மின் நூல்

Monday, August 10, 2015

மனம் உயிர் உடல்

                    நுழைவாயில்

லகம் பூராவும் உள்ள மக்கள் திரள் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தை எது என்று ஒரு கணக்கெடுபப்பு எடுத்தார்கள்.  ‘நான்’ என்கிற வார்த்தை தான் எல்லா நாடுகளுக்குமான எல்லா மொழிகளிலும் அதிகம் பயன்படுத்துகிற வார்த்தையென்று பெருத்த ஆய்வுக்குப் பின் தெரிய வந்தது.

அவ்வளவு மவுசு வாய்ந்த இந்த ‘நானை’ அவரவர் மனம் தான் பிரநிதித்துவப்படுத்துகிறது என்கிற உண்மை அதன் தொடர்பாக பிறகு நடந்த பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்தது. மனம் என்பது உடல் சம்பந்தப்பட்ட ஒன்று என்று மேலோட்டமாக வெகுவாக எண்ணப்படுகிறதே தவிர இது இன்னது தான் என்று இதுவரை துல்லியமாக எவராலும் வரையறுத்துச் சொல்ல முடியாத விசித்திரமாக இருப்பது தான் இந்த மனத்திற்கான  தன்னைத் தானே காட்டிக் கொள்ளாத பெருமையாக இருக்கிறது.

உடல் சம்பந்தப்பட்ட ஒன்று தான் இந்த மனம் என்று கொள்வது பொதுவான கருத்தாயிருப்பினும் உடல் உறுப்புகளில் ஒன்று தான் இந்த மனம் என்பதை  நிருவ முடியாமல் இருப்பது தான் மனம் பற்றிய ஆராய்ச்சிகளில் மிகவும் பின்னடைவு கொடுக்கக்கூடிய சமாசாரமாக இருக்கிறது.  இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போல ஒரு உறுப்பாக இது நாள் வரை இந்த மனம் எந்த ஆய்விலும் அடையாளம் காணப்படவில்லை. அதனால் மனம் என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒரு அம்சமாக உத்தேசமாக இப்போதைக்குக் கொண்டிருக்கிறோம். எப்படி காதல் என்கிற உணர்விற்கு இதயத்தை அடையாளமாக்குகிறோமோ அப்படியான ஒரு அடையாளப்படுத்துதலே இது என்று கொள்ளலாம்.  அதனால் தான் மேனாட்டு மருத்துவ இயலில் மைண்ட் (MIND)  என்கிற சொல்லே மனம் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது.

மனமாவது பரவாயில்லை; இவ்வளவு கால ஆராய்ச்சிக்குப் பிறகு சிக்மண்ட் பிராய்ட் போன்ற ஒப்பற்ற ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பிற்குப் பிறகு ‘மன இயல்’ என்கிற துறையில் வகைப்படுத்தவாவது முடிந்த அளவுக்கு விவரங்கள் செறிந்ததாகக் கொள்ள முடிகிறது.  ஆனால் இந்த உயிர்?....
.
உயிர் என்பது மனத்தை விட சூட்சுமான ஒன்றாக போக்குக் காட்டுகிறது.  உடலில் அசைவோட்டமே அற்றுப் போய்விட்டதென்றால் இத்தனை நாள் இந்த இயக்கத்திற்குக் காரணமாக இருந்த உயிர் என்ற அந்த ஒன்று உடலை விட்டு நீங்கி விட்டதாகக் கொள்கிறோம். ஆக உடலின் உயிர்ப்புக்குக் காரணமான சூட்சுமான ஒன்றை உயிர் என்று காரணப்பெயர் கொண்டு அழைக்கிறோமே தவிர இன்னது தான் இந்த உயிர் என்று இதுநாள் வரை அறிவுலகம் விவரமாக அறுதியிட்டு அறியாத ஒரு சூட்சுமாகவே உயிர் என்று நம்மால் பெயரிடப்பெற்ற ஒன்று இருக்கிறது.

மனம், உயிர் போலல்லாமல் இந்த இரண்டையும் உள்ளடக்கியதாக நாம் நினைத்துக் கொண்டுள்ள உடல் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விவரமாகத் தெரிந்துள்ளோம்.  ஏனெனில் மற்ற இரண்டும் மாதிரி அல்லாது உடல் அதன் உள் பொதிந்த உறுப்புகள் எல்லாம் நம் மருத்துவ சாத்திர அறிவிற்கு உட்பட்ட நிலையில் கைவசமாகி விட்டது.  கண், மூக்கு, காது, கை, கால் என்று வெளிக்குத் தெரிகிற உடல் அமைப்புகள், நுண்ணிய கருவிகள் மூலம் காணக்கிடைக்கிற உடலின் உள் உறுப்புகள் என்று உடலும் உடல் சார்ந்த உறுப்புகளும் இன்றைய தேதியில் திறந்த புத்தகமாகியிருக்கிறது. உடல் சார்ந்த மருத்துவ சாத்திரம் நாள் தோறும் வெவ்வேறான ஆராய்ச்சிகளின் விழுமிய கண்டுபிடிப்புகளால் வளர்ந்து கொண்டிருக்கிறது.

