மின் நூல்

Saturday, October 29, 2016

சில எழுத்தாளர்களும் சில பத்திரிகைகளும்

 எழுத்துலம்  சார்ந்த ஒரு சுவாரஸ்யமானத்  தொடர்:

பகுதி: 2

ந்தப் பகுதியை எழுத எடுத்துக் கொண்ட பொழுதே எனக்கு அந்த சந்தேகம் இருந்தது.   வழக்கம் போல பதிவைப் படிப்பவர்கள் (அல்லது பார்ப்பவர்கள்)  நிறையப் பேர் இருந்தாலும்  பின்னூட்டம் போட்டுத் தங்கள் கருத்தைச் சொல்லப் போகிறவர்கள்  குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.


இந்தத் தலைப்பிலான சென்ற பதிவைப் படித்தவர்கள் கிட்டத்தட்ட  500 பேர்கள்.  பின்னூட்டங்கள் எட்டே வந்திருக்கின்றன.  ஐநூறில் எட்டு நட்சத்திரங்கள்.  1.6%.   இந்த எட்டில்  ‘அருமை’ போன்ற மொக்கைப் பின்னூட்டத்தை யாரும் போடவில்லை என்பது ஓர் ஆறுதல்.

பின்னூட்டங்கள் வாசிப்பவர்களுடான உரையாடலைத் துவக்கி வைக்கின்றன என்பது உண்மை.  அத்தகைய உரையாடல்களின் மூலம் தான் ஒன்றை  வாசித்ததின் சகல பரிமாணங்களையும் அடைய முடியும் என்பது இணைய வாசிப்புகளில் நமக்குக் கிடைக்கும் செளகரியம்.  இருந்தாலும் 
பின்னூட்டங்களின் எண்ணிக்கை வைத்து பதிவை மதிப்பிட முடியாது  அல்லது பின்னூட்டங்களை எதிர்பார்த்து  விஷயச் செறிவுள்ள பதிவுகளை எழுதாமலும் இருக்க முடியாது..   பத்திரிகை படிக்கும் வாசகர்களிடையே  அந்தப் பத்திரிகைகளில்  படைப்பிலக்கியம் படைப்போரைப் பற்றிய மதிப்பீடுகள், படைப்போருக்கும் அவர்கள் எழுத்துக்களைப் பிரசுரிக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும்  இருக்கும் ஏதோ புரிபடாத சம்பந்தத்தையும் வாசகர் உணர்வில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவுத் தொடரையே எழுதத் துணிந்தேன்.

பத்திரிகைகளுக்கும் படைப்புலகுக்கும்  உண்டான சம்பந்தம் ஒன்றில் ஒன்று கலந்தது.  படைப்பாளர்களின்  படைப்புகளை  வாசிப்போரிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்  மகத்தான பணியைச் செய்பவை பத்திரிகைகள்.   எழுத்து என்பது வாசிப்பவனின்  உணர்வுகளில் செயல்பட்டு அவனிடம் மாற்றங்களை விளைவிக்கும்  சக்தி மிக்க ஆயுதம் என்பதினால்  நல்ல சிந்தனைகளை வாசிப்போர் மனசில்  பதியமிடவும்  அதன் விளைச்சலை மனித மனசுகளின்  பண்பட்ட  முன்னேற்றதுடன் இணைப்பதற்காகவும் படைப்பாளர்களின் ஆக்கபூர்வமான பணிகள் பெரிதும்  எல்லா தேசங்களிலும் உவந்தோதப்படுகின்றன.  பிரஞ்சுப் புரட்சியில் கூட எழுதுகோலின் பணி தான் புரட்சியின் எல்லாச் சிறப்புகளுக்கும் தலைமை வகித்தது. 

