மின் நூல்

Sunday, September 9, 2012

பார்வை (பகுதி-57)

நாராயணனுக்கு கிரீம்ஸ் ரோடு பதிப்பக தலைமை அலுவலகத்தில் வேலை இருந்தது. அப்படியே பெரியவரைப் பார்த்து விட்டு மறுநாள் பெண் பார்க்கப் போவதை ஊர்மிளா மேடத்திடம் சொல்லி விட்டுப் போகலாம் என்று வந்திருந்தான். ஊர்மிளாவின் மூலம் தானே இந்தப் பெண் பற்றியே தெரிய வந்தது?.. அதனால் அவர்களுக்கு செளகரியப்பட்டால் அவர்களையும் வரச்சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும் என்பது அவன் எண்ணம்.

நாராயணன் அழைத்த பொழுது, வேணிக்காகப் போக வேண்டும் என்ற எண்ணம் ஊர்மிளாவுக்கு இருந்தாலும் நிறையப் பேர் போவது வேணி குடும்பத்தினருக்கு அசெளகரியமாக இருந்து விடப்போகிறது என்கிற ஒரு தயக்கம் இருந்தது.  ஆனால், நாராயணன் வருவதற்கு முன்பே ஊர்மிளாவின் வருகைக்கான வேணி கேட்டுக் கொண்ட போது, 'எங்களுக்கு வேறு மனுஷா, இல்லை அக்கா' என்று வேணி முன்பு ஒரு முறை பரிதாபமாய்ச் சொன்னது நினைவுக்கு வந்து நிச்சயம் வருகிறேன் என்று சொல்லியிருந்தாள்.  அதனால், நாராயணன் இப்பொழுது கேட்ட பொழுது, 'அனேகமா நீங்க அங்கே வர்றத்துக்கு முன்னாடியே நான் அங்கிருப்பேன் என்று நினைக்கிறேன்' என்றாள்.

"ஓ! பெண் வீட்டாரை உங்களுக்கு முன்னாடியே தெரியும் இல்லையா?" என்று கேட்டான் நாராயணன்.

"வீட்டார் என்று எல்லாரையும் சொல்ல முடியாது.  சொல்லப் போனா, கல்யாணப் பெண் அந்த லஷ்மியைக் கூட நான் பார்த்தது கிடையாது.  ஆனா, அந்த லஷ்மியோட தங்கையை நன்னாத் தெரியும்.." என்று சொன்ன போது 'அந்த தங்கை யார் என்று இப்பொழுது நான் சொன்னால், உனக்குக் கூட அவளைத் தெரியும்' என்று சொல்ல நினைத்ததை ஊர்மிளா கஷ்டப்பட்டு சொல்லாமல் தவிர்த்தாள்...

"ரொம்ப நல்லதாப் போச்சு.." என்றான் நாராயணன். "எனக்கும் தெரிஞ்சவங்களா, அந்த குடும்பத்துக்கும் ஓரளவு தெரிஞ்சவங்களாய் நீங்க இருக்கறது ரொம்ப செளகரியமாய் போச்சு.." என்றான்.

ஊர்மிளா புன்னகைத்தாள். "ஆமாம், இதில் ஒரு செளகரியம். அவங்களுக்கு வேண்டியதை உங்க கிட்டேயும், உங்களுக்கு வேண்டியதை அவங்க கிட்டேயும் கேட்டுச் சொல்லலாம்.. இல்லையா?"

"அட!.." என்று வியந்தான் நாராயணன். "சட்டுனு இது என் நினைப்புக்கு வரலை, பாருங்கள்!" என்று கொஞ்சம் சாய்ந்து சாய்மானமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். "எனக்கு ஒரு கேள்வி இருக்கு.  கல்யாணப்பெண் லஷ்மிகிட்டேயே கேக்கணும். அதுக்கு நீங்க ஏற்பாடு செய்யணுமே!" என்றான்.

"பொண்ணைப் பாக்கறத்துக்கு முன்னாடியே, அந்த லஷ்மியைத் தான் கட்டிக்கறதுன்னு தீர்மானிச்சிட்ட மாதிரி இருக்கு!"

"அது என் ஜாதகத்தை அப்பா அந்த மாம்பலத்துக்காரங்க கிட்டே கொடுக்கறச்சேயே தீர்மானமான ஒண்ணுங்க.. எல்லாத்துக்கும் அடிப்படை எங்க ரெண்டு பேருக்கும் இருக்கற அந்தப் பெயர்ப் பொருத்தமும், எங்கப்பா தனக்குத் தானே புரிஞ்சிக்கிட்டதாச் சொல்ற சில சகுன அறிகுறிகளும் தாங்க.." என்றான்.

"இந்தளவுக்கு உங்க குடும்பத்திலே இந்த வரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கறதாலே, ஒண்ணு உங்க கிட்டே நான் கேட்டா தப்பில்லைன்னு நெனைக்கிறேன்.." என்று ஒரு நிமிடம் தாமதித்து, 'வேணி குடும்பம் கொஞ்சம் வசதியில்லாத குடும்பமாச்சே, அவர்களோட அந்த ஏழ்மை நிலமை, பொருந்தி வர்ற இந்தத் திருமணத்திற்கு குறுக்கே நின்று மறித்து விடப் போகிறதே' என்கிற ஆதங்கத்தில், "உங்க பக்கத்து மத்த எதிர்பார்ப்பெல்லாம் எப்படி இருக்குமோ?" என்று தயங்கியபடியே ஆரம்பித்தாள் ஊர்மிளா.  அவள் தயக்கமே மிகுந்த அர்த்தம் கொண்டதாகத் தெரிந்தது.