சூட்சுமங்களைத் தம்முள் பொதித்துக் கொண்டுள்ள மனம், உயிர் என்பதெல்லாம் என்னவென்று ஆராய முற்பட்டதும், நமக்கு நன்கு தெரிந்திட்ட உடல் சாத்திரத்துடன் இந்த இரண்டுக்கும் ஆன உறவு பற்றித் தெரிந்து கொள்வதற்குமான ஒரு முயற்சியே இந்தத் தொடராக வடிவம் கொண்டுள்ளது.

மனம், உயிர் பற்றிய தெளிந்த கண்ணோட்டத்திற்காக வழி நடத்திச் செல்லும் ஒரு சிறுமுயற்சியாக தன் பங்களிப்பைச் செலுத்தினால் அதுவே இந்த தொடருக்கான பெருமையும் ஆகும்.
                                                                          
அன்புடன்,
ஜீவி                                                             
                                                        
                          
        அத்தியாயம்: ஒன்று. என் மனம் நீ அறிவாய்! உந்தன்...

‘மனம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்த சொல் தான்.  தெரிந்த என்பதைத் தாண்டி எல்லோராலும் உணர்ந்த சொல் அது.  அவரவர் மனம் என்னவென்பது அவரவர் ;உணர்ந்த ஒன்று தான்.  ஒவ்வொருவருக்கும் அவ்வளவு நெருக்கம் கொண்டது அவரவர் மனம்.  

சொல்லப் போனால் நாம் எல்லோரும் நமக்காக வாழ்வதில்லை. நம் மனசுக்காக அதன் திருப்திக்காகத் தான் வாழ்கிறோம். அல்லது ஒவ்வொரு விஷயத்திலும் தனது விருப்பம் என்னவோ அதை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனம் நம்மை வழிநடத்திச் சென்று அதன் திருப்தியைத் தீர்த்துக் கொள்கிறது. இப்படியாக மனசின் திருப்தியை நம் திருப்தியாக நினைக்கிறோம். ஆக, நம் மனசின் திருப்தியை நம் திருப்தியாகக் கொண்டு நாம் செயல்படுவதைத் தான் வாழ்க்கை என்று சொல்கிறோம் என்று தெரிகிறது.

உண்பது, உடுப்பது, மகிழ்வது, மலர்வது, முயங்குவது எல்லாமே மனசுக்காகத் தான் என்று ஆகிறது. மனம் திருப்தி கொண்டால் நமக்கும் திருப்தி.  மனம் சந்தோஷம் கொண்டால் நமக்கும் சந்தோஷம். மனசுக்கு ஒன்று வருத்தம் என்றால் நமக்கும் அது வருத்தம். எதிலும் மனசுக்கு ஆர்வமில்லை என்றால் நமக்கும் அதில் ஆர்வமில்லை. மனசுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் நமக்கும் பிடிக்கவில்லை. எதிலாவது மனசுக்குக் கொண்டாட்டம் என்றால் நமக்கும் அதுவே கொண்டாட்டமாகி விடுகிறது.  இப்படியாக அவரவர் மனசின் அந்தரங்க துய்ப்புகளுக்கான ஆர்வமே அவரவர் செயல்பாடுகளாகி அவரவர் வாழ்க்கையும் அதுவே தான் என்றாகிவிடுகிறது.. 

இப்படி நம் செயல்பாடுகள் எல்லாமுமே மனசுக்காக என்று அமைந்து விடுகிற பொழுது தனக்காக என்று எதுவுமில்லை என்று தெரிகிறது.  இல்லை, ‘தான்’ என்பதே பொய்யோ என்று நினைக்கத் தோன்றுகிறது.  அல்லது ‘மனம்’ -- ‘’தான்’ என்று தனித்தனியாக இரண்டில்லை, ஒன்றைத் தான் நம் அறியாமையால் இரண்டாகக் கொண்டிருக்கிறோமோ என்கிற எண்ணம் மேலிடுகிறது.

“நீ யார்?” என்று எவராவது கேட்டால் அதற்கு நம்மிடம் பதிலுண்டு..“நான் யார்?” என்று நமக்கு நாமே கேட்டுக் கொண்டால் அதற்கு தெளிவான ;பதிலில்லை.  வெகுவான யோசனைக்குப் பிறகு ‘என் மனசு தான் நான்’ என்று நாமே உணருகிற மாதிரி நமக்கு நாமே கேட்டுக் கொண்ட கேள்விக்கு நல்ல ஒரு பதில் கிடைத்து விட்ட மாதிரித் தோன்றுகிறது..  தெரிவதற்காகக் கேள்வி கேட்டதும், தெளிவதற்காக விடை கொடுத்ததும் மனசு தானோ என்று நினைக்கையில் அந்த அமானுஷ்யம் பிர்மாண்டதாகவும் அதே நேரத்தில் கைக்கடக்கமான குழந்தையாகவும் குழைகிறது.

‘எனக்கென்று எதுமில்லை;  எல்லாம் என் மனசின் கூத்தாட்டம் தான்’ என்று தெரிந்து விட்ட பிறகு ‘நான்’ என்று இன்னொன்று மனதைத் தவிர்த்துத் தனியாக இருப்பதற்கு சாத்தியமில்லை என்று தெரிகிறது.  அல்லது  மனசைத் தான் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ என்று ஐயம் திகைக்கிறது.

