மின் நூல்

Monday, February 19, 2018

கடவுள்.. மறுபிறவி.. ஊழிக்காலம்

டாக்டர்!  உயிர், மரணம், ஆத்மா, மறுபிறவி.. போன்ற விஷயங்களைப் பற்றி அறிவியல் உலகம் என்ன மாதிரியான கருத்துக்களை முன் வைக்கிறது?..


மறுக்க முடியாத நிலையான உண்மைகள் (concret facts)  என்று உண்டு.  உங்கள் கேள்விகளில் உள்ள விஷயங்கள் எல்லாம் அரூபமான -- அப்ஸ்ட்ராக்ட் -- விஷயங்கள்.  இவற்றுக்கான விளக்கமும் அப்ஸ்ட்ராக்டாகத் தான் இருக்க முடியும்.  ஓரளவு தர்க்கத்தோடு உண்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்றாலும் நாம் சொல்வதே இறுதி  முடிவல்ல. விவாதத்துக்கு உரியது தான்.

பிரபஞ்சம் (Universal) என்பது ஒன்று தான் என்கிற கருத்து முன்பு நிலவி வந்தது.  இப்போது குறைந்தது பத்துப் பிரபஞ்சங்களாவது இருந்தால் தான் நமது அரிய சூரிய குடும்பம் இவ்வளவு ஒழுங்காக இயங்க முடியும்' என்று கூறுகிறது நவீன பெளதீகம்.

இங்கே தான்  'கடவுள்'  என்கிற கருத்து (கான்செப்ட்)  வருகிறது.

பத்துப் பிரபஞ்சங்கள் என்கிற பிரமாண்டத்தின் முன்னால், பூமி என்கிற சிறு கிரகத்தில் உயிரினங்கள் வந்தது எப்படி?..

வேறு ஏதோ கிரகத்திலிருந்து நம்மை விடச் சக்தி வாய்ந்த சூப்பர் உயிரினம் வந்து தான் பூமியை உருவாக்கியதா?..
                                                                                                                   
'நெபுலா'விலிருந்து சூரியன் பிரிந்து, சூரியனிலிருந்து பூமி பிரிந்தது.  உஷ்ணக் கோளமாக இருந்த பூமி பிறகு வெறும் நீர்ப்பரப்பாக மாறியது.  தொடர்ந்து எல்லாமே ஜடமாக இருந்த நிலையில் ஏதோ ஒரு மூலக்கூறுக்கு மட்டும் உயிர் வந்தது.  அதிலிருந்து நீர்வாழ் உயிரினங்கள் பரிணாமம் கொண்டன.  நீர் அளவு குறைந்து தரைப்பகுதி உருவானவுடன் நீரிலும் நிலத்திலும் வாழும் தவளை போன்ற உயிர்கள் தோன்றின.  பிறகு நிலத்தில் வாழும் உயிர்களுக்கு பழம் பறித்துத் தின்ன கைகள் வளர்ந்தன.  பிற உயிர்களைக் கொன்றாவது தன்னைக் காத்துக் கொள்ள 'தந்திரங்கள்' வந்தன.  இது தான் இன்றைய அறிவியல் கண்ணோட்டம்.

'அந்த முதல் மூலக்கூறுக்கு உயிர் கொடுத்த 'சக்தி' எது?  அதைக் 'கடவுள்' என்று சொல்லலாம்' என்று விஞ்ஞானிகளே ஒப்புக்  கொள்கிறார்கள்.

எலெக்ட்ரான் மிகச் சிறியது.  கண்களால் பார்க்க முடியாதது.  அந்த எலெக்ட்ரான் பல க்வார்க்குகளை உள்ளடக்கியது.  இந்த கிவார்க்கின்  உள்ளே பல க்ளுவான்ஸ் இருக்கின்றன. அவை  தானாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன.  அந்த க்ளுவான்ஸிடம் போய் 'மனிதன் என்று ஒருவன்  இருக்கிறான் என்று சொன்னால் அது ஒப்புக்கொள்ளுமா?..

