பகுதி-- 8
ஒரு நாவலுக்கான அத்தனை சிறப்புகளையும்
கொண்டது சிலப்பதிகாரம். அது மட்டுமில்லை,
அந்தக் காப்பியத்தைப் படைப்பதில் புதுமையான பல படைப்பிலக்கிய திறமைகளை அடிகளார்
வெளிப்படுத்தியிருப்பது அவரது ஆக்கத்திற்கு முன்னால் எல்லாம் இல்லாத புதுமாதிரியாய்
அமைந்திருப்பது வியப்பாக இருக்கின்றது. .
அது வரை தன்னுணர்ச்சி பாடல்களாய் இருந்த
இலக்கிய மரபை மடை மாற்றி ஒரு முழுமையான காப்பியப் போக்குச் சோதனைக்கு உட்படுத்தி
அதில் வெற்றி கண்ட முதல் தமிழ் மகன் இளங்கோ ஆவார். அதே மாதிரி தமிழ் இலக்கிய உலகு
வேறொரு புதுமையான மாறுதலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதும் அடிகளாரின்
இந்த வெற்றிக் காப்பியத்திற்கு பின்னால்
தான். அதுவரை அரசு மரபினரையேப் போற்றிப்
பாடிய வழக்கத்தை மாற்றி முதன் முதலாக ஒரு
சாதாரணக் குடிமகனை பாட்டுடைத் தலைவனாக வரித்து பாடிய முதல் பெரும் காப்பியம்
அடிகளாரின் சிலம்புக் காவியமே..
மங்கலமான மணநாள் விழாவில்
ஆரம்ப்பிக்கிறது இந்தக் காப்பியம். கோவலன்—கண்ணகி மணநாள் விழாவை படம் பிடித்தாற்
போல காட்சிப்படுத்தும் ஆரம்ப அத்தியாயமான மங்கல வாழ்த்துப் பாடலின் திருமணக்
காட்சியின் வர்ணனைகள் நம்மை மயக்குகின்றன.
மாலைகள் பொருத்திய மண்டபம், நீலப்பட்டிலான விதானத்தின் கீழே அழகிய முத்துப்
பந்தல்., வானில் நீந்தும் சந்திரன் ரோகிணியைச் சாரும் நல்லதோர் ஓரையில் அருந்ததி
அன்ன கற்புடை நங்கை கண்ணகியின் வலது கரம் பற்றி
மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிட கோவலன் மங்கலத் தீ வலம் வருகிறான்.
நறுமணப் பொருட்களை ஏந்திய அழகிய
மகளிர், மாலைகளை தாங்கிப் பிடித்தபடி வாழ்த்துப்பா பாடிய நங்கையர், சுண்ணப்பொடி ஏந்திய
மங்கையர், அகிற்புகை சூழ்ந்த சூழலில் விளக்குகளை ஏந்திய மகளிர் புன்னகைச் சுடருடன் சூழ்ந்து வர நடுவில் முளைப் பாலிகை தாங்கியும், பூரண கும்பம் ஏந்தியும் மங்கையர்
வலம் வந்தனர் காட்சிப்படுத்தல்கள் நீளும் பொழுது அந்தக்கால திருமணவிழாக்கள்
எப்படியிருந்திருக்கும் என்று நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கிறது. பாரம்பரிய பழக்க வழக்கங்களில் எந்த பெரிய
மாற்றமும் இல்லாமல் இன்றைய நம் இல்லத் திருமண விழாக்களும் கிட்ட்த்தட்ட அதே
மாதிரியாக் இன்றும் இருப்பதில் உள்ளூர ஒரு மகிழ்ச்சி வேறே.
பூரண கும்பம் ஏந்திய மகளிர் வலம் வரும்
அந்த சமயத்தில் கவிஞன் வாக்காக அந்த வரிகள் அவன் அறியாதது போலவே வருகின்றன: பொற்கொடி
போன்ற நீண்ட கூந்தல் கொண்ட மகளிர் “இந்த மங்கை நல்லாள் தன் காதலனை கண்ணிலும்
மண்ணிலும் பிரியாது என்றும் வாழ்வாளாக!
அவனும் இவளின் பிணைந்த கை நெகிழாமல் இருப்பானாக: பதுமணம் காணும் இந்த
தம்பதிகள் தீதின்றி நீடுழி வாழ்க!” என்று மலர் தூவி வாழ்த்துகின்றனர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது தெரியும். இருந்தும் பின்னால் நேரவிருக்கிற பயங்கரத்தை இந்த வாழ்த்து மழை ஒருகால் புரட்டிப் போடுமோ என்கிற லவலேச ஆசையாலோ என்னவோ அடிகளார் வார்த்தைப் பின்னல்களை வாழ்த்தின் இடையே செருகியிருக்கிறார்.
காதலின் நேர்த்தியை செயலில் வடித்துக்
காட்டும் இன்னொரு இடம். முதலிரவில் கண்ணகியில் தோளில் சாய்ந்து, கோவலன் ஐந்தாம்
வேதம் ஓதுகிறான்: “பெண்ணே! உன்னை மலையிடைப் பிறவாத மணி என்பேனா? கடலிடைப் பிறவாத
அமிழ்து என்பேனா? யாழிடைப் பிறவாத இசை என்பேனா? நீண்ட கருங்கூந்தலை உடைய உன்னை---“
என்று அந்த 'நின்னை’யில் காதல் நாயகனின் பாதி வர்ணிப்பிலேயே காதல் வசனத்தை வெட்டி இளங்கோ
புதுமை செய்கிறார். நின்னை?.. காதலியின் கடைக்கண் பார்வையில் அந்தப் பேரழகின் முன்னே தடுமாறிய
பேச்சு, செயலாய் நீளப் போகிறது என்று நமக்குத் தெரிகிறது. ..
