மின் நூல்

Monday, January 23, 2017

'எழுத்து' சி.சு. செல்லப்பா

(பொங்கல் திருநாள் வந்தாலே ஜல்லிக்கட்டின் நினைவும் வந்து விடும்.  ஜல்லிக்கட்டை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம்  பழம் பெரும் எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் நினைவும் கூடவே வராமல் இருக்காது.  அவரது 'வாடிவாசல்' நாவல் ஜல்லிக்கட்டு  வீர விளையாட்டை நிலைக்களனானக் கொண்ட தமிழின் குறிப்பிடத்தக்க புதினம்.   எனது  'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' நூலிலிருந்து   அமரர் செல்லப்பாவின் நினைவாக இக்கட்டுரையை எடுத்துப் போட்டிருக்கிறேன்.) 
  து ஒரு எழுத்தாளனின் கதை.

எழுத்தாளன் என்கிற வார்த்தையை அதன் முழு அர்த்தத்தில் இங்கே உபயோகித்திருக்கிறேன். காணும் காட்சிகள் ஏற்படுத்தும் சலனத்தின் தேடலாய் நெஞ்சில் முகிழ்க்கும் கற்பனைப் பின்னல்களை சுவைபடக் கதைகளாய் எழுதுவோர் எழுத்தாளர், சரி. அந்த எழுத்தாளரைப் பற்றியே ஒரு கதையா என்றால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். இது அந்த எழுத்தாளரையும் அவரது எழுத்தைப் பற்றியதுமான கதை. தன் வாழ்க்கையின் சர்வ பரியந்தமும் எழுத்தே என்று எழுத்துக்காக வாழ்ந்த ஒரு எழுத்தாளரின் வாழ்க்கைக் கதை இது. அவர் வீம்புடன், மிகுந்த சிரமத்திற்கிடையே நடத்திய பத்திரிகையின் பெயரும் எழுத்து' என்று அமைந்து போனது தான் அதிசயம்.

அவர் தான் சின்னமனூர் சுப்ரமணியம் செல்லப்பா. மதுரைக்கு அருகிலுள்ள வத்தலகுண்டில் பிறந்தவர். குடும்பத்தின் சொந்த ஊர் பக்கத்து சின்னமனூர். ஆகையால் சி.சு. செல்லப்பா ஆனார். சி.சு. செல்லப்பா மிகவும் நேசித்த பி.எஸ்.ராமையா வத்தலகுண்டுக்காரர் என்கிற நினைவும் மறக்கமுடியாமல் நினைவுக்கு வருகிறது.

செல்லப்பா தேச சுதந்திரத்திற்காக சிறையேகிய செம்மல்களில் ஒருவர். சிறையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த கைதி எண் பொறித்திருந்த பித்தளைத் தகட்டை ரொம்ப நாள் ஒரு நினைவுச்சின்னமாக தன்னோடையே வைத்திருந்தார் என்று படித்திருந்த நினைவு இருக்கிறது. யாருக்காகவோ, யாரின் நிர்பந்தத்தின் பேரிலோ, அல்லது எதையும் எதிர்பார்த்தோ அவர் சிறை செல்லாதினால் அந்த பித்தளைத் தகடே அவரது ஆத்மார்த்த நினைவுச் சின்னமாயிற்று, போலும்.

செல்லப்பாவுக்கு கல்லூரி வாழ்க்கை மதுரையில் அமைந்தது. கல்லூரியில் படிக்கும் பொழுதே தேசத்தந்தையின் மீது ஏற்பட்ட பற்றும் பாசமும் தேசத்தின் அடிமை விலங்கொடிக்கும் சுதந்திரப் போராட்ட வேள்வியில் இவரைக் குதிக்க வைத்தது. பிற்காலத்தில் தனது அந்தப் பழைய நினைவுகளைக் குவித்து 'சுதந்திர தாகம்' என்கிற நாவலை எழுதினார்; கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு பக்கங்களை மூன்று தொகுதிகளாகக் கொண்டது. பல அரிய செய்திகளை இந்நாவலில் நம்முடன் செல்லப்பா பகிர்ந்து கொள்கிறார்.