இதேபோல் நம்மை விட பெரிதான் ஒரு சக்தி இருக்கலாம்.  'தீமை செய்யாதே' என்று பயமுறுத்துவதற்காகவும், 'நன்மை நினை' என்று உபதேசிக்கவும்  அந்த  சக்திக்கு மதவாதிகள் 'கடவுள்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

உலகில் சுமார் 3,50,00 உயிர் வகைகள் இருக்கும் சூழலில் மறுபிறவி என்கிற சிந்தனையை மனிதன் வளர்த்துக்  கொண்டதற்கும் இதே 'நன்மை--தீமை' தான் காரணமாக இருக்க முடியும்.

அறிவியல் பிரகாரம் 'மரணம்' என்பது உயிரின் நிறுத்தம்!

எனில், உயிர் என்பது சூழலை உள்வாங்கிக் கொள்ளுதல், அதற்கேற்ப நடந்து கொள்ளல்,  உயிரோடு இருக்க நடத்துகிற போராட்டம் (Survival Instinct)   தன்னைப் போன்ற உயிரினத்தை உருவாக்குதல் --- இத்தனை தான்.

மேலே சொன்ன நான்கு தவிர சில மனித உயிர்களுக்கு சில அதிகபட்ச சக்திகள் கிடைக்கின்றன.   உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால்  'Psycho Kinesis'  என்கிற அதீத மனோசக்தி.  இதை  வைத்துக்  கொண்டு தான் மாயமான, புதிரான காரியங்களைச் சிலர் செய்கிறார்கள்.  பிக்பென் கடிகாரத்தை ஒரு பெண்  முறைத்துப் பார்த்தே நிறுத்தியது இந்த அடிப்படையில் தான்.

இது போன்ற அதீத சக்திகள் அல்லாமல் சாதாரணமான மனித செயல்பாடுகளையும் மூளை தான் கட்டுப்படுத்துகிறது.  மனிதன்  கம்ப்யூட்டர் என்றால் மூளை தான் ஹார்டுவேர்.  மனம் தான் சாஃப்ட்வேர்.

மூளை அப்படிச் செய்கிற பணி நியாயமானதா என்று பார்ப்பது மனசாட்சி.

இதெற்கெல்லாம் பின்புலமாக இருக்கும் ஈகோவின் உயர்ந்த வடிவத்தை ஆன்மா என்று சொல்லலாம்.   மனித உயிரின் அறிவியல் பெயர் 'ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ்'!..  'எனக்குத் தெரியும், எனக்கு தெரியும் என்பதும் எனக்குத் தெரியும்' என்பது இதற்குப் பெயர்!  இந்த உணர்வு இல்லாத மூளை நோய் நிலை தான்  'ஸ்கீஸோஃப்ரீனியா!  நினைவுத் திறன், அறிவுத் திறன், தீர்மானிக்கும் அறிவு, பிரக்ஞை  இவற்றையெல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து ஆன்மா என்று அழைக்கலாம் என்றால். அந்த ஆன்மா இருக்குமிடம் நம் மூளையின் 'லிம்பிக் சிஸ்டம்'.

மனம் என்பது உடல் சாராதது என்றும் அது மருத்துவ அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த கருத்துகள் மெல்ல மெல்ல காலாவதியாகி வருகின்றன.  'குறிப்பிட்ட வகை மனநோய் இருந்தால் மூளையின், குறிப்பிட்ட இடத்தில் பாதிப்பு இருக்கிறது' என்று சொல்வது வரை அறிவியல் முன்னேறியிருக்கிறது.  சி.டி.ஸ்கான் யுகத்திலிருந்து எம்.ஆர்.ஐ. ஸ்கான், பெட் ஸ்கான்,  ஸ்பெக்ட்,  எம்.ஆர்.ஸ்பெக்ட்ரோஸ்கோபி, அல்ட்ரா ஸ்ட்ரக்சுரல்  ஸ்டடீஸ்  என்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  இன்னும் ஐம்பது வருடங்களுக்குள்  சைக்கியாட்ரி என்ற ஒரு சிறப்புப் பிரிவே  வழக்கொழிந்து போகப்  போகிறது. சைக்காலஜியையும் நரம்பியலோடு சேர்த்து 'காக்னிட்டிவ் நியூராலஜி' என்றே படிப்பு வந்து விட்டது.

