மின் நூல்

Friday, February 12, 2016

இரு பதிவர்களிடம் ஒரே மாதிரியான கேள்வி

திவுலகில் இது பயணப் பதிவுகள் காலம் போலிருக்கு.

பயணம் தொடர்பான தொடர் பதிவுகள், தனிப்பட்டு தாம் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய குறிப்புகள் என்று பதிவர்கள் தூள் கிளப்புகிறார்கள்.

அப்படியான பயணப் பதிவுக்ளை வாசித்துக் கொண்டு வரும் பொழுது ஒரு எண்ணம் ஏற்பட்டது.  கிட்டதட்ட ஒரே மாதிரியான கேள்வியை இரு பதிவர்களிடம் கேட்டால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்று அறிய ஆசை ஏற்பட்டது.

அந்த இருவர் யார் என்றால் இவர்களே:

1,  திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்

2. ஜீஎம்பீ என்று செல்லமாக அழைக்கப்படும் திரு. ஜி. எம். பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள்.

இந்த இருவரையும் இதுவரை நான் நேரில் சந்தித்ததில்லை என்றாலும் அது எனக்குப்  பெரிய குறையாகப் பட்டதில்லை.  நேரில் சந்தித்தவர்களை விட அதிக நெருக்கமும் உரிமையும் எடுத்துக் கொண்டு நிறைய இவர்களிடம் பதிவு சம்பந்தமாகக் கேட்டதுண்டு.  இந்த இருவரிடமும் எனக்கு மதிப்பும் மரியாதையும் நிரம்பவே உண்டு.  நான் கேள்வி  கேட்க  நினைத்த இந்த இரண்டு பேருமே சுற்றுலா மாதிரியான பயணம் மேற்கொண்டு அதுபற்றி இப்பொழுது எழுதிக் கொண்டிருப்பவர்கள்.  ஆனால் இந்த இருவர் பயணங்களுக்கும் நுண்ணிய வித்தியாசங்கள் உண்டு.

கீதா சாம்பசிவம் அவர்கள் ஷேத்திராடனம் மாதிரி புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் நோக்கத்துடன் இந்தப்  பயணத்தை மேற்கொண்டவர்.  ஆனால் ஜிஎம்பீ ஐயா அப்படியில்லை.  ஒரு  சந்தோஷ சுற்றுலா மாதிரி குடும்பத்துடன் நண்பர்களுடன் கிளம்பியவர் தான்.  அவர் பயணத்தில் கோயில்கள் குறுக்கிட்டதா, இல்லை அந்தந்த பிரதேசத்துக் கோயில்களையும் உள்ளடக்குகிற மாதிரி பயணத்திட்டம் வகுக்கப்பட்டதா, தெரியாது. இவரும் பெரும்பாலும் கோயில் தரிசனங்கள், அந்தந்த சூழ்நிலைகளில் த்ன் உணர்வில் பதிந்தவை, பிரயாணத்  தகவல்கள் என்று தன் பயணக்கட்டுரையை எழுதி வருகிறார்.

பதிவுலகில்  பிரபலமானவர்கள் எனினும் அவர்கள் இருவர் பற்றியும்  என் பார்வையில்  சிறு குறிப்பு கொடுக்க வேண்டியது இந்தப் பதிவுக்கு அவசியமாகிறது.

கீதா சாம்பசிவம் ஏராளமாக எழுதிக் குவித்தவர்.  எதையும் தீர்மானமாக எழுதுவார். தினமும் ஒரு பதிவு போட்டு பதிவுலகோடு சம்பந்தம் கொள்ளவில்லை என்றால் இவருக்கு அந்த நாள் வேஸ்ட்டாகப் போய்விடும் என்று நினைக்கும் அளவுக்கு  நிறைய எழுதுபவர்.
என்றாவது பதிவு போடவில்லை என்றால் அதைத் தெரிவிக்கும் முகமாக அதற்கும் ஒரு பதிவு போட்டுச் சொல்லும் பாசம் மிக்கவர்..  என்னன்ன மனசில் தோன்றுகிறதோ அதை அப்படியே சரளமாக எழுதும்  எழுத்து நடைக்கு சொந்தக்காரர்.  சமீபத்தில் தான் மேற்கொண்ட பயணத்தில் எதிர்ப்படும் தலங்களைப் பற்றிய குறிப்புகளாக இதுவரை இந்த  இடங்களைப் பார்த்திராதவர்களுக்கு அறிமுகப்படுத்துகிற மாதிரி நிறைய தகவல்களைக் கொடுத்து எழுதி வருகிறார்.