"எதிர்பார்ப்பா?.. என்னன்னு புரியலே.."

 "அதான் நாராயணன்.  சீர் செனத்தி இதெல்லாம்.  உங்க அப்பாகிட்டே தான் அதெல்லாம் கேக்கணும், இல்லையா?"

" அதெல்லாம் ஒரு எதிர்பார்ப்பும் இல்லீங்க.." என்று பட்டென்று சொன்னான் நாராயணன்.  "அவங்க கிட்டேயிருந்து எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது ங்கறதிலே அப்பா அம்மா ரெண்டு பேரும் ரொம்பத் தீர்மானமா இருக்காங்க.. நேத்து கூட என்னை வைச்சிகிட்டுப் பேசிகிட்டு இருந்தாங்க.. பெண்ணுக்கும் பையனுக்கும் பிடிச்சிருந்தா அதுவே போதுமாம், அவங்களுக்கு.. மத்தபடி வீட்டுக்கு வர்ற மருமகள் எப்படியிருக்கணும்ன்னு எல்லாரும் நினைக்கற மாதிரி தான்.." என்றான்.  

"அப்படீன்னா?.."

"அதாங்க, அதான் முக்கியமான விஷயம்.  அதான் அந்தப் பொண்ணு கிட்டே நேரடியாக் கேட்டுடறதுன்னு தவியா தவிச்சிக்கிட்டிருக்கேன்.. எங்க அப்பாரு கவலையும் அந்த ஒரு விஷயத்லே தான், மேடம்!  எனக்குன்னா.. ஆல்ரைட்.. உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன இருக்கு?..  சொல்லிடறேன்.  என்னை படிக்க வைச்சு ஆளாக்கினதுக்கு எங்க அப்பா பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும்.  அவங்க வேதனைப்படற அளவுக்கு எதுவும் நடந்திடக் கூடாதுன்னு இருக்கு.."

"என்ன சொல்றீங்க, நாராயணன்?.. எனக்குப் புரியலையே?"

"நாம புஸ்தகமா போட்ற கதைன்னா ரசிக்க முடியறது.  சிரிக்க முடியறது.. ஆனா, வாழ்க்கைன்னா அப்படி இல்லேதானுங்களே.. நாலும் இருக்கும், இல்லையா?"

"இந்த நாலும் கூட கதை புஸ்தகம் படிச்சிட்டு தெரிஞ்சிகிட்டது தானா, நாராயணன்?"

"தெரிஞ்சிக்கற மாதிரி என்னத்தை எழுதறாங்க, போங்க..  எல்லாம் நாலு பேரைப் பாத்துத் தெரிஞ்சிக்கறது தான்..  ஊர்லே உலகத்திலே நடக்கறதை, நாம பாக்கறதை.. நான் சொல்லியா உங்களுக்குத் தெரியணும்?.. அதான் என் கவலை."

"அலை ஓஞ்சு என்னிக்கு குளிக்கறது, நாராயணன்?..  அலையோட அலையா குளிச்சா, ஒரு அலை இழுத்திண்டு போனாலும் இன்னொரு அலை திருப்பி பிடிச்சு கரைக்குத் தள்ளிடும், இல்லையா?"

"சரிதான், நீங்க சொல்றது.. நானும் குளிக்கத் தான் போறேன்.  குளிக்கறத்துக்கு முன்னாடி, ஜாக்கிரதையா பாத்துக் குளிக்கணும்னுட்டு எண்ணம்.  அவ்வளவு தான்."

"என்ன ஜாக்கிரதை?.. சொல்லுங்க.."

"என்னோட விருப்பம்லாம் ரொம்ப சிம்பிள் மேடம்.  கல்யாணம் ஆனதும் நாம தனி, உன்னைப் பெத்தவங்க தனின்னு வரப்போர்ற மகாராணி என்னைப் பெத்தவங்களைக் கட் பண்ணாம இருக்கணும்.  அவ்வளவு தான்."

"அவங்க அப்படி 'கட்' பண்ணிட்டு வராங்கள்லே.. அதனாலே சில பேர் அப்படி நெனைப்பாங்க போலிருக்கு."

"ஓகோகோ.. அப்படி ஒரு நியாயம் இருக்கா.. இதுக்குத் தான் எது ஒண்ணையும் விஷயம் தெரிஞ்சவங்க கிட்டே கேக்கணும்ங்கறது.. அப்போ எதுக்கு மேடம், பெண்களுக்கு மட்டும் 'பிறந்த வீடு, புகுந்த வீடு'ன்னு ரெண்டு வீடு இருக்கறதா சொல்றாங்க?.."

"கேட்டா, யாரோ அப்படிச் சொன்னா அதுக்கு நாங்களா பிணைம்பாங்க..  நாராயணன்! அவங்க சொல்றதெல்லாம் நியாயம்னுட்டு நான் சொல்லலே.. அப்படில்லாம் சொல்றவங்க இருக்காங்கங்கறதுக்காகச் சொன்னேன்."

