மின் நூல்

Wednesday, January 24, 2018

றெக்கை கட்டிப் பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்!...

ம்ம தமிழ் பத்திரிகைகளின் இன்றைய நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம்.   சினிமாவையும்,  அரசியலையும் சுவாசமாகக் கொண்டவை.

இருந்தாலும் எதைச் செய்தாலும் சுவாரஸ்யமாகச் செய்வதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தமிழ்ப்  பத்திரிகைக்காரர்கள்.

இன்று காலையிலிருந்து மாலை வரை சில பத்திரிகைகளைப் படிப்பதிலேயே பொழுது போயிற்று.  படித்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இனிமேல் உங்கள் பாடு, அந்தப் பத்திரிகைகள் பாடு.

1.    'பின் காலனியத்துக்கு எதிரான குரல்' என்று தன் கவிதைகளை அடையாளப்படுத்திக்  கொள்ளும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள், மூலதனத்தின் வன்முறைகளைப் பேசுபவை;  காட்சிப் படிமங்களின் வழியே நம்மைப்  பல்வேறு உணர்வு நிலைகளுக்கு ஆட்படுத்துபவை. பூமிப்பந்தின் மீது விரிக்கப்பட்ட வணிகக் கம்பளமாய் உலகமயமாக்கல்,  ஆன்மிக வியாபார மத நிறுவனங்கள், மாண்பற்ற நுகர்வுக் கலாச்சாரம், பெருகி விட்ட அதீத தொழில் நுட்பச் சாகனங்களுக்கிடையேயான நெருக்கடி மிக்க அன்றாடம்,  பாலியல் ஒடுக்கு முறை.. என மனித வாழ்வின் அபத்தங்களை, அரசியலுடனும் அழகியலுடனும் பதிவு செய்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பு,  இந்த ஆண்டின் முக்கியமான ஆக்கம்.

....  பக்கத்து வீட்டுப்  பெரியவர் "எங்க குடும்பப் பத்திரிகை இது.  இப்போலாம் என்ன எழுதறாங்கனே, படிச்சுத் தெரிஞ்சிக்க முடியலே, தம்பி..  உங்களுக்கு புரிஞ்சா,  சொல்லுங்களேன்" என்று  ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் சாதனைகள் பல நிகழ்த்திய   அந்தப் பத்திரிகையின் நடு பக்கம் ஒன்றில் எழுதியிருந்த மேற்கண்ட வாசகங்களை என்னிடம் காட்டினார்.  

படித்துப்  பார்த்து விட்டு, "ஒரு கவிதைத் தொகுப்புக்கு மதிப்பீடு மாதிரி எழுதியிருக்கிறது" என்றேன்.

"என்ன   மதிப்பீடு, தம்பி?..  வாசிச்சா புரியணுமிலே?.. அப்படி என்ன தான்     எழுதியிருக்காங்கன்னு சொல்லுங்களேன்.." என்று அவர் கேட்ட பொழுது தான் வாசித்ததைப் புரிந்து கொள்கிற சிரமம் எனக்குப் புரிந்தது.  "எனக்கும் சரியாப் புரிலே.." என்று அசட்டுச் சிரிப்புடன் கழண்டு கொண்டேன்.

உங்களுக்குப் புரிந்ததை விட்டுத் தள்ளுங்கள்..  எந்தப் பத்திரிகையாக இது இருக்கும் என்றாவது யூகிக்க முடிகிறதா?..


2.     குமுதம் பத்திரிகை 'ரஜினி கட்சிக்குப்  பெயர் சொல்லுங்கள்!  ஒரு லட்சம் பரிசு வெல்லுங்கள்!!'  என்று ஒரு போட்டியே வைத்திருக்கிறது.

ரஜினி மக்கள் கட்சி,  அகில இந்திய மக்கள் கட்சி,  தமிழக மக்கள் கட்சி
என்று அந்த பத்திரிகையே சில மாதிரிப் பெயர்களைக்  கொடுத்து உதவியிருக்கிறது..  எப்படியும் கட்சியின் பெயரிலேயே 'மக்கள்' என்ற வார்த்தை வருமாறு  பெயர் இருக்கும் என்று ஆருடமும் சொல்லியிருக்கிறது.


3.  ரஜினியை பற்றி எழுதிட்டு கமலைப் பற்றிச் சொல்லாமல் இருந்தால் எப்படி?...  

