மின் நூல்

Sunday, August 26, 2012

பார்வை (பகுதி-55)

ர்மிளாவின் சந்தோஷத்தில் மிதக்கும் குரல் தொலைபேசியில் வழிந்த பொழுது அவள் மகிழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்ப்பது போலிருந்தது வித்யாவிற்கு. "இப்போத் தான் ரெண்டு நிமிஷத்திற்கு முன்னாடி போனில் வேணி கூப்பிட்டுச் சொன்னபோது தெரிந்தது.  உடனே உங்க கிட்டேதான் அதைச் சொல்லிப் பகிர்ந்துக்கணும் போல இருந்தது. அதான் உடனே கூப்பிட்டேன்" என்றாள் ஊர்மிளா.

"வேணியா?.. எந்த வேணி?"

"ஓ! வேணியை உங்களுக்குத் தெரியாதில்லையா?.. நான் வேலை செய்றேன்ல்லியோ, அந்தப் பதிப்பகத்தின் ரிஷப்ஷனிஸ்ட்!  நீங்க கூட நான் கேட்டேன்னு ஒரு ஆட்டோக்காரரின் பையனின் ஜாதகத்தை வாங்கித் தந்தீங்களே, அந்த ஜாதகம், பெண்ணோட ஜாதகத்தோட ரொம்பப் பொருந்தியிருக்காம்!  பொண்ணு பேரு லஷ்மி; வேணியோட சொந்த அக்கா. இப்போ புரியறதா?"

"ஓ--" என்று ஆச்சரியப்பட்டாள் வித்யா. "இப்போ ஞாபகம் வந்திடுத்து, ஊர்மிளா!" என்று சொன்ன போது, பார்த்த திரைப்படத்தின் காட்சி போல, ஆட்டோ பெரியசாமியின் ஆட்டோவில் எழுத்துப் பட்டறைக்குப் போகும் பொழுது லஷ்மி தெருவில் ஆட்டோ நுழைகையில், கல்யாணத்திற்குக் காத்திருக்கும் பெண்ணின் பெயரும் லஷ்மி என்று தெரிந்து 'இதைத் தாங்க சூசகமா தெரிவிக்கறதுன்னு சொல்வாங்க போலிருக்கு; சாதகப் பொருத்தம் கூட அவிங்க பாத்தா சரி;  எங்களுக்குப் பாக்கணும்ன்னு இல்லீங்க' என்று பெரியசாமி சொன்னதெல்லாம் அவள் நினைவுக்கு வந்தது.

"எனக்கு ரொம்ப சந்தோஷம், ஊர்மிளா.. சொல்லப்போனா எதிர்பார்க்கிறது கூடி வர்றத்தே அந்த சந்தோஷம் ரெட்டிப்பாகிறதுங்கறது உண்மைதான்.." என்றாள்.

"கூடி வர்றதுன்னு சொன்னீங்களே, அதுவும் எப்படி கூடி வந்ததுங்கறீங்க?.. பையன் தங்கமானவன்; உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னுக்கு வரத் துடிக்கறவன்; மட்டு மரியாதை தெரிஞ்சவன்... ரொம்ப சூட்டிகையான பையன்"

"ஒரு நிமிஷம்.. இவ்வளவு சொல்றீங்களே?.. கல்யாணப் பையனை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?"

"அதான் வித்யா, அதைத்தான் சொல்ல வர்றேன்..  அதான், அந்த கூடி வந்ததோட மகத்துவம். இவ்வளவுக்கும் அந்தப் பையன் எங்க பதிப்பகத்து அம்பத்தூர் அச்சகத்திலேயே மேனேஜரா இருக்கான். வாரத்துக்கு ஒரு தடவையாவது நாங்கலாம் பாக்கற பையன் தான்.  இங்கே வந்தான்னா, ரெண்டு நிமிஷமாவது எங்கிட்டே பேசிட்டுப் போகாமா இருக்க மாட்டான்! நமக்கு நன்னாத் தெரிஞ்சிருந்தும் பலது நமக்குன்னு தோணி நடக்க மாட்டேங்கறது பாருங்க, அதைச் சொல்ல வந்தேன்!  ஒவ்வொண்ணுக்கும் அதுக்குன்னு ஸ்பெஷலா ஒரு ப்ராஸஸ் தேவையா இருக்கு! எங்கேயிருந்து எங்கே பாருங்க!  எப்படிக் கொண்டு வந்து சேக்கறது பாருங்க! அதான் எனக்கு நினைக்க நினைக்க ஆச்சரியமா இருக்கு.. உங்க மூலமா வந்த ஜாதகம் இல்லையா, அதான் எனக்குத் தெரிஞ்சதும் முதல்லே உங்களுக்குத் தான் சொல்லணும்ன்னு கூப்பிட்டேன்."