"அதுசரி.. அலை ஓஞ்சு என்னிக்குக் குளிக்கறதுன்னு நீங்க சாதாரணமா கேட்டுட்டீங்க.. யம்மாடி... எந்த புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ?.. பயங்கரமாலே இருக்குது.."

"இப்படில்லாம் பயந்தா வேலைக்கு ஆகாது.  உங்க மனசிலே இருக்கறதைச் சொன்னாத் தானே நீங்க என்ன நினைக்கிறீங்கன்னுட்டுத் தெரியும்?"

"அதான் சொன்னேனே, மேடம்.  பெத்தவங்களை 'கட்' பண்ணாம இருக்கணும்ன்னா, நான் சொல்றது, அவங்களை மாதிரி பெத்தவங்களை விட்டுட்டு வர்ற 'கட்' இல்லே;  ஒரேடியா 'கட்' பண்ணிர்றது.  என்னிக்கு எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சோ, அன்னிலேந்து நாங்க ரெண்டு பேரும் தனி.  உங்க சங்காத்தமே வேண்டாம்ன்னு புருஷனைப் பெத்தவங்களை ஒதுக்கிடறது.."

"தனக்குன்னு ஒரு குடும்பம்ன்னு ஆனதும் தான், தன் புருஷன், தன் குடும்பம்ன்னு தனி அக்கறை கொள்றதுக்காக அப்படி நினைக்கிறாங்களோ, என்னவோ?"

"நினைக்கட்டும்.  அந்த மாதிரி அக்கறையோட குடும்பம் நடத்தட்டும். யார் வேணாம்னாங்க..  அதுக்காக?..  அவங்களுக்கும் சரி, எனக்கும் சரி, பெத்தவங்கன்னா அவங்களை எது ஒண்ணுக்கும் நோகாம வைச்சிக்கற கடமை இருக்கில்லையா?..  கல்யாணம் ஆச்சுன்னா, துண்டை உதறித் தட்டித் தோள்லே போட்டுகிட்டுக் கிளம்பறதுக்கு இது என்ன ரயில்ப் பயணமா?  சொல்லுங்க.."

"நிச்சயம் இது ரயில் பயணம் இல்லை; வாழ்க்கைப் பயணம். அதுவும் ரயில் மாதிரி யாரோ வண்டியை ஓட்டறாங்கன்னு அக்கடான்னு உக்காந்து போகக்கூடியதில்லே;  நாம் ஓட்டற வண்டி; நேக்கா ஓட்டிப் பயணம் செய்யணும்.  அதனாலே ஓட்றதிலே இருக்கற அக்கறைங்கற பொறுப்பும் கூடிப் போகுது. அதுக்கு மேலே என்ன, நீங்களே சொல்லுங்க.."

"அதாங்க.. என்னைப் பெத்தவங்களை எப்படி நான் அன்போட மரியாதை கொடுத்து மதிச்சு நடந்திக்கிறோனோ, அதே மாதிரி அவங்களைப் பெத்தவங்களுக்கும் அதே அன்பையும் மரியாதையையும் கொடுத்து மதிச்சு நடந்திப்பேன்.   அந்த மாதிரி இருக்கறவங்களா எனக்கு மனைவியா வர்றப் போறவங்க இருக்கணும்.  அவ்வளவு தான்."

"அதுசரி.  நியாயமான விருப்பம் தான்.  ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் எப்படி தெரிஞ்சிக்கறது?..  சொல்லுங்க, நாராயணன்."

"அன்-கண்டிஷனலா உறுதிமொழி மாதிரி எதையும் நான் கேக்கலே, மேடம்.. சீராட்டி, வளத்து ஆளாக்கின தாய் தகப்பன் மேலே வளர்ந்த பிள்ளைங்களுக்கு பிரியமும் பாசமும் இருக்குமில்லையா?.. என்னைக் கல்யாணம் செஞ்சிக்கப் போறவங்களுக்கும் அப்படியான ஒரு நேசம் அவங்களைப் பெத்தவங்க மேலே இருக்குமில்லையா?.. அதை அவங்களும் உணர்வு பூர்வமா உணர்ந்திருப்பாங்க,  இல்லையா?.. அதே மாதிரி எனக்கும் இருக்குங்கறதைப் புரிஞ்சிண்டு என் உணர்வுகளை மதிச்சு என்னைப் பெத்தவங்ககிட்டே அன்பு காட்டணும்.  அவ்வளவு தான் நான் எதிர்பாக்கறது.  நானும் அவங்களைப் பெத்தவங்க கிட்டே அதே அன்பையும் மரியாதையும் காட்டுவேன்.  ஜஸ்ட் மனுஷங்க மேலே நாம வைச்சிருக்கிற பிரியம். அதுவும் வயசானவங்க மேலே. இதான் என் எதிர்ப்பார்ப்பு.  ஊர்லே உலகத்திலே இல்லாததை நான் கேக்கலே. நான் என்ன எதிர்ப்பார்க்கறேங்கறது உங்களுக்கானும் புரியறதா, மேடம்?"