ஜிஎம்பீ அவர்கள் எழுத்தே அலாதி.  இந்த 77 வயது பெரியவர் எழுத்தை வெற்று பொழுது போக்குக்காக என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு எழுதுபவர். வாசிக்கறவர் மனசில் தைக்கிற மாதிரி சில புதுமைக் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே சமூக நோக்கோடு இவர் எழுதுவதாக எனது  புரிதல்.  எழுதுவதற்கான நோக்கம் இவருக்கு முக்கியமாகிப் போவதால் தான் எழுதியது பற்றி மற்றவர்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் மிகுந்த பிரயாசை கொள்பவர்.   எழுதியது சரியான  விதத்தில் போய்ச் சேர்ந்ததா என்று அக்கறை  கொள்பவரும் இவரே. பின்னூட்டங்களில் சரியான  பிரதிபலிப்பு ஏற்படாத பொழுதும் சலிப்பு கொள்ளாமல் இவர் ஆதர்சமாகப் போற்றும் எண்ணங்களை மீண்டும் மீண்டும் பதிபவ்ர்.  இவரது read between the lines-- க்காகவே இவர் எழுத்துக்களை விரும்பி வாசிப்பவன் நான்.

பிரயாணங்கள் பற்றி அதிகப்  பதிவுகள் பதியபடுகிற சமீப போக்கில் தங்கள் எழுத்தில் வேறுபட்டாலும் இந்த இருவரும் ஒரு விதத்தில் ஒரு விஷயத்தில் ஒத்துப்  போயிருந்ததைப் பார்த்தேன்.

கோயில் தரிசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி அந்தந்த நேரங்களில் கொண்ட உணவிற்கு,  உணவு விடுதிகளூக்கு இருவருமே முக்கியத்துவம் கொடுத்திருந்தனர்.  அதனால் அவர்கள் ஒன்றுபட்ட இந்த விஷயத்தில் அவர்களிருவரிடமும் அது  குறித்து கேள்விகள்  கேட்க வேண்டும் என்று தோன்றியது.

இதோ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்:


கீதா சாம்பசிவம் அவர்களின்---

புவனேஸ்வரில் இட்லி, தோசையுடன் இரவு உணவு!   பதிவில்----
http://sivamgss.blogspot.in/2016/02/blog-post_10.html

ஜீவி

இது என்ன தலைப்பு?.. புவனேஸ்வரில் நீங்கள் இட்லி தோசையுடன் ஊத்தப்பமும் சேர்த்து சாப்பிட்டதா முக்கியம்

கீதா சாம்பசிவம்

ஆமாம், ஜீவி சார்! நிச்சயமா! இதுவும் முக்கியம் தான்! அதே போல் ஜவுளி பற்றி எழுதியதும் முக்கியமே! பலருக்கும் சாப்பாடு ஒரு பிரச்னை என்பது என் போன்ற வயிற்றுக்கோளாறு நிரந்தரமாக உள்ளவர்களுக்கு நன்கு புரியும். நல்ல சுத்தமான, சுவையான உணவு எங்கே கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது நல்லதே! மேலும் புவனேஸ்வரில் லிங்கராஜா கோயில் பார்த்ததோடு எங்களோட க்ஷேத்திராடனம் முடிஞ்சுது! தங்கும் இடம், நல்ல சாப்பாடு போன்றவை ஒழுங்காய் இருந்தால் தான் எந்த ஊருக்குப் போனாலும் நிம்மதியாகச் சுற்றிப் பார்க்க முடியும்.


ஓரளவு நான் எதிர்பார்த்தமாதிரியே கீதாம்மா பதில் சொல்லியிருக்கிறார்கள்.


அடுத்து,  ஜிஎம்பீ ஐயாவின்

தொடர் பயணம் -நாகர் கோவில் -1    பதிவில்

http://gmbat1649.blogspot.in/2016/02/1_11.html

ஜீவி

திருச்செந்தூர் பதிவிலாவது ஹோட்டல் சமாசாரங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கு தங்கினீர்கள், என்ன சாப்பிட்டீர்கள் என்பதா முக்கியம்?

இந்த மாதிரிப் பயணங்களில் நமக்கேற்படும் அனுபவங்களில் புதுசாக நாம் தெரிந்து கொண்டதைத் தெரியப்படுத்துவதற்குத் தானே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்?..