நான் என்று சொல்வதற்காவது உடல் என்கிற நடமாடுகிற கண்ணுக்கு யதார்த்தமாய் புலப்படுகிற ஒன்று இருக்கிறது.  ஆனால் எல்லாம் தானே ஆகிய மனம் என்பதின் இருப்பை நிரூபணமாய் நிரூபித்துக் காட்டுவதற்கு எதுவுமில்லையே என்கிற உண்மையும் சுடுகிறது.  ஆக மனம் என்று ஒன்று இருப்பதாக நினைப்பதே கற்பிதமோ என்று சுடுதலில் கிளர்ந்த ஞானோதயம் கேள்வியாய் எழுகிறது.

கண்ணுக்குத் தெரிகிற உடலாகிய ‘நானை’ப் புறக்கணித்து விட்டு இது இன்னது என்று நிரூப்பிதற்கு இயலாத கற்பிதமான மனம் என்ற ஒன்றுக்கு இருப்பு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று உள்ளொளி மினுக்குகிறது.

‘கற்பிதமான மனம்’ என்று நினைக்கையிலேயே அஸ்திவாரமே ஆட்டம் கண்டது போலிருக்கிறது.  இல்லாத ஒன்றை அடித்தளமாகக் கொண்ட ஆட்டபாட்டங்கள் தான் பொல்லாத இந்த வாழ்க்கையின் ஆயாசமா? இல்லை, புலனுக்குப் புலப்படாத எதுவும் இருப்பு கொண்டிருப்பதில்லை என்று தீர்மானமாகப் புறக்கணித்து விடுவது தான் விஞ்ஞான உண்மையா?..

யோசிப்போம்....


(தொடரும்..)

32 comments:

sury siva said...

"நான்" என்று எதை நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேனோ
அது "நான்: " இல்லை என்று நான் தெரிந்து கொள்ளூம் முன்பே
நான்
எனக்குத் தெரிந்த நானாக இல்லாது,
தெரியாத , புரியாத அல்லது
புரிய முற்படாத
ஒரு "நானு"க்குள் சங்கமம் ஆகி இருப்பேன் என்பது மட்டும் தான்
நான் அறிகின்ற ஒன்றாகும்.


சுப்பு தாத்தா.

அப்பாதுரை said...

சுவாரசியமான தொடக்கம்.

மனம் என்பது மனிதருக்கு மட்டுமா என்ற கேள்வியும் சமீபமாகக் கேட்கப்பட்டு வருகிறது. மிருகத்திலிருந்து வந்தவர் மனிதர் என்ற பரிணாம விதிப்படி ஆராய்ந்தால் மிருகத்துக்கும் மனம் உண்டு அல்லது மனம் என்பதன் சாயல்கள் உண்டு என்றே தோன்றுகிறது. மனதை எந்த அளவுக்கு பக்குவப்படுத்துகிறோம் என்பதே மனிதரில் இருக்கும் மிருகரேகைகளை மறைக்கிறது. மிருகமாக இருப்பதில் தவறேயில்லை. மனித போர்வையில் மிருகமாக இருப்பதில் தான் கொஞ்சம் தகராறு.

தேகார் போன்றவர்கள் சொன்ன 'சிந்திக்கும் தகுதி' மனிதரை மேம்படுத்துகிறது - அதாவது மனம் என்கிற தத்துவத்துக்கு ஏறக்குறைய வடிவம் கொடுத்து ஒரு உறுப்பின் பிரமையை உண்டாக்குகிறது.

//இல்லாத ஒன்றை அடித்தளமாகக் கொண்ட ஆட்டபாட்டங்கள் தான் பொல்லாத இந்த வாழ்க்கையின் ஆயாசமா..
இங்கே தான் எல்லாமே ஆரம்பம். உடல் பரிணாம வளர்ச்சி போல் மனப் பரிணாம வளர்ச்சி முழுமை பெறாமல் போனது. அல்லது உடல் மாறிய வேகத்துக்கு மாறாமல் பின்தங்கிப் போனது.

இன்னொன்றும் காரணமாக நினைக்கிறேன். உடல் பரிணாமம் தன்னிச்சையானது. சரியான தமிழ்ச்சொல் தோன்றவில்லை, தடுமாறுகிறேன். உடல் பரிணாமம் இயற்கையை ஒட்டியது. மனப் பரிணாமம் அப்படியல்ல. மனப் பரிணாமம் ஒரு கூட்டு முயற்சியும் கூட. இன்னொரு பக்குவப்பட்ட மனம் என் மனதைப் பக்குவப்படுத்த இயலும். மனதின் இந்த வளர்ச்சியை அங்கீகாரப்படுத்தி ஏற்கும் பொழுது நான் என்ற சொல்லின் பொருளை உணரமுடியும் என்றே நினைக்கிறேன்.

புலனுக்கு அப்பாற்பட்டது பொய்மை என்பதல்ல மனப் பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு. புலனுக்கு அப்பாற்பட்டதை அறிய முற்படுவதும். சற்றும் ஒத்து வராத, தெளிவுக்கு எதிரான பொய்மைகளை வாய்மைகளாக ஏற்று மனிதம் சறுக்கும் பொழுது சற்று ஒதுங்கி நின்று சறுக்கும் மனங்களுக்காகச் சிந்திப்பதும்.. நான் என்ற பொருளின் அண்மையாகக் கருதுகிறேன்.