எல்லாக் கலைகளும் உணர்வு சம்பந்தப்பட்டவை.   அவைகளின் மதிப்பு என்பது அவற்றின் வினையாற்றலைப் பொருத்தது.   காசு, பணம் தொடர்பில் எடை போட முடியாதது.   அதனால்  படைப்புகளுக்கு  பொருளாதார ரீதியான மதிபீடுகள் நிர்ணயிக்க முடியாதாகையால்  பத்திரிகைகள் எழுதுவோருக்கு ஏதோ ஒரு தொகையை தங்கள் போக்கில் நிர்ணயித்து அவர்களின் படைப்புகளுக்கு சன்மானமாகக்  கொடுக்கின்றன.   தமிழ் பத்திரிகைகளில் ஆனந்தவிகடன்  ஆதிகாலத்திலிருந்தே  இந்த சன்மானம் வழங்குவதை ரொம்பவும் அடக்கத்துடன் தெரியப்படுத்தும் என்பதனையும் இங்கு  குறிப்பிட வேண்டும்.   படைப்புகளைப் பிரசுரிக்க இயலாத நேரத்தும்,
'தாங்கள் அன்புடன் அனுப்பி வைத்திருந்த கதையைப் பிரசுரிக்க இ;யலாமைக்கு வருந்துகிறோம்;  தங்கள் படைப்பின் தரத்தைப் பற்றிய தீர்ப்பாக இதை  எடுத்துக் கொள்ள வேண்டாம்.  தங்கள் படைப்புகளைத்  தொடர்ந்து விகடனுக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்'  என்று எழுதுவோருடனான உறவை நெருக்கத்துடன் பகிர்ந்து  கொள்வார்கள்.  சில பிரபல பத்திரிகைகள் கூட  படைப்பாளியின் படைப்புக்கு ஏதோ ஒரு தொகை கொடுத்து விட்டு அந்தப் படைப்புகளுக்கு உரிமை கோரும் அவலங்களும் தமிழகப் பத்திரிகைகளில் உண்டு.  இத்தனைக்கும் இடையே  வளர்ந்து விட்ட  நிறைய பத்திரிகைகள் படைப்புகளை விஷய தானமாகவே பெறும்  அநியாயங்களும் நடக்கின்றன.  

சிறு பத்திரிகைகளைப் பொறுத்த மட்டில்  பெரும்பாலும் படைப்பாளிகளே ஒரு  இலட்சிய நோக்கில்  ‘தமது’ பத்திரிகையாக  தாம் வெளியிடும் பத்திரிகையை சுவீகரித்து அப்பத்திரிகைகளை  பெரும் பொருளாதார இடிபாடுகளை சமாளித்து   நடத்துகின்றனர்.   அவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு  உன்னத நோக்கத்திற்காக வெளியிடுவதால்  அடுத்த இதழ் வெளிவந்தால் போதும் என்று  நித்ய கண்ட  பூர்ணாயுசில் தடுமாறிக் கொண்டிருப்பார்களே ஆதலால் அவர்கள் யாரிடத்திருந்தும் பொருளாதார சம்பந்த எதிர்பார்ப்புகள்  இருக்க  வழியே இல்லாது போகும்.   தங்கள்  பொருளாதார இழப்பைத் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்ளும் இலட்சியவாதிகள் அவர்கள்.

இப்படி பத்திரிகை உலகம்  என்பது  நிறைய வகைப்பாடுகளைக் கொண்டது.  பத்திரிகை வெளியிடுதல் என்ற வியாபாரத்திற்காக  ஒரு முதலீடை மூலதனமாகக் கொண்டு  அதனை பன்மடங்காக பெருக்குவதற்கான  வியாபாரம் இது.   ஒரு விலைக்காக விற்பனை செய்யப்படும் சரக்கு.  என்னதான் வியாபாரம் என்று வந்து விட்டாலும்,  மனித மேன்மைக்கும் அவனது மேலான உணர்வுகளுக்கும் தீனி போட வேண்டிய  வியாபாரம்  என்று வந்து விட்டதினால்   சில தார்மீக நெறிகளுக்கு உட்பட்டதாக இந்த வியாபாரம் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு  விற்பனை செய்வோர், விலை கொடுத்து வாங்குவோர் என்று எல்லா மட்டங்களிலும்   உண்டு.

