மின் நூல்

Sunday, June 26, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி—16

வைகறைப் பொழுது.

சிவன் கோயில் முரசின் அதிர்வொலி தேசலாகக் கேட்டது.  அதைத் தொடர்ந்து பாண்டியனின் கோட்டை முரசு.   இன்னும் நெருங்க நெருங்க வேதியர் முழக்கும் வேத கோஷங்கள்.. தொடர்ந்து வாள் வீரர் எழுப்பிய முரசமும், யானைகளின் பிளிறலும்,  குதிரைக் கூட்டங்களின் கனைத்தல் இரைச்சலும் அந்தப் பிரதேசத்தையே கலவையான ஒலி அலைகளில் மூழ்கச் செய்தன.
மாமதுரையை நெருங்கி விட்டோம் என்ற உணர்வு அந்த மூவரிலும் உற்சாகமாகக் கொப்பளித்தது.  நடையாய் நடந்து வந்த கால்கள் கெஞ்சின. ‘இன்னும் கொஞ்ச தூரம் தான்; வந்து சேர்ந்து விட்டோம்’ என்று அறிவு கால்களுக்கு ஆதுரம் அளித்து ஆயாசத்தைப் போக்கி உற்சாகமூட்டியது.

வைகை ஆற்றின் வடகரையை நெருங்கிய பொழுது மதுரைத் தென்றல் மனசுக்கு கிளுகிளுப்பூட்டியது. மகிழம், சுரபுன்னை, மருதம், செரித்தி ஆகிய மரங்கள் பாதிரி மரத்தோடு சேர்ந்து குலுங்கி வையை நங்கைக்கு பூவாடை போர்த்தியிருந்தன.  அதைப் பார்த்து, “புனல் ஆறு அல்ல இது பூவாறு!” என்றான் கோவலன். அது கேட்டு கண்ணகி பூவாறு நங்கைக்கு தன் புன்னகையால் பதில் சொன்னாள். நேரப்போகும் துன்பம் வைகை நங்கைக்குத் தெரிந்திருந்தது போலும்.  தன் கண்களைத் துடைத்தாற் போல தன்னிடம் நிறைந்திருந்த நீரை சட்டென்று உள்ளடக்கி நெளிந்தாள்.

குதிரை, சிங்க, வேழ முகங்கள் கொண்ட படகுகளில் பலரும் பயணித்து பெரிய துறை பக்கம் செல்வது தெரிந்தது.  அந்தப் பக்கம் செல்லாது தென்கரைப் பக்கம் தெரிந்த ஒரு மலர்ச் சோலையை மூவரும் அடைந்தனர்.

வானவர் தங்கியிருக்கும் மதுரையை வலமாகச் சுற்றி வந்தால் நல்லது என்று அகழிப்பக்கம் சுற்றி வந்தனர்.  அகழியில் மண்டியிருந்த குவளை, அல்லி, தாமரை போன்ற மலர்களைச் சுற்றி வண்டுகள் ரீங்கரித்த ஒலி கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேரப்போகின்ற துன்பத்தை அறிந்தாற்போன்ற குறிப்பு கொண்டு மலர்களை நெகிழ்த்தின. மதில் மீது கட்டப்பட்ட கொடிகள் காற்றில் அசைந்து படபடத்தது, ‘இந்நகருக்கு வர வேண்டாம்’ என்று அவர்களைத் தம் கைகளால் மறித்துச் சொன்னது போலிருந்தது. அறவொழுக்கம் மிக்க துறவிகள் விரும்பித் தங்கியிருக்கும் புறஞ்சேரியை இப்போதைக்குத் தங்கும் இடமாக அவர்கள் கொண்டனர்.;

றவைகள் துயிலெழுப்பி புலர்ந்த காலைப் பொழுது ரம்யமாக இருந்தது. நெற்றிக்கண் சிவபெருமான், கருடக்கொடி திருமால், கலப்பை ஏந்திய பலராமன், சேவற்கொடியோன் ஆகியோருக்கான சுற்றியிருந்த கோயில்களிலிருந்து புறப்பட்ட தூய வெண்சங்கு ஒலி,. கூடச் சேர்ந்த காலை முரசின் அதிரலோடு ஒன்றரக் கலந்தது.