உயிர்? ப்பூ.. இதென்ன பிரமாதம்?

ஜீவி said...

ஸ்ரீராம்

சுலபமான கேள்வியாகத் தோன்றும் அல்லது மயங்க வைக்கும் கடினக் கேள்வி.

'நாம்' வேறு, மனம் வேறா? நான் என்பது என் எண்ணங்கள் இல்லையோ?.. எண்ணங்களின் தொகுப்பு அல்லது சேமிப்பு தான் மனம் இல்லையோ?..

நீ...ண்ட இடைவெளீக்குப் பின் எழுத வந்திருப்பது மகிழ்ச்சி.

G.M Balasubramaniam said...

/‘கற்பிதமான மனம்’ என்று நினைக்கையிலேயே அஸ்திவாரமே ஆட்டம் கண்டது போலிருக்கிறது. இல்லாத ஒன்றை அடித்தளமாகக் கொண்ட ஆட்டபாட்டங்கள் தான் பொல்லாத இந்த வாழ்க்கையின் ஆயாசமா? இல்லை, புலனுக்குப் புலப்படாத எதுவும் இருப்பு கொண்டிருப்பதில்லை என்று தீர்மானமாகப் புறக்கணித்து விடுவது தான் விஞ்ஞான உண்மையா?../ இந்த இரண்டுக்கும் இடையில்தான் இருக்கிறதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது அலசல் ஆரம்பம் அருமை.

sury siva said...

//பொய்மைகளை வாய்மைகளாக ஏற்று மனிதம் சறுக்கும் பொழுது//

பொய் எது ?

வாய்மை என்பது எது?


நிலையாதது பொய்.
நிலைத்திருப்பது மெய்.

மனிதம் என்பது என்ன?
நிலையாதது எது , நிலைத்திருப்பது எது
என்பதை
உமி எது தானியம் எது என்பது போல்
நீக்கம் அற
உள்ளங்கை நெல்லிக்கனி போல் புரிந்து
தெளிந்த அறிவு.

அது சறுக்குமோ !!

சறுக்குமாயின் அது
சகதி .
சகதியே சுகம் என்போருக்கு
சக்தி என்ன வெனப் புரிவது
எக்காலம் ?

சு தா

கோமதி அரசு said...

மனம், உயிர் என்பதெல்லாம் என்னவென்று ஆராய முற்பட்டதும், நமக்கு நன்கு தெரிந்திட்ட உடல் சாத்திரத்துடன் இந்த இரண்டுக்கும் ஆன உறவு பற்றித் தெரிந்து கொள்வதற்குமான ஒரு முயற்சியே இந்தத் தொடராக வடிவம் கொண்டுள்ளது.//

நல்ல முயற்சி , வாழ்த்துக்கள்.
தொடர்கிறேன்.

மனம் என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் இருக்கிறது.
மனதை ஆராய நினைத்தால் அதுவே மனிதன் முழுமைபேறு அடைய நல்ல மார்க்கம் என்கிறார்கள் பெரியவர்கள். அதற்கு, மதம், அரசியல், பொருளுடைமை என்ற பற்றுகளை விட்டு, அன்பு, கருணை, மலர்ச்சி நம்மில் ஏற்பட்டால் தான் பேரறிவான இறைவனை காணமுடியும் என்கிறார்கள்.

நீங்கள் சொல்வதை படிக்க ஆவலாக் உள்ளேன்.

கோமதி அரசு said...

இனி கதை முடிந்து விட்டதா?
வேறு தொடர் வந்து விட்டீர்கள்?

ஜீவி said...

@ Sury Siva (1)

வாங்க, சூரி சார்! ஆரம்பித்து வைத்தமைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தர வேணும்.

நினைத்தல், அறிதல், நினைத்தது மாதிரி இருக்காத அறிதல், அப்படி அறிந்ததும் திருத்தம் கொண்டு மேற்கொண்டான அறிதலுக்கு இட்டுச் செல்லவதற்கு அடிப்படையான நினைத்தல்கள் அவற்றின் தொடர்பான திருத்தப்பட்ட அறிதல்கள்....

வாழ்க்கை பூராவும் கற்றுக் கொள்ளல் என்பது முடிவிலா தொடர் பயணமாக நீள்கையில் அத்தனையும் நினைத்தலில் ஆரம்பிப்பது தான் நினைப்பின் குடியிருப்பான மனதின் சிறப்பு போலும்.. நினைத்தல் இல்லையேல் அது பற்றிய சிந்தனையே இல்லை என்பதாகத் தான் தெரிகிறது.

நினைத்தல் இல்லையேல் அறிதல் இல்லவே இல்லை என்பது அறிச்சுவடி. அத்தனை வளர்ச்சியும் நினைத்தலில் தான் சூல் கொண்டிருக்கிறது.

