மின் நூல்

Tuesday, September 4, 2012

பார்வை (பகுதி-56)

ரியாக காலை ஒன்பதே காலுக்கு டி.வி.யில் ஷேர் சேனலில் மணியடித்து பங்கு பரிவர்த்தனை தொடங்கி விட்டது.

ஒன்பதுக்கே இதற்காக ரெடியாகி விட்டாள் வித்யா.  காலையில் படுக்கையிலிருந்து எழும் பொழுதே அவள் குறித்து வைத்திருந்த பங்குகளின் விற்பனை விலை இன்று எப்படிப் போகும் என்கிற ஆவல் வந்து விட்டது.  அதற்காக கொஞ்சம் சீக்கிரமாகவே இன்று எழுந்திருந்தாள். காலை டிபன், சாப்பாடு எல்லாம் எட்டுக்கே தயாராகி விட்டது.

வழக்கமாக ரிஷி டிபன் சாப்பிட்டு விட்டு மதியத்திற்கான சாப்பாடை சின்ன கேரியரில் சாதம் தனி, மத்ததெல்லாம் தனித் தனியாக என்று எடுத்துச் செல்வான்.   இன்று ஏனோ சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு மதியதிற்காக டிபனை எடுத்துச் சென்றிருந்தான்.  கேட்டதற்கு ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என்று சொல்லிச் சிரித்தான்.  'எதிலெல்லாம் மனம் மாறுதலை விரும்புகிறது, பார்' என்று அவளுக்கும் புன்னகை விரிந்தது.  அவன் பொழுது சாய்ந்து வீட்டுக்கு வருகையில் திகைக்கிற மாதிரி வீட்டில் தானும் ஏதாவது மாறுதலைச் செய்து வைத்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

கெளதமும் ஸ்கூலுக்கு கிளம்பி போயாச்சு.   பன்னிரண்டரைக்கெல்லாம் கரெக்டாக மதிய சாப்பாட்டு இடைவேளையில் வீட்டிற்கு வந்து விடுவான். அவன் வருவதற்குள்----

நினைவுகளுக்கிடையில், டி.வி. திரையில் ஓடிக்கொண்டிருந்த அந்த பங்குகளின் பெயர்களுக்கிடையே அந்த சிமிண்ட் கம்பெனி ஷேரின் அன்றைய விலையைப் பார்த்து மனம் அலைபாய்ந்தது.  நேற்றைய விலைக்கு அதற்குள் நாற்பது ரூபாய்கள் விழ்ச்சி.  ஸ்டீலும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு விலை குறைந்திருந்தது.  தனியாக நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்த குறிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தில் ஒன்று தெரிந்தது..  கடந்த இரண்டு நாட்களில் நல்ல வீழ்ச்சி.  அவள் ஆவல் கூடியது.  நல்ல வேளை, நேற்று எந்த ஷேரும் வாங்க முடியாமல் போனது நல்லதுக்கே என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்த நினைப்பு, இதற்காகத் தான் அதற்காக முயற்சித்தும் வாங்க முடியாமல் நேற்று நடந்த நிகழ்வுகளின் சேர்க்கை தனக்குச் சாதகமாக அமைந்து விட்டதோ என்று.  தாங்க் காட்!  இந்த நிமிடம் வாங்கினால் கூட நேற்றைக்கும் இன்றைக்குமான விலையில் மொத்தத்தில் ஆறாயிரம் குறைந்திருந்தது.  வாங்குவது தான் வாங்கப் போகிறோம், அந்த ஆறாயிரம் வித்தியாசம் இன்னும் அதிகப்படுகிறதா என்று பார்க்கலாம் என்று யோசனை தீட்சண்யப்பட்ட பொழுது ---

