மின் நூல்

Sunday, July 1, 2012

பார்வை (பகுதி-52)

நாராயணனைப் போல் அந்த நாவலின் பெயரை ஊர்மிளாவால் ரசிக்க முடியவில்லை.  'நடக்கும் என்பார் நடக்கும்'-- என்ன தலைப்பு இது என்று நினைத்துக் கொண்டாள். 'நிச்சயம் ஒரு நாவலுக்கான தலைப்பு இது இல்லை; ஏதோ ஜோதிடப் புத்தகத்தின் தலைப்பு மாதிரி' என்று நினைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் முன்பு வரை உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த நாராயணன், அந்த நாவலைக் காணோம் என்றவுடனேயே எந்த அளவுக்கு சோர்ந்து போய் விட்டான் என்பதைப் பார்த்து எந்த அளவுக்கு அந்த நாவலின் தலைப்பு இவனை வசீகரித்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். எல்லா வசீகரிப்புக்கும் என்ன காரணமோ, அந்தக் காரணமே இப்போது இவனுக்கும் காரணம் ஆயிற்று என்று அவள் உள்ளுணர்வு கூறியது. அந்தந்த நேரத்தில் எதை நாம் விரும்புகிறோமோ அதற்கு ஆதரவாக உணரும் எல்லாவற்றையும் அந்தந்த நேரத்தில் நாம் நேசிப்போம் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

"எங்கே போயிடப்போறது?.. இங்க தான் எங்காச்சும் இருக்கும். அந்தப் புத்தகக் குவியலுக்குள்ளாறத் தேடிப் பார்த்தா கிடைச்சிடும்ன்னு நெனைக்கறேன்" என்றான் நாராயணன்.

"எஸ்.  ஆனா, காலைலே நான் வந்த உடனே செக் பண்ணினப்போ இருந்ததே! நீங்க சொல்ற மாதிரி இங்க தான் எங்கேயானும் கலந்து போயிருகும்.. நான் பார்க்கிறேன்" என்று ஊர்மிளா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கேபின் போன் சிணுங்கி அவளை அழைத்தது.

"எஸ். சார்.  ஆமாம், இங்கே தான் இருக்கார்.  சரி, நான் சொல்றேன்,சார்!" என்று சொல்லி போனை வைத்தாள்.

"நாராயணன்! பெரியவர் உங்களைக் கூப்பிட்டார். நீங்க அவரைப் பாத்திட்டு வாங்க. அதுக்குள்ளாற நான் அந்த ஃபோல்டரைத் தேடி எடுத்து வைக்கிறேன்.  நீங்க அதை வாங்கிண்டே, டெலிவரி சிலிப்லே சைன் பண்ணலாம்.  ஓ.கே.வா?"

"நடக்கற காரியத் தொடர்ச்சிலே எங்கையோ பிரேக் ஆயிருக்கு, மேடம். அது சரியாச்சுனா, அந்த ஃபோல்டரும் கிடைச்சிடும், பாருங்க" என்று அவன் சொன்னது ஊர்மிளாவிற்கு வினோதமாக இருந்தது.  அவன் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கை த்வனி அவளை அசர அடித்தாலும், அப்படியான தலைப்பு கொண்ட அந்த நாவலுக்கான கணினிப் பிரதி காணாமல் போனதில் தான் இவன் ரொம்பவும் பாதித்துப் போய் ஏதேதோ சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

அவன் பெரியவரைப் பார்த்து விட்டு கிளம்புவதற்குள் காணாமல் போயிருப்பதைத் தேடி எடுத்துக் கொடுத்தால் தான் அவன் எதற்காக இங்கு வந்திருக்கிறானோ அந்த வேலையும் பூர்த்தியாகும் என்கிற அவசர உணர்வும் அவளுக்கு இருந்தது.  'இத்தனை வருஷ சர்வீஸில் இப்படி ஏற்பட்டதில்லை யே!  என் வேலையில் அவ்வளவு அசிரத்தையாகவா நான் இருக்கிறேன்?' என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்து அவளை அவஸ்த்தைப் படுத்தியது.