யுரேகா! ஆர்கிமிடிஸின் குளியல் தொட்டி நினைப்புகள்-- ஒரு திடப்பொருள் நீரில் மூழ்கும் பொழுது அதனால் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு, அந்தத் திடப்பொருளின் எடைக்கு சமமாக இருக்கும்--என்றான அறிதலுக்கு இட்டுச் சென்ற சரிதம்.....

ஜீவி said...

@ அப்பாதுரை

சூடு பிடிக்க வைக்கும் வருகை.

//மனதை எந்த அளவுக்கு பக்குவப்படுத்துகிறோம் என்பதே மனிதரில் இருக்கும் மிருகரேகைகளை மறைக்கிறது//

ஒரு புலி இன்னொரு புலியை அடித்துச் சாப்பிடாது. அது போலவே அத்தனை இன விலங்குகளும். இதுவே விலங்குகளில் காணப்படும் அமனிதரேகைகள் போலும்!..

//மிருகமாக இருப்பதில் தவறேயில்லை. மனித போர்வையில் மிருகமாக இருப்பதில் தான் கொஞ்சம் தகராறு.//

இதையே இப்படித் திருப்பிப்போட்டுச் சொன்னால்,

மனிதனாக இருப்பதில் தவறேயில்லை, மிருகப் போர்வையில் மனிதனாக இருப்பதில் தான் கொஞ்சம் தகராறு..):

வேடிக்கையாக இல்லை?..

பின்னாடி சூரி சார் பொய்மையையும் வாய்மையையும் தராசுத் தட்டில் தூக்கிப் போட்டு எடை போட முயறசித்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்!

உடல் பரிணாமம்-- மனப் பரிணாமம் என்று தனித்தனியாக நீங்கள் பிரித்துப் பார்த்திருப்பதே, மேற்கொண்டான கனமான விஷயங்களை இலகுப் படுத்தும்.

நீங்கள் தொட்டுச் சென்றிருப்பதை தொடர்ந்து விவாதிக்க முயற்சிப்போம். அவை துண்டு துண்டாகப் போய் விடாமல் ஒரு முழுமையை கொண்டு வருவதாய் அமைய வேண்டும் என்பது தான் நமது வேலையாகப் போகிறது.







ஜீவி said...

@ ஸ்ரீராம்

உங்களதைப் படித்ததும், சடாரென்று இந்தத் தொடரின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்ட மாதிரியான பிரமையைத் தோற்றுவித்தது.

நடுவில் எவ்வளவு விஷயங்கள், இருக்கு?.. ஒவ்வொண்ணாப் பார்ப்போம்.

தொடர்ந்து வந்து கருத்தளிக்க வேண்டுகிறேன்.

இடைவெளி பதிவு வெளியிடலில் தானே தவிர என்னில் இல்லை. 'ஆத்மாவைத் தேடி..'யிலிருந்து ஒரே அனத்தல் தான் இடைவெளியின்றி தொடர்ந்து வருவதாக என்னில் எண்ணம்!..

sury siva said...


நினைத்தல் இல்லையேல் அறிதல் இல்லவே இல்லை என்பது அறிச்சுவடி//



ஒரு பொருளைப் பற்றி ஒன்றுமே தெரியாதபோது அதைப் பற்றி எப்படி நினைக்க இயலும் ?



நினைத்தல் அறிதலுக்கு முன் வருகிறதா !!!



அறிதல் என்ற சொல்லுக்கு நீங்கள் தரும் விளக்கம் என்ன?



ஆங்கிலத்திலே அறிதல் என்ற சொல்லை know , perceive, understand, infer, deduce,



நினைத்தல் என்ற சொல்லுக்கு receiving the information through five senses and processing the information so received . இந்த படிகளுக்குப் பின்பு தான் ஐம்புலன்களால் தெரிய வந்த ஒன்றினைப் பற்றி ஒருவன் சிந்திக்க இயலும். சிந்தித்தல் என்பது application. That means whatever is gained afresh is posited with whatever has already been gained and existing as pre-suppositions. Then follows a process, and this process is known as thinking.



இது இருக்கட்டும். கருவில் இருக்கும் இன்னும் பிறவாத சிசு நினைக்கிறதா? ஆனால் அது தான் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்து அதை அனுபவிக்கிறது. வேதியல் , நரம்பியல், மற்றும் வளர்ச்சி இயல் பற்றிய வல்லுனர்கள் ஒரு சிசு அன்னையின் கருப்பப்பையில் என்னெல்லாம் புரிந்து கொள்கிறது என்பதை விளக்கு கின்றனர்.





இதுவும் இருக்கட்டும்.





ஐ திங்க் . ஐ ஆம் என்பது தத்துவ , குறிப்பாக, புராதன கிரேக்க தத்துவம். இல்லை என்று சொல்ல இல்லை.



நான் சிந்திக்கிறேன் என்பதால் தான் நான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரிகிறது.



ந்யூராலஜிஸ்ட் சொல்கிறார்:



ஐ ஆம் ஐ திங்



நான் இருக்கிறேன். (அதை உணர்கிறேன்.) ஆக எண்ணுகிறேன்.



சுப்பு தாத்தா.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

அந்த இரண்டுக்கும் இடையிலிருக்கிறதோ என்று நீங்கள் நினைத்தைச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. ஆரம்ப அருமையை கடைசி வரை மெயிண்டைன் பண்ணலாம்; எனென்றால் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட் அப்படி!

