மின் நூல்

Monday, January 25, 2016

'தி இந்து'வின் பொங்கல் மலர் --2016-- ஒரு பார்வை


முதலில் ஒன்றைச்  சொல்லி விட வேண்டும். மலரைப் பகுதி பகுதியாகப்  பிரித்திருக்கும் விதமே அதன்  வெற்றிக்குக்  கட்டியம் கூறிவிடுகிறது.

முதல் பகுதியான அறியப்படாத திருவிழாக்கள் பற்றிய விவரங்கள் அருமை. இந்தப்  பகுதிக்காக சலித்து தேர்ந்தெடுத்த திருவிழாக்கள் பெரும்பாலோரால் அறியப்படாத  அதிசயத்  திருவிழாக்களாக இருக்க வேண்டும் என்பதற்கு  அதிக முக்கியத்வம் கொடுத்திருக்கிறார்கள்.. ஆரம்பமே, வாழ்வின் நிலையாமையை நிதர்சனத்தில் எதிர்கொள்ளும் மயானக் கொள்ளை பற்றி. அடுத்து தேனி மாவட்டம் பாலார் பட்டி கிராமத்தில் முல்லைப்  பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குய்க் அவர்களுக்கு எடுக்கும் விழா.  ஜனவரி 15-ம் தேதி பென்னி குயிக் பிறந்த நாள் ஆதலால்  ஜனவரி 15-ம் தேதி தான் எல்லா ஆண்டும் பொங்கலைக் கொண்டாடுவது தேனி--மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு விசேஷ நன்றித் திருவிழாகிப் போன சரிதம். அதற்கடுத்து திருச்சி மாவட்டத்து மணப்பாறை வீரப்பூரில் நடைபெறும் பெரிய காண்டியம்மன் கோயில் மாசித் திருவிழா. இப்பகுதியில் ஆட்சி புரிந்த வரலாற்று நாயகர்கள் பொன்னர்—சங்கர் வாழ்ந்த இடத்து படுகளம் திடலில் நூற்றுக்கணக்கான மேடைகளில் பொன்னர்—சங்கர் நாடகம் ஒரே நேரத்தில் நடப்பது இந்தத் திருவிழாவின் ஹை-லைட்டான சமாசாரம். அதற்கடுத்து சிவகங்கை நாட்டரசன்  கோட்டை நகரத்தாரின் செவ்வாய் பொங்கல் திருவிழா பற்றி. அதற்கடுத்து திருவிழாவுக்கு மட்டும் திறக்கப்படும் ஒரு கோயிலைப் பற்றி. நீலகிரி மாவட்டத்து கோத்தர் மக்கள் கொண்டாடும் கம்பட் ராயர் திருவிழா பற்றி. அதற்கடுத்து மறவப்பட்டியில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியான  விளக்கமாற்றடித் திருவிழா. வந்தவாசி அம்மையப்பட்டு ஊரணிப்  பொங்கல் விழா என்று தெரியாதோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிற ஆவலில் அறியப்படாத திருவிழாக்களின் லிஸ்ட் நீ..ள்..கி..ற..து.  தாவரங்களின் கொண்டாட்டத் திருவிழா என்று தைப்பொங்கல் திருவிழா பற்றி தனியே வேறே. .                                        

அடுத்து ஆலய தரிசனம் பகுதி,  நாமக்கல் ஆஞ்சநேயர், காரமடை ரங்கநாதர், இஞ்சிமேடு ஸ்ரீ வரதராஜ பெருமாள், சிறுவந்தாடு  ஸ்ரீ லட்சுமிநாராயண பெருமாள் என்று முழுப்பக்க கடவுளரின் திருவுருவ தரிசனங்கள்.  திருக்கோயில்கள் பற்றிய விவரங்களோடு, தரிசன நேரங்கள் பற்றிய குறிப்புகள் கொடுத்திருப்பதும் சிறப்பு. 

மூன்றே கதைகள்.மூன்றும் இதிகாச நிகழ்வுகளை நினைவுபடுத்துகிற கதைகளாய் அமைந்திருப்பது ஆச்சரியம்.  எஸ்.ரா.வும், வாஸந்தியும் மகாபாரத பாஞ்சாலியை அவரவர் கோணத்தில்  பார்க்க விமலாதித்த மாமல்லனோ இராமாயண ஸ்ரீராமன்-- அனுமன் உறவுக்கு நடுவே பிரயத்தனப்பட்டு கதைக்காக ஒரு கோடு போடுகிறார்.