சிலப்பதிகாரத்தை நயம் பாராட்டுதல் என்று ஆரம்பித்தால் அதற்கு எல்லையே
இல்லாமல் போகும். அந்தக் காப்பியத்தின் திருப்பிய பக்கமெல்லாம் தமிழ்
கொஞ்சுகிறது. அந்நாளைய தமிழர் பண்பாட்டின்
விழுமியங்களை ஒவ்வொன்றாக எடுத்து கடைப்பரப்பிய அழ்கு காணக்கிடைக்கிறது. .
இன்றைய நாவலான அன்றைய அந்தக்
காப்பியத்தின் கட்டுக்கோப்பான அமைப்புகள் நம்மைக் கவருகின்றன. மூன்று காண்டங்களில்
முப்பது காதைகளை நகரும் கதைப்போக்கிற்கு வெகுப்பொருத்தமாக அமைக்கிறார். மூன்று
காண்டங்களுக்கும் அவர் பெயர் கொடுத்த பெருமையே அந்நாளைய தமிழகத்தின்
மூவேந்தர்களின் தலைநகரங்களுக்கான பெருமையாகி எந்த வேற்றுமையும் இன்றி
மூவேந்தர்களுக்கிடையேயான ஒன்றுமைப் பதாகையை
உயரத் தூக்கிப் பிடிக்கிறது.
புகார் காண்டத்தில் காப்பியத் தலைவன்-- தலைவியின் கல்யாணக் கோலம், அவர்களின் குடும்ப வாழ்க்கையின் துவக்கம் என்றாகி, வணிக குலத்தின் வாழ்க்கைப்பாட்டிற்கு ஏற்ப கோவலன் மதுரை ஏகி அநியாயமாய் கொலைக்களப்பட்டு ஒன்றைச் சிலம்பை கையிலேந்தி நீதி கேட்ட கண்ணகி மதுரையை எரித்து வஞ்சிக்காண்டதில் கற்பின் தெய்வமாய் காட்சி தருகிறாள்.
புகார் காண்டத்தின் மூன்றாவது காதையான அரங்கேற்றுக் காதையிலேயே தேவமகளிருக்கு எந்தவிதத்திலும் குறைவு படாத மாதவியின் அறிமுகம் கிடைக்கிறது.
அவள் நாட்டிய அரங்கேற்றத்தை அரங்கேற்றும் சாக்கில் ஆடல், பாடல் இலக்கணங்களின் அத்தனை அம்சங்களையும் அலசுகிறார் அடிகளார். கூத்தாசிரியனின் சிறப்பு, நாட்டிய மேடையின்
அமைப்பு, நாடக அரங்கில் வைக்கப்படும் தலைக்கோல், அதனை வழிபடும் மரபு என்று நிறைய
விவரங்களை அறிகிறோம். குழலோசை, யாழிசை,
மத்தள முழவு, ஆமந்திரிகை, குயிலுவம் என்று
இசையில், இசைக்கருவிகளீன் வரிசை, வரிசை கட்டப்படுகிறது.
அந்தி மாலை சிறப்புச் செய் காதையில்
மாதவியின் தாய் சித்திராபதி பரிசிலாக விலை பேசிய ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் மாலையை வாங்கி
மாதவையை உரிமை கொள்கிறான் கோவலன்.
மாதவியுடன் சுகித்திருக்கிறான்.
இந்திர விழவு எடுத்த காதையில் புகார்
நகரின் மருவூர் பாக்கத்தின் காட்சிகள், பட்டினப்பாக்கத்தின் நகர்ச் சிறப்புகள்
எல்லாம் பண்டைய தமிழகத்தின் பிரமிக்க
வைக்கும் வாணிபச் சிறப்பைச் சொல்கின்றன.
இப்படி ஒவ்வொரு காதையிலும் சிலப்பதிகார
காப்பியத்தின் பக்கங்கள் புரட்ட புரட்ட
எத்தனை செய்திகள்! வரிசை கட்டி நிற்கும் வகைவகையான எவ்வளவு விவரக் குறிப்புகள்
என்று வாசிக்கையிலேயே மலைக்கிறோம்.
இத்தனைக்கும் இடையே நமக்கு தெரிய
வருவது என்னவென்றால் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னால் தான் நாவல் இலக்கியம் பற்றி
நாம் தெரிந்து கொண்டோம் என்று சொலவது எவ்வளவு வரலாற்றுப் பிழை என்று தெரிகிறது. செய்யுளும்
உரைந்டையும் விரவிக் கலந்தவாறு உரைந்டை இடையிட்ட செய்யுளாய் இருந்த காப்பிய வடிவு,
செய்யுள் நீங்கிய உரைநடையாய் நாவல் என்று வடிவு கொண்டிருக்கிறது. அவ்வளவு தான். காப்பியம் என்று அழைக்கப்பட்ட
பண்டைய இலக்கிய் வடிவின் அடுத்த மாற்றத்திற்குள்ளான வடிவு தான் இன்றைய நாவல்.
அவ்வளவு தான். இப்படியாக இன்றைய நாவல்
இலக்கியத்திற்கு அன்றே காப்பியம் என்ற வடிவில் கால்கோள் விழா நடந்திருக்கிறது. வடிவம் மட்டுமல்ல,அன்றைய காப்பியங்களில்
ஒரு நாவலுக்கான உள்ளடக்கமும் எவ்வாறு பொருந்தியிருநதன என்பதனை அடுத்துப் பார்ப்போம்.
(தொடரும்)
படங்கள் உதவியோருக்கு நன்றி
படங்கள் உதவியோருக்கு நன்றி