விற்பனை என்று வந்து விட்டாலே  அதனை வாங்குவோர் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப  இருக்க வேண்டும் என்பதனை நிச்சயப்படுத்த வேண்டியதாகி விடுகிறது.   இல்லையென்றால்  இழப்பைச் சந்திக்க வேண்டும்.   கற்பனை சம்பந்தப்பட்ட உலகம் இதுவென்றாலும்  எல்லா மட்டங்களிலும் கற்பனையாகவே இருந்து விட முடியாது.  சரியாகச் சொல்லப் போனால், கதைப்  பத்திரிகை உலகம் என்பது  நிஜ உலக நிதர்சனத்தில் கற்பனை உலக நடவடிக்கைகளில் ஈடுபடுவது.

கதாசிரியர்களின் படைப்புகள் கற்பனையாக இருக்கலாம்.  அனால் அந்தக் கற்பனைகளை விலை வைத்து விற்கும் விஷயங்களில் கற்பனையாக இருக்க முடியாது.   தயாரிப்பு,  விளம்பரம், மக்கள் கையில் கொண்டு போய்ச் சேர்த்தல்,  அப்படிக் கொண்டு போய்ச் சேர்ப்பதில்  இருக்கும் இடை  நிலை சமாச்சாரங்கள் என்ற ஏகப்பட்ட  நிஜங்களின் மத்தியில் தான் இந்தக் கற்பனை வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது. 

வெத்துக் கற்பனை என்று  இல்லாமல்  மனித குல மேன்மைக்கான நல்ல விஷயங்களை  நோக்கியப் பயணமாக அந்த கற்பனை செயல்படும் பொழுது   அதுவே  இலட்சியமாகிறது.   அந்த  மாதிரியான  இலட்சியங்களுக்குத் தாலி கட்டிக் கொண்டவர்கள் தங்களுக்கான  இலட்சியங்களில்  தங்கள் எழுத்தைப் பதிக்கின்றனர்.  அதனால் தான் நல்ல இலக்கியங்களைப் படைப்போருக்கும்,  அவற்றை வாசிப்போருக்கும் இடையே  நேரிடையான அறிமுகம், பார்த்துப் பேசுதல் போன்ற நடைமுறை சடங்குகளுக்கு அவசியமில்லாமலேயே ஒரு பந்தம் ஏற்பட்டுப் போகிறது.

பத்திரிகைகள்-- எழுத்தாளர்கள்-- வாசகர்கள் என்ற முக்கூட்டில், தொடர்ந்து தமிழின் சில பிரபல எழுத்தாளர்களையும் அவர்களுக்கென்று அமைந்து போன பத்திரிகைகளையும் தொடர்ந்து பார்ப்போம்.


(தொடரும்)


நண்பர்கள் அனைவுருக்கும்  தீபாவளி  வாழ்த்துக்கள்..


13 comments:

ஸ்ரீராம். said...

எத்தனை பத்திரிகைகளில் வாசகர் கடிதங்கள் சுவையாக இருந்திருக்கின்றன? குறிப்பிட்ட நவீனத்தையோ, கட்டுரையையோ தனித்து பாராட்டுபவர்கள் உண்டு. மற்றபடி, வாசக கடிதங்கள் கூட பெரும்பான்மைப் பத்திரிகைகளில் தன் பெயர் வரும் ஆவலுக்காக எழுதப் படுபவைதான்!

கோமதி அரசு said...

நல்ல இலக்கியங்களைப் படைப்போருக்கும், அவற்றை வாசிப்போருக்கும் இடையே நேரிடையான அறிமுகம், பார்த்துப் பேசுதல் போன்ற நடைமுறை சடங்குகளுக்கு அவசியமில்லாமலேயே ஒரு பந்தம் ஏற்பட்டுப் போகிறது.//

வாசிப்போர் தங்கள் விருப்பம், எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றமாதிரி எழுதும் படைப்போரை நாடுகிறார்கள். அதைமீறி அவர்கள் வேறு எதுவும் எதிர்பார்ப்பது இல்லை.
என்பது உண்மைதான்.

G.M Balasubramaniam said...