அதற்குள் நாற்பது ரூபாய் இறக்கம் எழுபது ஆகியிருந்தது.  அதைப் பார்த்த வாக்கிலேயே மனம் பரபரத்தது.  கால்குலேட்டரை எடுத்து அந்த சிமெண்ட் ஷேர் அப்போதைய விலையில் ஐம்பது ஷேர்கள் வாங்கினால் எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கும் என்று கணக்கு போட்டுப் பார்த்தாள்.  அறுபதாயிரம் ஒதுக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தது.  ஸ்டீல் வேறு வாங்க வேண்டும்.  இல்லை, சிமிண்டிலும் ஸ்டீலிலும் தலைக்கு இப்பொழுது இருபது வாங்கி விட்டு, நாளைக்கு இன்னும் குறைந்தால் வாங்கிக் கொள்ளலாமா?..  நோட்டுப்புத்தகம், கால்குலேட்டர், கணக்கு என்றிருக்கும் நிலையில் டி.வி.யைப் பார்த்த பொழுது, அப்பொழுது தான் ஒரு ரவுண்டு முடிந்து 'A'-யிலிருந்து பங்கின் பெயர்கள் வரிசையாக நகர ஆரம்பித்திருந்தன.  அவள் நினைத்திருந்த சிமிண்ட் கம்பெனியின் பெயர் திரையில் தெரிவதற்குக் கொஞ்சம் பொறுக்க வேண்டும்.  அதற்குள் ஸ்டீல் விலையும் ஏறாதிருக்க வேண்டும். இல்லை, ஸ்டீல் ஏறினால், சிமிண்ட் மட்டும் இன்று வாங்கிக் கொண்டு ஸ்டீலை பிறகு பார்த்துக் கொள்ளலாமா?.. நாளைக்கு எப்படி இருக்குமோ, ஆகிறது ஆகட்டும் இரண்டையும் இன்றைக்கே வாங்கி விடலாமென்று நினைத்த பொழுது சிமிண்ட் பங்கின் விலை லேசாக ஏற ஆரம்பித்திருந்ததை வித்யா கவனிக்கத் தவறவில்லை. இன்றைய இறக்கம் அவ்வளவு தானா?  நாளையிலிருந்து ஏற்றமோ?.. சரி, இந்த விலையிலேயே வாங்கி விடலாமா? அடுத்த சுற்று வந்து சிமிண்ட் விலை டி.வி. திரையில் தெரியப் போகிற மூன்று வினாடிக்குள் ஏறி இருக்குமா, இல்லை இன்னும் இறங்கியிருக்குமா என்று மனம் தவித்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்த வினாடியியே, பட்டென்று டிவியை வித்யா ஆஃப் செய்தாள்.  பேசாமல் எழுந்து போய் வாசல் பக்க ஜன்னல் வழி ரோடைப் பார்த்தாள்.  எதிர் வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளி, காய்கறி தள்ளு வண்டியில் ஜரூரான விற்பனை நடந்து கொண்டிருந்தது.   நேற்று தான் மார்க்கெட்டுக்குப் போயிருந்தாள். வீட்டு பிரிட்ஜில் இன்னும் நாலு நாட்கள் தாங்கற அளவுக்கு வேண்டியது இருந்தது.

வாசல் தாளிட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு பின்பக்கம் போய் கதவு திறந்தாள்.  குட்டியூண்டு தோட்டம்.  வாழை குலை தள்ளியிருந்தது. மல்லிகைக் கொடி அரும்பு விட்டிருந்தது.  பக்கத்தில் அரளி.  கொஞ்சமாய் கலர்க் கலர் மலர்ச் செடிகள்.  பூவாளியில் தண்ணீர் பிடித்து செடிகளுக்கு
வார்த்தாள்.  வாழை பக்கம் வந்து கொஞ்சமே கொத்தி விட்டு குளிக்கும் அறையிலிருந்து வந்து லேசாகத் தேங்கியிருந்த நீருக்கு போக்கு கொடுத்தாள்.  சகதியை வாரி அணையிட்டாள்.  கையலம்பி, பின்பக்கக் கதவைச் சாத்தி தாழ்ப்போட்டு விட்டு ஹாலுக்கு வந்த பொழுது சுவர்க் கடியாரத்தில் பத்தே கால்.