ஆனந்த விகடனில் 'என்னுள் மையம் கொண்ட புயல்'ன்னு கமல்ஹாசன் ஒரு தொடர் எழுதுகிறார்.  

"அரசியல் அறிவிப்புக்கு என்னென்ன மாதிரியான எதிர்வினைகள் வருகின்றன?" என்கிறார்கள் என்று  குறிப்பிட்டு விட்டு அவர் மகள் ஸ்ருதி கேட்டவை என்று அப்பாவுக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலைச் சொல்கிறார்:

"அப்ப, அப்பா என்ன ஆவார்?" என்றாராம்  ஸ்ருதி..

"அவர் அப்படியேதாம்மா இருப்பார்.  கொஞ்சம் நரை கூடிட்டா அப்பா இல்லேனு சொல்லிடுவியா?" என்றேன்.   "என்னை உனக்கு  அப்பாவாகத்  தெரியுமா, உலக நாயகனாகத் தெரியுமா?  அதே அப்பாவாகத்தான் எப்பவுமே இருப்பேன்.." என்றதைத் தொடர்ந்து....

தமிழன்னா வேட்டி சட்டையுடன் தான் இருப்பான் என்பது கணியன்  பூங்குன்றானார் காலத்திலிருந்தே சொல்லிச் சொல்லிப் பழகிப்  போய் விட்டது போலும்.

வேட்டி சட்டையுடன் கமலின் போஸ்கள் மூன்று.  இளமை ஊஞ்சலாடுகிறது.

படங்கள்: ஜி.வெங்கட்ராம் என்று போட்டிருந்தது மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்து போனது.

'குமுதம்'  லைஃப்  இணைப்பில்  'நம்ம ஊரு  டைட்டானிக் பயங்கரம்!' என்ற பரபர தொடர்  ஒன்று வருகிறது.

மலையாளத்தில் பி.ஜே. ஆப்ரஹாம்  எந்தக் காலத்திலோ எழுதியதை தமிழில் எந்தக் காலத்திலோ ஹேமா ஆனந்த தீர்த்தன் மொழி மாற்றம் செய்தது.

இதே குமுதத்தில்  இதே தொடர்  'தீப்பிடித்த கப்பலில் அம்மணியும் நானும்' என்று  எந்தக் காலத்திலோ வெளிவந்தது தான்.
                                                                                                                               
இப்ப எழுதறவங்களுக்கு   வாசகர்களைக்  கவர்கிற மாதிரி             சுவாரஸ்யமா எதையும் சொல்லத் தெரியாது போனது தான் ஏற்கனவே வெளிவந்த சரக்கையெல்லாம் இப்படி மடை மாற்றி மீண்டும் பிரசுரிக்கறதுக்குக்  காரணமோ?..

போகட்டும்.   நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க வேண்டாம்.

 தமிழ் எழுத்துலகின் பொற்கால   'பொக்கிஷங்கள்'  இப்படியாவது  வாசிக்கக் கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட முடிகிறதே...  அது போதும்.

சின்ன வயசில் நிறைய தீப்பெட்டி லேபிள்களை சேகரித்திருக்கிறேன்.
அந்த வயதில் அதெல்லாம் ஒரு  பொழுது போக்கு.  லேபிள் சேமிப்புக்காக தீப்பெட்டிக்குக் கூட அலைய வேண்டாம்.   எங்கள் லேபிள் சேர்க்கும் ஆர்வத்தைத் தெரிந்து கொண்டோ என்னவோ  கத்தை கத்தையான வெவ்வேறு தீப்பெட்டி கம்பெனிகளின் லேபிள்களை தனியாக விற்பார்கள்.

குங்குமம் பத்திரிகையில்  தீப்பெட்டிகளை சேகரம் பண்ணும் ரோஹித் காஷ்யாப் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்ட பொழுது எனது சின்ன வயசு அந்த ஞாபகம் தான் வந்தது.

திரு. ரோஹித்துக்கு சொந்த ஊர்  உத்திரப்பிரதேசத்து ஜான்சி கிராமமாம்.
சின்ன வயசில் ஆரம்பித்த தீப்பெட்டி சேகரிக்கும் பழக்கம் இன்றைய 40 வயசிலும் தொடர்கிறதாம்.  வெளிநாடுகளுக்கு போன போது கூட விடாமல் அந்த நாட்டு தீப்பெட்டி அட்டைகளை சேகரித்திருக்கிறார்.  கிட்டத்தட்ட 108  நாடுகளைச் சேர்ந்த 83 ஆயிரம் தீப்பெட்டிகள்  இது வரை சேர்ந்திருக்கிறதாம்.