@ பத்திரிக்கை உலகின் அனுபவங்கள் கொண்ட உங்கள் கருத்துகள் ஏற்புடையதே. பத்திரிகைகளின் இலக்கு இரண்டு பிரிவினரை நோக்கியது ஒன்று வயதான வர்கள் பழமைகளில் ஊறியவர்கள் இரண்டு இளைஞர்கள் வயதானவர்களுக்காக மதம் இதிகாசம் சம்பந்தப்பட்ட விஷயஙள். இளைஞர்களுக்காக சினிமாகவர்ச்சி சம்பந்தப்பட்ட எழுத்துகள். இப்போதெல்லாம் இளைஞர்களைக் குறி வைக்கும் பத்திரிகைகள் நிறையவே ஆகி விட்டன. இலக்கியம் சம்பந்த பாக அங்கொன்றும் இங்கொன்றும் சில படைப்புகள் எய்திய குறி தவறாமல் இருக்க.பத்திரிகைகள் படிப்பதை நிறுத்தி நாட்களாகி விட்டது

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பத்திரிகைகளில் வெளீவரும் 'கடிதங்கள்' பகுதி, கேள்வி-பதில் பகுதி இதெற்கெல்லாம் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது. பத்திரிகையின் உள்ளடக்கங்களில் வாசகர்களும் கலந்து கொள்கிற மாதிரியான ஒரு தோற்றம் கொடுப்பதற்கான பகுதி, கடிதங்கள் பகுதி.

வாசகர்களின முழுப்பங்கெடுப்பு அதில் இருப்பதாகச் சொல்ல முடியாது. நீங்கள் வேண்டுமானால் சுருகமமாக இரண்டு மூன்று வரிகளில் தயாரிக்கப்பட்ட ஒரு கடித்தத்தை
நீங்கள் விரும்பும் பத்திரிகைக்கு அனுப்பி வையுங்கள். அதன் மூலம் சோதித்துக் கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் ஒரு கார்டு வாங்கி எழுதி பத்திரிகைக்குப் போட வேண்டும் என்று யாருக்குப் பொறுமை இருக்கிறது, சொல்லுங்கள். அந்த ஆர்வம் எல்லாம் இருந்ததெல்லாம் வேறொரு காலம்.

பத்திரிகையில் எது பிரசுரமானாலும் அதன் ஆயுள் ஒரு வாரக் காலம் தான். எந்தவிதத்தில் பார்க்கப் போனாலும் இணைய எழுத்து, தி பெஸ்ட்.

எழுதுபவனுக்கு தனக்குத் தானே ஆன அங்கீகாரம் தான் முக்கியம். உங்களைத் தாண்டி இன்னொரு அங்கீர்காரத்தை எதிரிப்பாக்கும் பொழுது எதையும் ஆத்மார்த்தமாக
உருப்படியாகச் செய்ய முடியாது. அந்த அங்கீகாரத்திற்காக உங்களையே விரோதித்துக் கொண்டு பொய்யாவானும் எதையாவது செய்ய வேண்டியிருக்கும். பிரசுரமாகும் ஆயிரக்கணக்கான அங்கீகாரத்திற்காக ஏங்கியவைகளில் இதுவும் ஒன்று என்று சேர்ந்து போகும். அவ்வளவு தான்.

ஜீவி said...

@ கோமதி அரசு

தங்கள் விருப்பம் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி எழுத்து என்பது மாதிரி இல்லாமல் பலவற்றில் நம் விருப்பத்தை மட்டும் வாசித்து விட்டு வாசித்ததை கடாசி எறியும் மனநிலை தான் இப்பொழுது.

வாரபலன், ஒரு பக்க கதை, சினிமாச் செய்திகள், ஜோக், வேண்டா வெறுப்பாக சிறுகதைப் புரட்டல், அரசியல் செய்திகள், கிசுகிசு என்று அந்த நேரத்திற்கு மனம் பதிவதில் ஒரு பார்வை பார்த்து விட்டு அடுத்த நிமிடமே வாசித்ததை மறந்து போய் தன் வேலையில் ஈடுபடும் வாழ்க்கை அழைக்கிற காலம் இது. வாசிப்பு என்பது ஒரு டைம்பாஸாகவும் மாறிவிட்டது.