கை ரிமோட்டை நாடியது.  நிதானமாக திரையில் ஓடிய பங்கு வரிசை ஓட்டத்தை நோட்டமிட்டாள்.  அவள் வாங்க நினைத்திருந்த சிமெண்ட் பங்கு விலை இன்னும் முப்பது ரூபாய் இறங்கி, இன்றைய பரிவர்த்தனையில் மொத்தமாக நூறு ரூபாய் இறங்கியிருந்தது.  ஸ்டீலிலும் கணிசமான இறக்கம்.

தொலைபேசி எடுத்து பொறுமையாக எண்களை அழுத்தினாள்.  மறு பக்கத்தில் தொடர்பு கிடைத்ததும் தன் பெயரைச் சொல்லி தனக்கான வாடிக்கையாளர் எண்ணையும் சொன்னாள்.   சிமிண்டில் நூறு ஷேர்களுக்கும், ஸ்டீலில் ஐம்பது ஷேர்களுக்கும் ஆர்டர் கொடுத்தாள்.  அவள் டி.வி.திரையில் பார்த்த விலையில் இன்னும் ஐந்து ரூபாய் அளவில் இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு விலை ஆர்டர் கொடுக்கையில் குறைந்திருந்தது.   அடுத்த வினாடியில் அவளுக்காக ஷேர்கள் வாங்கி விட்டதாக தரகர் அலுவலகத்தில் நிச்சயப்படுத்தினர்.  ஒருவழியாக நினைத்த வேலை முடிந்து விட்டது.

நிம்மதியாக தொலைபேசியை வைத்து விட்டு வித்யா டி.வி.யை நிறுத்தினாள்.

சமையலறை சென்று பாத்திரங்களை ஒழித்து வைத்து விட்டு, அவற்றில் கொஞ்சமே தண்ணீர் பிடித்து ஸிங்க்கில் தேய்க்கப் போட்டாள்.  வாஷிங் மெஷினை பாத்ரூம் பக்கம் நகர்த்தி வைத்து கூடையில் சேர்ந்திருந்த துணிகளை எடுத்துப் போட்டு ட்யூப் செருகி தண்ணீர் பிடித்தாள்.  வாஷிங் பெளடர் டப்பாவை எடுத்துப் பார்த்த பொழுது இன்றைய உபயோகத்திற்கான தூள் மட்டும் இருப்பது தெரிந்தது.  'நல்ல வேளை. அதுவானும் இருக்கிறதே' என்று நினைத்துக் கொண்டு, டேபிள் பக்கம் தொங்கிக் கொண்டிருந்த பேப்பர் பேடை எடுத்து, வாஷிங் பெளடர் வாங்க வேண்டுமென்று வாங்க வேண்டிய பொருள்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டாள்.  அதற்குள் மெஷினில் துணிகள் முழுகும் அளவுக்கு தண்ணீர் நிறைந்திருந்தது.  குழாய்த் தண்ணீரை நிறுத்தி விட்டு, வாஷிங் பெளடர் போட்டு மிஷினை நாற்பது நிமிட டைமிங்கில் வைத்து ஸ்விட்சை ஆன் செய்தாள்.

ஸிங்க்கில் கிடக்கும் பாத்திரங்களை சேர்ந்து போவதற்குள் தேய்த்து விட்டால் ஒரு வேலை முடியுமே என்றிருந்தது.  அதைச் செய்து முடித்த பொழுது, தான் வாங்கிய பங்குகளின் விலை இப்பொழுது எப்படியிருக்கும் என்று பார்க்க மனம் அலைபாய்ந்தது.  அலம்பி வைத்த பாத்திரங்களை ஸிங்க்கின் மேல் சிமிண்ட் பலகையில் அடுக்கி வைத்து விட்டு டி.வி. பக்கம் வந்து ரிமோட்டை எடுத்தாள்.