வாஸந்தி ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார். மஹாபாரத பாஞ்சாலியின் நிழலில் இந்தக் கதையின் நாயகி பாஞ்சாலி படிய வேண்டும் என்பதற்காகவே கதையின் போக்கிலேயே அந்த நாவல் பழக்கதை உள்கதையாக வருகிறது. வாஸந்தியின் எண்பதுகளின் வழக்கமான விவரிப்புகள் ஒன்றில் ஒன்று புதைந்து கொள்கின்றன. கதையின் முடிவுச் சீற்றத்திற்காக பம்மிப்  பதுங்குகின்றன. சரியான தருணம் வந்ததும் கதையின் நாயகி பாஞ்சாலி வெகுண்டு எழுகிறாள். அந்த வெகுளலுக்கு சரியான தீர்வைச் சொல்லாமல் பாஞ்சாலியின் அக்னி பிரவேசமுடிவாக கதையை முடித்துக் கொண்டது தான் ‘பொசுக்’கென்று போய்விட்டது.  இதற்கா அத்தனைப்  பக்க ஆயாசம் என்று மனம் தகிக்கிறது.

'உப பாண்டவம்' எழுதிய எஸ்.ரா.விற்கு இந்த சப்ஜெக்ட் வெல்லக்கட்டி. மஹாபாரதத்தின் உபகதைகள் நிறையவே கைகொடுத்திருக்கின்றன. வெகு இயல்பான நடையில் எஸ்.ரா.விற்கே உரித்தான கதை சொல்லலில் கதை கொடிகட்டிப் பறக்க அவரது வாசிப்பு அனுபவத்தில் விளைந்தது நம் வாசிப்பு அனுபவமாய் பெருமிதமடைகிறது. கடைசியில் கதை இப்படி முடிகிறது::

பாஞ்சாலி மெளனமாக நின்று கொண்டிருந்தாள். பாண்டவர்கள் அவள் முன்பாக மண்டியிட்டுச் சொன்னார்கள்.  “பாஞ்சாலி! உன்னை புரிந்து  கொண்டோம். நீ மஹாசக்தி. தவறு எங்களுடையது.  எங்களின் சுயநலம் உன்னைப் பந்தயம் வைத்தது.  மன்னித்து விடு. இனி எங்கள் வாழ்வும் சாவும் உனக்கானது. எங்களை வழிநடத்து”.

பாஞ்சாலி விடுவிடுவென்று தனியே நடக்கத் தொடங்கினாள். பாண்டவர்கள் அவளின் ஐந்து நிழல்களைப்  போலப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள்.  அதன் பிறகு குருஷேத்ர யுத்தத்தில் வெல்லும் வரை பாண்டவர்களின் விதியைப் பாஞ்சாலியே தீர்மானித்தாள்—என்று கதை முடிகிறது.. ‘ஐந்து நிழல்கள்’ என்று எஸ்.ரா. சூட்டிய கதைத் தலைப்பும் வெகு பொருத்தம்..

மலரில் எஸ்.ரா.வின் கதைக்குப் பின் வாஸந்தியின்  கதையைப்  பிரசுரித்திருக்கிறார்கள்.  இதையே வாஸந்தியின் கதையைப் படித்த பிறகு எஸ்.ரா.வின் கதையை படிக்கிற மாதிரி, அமைத்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

கோடு போட முயன்றது அழகான ரோடாகவே ஆகியிருக்கிறது  விமலாதித்த  மாமல்லனுக்கு.. கதையைக் கச்சிதமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக்  கொண்டு  பிரமாதப்படுத்துகிறார். அந்த கதாகாலட்சேப பகுதி நல்ல உத்தி என்றாலும் சில திரைப்பட காலட்சேப காட்சிகளை நினைவு  படுத்துவதைத்  தவிர்த்திருக்கலாம். இன்னும் நுணுகிப் பார்க்கின் கதை காவியமாகியிருக்கலாம்.