இந்த வாழ்க்கைக்கு ஏற்பவான ஆக்கபூர்வமாக ஞானத்தைத் தரக்கூடிய எதுவுமே இல்லாத பத்திரிகைச் சூழல் கொண்ட காலமும் இது தான்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

வாசிப்பில் வயதானவர் ரசனை, இளையோர் ரசனை என்று பிரித்துப் பார்க்க முடியாத காலமும் இதுவே. அதனால் இன்றைய பத்திரிகை உலகம் அதையெல்லாம் பற்றி ரொம்பவும் அலட்டிக் கொள்வதும் இல்லை.

வார, மாத இதழ்களை என்ன-- எதையும் ஆழ்ந்து வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. வாசிப்பது புரட்டிப் பார்ப்பதாக ஆகியிருக்கிறது. அப்படிப் புரட்டிப் பார்க்கும் பொழுது பளிச்சென்று தெரிகிற மாதிரி தலைப்பிட்டு ஏகதேசமாக எல்லாருக்கும் பிடித்த அயிட்டங்களாக அச்சடித்துப் பரிமாறுகிறார்கள். அவரவர்களுக்கு பிடித்தது அல்லது வேண்டிய தகவல் ஏதோ ஒன்று அதில் இருக்க வேண்டும் என்பது தான் விற்பனையின் ரகசியம் அல்லது சூட்சுமம். அதை வெற்றிகரமாகச் செய்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். சினிமா, அரசியல் விஷயங்கள் தூக்கலாகத் தெரிவதற்குக் காரணம் இந்த இரண்டையும் கவர் பண்ணினால் கிட்டத்தட்ட 70% வாசிப்பவர்களை ரீச் பண்ணி விடலாம் என்று இதழ்கள் உலகம் பலமாக நம்புகிறது. அந்த நம்பலை தொடர்ந்து உட்சபட்சத்தில் வைத்துக் கொள்ளவும் பாடுபடுகிறது.

இன்னொரு பக்கம் சரித்திர நிகழ்வுகள், அரிய விஷயங்கள் பற்றிய அறிவு, பன்னாட்டு இலக்கிய அறிமுகங்கள், நம் நாட்டு இலக்கியங்கள், நாடுகளின் பழம்பெருமை, சங்க இலக்கியங்கள் என்று வகைதொகையில்லாமல் விசேஷ கவனம் பெற வேண்டிய அத்தனை விஷயங்களும் தனிப்பட்ட நூல்களாக வெளிவந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் ஆர்வமாக வாசிக்கப்பட்டும் வருகின்றன என்பது ஆறுதலான செய்தி.

எது எப்படியிருந்தாலும் நாம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அறிவார்ந்த உண்மை ஆதலால் வாசிப்புப் பழக்கம் உள்ளோர்-- அது குப்பையாக இருக்கட்டுமே-- வாசிப்பை நிறுத்துவது என்பது நிகழ்வுலக வாசல்கதவை அடைத்தது போலாகும்! நாளும் நாளும் எதையாவது தெரிந்து கொள்வதைச் சுற்றி நம் தகவலுலகம் வளர்ந்து வருவதும் உண்மை.

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, ஜிஎம்பீ சார்.
G.M Balasubramaniam said...

பத்திரிகைகள் படிப்பதை நிறுத்த இன்னொரு காரணமும் இருக்கிறதுபார்வை சம்பந்தப் பட்டது ஒரு காலத்தில் எந்த எழுத்தானாலும் அது வெறும் ட்ராஷாக இருந்தாலும் படித்து வந்த வொரேஷியஸ் ரீடர் நான்

கீதமஞ்சரி said...

படைப்புலக வகைப்பாடுகள் குறித்த தங்கள் ஆய்வும் சிந்தனையும் வியக்கவைக்கிறது.