எழுத்தாளர் மெளனி அடிக்கடி சொல்கிற மாதிரி, அதுவும் ஒரு தற்செயலான நிகழ்வு தான். சுதேசமித்திரன் தீபாவளி மலர் ஒன்றில் செல்லப்பா அந்நாளைய தமிழ்ச் சிறுகதைகளின் சுணக்கம் குறித்து ஒரு கட்டுரை எழுதப் போக, அது பற்றிய உரத்த சிந்தனையாய் ஒரு விவாதகளம் உருவாயிற்று. அந்த விவாதத்திற்கு பதில் சொல்லும் விதமாக, எந்தப் பொருளாதார வசதியுமற்ற செல்லப்பா மனத்தில் ஏற்பட்ட ஒரு துணிவில் மனைவியின் கழுத்து நகையை அடகு வைத்து, ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கிறார். கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்கிற கதைதான் இது. இருந்தும் வழக்கமாகத் தனக்கு இருக்கும் உறுதி கலந்த துணிச்சலில் இந்தக் காரியத்தைச் செய்கிறார் செல்லப்பா. அப்படி அவர் ஆரம்பித்த பத்திரிகை தான் 'எழுத்து'.

1959 ஜனவரியில் திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து 'எழுத்து'வின் முதல் இதழ் வெளிவந்தது. அட்டையில் 'புதுமை இலக்கிய மாத ஏடு' என்று அச்சிட்ட அறிமுகத்தோடு, தலையங்கத்தில், ' இலக்கிய அபிப்ராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களுக்குக் களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத் தரமான புதுச் சோதனைகளுக்கு எழுத்து இடம் தரும்' என்கிற பிரகடனத்துடன் 'எழுத்து' வெளிவந்தது. முக்கியமாக ஆக்கபூர்வமான இலக்கிய விமரிசனங்களுக்கு, சிறுகதைகளுக்கு என்று குறிப்பிட்ட துவக்கம் கொண்ட எழுத்து, ந.பிச்சமூர்த்தியின் 'பெட்டிக்கடை நாரணன்' புதுக்கவிதையில் ஆரம்பித்து அதுவே எதிர்பாராத திசையில் பயணித்து புதுக்கவிதைகளுக்கு நிலைக்களனாக வும் ஆயிற்று. ஒவ்வொரு மாதமும் மிகுந்த சிரமத்திற்கிடையே 'எழுத்து' பத்திரிகையை சி.சு. செல்லப்பா வெளியிட்டு வந்தாலும், ஒரு துணிச்சலுடன் 'எழுத்து'வின் வெளியீடுகளுக்காக ஒரு பதிப்பகத்தையும் தொடங்கிய அதிசயத்தையும் செய்கிறார் அவர். தமிழின் முதல் புதுக்கவிதை நூலான பிச்சமுர்த்தியின் 'காட்டு வாத்து' இந்தப் பதிப்பகத்தின் மூலம் தான் வெளிவந்தது. பிரசுரமான 'எழுத்து' பிரதிகளை தானே சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து இலக்கிய ஆர்வலர்க்கிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்திய செல்லப்பாவின் பணி பிரமிக்கத்தக்கது. கல்லூரிகளின் படிகளேறினார்; மாணவர்களிடையே தமிழ்ச் சிறுகதை, கவிதை, கட்டுரை என்று கொண்டு போய்ச் சேர்த்தார். எஸ். வைத்தீஸ்வரன், சி. மணி, ந.முத்துசாமி, பிரமிள், தர்மு சிவராமு, வெங்கட் சாமிநாதன் -- என்று பலரின் அறிமுகம் 'எழுத்து'வின் மூலமாகத் தான் கிட்டியது. டி.கே.துரைஸ்வாமி (நகுலன்) சுந்தர ராமசாமி (பசுவய்யா), க.நா.சு., ரா.ஸ்ரீ.தேசிகன், க. கைலாசபதி, கிருஷ்ணன் நம்பி என்று எல்லோரும் 'எழுத்து'வில் எழுதினர். எல்லோரையும் எழுத வைத்து படைதிரட்டிய பெருமை செல்லப்பாவுக்காயிற்று.