"என் மூலம்ன்னு இதிலே ஒண்ணும் இல்லே, ஊர்மிளா!  இன்ஃபாக்ட் எனக்கும் பொண்ணைத் தெரியாது; பையனையும் தெரியாது.  இருந்தும் இடைலே நம்ம பங்குன்னு ஒரு இன்வால்வ்மெண்ட்.  அந்த ஆட்டோக்காரப் பெரியவர் தன் பையனுக்கு பெண் பாத்திண்டிருக்கறதா சொல்லப்போக, அதே சமயத்தில் நீங்களும் பையன் ஜாதகத்தைப் பத்தி எங்கிட்டே சொன்னது ஞாபகத்துக்கு வர..." என்று ஒரு நிமிடம் தாமதித்து வித்யா தொடர்ந்தாள்.  "இதான் எனக்குக் கூட பிரமிப்பா இருக்கு, ஊர்மிளா! ஒரு நிகழ்ச்சி நடக்கறத்திலே இருக்கற சூட்சுமத்தைப் பாத்தா.. அப்படி நடந்த நிகழ்வுகள்லே பலது கூட,  பாக்கறதுக்கு ரொம்ப சாதாரணமாத் தெரிஞ்சு இப்படி முக்கியத்துவம் கொடுத்து நெனைச்சு பாக்கக் கூட நமக்குத் தெரியாம போயிட்றது;  இப்போ கொஞ்ச நாளா இதைப் பத்தித் தான் யோசிச்சிண்டு இருக்கேன்.. யோசிக்க யோசிக்க எனக்குப் பிரமிப்பா இருக்கு.." என்றாள்.

"வித்யா! நீங்க கூட என்ன, வராஹமிஹிரர் மாதிரி சொல்றீங்க?"

"வராஹமிஹிரர்?..  எங்கேயோ கேள்விப்பட்டப் பேரா இருக்கே, அது யார் ஊர்மிளா?.. யாரானும் ரிஷியா?"

"இல்லே. இவர் வேறே.  ஜோதிட நிபுணர்.  சரித்திர கால வராஹமிஹிரர் தான் இவரோட இன்ஸ்பிரேஷன்..  அவரும் ஜோதிட விற்பனர் ஆனதினாலே, அந்த ப்ரியத்லே அவர் பேரையே வைச்சிண்டிருக்கார். உங்களுக்குக் கூட அவரைத் தெரிஞ்சிருக்கலாம்."

"ஓஹோ.. 'செந்தாமரை' பத்திரிகைலே ராசிபலன்லாம் எழுதுவாரே, அந்த வராஹமிஹிரரா?.."

"அவரே தான்.  எங்க பதிப்பக ஓனர் பெரியவருக்கு ஆதிகால நண்பர்.  'நடக்கும் என்பார் நடக்கும்'ங்கற அவர் நாவல் ஒண்ணு எங்க பதிப்பகம் மூலமா பிரசுரம் காணப் போறது.  அது தொடர்பா பதிப்பகத்துக்கு வந்திருந்தார்.  அப்போ அவரோட பேசிண்டிருந்தப்போ அவர் சொன்னது மாதிரியே இருந்தது, நீங்க இப்போ சொன்னது.." என்று ஊர்மிளா சொன்ன போது வராஹமிஹிரர் அப்படி என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்வதில் வித்யாவின் ஆர்வம் இன்னும் கூடியது.

"ஈஸ் இட்?.. இன்ட்ரஸ்டிங்..  அவர் என்ன சொன்னார்?.. அதைச் சொல்லுங்க.." என்று பரபரத்தாள்.

"ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு பிராஸஸ் இருக்குன்னார்.  ஒரு நிகழ்வு பூர்த்தியாகறதுக்கு, அந்த முழு பூர்த்திக்கான பல சேர்க்கைகள் இருக்காம்.  அந்த சேர்க்கைகளின் பூர்த்தி தான் அந்த நிகழ்வுங்கறார். அந்தச் சேர்க்கைகள் பூர்த்தி ஆகலைன்னா அந்த நிகழ்வு இல்லையாம். எனக்கென்னனா, அவர் சொல்றது பலது அவர் சொல்லிண்டே வர்றத்தே ஃபாலோ பண்ற ஜோர்லே நிறைய புரியற மாதிரி இருந்தது.  அப்புறம் நிறைய அது தொடர்பா கேள்வி எழறச்சே, அதுக்கெல்லாம் அவர் சொல்லித் தான் பதில் தெரிஞ்சிக்கணும் போலிருக்கு. கொஞ்சம் ட்ஃப்பான சப்ஜெக்ட்.  நிறைய யோசிக்கணும் போலிருக்கு."