அந்த சமயத்தில் தான் நாராயணன் சொல்லி விட்டுப் போனதும் அப்படியும் இருக்குமோ என்று அவளை நம்ப வைத்தது.. 'நடக்கற காரியத் தொடர்ச்சிலே எங்கையோ பிரேக் ஆயிருக்குன்னா'..  எவ்வளவு தெளிவாச் சொல்றான்!எதைத் தெரிந்து இப்படியெல்லாம் சொல்றான்.?. நடக்கப் போறதையெல்லாம் அந்தளவுக்கு முன்னாடியே தெரிஞ்சிக்கவும் முடியுமா?.. அவன் பார்வைக்குத் தெரியற மாதிரின்னா, சொல்றான்' என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே, சட்டென்று வேணியிடம் நாராயணனின் ஜாதகத்தைத் தான் இன்னும் சேர்ப்பிக்கவில்லை என்பது அவளது நினைவுக்கு வந்தது.  பெரியவரைப் பார்த்து விட்டு நாராயணன் வருவதற்குள் அதை வேணியிடம் கொடுத்து விட்டு வந்து விடலாம் என்கிற எண்ணத்துடன் கைப்பையைத் திறந்து ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வேணியிடத்திற்குப் போனாள்.

வேணி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.  ஊர்மிளா தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், "சரிம்மா.. வேறே ஒண்ணுமில்லே.  வைச்சிடறேன்" என்று அவசரமாக போனை வைத்து விட்டு அவளைப் பார்த்து முறுவலித்தாள்.  "என்னை வரச் சொல்லியிருந்தீங்கள்லே.. நானே வர்றத்தான் இருந்தேன்ங்க்கா.. பிரஸ் மேனேஜரோட பேசிக்கிட்டு இருந்தீங்களா.. அதுனாலே, அவர் பேசிட்டுப் போன பின்னாடி வரலாம்ன்னு..."

"பரவாயில்லை. இந்தா, இதுக்குத் தான் உன்னைக் கூப்பிட்டிருந்தேன்" என்று ஊர்மிளா தன் கையிலிருந்த கவரை அவளிடம் கொடுத்தாள். "வேணி! எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர். அவரோட ஜாதகம் இதிலே இருக்கு. உங்க அக்காவுக்காக பொருத்தம் பார்க்க கேட்டு வாங்கியிருந்தேன். கொண்டு போய் அம்மா கிட்டே கொடு. எவ்வளவு சீக்கிரம் பொருத்தம் பார்த்துச் சொல்றீங்களோ,  அவ்வளவு க்கு நல்லது.  மத்ததையெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம். சரியா?"

வேணியோட முகம் குப்பென்று மலர்ந்து, விழியோர ஈரம் பளபளத்தது. "இப்போ நீங்க வரச்சொல்ல போன்லே அம்மா தான் எங்கிட்டே பேசிக்கிட்டிருந் தாங்க...  கோயிலுக்குப் போயிருந்தாங்களாம்..  அக்காவும் கூடப் போயிருக்கு. அக்காக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும் வேண்டிட்டு வந்தாங்களாம்.. வர்ற வழிலே டெலிபோன் பூத்தைப் பாத்ததும் என் நினைப்பு வந்து பேசினாங்களாம்" என்றாள்.

"அப்படியா?.. ரொம்ப சந்தோஷம்.. கோயில்ன்னா வீட்டாண்ட இருக்கற கோயிலா?"

"இல்லக்கா.. கொஞ்சம் தொலைவாப் போவணும்.  பெருமாள் கோயில்.."

"ஓ.. பெருமாள்ன்னா?"

"லஷ்மி நாராயண பெருமாள் அக்கா.  எங்க குல தெய்வம்.  அதான் எங்க அக்காக்கு லஷ்மின்னு பேரு வைச்சாங்களாம்."