ஊர்மிளாவுக்குப் புரிந்தது.   வளர்ந்த ஆண்பிள்ளையாய் தன் எதிரில் உட்கார்ந்திருக்கும் நாராயணனின் குழந்தை மனசு அவளுக்குப் புரிந்தது. இவனுக்கு புரிகிற மாதிரி எப்படி எடுத்துச் சொல்வது என்கிற யோசனையில் கொஞ்ச நேரம் மெளனித்த பொழுது, நாராயணனே கேட்டான்."மேடம்! இப்படியானும் சொல்லுங்க.. உதாரணத்திற்கு உங்களையே எடுத்திக்கங்க.  உங்களுக்கும் இப்படியான அனுபவம் உங்களுக்குத் திருமணம் ஆன போது ஏற்பட்டிருக்கும்.  அன்புங்கறது கொடுத்து வாங்கறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஸாருக்கும் என்னை மாதிரி எதிர்பார்ப்பு நிச்சயம் இருந்திருக்கும்.ஸாரோட அப்பா- அம்மா அவங்களை மாதிரிப் பெரியவங்க கிட்டே எப்படி அன்பைச் சம்பாதிச்சிங்க?..  அதைச் சொல்லுங்க.." என்றான்.

கேட்ட கேள்வி தங்கிட்டையே திருப்பப்படும் என்று ஊர்மிளா எதிர் பார்க்கவில்லை.  அதனால் சட்டென்று பதில் சொல்ல கொஞ்சம் தாமதித்தாள்.

ஊர்மிளாவுக்கு அந்த நினைப்பு புதுசாக இருந்தது.  இத்தனை நாள் இப்படியான ஒரு கோணத்தில் நினைத்துப் பார்த்திராத புதுசு.

"கல்யாணமாகி புகுந்த வீட்டிற்கு நா வர்றச்சே, மாமியார் மட்டும் தான் இருந்தாங்க.  மாமனார் இவர் வேலைக்குப் போகும் பொழுது காலமாகியிருக்கிறார்.  இவர் முதலில் ஐ.ஓ.ஸி.யில் வேலையில் இருந்தார்ங்கறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம். அப்புறம் இவரோட எழுத்து வேலை அரசாங்க வேலையைச் சாப்பாடறதாகி, இதுவா, அதுவான்னு முடிவெடுக்க நேரிட்டப்போ, எழுதறதே இனி என் வேலைன்னு தீர்மானமாகி முழு நேர எழுத்தாளராயிட்டார்.     என் மாமியாரும் ஒரு எழுத்தாளர் தான் என்பது உங்களுக்குப் புதுத் தகவலா இருக்கும்.  அவர் அம்மாவின் தொடர்ச்சி தான் இவர்." என்று ஒரு நிமிடம் நிறுத்தித் தொடர்ந்தாள் ஊர்மிளா.

"கல்யாணமான புதுசிலே புகுந்த வீடு தான் புதுசுன்னா, பெண்களுக்கு அந்த நேரத்திலே பழக நேர்ந்த ஆட்கள், உறவு முறைன்னு எல்லாமே புதுசா இருக்கும்.  கிடைச்ச ஒரே துணை கணவன்; அந்தத் துணைவன் துணையில் தான் அத்தனையையும் தெரிச்சிக்கணும்ன்னு ஆகிப்போகும். இருப்பத்திரண்டு, இருபத்தைஞ்சு வயசு வரை பிறந்த வீட்லே ராஜ்யம் பண்ணின ஆட்ட பாட்டத்தையெல்லாம் அடக்கிண்டு, பழக்கமில்லாத புதுசுகளோடு தனக்கும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திண்டு செட்டில் ஆகணும்ன்னா, அதுக்கு ஒரு தனித் திறமை தான் வேணும்.  என் விஷயத்தில் எந்த ஜென்மத்லே நான் பண்ணின புண்ணியமோ தெரிலே, அப்படி ஒரு மாமியார் எனக்குக் கிடைச்சார். அவர் தான் எனக்கு பிலாசபர், வழிகாட்டி, ஆசான் அத்தனையும். என் அம்மா சும்மா. மாமியாரோ இன்னொருத்தர் மனசைப் படிக்கத் தெரிஞ்சவர்.   ரொம்ப மென்மையானவர். பேசிறத்தே கூட அடுத்தவர் மனசு நோகக்கூடாதுங்கற ஜாக்கிரதை உணர்வு உள்ளவர்.  அவர் பழக்கப்படுத்தினது தான் எல்லாம்.  கல்யாணம் ஆகி ஆறு மாசம் கழிச்சு, பிறந்த வீட்டுக்குப் போனப்போ, 'என்னடி, ஆளே மாறிட்டேயே'ன்னு என் அம்மா ஆச்சரியப்பட்டுப் போனா" என்று சொன்ன போது லேசாக ஊர்மிளாவிற்குக் குரல் தழைந்தது.  தொண்டையைச் செருமி சரிப்படுத்திக் கொண்டாள்.

"என் அம்மா கூட அதிரப் பேசத் தெரியாதவங்க தான், மேடம்.  ரொம்ப அட்ஜெஸ்ட்மெண்ட் டைப்.  வரப்போற பெண் அதைப் புரிஞ்சிண்டு நடந்தாங்கன்னா, உங்களை மாதிரி அவங்களும் மாமியாரைப் பத்தி உயர்வா பேசலாம்.."