\\இத்தனைக்கும் இடையே வளர்ந்து விட்ட நிறைய பத்திரிகைகள் படைப்புகளை விஷய தானமாகவே பெறும் அநியாயங்களும் நடக்கின்றன. \\ என்னுடைய படைப்புகள் சில, பிரபல வெகுஜனப் பத்திரிகைகள் சிலவற்றில் இப்படி விஷயதானமாகப் பெறப்பட்டபோது எழுந்த ஆதங்கம் இன்றைய உங்கள் பதிவால் அகன்றது. உலகப் பொதுநடைமுறையைப் புரியவைத்தீர்கள். நன்றி ஜீவி சார்.

வே.நடனசபாபதி said...

//சில பிரபல பத்திரிகைகள் கூட படைப்பாளியின் படைப்புக்கு ஏதோ ஒரு தொகை கொடுத்து விட்டு அந்தப் படைப்புகளுக்கு உரிமை கோரும் அவலங்களும் தமிழகப் பத்திரிகைகளில் உண்டு.//
நீங்கள் சொல்வது சரியே. ஒரு பிரபல வார இதழ் அந்த இதழில் துணை ஆசிரியராக இருந்தவருடைய புகழ் வாய்ந்த தொடர்கதைகளை அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகியும் கூட, நூலாக வெளியிட அந்த வார இதழ் அனுமதி வழங்கவில்லை. நல்லவேளையாக தற்போது அவைகள் நூலாக வெளிவந்துள்ளன. எனக்கென்னவோ இன்னும் தமிழ் பத்திரிக்கைகளில் படைப்பாளிகள் சரியாக அங்கீகரிக்கப்படவில்லையோ என்ற ஐயம் உண்டு.

ஜீவி said...

@ ஜிஎம்பீ (2)

தாங்கள் சொல்வது புரிகிறது. நானும் எழுத்துக்கள் சரியாகத் தெரியாத அவதியில் அவஸ்தைப்படுவதால் நீங்கள் சொல்வதை உணரவும் முடிகிறது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,. இந்த வயதில் உங்கள் சிரமம் தெரிகிறது.

ஆனால் எய்திய குறி தவறாமல் இருக்க பத்திரிகை படிப்பதை நிறுத்தியாயிற்று என்று காரணம் சொன்னதால் சொன்னேன். நாம் பதிவர்களாய் இல்லாமல் இருந்தால் இந்த எய்யும் விஷயங்களைப் பற்றியெல்லாம் அதிக அக்கறை கொள்ளாமல் இருக்கலாம்.
வாசிக்கும் எந்த விஷயத்திலும் ஏதோ ஒன்று எழுதுவதற்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு குறிப்பாக வாசிக்க வேண்டியிருக்கிறது. நமக்குத் தெரிந்ததை மட்டும் எழுதிக் கொண்டிருந்தால் நமக்கே சலித்து விடும்.

என்னதான் கோணலாக இருந்தாலும் வார, மாத இதழ்களிலிருந்து நிறைய செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

சமீபத்திய சில இதழ்களில் இன்று வாசித்தவை -- ஒரு லிஸ்ட் தருகிறேன், பாருங்கள்:

1. அல்சரும் இரைப்பை தரும் அலாரங்களும் என்று டாக்டர் கு. கணேசனின் கட்டுரை.
இந்த மருத்துவர் 'குங்குமம்' வார இதழில் 'செகண்ட் ஒப்பீனியன்' என்ற தலைப்பில் மருத்துவக் கட்டுரைகள் எழுதி வருகிறார். வாசிக்க பிரமிப்பாக இருக்கிறது.

2. அதே குங்குமம் இதழில் எழுத்தாளர் ஜெயமோகன் பாரதம் பூராவும் தான் சுற்றுப்பயணம் செய்த அனுபவங்களை நேரில் தரிசிக்கிற உணர்வில் 'முகங்களின் தேசம்' என்று அருமையான ஒரு தொடர் எழுதி வருகிறார்.

3. கல்கி இதழில் தராசு இதழின் ஆசிரியராக இருந்த ஷ்யாம், நேதாஜி பற்றி ஒரு தொடர் எழுதி வருகிறது. நிறைய தெரியாத செய்திகளை அறிந்து கொள்கிற மாதிரியான கட்டுரை இது.