ஒரு கதைக்கான சகல அம்சங்களும்  பொருந்தியதாய் அந்தக் காலப்  பெண்களின் அவலஉண்மைகளைக் கதை போலச் சொல்லியிருக்கிறார் பாரததேவி.  தாலி கட்டிய கணவனைத் தவிர வேறே நாதியில்லா சூழ்நிலைகளும்,  நாதியிருக்கிற நேரங்களிலும் ஊரார் பழிக்கு அஞ்சி ஒடுங்கும் அந்தக்கால பெண்மனதையும் படம் பிடித்துக்  காட்டியிருக்கும் உண்மைகள் சூட்டுக்கோலாய் சுடுகின்றன.

சினிமா இல்லாமல் தமிழ்ப் பத்திரிகை உலகம் இல்லை.  இந்த மலரில் திரையுலகம் குறித்து எட்டு கட்டுரைகள்.  ‘பாரதிராஜா என்ற குல(ச்)சாமி’ என்கிற புதுமைத் தலைப்பில் ஆர்.எஸ்.அந்தணன் தெரிந்த விவரங்கள், தெரியாத  விவரங்கள் என்று  கலந்து கட்டி நிறைய எழுதியிருக்கின்றார். ஆரம்ப காலங்களில் அல்லி நகரில்  பாரதிராஜா மலேரியா இன்ஸ்பெக்டராக பணியாற்றினார் என்பது அதில்  ஒரு தகவல். சினிமாவை விட சுவாரஸ்யமானது  அந்த சினிமா உருவான பின்னணி என்று நிறையச் செய்திகள். 

எண்பதுகளின் நடிகைகள் பற்றி சுரேஷ் கண்ணனின் ‘நெஞ்சில் நிறைந்த நாயகிகள்’ என்று ஒரு கட்டுரை.  உணர்வு பூர்வமாக அமைந்திருக்க வேண்டிய விஷயங்கள் வெறும்  விவரக்குறிப்புகளாகி விட்டன. ‘பொதுவாக பாக்கியராஜின் திரைப்படங்கள் அசட்டுத்தனமான மெலிதான ஆபாசமும் கூடிய நகைச்சுவையைக் கொண்டிருப்பவையாகக் கருதப்பட்டாலும்'’—என்பது போன்ற அர்த்தபூர்வ சொல்லாடல்களை புன்னகையுடன் ரசிக்கலாம்.

நாயகிகள் பற்றி சுரேஷ் கண்ணன் என்றால் படைப்பூக்க நாயகன் என்று மணிரத்னம் பற்றி அஜயன் பாலா. கமல்-ரஜினி பற்றி  கருந்தேள் ராஜேஷ், நடன நடிகைகள் பற்றி ஆர்.பி.ராஜநாயகம். திரை இசை பற்றிக் கதை போலச் சொல்லும் சுகா, இயக்குனர்களின் நெருக்கடிக் காலம் என்று ஜெய், முடிசூடா மன்னர்கள், புன்னகைப் பேரரசர்கள் என்று திரைப்பட ரசிகர்களுக்காக நிறைய நிறைய. நம் மனசில் தமிழ் சினிமா பற்றிய தகவல் களஞ்சியம் யாத்த அறந்தை நாராயணனின் நினைவுகள் வேறே!

‘அரண்மனை உலா’ என்று ஒரு பகுதி.  அட்டகாசமான புகைப்படங்களால் திணறுகிறது. திருமலை நாயக்கர் மஹால், புதுமைக் கோட்டையாம்  புதுக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்பனை, தஞ்சாவூர் அரண்மனை என்று ஒரு நீண்ட உலா.  விவரங்கள்.. சுருக்கமாக ‘பளிச்’சென்று மனசில் பதியாமல் பள்ளிப் பாடப்புத்தகங்கள் மாதிரி தகவல் நெரிசலாகிப் போனது ஒரு குறை. காட்சிப் படப்பிடிப்பு புகைப்படங்கள் என்றால் கருத்துப்  பிரதிபலிப்பு பிரசன்டேஷன் ஜாலம்.    
....
தங்கள் ஊர் பொங்கலைப் பற்றி சில பிரபலங்கள் சொல்லியிருக்கிறார்கள். ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது தம் நினைவுகளை ஓவிய உலா போலப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  இந்த வரிசையில் மணாவின் கட்டுரையும்  குறிப்பிடத்தக்க ஒன்று. 