ஊர்மிளாவுக்கு நாராயணன் சொன்ன கோலம் நினைவுக்கு வந்து திடீரென்று மனசு பூராவும் மகிழ்ச்சி அலை பரவியது.  கூடி வரும் பொருத்தங்கள் நினைத்து பெருமிதம் பொங்கி வழிந்தது. "வேணி! ஜாதகம் பத்திரம். இங்கே அங்கே வைச்சிட்டுப் போயிட்டேன்னு சொல்லக் கூடாது. இன்னிக்கே அம்மாகிட்டே கொடுத்து, பொருத்தம் பாக்கச் சொல்லு.." என்று கைக் கெடியாரத்தைப் பார்த்தாள். "ஒண்ணு செய். நீ வேணா பர்மிஷன் போட்டு, இப்பவே வீட்டுக்குப் போறையா?"

"இல்லேக்கா.  மதியம் லஞ்ச்சுக்கு அப்பாலே போறேன். அம்மாவும் அக்காவும் வீடு வந்து சேர இன்னும் ரெண்டு மணி நேரமாகும்.."

"சரி.  சாப்பாட்டுக்கு அப்புறம் கிளம்பிடு.  நல்ல வேளை வந்திடுத்து போலத் தெரியறது. எல்லாம் நன்னா நடக்கும்..ஜாதகம் பாக்கணும்ன்னு கூட இல்லே. எல்லாம் உங்க திருப்திக்குத் தான்.  சரியா?" என்று ஊர்மிளா லேசாக அவள் தோளில் தட்டினாள். தட்டிய ஊர்மிளாவின் கையை அப்படியே இறுகப் பற்றிக் கொண்டாள் வேணி.

"ஜோசியர் பக்கத்து வீடு தான்ங்க்கா.  மூணு மணிக்குள்ளாற நான் போய்க் கொடுத்தாக் கூட உடனே பாத்திடுவாங்க..  பாத்திட்டு உங்களுக்கு போன் பண்றேன் அக்கா.." என்றவள் குழந்தை போல ஊர்மிளாவின் முழங்கைப் பக்கம் இறுகப் பற்றிக் கொண்டு லேசாக விசும்பினாள்..

திடுக்கிட்டு, "வேணி, என்ன இது?" என்று அவள் கையைப் பற்றினாள் ஊர்மிளா.

"அக்கா.. எல்லாத்துக்கும் நீங்க கூடயே இருக்கணும். எங்களுக்கு மனுஷாள் கிடையாது அக்கா" என்று லேசாக வேணி விசும்பிய போது, வயிற்றிலிருந்து பந்து போல மேலெழும்பி ஏதோ தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டார் போலிருந்தது ஊர்மிளாவுக்கு.

"நாங்க இருக்கோம்.  நீ தைர்யமாயிரு" என்று அது ஆபீஸ் என்றும் பாராமல் வேணியின் தலையை வருடி விட்ட போது ஊர்மிளாவின் மனசு பூராவும் பரிதாபம் பொங்கி வழிந்தது.  அந்த ஷணமே, லஷ்மியின் கல்யாண ஏற்பாடுகள் அத்தனையையும் தானே முன்னின்று செய்ய வேண்டுமென்று தன்னுள் சூளுரைத்துக் கொண்டாள்.  

எங்கே போயிருக்கும் என்பது தான் அதிசயமாக இருந்தது.  பொதுவாக தன் கேபின் பொருட்களை மிக நேர்த்தியாக வைத்துக் கொள்பவள் ஊர்மிளா. அலுவலகம் விட்டுக் கிளம்பும் அன்றைய உபயோகத்திற்குப் பிறகு கழித்துக் கட்டிய வேண்டாத காகிதங்கள், பேப்பர் பிட்டுகள் எல்லாவற்றையும் ஒரு தடவைக்கு இரு தடவை பார்த்து விட்டு டிராஷில் கொண்டு போய்ப் போடுவாள்.  ஸ்டாப்ளர், குண்டூசி டப்பா, ம் குப்பி, A4 பேப்பர்கள் கொஞ்சம் பிரிண்ட்டரில் மீதி வெளியே பண்டலில் என்று எல்லாம் வைத்த இடத்தில் வைத்த மாதிரி இருக்க வேண்டும் அவளுக்கு.  அதனால் அடைசலுக்கு வழியே இல்லை. அப்படியிருக்க அந்த 'நடக்குமென்பார் நடக்கும்' எங்கே போயிருக்கும் என்று அவளுக்கே குழப்பமாக இருந்தது.