சி.சு. செல்லப்பா என்றால் சடாரென்று வெகு எளிமையான அவரின் தோற்றம் தான் முதலில் நினைவுக்கு வரும்; அதைத்தொடர்ந்து அவரது 'வாடிவாசல்' குறுநாவல் மனத்தில் பளீரிட்டு, மதுரை பக்க 'ஜல்லிக்கட்டு' வீரவிளையாட்டு பற்றிய நினைப்புகள் நினைவில் தேங்கிச் சிலிர்க்கச் செய்யும். எல்லா விளையாட்டுகளை யும் போலவே இந்த விளையாட்டும் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாதபடி மனிதனும், மிருகமும் என்று ஆன விளையாட்டு இது. இதில் தான் எத்தனை நெறிமுறைகள் என்று யோசிக்கத் தோன்றும். எல்லாவற்றிற்கும் நடுவே அந்த காளை அணையும் விளையாட்டுக் களத்தில் நம்மைக் கொண்டு போய் நிறுத்துவார் செல்லப்பா. ஏற்கனவே இரு காளைகளை அடக்கி விட்டாலும், தன் தந்தை அம்புலியைக் காவு கொண்ட காரிக்காளையை புறம் கண்டுவிடவேண்டு மென்பது தான் வாலிபன் பிச்சியின் நோக்கம். அந்தக் காரிக்காளையின் உரிமையாளரான ஜமீன்தார், பிச்சியின் மைத்துனன் மருதன், பிச்சிக்கு நுணுக்கங்களை போதிக்கும் கிழவன் என்று ஒவ்வொருவரின் உணர்வுகளைக் கூறிக்கொண்டே கதையின் விறுவிறுப்பு கூடும். 'பார்த்துடலாம்' என்று பிச்சி கதையின் ஆரம்பத்தில் சொன்ன சொல்லைக் காப்பாற்றியது தான் கதை. 'ஏறு தழுவுதல்' என்னும் பழந்தமிழர் விளையாட்டை இவ்வளவு நுண்மையாய் யாரும் சொன்னதில்லை என்கிற பெருமை பெறுகிறது, 'வாடிவாசல்'.

பதட்டமே கதையாகிப் போன அவரது 'குருவிக்குஞ்சு' கதையைப் பற்றிச் சொல்ல வேண்டும். தனது ஆசை சின்னஞ்சிறு தங்கைக்கு என்று அண்ணன் குருவிக் கூட்டிலிருந்து குருவி இல்லாத நேரம் பார்த்து அதன் குஞ்சை விளையாட்டு காட்ட தூக்கி வந்து விடுகிறான். 'குருவியிடமிருந்து குஞ்சைப் பறிக்கலாகாது; எடுத்த இடத்தில் உடனே வைத்து விட்டு வந்து விடு' என்கிறாள் தாய். இதற்கிடையில் குருவிகள் கூட்டுக்குத் திரும்பி விட்டன. குஞ்சைக் காணாது அவை பதறுகின்றன. அம்மா சொல்படி குஞ்சை எடுத்த இடத்தில் வைக்க வந்தவனது கையில் இருக்கும் குஞ்சையும் அவை பார்த்து விடுகின்றன.. இவனுக்கோ பத்திரமாக குஞ்சை எப்படி வைப்பதுஎன்கிற பதட்டம்' என்று இனிமேல் என்ன நடக்கப் போகிறதோ என்கிற படிப்பவரின் எதிர்பார்ப்பைக் குறிவைத்து கதையை நகர்த்திக் கொண்டு போவார் செல்லப்பா.

கணவனை இழந்த ஒரு அபலைப் பெண்ணின் மன உளைச்சல்களைப் பற்றிப் பேசும் 'ஜீவனாம்சம்' நாவல், அதை எழுதிய முறைக்காக புதுமுயற்சியாக செல்லப்பாவை பாராட்டத் தோன்றும். செல்லப்பாவின் முதல் சிறுகதை சங்கு சுப்ரமணியன் அவர்கள் ஆசிரியராக இருந்த 'சுதந்திர சங்கு' இதழில் பிரசுரமானது. இவரது 'சரசாவின் பொம்மை', 'கைதியின் கர்வம்','மூடி இருந்தது', 'பந்தயம்' போன்ற சிறுகதைகள் சிறப்பானவை. இவரது சிறுகதைகள் ஏழு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. செல்லப்பாவின் படைப்புலகம் தனித்தன்மை வாய்ந்தது. எதையும் கூர்மையாகப் பார்த்த பார்வையும் அதைச் சுவையாகச் சொல்கின்ற நேர்த்தியும் அதிலிருக்கும்.