தங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி, ஜிஎம்பீ சார்!

ஜீவி said...

@ Sury Siva (2)

//நிலையாதது பொய்.
நிலைத்திருப்பது மெய்..//

மெய் போலுமேயான பொய்யை எப்படி வகைப்படுத்துவது, சூரி சார்?..
நிலைத்திருப்பது என்பது இறுதி வெற்றியை ஈட்டும் வரை, நிலையாதது தானே நிலைத்திருப்பது போல போக்குக் காட்டுகிறது?.. நிலைத்திருப்பதை விட, யூஸ் அண்ட் த்ரோ மாதிரியான நிலையாததற்கு மவுஸ் கூடியிருக்கும் காலத்தில் நிலைத்திருப்பதின் சாஸ்வதமே தேவையற்றதாகி விடுமோ பதைபதைப்பு வேறே கூடி வருகிறது.

சறுக்கலில் நிலைபெறும் சக்தி என்றும் இருப்பதாகக் கேள்வி!

ஜீவி said...

@ கோமதி அரசு

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
மனிதன் என்பதற்ட்காக பெயர்க்காரணம் கூட அவன் மனதைப் பெற்றிருப்பதால் தானோ?
பெற்றிருப்பத்தோடு முடிய வில்லை என்பதைச் சொல்லத் தான் இத்தனை முயற்சிகளும்.

தவறாது தொடர்ந்து வந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்,கோமதிம்மா.

ஜீவி said...

@ கோமதி அரசு (2)

ஒருவிதத்தில் பார்க்கப் போனால் 'இனி' தான் இங்கேயும் தொடர்கிறது!

'இனி' நீண்ட கதை என்றால் இது கட்டுரைத் தொடர். அவ்வளவு தான் வித்தியாசம்.

வடிவம் தான் வேறுபடுகிறதே தவிர, எங்கே எதை எப்படி எழுதினாலும் சொல்ல எடுத்துக் கொள்ளும் பொருள் அதுவே தான் என்றாகி மனதை ஆள்கிறது.

'இனி' பற்றிய விசாரிப்பு ஆர்வத்திற்கு நன்றி, கோமதிம்மா. முடிந்த பொழுது தொடரப் பார்க்கிறேன்.

ஜீவி said...

@ Sury Siva (3)

ஆமாம். நினைத்தல் அறிதலுக்கு முன் தான்.

நாம் தான் ஒன்றைப் பற்றி நினைக்க வேண்டும் என்றில்லை. வேறு யார் நினைத்து அவர் அறிந்ததை நாம் தெரிந்து கொள்ளும் பொழுது நம் நினைப்பும் அதன் மேலோங்கி அதுபற்றியதான நமக்கான அறிதலை தேடுகிறோம்; அல்லது தொடர்கிறோம்.

நினைத்தது ஒன்று; அதன் மேலான அறிதல் இன்னொன்று என்று கூட முடியலாம். வரலாற்றில் கொலம்பஸ் நினைத்துத் தேடிக் கிடைத்தது போல!

ஜீவி said...

@ Sury Siva (3)

ஆமாம். நினைத்தல் அறிதலுக்கு முன் தான்.

நாம் தான் ஒன்றைப் பற்றி நினைக்க வேண்டும் என்றில்லை. வேறு யார் நினைத்து அவர் அறிந்ததை நாம் தெரிந்து கொள்ளும் பொழுது நம் நினைப்பும் அதன் மேலோங்கி அதுபற்றியதான நமக்கான அறிதலை தேடுகிறோம்; அல்லது தொடர்கிறோம்.

நினைத்தது ஒன்று; அதன் மேலான அறிதல் இன்னொன்று என்று கூட முடியலாம். வரலாற்றில் கொலம்பஸ் நினைத்துத் தேடிக் கிடைத்தது போல!

I am I think என்பது I think therefore I am -- என்கிற அர்த்தத்தில் தான்.
இது கூட I am able to think, therefore I exist என்கிற பொருளில் தான்.
நினைத்தல் இல்லையென்றால் வாழ்வதற்கான அர்த்தமே இல்லை என்றாகிறது.

யோசிக்க வைத்தமைக்கு ரொம்ப நன்றி, சூரி சார்!


sury siva said...

எண்ணுதல் என்பதற்கு என்ன பொருள் என்பதிலே நீங்களும் நானும் வெவ்வேறு அலை வரிசைகளில் இருக்கிறோம்.

நீங்கள் ஒரு பதிவு எழுதி இருக்கிறீர்கள் . அதைப் படிக்கிறேன். அதில் என்ன சொல்லி இருக்கிறது என்று அறிகிறேன். அதைப் பற்றி நினைக்கிறேன்.

இந்த காண்டேக்ஸ்டில் நீங்கள் "நினைத்தல் " என்பது அறிதல் "' க்குப் பின் எனச் சொல்கிறீர்கள் போலும்.

நான் சொல்வது இதை அல்ல.


சுப்பு தாத்தா.

msuzhi said...