"அடுத்த பதிப்புக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா'ன்னு சின்னவர் உங்களைப் பார்க்கச் சொன்னார்ங்க.." என்று போன வெள்ளிக்கிழமை சண்முகம் கொண்டு வந்திருந்த ஒரு புத்தகக் கட்டு பிரிக்கப்பட்டுக் குவியலாக பக்கத்து டேபிளில் கொலு வீற்றிருந்தது. இந்தக் குவியலைத் தான் நாராயணன் குறிப்பிட்டுச் சொன்னான்.  அங்கேயிருக்க சான்ஸ் இல்லை.  இந்த பழுப்புக் கவரின் சைஸே பெரிசு.  பார்த்தாலே பிதுங்கித் தெரியும்.  இருந்தாலும் அந்த புத்தகக் குவியலை கலைத்துப் பார்த்தாள்.  ஊஹூம்.. அங்கேயும் இல்லை.  பின்னே எங்கே?..

அந்த புத்தகப் பிரதி 262 பக்கமோ என்னவோ. இன்னொரு பிரதி போட்டுப் ஃபோல்டர் போட்டால் ஆயிற்று என்றால் அதற்கான அவகாசம் இல்லை என்பது மட்டுமில்லை;  பழைசு கிடைத்தால் தான் அது ஏற்படுத்திய கலக்கம் நீங்கி நாராயணனின் முகத்தில் களையைப் பார்க்க முடியும்.. எங்கே போயிற்று அது?..

மறுபடியும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.  அந்த நாவல்கள் லிஸ்ட்டை எடுத்துக் கொண்டாள் ஊர்மிளா.  லிஸ்ட்டில் இருந்த நாவல்களும் பழுப்பு நிற கவர்களில் இருந்த நாவல் பிரதிகளும் சரியாக இருக்கின்றனவா என்று ஆரம்பித்திலிருந்து மறுபடியும் சரி பார்க்கத் தொடங்கினாள்.

ஒன்று, இரண்டு, மூன்று, ஆங்... நாலாவது கவர் வந்த பொழுது லேசான வெளிச்சக் கீற்று.. அந்த நாலாவது கவர் ரொம்பவும் பம்மிப் பெரிசாக இருப்பதைப் பார்த்து மேல் பட்டையைப் பிரித்துப் பார்த்தால்...

ஒரே கவரில் உள்ளே இரண்டு ஃபோல்டர்கள் அடைக்கப்பட்டிருந்தது அம்பலமானது.  அவசர அவசரமாக எடுத்துப் பார்த்த பொழுது.. ஹூவா.. 'நடக்குமென்பார் நடக்கும்' உள்ளே முழுசாகப் பதுங்கியிருந்தது.  ஆக, நாராயணனைப் பொருத்த மட்டில் இனி நடக்கப் போவதின் நீட்சி குறித்து எந்த சஞ்சலமும் கொள்வதற்கில்லை.

'நடக்குமென்பார் நடக்கும்' ஃபோல்டரை மட்டும் தனியே எடுத்து, ஒரு காலி பழுப்புக் கவரில் அடைத்து கவரின் மேல் நாவலின் பெயரை சிவப்பெழுத்துக் களில் எழுதினாள்.  நாவலை எழுதிய ஆசிரியரின் பெயரையும் எழுத லிஸ்ட்டைப் பார்த்த பொழுது வராஹமிஹிரர் என்று குறித்திருந்தது.  வராஹமிஹிரர்!  இந்த தேசத்து பெருமை மிகு வானவியல் அறிஞர் அல்லவோ? அவளுக்குத் தெரிந்து வராஹமிஹிரர் நாவல் எதுவும் எழுதவில்லை.  ஆக, இது இந்த நாவலை எழுதியவரின் புனைப்பெயராகத் தான் இருக்க வேண்டும் என்கிற நினைப்பில் அவரின் பெயரையும் பழுப்பு நிறக் கவரின் மேல் எழுதி முடித்த பொழுது, கேபின் போன் சிணுங்கியது.