அந்த நேரத்து கோவலன் கவுந்தி அடிகள் இருக்குமிடம் சென்று அவரைத் தொழுதான்.  “செய்தவத்தீர்!..” என்று அடிகளாரை விளித்தவன் மேற்கொண்டு வார்த்தை வராமல் நெகிழ்ந்தான். “நல்லொழுக்க நெறியிலிருந்து நீங்கியவன் சிறுமையுற்றேன்.  முன்பின் அறிந்திராத இடத்திற்கு துன்பம் தரும் வழியிலே  கண்ணகியை வழிநடத்தி அழைத்து வந்து துன்புறச் செய்து இன்னும் இழிவடைந்தேன்.  அந்தப் பழியெல்லாம் துடைத்து இழந்த வாழ்க்கையைத் திரும்பப்  பெற வேண்டும். அடிகளாரே! இம்மதுரை மாநகரத்து பெருவணிகரை நான் சந்தித்து வரும் வரை இப்பைங்கொடியை தங்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறேன்” என்று பெரிதும் வருந்திச் சொன்னான்..

“முற்பிறவியில் செய்யத் தவறிய நல்வினைக் குறைவால் இப்பிறவியில் இத்துன்பம் என்று தான் கொள்ள வேண்டியதிருக்கிறது..” என்ற கவுந்தி அடிகளார் அயோத்தி ராமன் கதையையும், நளன் கதையையும் நினைவு கொண்டார்.  சீதாராமனோ, சீதை விளையாட விரும்பிக் கேட்ட மாயமானைத் தொடர்து சென்று சீதையைப் பிரிகிறான்.  நளனோ விதி விரட்டக் கானகத்தே காரிருளில் காதலியைக்  கைவிட்டு கட்டிய துண்டோடு தனி ஆளாகிறான்.

‘தங்கள் பாதுகாப்பில் விட்டுச்  செல்கிறேன்’ என்று கோவலனும் இதோ கண்ணகியைப் பிரிகிறானே!  ராமன்—நளன் போலக் கோவலனுக்கும் நேரப் போகிறதோ என்று நம் பதைபதைப்புக் கூடி,  இந்தக் கவுந்தி அடிகளாரும் நேரம்  காலம் தெரியாமல் ‘அந்த இரு’ கதைகளை நினைவு கொள்கிறாரே என்று வாசிக்கும் பொழுதே நமக்கும் எரிச்சலாக வருகிறது.   

சொல்லி வைத்தாற் போல அடிகளாரும் அதே விஷயத்தைத் தான் தொட்டுப் பேசுகிறார். “எல்லாமே வல்வினையின் துன்பம் தான் எனினும், நீ நளன்  போல் அல்லாமல் நல்ல வேளை, இத்தனை அவஸ்தைகளுக்கு இடையேயும் உன் மனைவி உன்னுடன் இருக்கும் பேறு  பெற்றிருக்கிறாய்!.. அதனால் வருந்தாது மதுரை மாநகர் சென்று தங்குவதற்கு நல்ல இடம் பார்த்து வருவாய்!” என்று ஆசிகூறி கோவலனை வழியனுப்பி வைத்தார். இருந்தாலும் ‘உன்  மனைவி உன்னுடன் இருக்கும் பேறு' என்று அவர் அழுத்திச் சொன்னது, அந்தப் பேற்றிற்கும் ஆபத்து வரப்போகிறதோ என்று உறுத்தலாகத் தான் இருக்கிறது.


பாண்டியனின் கோட்டை காவல் கோட்டையாக இருந்தது. கோட்டையைச் சுற்றி நீர்பரப்பு கொண்ட அகழி. கொலை வாளுடன் கோட்டையைக் காத்து நின்றனர் யவனர். யானைக் கூட்டம் கோட்டைக்குள் சென்று வர அமைந்திருந்த சுருக்கை வழியாக யாருக்கும் ஐயம்  ஏற்படாதவாறு உள் நுழைந்து அகநகரை அடைந்தான் கோவலன்.[.

மேல் காற்று உடலை வருடிச் சென்றது.  கொடிகள் அசைகின்ற தெருவில் கடைகழி மகளிர் கூந்தலில் பூச்சூடி தம் அந்நேரக் காதற் செல்வரோடு கலகலத்துக் கொண்டிருந்தனர்.