'எழுத்து' ஆரம்பிப்பதற்கு முன்னால், செல்லப்பா 'தினமணி கதிரி'ல் உதவி ஆசிரியராய் இருந்தார். அப்பொழுது கதிருக்கு துமிலன் தான் ஆசிரியர். முதலில் 'தினமணி கதிர்' தனிப்புத்தமாக இல்லை. 'சுடர்' என்று தினமணி செய்தித்தாளின் பெரியதொரு பக்கத்தை எட்டாக மடித்துக் கொடுக்கிற மாதிரி, ஞாயிற்றுக் கிழமைகளில் தினமணியுடன் தருகிற துணைப்பதிப்பாக இருந்தது. 'சுடரை'க் கதிராக மாற்றியதற்கும் ஆலோசனை சொன்னது செல்லப்பாதான் என்பார்கள். கதிரில் பெற்ற பயிற்சி தான் தனியாக ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கிற துணிச்சலை செல்லப்பாவிற்கு தந்திருக்க வேண்டும்.

செல்லப்பாவுக்கென்று சில தனித்தன்மையான குணங்கள் இருந்தன. செல்லப்பாவை நினைத்தாலே, அவரது குணநலங்கள் நினைவுக்கு வருகிற அளவுக்கு, அத்தகைய குணநலன்களுக்கு உருகொடுத்து செல்லப்பா என்று பெயர் கொடுத்த மாதிரி இருக்கும். வாழ்க்கை நெடுக தன்னை இழந்து விடாமல் இதைக் காப்பாற்றி வந்திருக்கிறார் அவர்.அவருக்கென்று அவருக்குள்ளேயே இறுகிப் போன குணம் ஒன்று உண்டு. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட நேரத்திலும் யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக் கொள்ள அவரது சுயகெளரவம் இடம் கொடுத்ததில்லை. நியாயமாக கிடைத்த விருதுகள் கூட இதில் அடக்கம் என்பது தான் ஆச்சரியம். ராஜராஜன் விருது, அக்னி அட்சரா விருது, இலக்கிய சிந்தனை அங்கீகாரம் என்று எதையும் ஏற்றுக் கொண்டதில்லை. கனடா வாழ் தமிழர்கள் நிறுவிய 'விளக்கு' அமைப்பு மிகவும் வற்புறுத்தி புதுமைப்பித்தன் விருதை வழங்கியபோது ஒரு நிபந்தையுடன் ஏற்றுக் கொண்டார். விருதுக்கான தொகை காசாக வேண்டாமென்றும் தன் புத்தகம் ஒன்றைப் பதிப்பித்துத் தருமாறு அவர் கேட்டுக் கொண்டாராம். அதற்கு இணங்க அவரது 'என் சிறுகதைப் பாணி' நூல் வெளிவந்தது. அவரது காலத்திற்குப் பிறகு தான் அவரது 'சுதந்திர தாகம்' நூலுக்கு சாகித்ய அகாதமியால் விருது கொடுக்க முடிந்திருக்கிறது.

சுறுசுறுப்புக்கும், கடுமையான உழைப்பிற்கும் பேர் பெற்றவர் செல்லப்பா. இவரது 'தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது' முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஓர் அலசல் நூல். அதே மாதிரி தேர்ந்தெடுத்த புதுக்கவிதைகளைத் தொகுத்து 'புதுக்குரல்கள்' என்கிற பெயரில் முதன்முதலாக புதுக்கவிதைகளுக்கான தொகுப்பு நூல் வெளியிட்டவர் அவரே. தமது இறுதிக் காலத்திலும் தளர்வுறாது நினைவுகளைத் திரட்டி நிறைய எழுதியிருக்கிறார். 'எழுத்து' பத்திரிகை பற்றி 'எழுத்துக் களம்' என்னும் நூல் வாரி வாரி நிறைய தகவல்களை வழங்குகிறது. கவிஞர் என்றால் அவருக்கு கடைசி வரை ந.பிச்சமூர்த்தி தான்; 'பிச்சமூர்த்தியின் கவித்துவம்', 'ஊதுவத்திப் புல்' ஆகிய நூல்கள் தமது கவிஞர் நண்பருக்காக செல்லப்பா எழுதினார்.

அதே மாதிரி சிறுகதை என்றால் அவருக்கு பி.எஸ். ராமையாதான். பி.எஸ். ராமையாவின் 400 சிறுகதைகளை அலசி ஆராய்ந்து அது பற்றி அவர் எழுதிய 'ராமையாவின் சிறுகதைக் களம்' என்னும் நூல், அவர் தன் நண்பரின் மேல் வைத்திருந்த பரிவையும் பாசத்தையும் என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.


