மின் நூல்

Friday, July 6, 2012

பார்வை (பகுதி-53)

பெரியவரின் அறையில் பெரியவரின் வயசை ஒத்த இன்னொரு பெரியவரைப் பார்ப்போம் என்று ஊர்மிளா நினைத்தே பார்க்கவில்லை.

பெரியவர் அவரை ஊர்மிளாவிற்கு அறிமுகப்படுத்திய பொழுது அவர் தான் வராகமிஹிரர் என்று தெரிந்து ஊர்மிளாவின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. பெரியவரின் நண்பராம்.  நெடுங்காலம் ஜோதிட சம்பந்தமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தவரை பெரியவர் தான் அவரது அனுபவங்களை வைத்து ஒரு நாவல் எழுதித் தரக் கேட்டுக் கொண்டதின் விளைவு தான் 'நடக்குமென்பார் நடக்குமாம்'.    எல்லாவற்றையும் பெரியவரின் வாய் மொழியாகக் கேட்ட போது ஊர்மிளாவிற்கே அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளின் போக்கில் இருக்கும் விசேஷத்தன்மையை உணர்ந்து கொண்ட மாதிரி இருந்தது.

சாதாரணமாக நாம் மகிழ்ச்சி என்று சொல்வோமே அதைத் தாண்டிய ஒரு வசீகரப் பளபளப்பு நாராயணனின் முகத்தில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவனது அந்த பளபளப்புக்குக் காரணம் என்னவென்று ஊர்மிளாவால் ஊகிக்க முடிந்தது. புத்தகத்தைத் தேடினால் அந்த புத்தகத்தை எழுதிய நபரே நேரிலேயே வந்து நாராயணனுக்கு 'நடக்க வேண்டும் என்று நீ நினைத்திருப்ப தெல்லாம் நடக்கப் போகிறது, பார்' என்று நிச்சயப்படுத்திய பளபளப்பு அது.  கோடை வெப்பத்தில் மேகமாவது திரண்டு வெயிலின் சூட்டைக் குறைக்கட்டுமே என்று நினைத்தால், திரண்ட மேகம் வானத்தைப் பொத்துக் கொண்டு மழையாகவே பொழிந்த மாதிரி அவன் சந்தோஷம் வெளிப்படத் தெரிந்தது.

"ஊர்மிளா! இந்தாங்க.  புஸ்தகத்தை எழுதின ஆசிரியரைப் பற்றிய குறிப்பு.  இதை இவர் புஸ்தகத்தின் பின் அட்டையில் இவர் போட்டோவோட போட்டுடலாம்.  இந்த குறிப்புகளை நானே எழுதி வைச்சிருந்தேன்.  அகஸ்மாத்தாக இவரும் வந்து விடவே விட்டுப் போன ஓரிரண்டு விஷயங்களை சேர்த்துக்கவும் செளகரியமா போச்சு." என்றார் பெரியவர்.

"சரி. சார்." என்று அவர் கொடுத்த குறிப்புகளை வாங்கிக் கொண்டாள் ஊர்மிளா.

"இவங்க ஊர்மிளா.. யார் தெரியுமோ?"என்று அந்தப் பெரியவரிடம் கேட்டார் இந்தப் பெரியவர்.

"சொல்லுங்கோ. கேட்டுக்கறேன்" என்றார் வராகமிஹிரர்.

"அபராஜிதன்ங்கற பேர்லே கதையெல்லாம் எழுறாரே லஷ்மணன்,
தெரியுமோ?"

"பேஷாய்த் தெரியும்."

"அந்த லஷ்மணன் சார் மனைவி தான் இவங்க."

 சட்டென்று ஊர்மிளா இருந்த பக்கம் திரும்பி "அப்படியா, குழந்தை?.. உன்னைப் பாத்ததிலே ரொம்ப சந்தோஷம்" என்று மலர்ந்தார் வராஹமிஹிரர். 

"நமஸ்காரம்" என்று அவரைப் பார்த்துக் கைகுவித்தாள் ஊர்மிளா.

