மின் நூல்

Friday, February 6, 2015

இரு கவிஞர்கள்; இரு வேறு நினைவுகள்

புதுவையில் வசித்த காலத்தில் மறக்க முடியாமல் மனதில் தடம் பதித்த நினைவு இது.

புதுவை பெருமாள் கோயில் தெருவில் நுழைந்தாலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் நினைவு வரும்.  அந்தத்  தெருவில் 95 இலக்கமுள்ள வீடு அவரது.

தன் சுயத்தை  மதிப்பவர் பிறரது சுயத்தையும் தவறாது மதிப்பார் என்கிற சிறந்த குணத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் புரட்சிக் கவிஞர்.  தன் மனத்திற்கு ஏற்புடையதை  ஏற்றுக் கொண்டாரேயானால் அந்தக் கொள்கையில் பிறழாது ஒழுகுபவர்.  அவர் பூண்டிருந்த புனைப்பெயர் கூட
பலரின் கண்களை உறுத்தியது.  நெருங்கிய வட்டாரத்தின் முகச்சுளிப்பிற்காக தன் மனதுக்கு பிடித்த செயல்களை அவர் மாற்றிக்  கொண்டதில்லை.  அதில் அவருக்கு எஃகு போன்ற உறுதி  இருந்தது.

நடிகர் திலகத்தை நாயகனாகக் கொண்டு தனது 'பாண்டியன்  பரிசை' திரைப்படமாக்க வேண்டும் என்கிற கனவு அவருக்கு இருந்தது.  அதன் தொடர்பான நடவடிக்கைகளுக்காக என்றே புதுவை நீங்கி சென்னைக்கு குடிபெயர்ந்தார்.  இது 1961 ஆண்டு வாக்கில் என்று நினைவு.

அவர் சென்னை சென்றதைத் தொடர்ந்து புதுவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த அவரது 'குயில்' கவிதை ஏடும் சென்னையிலிருந்து வெளிவரத் துவங்கியது.  ஒரு பக்கம் பாண்டியன் பரிசுக்கான வேலைகள் நடந்து  கொண்டிருக்கையிலேயே  பாரதியாரின் வாழ்க்கையையும் திரைப்படமாக்க வேண்டும் என்கிற முயற்சிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

அப்பொழுது புதுவையில் அரசுப் பணியில் இருந்தேன்.  தொலைபேசி  இலாகா.  அதற்கே உரித்தான ஷிப்ட் ட்யூட்டி.  ஒரு நாளின் பல மணி நேர இடைவெளிகளில் பணி  இருக்கும்.   காலை 6.00 லிருந்து 13.30 வரை.  காலை0800 மணியிலிருந்து 1530 வரை  காலை 1000 மணியிலிருந்து 1730 வரை 1330  மணியிலிருந்து 2100 வரை 1530 மணியிலிருந்து 2300 மணி வரை 1640 மணியிலிருந்து 0000 மணி வரை 0000 மணியிலிருந்து அடுத்த நாள் 0640 வரை என்று நாள் முழுக்க பல ஷிப்டுகளாக அலுவலகப் பணி  நேரம் இருக்கும்.

1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி.   அன்று மதியம் 1330-யிலிருந்து இரவு 2100 மணி வரை பணிக்காலம்.  அந்த   நேரத்தில் தான் பாரதிதாசன் அவர்கள் சென்னை  பொது மருத்துவ மனையில் காலமாகிவிட்டார் என்று கலங்க வைக்கும் அந்தச் செய்தி தெரியவந்தது.  அவர் புகழுடல் புதுவைக்கு  காரில் வருவதாகத் தகவல்.  இரவு ஒன்பது மணிக்கு அலுவலகப் பணி முடிந்ததும் நேரே பெருமாள் கோயில் தெருவிற்கு நானும் என் அருமை நண்பர் அ.க.பெருமாள் அவர்களும் மிகுந்த சோகத்துடன்  விரைந்தோம்.