4. வாசிப்பால் இணைந்த இளைஞர்கள் என்று ஒரு கட்டுரை. 'வாசகசாலை' என்று ஒரு குழு பற்றி ஒரு இதழில் படித்தேன். அவர்கள் ஆர்வம் புத்தகங்கள் வாசிப்போருக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

5. சர்ஜிகல் அட்டாக் பற்றி ஒரு சுவாரஸ்யமான கட்டுரை இன்னொரு இதழில்.

இப்படி நிறைய சார். வாசித்து வாசித்தே வாழ்வு போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாசிப்புப் பழக்கம் எது பற்றியும் கருத்துச் சொல்ல, எழுத ஊக்குவிக்கிறது என்பது மட்டும் உண்மை.

ஜீவி said...

@ கீதமஞ்சரி

எழுதியவனின் எழுத்தைப் பிரசுரித்து விட்டு அவனுக்கு ஒரு இலவசப் பிரதியைக் கூட அனுப்பி வைக்காத பத்திரிகைகளும் இருக்கின்றன. வேறு யாராவது பார்த்து விட்டு அல்லது படித்து விட்டுச் சொன்னால் தான் பிரசுரமான விஷயம் கூட எழுதியவருக்கு தெரிகிற நிலை.

இருந்தும் பத்திரிகைப் பிரசுரத்தில் ஒரு அங்கீர்கரிக்கப்பட்ட உணர்வும், பெருமையும் பலருக்கு இருக்கிறது.

தங்க்ள் வருகைக்கும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

//எனக்கென்னவோ இன்னும் தமிழ் பத்திரிக்கைகளில் படைப்பாளிகள் சரியாக அங்கீகரிக்கப்படவில்லையோ என்ற ஐயம் உண்டு. //

அட்டகாசம், சார்! ஐயம் என்ன?... அப்பட்டமான உண்மை அது. ஒவ்வொரு பத்திரிகையின் வளர்ச்சியிலும் எப்படிப்பட்ட எழுத்தாளுமை கொண்டவர்கள் எல்லாம் பங்கெடுத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையை வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால் ஒரு நீண்ட பட்டியலே அதற்காக உண்டு.

இந்தத் தொடரின் மையக் கருத்தே உங்களுக்கு உணர்வாகியிருக்கிறது. மிக்க நன்றி, சார்!

நெல்லைத் தமிழன் said...

உங்களுடைய கட்டுரையும், அது சார்ந்த பின்னூட்டம், அதற்குத் தங்களின் நீண்ட பதில் - எல்லாவற்றையும் ஆர்வத்துடன் படித்தேன்.

"ஆனந்தவிகடன் ஆதிகாலத்திலிருந்தே இந்த சன்மானம் வழங்குவதை ரொம்பவும் அடக்கத்துடன் தெரியப்படுத்தும்" - விகடன் (பாலு சார் காலத்தய) எப்போதும் எழுத்தாளர்களின் உரிமையை மதித்துவந்திருக்கிறது. அது கொஞ்சம் அதிகமான (மற்ற பத்திரிகைகளை ஒப்பிடும்போது) சன்மானமே வழங்கிவந்திருக்கிறது. விஷயதானம் பெற்றதில்லை என்பதுதான் என் நம்பிக்கை. (சிவகுமாரின் தொடருக்குக்கூட, அவருக்குப் பணம் அனுப்பு, அவர் பெற்றுக்கொள்ளாதபோது, 1 ரூ செக் அனுப்பி, அவரது எழுத்துக்கான அவரது உரிமையை உறுதி செய்தது விகடன் என்று படித்துள்ளேன்).

மற்றபடி, வாசகர் கடிதம், நீங்களும் பத்திரிகையோடு இருக்கிறீர்கள் என்ற விஷயம்தான். பத்திரிகைக்கு ஏற்றபடி வாசகர் கடிதங்களும் இருக்கும்.

Related Posts with Thumbnails