இந்த மலரின் ஸ்பெஷலான ஒரு ஐட்டம் பற்றிச் சொல்ல வேண்டும். ‘ஓர் அடவியின் அந்திமக் காலம்’ என்று சூழலியளாளர் நக்கீரன் கட்டுரை அது. ‘மழை என்பது உலகின் உயிர்த்துளி.  காடு என்பது மானுடத்தின் உயிர்மூச்சு. இவை இரண்டும் இணைந்த மழைக்காடு ஏராளமான வியப்பையும் திகைப்பையும் தனக்குள் குவியல் குவியலாகக் கொட்டி வைத்திருக்கும் ஓர் உயிர்மப் புதையல்’ என்ற ஆரம்பமே வாசிக்க உள்ளிழுத்துக் கொண்டு போகிறது.  உலகின் எட்டாவது கண்டமான கவிகை (Canopy) பற்றி சத்தியமாகத் தெரியாது. லோகத்தின் பதினான்கு லட்சம் உயிரின வகைகள் இன்றைக்கும் காட்டின் கூரையாகிய இந்த மரக்கவிகைகளில் வசிக்கின்றன என்பதும் புதிய  செய்தி.  ஐந்தடுக்குள் கொண்ட போர்னியோ காட்டில் உலா வரும் உணர்வு சாத்தியமாகியிருக்கிறது.  அந்த உணர்வைத் தந்தமைக்கு  ரொம்பவும் நன்றி, நக்கீரன் ஐயா! புகைப்படக் கலைஞர் கல்யாண் வர்மாவின் படங்கள் உயிரெடுத்து சேதி  சொல்கின்றன.  திறமைமிக்க அந்த இளைஞருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

எம்.எஸ். பற்றி ‘இசை அரசியின் ஏழு ஸ்வரங்கள்’ என்று வி.எஸ்.வி. ரமணன் எழுதியிருக்கிறார், ஓவியம், சிற்பம், கால்நடை மருத்துவம் என்று பன்முகம் கொண்ட டாக்டர் ராமநாதனை நேர்கண்ட கட்டுரையும், அக்கால சமூக நாடகங்களைப் பற்றிய குள. சண்முகத்தின் கட்டுரையும், கேவ்லாதேவ் தேசிய பூங்கா பற்றிய வினோத்குமாரின் விவரக் கட்டுரையும் மனசில் நிற்பவை. சிறுவர்களுக்கான சித்திரக்கதையும் ஒன்று உண்டு.

இவ்வளவு விஷயங்களை ஒரு மலரில் அடைத்தும் ‘பண்டைய இலக்கியச் சுவைப் பற்றிச் சொல்லாமல் இருந்தால் எப்படி?’ என்று பூமணியின் கட்டுரை ஒன்றையும் விட்டு விடாமல் சேர்த்திருக்கிறார்கள்.  எந்தப் பூமணி என்று தெரிய அவரின் புகைப்படத்தையும் போட்டிருக்கலாம்.

மலரில் பழமையும் நவீனமும் கைகோர்த்துக்  கொண்டு உலா வருகின்றன.  அதுவே இந்த மலருக்கான சிறப்பம்சம்.

நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தந்த ஆசிரியர் குழாமிற்கும் மலரின் தயாரிப்பு குழுவிற்கும் மனமார்ந்த  பாராட்டுகள்.. நேர்த்தியான வாசிப்பு அனுபவம் சித்தித்தமைக்கு நன்றிகள்..


11 comments:

Geetha Sambasivam said...

அருமையான விமரிசனம். ஒவ்வொன்றையும் ஆழ்ந்து ரசித்துப் படித்துச் சுவைத்திருக்கிறீர்கள். நல்ல ரசனை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

'தி இந்து'வின் பொங்கல் மலர் --2016--

ஒரு பார்வை ... ஒரே பார்வை ... அதுவும் தங்களின் கூர்மையான பார்வை.

ஒவ்வொன்றையும் ரஸித்து, ருசித்து, கரும்பை ஜூஸ் ஆகப் பிழிவது போலப் பிழிந்து எங்களுக்கு சுலபமாகப் பருகிடும் வண்ணம் கொடுத்துள்ளீர்கள்.

ஒவ்வொரு விஷயத்தையும் தங்களின் தனிப்பார்வையில் மிக ஆர்வமாகப்படித்து மகிழ்ந்தேன்.

பகிர்வுக்கு நன்றிகள், சார்.

”தளிர் சுரேஷ்” said...