சின்ன மரத்தூண்கள் பொருத்திய அகல வாசல் கொண்டு உள்ளடங்கிய வீடு. உள்பக்க பெரிய ஹாலில் வீறுகொண்ட கவிஞரின் பூத உடல்  கிடத்தப் பட்டிருந்தது.   கருப்பு-சிவப்பு சின்னகட்டங்கள் போட்ட பட்டுப் போர்வை போர்த்தியிருந்தார்கள். புரட்சிக் கவிஞருக்கே தனித்த ஒரு அடையாளமாக அமைந்திருந்த சின்ன அடர்த்தியான மீசைக்கிடையே புன்முறுவலுடனான
அவர் முகம் மனசைப் பிசைந்தது.   சிம்ஹம் போன்ற துடிப்பு கொண்ட அடலேறு ரோஜாப்பூ மாலைகள் சூட்டப்பெற்று அமைதியாக அப்படி இருந்தது அவரது இயல்புக்கு மாறான ஒரு செயலாய் மனசைக் குடைந்தது.  ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஓரிரு குத்து விளக்குகள்.  தலைமாட்டிற்கு பின்புறச் சுவரின் உயரத்தில்  புரட்சிக் கவிஞர் ஏட்டில் பேனா பிடித்து எழுதுகிற தோற்றத்தில் ஓரளவு பெரிய  புகைப்படம்.

அந்த இரவு நேரத்தில் நீண்ட அந்த ஹாலில் எங்களைச் சேர்த்து எட்டு அல்லது ஒன்பது பேர் இருந்திருப்போம்.   இருவர் கைத்தாங்கலாக அழைத்து வர தடியூன்றிய  ஒரு பெரியவர் உள்பக்கம் வந்ததும்  "வாங்கய்யா, வாங்க...  வாத்தியார் ஐயா வந்திட்டாரான்னு கேப்பீங்களே!  இதோ இருக்காரய்யா.." என்று பெருங்குரல்அழுகை கொண்டு பெண்கள் பக்கமிருந்து துக்கம் பொங்கியது.

மனம்  கனத்துப் போனது.  நானும் நண்பர் பெருமாளும் புரட்சிக் கவிஞரின்  காலடிப் பக்கம் அமர்ந்து கொண்டோம்.  'துன்பம்  நேர்கையில் யாழெடுத்து நீ...'  என்கிற கவிஞரின் பாடல் எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி நெஞ்சுக்கூட்டை நிரப்புகிற வரிகளாய் எனக்குள் பீறிட்டது. அழக்கூடாது என்று என்ன முயன்றும் முடியவில்லை.  ஏதேதோ நினைவுகளில் மனம் துவண்டு தத்தளித்தது.  கண் நீரை கட்டுப்படுத்த முடியாமல் கவிஞருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மெதுவாக எழுந்திருந்து வெளி வந்தோம்.

காலணிகளை மாட்டிக் கொண்டு கிளம்புகையில் வெளிச்சுவர் பக்கம் நிமிர்ந்து பார்த்தேன்.   பித்தளைத் தகட்டினால் வேய்ந்த பெயர்ப் பலகை கண்ணில் பட்டது.  அந்தப் பெயர்ப் பலகையில்  பாரதிதாசன்  என்று ஆங்கிலத்தில் எழுதப் பெற்று  IN  -- OUT   குமிழ்கள் தென்பட்டன.   புரட்சிக்கவிஞர் அவர்கள் சென்னையில் இருந்ததினால் போலும்,  பித்தளைக் குமிழின் 'IN' மறைக்கப்பட்டு  OUT- தெரிவதாய் இருந்தது. அதைப் பார்த்ததும் மனம் வேதனையில் துவண்டு, சடாரென்று  மனசில் முகிழ்த்த எண்ணமாய், பெயர்ப்பலகையின் குமிழை நகர்த்தி 'OUT'-ஐ  மறைத்து ' IN'  தெரிகிற மாதிரி மாற்றி வைத்தேன்.    ஆம்!  சாகா வரம் பெற்ற கவிஞர் அவர்களின்  'அழகின் சிரிப்பு'ம், குடும்ப விளக்கு'ம், 'குறிஞ்சித் திட்டு'ம், 'பாண்டியன் பரிசு'ம்  இன்ன பிற படைப்புகளும் நம்மிடையே இருக்கையில் என்றென்றும் அவர் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கிறார்'  என்று நினைப்பு நெஞ்சில் அலையாய் புரண்டது.