"உன் பேர் ஊர்மிளா, இல்லையா?.." என்று யோசனையுடன் இழுத்த வராஹமிஹிரர், ஒரு நிமிடம் தாமதித்துச் சொன்னார். "இந்த மாதிரி பெயர்ப் பொருத்தம் இருந்தாலே, மத்தப் பொருத்தம்லாம் தன்னாலே கூட வரும்." என்று சொன்ன போது வேறொன்றை நினைத்துக் கொண்ட நினைவில் நாராயணன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. "ஒண்ணு தெரியுமா, குழந்தை?" என்று ஊர்மிளாவிடம் எதையோ சுவாரஸ்யமாகச் சொல்லத் தொடங்கினார் வராஹமிஹிரர். "உனக்கெப்படி தெரியும்? தான் மத்தவாளுக்குச் செஞ்சது எதைப் பத்தியும் இன்னொருத்தர் கிட்டே சொல்லத் தெரியாத உத்தமன், உன் புருஷன்! அப்படியிருக்க எப்படித் தெரிஞ்சிருக்கும், உனக்கு? நான் சொன்னாத்தான் இது கூடத் தெரியும்" என்றவர் தொண்டையைச் செருமிக் கொண்டார். 'செந்தாமரை' பத்திரிகை இருக்கில்லையா? அதுலே வாராவாரம் ராசிபலன் எழுத லஷ்மணன் என்னை அறிமுகப்படுத்தி வைச்சான்.  அப்படித்தான் அந்தப் பத்திரிகையோட என் தொடர்பு ஆரம்பிச்சது. குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சின்னா கேட்க வேண்டாம்.  என் வேலை களைகட்டிடும். எல்லா ராசிக்கும் பலனை எழுதி வாங்கிண்டு புஸ்தகமா வேறே போடுவாங்க. ஆரம்பத்திலே மாச சம்பளம் மாதிரி ஆயிரம் ரூபா கொடுத்தாங்க.. போகப் போக அது அஞ்சாயிரம் வரை போச்சு.  என்ன சம்பாதிச்சு என்ன பலன்? அதுக்குன்னே ஏதாவது மருந்துச் செலவு காத்திருக்கும். என் ராசி அப்படி.." என்றவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

"அப்போ இந்த ராசிபலன் எழுதிச் சம்பாதிக்கலேனா, மருந்துச் செலவும் இருந்திருக்காதுன்னு சொல்றையா?" என்றார் பெரியவர்.

"பாத்தையா? எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே, பாத்தையா?" என்று கோபப்படுகிற மாதிரி காட்டிக் கொண்டார் வராஹமிஹிரர்.  "ஒரு பக்கம் வந்ததுன்னா, இன்னொரு பக்கம் போயிடறது பார்ங்கறத்துக்காகச் சொன்னேன்.  காரணம் இல்லாம எந்தக் காரியமும் இல்லே.  நிகழ்வா நடக்கற ஒவ்வொரு காரியமும் சயின்ஸ்.  ஒண்ணைப் பாத்தையா?.. தன்னாலே எந்தக் காரியமும் நடக்காது.  ஒண்ணோட ஒண்ணு சேந்து தான் இன்னொண்ணுன்னு எல்லாத்துக்கும் ஒரு ப்ராஸஸ் இருக்கும். இந்தக் கணக்கைப் பத்திச் சொல்லப்போனா ஆரியபட்டரிலிருந்து ஆரம்பித்து ஐயின்ஸ்டின் வரைப் போகும்.  அதனாலே தான் இயற்கையா நடக்கற காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு இந்த 'நடக்குமென்பார் நடக்கும்' நாவல்லே கூட என் வாழ்க்கையிலே எனக்கு அனுபவப்பட்ட விஷயங்களுக்கு கதை ரூபம் கொடுத்திருக்கிறேனே, தவிர செயற்கையா கற்பனையா எதையும் எழுதலே" என்றார்.

பேசாமல் கைகட்டி உட்கார்ந்து கொண்டு, வராஹமிஹிரர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருந்தது, நாராயணனுக்கு.