"இப்போச் சொன்னீங்களே, இது கரெக்ட்..  பெண்ணுக்குப் பெண் அந்த புரிதல் இருக்கணும்.  இருந்தா, ஒரு கோணலும் வராது, நாராயணன்.  நல்லவங்களு க்கு நல்லது தான் நடக்கும். கவலையே படாதீங்க.." என்றாள் ஊர்மிளா. "எங்க மாமியார் சொல்வார், ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் கல்யாணங்கறது கிருகஸ்தாஸ்ரம தர்மத்தைக் கட்டிக் காப்பாத்தறத்துக்காக விதிச்ச விதிம்பாங்க.  உங்க ரெண்டு பேர் கர்ம பலன்களுக்கு ஏற்ப நடக்கறதை முகஞ்சுளிக்காம ஏத்துண்டு ஒவ்வொண்ணையும் கடந்து நம்மாலே முடிஞ்ச நல்லதைச் செஞ்சு மீள்றது தான் அடுத்த ஜென்மத்துக்கான பூஜாபலன்ம்பாங்க.  அவங்க சொல்லி இதெல்லாம் கேக்கறத்தே, எனக்குக்கூட ஆரம்ப காலத்லே ஏதோ பெரியவங்க சொல்ற இதோபதேசம் மாதிரித் தான் இருந்தது.  நாளாவட்டத்திலே வாழ்க்கைலே அடிப்பட்டப்போத்தான், இதெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லே, ஒருத்தர் அடைஞ்சு பாத்துத் தெரிஞ்சிண்ட அனுபவச் செறிவுன்னு தெரிஞ்சது.  எல்லாமே அப்படித்தான் நாராயணன்.  எதுவும் சொந்தமா அனுபவப்படாத வரைக்கும் அதது நம்ம கிட்டேயிருந்து விலகி அந்நியப்பட்டு நிற்கற மாதிரித் தெரியறது.  என்னைக் கேட்டா, அனுபவப் புரிதல் தான் ஆசான்ம்பேன்.  அது ஏற்படாத வரைக்கும், மனசு ஆயிரம் குறுக்கு விசாரணை நடத்தி தர்க்கித்து முரண்டு பண்ணிண்டு நிக்கும்.  நமக்கே எது ஒண்ணும் அனுபவமாகும் போது, அதை நல்லபடி சமாளித்து மீள்ற பக்குவம் கிடைக்கும்" என்றாள்.

"உங்க கிட்டே பேசின பிறகு இப்போ எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைச்சிருக்கு, மேடம்!  எனக்கென்னனா, ஒவ்வொண்ணா இதுக்கு அடுத்தது அது, அதுக்கு அடுத்தது இதுன்னு வரிசைப்படுத்தின மாதிரி ஒண்ணு முடிஞ்சா அடுத்ததுக்குன்னு என் திருமணத்தை நோக்கி சீரா இட்டுகிட்டுப் போற அந்த நிகழ்வுகளின் நேர்த்தியை நினைச்சா ஆச்சரியமா இருக்கு.  அதான் ஒரே நம்பிக்கை. யாரோ எல்லாத்தையும் முன்னாடியே தீர்மானிச்சு நல்லதுக்குத் தான் கைப்பிடிச்சு வழிகாட்டி கூட்டிட்டுப் போற மாதிரி இருக்கு.  அதுனாலே, இனிமே நடக்கப்போறதும் நல்லதுக்காகத் தான் இருக்கும்ன்னு நான் நம்பறேன்" என்று நாராயணன் சொன்னதைக் கேட்டதும், இவனது நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடி நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா.


(இன்னும் வரும்)























20 comments:

ஸ்ரீராம். said...

புது இடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் வாக்கப்பட்டு வரும் பெண்ணின் மனமும் குணமும் போற்றத் தக்க, பிரமிக்கத்தக்க இயல்புகள். ஒரு ஆணால் இந்த மாதிரிச் சூழ்நிலைகளில் தன்னை இத்தனை இயல்பாகப் பொருத்திக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறி. புது மனைவி கணவனை தனிக்குடித்தனத்துக்கு தூண்டாமலிருப்பதில் மாமியாரின் பங்கு பெரிய பங்கு. எந்தப் பெண்ணுமே இதுவரை தன்னுடைய சொத்து தன்னுடைய சொந்தம் என்று எண்ணி வந்த தன்னுடைய மகனுக்கு புதிதாய் ஒரு சொந்தம், அவன் அந்த சொந்தத்துக்கு தன்னை விட அதிக முக்கியத்துவம் தருகிறானோ என்ற எண்ணம்தான் ஆரம்ப உரசல்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் சுமூகம்தான். நாராயணன் - ஊர்மிளா உரையாடல் ஆரம்பத்தில் சற்றே சுற்றி விட்டதோ என்று தோன்றியது.

இராஜராஜேஸ்வரி said...

வாழ்க்கைலே அடிப்பட்டப்போத்தான், இதெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லே, ஒருத்தர் அடைஞ்சு பாத்துத் தெரிஞ்சிண்ட அனுபவச் செறிவுன்னு தெரிஞ்சது.

அனுபவப்பகிர்வுகள் ஆச்சரியப்படவைத்தன...

பாராட்டுக்கள்..