ஜிஎம்பீ@ ஜீவி
இப்பதிவில் தங்கும் இடம் பற்றியும் அங்கு காலை உணவு உண்டது பற்றியுமே சொல்லி இருக்கிறேன் மற்றவைகள் பற்றியே அதிகம் எழுதி இருக்கிறேன் பதிவுகள் முடியும் நேரத்துக்கு வந்து விட்டன. அடுத்து பயணம் மேற்கொண்டு எழுதும்போதுதங்குமிடம் உணவு பற்றிச் சொல்லாமல் இருக்க முயற்சிக்கிறேன் வருகைக்கும் குறிப்பிட்டுக் காட்டொஇயதற்கும் நன்றி.


வாசகர்களோடு வாசகராக ஒத்த ரசனையில் பயணிப்பது ஜிஎம்பீ சாருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று..  என்று தெரிகிறது.


மூத்த பதிவர்கள் இருவருக்கும் நெஞ்சார்ந்த  நன்றி.


10 comments:

ஸ்ரீராம். said...

இரண்டு பதிவுகளிலும் இந்தக் கேள்வி பதில்களை நானும் படித்தேன். புதுப்புது ஐடியாக்கள் பதிவு போட உதவுகின்றன. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' தளாதிபர் ரமணி ஸார் கூட இப்போது சக பதிவர்கள் பற்றி எழுதி வருகிறார். இதேபோல் அப்பாதுரை வெண்பா பாடியது நினைவிருக்கும்.

Geetha Sambasivam said...

//வாசகர்களோடு வாசகராக ஒத்த ரசனையில் பயணிப்பது ஜிஎம்பீ சாருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.. என்று தெரிகிறது.//

இருக்கலாம் ஐயா! ஆனால் என்னோட கருத்தில் எனக்கு மாற்றமில்லை. ஏனெனில் பலரும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றை நிறைத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஹோட்டல் சாப்பாடு சாப்பிட முடியாத இடங்களில் நான் பெரும்பாலும் பழச்சாறு, பழங்கள் என்று சாப்பிட்டதைக் கூடக் குறிப்பிட்டிருப்பேன். அத்தகைய பயணங்களில் அயோத்தி, திருக்கயிலைப் பயணம், பத்ரிநாத் பயணம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. சித்ரகூடத்தில் எங்கோ சாலைஓர உணவு விடுதியில் வாங்கிய உணவைக் குப்பையில் போட நேர்ந்தது. அடுத்துச் செல்பவர்கள் இதைப் படித்தால் ஓரளவு முன் ஜாக்கிரதையாக இருக்கலாமே! நல்ல உணவு எங்கே கிடைக்கும் என்பதை நாம் சொல்லிவிட்டால் தனிப்பட்ட முறையில் எங்களைப் போல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வசதி! நான் இதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறேன். அநேகமாக எல்லாப் பயணங்களிலும் இதைக் குறிப்பிட்டிருப்பேன். குழுவாகப் பயணித்தால் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களே சாப்பாடுப் பொறுப்பை ஏற்பார்கள். அப்படிப் பயணித்த ஓரிரு பயணங்களில் அவற்றையும் குறிப்பிட்டிருக்கேன். இதிலிருந்து இந்தக் குழுவோடு பயணம் செய்யலாமா கூடாத என்னும் முடிவுக்கும் பயணிகள் வர ஏதுவாக இருக்கும். :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரு பதிவர்களின் தனித்திறமைகள் + இயல்புகள் பற்றிய தங்களின் ஒப்பீடும், தாங்கள் அவர்களிடம் கேட்டுள்ள கேள்விகளும், அவர்கள் தங்களுக்குக் கொடுத்துள்ள பதில்களுமாக தங்களின் இந்தப் பதிவு வித்யாசமாகத்தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், சார்.

Geetha Sambasivam said...

எங்கே என்னோட கருத்து? நல்லவேளையா அதை சேமிச்சு வைச்சிருந்தேன். ஆகையால் மீண்டும் கொடுக்கிறேன்.