ஐந்து வினாடிகள் காத்திருப்பில் சிமிண்ட் பங்கின் விலை திரையில் ஓடிய பொழுது அவள் வாங்கிய விலையை விட அறுபது ரூபாய்கள் ஏறியிருப்பது தெரிந்தது.  அறுபது ரூபாய் என்றால், ஆறாயிரம் என்று மனம் கணக்குப் போட்டது.  ஸ்டீலில் ஐம்பது ரூபாய் ஏற்றம்.  ஆக, அதில் இரண்டாயிரத்து ஐநூறு.  அந்த நேரத்தில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத சந்தோஷம் மனசில் கொப்பளித்தது.  ரொம்ப அவசரப்பட வேண்டாம், க்ளோசிங் டைமில் என்ன நிலமை என்று பார்த்துக் கொள்ளலாம் என்று டி.வி.யை ஆஃப் செய்தாள்.

டீப்பாயின் மீது கத்தை பத்திரிகைகள் கிடந்தன. அவற்றைப் பார்க்கையிலேயே மனம் கசந்தது. சமீப காலமாக அவை எதையும் புரட்டிப் பார்க்கக் கூட அவளுக்கு ஆர்வம் இல்லாதிருந்தது.  நிஜத்தை எதிர்கொள்ளும் சாதனையில் மலரும் களிப்பு, கற்பனைக் கதைகள் கொடுக்கும் சந்தோஷத்தை விட மனசுக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர முடிந்தது.

ஒரு பிரபல பல்கலைக் கழகம் சார்ந்த தொலைக்கல்வி மையத்தில் வணிக நிர்வாகம் சம்பந்தப்பட்ட வகுப்பில் வித்யா சேர்ந்திருந்தாள்.   நேற்று இரவு உட்கார்ந்து எழுதிய பதில் பேப்பர்களை தொலைக்கல்வி மையத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது.  பங்குகள் வாங்கிய தொகைக்கான செக்கை மாலை கூரியர் தபாலில் அனுப்பும் பொழுது, அப்படியே கூரியரில் அவற்றையும் அனுப்பி விடலாம் என்று தீர்மானித்து அந்த பேப்பர்களை எடுத்து உறையில் இட்டு முகவரி எழுதி வைத்தாள்.  இன்னொரு கவர் எடுத்து காசோலை அனுப்புவதற்காக அதில் பங்குத் தரகர் முகவரியையும் எழுதி வைத்துக் கொண்டாள்.

வாஷிங் மெஷின் ஒலியெழுப்பிக் கூப்பிட்டது.  தண்ணீரை எடுத்து விட்டு அலசுவதற்காக நிரப்பி முடிக்கையில் வாசல் அழைப்பு மணியின் ரீங்கரிப்பு.  விட்டு விட்டான அதன் ஓசையிலேயே, கெளதம் தான் என்று தெரிந்து விட்டது.  வாஷிங் மெஷினை அலசுவதற்காக ஆன் செய்து விட்டு, போய் கதவு திறந்தாள்.

தலை நிமிர்ந்து அம்மாவைப் பார்த்து முறுவலித்தபடியே கெளதம் உள்ளே வந்தான்.

"என்ன, ஆஃப் இயர்லி ப்ரோகரஸ் ரிப்போர்ட் கொடுத்திருங்களா?..  நீ சிரிச்ச சிரிப்பிலேயே தெரிஞ்சிடுத்தே?" என்று பையனின் தோள் பக்கம் கை போட்டு அணைத்தாள்.

"க்குங்.." என்று கெளதம் சிணுங்கினான். "கண்ணை மூடிக்கோ.. கைலே தர்றேன்"

"இதோ, மூடிண்டாச்சு.." என்று விழி இமைகளை அரைகுறையாக மூடிக்கொண்டு, இரு கைகளையும் பரக்க விரித்தாள் வித்யா.

"ஐசலக்கா.. இப்படித்தான் கண்ணை மூடிப்பாளாக்கும்?.." என்று அவனே குட்டி விரல்களால் அவள் கண் பொத்தியபோது தாயுள்ளம் பொங்கி வழிந்தது.