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், நல்ல அலசல். எல்லா மருமகள்களும் மாமனார், மாமியாரை வெறுக்கிறதில்லை; அதே போல் எல்லா மாமியார்களும் மருமகள்களை வெறுக்கிறதில்லை. என்றாலும் நிஜ வாழ்க்கையில் கொடுமைக்காரியான மாமியார்களும், மருமகள்களும்சரி இருக்கத்தான் இருக்காங்க. சிலரைப் பார்த்தால் பேச்சை வைச்சுச் சொல்ல முடியாது. அமைதியாவே தங்கள் கொடூரத்தைக் காட்டுவாங்க. :((((

நாராயணனுக்கு நல்லதே நடக்கப் பிரார்த்திப்போம்.

G.M Balasubramaniam said...


திருமண பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் மனக் கிலேசங்கள் தான் நாராயணனுக்கும். பெரும்பாலான இடங்களில் இந்த மாதிரியான பயம் நிஜமாகி விடுகிறது. இருபது இருபத்தைந்து வருட காலம் தன் கைக்குள் இருந்த மகனோ மகளோ அந்நியமாகி விடுவார்களோ எனும் பயமே இரு பாலரின் பெற்றோரையும் இயக்குகிறது. அதன் ஒரு வெளிப்பாடேகணவனைக் கைக்குள் போட்டுக் கொள்ள வும் முந்தானையில் முடித்துக் கொள்ளவும் பெண்ணுக்கு உபதேசமாய் வருகிறது. நம் சமூக அமைப்புப் படி பெண் ஆணுடன் வர வேண்டும் அப்படி வரும் இடத்தில் அவளுக்கு ஏகப் பட்ட பயம். அப்படியே சிறிது காலம் அனுசரித்துப் போனாலும் ஓரளவு வசதி வந்துவிட்டால் பிறந்த வீட்டுப் பக்கமே மனம் செல்லும். அதுவும் கணவனின் பெற்றோர் அவனையே நம்பி இருக்கிறார்கள் என்றிருந்தால் இரு சாராருக்கும் அது பிரச்சனையே. எனக்கென்னவோ பெண்கள் அன்பு பாசம் எல்லாம் பிறந்த வீட்டுக்குத்தான். மற்றபடி இருப்பது கட்டாயத்தின் பேரில்தான் என்று தோன்றுகிறது. மேலும் இவை குறிப்பிட்ட சமூகத்துக்கு சமூகம் மாறும் என்றே தோன்றுகிறது.. என் ‘ உறவுகள் ‘ என்னும் பதிவில் இது குறித்து எழுதி இருக்கிறேன்.

பாச மலர் / Paasa Malar said...

வாழ்க்கையின்..குறிப்பாகத் திருமண வாழ்க்கையின் சாராம்சத்தையே நச் நச் என்று சொல்லிப்போகும் எதார்த்தம்...ரசித்தேன்....திருமணம் சீக்கிரம் கைகூடி வரட்டும்.

அப்பாதுரை said...

வாவ்.. ஒரு சாதாரணப் பதிவுக்குள்ளே எத்தனை பாடங்கள்! (சாதாரணம்னு உங்ககிட்டே எதுவுமே கிடையாதோ?)

பெண்ணும் பெண்ணும் அனுசரிச்சுப் போகும் எதிர்பார்ப்பு ஆணும் ஆணும் என்ற அளவில் வருவதில்லையே ஏன்? (மாமனார் மருமகன் சண்டைகள் ஏன் அத்தனை வருவதில்லை?).

//கேட்ட கேள்வி தங்கிட்டையே திருப்பப்படும்
இந்த டெக்நிக் எனக்கும் பிடிக்கும். சொல்ல வேண்டியதைச் சொல்ல இன்னொரு சேனல்.

'பெண்ணிடம் நேராகக் கேட்க வேண்டும்..' என்று படித்ததும் நினைவு வேறெங்கோ சட்டென்றுக் குதித்துத் தோண்டியது. குரோம்பேட்டை நாட்களில் ஒரு கல்யாணம் நின்று போன காரணம் - விசித்திரமான எதிர்பார்ப்பைப் பெண்ணிடம் தெரிவித்த பையனின் தாயார்... நல்ல வேளை, இந்தக் கதையில் அப்படி எதுவும் வரவில்லை.

Geetha Sambasivam said...

பெண்ணுக்கு இயல்பாகவே அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சுபாவம் உண்டு. ஆகையால் திருமணம் ஆகிப் புதிய இடத்துக்கு வந்ததும் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்கிறாள். சிலரால் மாற முடியவில்லை என்பதும் உண்மைதான். திரு ஜிஎம்பி அவர்கள் சொல்லி இருப்பது போல் பல வருடங்கள் ஆனாலும் பிறந்த வீட்டுப் பாசம் என்றால் ஒரு மாதிரி, புக்ககம் என்றால் வேறு மாதிரி என நடக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன்.

Geetha Sambasivam said...

ஆனால் பெண்ணால் பிறந்த வீட்டை ஒரேயடியாகத் துண்டிக்கவும் முடியாது; துண்டிக்கவும் கூடாது. ஒரு செடியைத் திரும்ப நடுவதற்கு அது முதலில் முளைத்த இடத்தின் மண்ணோடு சேர்த்துத் தான் எடுப்பார்கள். அப்போத் தான் புது இடத்தில் நடப்படும் நாற்று நிலைத்து நிற்கும். துளசிச் செடிக்கு நாள், கிழமை, நேரம் பார்த்து நடுவதும் உண்டு. செடிகள் போலவே பெண்களும். பிறந்த வீட்டுப் பாசம் இருக்கும்; இருந்தாகணும்.