அடுத்த நாள் புரட்சிக் கவிஞருக்கு அஞ்சலி செலுத்த பெருங்கடல் பொங்கி வந்தால் போல் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் புதுவை  திணறியது. திரைப்படத் துறை சார்ந்தவர்கள் நிறைய வந்திருந்தார்கள்.

பிற்காலத்தில் 'கடைசி வரை யாரோ?' என்று பாடல் எழுதிய கவியரசர் கடைசி வரை நடந்தே வந்தார்.

அந்த வார குமுதம் இதழில் இந்த என் நினைவுகளை  பதிவும் செய்திருந்தேன்.து நடந்ததும் புதுவையில் தான்.   புதுவை கடற்கரை சாலையில்.

கவியரசர் கண்ணதாசன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.

கண்ணதாசன் அவர் கார் கதவு திறந்து வெளிவந்த பொழுதே ஆட்டோகிராப் புத்தகத்துடன் நெருங்கிய என்னை பார்த்து விட்டார்..  அந்தக் காலத்தில் மனசுக்குப்  பிடித்தமான பிரபலமானவர்களிடம் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது ஒரு பழக்கமாகவே இருந்தது.  தனக்கு  பிடித்த பொன்மொழி மாதிரி ஏதாவது வரி எழுதிக் கையெழுத்திட்டுத் தருவார்கள்.

சட்டென்று கவிஞருக்கு மிகவும் அருகில் சென்றவுடன் அவரே என் கையிலிருந்த ஆட்டோகிராப்  புத்தகத்தை வாங்கிக் கொண்டார்., முதல் தடவையாக அவ்வளவு நெருக்கத்தில் கவியரசரைப் பார்க்கிறேன். என் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து அவரிடம் தந்தபடியே சொன்னேன்: "எல்லோருக்கும் தெரிந்த கண்ணதாசன்கள் இருவர்.  ஒருவர் அரசியல் கண்ணதாசன்; மற்றொருவர் இலக்கிய கண்ணதாசன்.  ஏனோ அரசியல் கண்ணதாசனை விட இலக்கிய கண்ணதாசனைத் தான் எனக்கு மிகவும்  பிடிக்கும்.  அதனால் இலக்கிய கண்ணதாசன் என்று கையெழுத்திட்டுத் தர வேண்டுகிறேன்.." மடமடவென்று மனசில் மனனம் செய்து வைத்திருந்ததை கொஞ்சம் கூடத் தயங்காமல் சொல்லி விட்டேன்.  என்ன சொல்லி விடுவாரோ என்று லேசான உதறலும் இருந்தது.

"அப்படியா?" என்று கண்ணதாசன்  புன்முறுவல் பூத்ததே அழகாக இருந்தது.  காரின் முன்பக்கம் நகர்ந்து கார் பானெட்டின் மீது ஆட்டோகிராப்  புத்தகத்தை வைத்து  'இலக்கிய கண்ணதாசன்' என்று தெளிவாக எழுதி அதற்கு கீழே
கையெழுத்திட்டார்.   முகம் சுளிக்காமல் நான் விரும்பியதை அவர் நிறைவேற்றிக்  கொடுத்தது மனசுக்கு  சந்தோஷமாக இருந்தது.  என் தோளில்  லேசாகக் கைவைத்தபடி ஆட்டோகிராப் புத்தகத்தையும் பேனாவையும் என்னிடம் தந்தபடியே, "ஒண்ணுதெரியுமா? ரெண்டு கண்ணதாசன்களுமே பொய்" என்று அவர் புன்முறுவலுடன்  சொன்ன பொழுது திகைப்பாக  இருந்தது.

எனது அந்த 22 வயசில் தத்துவார்த்தமாக அவர் சொன்னது புரியாது பின் புரிபட்ட பொழுது இந்த நிகழ்வை நினைக்கும் பொழுதெல்லாம் அவரது வசீகரமான புன்முறுவல் தான்  நினைவுக்கு வரும்.

இந்த என் அனுபவமும் குமுதத்தில் அந்த வார இதழில் பிரசுரமாயிற்று.