அரசுக் கூத்தியர் வாழும் வீதி எடுப்பாக இருந்தது. அந்தப் பகுதி வீடுகள் சுட்ட ஓடுகளால் வேயப்படாது பொன் தகடுகளால் வேயப்பட்டிருந்தது. வேத்தியல், பொதுவியல் ஆகிய இருவகைக் கூத்துகளின் இயல்புகளையும் அறிந்தவர்கள்  அவர்கள்.  தாளங்கள், தாளங்கள் சார்ந்த ஏழுவகை தூக்குகள், அவற்றோடு இயந்து இசைக்கும் தோற்கருவிகள், அவற்றின் கூறுபாடுகள் அனைத்தையும் தெரிந்தவர்களாய் அப்பெண்கள் இருந்தார்கள். தலைக்கோல் அரிவையும், பின்பாட்டுப் பாடும் தோரிய மடந்தையும், தலைப்பாட்டுக் கூத்தியும், இடைப்பாட்டுக் கூத்தியும் ஆகிய நால்வகை மரபினரோடு கலந்து நாள்தோறும் ஆயிரத்தெட்டு பொற்கழஞ்சுக்கு குறையாமல் ஈட்டும் பேரழகு கணிகையர் வாழும் இரு  பெரும் வீதிகளைக்  கோவலன் கண்டான்.

இரு சக்கரங்களால் உருட்டப்படும் மூடுவண்டிகள் நிறைந்த, செல்வர்கள் விரும்பும் அங்காடி வீதிகள், நவரத்தின, பொன் கடைவீதிகள், துணிக்கடை வீதி, மிளகு மூட்டைகளும், கூலங்களும் குவிந்து கிடக்க துலாக்கோல், மரக்கால் சகிதமாக வணிகர் நிறைந்திருந்த கூல வீதிகளையும் கோவலன் கண்டான்.

பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும், நாற்சந்திகளும், சதுக்கமும், முடுக்கு வீதிகளும், குறுக்குத் தெருக்களும், செடி கொடிகள் நெடுக்கமாக மண்டியிருந்தமையால் பந்தல் இட்டது போன்ற நிழலோடு நீண்டிருந்த தெருக்களில் அலைந்து திரிந்த  கோவலன் பாண்டியனின் கொடிகள் நிறைந்த மதில் புறத்தே வந்தான்.

கோவலன் அறத்தினைப் பிறருக்கு அருளும் அருளாளர்கள் நிறைந்திருந்த 
புறஞ்சேரிக்குத் திரும்பி  வந்து சேர்ந்த  பொழுது, கவுந்தி அடிகளாரும் அவன் வருகைக்காகக் காத்திருந்த மாதிரித் தெரிந்தது. தான் பார்த்த மதுரை மாநகரின் அழகை ஒவ்வொன்றாக கோவலன் அடிகளாருக்குச்  சொல்லிக் கொண்டிருக்கையில் மாடலன் அந்தக் குடிலின் உள்ளே நுழைந்தார்.

யார் இந்த மாடலன்?...


(தொடரும்)

படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.


  


19 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களது பதிவு நாங்களும் உடன் வருவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

மதுரையின் அழகை கோவலன் சொல்லப்போவதை கேட்க ஆவலாய் இருக்கிறது! அருமை! தொடருங்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அரசுக் கூத்தியர் வாழும் வீதி எடுப்பாக இருந்தது. அந்தப் பகுதி வீடுகள் சுட்ட ஓடுகளால் வேயப்படாது பொன் தகடுகளால் வேயப்பட்டிருந்தது.//

//தலைக்கோல் அரிவையும், பின்பாட்டுப் பாடும் தோரிய மடந்தையும், தலைப்பாட்டுக் கூத்தியும், இடைப்பாட்டுக் கூத்தியும் ஆகிய நால்வகை மரபினரோடு கலந்து நாள்தோறும் ஆயிரத்தெட்டு பொற்கழஞ்சுக்கு குறையாமல் ஈட்டும் பேரழகு கணிகையர் வாழும் இரு பெரும் வீதிகளைக் கோவலன் கண்டான். //

ஆஹா, வர்ணனைகள் மிக அருமை. தொடரட்டும்.

வே.நடனசபாபதி said...

// வைகை ஆற்றின் வடகரையை நெருங்கிய பொழுது மதுரைத் தென்றல் மனசுக்கு கிளுகிளுப்பூட்டியது.
மகிழம், சுரபுன்னை, மருதம், செரித்தி ஆகிய மரங்கள் பாதிரி மரத்தோடு சேர்ந்து குலுங்கி வையை நங்கைக்கு பூவாடை போர்த்தியிருந்தன.//

அப்போது இருந்தது போல் இப்போதும் மதுரையில் நுழையும்போது இயற்கைக் காட்சிகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

‘மதுரை மாநகர் சென்று தங்குவதற்கு நல்ல இடம் பார்த்து வருவாய்” என கவுந்தி அடிகள் சொன்னபடி கோவலன் செய்யவில்லை போல் இருக்கிறதே.