மலரின் ஒவ்வொரு பக்கத்தையும் ஆழ்ந்து வாசித்து அழகாக விமரிசனம் செய்துள்ளீர்கள்! மூன்று கதைகளைப் பற்றிய உங்கள் விமர்சனமும் விழாக்கள் பற்றிய விவரிப்பும் மலரை வாங்கிப் படிக்கத் தூண்டுகின்றது. இந்து நாளிதழ் வாங்கினாலும் மலர் வாங்கவில்லை! இப்பொழுது கிடைக்குமா என்று தெரியவில்லை! கிடைத்தால் வாங்கி வாங்கி வாசிக்கின்றேன். இந்துவில் வெளிவரும் சுவாரஸ்யமான நடுப்பக்க கட்டுரைகள் தொடர்களுக்காகவே இரண்டு வருடங்களாக இதழை வாங்கி வருகிறேன். விரிவான பதிவுக்கு நன்றி ஐயா.

ஸ்ரீராம். said...

ஒரு பக்கம் பொங்கல் மலர் ஒன்றை நீண்ட நாட்களுக்குப் பின் வாசிக்கிறீர்களோ என்று தோன்றினாலும் பகுதி பகுதியாகப் பிரித்து மேய்ந்து இருக்கிறீர்கள். (சந்தேகமும் அதனால்தான்!) ரசனைகள் வாழ்க. இப்படிப்பட்ட ஊக்குவிப்புகள் எழுதுபவர்களுக்கும், புத்தகங்கள் வெளியிடுபவர்களுக்கும் டானிக் போல.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

வாசித்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி, கீதாம்மா தனிப்பதிவாய் இருந்தால் இந்த மலர் சிறுகதைகளைப் பற்றி தனித்தனியாக எழுத வேண்டும். அந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுது செய்கிறேன்..

ஜீவி said...

@ வை.கோ.

ஆர்வமாகப் படித்தமைக்கு நன்றி கோபு சார்.

தனிப் பார்வை என்று புரிந்து கொள்ளும் பொழுதே, 'எந்தன் பார்வை உந்தன் பார்வை' ஆகிவிடுகிறது. பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதின் நிமித்தமே எழுத்துவதற்கான ஆர்வமும் அமைந்து விடுகிறது. மலர் எங்காவது கிடைத்தால் புரட்டிப் பார்க்க தவறாதீர்கள். முக்கியமாக அந்த மூன்று சிறுகதைகள்.

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

நடுப்பக்க விமர்சனங்களைப் பற்றி நீங்கள் எழுதலாமே? நகைச்சுவை உங்களின் கைவண்ணம். நகைச்சுவையாய் எழுதுதல் ஒரு வரம். சீரியஸான விஷயங்களையும் நகைச்சுவையாய் எழுதும் பொழுது அதற்கு தனி அந்தஸ்து கிடைத்து விடுகிறது. அதனால் சொன்னேன்.

பேராசிரியர் கல்கி இதில் சாதித்துக் காட்டியவர். நமது கோபு சார் (இரண்டாவது பின்னூட்டக்காரர்) இதில் சாதித்துக் கொண்டிருப்பவர். உங்களின் நகைப்பூக்கள் அற்புதம்.

தங்கள் பகிர்தலுக்கு நன்றி சார்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நகைச்சுவையாய் எழுதுதல் ஒரு வரம். சீரியஸான விஷயங்களையும் நகைச்சுவையாய் எழுதும் பொழுது அதற்கு தனி அந்தஸ்து கிடைத்து விடுகிறது. பேராசிரியர் கல்கி இதில் சாதித்துக் காட்டியவர். நமது கோபு சார் (இரண்டாவது பின்னூட்டக்காரர்) இதில் சாதித்துக் கொண்டிருப்பவர்.//

ஆஹா, பேராசிரியர் கல்கி எங்கே, நான் எங்கே !

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம் அல்லவா சார், எங்கள் இருவருக்கும்.

எனினும் தங்களின் இந்தப் பாராட்டு, மிகவும் சோர்ந்து போயுள்ள எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருவதாக உள்ளது. மிக்க நன்றி, சார்.

பிரியமுள்ள கோபு

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஜன.15 தானே பொங்கல்?.. மலர் 120 பக்கங்கள். 20 பக்கங்கள் விளம்பரம் போனாலும் 100 பக்கங்களை விமரிசன கோணத்தில் ஆழ்ந்து படித்து படித்ததை வரி வடிவங்களில் கொண்டு வந்து அடித்துத் திருத்தி உருவம் கொடுத்து படிக்கறது தெரியாமல் வழவழ நடையில் படிக்கக்க் கொடுத்து... சரியாகச் சொல்ல வேண்டுமானால் போன வாரமே இந்தப் பகுதி ரெடி.ஒரு காரணத்திற்காகக் காத்திருந்தேன்.