"என்னோட சில சமீப கால அனுபவங்கள்னாலே இதெல்லாம் ஓரளவு புரியற மாதிரி இருக்கு,  ஊர்மிளா.  இதிலே ஒரு இடத்திலே தான் எனக்கு சந்தேகம்.  மனித யத்தனத்துக்கு மீறின சில நிகழ்வுகள்-- மொட்டவிழ்ந்து பூ பூக்கறது, கொட்டோ கொட்டுன்னு மழை பெய்யறது, வெயில் சுட்டெரிக்கறது-- இதெல்லாத்துக்கும் கூட இப்படியான இந்த சேர்க்கைகளோட பூர்த்தி அவசியம்ன்னு பட்றது.  அதே மாதிரி சாதாரணமா மனுஷ முயற்சிகளுக்கு உட்பட்ட நெறைய விஷயங்கள்.  அதிலெல்லாம் மனுஷனோட பங்களிப்பு இயல்பா எப்படி ஏற்பட்டு அந்த விஷய பூர்த்திக்கு அனுசரணையாப் போறதுன்னும் தெரிஞ்சிக்கணும்."

"நல்ல சந்தேகம்.  ரொம்ப யோசிச்சிருங்கீங்க, போலிருக்கு. வராஹமிஹிரர் கிட்டே தான் கேக்கணும். அவர் அட்ரஸ் இருக்கு. போய்ப் பாக்கிறீங்களா?"

"நிச்சயமா." என்று ஊர்மிளா கொடுத்த விலாசத்தை வித்யா குறித்துக் கொண்டாள்.  தொலைபேசி எண்ணும் கிடைத்தது செளகரியமாப் போயிற்று.

"போன் பண்ணிட்டு எப்போ வரச்சொல்றாரோ அப்போப் போய்ப் பாக்கறேன், ஊர்மிளா."

"அதான் சரி." என்று ஊர்மிளா சொன்ன போது, வாசலில் "அம்மா.." என்று குரல் கேட்டது.

"ஒரு நிமிஷம், ஊர்மிளா! வாசல்லே யாரோ கூப்பிடறாப்பலே இருக்கு.." என்று ஊர்மிளாவிடம் சொல்லி விட்டு, "கெளதம்! யார் கூப்பிடறா, பார்!" என்று வித்யா மகனிடம் சொன்னாள்.

ஒரே நிமிடத்தில் திரும்பி வந்த கெளதம், "அம்மா! அந்த ஆட்டோக்காரத் தாத்தா வந்திருக்கிறார்ம்மா.." என்றான்.

"ஓ.. ஊர்மிளா! பெரியசாமி தான் வந்திருக்கிறார்.  என்னன்னு விசாரிச்சிட்டு வந்திடவா?"

"ஜாதகம் பொருந்தியிருக்கற விஷயத்தைத் தான் சொல்ல வந்திருக்கார், போலிருக்கு.. நான் அப்புறம் பேசறேன்.. வைச்சிடட்டுமா?"

"சரி, ஊர்மிளா.." என்று போனை வைத்த வித்யாவிற்கு, இந்தத் திருமண விழா நிகழ்வில் இன்னும் தன் பங்கு மிச்சம் இருந்து பூர்த்தியடையாமல் இருக்கிறது போலிருக்கு என்று நினைத்த பொழுது, அந்தப் பூர்த்திக்காக மனம் விழைந்தது.   வாசலுக்கு விரைந்தாள்.

வெளி வாசலில் நின்றிருந்த பெரியசாமியின் முகத்தில் சந்தோஷம் மலர்ந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. "வாங்க.. வாங்க.. உள்ளே வாங்களேன்.." என்று வித்யா அவரை உள்ளே அழைத்த பொழுது, அவர் கொஞ்சம் விலகி, "நீ போ.. நான் பின்னாடி வர்றேன்.." என்று சற்று ஒதுங்கி நின்ற பொழுது தான் பின் பக்கம் கையில் ஒரு பையுடன் இத்தனை நேரம் பார்வைக்குப் படாமல் நின்றிருந்த அந்த அம்மாள் தெரிந்தாள்.