அறியாததை நினைக்கச் சாத்தியமேயில்லை.. பொய்யென்றோ மெய்யென்றோ நாம் அறிந்ததை மட்டுமே நினைக்க முடிகிறது. நினைவு என்பது உடல் தொட்ட செய்கை. அறிதல் உடல் விதிகளுக்குட்பட்ட தனிமை அதே நேரம் அப்பாற்பட்ட பொதுமைக்கும் இடையிலான சாகச தேசத்தில் நடைபெறுகிறது. இல்லையா?

msuzhi said...

அறியாததை நினைக்கச் சாத்தியமேயில்லை.. பொய்யென்றோ மெய்யென்றோ நாம் அறிந்ததை மட்டுமே நினைக்க முடிகிறது. நினைவு என்பது உடல் தொட்ட செய்கை. அறிதல் உடல் விதிகளுக்குட்பட்ட தனிமை அதே நேரம் அப்பாற்பட்ட பொதுமைக்கும் இடையிலான சாகச தேசத்தில் நடைபெறுகிறது. இல்லையா?

ஜீவி said...

@ Sury Siva

இப்பொழுது தானே மனம் என்ன என்பது பற்றி ஆரம்பித்திருக்கிறோம். எண்ணுதல் என்பது என்ன என்று வரும் பொழுது இந்த 'முன்', 'பின்'னை விவரமாகப் பார்க்கலாம். சரிடா?

ஜீவி said...

@ Durai.A.

எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளக் கூட அதைப் பற்றி நினைக்க வேண்டியிருக்கிறது, இல்லையா?.. இந்த நினைப்பு மனதில் ஓடுவது தான் ஆரம்பம். இந்த ஆரம்பம் இல்லையேல் அது பற்றியதான தொடரல் இல்லை. இந்த ஆரம்பத்திற்குப் பிறகு தான் அது பற்றித் தெரிந்து கொள்ளல், தீர்க்கமாக அறிந்து கொள்ளல் எல்லாம், இல்லையா?..

பூமியின் சுழற்சி பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், பூமியின் சுழற்சி என்று சொல்கிறார்களே, அது என்னவாக இருக்கும் என்கிற நினைப்பு மனசில் ஓட வேண்டும் இல்லையா?. அந்த விதத்தில் ஒன்றைப்பற்றித் தெரிந்து கொள்வதற்கான ஆரம்பப்படியே எதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அதைப் பற்றியதான நினைப்பு மனசில் உதிக்க வேண்டும், இல்லையா?..

இந்த அர்த்தத்தில் பாருங்கள். தொடர் வருகைக்கு நன்றி.


ஜீவி said...

சூரி சார். மன்னிக்கவும். கணினியில் டைப் செய்யும் பொழுது ஒரு fingering mistake. கடைசி வரியை சரியா என்று திருத்திப்படிக்க வேண்டுகிறேன். அருள் கூர்ந்து மன்னிக்கவும்.

KABEERANBAN :கபீரன்பன் said...

மிகுந்த வாசிப்பும் ஆழ்ந்த சிந்திப்பும் தேவையான ரொம்பப் பெரிய சப்ஜெக்ட். இதையெல்லாம் சூரிசாரும் நீங்களும் தான் கையாள முடியும்.
எனக்குத் தெரிந்து மனம் என்பது ஈகோ ப்ரொஜெக்ஷன். அது எஜமானனால் ’நாம்’ அதற்கு அடிமையாவோம். அப்போது உடல் பற்று பெருகுகிறது. இதன் நடுவே கர்மவிதி, பூர்வ ஜென்ம பலன் என்ற பட்டியல்கள் வேறு
உயிர் மிகவும் சூக்ஷமமானது. அது இந்த பிடிக்குள் எல்லாம் சிக்குவதல்ல.
சாட்சியாயிரு - என்பதொன்றே சிறந்த மருந்தாகத் தெரிகிறது.
அன்புடன்
கபீரன்பன்

Geetha Sambasivam said...

மனம் வேறே, உயிர் வேறே, உடல் வேறே இல்லையா? அப்போது நம் உடலில் யாருடைய மனம் இருக்கிறது? உயிர் யாருடையது? உடல் யாருக்குச் சொந்தம்? அந்த மனதுக்கா? அல்லது அதில் இருக்கும் உயிருக்கா? உயிர் வாழ்வதற்காக நினைக்கிறோமா? நினைப்பதை நிறைவேற்றி வைப்பது மனம் தான் எனில் அதனால் உயிருக்கு என்ன பலன்? உடலாவது ஒரு சில வசதிகளை, ருசிகளை, அனுபவிக்கிறது. ருசிகளை அனுபவிப்பது உடலா, மனமா? இதிலேயே சந்தேகம் இருக்கிறது? ஒரு மனம் வேண்டும் என்றால் இன்னொன்று வேண்டாம் என்கிறதே? அப்போது இருப்பது இரண்டு மனங்களா? இப்போதைக்கு இதான்! இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து படித்த பின்னர் மீண்டும் ஏதேனும் தோன்றுகிறதானு பார்க்கலாம்.

Geetha Sambasivam said...

உங்கள் பதிவு எனக்கு அப்டேட் ஆவதில்லை! :(

sury siva said...

//அறியாததை நினைக்கச் சாத்தியமேயில்லை.//

அப்பாதுரை சாரே !!