எல்லாவற்றையுமே சாதுரியமான  விஞ்ஞான  தர்க்கத்துக்குள் அடக்கி விடலாம் என்று சொன்னால் 'ஊழிக்காலம் வந்து உலகம் அழிந்து விடும்' என்ற கருத்தைக் கூட விளக்க முடியும். 

முழுப்  பிரபஞ்சமும் விரிவடைந்து கொண்டிருப்பதாக அறிவியல் நம்புகிறது.  ஒரு நாளில் எல்லாமே வெடித்துச் சிதறி விடலாம்!..

சூரியக்  கதிர்களின் தீமையை வடிகட்டிக் கொடுக்கும் 'ஓஸோன் படலம்' அங்கங்கே கிழிந்து வருகிறது.  இது ஒரு நாள் ஒட்டு மொத்தமாக உலகை அழித்து விடலாம்.

பூமிக் கிரகம் தனது இயல்பான வெப்பநிலையிலிருந்து குறைந்து வருகிறது. உலகமே அண்டார்டிகா போல பனி மயமாகி, உயிர்கள் வாழ முடியாமல் போய் விடலாம்!..

ஜப்பானில் இப்போது முதியவர்களின் ஜனத்தொகை அதிகமாகவும் குழந்தைப் பிறப்பு குறைவாகவும் இருப்பதாகக்  கணக்கு எடுத்திருக்கிறார்கள்.  அப்படியே மெள்ள மெள்ள இனப்பெருக்கமே நின்று போய் விடலாம்.

இது மாதிரி ஏதாவது ஒன்று தான் ஊழிக்காலம்!  கல்கி அவதாரம்!  யுக முடிவு!


       
              ---  டாக்டர் கே. லோகமுத்துக்கிருஷ்ணன்                      பிரபல நரம்பியல் அறுவை சிகித்சை நிபுணர்

நன்றி:  ஆனந்த விகடன்  பிரசுரம், 'உச்சி  முதல் உள்ளங்கால் வரை' நூல்.









படம் அளித்த அன்பர்களுக்கு நன்றி.

21 comments:

நெல்லைத் தமிழன் said...

அறிவியல்ல இப்போதைக்கு கண்டுபிடிக்காததை, அப்படியே தியரியா சொல்லிடறாங்க என்று நினைக்கறேன். 'கடவுள்', 'ப்ரார்த்தனை', 'எதிர்காலம் பற்றிய நினைவுகள் வருவது', 'ஜோதிடம்', 'கைரேகை' போன்றவற்றை எளிதாகக் கடந்துசெல்ல இயலுமா? எனினும் தியரி ஆச்சர்யமாகத்தான் இருக்கு.

முற்றும் அறிந்த அதிரா said...

வாவ்வ்வ்வ்வ் என்ன ஒரு இன்றஸ்ரிங்கான போஸ்ட்... படிக்க படிக்க சுவாரஸ்யம்...

உலகம் அழியப் போவது உண்மைதான் எனச் சொல்கிறார்கள்.. ஆனா எப்போ நடக்குமோ தெரியாதே.. எனக்கென்னமோ குடும்பத்தோடு அழிஞ்சிட்டால் சந்தோசமே.. இதைப் பார்த்ததும் என் சின்னவயசு நினைவு வந்து விட்டது.. உலக அழிவு பற்றி ஒரு போஸ்ட் போடப்போகிறேன் விரைவில்:)..

ஸ்ரீராம். said...