மாடலன் யார் என அறிய தொடர்கிறேன்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

தொடர்ந்து வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, ஐயா.
பெருமையெல்லாம் அடிகளாருக்கேப் போய்ச் சேர வேண்டும். அவ்வளவு அழகாக காப்பியத்தை வடிவமைத்திருக்கிறார்.

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

தொடர் வருகைக்கும் கருத்துக்கும நன்றி, சுரேஷ் சார். தொடர்ந்து வாசித்து த்ங்கள் ஆர்வத்துடனான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ வை.கோ.

மலைப்பெருஞ் சிறப்பின் தலைக்கோல் அரிவையும்
வாரம் பாடும் தோரிய மடந்தையும்
தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பாட்டுக் கூத்தியும்
நால்வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு

-- என்பது பாடல் வரிகள் கோபு சார்!

நாட்டியம், இசை, இசைக்கருவிகள் என்று வகைவகையாய் குறப்பிட்டு விளையாடுகிறார், அடிகளார்! பண்டைய வாழ்க்கை நிலையை காலக்கண்ணாடியாய் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது சிலப்பதிகாரம்.

நீங்கள் அனுபவித்துத் தொடர்ந்து வாசித்து வருவது தொடர்ந்து எழுத உற்சாகத்தைக் கொடுக்கிறது. நன்றி, சார்.

ஜீவி said...

@ வே. நடன்சபாபதி

பண்டைய மதுரையும் இன்றைய மதுரையும்-- நினைத்துப் பார்க்கவே மனம் ஏங்குகிறது.

அன்றைய பாண்டியரின் அரண்மனை இன்று எங்கே போயிற்று என்று கேள்வி மனதைக் குடைகிறது.

'குறிஞ்சி மலர்' நா.பார்த்தசாரதி அவர்கள் தமிழில் மேற்பட்டப்படிப்புக்காக 'பழந்தமிழர் கட்டிடக்கலையும் நகர் அமைப்பும்' என்ற தலைப்பில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்துள்ளார்.
அந்த ஆய்வேட்டில், பண்டைய மதுரையின் அரண்மனை, இன்றைய இன்றைய மதுரையில் காணப்படும் அந்திக்கடை பொட்டலருகே உள்ள கடைவீதியிலிருக்கும் பழைய கோட்டைப் பகுதியாக இருந்திருக்கலாம்' என்று குரிப்பிட்டிருக்கிறார். டாக்டர் பட்டம் இவருக்கு கிடைக்க இரண்டே நாட்கள் இருக்கையில் நா.பா. அவர்கள் காலமானது காலத்தின் சோகம்!

இது மதுரை மாநகர் பற்றிய கோவலனின் கணிப்பு விசிட்! எனக்குக் கூட பொன்-- நவரத்தின கடை வீதியில் அவன் உலாவும் போது, தன்னிடம் இருக்கும் காற்சிலம்பை விற்பது பற்றி விவரம் அறிந்து கொள்ள மாட்டானோ என்று தோன்றியது. அதற்காக அவனின் ஊஈழ்வினை இன்னொரு நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறது போலும்! கோவலன் இன்னொரு நாள் மதுரை நகரின் உள் பகுதிகளுக்குச் செல்லவிருக்கிறான்.

ஒருவிதத்தில் பார்க்கப் போனால், மாடலன் இந்தக் காப்பியத்தின் நிகழ்ச்சிப் போக்குக்கு துணையாயிருந்து தவிர்க்க முடியாத நபராகத் திகழ்கிறார்! இந்தப் பகுதி அடைக்கலக் காதையில் தான் அறிமுகமாகிறார்.

மாடலனின் சிறப்புகள் பற்றி போகப்போக உங்களுக்கே தெரியும்.

தொடர்ந்து வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, ஐயா!

ஸ்ரீராம். said...

கால்களின் கெஞ்சலும், அதற்கு ஓய்வு கொடுத்து விட்டால் அப்புறம் தொடர முடியாத பயணமும் அனுபவிக்கும் ஒன்று. அதுவும் தூரம் தெரியாதபோது நடக்கச் சக்தி இருப்பது போலத் தோன்றும் கால்களுக்கு, இலக்கு நெருங்கி விட்டது என்று தெரிந்தவுடன் வரும் ஓய்வெடுக்கும் அவசரம் இருக்கிறதே...