//இப்படிப்பட்ட ஊக்குவிப்புகள் எழுதுபவர்களுக்கும், புத்தகங்கள் வெளியிடுபவர்களுக்கும் டானிக் போல.//

'இல்லை' என்பதே நிதர்சன உண்மை.

படித்ததைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் எழுதுகிறவர்கள் எழுதுகிறார்கள்.

வாசிக்கும் ஆர்வத்தில் வாசிப்பவர்கள் வாசிக்கிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் இதையெல்லாம் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பதே உண்மை.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மிகஅருமையாக உள்ளது... வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் இதுவரை ‘கல்கி’ அவர்கள் எழுதிய எந்தக் கதையையும் வாசித்தது இல்லை. கல்கி என்று மட்டுமல்ல வேறு எந்தப் பிரபலங்களின் எழுத்துக்களையும் நான் அதிகமாக வாசித்தது இல்லை.

சின்ன வயசில் காசு கொடுத்து அவற்றை வாங்கிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வமோ, வாய்ப்போ எனக்குக் கிட்டவில்லை. நடுத்தர வயதில் அன்றாட ஆபீஸ் வேலை பளுவினால் வாசக சாலைகளுக்குச் சென்று புத்தகம் எடுத்ததோ, காசு கொடுத்து கடையில் வாங்கியதோ இல்லை.

ஆனால் காசு செலவில்லாமல் என் கைக்குக்கிடைத்திடும் எந்த எழுத்துக்களையும் நான் வாசிக்காமல் விடவும் மாட்டேன். அது கடலை சுற்றிய பேப்பர் ஆனாலும் சரி, பார்பர் ஷாப்பில் காத்திருக்கும்போது கிடைக்கும் பத்திரிகைகளானாலும் சரி. ஒரே மூச்சில் படித்து விடுவேன்.

என் பெரிய மகன் அடிக்கடி உலகப் பயணங்கள் மேற்கொள்பவன். வாசிப்பதிலும் அவனுக்கு ஆர்வம் உண்டு. ஆங்காங்கே கடைகளில் புஸ்தகம் வாங்குவான். படிப்பான். எங்காவது தான் தங்கும் இடங்களில் அதனை அப்படியே போட்டு விட்டு போய்க்கொண்டே இருப்பான் ... ஆர்வமுள்ள பிறர் யாராவது படிக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் மட்டுமே.

அதுபோல சமீபத்தில் ’கல்கி’ அவர்கள் எழுதிய மூன்று சிறுகதைகள் இருந்த புஸ்தகம் ஒன்றினை என்னிடம் போட்டு விட்டுச் சென்று விட்டான். அது வானதி பதிப்பக வெளியீடு. நூலின் தலைப்பு: ’மயில் விழி மான்’. ஐந்தாம் பதிப்பாக அக்டோபர் 2008ல் வெளியிடப்பட்டுள்ளது. விலை ரூ. 30 மட்டுமே. இருபுற அட்டைகள் உள்பட 148 பக்கங்கள். அதில் மொத்தம் மூன்று கதைகள் உள்ளன.

(1) மயில்விழி மான்
(2) நாடகக்காரி
(3) தப்பிலிகப்

மிகவும் ஆர்வமாகப் படித்தேன். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை என்னால் அதை நிறுத்தவே முடியவில்லை. தொடர்ந்து வாசித்து மகிழ்ந்தேன். அதுதான் ‘கல்கி’ அவர்களின் எழுத்தின் தனிச்சிறப்பு என்பதை நன்கு உணர்ந்துகொண்டேன். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விஷயம் பற்றி மிகச்சிறப்பாக எழுதியுள்ளார்கள். அதுவும் அந்த மூன்றாவது கதை ’தப்பிலிகப்’ நல்ல நகைச்சுவையுடன் எழுதியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர் போல இன்னொருவர் நகைச்சுவையாக எழுத சான்ஸே இல்லை என எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

இதெல்லாம் தங்களின் தகவலுக்காக மட்டுமே.

Related Posts with Thumbnails