அறியாதது அப்படின்னா என்ன ?
that which appears to exist but not so far perceived
அல்லது
that which exists but not so far understood as it lies outside my realm of understanding
இன்னா சொல்றீக அப்படின்னு சுப்பு தாத்தா மர மண்டைலே ஆணி அடிச்சுப்பார்த்தாலும் இரங்கல்லே.

அறிவு என்பது ஆறு விதமா முளை விடுது அப்படின்னு நம்ம ஊரு வேதாந்தம் மட்டும் அல்ல
வெளிநாட்டு எபிச்டமாலஜி சப்ஜக்ட் லே டாக்டரேட் வாங்கினவங்க எல்லாருமே சொல்றாங்க அண்ணே !!
பிரத்யக்ஷம் (perception)
அனுமாணம் (inference)
சப்தம் (word, testimony)
உபமானம் (comparison, analogy)
அர்த்தபத்தி (postulation, presumption)
அனுபலப்தி அல்லது அபாவம் (non-perception, cognitive proof using non-existence)
இது எல்லாத்தையும் பத்தி விலா வாரியாப் பேசி ஒண்ணு இரண்டு முடிவாத் தெரிஞ்சிகிடலாம்.


பூனைக்குட்டி, தியாகராஜன் பத்தி எழுதிய நீங்க எழுதிய கதைய படிச்சு பாத்தாலே அறியாத ஒன்றை நினைப்பது எப்படி சாத்தியம் அப்படின்னு லேசா லேசா புரிஞ்சுக்கலாம்.

இன்னிக்கு தேதிலே பயலாஜிகல் கெமிஸ்ட்ரி சொல்லுது : உடம்புலே ஒவ்வொரு செல்லும் சுதந்திரமா எண்ணுது . அது சொந்த அறிவா இன்ஹெரிடெட் அறிவா, என்விரோன்மெண்டல் அறிவா என்பதை யும் முடிவு பண்ண முடியல்ல. அந்த செல்லின் செயல்பாடு அதாவது தன்னைப்போல இன்னொன்று தயாரிக்கும் ப்ராசஸ் லே காக்னிடிவ்
இன்டன்ஷன் இருக்குதா இல்ல அது ஒரு ஆக்சிடெண்ட் ஆ ? செல் முடேட் ஆகி கான்சர் செல் ஆகும்போது அந்த செல் தான் வழி தவறி நடக்கவேண்டும் என்று எண்ணும்போது செயல்படும்போது அதுக்கு என்ன ஏ பிரியோரி அறிவு a priori knowledge இருக்குது ?




நான் பேசுற எண்ணுதல், நினைத்தல் , அறிதல் எல்லாமே பயலாஜிகல் நியூராலஜி அடிப்படையில். ப்யூர் க்ளினிகல் சைகாலஜி.

நீங்க வாதிடர கோணம் வேற.

உங்க அலை வரிசையும் வேற.

நான் அம்பேல்.


சுப்பு தாத்தா.

msuzhi said...

அறிந்ததை மட்டுமே நினைக்க முடியும் என்சிறேன்.
அறியாததைப் பற்றி நிச்சயம் எண்ணிப்பார்க்க முடியும். சிந்திக்க முடியும் என்சிறேன்.

மனம் நினைவுகளின் சுரங்கம். அறிவு அப்படியல்ல.

ஜீவி said...

@ கபீரன்பன்

எவ்வளவு நாளாச்சு?.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கபீரன்ப!

முடிந்த போதெல்லாம் வாசித்துக் கருத்தளிக்க வேண்டுகிறேன். நீங்கள் குறிப்பிடிருப்பதை கருத்தில் கொண்டிருக்கிறேன். இந்த கட்டுரைக்கு மிகவும் உபயோகப்படும். மிக்க நன்றி.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

'இப்போதைக்கு இதா'னே அப்படி அசத்துகிறது. எத்தனை கேள்விகள்?.. அடுத்த அத்தியாயத்தை கேள்வி-பதிலாகவே வைத்துக் கொள்ளலாமா என்று தோன்றுகிறது.

அப்டேட் ஆகலேன்னா 'பின் தொடர' மறுபடியும் முயற்சித்துப் பாருங்களேன். அதுவும் வேலைக்கு ஆகலேன்னா இருக்கவே இருக்கார், நம்ம ஸ்ரீராம்! 'எங்கள் ப்ளாக்'கில் ஊடுருவி வரலாமில்லையா?

தொடர்ந்து வந்து நினைப்பதைச் சொல்ல வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ Sury Siva

'பூனைக்குட்டி தியாகராஜனை' மறக்கவே முடிலே தானே? எனக்கும் தான்.

அந்த ஆறு, ஆண்டவன் கட்டளை போல மனசில் படிஞ்சிடுத்து. அறிவு பற்றி எழுதும் போது ஜமாச்சிடலாம்! குறிப்புகளுக்கு நன்றி.

ஆ! க்ளினிகல் சைகாலஜி! ரொம்ப நன்றி, சூரி சார்!

msuzhi said...

அப்போ perception proves existenceனு ஆகுமே? அது begging the question இல்லையா? இதை வச்சு தானே அத்தனை பம்மாத்தும நடக்கிறது?

Related Posts with Thumbnails