பெரியசாமி தன் மனைவியுடன் சந்தோஷ விஷயத்தைச் சொல்ல வந்திருக்கிறார் என்று சட்டென்று புரிந்ததும், வித்யா நெகிழ்ந்து போய்விட்டாள்.

"வாங்கம்மா.. உள்ளே வாங்க.." என்று அவள் அழைத்ததும், அந்த அம்மாளும் மலர்ந்த முகத்துடன் உள்ளே வந்தார்.

"உட்காருங்கம்மா... நீங்களும் உட்காருங்க.."

"இருக்கட்டும்மா.. "

"இல்லே.. உட்காருங்க.." என்று வித்யா அந்த அம்மாளின் கைபற்றினாள். "உட்காறத்துக்குத் தானே சேர்-சோபாலாம் போட்டிருக்கு.. உட்காருங்க..." என்ற வற்புறுத்தலுக்கு அப்புறம் உட்கார்ந்தார்கள்.

"நீங்க மட்டும் நின்னுகிட்டிருந்தா எப்படி? நீங்களும் உட்காருங்க.." என்று பெரியசாமி சொன்னதும் சிரித்துக் கொண்டே ஒரு நாற்காலியை நகர்த்திப் போட்டுக் கொண்டு அந்த அம்மாளின் அருகில் அமர்ந்தாள் வித்யா.

"என் பையன் நாராயணனோட ஜாதகத்தை வாங்கிக் கொண்டு போய் கொடுத்தீங்கள்லே,   அந்தப் பொண்ணு பேர் கூட லஷ்மிம்மா,  ஞாபகம் இருக்கா?.. இன்னிக்கு அவங்க வீட்லே கூப்பிட்டுச் சொன்னாங்கம்மா.. அவங்க பாத்த அளவிலே ரெண்டு ஜாதகங்களுக்கும் நெறைய பொருத்தங்கள் பொருந்தி வர்றதாம்.  அதைக் கேட்டு ரொம்ப சந்தோசப்பட்டோம். அவங்க சொன்னதே போதும்.  நாங்க வேறே தனியா எதுக்குங்க ஜோசியர் கிட்டே போகணும்? அதுனாலே போகப் போறதில்லே.  கடவுளா பாத்து கை காட்டியிருக்கிறார். அவரா பாத்து இந்தக் கல்யாணத்தையும் முடிச்சு வைக்கட்டும்.  பையன்-பெண் திருப்திக்கு பொண்ணு பாக்கப் போகணும். அதான் உங்க கிட்டேயும் சொல்லணும்ன்னு வந்தோம்.."

"நல்ல சமாச்சாரத்தைச் சொல்லியிருக்கீங்க.. எனக்கும் ரொம்ப சந்தோஷம்" என்று வித்யா எழுந்திருந்தாள்.  சமையறை அலமாரித் தட்டில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா வாங்கியபடியே டப்பாவில் இருந்தது.  எழுந்து போய் அதை எடுத்துக் கொண்டு வந்து, "நீங்களும் ஸ்வீட் எடுத்துக்கங்க.." என்று அவர்களிடம் டப்பா திறந்து நீட்டிய போது அவர்கள் முகத்தில் ஆனந்தம் பொங்கியது.  ஆளுக்கு ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுக் கொண்ட போது வயசான அந்த தம்பதிகளின் மகிழ்ச்சி முகத்தில் பளீரிட்டுப் போனது.

அந்த அம்மாள் வித்யாவிடம் ஒரு தட்டு கேட்டு வாங்கி, பையிலிருந்து சில பழங்களையும் பூவையும் எடுத்து வைத்தாள்.  "நாளைக்கு மத்தா நாள், நல்ல நாளாயிருக்காம்மா..  பொண்ணு பாக்கப் போறோம்.  நீங்களும் உங்க வீட்டு அய்யாவைக் கூட்டிகிட்டு எங்க கூட வரணும்மா.." என்று தட்டை வித்யாவிடம் நீட்டினாள்.

"அப்படியா?.. ரொம்ப சந்தோஷம்மா.." என்று தட்டை வாங்கிக் கொண்டு பூஜை அறையில் கொண்டு போய் வைத்தாள் வித்யா. 'மனுஷங்க, வெறும் டூல் தான். மனுஷங்க கலந்துக்கற மாதிரி ஒரு பொம்மை விளையாட்டு' என்று அவள் மனசில் சட்டென்று ஒரு நினைப்பு வந்து போயிற்று.

"நாளைக்கு மறுநாள் தானே?.. எப்போ பொண்ணு பாக்கப் போறதா இருக்கீங்க?.."