--  'ந.பிச்சமூர்த்தியிலிருந்து  எஸ்.ரா.  வரை'
     சந்தியா பதிப்பகம்.
     www.sandhyapublications.com

18 comments:

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் நூலில் நீங்கள் எழுதியதை மீண்டும் படித்திட வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

நெல்லைத் தமிழன் said...

நான் கல்லூரிக் காலத்திலிருந்து சி.சு.செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி போன்ற பலரின் பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவர்களின் படைப்புகளைப் படித்ததில்லை. 'வாடிவாசல்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். வாசிக்கிறேன்.

உங்கள் புத்தகமும், நான் வாசிக்கவேண்டிய பட்டியலில் உள்ளது.

இலக்கிய தாகத்துக்காகப் பலர், கைப்பொருள் இழந்து, வாழ்க்கை முழுவதும் உழைத்து கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதும், அந்த இலக்கியவாதிகளுக்குள்ளும் ஏராளமான சர்ச்சைகளும் மன வேற்றுமைகளும் இருந்தன என்பதையும் அறிய மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. எழுத்தாளன் சமூகத்தின் ஆணிவேர் அல்லவா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் கஷ்டப்பட்டு சொந்தமாக அச்சுக்கூடமும் வைத்து 'எழுத்து' என்ற பெயரில் துணிச்சலுடன் ஓர் பத்திரிகை ஆரம்பித்து நடத்தி, அதன் விற்பனைக்காக தானே தன் தலையில் அவற்றை சுமந்துகொண்டு, ஒவ்வொரு பள்ளி / கல்லூரிகளுக்கும் ஏறி, இறங்கி, ஏழ்மையிலும் நேர்மையாக வாழ்ந்துள்ள திரு. சி.சு. செல்லப்பா அவர்களைப் பற்றி மீண்டும் தங்களின் எழுத்துக்களில் இன்று படிக்க நேர்ந்துள்ளது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

ஏற்கனவே என் பதிவினில் http://gopu1949.blogspot.in/2016/03/4.html காட்டியுள்ள அவரின் படத்திற்கும், இங்கு தாங்கள் காட்டியுள்ள படத்திற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன.
நான் காட்டியுள்ளது, ஒருவேளை அவரின் இளமைக் காலத்துப் படமாக இருக்கலாம்.


பகிர்வுக்கு நன்றிகள், ஸார்.

ஸ்ரீராம். said...

சுதந்திர தாகம் நாவலைப் படித்து விடவேண்டுமென்ற தாகம் என் தந்தைக்கு மிக அதிகம் இருந்தது. நிறைய முயற்சித்தும் கடைசி வரை அவருக்கு அது கிடைக்கவே இல்லை.

தினமணிச் சுடர் பார்த்த நினைவு வருகிறது. மடித்த ஒரு சப்ப்ளிமெண்டரி!

வாடிவாசல் எப்போ....தோ படித்தது. அப்பா தனிப்புத்தகமாகவே வாங்கி வைத்திருந்தார். இப்போது அது என்னிடம்தான் இருக்கிறது என்றாலும் 8 பெரிய அட்டைப்பெட்டிகளில் எதில் இருக்கிறது என்று தெரியாது.

G.M Balasubramaniam said...

எழுத்து எனும் பத்திரிக்கையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் தஞ்சாவூர்க் கவிராயரின் எழுத்து என்னும் வலைத்தளம் நினைவுக்கு வந்தது அவரும் ஒரு பத்திரிக்கை மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெளியிடுவதாகத் தெரிகிறது சி சு செல்லப்பாவின் கதைகளைப் படித்திருக்கக் கூடும் கேள்விப்பட்ட பரிச்சயப்பட்ட பேராக இருக்கிறது ஆனால் படித்தவை நினைவில் இல்லை. உங்கள் நூலின் ஒரு பகுதியை இதன் மூலம் படித்து விட்டேன்

வே.நடனசபாபதி said...

ந'.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற தங்களுடைய நூலை திறனாய்வு செய்து திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது வலைப்பதிவில் வெளியிட்டபோது எழுத்து சி.சு.செல்லப்பா அவர்கள் பற்றி கொஞ்சம் அறிந்தேன். தற்போது விரிவாக அறியும் வாய்ப்பைத் தந்திருக்கிறீர்கள்.