வேகமாகப் போய் ஊர்மிளா ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்த பொழுது, மறுமுனையில்---

பெரியவர்!


(இன்னும் வரும்)

15 comments:

Geetha Sambasivam said...

Intuition. சாதாரணமாய்ப் பெண்களுக்கே அதிகம் இருக்கும் இந்த உள்ளுணர்வு, நாராயணனுக்கும் இருப்பது கொஞ்சம் ஆச்சரியமே. உணர்ச்சி வசப் படுபவர் போலிருக்கு. :D

ஸ்ரீராம். said...

நடக்குமென்பார் நடக்கும்....வேதா கோபாலன்!!
அது எங்கும் தொலைந்து போகவில்லை, அதனால் தடை என்று நினைக்க வழியில்லை என்பதன் குறியீடாக அந்தக் குவியலிலேயே அந்தப் புத்தகம் கிடைத்திருப்பது 'நம்பிக்க நாராயணனு'க்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.
வராஹமிஹிரர்..... அடுத்த கொக்கி?

ஸ்ரீராம். said...

அந்தப் புத்தகம் எங்கிருந்து கிடைக்கப் போகிறது என்று அறிய ஏற்பட்ட ஆவலில் அந்த சில பாராக்களை வேகமாகப் படிக்க வைத்தீர்கள்....!

Geetha Sambasivam said...

ஜாதகம் பொருந்தணுமேனு கவலையா இருக்கு. :)))

அப்பாதுரை said...

இன்னும் கோலத்தை ரசித்தபடி இருந்தால் அதற்குள் அடுத்த அத்தியாயம். பலே.

subtext உத்தியை மிக நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள். நிறைய பேருக்கு மறந்து போன வித்தை. 'in the face' எழுத்துக்களுக்கு இடையே இது போன்ற நடை கோடைமழை மாதிரி.

நடுவில் ஹூவா என்று வருகிறதே, என்ன பொருள்?

intrude செய்கிறோம் என்று கொஞ்சம் கூட எண்ணாமல் கல்யாணப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று நினைக்கும் ஊர்மிளா பாத்திரம் போல் சிலரை நானறிவேன்.. உதவி உதவியாக முடிந்தால் நல்லது தான் :)

கோமதி அரசு said...

ஒரே கவரில் உள்ளே இரண்டு ஃபோல்டர்கள் அடைக்கப்பட்டிருந்தது அம்பலமானது. அவசர அவசரமாக எடுத்துப் பார்த்த பொழுது.. ஹூவா.. 'நடக்குமென்பார் நடக்கும்' உள்ளே முழுசாகப் பதுங்கியிருந்தது. ஆக, நாராயணனைப் பொருத்த மட்டில் இனி நடக்கப் போவதின் நீட்சி குறித்து எந்த சஞ்சலமும் கொள்வதற்கில்லை.//

சஞ்சலம் நீங்குமா நாராயணனுக்கு?, வராஹகமிகிரர் இந்த கதையில் வருவது அவர் ஒரு மன்னருக்கு அவர் மகனின் எதிர்காலத்தை துல்லியமாக சொன்ன கதை நினைவுக்கு வருக்கிறது .

நாராயணனின் எதிர்காலத்தை துல்லியமாக சொல்லபோகிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

ஒருகவரில் இரண்டு போல்டர்கள் என்று வேறு பயம் காட்டுகிறீர்கள்.
நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்டீர்கள்.
பார்ப்போம், என் ஊகங்கள் சரியாக இருக்குமா என்று.

அப்பாதுரை said...

//ஒருகவரில் இரண்டு போல்டர்கள் என்று வேறு பயம் காட்டுகிறீர்கள்.

insightful கோமதி அரசு.

ஜீவி said...

@ Geetha Sambasivam

வாங்க, கீதாம்மா.

உள்ளுணர்வுக்கும் அதன் விகிதாச்சாரத்திற்கும் ஆண்-பெண் பேதமில்லை. சில நுண் உணர்வுகளும்
உள்ளுணர்வாக உணரப்படலாம்.