தேனாம்பேட்டையில் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் அவர்களது அலுவலகம் இருந்தது. தனித்தனியாக பான் கார்டும், பேங்க் அக்கெளண்ட்டும் இரண்டு பேருக்கும் இருந்ததினால், ஷேர் அக்கெளண்ட்டை இரண்டு பேருக்கும் சேர்ந்த கணக்காக ஆரம்பிப்பது எளிதாகப் போயிற்று. கிட்டத்தட்ட இருபது பக்கத்திற்கான ஒப்பந்த காகிதங்களின் கீழ்ப்பகுதியில் வித்யாவும், ரிஷியும் கையொப்பம் இட்டனர். அங்கங்கே விண்ணப்ப படிவத்தில் ஒட்ட போட்டோக்கள் வேறு. ஷேர் ப்ரோக்கர் அலுவலகத்தில் அவர்களை அறிமுகப்படுத்த உஷாவின் கணவரும் கூட வந்திருந்தது மிகவும் செளகரியமாகப் போயிற்று..

ஷேர் ப்ரோக்கர் அலுவலகத்தில் அவர்களுக்கு வரவேற்பு பலமாக இருந்தது. உஷாவின் கணவருக்கு அங்கு ஏகப்பட்ட மரியாதை. இந்தத் துறையில் அவர் விஷயம் தெரிந்தவர் என்கிற விஷயம் தான் அந்த மரியாதைக்குக் காரணம் என்று வித்யாவிற்குப் புரிந்தது.

அவள் ஒப்பந்தப் படிவங்களில் கையெழுதிட்டுக் கொண்டிருந்த பொழுது, யாரோ சொன்னார்கள்.  "மேடம்! நீங்கள் பங்குச் சந்தையில் பங்கு பெற எடுத்த முடிவு புத்திசாலித்தனமான ஒண்ணு.  ஏன்னா, இங்கு அள்ள அள்ளப் பணம், மேடம்!" என்றார்.

புன்முறுவலுடன் தலை நிமிர்ந்த வித்யா, "அப்படியா சொல்றீங்க.. அள்ள அள்ள பணம்ங்கற பேராசை எனக்கில்லை.  அப்புறம் அது அதல பாதாளத்தில் தள்ளி விட்டுதுன்னா, எழுந்திருக்க முடியாம போயிடுமே, சார்!" என்றாள்.

அவள் முகத்தில் அடித்த மாதிரி அப்படிச் சொன்னது உஷாவின் கணவருக்குக் கூட ஒரு மாதிரி இருந்தது. ஏனென்றால்,வித்யாவிடம் அப்படிச் சொன்னவர் இந்த சந்தையில் ரொம்பவும் அனுபவம் வாய்ந்த மனிதர். இருந்தாலும் அவரும் அப்படி அப்பாவிகளுக்கு பேராசை காட்டி இழுக்கற மாதிரி அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.

அவரும் விடுவதாயில்லை. "பின்னே எப்படி மேடம்?.. பணம் சம்பாதிக்கணும்ன்னு தானே பங்குச் சந்தைக்கு வந்தீங்க?.. கொட்டோ கொட்டென்று கொட்டித்துன்னா, வேணான்னா சொல்லிடுவீங்க?" என்றார்.

"எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்ன்னு எனக்கு ஆர்வம் உண்டு சார். அந்த ஆர்வம் இந்த சந்தை விளையாட்டிலும் எனக்கு ஏற்பட்டது.  ஆனா இது பணத்தோட விளையாடற விளையாட்டுனாலே ஒரு ஜாக்கிரதை உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கு," என்று வார்த்தை வார்த்தையாக நிறுத்தி நிறுத்திச் சொன்னாள்.

"சரிதான் நீங்க சொல்றது. ஆனா, விளையாட விளையாடத் தான் இந்த விளையாட்டின் நுணுக்கம் அத்துப்படியாகும்." என்றார் அவர்.

"நிஜ விளையாட்டுக்குக் களத்திலே இறங்கறத்துக்கு முன்னாடி நான் கூட ஒரு பொய் விளையாட்டுலே இறங்கியிருக்கேன். அந்த பொய் விளையாட்டுலே நாலு மடங்கு லாபம் வந்ததாலே தான் இப்போ நிஜ விளையாட்டுக்கே துணிஞ்சு வந்திருக்கேன்" என்றாள் அவள்.