அந்தக் க்ளூவான்ஸைப் பொறுத்தவரை மனிதன் ஒரு கடவுள்!

புழுவிலிருந்து பூச்சியாக, செடியிலிருந்து செம்மையான மரங்களாக ஒவ்வொன்றும் வளர்மாற்றம் அடையும் நிலையில் மனித வளர்ச்சியே இறுதி என்று எப்படிக் கூறமுடியும்? அடுத்த வளர்ச்சியும் இருக்குமோ?

நெல்லைத் தமிழன் said...

ஜீவி சார்... உங்களுக்கு ஒரு இன்டெரெஸ்டிங் புத்தகம் சொல்றேன். 'ஒரு யோகியின் சுய சரிதை-இமய குருவின் இதய சீடன்' ஆசிரியர் ஸ்ரீ எம் அவர்கள். மஜன்டா பதிப்பகம். மூலம் ஆங்கிலம். தமிழ் மொழிபெயர்ப்பு ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்கு நீங்க எழுதியிருப்பதன் மற்றொரு புறம் தெரியும். கிரி கடைகள்லயும் இந்தப் புத்தகம் பார்த்திருக்கிறேன் (மயிலை).

Thulasidharan V Thillaiakathu said...

ஜீவி அண்ணா மொபைலில் தான் வாசிக்கிறோம் உங்கள் இந்தப் பதிவையும், முந்தைய பதிவுகிவ்ளையும்..ஆழமான, சுவாரஸ்யமான சப்ஜெக்ட்..நெட் சரியாக வந்ததும் கருத்து கருத்து இடுகிறோம்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஜீவி அண்ணா இந்தத் தொடர் உச்சி முதல் உள்ளங்கால் வரை வந்த போது என் மாமனார் சேர்த்து வைத்தார். நானும் மாமனார் வீட்டுக்கு வருகின்ற சமயத்தில் ஒரு சில பகுதிகள் வாசித்ததுண்டு...இப்போது சமீபத்தில் அவரது கலெக்ஷனில் தேடிய போது இது காணவில்லை/. யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள் திரும்ப வரவில்லை...எனக்கு மிகவும் பிடித்த தொடர் வாசிக்காதததை மீண்டும் அதை எல்லாம் வாசிக்கலாமே என்று தேடினேன்.

இதில் பேச நிறையவே இருக்கிறது அண்ணா..// 'குறிப்பிட்ட வகை மனநோய் இருந்தால் மூளையின், குறிப்பிட்ட இடத்தில் பாதிப்பு இருக்கிறது' என்று சொல்வது வரை அறிவியல் முன்னேறியிருக்கிறது. சி.டி.ஸ்கான் யுகத்திலிருந்து எம்.ஆர்.ஐ. ஸ்கான், பெட் ஸ்கான், ஸ்பெக்ட், எம்.ஆர்.ஸ்பெக்ட்ரோஸ்கோபி, அல்ட்ரா ஸ்ட்ரக்சுரல் ஸ்டடீஸ் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஐம்பது வருடங்களுக்குள் சைக்கியாட்ரி என்ற ஒரு சிறப்புப் பிரிவே வழக்கொழிந்து போகப் போகிறது. சைக்காலஜியையும் நரம்பியலோடு சேர்த்து 'காக்னிட்டிவ் நியூராலஜி' என்றே படிப்பு வந்து விட்டது.//

நான் சைக்கியாட்டி சைக்காலஜி புத்தகங்கள் வாசித்த போது அறிந்தது....எல்லாமே மூளையின் செயல்பாட்டில்தானே அந்த மனம் என்பதும் கூட மூளையின் ஒரு பகுதிதான்...அப்படியிருக்க மனநோய்க்கு இந்த மூளைக்குள் நடக்கும் வேதியியல் மாற்றங்கள்தானே காரணம் எனும் போது அப்படி நடக்க மூளையின் ஏதோ ஒரு பகுதி பாதிக்கப்பட்டிருக்கும் என்று தோன்றியதுண்டு,

