம்பெனி அக்கவுன்ட்ஸிலேயே ஊத்திக்கும். :)))) அப்போவே புரிஞ்சு போச்சு, இந்தப் பணம் பண்ணும் வித்தையெல்லாம் நமக்குக் கைவராதுனு! :))))))

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

சந்தோஷப் பின்னூட்டம்.

நன்றி, ராஜி மேடம்.

ஜீவி said...

@ சிவகுமாரன்

புரிகிறது, சிவகுமாரன்! அதனால் என்ன, ஒரு சேர படித்துக் கொண்டால் போயிற்று.

வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

//சிலர் நினைக்காமலேயே பெறப்படுவதும் கொடுக்கப் படுவதும் உண்டு.//

நினைப்பு ஒன்றே பெறுவதையும் கொடுத்தலையும் தீர்மானிப்பதில்லை.

நினைக்காமல் இருப்பதும் அப்படியே;
அதுவும் அவற்றைத் தீர்மானிப்பது இல்லை.

அப்படியாயின்?.. பெறுதலும், கொடுத்தலும் எப்படி நிகழ்கின்றன?..

தொடர்வதற்கு நன்றி, ஜிஎம்பீ சார்!

ஜீவி said...

@ அப்பாதுரை

//வாழ்வின் பலனை இத்தனை எளிமையாக எழுதி இதுவரை படித்ததில்லை..//

அந்த சந்தோஷத்திற்கு முன்னால் நியாயமான என்று ஒரு வார்த்தையைச் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல் இப்போது தோன்றுகிறது!

அடுத்து, பிறருக்கு பாதிப்பில்லாத என்று இன்னொரு வரியையும் சேர்த்துக் கொண்டிருக்கலாமோ என்று.

இப்படியெல்லாம் பார்த்தால் நீங்க சொல்ற அந்த எளிமையும் போய்
எந்தக் காலத்தில் இப்படியெல்லாம் வரையறைபடுத்தப்பட்ட அந்த சந்தோஷத்தை அடைந்து வாழ்க்கை யின் பலனைத் துய்ப்போமோ தெரியவில்லை..

அதனால் தான் அந்த சந்தோஷ வீடு கொள்வார் யாருமின்றி எப்போதுமே பூட்டிக் கிடக்கிறது, போலும்!

தொடர்வதற்கு நன்றி, அப்பாஜி!

ஜீவி said...

@ அப்பாதுரை

'Dematerialised account'-யைத்தான் சுருக்கமாக 'Demat account' என்று இங்கு சொல்கிறார்கள். இந்த இடத்திலேயே உங்களுக்கு என்ன இது என்று தெரிந்து விட்டால் பின்னாடி வருவதைப் படிப்பது அநாவசியம்.

பிஸிக்கலாக ஷேர் பத்திரங்களை வைத்துக் கொண்டு வாங்கும் பொழுது பெற்றுக் கொண்டு, விற்கும் பொழுது திருப்பி அனுப்பிக் கொண்டு என்று தொல்லைகளைச் சுமக்காமல் கைவசம் இருக்கும் ஷேர் கணக்கை எலக்ட்ரானிக் ரூபத்தில் வைத்துக் கொள்வது.. இதனால் ஷேர்களை வாங்குவதும், விற்பதும் சுலபப்படுத்தப் பட்ட ஒன்றானது இதன் சந்தோஷ எளிமை.

சந்தடி சாக்கில் இல்லை என்பதை ஸ்ரீராமிற்கும் சொல்லிவிட்டேன்.

நன்றி, அப்பாஜி!

ஜீவி said...

@ கோமதி அரசு

நீங்கள் சொல்லியிருக்கும் உயர்ந்த உள்ளங்களின் செயல்கள் தான் நியாயமான சந்தோஷங்கள். அந்தக் கலையை வாழ்க்கை முறையாகவே கற்றவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.
வளமுடன் வாழ வாய்ப்பு பெற்றவர்கள். 'மனம் வெளுக்க மார்க்கம்' கண்டவர்கள்.

நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி,கோமதிம்மா.

பி.கு: எனது தளத்தில் 'வாழ்க்கை நலம்' பகுதியில் 'தினம் தினம் சந்தோஷம்' என்று 9 பகுதிகள் எழுதியிருக்கிறேன். தங்கள் தகவலுக்காக.

அப்பாதுரை said...

demat விளக்கத்துக்கு நன்றி. ஷேர் பத்திர மாற்றம் அந்தந்த கம்பெனியின் treasury வேலையில்லையா? வங்கியா அதையெல்லாம் செய்கிறது? or வங்கிக் கணக்கு வைத்துக் கொண்டு நாம் செய்ய வேண்டுமா? இதற்கும் பணம் பிடுங்குகிறார்களா இந்திய வங்கிகள்! சே!

அப்பாதுரை said...

//சந்தோஷ வீடு கொள்வார் யாருமின்றி எப்போதுமே பூட்டிக் கிடக்கிறது,

beautiful.
சாவியை பையில் வைத்துக் கொண்டு தேடுவதானாலோ?

அப்பாதுரை said...

ஹிஹிஹி.. ஊத்தப்பத்துக்கு மிளகாய்ப்பொடி தான்.. கொத்சு இல்லையா? நல்ல வேளை.

பாச மலர் / Paasa Malar said...

சந்தோஷம் பற்றிய பத்தி சந்தோஷம் தந்தது.....ஒரு கல்யாணம் ஏற்பாடாகி வருகிறது

Related Posts with Thumbnails