இந்த மாதிரி குமுதப் பிரசுரமான  ஆட்டோகிராப் நினைவுகள் நிறைய. இருந்தாலும் அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் இந்த மாதிரியான பிரசுரங்களில் ஒரு வருத்தமும் இப்பொழுது மேலோங்குகிறது.

ஜெராக்ஸ் மிஷின்கள் இல்லாத காலம் அது.  அதனால் பத்திரிகை காரியாலயங்களுக்கு ஒரிஜனல் தான் அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் அதற்கு அச்சு வடிவம் கொடுத்தாலும் ஒரிஜனல் இல்லாதது இப்பொழுது நினைத்துப்  பார்க்கையில் ஒருவிதத்தில் இழப்பாகத் தான் தெரிகிறது.குறிப்பு:  படங்கள்  உதவியவர்களுக்கு நன்றி.


23 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்ய அனுபவங்கள்.

சொன்னது பாதி... சொல்லாதது மீதி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அந்தப் பெயர்ப் பலகையில் பாரதிதாசன் என்று ஆங்கிலத்தில் எழுதப் பெற்று IN -- OUT குமிழ்கள் தென்பட்டன. புரட்சிக்கவிஞர் அவர்கள் சென்னையில் இருந்ததினால் போலும், பித்தளைக் குமிழின் 'IN' மறைக்கப்பட்டு OUT- தெரிவதாய் இருந்தது. அதைப் பார்த்ததும் மனம் வேதனையில் துவண்டு, சடாரென்று மனசில் முகிழ்த்த எண்ணமாய், பெயர்ப்பலகையின் குமிழை நகர்த்தி 'OUT'-ஐ மறைத்து ' IN' தெரிகிற மாதிரி மாற்றி வைத்தேன். //

நெஞ்சைத்தொடும் நெகிழ்வான அனுபவங்கள் ... சொல்லிச்சென்ற வரிகளில் சுவை அதிகம்.

சாகவரம் பெற்றவர் என்பதில் சந்தேகமே இல்லைதான்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் தோளில் லேசாகக் கைவைத்தபடி ஆட்டோகிராப் புத்தகத்தையும் பேனாவையும் என்னிடம் தந்தபடியே, "ஒண்ணுதெரியுமா? ரெண்டு கண்ணதாசன்களுமே பொய்" என்று அவர் புன்முறுவலுடன் சொன்ன பொழுது திகைப்பாக இருந்தது.//

அந்த வயதில் திகைப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அன்று சொன்னது பொய் அல்ல ... நிஜம் தான் என இப்போது உணர்ந்திருப்பீர்கள். :)

எனக்குக் கவிஞர் கண்ணதாசனை மட்டுமே மிகவும் பிடிக்கும்.

பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் கோபு

கோமதி அரசு said...

பெயர்ப்பலகையின் குமிழை நகர்த்தி 'OUT'-ஐ மறைத்து ' IN' தெரிகிற மாதிரி மாற்றி வைத்தேன். ஆம்! சகா வரம் பெற்ற கவிஞர் அவர்களின் 'அழகின் சிரிப்பு'ம், குடும்ப விளக்கு'ம், 'குறிஞ்சித் திட்டு'ம், 'பாண்டியன் பரிசு'ம் இன்ன பிற படைப்புகளும் நம்மிடையே இருக்கையில் என்றென்றும் அவர் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கிறார்' என்று நினைப்பு நெஞ்சில் அலையாய் புரண்டது.//

நெகிழ்வான நினைவுகள்.

அரசியல் கண்ணதாசன் ,இலக்கிய கண்ணதாசன் அருமை.
தத்துவ கண்ணதாசன் பாடல்கள் மிக அருமையாக இருக்கும் இல்லையா?

கிருஷ்ண மூர்த்தி S said...