"எவ்வளவு நேரம்டா, இப்படியே இருக்கறது?" என்று சிணுங்கினாள்.

"இந்தா.." என்று பிள்ளை கையில் வைத்ததும் தெரிந்து விட்டது, அவள் சொன்னது சரியாகத் தான் இருக்க வேண்டும் என்று.

"என்னடா, கெளதம்! இப்போ அம்மா கண்ணைத் தொறக்கலாமா?" என்று பிள்ளையிடம் அனுமதி கேட்ட பொழுது அந்த 'அம்மா'வில் இருந்த கொஞ்சல் அலாதியாக இருந்தது.

"ஓ. எஸ்.. இப்போ திறக்கலாம்.." என்று பிள்ளை அனுமதித்ததும், கண் திறந்து பார்த்தாள்.

ஆமாம், அந்த ரோஸ் நிற அட்டை, அவனது ப்ரோகரஸ் ரிப்போர்ட் தான்.  "என்ன, ரேங்க் டா.." என்று மடித்திருந்திருந்த அட்டையைப் பிரித்துப் பார்த்தவள், மலைத்தாள்..  மகிழ்ந்தாள்.

"பர்ஸ்ட் ரேங்காடா, செல்லக்குட்டி.." என்று வாரி அணைத்துக் கொண்டாள் வித்யா.

"அப்பா வந்ததும், வீட்லே, இல்லே, வெளிலே, ஹோட்டல்லே இதை செலிபரேட் பண்ணலாம்.. ஒரு மாறுதலா இருக்கட்டுமே.." என்று சொன்ன போது வேறேதோ நினைப்பு வந்து சிரிப்பு வந்தது அவளுக்கு.

(இன்னும் வரும்)

17 comments:

அப்பாதுரை said...

மாறுதல் வட்டம் ரசிக்க முடிந்தது.
எம்ஜிஆர் சினிமாவில் தான் இப்படி நடக்கும்னு நெனச்சேன், வாங்கின உடனே லாபமா?
நிஜத்தின் சுகம் கற்பனையில் வராது தான்.

Geetha Sambasivam said...

வித்யாவின் சந்தோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன். ஷேர் விஷயம் அவ்வளவா ஆர்வம் இல்லைனாலும், சரியாக் கணக்குப் போட்டு நிதானமாய்ச் செயல்படும் திறமையையும் பாராட்டுகிறேன்.

ஸ்ரீராம். said...

யதேச்சையாக இன்றுதான் அலுவலகத்துக்கு பல்வேறு பாத்திரங்களில் பல்வகைப் பதார்த்தங்கள் எடுத்துப் போவது பற்றி பேச்சு வந்தது. ஆபீசிலேயே மைக்ரோவேவ் ஓவன் வைத்து சூடு பண்ணிக்கொள்ள வசதி செய்திருப்பதால் 'டப்பர்வேர்' டப்பாக்களில் எடுத்துப் போவார்களாம். அதில் ஒருவர் சொன்னது "இத்தனை டப்பாக்கள் எடுத்துப் போவது பெரிசில்லை... சாப்பிடும்போது ஒவ்வொன்றாக அத்தனையையும் பிரித்து வைத்துக் கொள்வதுதான் கஷ்டம்" !!!!...

ஷேர் பற்றித் தெரியாது என்றாலும் விலை ஏறியிருக்கிறதா என்று பார்க்கும் ஆவல் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களைப் பார்க்கும் ஆவல் போலத் தோன்றிப் புன்னகைக்க வைத்தது!

G.M Balasubramaniam said...