"மாலை நாலு மணிக்கு மேலே போலாம்ன்னு இருக்கோம்.  கார் ஏற்பாடு செஞ்சிருக்கேன்.  நாலரைக்கு இங்கே வந்திடறேன்.." என்றார் பெரியசாமி.

"எங்க வீட்டிலே அவருக்கு எப்படி செளகரியம்ன்னு தெரிலே.  எப்படியும் நான் வந்திடறேன்.. போய்ட்டு வந்திடலாம்" என்று ரொம்ப இயல்பாக தான் அவர்களுக்கு பதில் சொன்னது வித்யாவிற்கே வியப்பாக இருந்தது.

"ரொம்ப சந்தோசம்ம்மா.  உங்க கூட அன்னிக்கு ஆட்டோலே வந்தாங்களே, அந்தம்மாவுக்கும் வர்றதுக்கு செளகரியப்படுமான்னு தெரிலே. இங்கே தானே அவங்களும் குடித்தனம் இருக்காங்க.. கேட்டுடலாம்னுட்டு.." என்று பெரியசாமி தயங்கினார்.

"ஓ.. அவங்க உஷா..  காலைலே தான் புரசைவாக்கத்திற்கு, அவங்க அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க.. வந்திடுவாங்க.. நான் கேட்டு வைக்கிறேன். வருவாங்க.  அவங்களையும் கூட்டிகிட்டுப் போகலாம்" என்று சொன்னாள் வித்யா.

எல்லாம் சேர்ந்து வருவதற்கு எந்த குந்தகமும் ஏற்பட்டுவிடாமல் அதன் போக்கிலேயே எந்த எதிர்மறையுமில்லாமல் பேச்சு, செயல் எல்லாம் இருக்க வேண்டும் என்று இத்தனைக்கும் நடுவே வித்யாவின் மனசு அவளுக்கு அறிவுறுத்துகிற மாதிரியான உணர்வும் அவளுக்கிருந்தது.

"ரொம்ப சந்தோசம்மா.. அப்ப நாங்க வர்றோம்.." என்று பெரியசாமியும் அவர் மனைவியும் விடைபெற்றுப் புறப்பட்ட பொழுது மனுஷப் பிறவி ரொம்பவும் அர்த்தம் நிறைந்ததாக வித்யாவிற்குப் பட்டது.


(இன்னும் வரும்)










 

20 comments:

ஸ்ரீராம். said...

நினைக்கும் விஷயங்கள் அல்லது எதிர்பார்க்கும் விஷயங்கள் அதுபடியே நடப்பது தரும் சந்தோஷம் தனிதான்.
நினைக்கும் விஷயங்கள் பூர்த்தியாக பல நிகழ்வுகளின் சேர்க்கை காரணமாக இருக்கலாம். பூர்த்தியாகாத விஷயங்களில் அந்த சேர்க்கை இருக்காது, சரி.. இதில் சம்பந்தப் படும் பங்கேற்பாளர்களின் தொடர்ந்த, ஒருமித்த நேர்மறை எண்ணங்கள் இந்தச் செயலைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கலாம்!
ஒரு சந்தோஷ நிகழ்வு வரப் போகிறது என்று தெரிகிறது.

Geetha Sambasivam said...

சந்தோஷமான நிகழ்வைப் பகிர்ந்து கொள்ளும் சந்தோஷம் வித்யாவுக்கு மட்டுமில்லாமல் உங்களுக்கும் இருக்கிறது. கூடவே அந்த எச்சரிக்கை உணர்வு எதுக்கு?? ஆனால் அதுவும் தேவைதான் இல்லையா!

அப்பாதுரை said...

//உட்காறத்துக்குத் தானே சேர்-சோபாலாம் போட்டிருக்கு..
இப்படி யாராவது சொன்னா முன்பெல்லாம் show offனு நெனைப்பேன்
க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா இந்த ட்ரிப் தான் அறிமுகம். அக்கிரமம்! இத்தனை மென்மையாகவா மைசூர்பா செய்வது? தீபாவளி நாளில் தடுக்கி விழுந்து பல்லுடைந்த நாளெல்லாம் போய்..
நிறைவில் பிறவிக்குப் பொருள் காண்பதும், மனுஷங்க கலந்துக்கற பொம்மை விளையாட்டும் - கொஞ்ச நாளைக்கு சுற்றிக் கொண்டே இருக்கும்.

அப்பாதுரை said...

வராஹமிஹிரர் - ரொம்ப குருகுலத்தில் சிரமப்பட்டிருப்பார்.
உன் பேர் என்னப்பா?
வரா
சரி சரி உக்காரு. அடுத்தது யாரு?