பாரதிதாசன்!
அந்தக்கால திராவிடங்களுக்கு அவரை பாரதிதாசனாகக் கூப்பிடக் கூடப் பிடிக்கவில்லை. அந்த அளவுக்கு பாரதி மீதும் பார்ப்பனர் மீதும் துவேஷம். அதனால் புரட்சிக்கவிஞராக கவிதை வாடையே தெரியாத ஒருவரால் 1946 இல் பட்டம் சூட்டப்பட்டார்.அதுவும் பின்னாட்களில் பாவேந்தரானது. திராவிடங்களிடமிருந்து பிரித்து தமிழ்த்தேசியம் பேசுகிறவராக பாரதிதாசனை மாற்றுகிற விந்தை தற்சமயம் நடந்து கொண்டிருக்கிற கூத்து. ஆனால் பாரதிதாசன் என்று தன் பெயரை வைத்துக்கொண்டதற்கான காரணத்தை பாரதிதாசனே சவுக்காலறைகிற மாதிரிச் சொல்லி இருப்பதை சௌகரியமாக மறைக்கப் பழகிக் கொண்ட திராவிட மாயையை என்னென்பது?

கண்ணதாசன்!
சேற்றிலே விழுந்தாலும் அதில் ஒட்டாத தாமரையைப் போல தன்னுடைய பெயருக்கேற்றபடி கண்ணனின் தாசனாகவே ஆகிப்போன விந்தை கவியரசரின் வாழ்க்கையில் நடந்தது. அவருடைய அரசியல், இலக்கியம் இரண்டையும் கடந்து கண்ணனோடு ஒரு விளையாட்டுத் தோழனாகவே ஆனது அவர் செய்த பாக்கியம்

G.M Balasubramaniam said...

இரு பெரும் கவிஞர்களின் தொடர்பும் நினைவுகளும் மறக்க முடியாதவை.

கரந்தை ஜெயக்குமார் said...

யாருக்குக் கிடைக்கும் ஐயா
இதுபோன்ற அனுபவங்கள்
மறக்க முடியாத அனுபவங்கள் அல்லவா

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

இரு பெரும் ஜம்பவான்கள் பற்றி கலக்கி விட்டீங்கள்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//சொன்னது பாதி.. சொல்லாதது மீதி//

கரெக்ட். எல்லா நிகழ்வுகளின் இலக்கணமே அது தான்.. மீதி வைப்பதும் எதற்கானுமான 'நீதி'களைக் கொண்டிருக்கும். அந்த 'மீதி'களெல்லாம் அவை வெளிப்படுவதற்கான காலத்திற்காகக் காத்திருப்பது போல பல சமயங்களில் எனக்குத் தோன்றும்.

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

//சாகவரம் பெற்றவர் என்பதில் சந்தேகமே இல்லைதான்.//

'எழுத்தை' சுவாசிப்பவர்கள் அத்தனை பேருக்கும் இறைவன் கொடுத்த கொடை இது. அப்படியாக எழுதுபவர்களின் அறிவு அவர்களின் எழுத்தாகி அதைப் படைத்தவர் இல்லாது போயினும் அவர் கீர்த்தியைச் சொல்லியபடியே அவை வாழ்கின்றன.

'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று கவியரசர் சொன்னது இதைத் தான்.
'எனக்கு' என்பதை 'என் எழுத்து'க்கு
என்று கொள்ள வேண்டும்.

தானே தன் எழுத்தாகிய கண்ணதாசன் போன்றோருக்குத் தான் இதுவும் பொருந்தும்.

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்-- (2)

//அந்த வயதில் திகைப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அன்று சொன்னது பொய் அல்ல ... நிஜம் தான் என இப்போது உணர்ந்திருப்பீர்கள். :) //

நீங்கள் சொல்வது சரிதான்.

இளைஞர்களாய் இருக்கும் பொழுதே அவரவர்களின் வளர்ச்சிக்காகக் கற்றுக் கொள்வது என்றிருக்கிறதே அது தான் அவரவர் வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக இருப்பதை உணர்கிறேன்.

இன்றைய இளைஞர்களின் 'வாழ்க்கைக் கல்வி'க்கான பாடத்திட்டங்கள் வெகு குறைச்சல் என்பது தான் மிகப் பெரிய சோகம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

//அரசியல் கண்ணதாசன் ,இலக்கிய கண்ணதாசன் அருமை.
தத்துவ கண்ணதாசன் பாடல்கள் மிக அருமையாக இருக்கும் இல்லையா?//

அந்த நேரத்தில் அவர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதனால் தான் அரசியல், இலக்கியம் என்று இரு பகுதிகளாக அவரைப் பிரித்துப் பார்க்கத் தோன்றியது போலும்.