பதிவுகள் போட்ட பிறகு பின்னூட்டம் பார்க்கும் ஆர்வம் ஷேர் வாங்கினதும் அதன் விலை ஏற்ற இறக்கம் பார்ப்பதை ஒப்பிடத் தோன்றுகிறது. பின்னூட்டம் இல்லையென்றாலும் பாதிப்பிருக்காது. ஆனால் ஷேர் விலை குறைந்தால்...இது எல்லாமே ஒருவித மாயையோ. நாம் வாங்கும்போது விலை குறைவாய் இருக்க வேண்டும். விற்கும்போது அதிக விலை வேண்டும்.

இராஜராஜேஸ்வரி said...

எதிலெல்லாம் மனம் மாறுதலை விரும்புகிறது, பார்' என்று அவளுக்கும் புன்னகை விரிந்தது.

சிறுசிறு மாற்றங்கள் கூட உற்சாகம் தர வல்லவைதான்...

இராஜராஜேஸ்வரி said...

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் !

ஜீவி said...

@ அப்பாதுரை

வட்டம் ஆரம்பித்த புள்ளியை நினைவில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து முடியும் வரை வந்து ரசித்தமைக்கு நன்றி, அப்பாஜி!

வாங்கினதை விற்றால் தான் லாபம்.
வாங்கினதற்கு இன்னும் பணம் கூட செலுத்தவில்லை, பாருங்கள்!
வித்யாவும் அவ்வளவு லேசில் விற்று விடப்போவதில்லை. கூம்பும் பருவத்து குத்தும் கொக்கு. அவர்கள் குறி வைப்பு 52 வார உச்சத்தைத் தொடுவது. அதனால் இன்று ஏறி நாளை இறங்குவது அடுத்த நாள் ஏறுவதெல்லாம் அவர்களைப் பாதிக்கவும் போவதில்லை. பாக்கி ஜிஎம்பீ சாருக்காக பதிலில்.

//நிஜத்தின் சுகம் கற்பனையில் வராது தான்.//

ஒரு வேடிக்கை பாருங்கள். பெரும்பாலும் கற்பனை என்றாலே சிறகு கட்டிப் பறப்பது தான். அந்தப் பறத்தலில் சுகமற்றதைக் காண யாரும் விரும்புவதில்லை. நிஜத்தின் சுகமும் கற்பனையில் வராது. அப்போ கற்பனையின் பயன்பாடு?.. இது ஒரு பெரிய கேள்விக்குறி தான்.
இந்தக் கேள்விக்காகவே ஒரு அத்தியாயம் ஒதுக்கி, விவாதித்துப் பார்க்கலாம்.

தங்கள் ரசனைக்கு நன்றி, அப்பாஜி!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

உங்களுக்கு ஷேர் என்றால் எனக்கு சீட்டுக் கட்டு. நாலைந்து தடவை கலைத்துப் போட்டு முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஊஹூம். பலன் பூஜ்யமே. எதையும் ரசிப்பதற்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும் போல் இருக்கிறது. அந்தப் பிடிப்பு இல்லாததால் தான் மனசின் இத்தனை மறுதலித்தலும்.

வித்யாவை இன்னும் கொஞ்சம் ஆழமாக நீங்கள் அவதானிக்க வேண்டும். முடியுமா, பாருங்கள்.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

//நாம் வாங்கும்போது விலை குறைவாய் இருக்க வேண்டும். விற்கும்போது அதிக விலை வேண்டும்.//

இப்படி இருந்தால் மாயை இல்லை அல்லவா? சரி.

எந்நேரமும் அப்படி இருக்காது தான்.
அதனால், அப்படி இருக்கும் பொழுது வாங்கி விற்றால் சரி தானே?

வெகு சிறிய முதலீட்டாளரான வித்யாவுடையது ஒன் டைம் இன்வெஸ்ட்மெண்ட் தான். அப்புறம் மறுபடியும் குறையும் பொழுது தான். ஒரு தடவை முதலீடு செய்து விட்டால், அது விற்றுத் திரும்பி வரும் பொழுது தான் அதைக் கொண்டு அடுத்த முதலீடு. அதுவரை ஜூட். சரியா?