"அப்படியா?.. வேடிக்கையாய் இருக்கே, நீங்க சொல்றது? அது என்ன பொய் விளையாட்டுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?"

"சொல்றேன்.  நீங்க பாத்திருக்கீங்களா? குத்துச்சண்டை போட பயிற்சி பெறவங்க, பயிற்சிக்காக ஒரு பஞ்சுப் பொதியில் குத்திக்கிட்டு இருப்பாங்கள்லே?.. அந்த மாதிரி.."

"அந்த மாதிரி?"

"கொஞ்ச நாட்களா இதான் வேலை.  பொய்யாவானும் பங்குகள் வாங்கறதாவும், விற்கறதாவும், வித்து வாங்கறதாவும் ஒரு விளையாட்டு வீட்லே விளையாடிண்டு இருக்கேன்.  இன்னித் தேதிக்கு அந்த பொய் விளையாட்டின் நிகர லாபம் நாலு லட்சம்.  இனிமே களத்துக்கு வர நான் ரெடி.  நிஜ விளையாட்டை நின்னு நிதானிச்சு விளையாடப் போறேன்.  இதான் இந்த விளையாட்லே நான் கத்துகிட்ட பாடம்" என்று தன்னம்பிக்கையோடு அவள் சொன்னது ஏதோ பங்கு சந்தை ஞானாசிரியனே சொன்ன மாதிரி இருந்தது அவருக்கு.

"வெல்கம் மேடம்.. இன்னிலேந்தே நீங்க பங்குகளை வாங்கத் தொடங்கலாம்.  . குட் லக்.." என்று அவள் வீட்டிலிருந்தே போன் மூலம் சொல்லி எப்படி பங்குகளை வாங்குவது, அதற்கான காசோலை அனுப்புவது போன்ற அடிப்படை விவரங்களைச் சொன்னார்.

வித்யா முதலீடாகக் கருதி பிரிமியம் கட்டிக் கொண்டு வந்திருந்த ஒரு LIC பாலிஸி முதிர்வடைந்து போனவாரம் இரண்டு லட்சம் கைக்கு வந்திருந்தது. அடுத்த மாதம் ரிஷியின் பாலிஸி ஒன்று முதிர்வடையப் போகிறது.  மொத்த பணத்தை டைவர்ஸிஃபைடு முதலீடாக பல இனங்களில் பிரித்துப் போடலாம் என்று வித்யா நினைத்திருந்தாள்.  அப்படிப் பிரிப்பதில் பங்குச் சந்தை முதலீடும் ஒன்று.  அவ்வளவு தான். அதில் இருவருமே தீர்மானமாக இருந்தனர்.

ஏற்கனவே உஷாவின் கணவர் பங்குகளை எப்படி வாங்குவது, விற்பது, வாங்கிய பங்குகளுக்குப் பணம் அனுப்புவது எப்படி, விற்ற பங்குகளுக்கு பணம் பெறுவது எப்படி என்று எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லித் தந்திருந்திருந்ததினால் அவர் சொன்னதெல்லாம் சுலபமாக அவளுக்குப் புரிந்தது. சொல்லப் போனால், கடந்த ஒரு வாரமாக வித்யாவிற்கு இதான் வேலை.  டி.வி. திரையில் ஓடும் என்எஸ்ஸி, பிஎஸ்ஸி மார்க்கெட்டுகளில் பங்குகளின் நிலவரம், காலை, மதியம், பங்குசந்தை முடிவடையும் நேரம் என்று எப்படியெல்லாம் பங்குகளின் விலை ஏறி இறங்குகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் குறித்துக் கொண்டிருந்தாள்.