//வாசகர்களோடு வாசகராக ஒத்த ரசனையில் பயணிப்பது ஜிஎம்பீ சாருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.. என்று தெரிகிறது.//


இருக்கலாம் ஐயா! ஆனால் என்னோட கருத்தில் எனக்கு மாற்றமில்லை. ஏனெனில் பலரும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றை நிறைத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஹோட்டல் சாப்பாடு சாப்பிட முடியாத இடங்களில் நான் பெரும்பாலும் பழச்சாறு, பழங்கள் என்று சாப்பிட்டதைக் கூடக் குறிப்பிட்டிருப்பேன். அத்தகைய பயணங்களில் அயோத்தி, திருக்கயிலைப் பயணம், பத்ரிநாத் பயணம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. சித்ரகூடத்தில் எங்கோ சாலைஓர உணவு விடுதியில் வாங்கிய உணவைக் குப்பையில் போட நேர்ந்தது. அடுத்துச் செல்பவர்கள் இதைப் படித்தால் ஓரளவு முன் ஜாக்கிரதையாக இருக்கலாமே! நல்ல உணவு எங்கே கிடைக்கும் என்பதை நாம் சொல்லிவிட்டால் தனிப்பட்ட முறையில் எங்களைப் போல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வசதி! நான் இதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறேன். அநேகமாக எல்லாப் பயணங்களிலும் இதைக் குறிப்பிட்டிருப்பேன். குழுவாகப் பயணித்தால் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களே சாப்பாடுப் பொறுப்பை ஏற்பார்கள். அப்படிப் பயணித்த ஓரிரு பயணங்களில் அவற்றையும் குறிப்பிட்டிருக்கேன். இதிலிருந்து இந்தக் குழுவோடு பயணம் செய்யலாமா கூடாத என்னும் முடிவுக்கும் பயணிகள் வர ஏதுவாக இருக்கும். :)


ஃபாலோ அப் கருத்துகள் வருகின்றன. எதுக்கும் ஸ்பாமில் தேடிப் பார்த்துடுங்க! :)

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அரைத்த மாவையை அரைக்காமல், புதுப்புது ஐடியாக்கள் கிடைக்கும் போதே குஷி தான், இல்லையா? ஒரு பதிவர் பார்வையில் மிகச் சரியாகப் பார்த்திருக்கிறீர்கள். இதே கோண்த்தில் 'எங்கள் பிளாக்'கில் அவ்வவ்போது நீங்கள் பரிசோதித்துப் பார்ப்பவ்பைகளை ஆர்வத்துடன் நானும் பார்த்து வியப்பதுண்டு.

சமீபத்திய உதாரணம்: 'கேட்டு வாங்கிப் போடும் கதைகள்'. செவ்வாய்க் கிழமை அதிகாலையிலேயே இந்த வாரம் யாரோ என்கிற ஆவலைக் கிளப்புகிற அளவுக்கு வாசகர்களைக் கவரந்த தொடர் பதிவு இது.

ரமணி சார் பதிவுகளுக்குப் போய்ப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி. அப்பாதுரை சாரை இப்பொழுதெல்லாம் பார்க்க முடியாத குறை இருக்கத்தான் செய்கிறது. நினைக்கும் சந்தர்ப்பங்களில் அவர் எழுத்துக்களை நினைத்துக் கொள்வது தான் அவருக்கான வெற்றி.

நன்றி ஸ்ரீராம்! !

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

வாங்கோ, வைகோ சார்! ஒப்பீடு மாதிரி இல்லை. அவரவர் தங்கள் பதிவுகளைப் பெரும்பாலும் எப்படி அமைக்கிறார்கள் என்பதைச் சொல்ல வந்தது அவர்களைப் பற்றியும் நான் உணர்ந்த குறிப்புகளைக் கொடுத்ததினால் அப்படித் தோற்றம் கொடுக்கிறது, போலும்.

ஆனால் ஒன்றுபடும் விஷயத்தைத் தேர்ந்தெடுத்தது உண்மை.

'வாணலியில் போட்டேன், வதக்கினேன், எடுத்து வைத்தேன்' என்று ரொம்ப இயல்பாகச் சொன்னவர்கள் செய்த சமையல் ஒரு காலத்தில் தேவாமிருதமாக இருந்தது. சமையல் என்பது இயல்பான ஒரு செயலாக இருந்தது. போட்டதை எடுத்துச் சாப்பிட்டோமே தவிர அதில் அதிகப்படியான கவனம் பதிந்ததில்லை. அதிக முக்கிய்த்துவம் கொடுத்ததில்லை. இப்பொழுதெல்லாம் உணவைப் பற்றிய கவனம் அதிகமாகியிருக்கிறது. உண்டபின் அதனால் ஏற்படும் விளைவுகள் தாம் கீதாம்மா சொல்லியிருக்கிற மாதிரி அதில் கவனம் கொள்ள நேரிட்டிருக்கிறது.