இந்திய அளவிலே அதிக எண்ணிக்கைலே மேட்ச் பாக்ஸ் கலெக்ட் செய்திருப்பது இவர் தானாம்.  ஒரு மில்லியன் தீ.அட்டைகளைச் சேகரம் பண்ணியிருக்கும் இங்கிலாந்து நாட்டுக்காரர்  ஒருத்தர் தான் இந்த சமாச்சாரத்தில் டாப்பாம்.  அவரோட சாதனையை முறியடிக்கணும்ன்னு தன்னோட இலட்சிய கனவைச் சொல்கிறார் ரோஹித்.

லிம்கா லிம்கா என்று ஒன்றிருக்கிறதல்லவா?..  அது வேறு இவரது கனவுத்தீயை வளர்க்கிறதாம்.  அதற்குப்  பிறகு  இருக்கவே இருக்கிறது கின்னஸ் சாதனை.

விஷ் யூ பெஸ்ட் ஆஃப் லக், மிஸ்டர் ரோஹித்!


படங்கள் உதவியவர்களுக்கு நன்றி.


24 comments:

தனிமரம் said...

நல்ல காலம் நீங்கள் படிக்கும் பத்திரிக்கைகள் எல்லாம் இங்கு கண்ணில் படுவதில்லை தப்பித்தோம்)))

ஸ்ரீராம். said...

1) யவனிகா ஸ்ரீராம் கேள்விப்பட்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களும் பார்த்தேன். வாங்கவில்லை! நடுப்பக்கத்தில் விமர்சனமா? தினமணியில் ஞாயிறுகளில் ஒரு தமிழ்ப்பகுதி வரும். ஆனால் இது என்ன பத்திரிகை என்று தெரியவில்லை.

ஸ்ரீராம். said...

2) மக்கள் என்கிற பெயர் இல்லாமல்தான் கட்சிப்பெயர் வரும் என்பது என் எண்ணம்.

ஸ்ரீராம். said...

3) கமல் பேசுபவையும் பாதி புரியாதுதான் என்றாலும், ஆர் கே நகர் தேர்தல் பற்றிய அவர் எழுத்துகளை மனசார படித்தேன். நாம் சொன்னால் யார் காதிலும் விழாது. அவர் சொன்னது பலபேர் காதிலும் மனதிலும் (வழக்கு போட முனைந்தார்களே) ஏறியிருக்கிறது என்பதும் திருப்தி. ஆனால் அவர் அரசியலுக்கு ஒத்து வரமாட்டார் என்பது என் எண்ணம்.

ஸ்ரீராம். said...

ஹேமா ஆனந்ததீர்த்தன் - பெயர் கேட்டு (படித்து) எத்தனை வருஷமாச்சு!

ஸ்ரீராம். said...

தீப்பெட்டி லேபிள்கள் பற்றி அப்பாதுரை எழுதிய பதிவொன்று நினைவுக்கு வருகிறது. படித்திருக்கிறீர்களோ?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல்வகைச் செய்திகள், ரசிக்கும் வகையில். நன்றி.

G.M Balasubramaniam said...

பத்திரிகைகள் வாசித்துப் பல ஆண்டுகளாகி விட்டதுஎங்கிருந்து யூகிப்பது

வே.நடனசபாபதி said...


முதலில் குறிப்பிட்டுள்ளது எந்த பத்திரிகை என யூகிக்க முடியவில்லை. திரு கமல் அவர்களின் பேச்சு போல் இருந்தது என்று மட்டும் சொல்வேன்.


திரு ரஜினி ஆரம்பிக்க இருக்கும் கட்சிக்கு பெயர் என்னவாக இருந்தாலும் சைக்கிள் சின்னத்தை தங்கள் கட்சிக்கு வேண்டுமென்று கேட்பார் என நினைக்கிறேன். பழையதை மறக்காதவர் என்பதால் பேருந்து சின்னத்தைக் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


திரு கமலின் படங்களை எடுத்தவரின் பெயர் தங்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதியாமல் இருந்திருந்தால் மட்டுமே ஆச்சரியம்!