அது எதனால் என்று தெரியவில்லை.  தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் மேலேயே அவள் கவனம் நிலைத்திருந்தது.  சிமிண்ட், ஸ்டீல் என்று வகைப்படுத்தி பங்குகளின் அன்றாட விலைகளைக் குறித்துக் கொள்வதற்கே ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் மேலிருந்து கீழாக வரிசையாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பெயர்களையும், அவற்றிற்கு நேர் எதிரே இடமிருந்து வலமாக தான் பார்க்கும் பல நேரங்களில் அந்தந்த பங்குகளின் விலையையும் குறித்துக் கொண்டு வந்திருந்தாள்.  கடந்த ஒரு வாரமாக இப்படியாக ஒரு அட்டவணையைத் தயாரித்திருந்தது பங்குகளின் அன்றாட ஏற்ற தாழ்வு விலைகளைக் கணிப்பதற்கு அவள் மனசிற்கு ஒரு செளகரியத்தைக் கொடுத்தது.  தான் குறித்திருந்த நிறுவனப் பங்குகளின் 52 வார தாழ்ந்த, உச்ச விலைகளையும் தனியே ஒரு பக்கத்தில் குறித்து வைத்திருந்தாள்.    என்றைக்கு 52 வார தாழ்ந்த நிலைக்கு விலை வருகிறதோ அன்று கணிசமாக அந்த நிறுவனப் பங்கை வாங்கி விடுவதாக இருந்தாள்.அது தான் கைவசப்படாமல் அவளுக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது.

வீட்டுக்கு வந்ததும் டி.வி. ரிமோட்டைக் கை நாடியது.  டி.வி.யை இயக்கி ஷேர் சேனலில் நிலை கொண்ட பொழுது, வர்த்தக மார்க்கெட்டைப் பாதிக்கிற அளவுக்கு உலகலளாவிய விஷயம் என்ன நடந்தது என்று தெரியவில்லை, மொத்த ஷேர்களும் இறங்கு முகத்தில் சிவப்பாய் தெரிந்தன. நோட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு பார்த்த பொழுது தான் எவ்வளவு பெரிய இறக்கம் இது என்று அவளால் கணிக்க முடிந்தது.

அதிர்ஷ்ட தேவதை சிறகு விரித்து டி.வி. பக்கம் நின்று கொண்டிருப்பது போல வித்யாவின் கண்ணுக்குப் பட்டது.


(இன்னும் வரும்)







6 comments:

Geetha Sambasivam said...

//காரணம் இல்லாம எந்தக் காரியமும் இல்லே. நிகழ்வா நடக்கற ஒவ்வொரு காரியமும் சயின்ஸ். ஒண்ணைப் பாத்தையா?.. தன்னாலே எந்தக் காரியமும் நடக்காது. ஒண்ணோட ஒண்ணு சேந்து தான் இன்னொண்ணுன்னு எல்லாத்துக்கும் ஒரு ப்ராஸஸ் இருக்கும். இந்தக் கணக்கைப் பத்திச் சொல்லப்போனா ஆரியபட்டரிலிருந்து ஆரம்பித்து ஐயின்ஸ்டின் வரைப் போகும். அதனாலே தான் இயற்கையா நடக்கற காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு இந்த 'நடக்குமென்பார் நடக்கும்' நாவல்லே கூட என் வாழ்க்கையிலே எனக்கு அனுபவப்பட்ட விஷயங்களுக்கு கதை ரூபம் கொடுத்திருக்கிறேனே, தவிர செயற்கையா கற்பனையா எதையும் எழுதலே" என்றார்.//

என்ன ஆச்சரியம்! அப்பாதுரைக்காக சகுனியின் பூர்வோத்திரத்தை நேத்தித் தான் எழுதி முடிச்சேன். கிட்டத்தட்ட இதே கருத்துத் தான். காரணமில்லாமல் காரியமில்லை; காரியமில்லாமல் காரணமும் இல்லை என்பதே அதன் முக்கியக் கருத்து. இங்கே வந்தால் நீங்களும் அதே சொல்லி இருக்கீங்க.

மற்றபடி பங்குச் சந்தை விஷயங்களெல்லாம் எனக்கு அவ்வளவாக ரசிக்கவோ/ருசிக்கவோ இல்லை. :)))))))))

கோமதி அரசு said...