விருத்தாசலத்தில் என் அண்ணன் சபாநாயகம் அவர்களோடு தங்கியிருந்து படித்தபோது, அவர் எழுத்து இதழ் ஆரம்பித்த போதே சந்தா கட்டி வாங்கிய இதழ்களை படித்திருக்கிறேன். அந்த கால கட்டத்தில் ஆனந்த விகடன், கல்கி, குமுதம் போன்ற வார இதழ்கள் ஜொலி ஜொலிக்கும் வண்ண அட்டைகளோடு வெளிவந்து வாசகர்களை கவர்ந்திழுத்தபோது, சாதாரண தாட்களில் வெள்ளை அட்டையோடு எந்த வித முகப்பு படங்கள் இல்லாது வெளிவந்ததை பார்த்து வியந்திருக்கிறேன்.

அவருக்கென ஒரு வாசகர் வட்டம் இருந்ததால் தான் அவர் துணிந்து அந்த முயற்சியை எடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். ‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்ற பழமொழிக்கேற்ப திரு சி.சு.செல்லப்பா அவர்கள் யாரிடமும் சுய கௌரவத்தை விட்டு எதையும் பெற்றதில்லை என அறியும்போது பெருமையாக இருக்கிறது.

வறுமையும் பெருமையும் எழுத்தாளர்களோடு ஒட்டிப் பிறந்தது போலும்! தங்களின் பதிவைப்படித்ததும் அவருடைய ‘வாடி வாசல்’ நாவலை படிக்க ஆசை வருகிறது.

தமிழில் அநேக புதிய எழுத்தாளர்கள் வரலாம். ஆனால் இவர் போன்று எழுத்தை நேசித்து அதற்காக தமது சேமிப்பையே செலவிட்ட எழுத்தாளர்கள் இனி வருவார்களா?

நெல்லைத் தமிழன் said...

@ஸ்ரீராம் - "படித்து விடவேண்டுமென்ற தாகம் என் தந்தைக்கு மிக அதிகம் இருந்தது. நிறைய முயற்சித்தும் கடைசி வரை அவருக்கு அது கிடைக்கவே இல்லை" - வாழ்நாளில் நாம் விரும்பும் எல்லாமும் கிடைத்துவிடுவதில்லை. அதற்கான சந்தர்ப்பமும் அமைந்துவிடுவதில்லை. ஒருவேளை, இவர் இவர் இவைகளில் மட்டும்தான் சஞ்சாரம் செய்யமுடியும் என்பதே முன்பே முடிவானதோ.தந்தை ஆசைப்பட்ட ஒன்று நடக்காததை நீங்கள் நினைவுகூர்ந்தது நெகிழ்ச்சியைத் தந்தது. நமக்கு ஆசை இருந்தும், வாய்ப்பு இருந்தும், அதற்கான வசதி இருந்தும் நிறைவேறாத நியாயமான ஆசைகள்தான் எத்தனை எத்தனை. அதேபோன்று ஆசை இருக்கும்போது அது கிடைக்கவிடாத வசதி/வாய்ப்புச் சூழலும், வசதிவாய்ப்பு இருக்கும்போது அவைகளில் ஆசை இல்லாத சூழலும், கிடைக்கும்போது அனுபவிக்கமுடியா சூழலும்...... 'எழுதிச் செல்லும் விதி எழுதி எழுதி மேற் செல்லும்' என்பதை நினைவுகூற வைத்துவிட்டீர்கள்.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

இந்த நூல் இந்த வகையில் புது மாதிரியான நூல். அந்த வகையில் நூலினை வாங்கி ஆதரவு தந்தமைக்கும் இந்த பின்னூட்டத்தை அளித்தமைக்கும் நன்றி, ஐயா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதுவரை படிக்கவில்லை. தற்போது படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். நன்றி.

அருள்மொழிவர்மன் said...

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா பற்றிய அறிமுகம் சிறப்பு! 90களில் பிறந்த தலைமுறையினருக்கு அவரைப் பற்றி அதிகம் பரிட்சையமில்லையோ என்று தோன்றுகிறது. ஆனாலும் அவரது வாடிவாசல் குறுநாவலைப் பற்றிக் கேள்விப்படதுண்டு, வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அந்நாவலை வாசிக்கும் எண்ணமுள்ளது. ஐயாவின் இப்பதிவை வாசித்ததில் அவரைப் பற்றிய நல்லதொரு அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//அந்த இலக்கியவாதிகளுக்குள்ளும் ஏராளமான சர்ச்சைகளும் மன வேற்றுமைகளும் இருந்தன என்பதையும் அறிய மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. //

இலக்கிய சர்ச்சைகள் பெரும்பாலும் இலக்கியத்தின் பெயராலேயே நடக்கும் என்பதால்
அதன் வளர்ச்சிக்கு வரவேற்க வேண்டியவையே.