வாழ்க்கையில் அவர் கற்றதும் பெற்றதும் அவரை ஆன்மீக ஈடுபாடு கொள்ள வைத்து தத்துவச் செரிதலாக அவரிடம் கிளர்ந்தெழுந்தது என்று கொள்ளலாம். புளியங்கொம்பாய் கிடைத்த இந்தியத் தத்துவ மரபு அவருக்கு வசப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த வித்தை ஏற்றுக் கொள்வதற்கான மனப்பாங்கு
அவரிடம் இளமையிலேயே இருந்திருக்கிறது போலும்.

ஆன்மீகம், தத்துவம் எல்லாவற்றையுமே இலக்கியப் பேழையில் அடக்கி விடலாம், தானே?

Geetha Sambasivam said...

கவிதைகளோடு பரிச்சயம் ஓரளவுக்கு இருந்தாலும் இந்த அளவுக்கு கவிஞர்களிடம் உருகியது இல்லை. பொதுவாகவே அதிகம் உருகுவது என்னவோ பிடிக்காமலே போய்விட்டது. திரைப்படத்தில் கூட உருக்கமான காட்சிகளில் கண்ணீர் வந்தது என்பது ரொம்பவும் குறைவான படங்களிலேயே இருக்கும்.ஆகவே உங்கள் இந்த உணர்ச்சிகரமான பதிவு எனக்கு ஒரு விதத்தில் ஆச்சரியத்தையே கொடுத்தது. :)))

பாரதியைப் படித்த அளவுக்கு பாரதிதாசனைப் படித்தது இல்லை. அதனாலும் ஈடுபாடு குறைவாக இருக்கலாம். :)))

ஜீவி said...

@ Krishna Moorthy.S.

மீதிக் கதை பெரிது.

அரசியலில் எக்காலத்தும் உணர்வு
பூர்வமான அறிவுக்குச் சொந்தக்காரர்களான எழுத்தாளர்களும், கவிஞர்களும் உபயோகப்படுத்திக் கொள்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஏனென்றால் இந்த சொக்கட்டான் விளையாட்டில் உணர்வுக்கு இடமேயில்லை. உலக அரசியல் வரலாற்றை தெள்ளந்தெளிய அறிந்த நீங்கள் இதற்கெல்லாம் குமைந்து போகலாமா?..

ஜீவி said...

@ ஜிஎம்பீ

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, சார்! ஒரு வாரம் லீவ் விட்டு விட்டீர்களாதலால் அடுத்த வாரம் பார்க்கலாம்.

ஜீவி said...

@ கரந்தை ஜெயக்குமார்

புதுவை சென்று பாவேந்தரின் நினைவில்லத்தை பார்க்கப் போன அனுபவத்தை பதிவொன்றில் நீங்கள் வடித்திருந்த நினைவு வருகிறது.

தங்கள் தமிழ் உணர்விற்கு நன்றி, அன்பு ஜெயக்குமார்!

ஜீவி said...

@ ரூபன்

வாருங்கள், ரூபன்! நலம் தானே?

கலக்குதல் யார்க்கும் எளியவாம்; கலக்கியதில்
கலங்கா திருத்தலே அழகு.

சரியா?..

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

//பாரதியைப் படித்த அளவுக்கு பாரதிதாசனைப் படித்தது இல்லை. அதனாலும் ஈடுபாடு குறைவாக இருக்கலாம். :))) //

இருக்கலாம்.

ஒருவர் எழுத்தை அணுகும் பொழுது பல்நோக்குப் பார்வை தேவையாக இருக்கிறது. கருத்து, வெளிப்பாடு, சொல்வன்மை, மொழியை கையாளுதல், அவையெல்லாம் குறித்து நமது ஈடுபாடு என்று. இவற்றில் அவை குறித்து நம் ஈடுபாடு என்பது தலையாய பங்கு வகிக்கிறது.

1) ஏகதேசமாகப் படித்தவற்றிலிருந்து ஏதோ ஒரு காரணத்தினால் சிலவற்றில் ஈடுபாடு கொள்ளலாம். அவை புதுப்புது ஈடுபாடுகளுக்கும் வழிவகுக்கலாம் -- என்று ஒருவகை.;

2) ஏற்கனவே நம்மில் படிந்திருக்கும் நம் ஈடுபாடுகளுக்கு ஏற்ப வாசிப்பது என்று இன்னொரு வகை.