உனக்கெப்படி தெரியும்? தான் மத்தவாளுக்குச் செஞ்சது எதைப் பத்தியும் இன்னொருத்தர் கிட்டே சொல்லத் தெரியாத உத்தமன், உன் புருஷன்! அப்படியிருக்க எப்படித் தெரிஞ்சிருக்கும், உனக்கு? நான் சொன்னாத்தான் இது கூடத் தெரியும்"//

லக்ஷ்மணின் பண்பு வாரஹமிஹிரர் மூலம் மேலும் தெரிகிறது. வலக் கை கொடுப்பது இடக்கைக்கு தெரியகூடாது என்பார்கள் அது போல் லக்ஷ்மணன் இருக்கிறார்.

//காரணம் இல்லாம எந்தக் காரியமும் இல்லே. நிகழ்வா நடக்கற ஒவ்வொரு காரியமும் சயின்ஸ். ஒண்ணைப் பாத்தையா?.. தன்னாலே எந்தக் காரியமும் நடக்காது. ஒண்ணோட ஒண்ணு சேந்து தான் இன்னொண்ணுன்னு எல்லாத்துக்கும் ஒரு ப்ராஸஸ் இருக்கும். இந்தக் கணக்கைப் பத்திச் சொல்லப்போனா ஆரியபட்டரிலிருந்து ஆரம்பித்து ஐயின்ஸ்டின் வரைப் போகும்.//

நீங்கள் சொல்வது உண்மை. காரணம் இல்லாமல் காரியம் இல்லை.
இறைவன் ஒவ்வொருவரையும் ஒருவருக்கு காரணமாய் அனுப்புவார்.

அதிர்ஷ்ட தேவதை சிறகு விரித்து டி.வி. பக்கம் நின்று கொண்டிருப்பது போல வித்யாவின் கண்ணுக்குப் பட்டது.//

விதயா வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதை வரபோகிறாளா?
அவள் கதை எழுதும் ஆசை என்னவாயிற்று? விதி வேறு பாதையில் அழைத்து செல்கிறதே!

G.M Balasubramaniam said...

எழுத்துப் பட்டரை முன்பு; இப்போது பங்கு சந்தை. தெரியாத விஷயங்கள்..நேரம் கடந்து தெரிய வருகிறதோ.?

ஜீவி said...

@ Geetha Samhasivam

வாங்க, கீதாம்மா!

நீங்க எப்படி 'அந்த காரணமில்லாமல் காரியமில்லை'யை விவரிக்கிறீர்கள் என்று படித்துப் பார்க்கலாம். தகவலுக் கும் ஆச்சரியப்பட்டதற்கும் நன்றி.

பங்குச் சந்தை மட்டுமல்ல. மியூசிக் தெரபி, எழுத்துப்பட்டறை என்று பல விஷயங்கள் இந்தக் கதையில் தங்களை நுழைத்துக் கொண்டதும் அப்படித்தான்; ஒரு காரணத்திற்காகத் தான். கதை முடிகையில் அந்தக் காரணம் தெரியும்.

ஸ்ரீராம். said...

படித்து விட்டு அடுத்த பகுதிக்குச் செல்கிறேன். நிறைய டியூ என்பதால் கொஞ்சம் வேகமாகப் படிக்கிறேன்!

பாச மலர் / Paasa Malar said...

//காரணம் இல்லாம எந்தக் காரியமும் இல்லே. நிகழ்வா நடக்கற ஒவ்வொரு காரியமும் சயின்ஸ். ஒண்ணைப் பாத்தையா?.. தன்னாலே எந்தக் காரியமும் நடக்காது. ஒண்ணோட ஒண்ணு சேந்து தான் இன்னொண்ணுன்னு எல்லாத்துக்கும் ஒரு ப்ராஸஸ் இருக்கும். இந்தக் கணக்கைப் பத்திச் சொல்லப்போனா ஆரியபட்டரிலிருந்து ஆரம்பித்து ஐயின்ஸ்டின் வரைப் போகும். அதனாலே தான் இயற்கையா நடக்கற காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு இந்த 'நடக்குமென்பார் நடக்கும்' நாவல்லே கூட என் வாழ்க்கையிலே எனக்கு அனுபவப்பட்ட விஷயங்களுக்கு கதை ரூபம் கொடுத்திருக்கிறேனே, தவிர செயற்கையா கற்பனையா எதையும் எழுதலே" என்றார்.//

மிகவும் ரசித்த வரிகள்..

Related Posts with Thumbnails