மதுரையின் சிறப்பைப் படிக்கும்போது சமீபத்து செய்தித் தாளில் மதுரை அருகே பூமிக்கடியில் கிடைத்துக் கொண்டிருக்கும் கட்டடக் கலை அற்புதங்கள் பற்றித் தெரிய வந்திருப்பது நினைவுக்கு வருகிறது.

தி.தமிழ் இளங்கோ said...

தொடர்கின்றேன்.

தி.தமிழ் இளங்கோ said...

அய்யா வணக்கம்! நீங்கள் எழுதி வெளிவந்துள்ள நூல்கள் பற்றிய விவரம் தெரிவிக்க வேண்டுகிறேன். வாங்கி படிக்க உதவியாக இருக்கும்.

sury siva said...

ஆயிரம் பொற்கழஞ்சு ??

கழஞ்சு என்றால் நாணயம் ?

ஆயிரம் பொற்காசு என்றா ?

சுதா.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள். எனக்குக் கூட அந்தப் பகுதியை எழுதும் பொழுது காலகளின் கெஞ்சலை உணர்ந்த தருணங்களை உணர்ந்தேன். ஒரே மூச்சில் நடந்து முடித்து விட வேண்டும். ஓய்விற்காகக் கொஞ்சம் உட்கார்ந்தால் அப்புறம் அடிக்கடி உட்காரத் தோன்றும். அந்த மாதிரியான நேரங்களில் மனசை அறிவு தாஜா பண்ணும் பாருங்கள், அக்கா--தங்கை மாதிரி அறிவுக்கும் மனசுக்கும் எவ்வளவு ஒத்துப்போதல், அதேசம்யத்தில் எத்தனை எதிரும் புதிருமாய் முரண்படுதல்?.. அறிவு, மனசில் எது அக்கா எது தங்கை என்பது உங்கள் யோசனைக்கு.

எனது மறக்கமுடியாத மதுரை அனுபவங்கள் படித்திருக்கிறீர்களா?.. சிறு வயது நினைவுகள். இதே பூவனம் தளத்தில் 'பார்த்தவை படித்தவை' பகுதியில் 4 பகுதிகளாக வாசிக்கக் கிடைக்கும்.

தொடர் வருகைக்கு நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

தொடர்வதற்கு நன்றி, ஐயா.

சில சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு குறு நாவலும் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. இவையெல்லாம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகி விட்டதால் மறுபதிப்பு காணவில்லை. எனக்கும் விருப்பமில்லை. நாம் எழுத்துப் பயிற்சியில் வளர வளர பழசெல்லாம் படித்துப் பார்க்கவே குழந்தைத்தனமாக இருக்கிறது. குற்றம், குறைகள் பளிச்சென்று தெரிகின்றன. இதை இப்படித் திருத்தி எழுதியிருக்கலாமே, அதை அப்படி எழுதியிருக்கலாமே என்று தோன்றும். காலந்தோறும் வாசிப்பு பழக்கமும் மாறி வருவதால் ஒரு காலத்து எழுத்து இப்பொழுது பிடிக்காமலும் போகலாம்.

கைவசம் ஒரு நாவலும், மூன்று குறுநாவல்களும் இன்றைய வாசிப்புக்கு ஏற்ற மாதிரி புத்தக ஆக்கத்திற்கு தயாராக இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பிரசுரிக்க பிரசுரங்கள் தயாரில்லை. (நாவல்கள் எல்லாம் யார் சார் படிக்கறாங்க?..) புதுப்புது விஷயங்களை கட்டுரைகளில் கொண்டுவருவதற்கு இருக்கும் மவுசு நாவல்கள்--குறுநாவல்களுக்கெல்லாம் இல்லை. யார் எழுதினார்கள் என்று பெயர் பார்த்து வாங்காமல புத்தகத் தலைப்பு பார்த்து வாங்குவது கட்டுரைத் தொகுப்புகள் தாம். குறிப்பாக சரித்திர சம்பந்தப்பட்டவைகளுக்கு வாசகர்களிர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆக கட்டுரைத் தொகுதிகள் எழுதுவதில் இப்பொழுது என் கவனம் பதிந்திருக்கிறது.