மோகன்ஜி said...

மகிழ்வைப் பகிர்ந்து கொள்வது ஒரு மேன்மையான செயல்.. இப்போதே படிக்க வாய்த்தது எனக்கு. தொடர்வேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//இதில் சம்பந்தப் படும் பங்கேற்பாளர்களின் தொடர்ந்த, ஒருமித்த நேர்மறை எண்ணங்கள் இந்தச் செயலைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கலாம்!//

'எல்லாம் சேர்ந்து வருவதற்கு எந்த குந்தகமும் ஏற்பட்டுவிடாமல் அதன் போக்கிலேயே எந்த எதிர்மறையுமில் லாமல் பேச்சு, செயல் எல்லாம் இருக்க வேண்டும் என்று இத்தனைக்கும் நடுவே வித்யாவின் மனசு அவளுக்கு அறிவுறுத்துகிற மாதிரியான உணர்வும் அவளுக்கிருந்தது' --

நான் பள்ளியில் படிக்கிற காலங்களில், கேள்வித்தாள்களிலேயே கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால் விடையும் கிடைக்கும். கிடைத்த விடை பல நேரங்களில் சரியாக இருந்ததுண்டு. எக்ஸாமினர் வராஹமிஹிரர் தான். என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

பகிர்தலுக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ Geetha Sambasivam

//ஆனால் அதுவும் தேவைதான் இல்லையா! //

சில நேரங்களில் எதை வேண்டாம் என்று நினைக்கிறோமோ, அதான் நினைவுக்கு வந்து தொலைக்கும்.

நேர்மறை எண்ணங்கள் வலுப்பட எதிர்மறை எண்ணங்களின் குவியல் அவசியம். அந்த குவியலைத் துளைத்துக் கொண்டு முகிழ்த்தால் தான் அதற்கும் மரியாதை.

அதான் எச்சரிக்கை உணர்வாக வித்யாவிடம் செயல்பட்டிருக்கு போலிருக்கு. பார்க்கலாம்.

தொடர்ந்து வருவதற்கு நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ அப்பாதுரை (1)

அதனால் தான் இப்பொழுதெல்லாம் தீபாவளி மலர்களில், அந்தக் கால (மைசூர்பாக்கு+சுத்தியல்) ஜோக்குகள் மிஸ்ஸிங் போலிருக்கு. கவனித்தீர்களா?

பிறவிக்குப் பொருள் காணும் பாக்கியமில்லாதவர்கள் தாம், பிறவி வேண்டாம் என்று நினைப்பார்கள் போலும். அதே மாதிரி,பொம்மை விளையாட்டு ரகசியம் தெரிந்த ஞானவான்கள் பிறவிப் பொம்மையாய் இருப்பதை ரசிப்பார்கள் போலிருக்கு.

"நீயும் பொம்மை, நானும் பொம்மை, நினைச்சுப் பார்த்தால் எல்லாம் பொம்மை-- (வீணை பாலச்சந்தரின் 'பொம்மை' திரைப்படம் நினைவில் நின்றது)

ஜீவி said...

@ அப்பாதுரை (2)

வ.ரா..?.. பெரியவர் வ.ராமஸ்வாமி நினைத்து மனம் சிலிர்த்தது.

பாரதியின் நண்பர். உப்பு சத்தியாகிரக தியாகி. சீர்திருத்தவாதி. 'சுதந்திரன்' பத்திரிகை ஆசிரியர். 'மணிக்கொடி' பரம்பரை. பங்கிம் சந்தர சாட்டர்ஜியின் எழுத்துக்களை தமிழில் தரிசிக்க வைத்த அற்புத அதிசய மனிதர்.

வ.ரா.. தமிழக சரித்திரத்தில் முத்திரை பதித்த இரண்டு எழுத்துக்கள்.

நினைவுகளை மீட்டியதற்கு நன்றி, அப்பாஜி!

ஜீவி said...

@ மோகன்ஜி

சில சிலவற்றிற்காகவே ஏற்பட்டது போலிருக்கும். அதுவே அதன் பயன்பாடாகவும் மாறிப்போகும்.
அந்த வரிசையில் முதலிடம் மகிழ்ச்சிக்குத் தான்.

தனி மனிதரிடம் சிறைப்பட முடியாத சுதந்திரப் பறவை அது. பகிர்வதற்காகவே பெயர் எடுத்த ஒன்று. இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் மகிழ்ச்சி மகிழ்ச்சியாகவே இருக்காது. அகந்தை என்று பெயர் மாற்றம் கொள்ளும்.