இந்த இரண்டாவது வகை வாசிப்பில் புதிது புதிதாக அறிமுகமாகிற படைப்பாளிகளின் எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும். அது தவிர்க்கவே முடியாதது.

இத்தனைக்கும் நடுவே சில படைப்பாளிகள் மட்டும் ஒரு காலத்தின் எழுச்சியாக தம் எழுத்தை இனம் காட்டியிருக்கிறார்கள். அல்லது அந்த காலத்திற்கான செயல்பாடு இப்படியான திறமையாளர்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று.

இவர்கள் தங்கள் சொந்த சுக துக்கங்களில் மட்டுமே மூழ்கி விடாமல் சமூகம் சம்பந்தப்பட்டு இருந்தார்கள் என்பது தான் பெரிய விஷயம்.அதனாலேயே அவர்கள் நம் நினைவில் அடிக்கடி வலம் வருகிறார்கள்.

இந்த வரிசையில் பாரதிக்கு அடுத்து அவரது சீடரான பாரதிதாசன். சீடருக்குத் தான் குரு முக்கியமே தவிர எல்லாவகைகளிலும் குருவையே சீடர் ஒத்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

குரு அவர் காலத்தின் எழுச்சி.
சீடர் அவர் காலத்தின் எழுச்சி.

-- என்றே கொள்ளல் தகும்.

பாவேந்தர் பரம்பரை என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொண்டு அந்தக் காலத்தில் ஒரு பெரும் கவிஞர் பட்டாளமே இருந்தது.

பாரதிதாசனை தன் குருவாக ஏற்றுக் கொண்ட உவமைக் கவிஞர் சுரதா
பாரதிதாசனிலிருந்து வேறுபட்ட இன்னொரு வகை படைப்பாளி.

msuzhi said...

ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோம் என்றார் குரு. திராவிடம் வடநாடு என்று பிரிவினை பாடினார் சீடர். அவருடைய காதல், மொழி (சில) பாடலகள் இல்லையெனில் சீடரின் புலமையைக் காலம் மறந்திருக்கும்.

காசுக்குக் கவியெழுதினாலும் அவன் அரசன் தான். கவிக்கொடை தந்தப் பிச்சைக்கார அரசன்.

குரு சீடரைக்காட்டிலும் புலமை பொதிந்தப் பிச்சைக்காரன் - என் இச்சைக்காரன்.

அப்பாதுரை said...

கலக்கல் குறள்!

அப்பாதுரை said...

வாரத்தில் மூன்று முறையாவது ஏதாவது பாரதிதாசன் கவிதை சத்தியமாகப் படிக்கிறேன். (என் பிரம்மயஞ்ய கூடத்தில் இவர் கவிதைத் தொகுப்பு நிரந்தரம் :-)

யாரையாவது உதைக்க வேண்டுமென்று தோன்றினால் இவர் எழுதிய திராவிட துதிகளைப் படித்தால் போதும்! எழுச்சி வானளாவும்.

நெல்லைத் தமிழன் said...

கலக்குதல் யார்க்கும் எளியவாம்; கலக்கியதில்
கலங்கா திருத்தலே அழகு.

"கலக்கியதில்" - தளை சரியில்லை மாதிரித் தோன்றுகிறதே."கலக்கியதில்" க்குப் பதிலாக, "நிகழ்வின்" என்று போட்டால் சரியாயிருக்குமோ?

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

கலக்குதல் யார்க்கும் எளியவாம்; கலக்கியதில்
கலங்கா திருத்தலே அழகு.

'கலக்கியதில்'வார்த்தை, முன்னால் இருக்கும் 'கலக்குதல்' என்னும் வார்த்தையை இழுத்துக் கொண்டு வருவது. இந்த இடத்தில் 'கலக்குதலை' குழப்புதல் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இலக்கணத்திற்காக இலக்கியம் என்றும் இல்லை. அதனால் தான் அப்படிப் பிழை ஏற்படினும் இலக்கண அமைதி என்று கொள்கிறார்கள்.

Related Posts with Thumbnails