குழந்தை பிறந்ததும், பிறந்த குழந்தையோடு பெண்ணைப் புக்ககம் கொண்டு விடுகையில், குழந்தைக்கு எனத் தனியாகப் பிறந்த இடத்து மண்ணை எடுத்து வைத்துக்கொள்வார்கள். புது இடத்தில் குழந்தை அழுதால் அந்த மண்ணை விபூதி போல் நெற்றியில் இட்டு வயிற்றில் தடவுவதும் உண்டு. ஆகவே பிறந்த இடம் என்பதற்கும் முக்கியத்துவம் இருந்தே தீரும்.

சிவகுமாரன் said...


அலையோட அலையா குளிச்சா, ஒரு அலை இழுத்திண்டு போனாலும் இன்னொரு அலை திருப்பி பிடிச்சு கரைக்குத் தள்ளிடும்///
தன்னம்பிக்கை வரிகள்
மண வாழ்க்கைக்கு ரயில் பயணம் நல்ல உதாரணம்.
கல்யாணம் ஆனால் தன் பெற்றோரை , வரப்போகிறவள் எப்படி பார்த்துக் கொள்வாளோ என்ற பயம் நாராயணனைப் போல பலருக்கும் உள்ள கவலை - இன்றைக்கு. பின்னாளில் அவனே மாறிப் போவது தான் கொடுமை.
வாழ்க்கையின் அலசல் - இந்தத் தொடரின் சிறப்பம்சம்.

அப்பாதுரை said...

இதுவரை தெரியாத விவரம்.. ரொம்ப யோசிக்க வைக்குது. பிரமாதம் Geetha Sambasivam.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இயல்பாகப் பொருத்திக் கொள்ளல் என்பது தான் அடித்தளம். அந்த அடித்தளம் தான் முக்கியம். அதை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டால், அப்புறம் அன்பு, பாசம், ஆதரவு, உற்ற துணை என்று சிமிண்ட், ஜல்லி, மணல், நீர் கலந்து உறவுக் கட்டிடம் எழும்பி போதல் ஜூஜூபியாகிப் போகும்.

அந்த சுற்றல் இல்லை. மெல்லல். அந்த மெல்லல் இல்லை என்றால் ஏதோ எழுதியதைப் படிக்கிறோம் என்கிற உணர்வு வந்து விடும். அதற்காகத் தான் அது.

தொடர்ந்து வாருங்கள், ஸ்ரீராம்!

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

அனுபவங்களுக்காக ஏங்கி இருப்போர் சிலர். தவிர்த்து விடுவோர் சிலர். அனுபவங்களே வாழ்க்கையாகிப் போவோர் சிலர். இத்தனைக்கும் இடையே தான் அத்தனையுமாகிப்
போகிறது வாழ்க்கை.

மிக்க நன்றி, இராஜி மேடம்.

ஜீவி said...

@ Geetha Sambasivam (1)

மருமகள்கள், மாமியார்களை கொலு வரிசை மாதிரி அடுக்கி விட்டீர்களே?.. ஒவ்வொண்ணுலேயும் எத்தனை வகைங்க! :))


ஜீவி said...

@ ஜிஎம்பி

//திருமண பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் மனக் கிலேசங்கள் தான் நாராயணனுக்கும்.//

எல்லாம் ஸ்டார்டிங் டிரபிள்! அப்புறம் எல்லாம் சரியாகப் போய்விடும் என்கிறீர்களா, சார்?

//இருபது இருபத்தைந்து வருட காலம் தன் கைக்குள் இருந்த மகனோ மகளோ அந்நியமாகி விடுவார்களோ எனும் பயமே இரு பாலரின் பெற்றோரையும் இயக்குகிறது. //

இவங்க இருபாலாரும் அவங்க ஒருவர் கை ஒருவர் பற்ற விட மாட்டார்கள் போலிருக்கே! இவங்களே அவங்களை கைக்குள் வைச்சிருந்தா எப்படி? கை உதறி விட்டாத்தானே அவங்களும் கை பற்ற சான்ஸ் கிடைக்கும்?.. அப்புறம் அவங்களும் ஒரு மகனோ, மகளோ பெற்று அவங்களை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு.. இதே கதை காலாதி காலத்திற்கும் தொடர்ந்து கொண்டு..


ஜீவி said...

@ பாசமலர்

அந்த கூடிவரும் ப்ராஸஸின் முழுமைக்குத் தான் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

தங்கள் ரசனைக்கு நன்றி, பாசமலர்!

கோமதி அரசு said...