1) சிலவற்றில் கொள்ளும் ஆழ்ந்த நம்பிக்கை இந்த மாதிரியான உள்ளுணர்வாகத் தோற்றம் காட்டுவதுண்டு. இப்படியான உள்ளுணர்வே இறைபக்தி என்பாரும் உண்டு.

2) ஒன்றைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் அதன் சாதகமான அம்சம் மட்டும் இன்னொருவிதத்தில் சாதகமானவைகளுக்கு குறியீடாக நாம் நினைப்பதை நம் எண்ணத்திற்கோ அல்லது பார்வைக்கோப் புலப்படுத்தி அதையே உள்ளுணர்வாகக் கொள்வதும் உண்டு.

2)இதையா, அதையா எதை என்று சரசரவென்று அலசத்தெரிந்தவர்களுக்கு அலசலின் முடிவு இந்த வகை உள்ளுணர்வாகத் தோற்றமளிப்பது உண்டு. எதையும் ஆழ்ந்து நோக்குவோர்க்கு இவ்வுணர்வின் விகிதாச்சாரம் அதிகமிருக்கும். அவர்களுக்கெல்லாம் இருட்டில் டார்ச் அடித்த மாதிரி வழிகாட்டும்.

உணர்ச்சி வசப்பட்ட பதட்டப்படுதலுக்கும் இந்த உணர்வுக்கும் எட்டாம் பொருத்தம்.

விலங்குகளுக்குக் கூட இப்படியான உள்ளுணர்வு உண்டு என்று சமீபத்திய சில ஆய்வுகள் தெரியப்படுத்தியிரு ப்பதாக படித்த நினைவு இருக்கிறது.

சமீபத்திய சுனாமியை எலிகள் முன் கூட்டியே அறிந்து கொண்டதாகச் சொல்லக் கேள்வி.

'எறும்புகள் முட்டை கொண்டு திட்டை ஏறினால், மழை உண்டு' என்று ஒரு பழமொழியும் தமிழில் உண்டு.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஒரே கதையில் பல கொக்கிகளைப் பார்ப்பது என்பது படிப்பவருக்கு அலுப்பை ஏற்படுத்தலாம். கொக்கியை மாட்டினாலும் எடுக்கிற வேலை வேறு சேர்ந்து போகிறது. இதனாலெல்லாம் கொக்கியை மாட்டத் தோன்றவில்லை.
ஆனால், மாட்ட வேண்டும் என்று தீர்மானித்தால் வராஹமிஹிரர் இந்தக் கதைக்கு மேலும் பதினைந்து அத்தியாயங்களுக்கு மறுபேச்சு பேசாமல் ஒத்துழைப்பார். ஒரிஜனல் வராஹமிஹிர் அற்புதமான மனிதர். அவரை வைத்துக் கொண்டு தனியாக வேறு ஒரு படைப்பில் உலாவ விடலாம் என்கிற யோசனையும் உண்டு.

தொடர்ந்து வாருங்கள், ஸ்ரீராம்!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

//ஜாதகம் பொருந்தணுமேனு கவலையா இருக்கு. :)))//

எனக்கும் அந்தக் கவலை மனசின் ஒரு ஓரத்தில் இருக்கத் தான் செய்கிறது. வித்யாவிற்காகப் பார்க்கிறேன். :))

ஜீவி said...

@ அப்பாதுரை

//subtext உத்தியை..//

அப்பாஜி! சரியான பாயிண்ட்டைப் பிடித்தீர்கள். அந்த வித்தை மறக்கடிக்கப் படக்கூடாதென்று தான் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன்.

அந்த ஜாலவித்தையின் அனுபவத்தை உணர்வதிலே இருக்கிற சுகமே சுகம்!

// கோடை மழை..//

பொழிந்து மனதைக் குளிர்வித்தது.

ஜீவி said...

@ அப்பாதுரை

//நடுவில் ஹூவா என்று வருகிறதே, என்ன பொருள்? //

ஹோஹோஹோ.. என்கிறோமில்லையா, அதுமாதிரி..
மகிழ்ச்சியை வெளிப்படுத்த அந்த நேரத்தில் வந்த ஒரு சொல்.