குமுதம் முன்பூ போல் வாசகர்களைக் கவர முடியவில்லை போலும். அதனால் மீள்பதிவு செய்கிறார்கள் என நினைக்கிறேன்.


நான் கூட நிறைய Stamps சேகரித்து வைத்திருந்தேன். பின்னர் பணிச்சுமை காரணமாக அதில் மேற்கொண்டு ஈடுபாடு கொள்ள இயலவில்லை.


தகவல் கதம்பத்தை இரசித்தேன்!

நெல்லைத் தமிழன் said...

1. விகடனாக இருக்குமா? அவங்கதான் 'செஞ்ச தப்புக்கு பிராயச் சித்தம்'மாதிரி, அப்போ அப்போ, 'இலக்கியவாதிகளுக்கும் சில பக்கங்கள் ஒதுக்குவாங்க.

2. குமுதம் பற்றிய செய்தி. 'எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்' வசனத்தை நினைவுபடுத்தியது.

3. கமலஹாசன் தொடரா? வெரிகுட். நான் அந்தப் பத்திரிகை பக்கமே திரும்பாலிருக்க இன்னும் ஒரு காரணம்.

4. குமுதம் லைஃப். இது எனக்கு தற்போது பிடித்த பத்திரிகை. பழைய சரக்காக இருந்தாலும் இதில் வரும் பெரும்பாலான டாபிக்குகள் இன்டெரெஸ்டிங் ஆக இருக்கு.

5. அது தீப்பெட்டி அட்டைப்படம் சேகரிப்பு இல்லையோ? நானும் சிறிய வயதில் தீப்பெட்டி அட்டைப் படங்களைச் சேகரம் செய்ததும், பிறரிடம் மாற்றிக்கொண்டதும் ஞாபகம் வருது. (என் கலெக்ஷனில் போந்தா கோழி படம் போட்டது, நேராகவும் தலைகீழாகவும் பார்த்தால் மனிதமுகம் தெரிவது போன்றவை இருந்தன). இந்த மாதிரி ஆர்வம் இருப்பவர்களுக்காகவே, அட்டைப் படத்தை மட்டும் தனியாக அச்சடித்து, 25, 50 என்று பாக்கெட்டில் போட்டு விற்பார்கள் (கோவில்பட்டி ப்ரின்ட் என்று சொல்லவும் வேண்டுமோ?). அப்புறம் அந்த ஆர்வம் ஒழிந்தது.

Thulasidharan V Thillaiakathu said...

முதல் அந்த கவிதைத் தொகுப்பு விமர்சனம் ஆனந்த விகடனோ? அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் ஆவி எல்லாம் வாசித்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. யார் வீட்டுக்காவது போகும் போது எப்போதாவது கண்ணில் பட்டால் உண்டு..

குமுதம் எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு ஜீவி அண்ணா அதனால தெரியலை, உங்க பதிவு மூலம் தான் தெரிந்தது. இதுவும் ஆவிக்குச் சொன்னது பொருந்தும். பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது..

தீப்பெட்டி அட்டைப்படம், தீப்பெட்டிகள் எல்லாம் சிறு வ்யதில் சேர்த்ததுண்டு. எக்சேங்க் மேளா எல்லாம் நடக்கும் நண்பர்களுக்குள். தீப்பெட்டிகள் வைத்து நான் பல டிசைங்கள் செய்ததுண்டு சிறு வயதில்...டேபிள், சேர் என்று செய்து யார் வீட்டில் கொலு வைப்பார்களோ அவர்களுக்குக் கொடுப்பது வழக்கம். தீப்பெட்டிகளில் வீடுகள் கூட செய்ததுண்டு..

கட்சிகள் பற்றிச் சொல்லத் தெரியவில்லை என்றாலும் கமலுக்கு அரசியல் ஒத்துவருமா என்று தெரியவில்லை...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

முதல் அந்த கவிதைத் தொகுப்பு விமர்சனம் ஆனந்த விகடனோ? அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் ஆவி எல்லாம் வாசித்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. யார் வீட்டுக்காவது போகும் போது எப்போதாவது கண்ணில் பட்டால் உண்டு..

குமுதம் எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு ஜீவி அண்ணா அதனால தெரியலை, உங்க பதிவு மூலம் தான் தெரிந்தது. இதுவும் ஆவிக்குச் சொன்னது பொருந்தும். பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது..