இது கதை என்பதால் கற்பனையில் இஷ்டப்படி கோட்டை கட்ட முடிகிறது. இதன் படி எல்லாம் இருக்காது தான். மேலும் தெரிந்து கொள்வதற்கு பங்கு சந்தை முதலீடு என்று கூகுளில் நீங்கள் தேடிப் பார்க்கலாம். அந்தக் கல்வியைக் கொடுக்கும் தளங்கள் நிறைய உண்டு.

தங்கள் தொடர்தலுக்கு நன்றி, ஜிஎம்பீ சார்!

ஜீவி said...

தனித் தனியாக எடுத்துப் போனது சொந்த அனுபவம். 'உயிர் சுமந்து உலாவுதல்'என்பார் ஜே.கே. அது மாதிரி இது உணவு சுமந்து பணிக்குப் போனது. சுடச்சுட பையில் எடுத்துப் போன அந்த சூட்டின் சுகமான சுமையை முதுகறியும். சாதத்தோடு கலந்து எடுத்துப் போகாமல், சாப்பிடும் நேரத்தில் கலந்து கொள்வதற்கு வாகாக.. சுற்றி உட்காரும் நண்பர்களிடம் பெற்று, கொடுத்து என்று குழம்பும், ரசமும், பொரியலும் பகிர்ந்து பரவலாக சாப்பிட்ட காலம்.

//ஷேர் பற்றித் தெரியாது என்றாலும்..//

தெரிந்து கொள்வதற்கான நிகழ்வுகளின் சேர்க்கை அமையவில்லை போலும்! இந்த சேர்க்கைகள் கூட தாமாக வருவது பாதி, அது வரும் ஜோரில் நாமாக அமைத்துக் கொள்வது மாதிரி சொந்தம் கொண்டாடுவது மீதி என்று இருக்கும் போலிருக்கு!

தொடர் வருகைக்கு நன்றி, ஸ்ரீராம்!



ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

இந்த உற்சாகம் மட்டும் எங்கே என்று காத்திருக்கும் போல. ஒரே கண்டிஷன்: உற்சாகப்படத் தெரிந்திருக்க வேண்டும் என்பது மட்டுமே.

பிறர் எது சொன்னாலும், தனக்கு அது தெரிந்திருந்தும், "அப்படியா!" என்று ஆச்சரியத்தை முகத்தில் காட்டி வியப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். எதிராளி தான் சொல்வதை காது கொடுத்துக் கேட்கிறார் என்பதே சொல்பவர்க்கு மேலும் சொல்ல மகிழ்வூட்டும். பிறரை மகிழ்வித்து தானும் மகிழ்வதற்கு வழிகாணும் புத்திசாலிகள்.

மாதா, பிதாவுக்கு அடுத்து வரும் குரு. தங்களுக்கும் மனம் நிறைந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள், மேடம்.

சிவகுமாரன் said...

ஐந்து நிமிடத்தில் 6000 ரூபாயா . சேர் மார்க்கெட்டில் ஈடுபட ஆசையை தூண்டுகிறது.
பிள்ளை பர்ஸ்ட் ரேன்க் வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடி விடும்.
சந்தோசமாய் இருந்தது படிக்கும் போது.

ஜீவி said...

@ சிவகுமாரன்

//ஐந்து நிமிடத்தில் 6000 ரூபாயா. சேர் மார்க்கெட்டில் ஈடுபட ஆசையை தூண்டுகிறது..//

ஜி.எம்.பீ. சாருக்கு அளித்த பின்னூட்ட பதிலைப் பார்க்கவும்:

"இது கதை என்பதால் கற்பனையில் இஷ்டப்படி கோட்டை கட்ட முடிகிறது. இதன் படி எல்லாம் இருக்காது தான். மேலும் தெரிந்து கொள்வதற்கு பங்கு சந்தை முதலீடு என்று கூகுளில் நீங்கள் தேடிப் பார்க்கலாம். அந்தக் கல்வியைக் கொடுக்கும் தளங்கள் நிறைய உண்டு."