தங்கள் முதல் வருகைக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றி,மோகன்ஜி!

G.M Balasubramaniam said...


வெகு நாட்களாகக் காணவில்லையே என்றிருந்தேன் மின் அஞ்சலில் விசாரித்தால் விரும்புவீர்களோ தெரியவில்லை.மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. பார்வை நெடுங்கதை படித்து நாட்கள் பல ஆகிவிட்டதால் தொடர்ச்சிக்காக மீண்டும் படிக்க வேண்டி இருக்குமோ தெரியவில்லை. தொடருகிறேன்.

ஜீவி said...

@ G.M. Balasubramanian

வெளிநாடு சென்றவன், திரும்பி-இணையத் தொடர்பு கிடைத்து என்று கால தாமதம். தாராளமாக மின் அஞ்சல் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தொடரில் என்ன விசேஷம் என்றால், எப்பொழுது வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொடரலாம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏதோ ஒருவிதத்தில் ஒரு செய்தி இருக்கும்.
அப்படியான அந்த செய்திகளின் சேர்க்கைதான் இந்த தொடரே என்று கூடச் சொல்லலாம். அதனால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொடர்ந்து படிக்கத் தடையில்லை.

தங்கள் வருகைக்கு நன்றி, ஜிஎம்பீ சார்!

கோமதி அரசு said...

"என்னோட சில சமீப கால அனுபவங்கள்னாலே இதெல்லாம் ஓரளவு புரியற மாதிரி இருக்கு, ஊர்மிளா. இதிலே ஒரு இடத்திலே தான் எனக்கு சந்தேகம். மனித யத்தனத்துக்கு மீறின சில நிகழ்வுகள்-- மொட்டவிழ்ந்து பூ பூக்கறது, கொட்டோ கொட்டுன்னு மழை பெய்யறது, வெயில் சுட்டெரிக்கறது-- இதெல்லாத்துக்கும் கூட இப்படியான இந்த சேர்க்கைகளோட பூர்த்தி அவசியம்ன்னு பட்றது. அதே மாதிரி சாதாரணமா மனுஷ முயற்சிகளுக்கு உட்பட்ட நெறைய விஷயங்கள். அதிலெல்லாம் மனுஷனோட பங்களிப்பு இயல்பா எப்படி ஏற்பட்டு அந்த விஷய பூர்த்திக்கு அனுசரணையாப் போறதுன்னும் தெரிஞ்சிக்கணும்."//

இறைவன் நடத்தும் நாடகத்தில் நமக்கு என்ன பாத்திரம் கொடுத்து இருக்கிறரோ! அதை நாம் புரிந்து கொள்ள சில சந்தர்பங்கள் வித்யாவிற்கு அமைந்த மாதிரி அமையும்.

நாம் நல்ல கருவிகளாய் இருக்கிறோம்.

லக்ஷ்மி, நாராயணன் திருமணம் நல்லபடியாக நடைபெற வாழ்த்துக்கள்.
பெண் பார்க்கும் வைபவம் சிறப்பாய் மனநிறைவாய் நடைபெறட்டும்.

கதையை அருமையாக கொண்டு செல்கிறீர்கள்.

கோமதி அரசு said...

என் திருக்கேதாரத் தலப்பயணம் கட்டுரையை(பதிவுகள் -9) 6 பதிவுகள் தொடர்ந்து படித்து அருமையான கருத்துக்கள் சொன்னதற்கு மிகவும் மகிழ்ச்சி சார்.

வீட்டில் மருமகள், பேரன் நியூஜெர்சியிலிருந்து வந்து இருக்கிறார்கள் அதனலால்
உடன் பதில் போட முடியவில்லை.
பதிவை தினம் கொடுத்த காரணம் அது தான்.
தனி கடிதம் சார்.
நன்றி, வணக்கம்.

அப்பாதுரை said...

//கேள்வித்தாள்களிலேயே கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால் விடையும் கிடைக்கும்.

கேள்வியைப் பார்த்து சோகம் பெருகி அழாத குறையாக அந்தப் பக்கம் இந்தப் பக்கம் விழித்தது தான் என்னுடைய அனுபவம்.

அப்பாதுரை said...

வ.ரா - சுத்தமாகக் கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி.

வராஹமிஹிரன்னு தன்னோட பெயரைச் சொல்வதற்கே கஷ்டப்பட்டிருப்பார் - அதைக் கேட்டு கஷ்டப்பட விரும்பாத குரு..