உங்க ரெண்டு பேர் கர்ம பலன்களுக்கு ஏற்ப நடக்கறதை முகஞ்சுளிக்காம ஏத்துண்டு ஒவ்வொண்ணையும் கடந்து நம்மாலே முடிஞ்ச நல்லதைச் செஞ்சு மீள்றது தான் அடுத்த ஜென்மத்துக்கான பூஜாபலன்ம்பாங்க. அவங்க சொல்லி இதெல்லாம் கேக்கறத்தே, எனக்குக்கூட ஆரம்ப காலத்லே ஏதோ பெரியவங்க சொல்ற இதோபதேசம் மாதிரித் தான் இருந்தது. நாளாவட்டத்திலே வாழ்க்கைலே அடிப்பட்டப்போத்தான், இதெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லே, ஒருத்தர் அடைஞ்சு பாத்துத் தெரிஞ்சிண்ட அனுபவச் செறிவுன்னு தெரிஞ்சது. எல்லாமே அப்படித்தான் நாராயணன். எதுவும் சொந்தமா அனுபவப்படாத வரைக்கும் அதது நம்ம கிட்டேயிருந்து விலகி அந்நியப்பட்டு நிற்கற மாதிரித் தெரியறது. என்னைக் கேட்டா, அனுபவப் புரிதல் தான் ஆசான்ம்பேன். அது ஏற்படாத வரைக்கும், மனசு ஆயிரம் குறுக்கு விசாரணை நடத்தி தர்க்கித்து முரண்டு பண்ணிண்டு நிக்கும். நமக்கே எது ஒண்ணும் அனுபவமாகும் போது, அதை நல்லபடி சமாளித்து மீள்ற பக்குவம் கிடைக்கும்" என்றாள்.//

ஊர்மிளா மூலம் அருமையான வாழ்க்கை பாடத்தை நாராயயணனுக்கு கற்றுக் கொடுத்து விட்டீர்கள்.
குழந்தை மணம் கொண்ட நாராயணன் திருமணம் இனிதாக நடக்க வாழ்த்துக்கள்.

இந்த பதிவில் உள்ள எல்லாமே அருமை.

ஜீவி said...

//பெண்ணும் பெண்ணும் அனுசரிச்சுப் போகும் எதிர்பார்ப்பு ஆணும் ஆணும் என்ற அளவில் வருவதில்லையே ஏன்? (மாமனார் மருமகன் சண்டைகள் ஏன் அத்தனை வருவதில்லை?). //

அவர்கள் சண்டை இவர்களுக்குத் தான் தலைவலியாக முடிவதால், தாங்கள் வேறு எதற்கு தனியாக என்று நினைக்கிறார்களோ என்னவோ? :))

//இந்த டெக்நிக் எனக்கும் பிடிக்கும். சொல்ல வேண்டியதைச் சொல்ல இன்னொரு சேனல். //

எஸ். அருமை. ஒரேயடியாக எல்லாவற்றையும் கொட்டி விடாமல் பாக்கி வைத்துக் கொண்டு இன்னொரு பார்வையையும் சொல்ல வாய்ப்பளிக்கும். முன்னாடி சொன்னதேயானாலும் சில 'எழுத்து எமகாதகர்கள்', இன்னொரு தடவை அதையே சொல்லும் பொழுது வித்தியாசத்தைக் காட்டி வியக்க வைப்பார்கள். அதற்காகவே அந்த இன்னொரு தடவையும் சலிக்காது.

மனம் ஒன்றி வாசித்து வருவதற்கு நன்றி, அப்பாஜி!


ஜீவி said...

@ சிவகுமாரன்

//வரப்போகிறவள் எப்படி பார்த்துக் கொள்வாளோ என்ற பயம் நாராயணனைப் போல பலருக்கும் உள்ள கவலை - இன்றைக்கு. பின்னாளில் அவனே மாறிப் போவது தான் கொடுமை. //

பயம்? கவலை?-- எது சரி என்றால் கவலைக்குத் தான் கூடுதல் மார்க்!

பின்னாளில் பொருட்படுத்தாமல் போவது, தனது அந்த பொருட்படுத்தாமையை பெற்றோரிடமும் எதிர்பார்ப்பது, மாறிப்போவதாக எண்ண வைக்கிறதோ, என்னவோ..

மகனுக்குத் தாயிடமும், தாய்க்கு மகனிடம் இருக்கும் பரிவும் பாசமும்
வற்றிப்போனதாக சரித்திரம் கிடையாது. உளவியல் பூர்வமானது.
தானே தாயும் ஆம் என்று தாரத்திற்குத் தெரியவரும் பொழுது தான் வெளிச்சம் கிடைக்கும். அதுவரை, காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.. கதைதான்!

ஜீவி said...

@ அப்பாதுரை

// ரொம்ப யோசிக்க வைக்குது. //

புகுந்த வீட்டில் மருமகளுக்கு வந்து சேரும் சில உணர்வு பூர்வமான உரிமைகள், அந்த வீட்டில் பிறந்த பெண்ணுக்குக்கு இல்லாதது.

பாசம், அன்பு, பிரியம் எல்லாம் பிறந்த வீட்டோடு இருக்க வேண்டியது தான். தேவையான ஒன்று; அது தான் ஆரோக்கியமானதும் கூட; அது தான் இரு வீட்டாருக்கும் பாலம் சமைப்பது. அதற்காக பெண் பிறந்த வீட்டோடு ரொம்பவும் இழைந்தால், அந்த வீட்டுக்கு வந்து சேரும் மருமகளுக்கும் இடைஞ்சல் தான்.

எப்படிப் பார்த்தாலும், பெண்கள் Vs பெண்கள் என்று இருக்கும் தேவையேயில்லாத, கவைக்குதவாத பூசல்களை மாற்றி சரித்திரம் படைக்கட்டும். அந்த காலம் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உண்மையிலேயே பொற்காலம் தான்!

ஜீவி said...

@ கோமதி அரசு

தங்கள் மனம் நெகிழ்ந்த பகிர்தலுக்கு மிக்க நன்றிம்மா.

Related Posts with Thumbnails