புத்தகச் சந்தைகளில் கூட சமையல் புத்தகங்களின் விற்பனை தான் உச்சம்! இணையப் பதிவுகளில் கூட அதான் அதிகம் போலிருக்கு!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

வெளியில் 'நல்ல சாப்பாடு'என்று எதுவுமில்லை என்பது என் கருத்து. என் அலுவலக பணிக்காலத்தில் ஏறத்தாழ 22 வருடங்கள் தொடர்ந்து உணவகங்களில் சாப்பிட்டவனின் கருத்து இது. உணவகங்களில் உணவுப் பொருட்கள் தயாராகும் இடத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

வீட்டு சாப்பாடு ஜீரணத்திற்கு பழக்கப்பட்டு விடுவதும் ஒரு காரணம். ஒத்துக்கொள்ளும், ஒத்துக்கொள்ளாதது தெரிந்து சமைக்கற சமையல். வெளியிடங்களுக்குப் போகும் பொழுது வேறு வழியில்லை என்பதைத் தவிர 'நல்ல சாப்பாடு' என்று குறிப்பிட்டு நீங்கள் சொல்வது புரியவில்லை.'நல்ல சாப்பாடு'க்கு இலக்கணம் தான் என்ன?

இளமைப் பருவத்தில் தொந்தரவாகத் தெரியாததின் பலனை முதுமையில் அறுவடை செய்கிறோம். நல்லது--அல்லாததை அவரவர் ஜீரண மண்டலம் தாம் தீர்மானிக்கின்றன. ஒருவருக்கு தொந்தரவு கொடுக்காதது இன்னொருவருக்கு இன்னலாகிப் போகும். ஆக இதிலும் நல்லது என்ற தேர்வுக்கு எதுவும் இல்லாது போகிறது!

இந்த மாதிரி சுற்றுலாக்களில் சுற்றுலா என்பது முக்கியமாகும் பொழுது வேறு வழியில்லை என்று இதையெல்லாம் சகித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்; பக்தி சுற்றுலாவா கேட்கவே வேண்டாம்! பக்திக்கு ஆரம்பப் படிக்கட்டு, சகிப்பு தான்! ஆக, பூரண பக்தி வாய்க்க அதை இங்கு அனுபவப்பாடமாக பழகிக் கொள்ளலாம்! இல்லை, 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி' கதை தான்! இதான் இன்றைய நிலை!

வெளிநாடுகளில் ஏதாவது சுற்றுலா தலங்களில் 'டேரா' போட்டோமென்றால் பொருட்கள் வாங்கி தங்குமிடங்களில் அத்தனை வசதிகளுடன் நாமே சமைத்துக் கொள்ள வழியிருக்கிறது. அதன் சுகமே தனி. (நம்மவர்கள் இங்கு வந்தும் சமையலா என்று முகத்தைச் சுளிப்பார்கள் என்பது வேறு விஷயம்.) ஒருவர் தேங்காய் துருவ, இன்னொருவர் காய் நறுக்க, எலெக்டிரிக் அடுப்பு பக்கம் மாற்றி மாற்றி இருவர் என்று--- அத்தனை பேரும் குளித்து டாணென்று எட்டு மணிக்கெல்லாம் சுற்றிப் பார்க்க வெளியே கிளம்பி விடலாம். சுற்று வட்டார பச்சைப் பசுமையில் மனமெல்லாம் குதூகலிக்கும்.

நார்த் கரோலினா மலைப்பகுதியில் இந்த மாதிரியான ஒரு தங்குமிடத்தை ஒரு வார காலத்திற்கு வாடகை எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தோம். 'உலகம் பிறந்தது நமக்காக' என்று உணர்ந்தோம்.

G.M Balasubramaniam said...


ஜீவி சாரின் வித்தியாசமான பதிவிலும் ஜீவியின் டச் தெரிகிறது வாழ்த்துக்கள் ஐயா

ஜீவி said...

நன்றி, ஐயா!

'டச்'சுக்கு தமிழ்லே என்ன சார், கைவண்ணமா? (அடுத்த பதிவு எழுதிக் கொண்டிருப்பதின் பாதிப்பில்)

ப்ராப்தம் said...

பதிவு பின்னூட்டங்கள் எல்லாமே சுவாரசியம்.

Related Posts with Thumbnails