//பிள்ளை பர்ஸ்ட் ரேன்க் வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடி விடும்.
சந்தோசமாய் இருந்தது படிக்கும் போது.//

பாண்டியன் அறிவுடைநம்பியின் பாடல் நினைவுக்கு வருகிறதா, சிவகுமாரன்?..

'..இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசல் மெய்ப்பட விதிர்த்தும்..'

அதுபோல, இப்பொழுதெல்லாம் நன்கு படித்து அவையத்து முந்தியிருக்கும் தம் சிறார்களைப் பார்த்தால், பெற்றோர்க்கு அன்பும், ஆசையும் பீறீட்டுக் கொண்டு வருகிறது. குழந்தை படிப்பதற்கு முன், பெற்றோர்கள் குழந்தைகளின் பாட திட்டங்களை நன்கு படித்துக் கொண்டு வகுப்பு எடுக்கிறார்கள்.

பரீட்சை எழுதினோம், முடிந்தது என்றில்லை, வீட்டுக்கு வந்ததும் தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில் எழுதினோம் என்பதை நினைவு கொண்டு சொல்ல வேண்டும்.

சில நேரங்களில், சில நினைவுகள். தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி.



பாச மலர் / Paasa Malar said...

குட்டியூண்டு தோட்டம்..அதற்கான சின்னச் சின்ன வேலைகள்...மீண்டும் ஒரு பெண்ணின் நாளின் ஒரு பகுதியின் சுவாரசியமான விவரிப்பு....ரசித்தேன்...

சுமார் ஒரு மாதம் கழித்து வந்தாலும்.. அப்பாடா 2 அத்தியாயங்கள்தான் படிக்கவில்லை....

கோமதி அரசு said...

பர்ஸ்ட் ரேங்காடா, செல்லக்குட்டி.." என்று வாரி அணைத்துக் கொண்டாள் வித்யா.

"அப்பா வந்ததும், வீட்லே, இல்லே, வெளிலே, ஹோட்டல்லே இதை செலிபரேட் பண்ணலாம்.. ஒரு மாறுதலா இருக்கட்டுமே.." என்று சொன்ன போது வேறேதோ நினைப்பு வந்து சிரிப்பு வந்தது அவளுக்கு.//

இப்போது குழந்தைகளின் விருப்பம் இப்படித்தான் இருக்கிறது.
அதை அப்படியே கதையில் கொண்டு வந்து விட்டீர்கள்.
பிறந்தநாள், கல்யாண நாள் என்றால் வீட்டில் மற்றவர்களுக்கு பிடித்ததை சமைத்துக் கொடுப்போம், இப்போது காலம் மறி விட்டது குழந்தைகளும், பிள்ளைகளும் இன்று ஒரு நாளாவது ரெஸ்ட் எடுங்கள் ஓட்டல் போகலாம் என்கிறார்கள்.

காலம் தான் எப்படி மாறிவிட்டது என்று எனக்கும் சிரிப்பு வரும் இது மாதிரி சமயத்தில்.

ஜீவி said...

@ பாசமலர்

டி.வி.யில் ஷேர் சேனல் பார்த்து ஏற்பட்ட முடிவெடுக்க முடியாதிருந்த நிலைகளிலிருந்து மீள, ஒரு மாற்று முயற்சியாக வேறு கவனங்களில் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வித்யா முயற்சிக்கிறார்.

ஆமாம், நானும் வேறு வேலைகளில் கவனம் கொண்டிருந்ததால், கொஞ்சம் தாமதம். வாசித்து முடித்தமைக்கு நன்றி, பாசமலர்!

ஜீவி said...

@ கோமதி அரசு

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். பேரன் வந்திருக்கிறான் போலிருக்கே?..

உங்களுக்கு நேரம் போவதே தெரியாது.
மெதுவாக இந்தப் பக்கம் வந்தால் போச்சு.

வாசித்து மகிழ்ந்தமைக்கு நன்றி, கோமதிம்மா.

Related Posts with Thumbnails