'கமலி காத்திருக்கிறாள்' என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு. தமிழக அரசு நூலகங்களில்
கிடைக்கும்.

'ஊஞ்சல் உறவுகள்' என்று ஒஒரு சிறுகதைத் தொகுப்பு. (திரு.தமிழ்வானண் தொடங்கிய) மணிமேகலை பிரசுரத்தில் கிடைக்கும்.

அடுத்து இன்றைய 'ந.பி.யிலிருந்து எஸ்.ரா.வரை'-- நீங்களே வாங்கிப் படித்து விட்டீர்கள்.

வருடத்திற்கு இரண்டாவது கட்டுரைத் தொகுப்புகள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் திட்டமிடலும் இருக்கிறது. பார்க்கலாம்.

தங்கள் விசாரிப்புக்கு நன்றி, ஐயா.

ஜீவி said...

@ Sury Siva

ஒரு கழஞ்சு தற்போதைய எடையில் 5.4 கிராமாம்.
ஆக மாதவி பெற்ற 1008 பொற்கழஞ்சு 1784.16 கிராம் ஆகிறது. அதை எட்டால் வகுத்தால் அத்தனை பவுன்.

நூறு பத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறு உயர் பசும்பொன் பெறுவதூம் இம்மாலை..

(- சிலப்பதிகாரம்)

நூறு பத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த --- (நூறு x பத்து + எட்டு = 1008)

சுதா சார்! வாசித்து வருவதற்கு நன்றி.

மோகன்ஜி said...

ஜீவி சார்!

ரொம்பவே தாமதமாய் வந்திருக்கிறேன். வெளிநாடு, உள்நாடு பயணங்களில் வழிக்கே வர இயலவில்லை.

மதுரையை சுற்றிவரும் கோவலன் காணும் யாவையும் அவன் கடைசிமுறையாகப் பாப் போகிறானே எனும் எண்ணம், உங்கள் வர்ணனையின் அழகையும் மீறி அல்லவா மனத்தைக் கவ்வுகிறது? எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து, கொலைக்களப் பட்டவன் இன்னமும் கூட மனம்நெகிழ வைக்கிறானே.... இது எந்தன் தோல்வியா? இல்லை அடிகளாரின் வெற்றியா?இல்லை அவரும் நீங்களுமாய் சேர்ந்து என்னை நெகிழச் செய்து விளையாடுகிறீர்களா?

மாடலன் செய்யப் போவது என்ன?

Geetha Sambasivam said...

மாடலனாக நடித்த நினைவு வந்து போனது! மதுரை பற்றிய வர்ணனை மிக அருமை! இளங்கோ ரசித்தாரோ இல்லையோ நீங்க நன்றாக ரசித்து எழுதி இருக்கிறீர்கள்.

ஜீவி said...

@ மோகன்ஜி

நானும் தாமதமாகத் தான் பின்னூட்டத்திற்கு மறுமொழி அளித்திருக்கிறேன். நடுநடுவே சிஸ்ல விட்டுப்போய் விடுகின்றன. கீதாம்மா உபயத்தில் கண்ணில் பட்டது.

சந்தேகமில்லாமல் பெருமையெல்லாம் அடிகளாருக்கே. சிலம்பைத் தூக்கிக் குலுக்கி ஆட்டுவிப்பவர் அவர். நாம் அவர் தாளகதிக்கேற்ப ஆடுபவர்களாய் ஆகிப் போகிறோம்.

தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

நினைவுகளை மீட்டியதில் எனக்கும் சந்தோஷம். ஆக, ஆண்வேடம் போட்டிருக்கிறீர்கள்.
அந்தக்காலத்தில் ஆண் வேடம், சரித்திர கதை என்றாலே தலையைச் சுற்றிய ஒரு முண்டாசு இருக்குமே! மாடலனுக்கு முண்டாசு கட்டியிருக்க மாட்டார் என்று எண்ணம் ஓடுகிறது.

உங்களுக்குப் பிடித்த மதுரை பிடித்தமாதிரியே வந்திருக்கிறது. ஆசானுக்கு புகார், மதுரை, வஞ்சி வித்தியாசமே இல்லை. தராசுக் கோல் தூக்கிய மாதிரி அந்தந்த இடங்களில் அந்தந்த சிறப்புகளைச் சொல்ல அவர் தயங்கயதே இல்லை.

வாசிப்பு ரசனைக்கு நன்றி.

Related Posts with Thumbnails