அமெரிக்கா வந்த புதிதில் என் அடையாள அட்டையில் இந்தியப் பாஸ்போர்ட் படி முழுப்பெயரும் இருந்தது - துரை வெங்கடசுப்ரமணியன் யக்ஞநாராயணன் அப்பாதுரை. துரை என்பதை மட்டும் first nameல் போட்டு மிச்சதை last nameல் மொத்தமாக gap இல்லாமல் ஒரே வார்த்தையாகப் போட்டிருந்தார்கள். அப்போதெல்லாம் இங்கே கல்லூரிக்கு சைக்கிளில் தான் போக வேண்டியிருந்தது. இந்தியா போல ஒன் வே தெருக்களின் ஓரத்தில் ஒரு போலீஸ்காரர் சிலசமயம் கடவுள் போலத் தோன்றி பிடித்துவிடுவார். நம் ஊரைப் போலவே ஒரு சிவப்பு நோட்புக் வைத்திருப்பார்கள், ஸ்பாட்டிலேயே சைடேஷம் கொடுத்துவிடுவார்கள். சிலர் லஞ்சம் வாங்கி ஒதுங்குவதும் உண்டு. ஒரு நாள் காலை 7 மணி வகுப்புக்கு அவசரமாக போக வேண்டியிருந்ததால் ஒன்வேயில் விரைந்தேன். டக் என்று தரிசனம் தந்து பிடித்துவிட்டார். "பெயரைச் சொல்" என்றார். சொன்னேன். "last name?" என்றார். வெங்கடசுப்ரமணியன்யக் வரை சொன்னதும் எழுதுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். "is that real?" என்றார். "not done yet" என்று என் அடையாள அட்டையை எடுத்துக் கொடுக்க, "இனி மேல் இப்படித் தவறு செய்யாதே" என்று அதுவரை எழுதிய சைடேஷனைக் கிழித்துப் போட்டார். "at this rate, i will never finish writing the ticket. i don't get paid enough for this" என்று சலித்தார்.

ஜீவி said...

@ அப்பாதுரை

வ.ரா.வைப் பற்றிய மேலதிகத் தகவல்களை அருள்கூர்ந்து கூகுளாரிடம் கேட்டுப் பெற்று வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன். நிச்சயம் அவை உங்களுக்குப் பிடிக்கும்.

வராஹமிஹிரரின் குருவின் பெயரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
:))
தங்கள் இள வயது அமெரிக்க அனுபவம்-- சுவாரஸ்யமானது.
அதுவும் இடைவெளியில்லாமல் அந்தப் பெயர்த்தொடரை நினைத்துப் பார்த்த பொழுது.. அதை நீங்கள் விவரித்த விதம்.. ஹி..ஹி..




சிவகுமாரன் said...

வரலாற்றுப் பாடத்தில் படித்தது வராஹமிகிரர் என்னும் பெயர். இன்னும் நினைவில் இருக்கிற பெயர். சந்திரகுப்த விக்கிரமாதித்தர் அவையில் இருந்த வான சாஸ்திர மேதை. ஒரு சிறிய வரி - உரையாடல் நினைவலைகளை பள்ளிப்பருவத்துக்கு இழுத்து சென்று விட்டது.

சிவகுமாரன் said...

வரலாற்றுப் பாடத்தில் படித்தது வராஹமிகிரர் என்னும் பெயர். இன்னும் நினைவில் இருக்கிற பெயர். சந்திரகுப்த விக்கிரமாதித்தர் அவையில் இருந்த வான சாஸ்திர மேதை. ஒரு சிறிய வரி - உரையாடல் நினைவலைகளை பள்ளிப்பருவத்துக்கு இழுத்து சென்று விட்டது.

பாச மலர் / Paasa Malar said...

//நமக்கு நன்னாத் தெரிஞ்சிருந்தும் பலது நமக்குன்னு தோணி நடக்க மாட்டேங்கறது பாருங்க//

//அப்படி நடந்த நிகழ்வுகள்லே பலது கூட, பாக்கறதுக்கு ரொம்ப சாதாரணமாத் தெரிஞ்சு இப்படி முக்கியத்துவம் கொடுத்து நெனைச்சு பாக்கக் கூட நமக்குத் தெரியாம போயிட்றது; //

இது போன்ற பல வரிகள் இந்த அத்தியாயத்தில்....அனைவருக்கும் பொதுவான அனுபவங்கள் கதையின் ஓட்டத்தில் வந்து விழுந்திருப்பது அழகு...

Related Posts with Thumbnails