தீப்பெட்டி அட்டைப்படம், தீப்பெட்டிகள் எல்லாம் சிறு வ்யதில் சேர்த்ததுண்டு. எக்சேங்க் மேளா எல்லாம் நடக்கும் நண்பர்களுக்குள். தீப்பெட்டிகள் வைத்து நான் பல டிசைங்கள் செய்ததுண்டு சிறு வயதில்...டேபிள், சேர் என்று செய்து யார் வீட்டில் கொலு வைப்பார்களோ அவர்களுக்குக் கொடுப்பது வழக்கம். தீப்பெட்டிகளில் வீடுகள் கூட செய்ததுண்டு..

கட்சிகள் பற்றிச் சொல்லத் தெரியவில்லை என்றாலும் கமலுக்கு அரசியல் ஒத்துவருமா என்று தெரியவில்லை...

கீதா

ஜீவி said...

@ தனிமரம்

நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள், தனி மரம்?..

குமுதமும், விகடனும் உலகம் சுற்றும் பத்திரிகைகளாயிற்றே!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நடுப்பக்கம் என்றால் சரியாக நீங்கள் நினைக்கிற பின் போட்டிருக்கும் நடுப்பக்கம் இல்லை.

பத்திரிகையைப் பிரித்தால் ஆரம்பத்திலும், கடைசியிலும் இல்லாத நடுவாந்திர பக்கங்கள்.

கமல் சொன்னது பற்றி நீங்கள் படித்த அதே பத்திரிகை தான். சொல்லப் போனால் அதே இதழ் தான்!

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

//மக்கள் என்கிற பெயர் இல்லாமல்தான் கட்சிப்பெயர் வரும் என்பது என் எண்ணம்.//

போட்டியில் கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கு ஒரு திசை திருப்பலோ?..

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

மனசார படித்ததை வைத்துத் தான் அவர் அரசியலுக்கு ஒத்து வரமாட்டார் என்பது எண்ணம் என்கிறீர்களா?..

இன்னொருத்தர் எப்படி?.. :))

ஜீவி said...

@ ஸ்ரீராம் (4)

அந்தக் கால குமுத எழுத்தாளர்.

ஹேமா ஆனந்த தீர்த்தனைப் பற்றி ஜெமோவிடம் கேட்டால் நிறைய சொல்லுவார். நிறைய எழுதியும் இருக்கிறார். நீங்கள் வேண்டுமானால் கூகுள் சர்ச்சில் பார்த்து படித்தும் விடலாம்.

ஹேமா ஆனந்த தீர்த்தன், ஆர்வி, எல்லார்வி என்று இந்த மூன்று முன்னோடி தமிழ் எழுத்தாளர்களையும் ஒரே சட்டிக்குள் அடைத்து விமர்சித்திருப்பார். மூன்று பேரும் மூன்று விதம். அதுவும் ஆர்வி-- அவருக்கென்று ஒரு தனி நடை உண்டு. வாசகர்களை வாசிக்கறது தெரியாம வாசிக்க வைக்கிற வித்தையை எங்கு கற்றார் என்று ஆச்சரியப்பட வைக்கிற நடை. அந்தக்காலத்தில் அவரிடமிருந்து கற்றதும் நிறைய. நேரிலும் பழக்கமுண்டு. 'கண்ணன்' ஆசிரியர் ஆர்வி என்றால் பிரசித்தம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

துரை சாரின் வழியே தனி வழி. படித்திருக்கிறேன்.

என் சிறு வயதில் தீப்பெட்டி சேகரம் இல்லை; தீப்பெட்டி மேல் பகுதியில் கலர்க்கலராய் லேபிள் ஒட்டியிருப்பார்கள் இல்லையா அது!.. அந்த லேபிள் சேகரம்!

லேபிள்கள் புத்தம் புதுசாக கவரில் அடைத்து விற்பனைக்கு வேறே கிடைக்கும். சிவகாசியில் ஒட்ட வைத்திருந்ததை தள்ளிண்டு வந்துடுவாங்களா, இல்லை, இது ஒரு தனி வியாபாரமா என்று இப்பொழுது நினைக்கத் தோன்றுகிறது.

நினைத்துப் பாருங்கள். இப்படி லேபிள் விற்பனையே, பெட்டி விற்பனையை விட அதிகம் இருந்தால், தீப்பெட்டி விற்பனையையே நிறுத்தி விடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.