'கல்கி'யும் புதுமைப்பித்தனும் என்னமாய் சண்டை போட்டிருக்கிறார்கள், தெரியுமா?

க.நா.சு--வும் சி.சு. செல்லப்பாவும் போட்ட சண்டை அந்தக்காலத்தில் ரொம்ப பிரபலம்.

கலை, கலைக்காகவா மக்களுக்காகவா என்ற சண்டை எந்தக் காலத்தும் இருந்து வருவது.

இந்த சண்டை காலத்துக்குக் காலம் சூடு பிடிக்கும். இன்றைய சூழலில் சுத்தமாக மறக்கடித்து மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது.

ஜீவி said...

@ வை.கோ.

எனது 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' நூலுக்கு முதல் வாசகர் நீங்கள் தான் சார்.

புத்தகம் வெளிவந்ததும் அதன் முதல் பிரதியை பதிப்பகத்திலிருந்து உங்களுக்குத் தான் அனுப்பி வைத்திருந்தார்கள். 40 பகுதிகளாக அந்த நூல் பற்றிய உங்கள் ரசனையை உங்கள் தளத்தில் பகிர்ந்து கொண்டதை மறக்கவே முடியாது. நன்றி சொன்னால் கூட உபசார வார்த்தையாகிப் போகும் என்கிற வாஞ்சை அது.

ஆமாம், உங்கள் தளத்தில் அன்று நீங்கள் தேடிப் பிடித்து வெளியிட்டது, செல்லப்பா சாரின் இளமை காலத்துப் படம் தான்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கீதா சாம்பசிவம் அவர்கள் 'சுதந்திர தாகம்' நூலை ஹூஸ்டன் நூலகத்தில் படித்தாராம்.

அதிசயமாய் அந்த நாவல் அசோக் நகர் அரசு நூலகத்தில் காணக்கிடைத்து தான் நானும் வாசித்து மகிழ்ந்தேன்.

'வாடிவாசல்' நூல் இந்தத் தருணாத்துப் பேசப்பட வேண்டிய புத்தகம். புத்தகத் திருவிழாவிலும் கோட்டை விட்டு விட்டார்கள். தமிழர்கள் எத்தனை பேருக்கு அந்த நூலைப் பற்றியும், செல்லப்பாவைப் பற்றியும் தெரிந்திருக்கும் என்றே தெரியவில்லை.

கோமதி அரசு said...

வாடிவாசல் படிக்க ஆவல்.
இந்த நூலைப்பற்றி தெரியாது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நெல்லைத் தமிழரின் நெகிழ்ச்சி தான் எனக்கும். செல்லப்பா பற்றிய யதார்த்தா பெண்ணேஸ்வரனின் முடிவுறாத ஆவணப்படம் ஒன்றி உண்டு.

கீழ்க்கணட சுட்டியைப் பார்த்தால் மனம் நோகும். நெல்லைக்குமான தகவல் இது.

http://pennesan.blogspot.in/2007/11/4.html

அந்நாளைய காளை அணையும் விளையாட்டின் நெறிகளை அறியவாவேனும் செல்லப்பா சாரின் 'வாடிவாசலை' படித்தாக வேண்டும்.

ஸ்ரீராம். said...

சுட்டிக்குச் சென்று அந்த வேதனைக் கட்டுரையைப் படித்தேன்.

இராய செல்லப்பா said...

தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் எவரும் சி.சு.செல்லப்பாவின் இலக்கிய அர்ப்பணிப்பை புறந்தள்ள முடியாது. அவர் உயிரோடிருந்தவரை அவருக்கு சாகித்ய அக்கதெமி விருது கிடைக்காமல் பார்த்துக்கொண்ட புண்ணியவான்களை நான் அறிவேன். அவர்களில் சிலருக்கு அவரது சிபாரிசால் முன்னதாகவே அவ்விருது கிடைத்தது நகைமுரண் தான்.
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

Related Posts with Thumbnails