பாரதியாரின் 'மங்கியதோர் நிலவினிலே' கவிதையில்,
'அடடா, அடடாவோ' என்று ஒரு வரி வரும் இல்லையா, அந்த இரண்டாவது 'அடடாவோ' எனக்கு ரொம்பப் பிடிக்கும். கவிஞனின் மன சஞ்சாரங்களில் தோய்ந்து, கிறுகிறுத்து...

//ஊர்மிளா பாத்திரம் போல் சிலரை நானறிவேன்..//

நானறிந்த ஒருவரின் நடமாட்டம் தான் இதுவும்!ஏதாவது ஒருவிதத்தில் உதவி.. உதவுகிறோம் என்கிற நினைப்பே இல்லாமல் பிறருக்கு நெருக்கடிகளில் உதவுவதற்காகவே பிறப்பெடுத்திருக்கிறோம் என்று செயல்படுகிறவர்களும் சிலர் உண்டு. இன்னும் நெருங்கிப் பார்த்தீர்கள் என்றால் அவர்களுக்கு இதெல்லாம் கொள்கைகளாக, கோட்பாடுகளாக இருக்கும்!

அப்பாதுரை said...

சினிமாக்களிலும் கதைகளிலும் ட்ன் கவர்ச்சியில் விரும்பிச் சிக்கியவன் என்பதால் நீங்கள் சொல்லும் ஜாலம் நன்றாகவே புரிகிறது.

தற்கால தமிழிலக்கியத்தின் முகத்திலடிக்கும் எழுத்து வார்ப்பு வளர்ச்சியில் சுஜாதாவுக்குப் பெரும் பங்குண்டு என்று நினைக்கிறேன். unintended side effect?

ஹூவா கேள்விப்பட்டதில்லை. regional பிரயோகமா? ஹூஹூ என்பார் என் பாட்டி. அதே தானா?

வருடங்கள் கழித்து 'மங்கியதோர் நிலவினிலே' படித்தேன். நன்றி :)

ஜீவி said...

கோமதி அரசு

//சஞ்சலம் நீங்குமா நாராயணனுக்கு?//

வராகமிஹிரரே, 'நடக்குமென்பார் நடக்கும்' என்று சொல்லி விட்ட பிறகு நாராயணின் பாடு குஷி தான். அடுத்த வேலை, ஜாதகப் பொருத்தம், பெண்ணைப் பார்த்தல், பெண் கருத்தையும் தெரிந்து கொள்ளல் என்று வரிசையாக நடக்க வேண்டியதெல்லாம் நிறைய இருக்கிறதில்லவா?.. ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் குறிப்பிட்டுத் தான் அந்த 'நடக்குமென்பார் நடக்கும்' அறிகுறி என்று நினைத்திருக்கிறேன்.

//ஒரு கவரில் இரண்டு ஃபோல்டர்கள்..//

அது ஒண்ணுமில்லீங்க. ஒரு கவரில் ஒரு ஃபோல்டர் இருப்பதற்குப் பதில்
தவறுதலாக இந்த ஃபோல்டரையும் சேர்த்து வைத்து இரண்டாகி விட்டது. அவ்வளவு தான். விசேஷ அர்த்தம் ஏதும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
'நடக்குமென்பார் நடக்கும்'! நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று நல்லன நடப்பதற்கு என்று நம்பிக்கை கொள்வோம்.

எல்லாவற்றையும் சேர்த்துப் படித்து விட்டீர்களென்று தொடர்ந்த பின்னூட்டங்களிலிருந்து தெரிந்து
கொண்டேன். மகிழ்ச்சி.

பாச மலர் / Paasa Malar said...

//அந்தந்த நேரத்தில் எதை நாம் விரும்புகிறோமோ அதற்கு ஆதரவாக உணரும் எல்லாவற்றையும் அந்தந்த நேரத்தில் நாம் நேசிப்போம் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.//

உலகளாவிய உண்மையிலும் உண்மை.

நடக்குமென்பார் நடக்கும் நல்லதொரு தலைப்பு.

Related Posts with Thumbnails