தீக்குச்சி தயாரிப்பு, அட்டை, ஒட்டற வேலை எல்லாம் மிச்சம்!..

ஜீவி said...

@ Dr. B.J.

ரசிக்கும்படி என்று சொன்னதற்கு நன்றி, ஐயா.

ஜீவி said...

@ GMB

உங்களுக்கானும் 1 இலக்கமிட்டிருக்கிற நூல் மதிப்பீடு மாதிரி எழுதியிருக்கிற விஷயம் புரிகிறதா, சார்?..

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ வே. நடன சபாபதி.

//திரு கமல் அவர்களின் பேச்சு போல் இருந்தது என்று மட்டும் சொல்வேன். //

:))

//திரு ரஜினி ஆரம்பிக்க இருக்கும் கட்சிக்கு பெயர் என்னவாக இருந்தாலும் சைக்கிள் சின்னத்தை தங்கள் கட்சிக்கு வேண்டுமென்று கேட்பார் என நினைக்கிறேன்.//

எஸ். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். சைக்கிள் சுயேட்சைகள் சின்னங்களில் ஒன்று என்பது கூட சாதகமான அம்சம்.

//குமுதம் முன்பூ போல் வாசகர்களைக் கவர முடியவில்லை போலும். அதனால் மீள்பதிவு செய்கிறார்கள் என நினைக்கிறேன்...//

அந்தக் கால 'அரசு'க்களின் பெருமையும் திறமையும் சொல்லவும் வேண்டுமோ?..

வருகைக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி, ஐயா.

ஜீவி said...

@ நெல்லைத்தமிழன்

// விகடனாக இருக்குமோ?//

கரெக்ட் நெல்லை. சரியான கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.

//அவங்கதான் 'செஞ்ச தப்புக்கு பிராயச் சித்தம்'மாதிரி,//

இதான் புரியலே.

//2. குமுதம் பற்றிய செய்தி. 'எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்' வசனத்தை நினைவுபடுத்தியது.//

விற்பனை தான் ஒரே குறிக்கோள். எதையாவது பரபரப்பாக செய்யணும்ன்னு பாக்கறாங்க.. 'எப்படி இருந்த' காலத்தையும் எட்டிப் பிடிக்க ஏதாவது ஒன்று நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது!

//3. கமலஹாசன் தொடரா? வெரிகுட். நான் அந்தப் பத்திரிகை பக்கமே திரும்பாலிருக்க இன்னும் ஒரு காரணம்.//

ஹியர், ஸ்ரீராம்..

//4. குமுதம் லைஃப். இது எனக்கு தற்போது பிடித்த பத்திரிகை. பழைய சரக்காக இருந்தாலும் இதில் வரும் பெரும்பாலான டாபிக்குகள் இன்டெரெஸ்டிங் ஆக இருக்கு.//

அது தான் பழைய வாசகர்களுக்கும் பத்திரிகைக்கும் இருக்கும் ஒரே பாலம். 'லைஃப்' பெருமையில் குமுதம் மறக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் மெயின் புத்தகத்திற்குள்ளேயே 'லைஃப்'காக சில பக்கங்கள் ஒதுக்கி விடுகிறார்கள். இப்போலாம் எப்பவானும் தான் 'லைஃப்' தனிப் புத்தகம்.


//5. அது தீப்பெட்டி அட்டைப்படம் சேகரிப்பு இல்லையோ? //

கரெக்ட். அதான் லேபிள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். பத்திரிகைக் கட்டுரையில் அந்த தெளிவு இல்லை.

கருத்துப் பகிர்தலுக்கு நன்றி, நெல்லை.KABEER ANBAN said...

//திரு ரஜினி ஆரம்பிக்க இருக்கும் கட்சிக்கு பெயர் என்னவாக இருந்தாலும் சைக்கிள் சின்னத்தை தங்கள் கட்சிக்கு வேண்டுமென்று கேட்பார் என நினைக்கிறேன்.//

அது முலாயம்சிங்-ன் சமாஜ்வாதி கட்சியின் சின்னம் ஆயிற்றே !

இந்த கதம்பத் தொகுப்பு தமிழ்வாணனின் செய்தித் துளிகளை அடிப்படையாகக் கொண்ட கல்கண்டு பத்திரிக்கையை நினைவுப்படுத்துகிறது. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தொடரவும். நன்றி

Related Posts with Thumbnails