உங்களுக்கும் தெரிந்திருக்கும், ஸ்பெஷல் குழந்தைகளுக்கு ரொம்பப் பாதிக்கப்படாத குழந்தைகளுக்கு காக்னிட்டிவ் தெராப்பி கொடுக்கப்படுகிறது. காக்னிட்டிவ் பிஹேவியர் தெராப்பி கொடுக்கப்படுகிறது. ஆமாம் மனநோய்காரர்களுக்கும் காக்னிட்டிவ் தெராப்பி கொடுக்கப்படுகிறது இப்போது.

சென்னையில் கூட கௌதம் நியூரோ செண்டர் அவர் சைக்கியாட்ரிஸ்ட் ...நியூரொ பிஹேவியரல் மெடிசினிலும் நிபுணர் என்பதால் என்பதால் இரண்டும் மிக்ஸ் செய்து தனது செண்டரில் இருவித பயிற்சிகளும் தெராப்பிகளும் கொடுக்கிறார்.

என் கஸினின் பெண்ணிடம் "காக்னிட்டிவ் நியூராலஜி" படிக்கச் சொல்லி சஜஸ்ட் பண்ணிருக்கேன்...அவள் நியூரோ ஸயின்ஸ் தான் படிக்கிறாள் அமெரிக்காவில்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சி கண்டிப்பாக உண்டு..

கீதா

வல்லிசிம்ஹன் said...

இப்ப லேட்டஸ்டா வந்த செய்தியில், இதயம் நின்றபிறகும், மூளை செயல்படுவதை நிறுத்த சில நிமிடங்கள் ஆகுமாம். அதன் பின் இரண்டு நாட்களுடம்பில் டிஎன் ஏ அதிர்வலைகளிருக்குமாம்.

Thulasidharan V Thillaiakathu said...

ரொம்ப அருமையான ஸ்வாரஸ்யமான சப்ஜெக்ட். ஆழமானதும் கூட.

பிரபஞ்சம் இன்னும் இன்னும் விரிந்து பலூன் விரிந்து ப்ரெஷர் தாங்காமல் உடைவது போல இப்பிரபஞ்சமும் முடிவில்லாதது என்று சொல்லப்பட்டாலும் அதுவும் விரிந்து அழுத்தம் காரணமாகச் சிதறி மீண்டும் பல கிரகங்கள் தோன்றுமோ...அதைத்தான் உலகம் அழிதல் என்று சொல்லுகிறார்களோ? அல்லது பூமியின் அழிதல் மட்டும் சொல்லப்படுகிறதா..

துளசிதரன்

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

அறிவியல் என்றைக்குமே புறவயப் பார்வை தானே? எதையும் தீர்மானமாகச் சொல்வதற்கு ஆதாரமும் கண்டுபிடிப்புத் துணைகளும் வேண்டும் அவர்களுக்கு.

அப்படி ஆதாரம் இல்லாதவற்றிற்கு பூசி மெழுகின மாதிரி அந்தந்த மருத்துவர்களின் அனுபவ அறிவைக் கொண்டு பதில்களை இட்டு நிரப்புகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

உதாரணத்திற்கு நம்ம ஊர் 'பேருக்கு நாத்திகர்கள்' மாதிரி புராணக்கதைகளை கிண்டல் செய்வதே நாத்திகப் பேரறிவு மாதிரி மருத்துவர்களால் முடியாது. இந்நாட்டு இங்கர்ஸால்களுக்கெல்லாம் கடவுள் இருப்பை மறுத்தால் போதும். நாத்திகத்தில் அதைத் தாண்டி அவர்களுக்கு ஏதும் இல்லை.

மருத்துவர்களுக்கோ கடவுள் விஷயம் ஒரு பிரமிப்பு. உடல் சாத்திரத்தின் இயக்கங்களை அக்கு வேறாக அலசுபவர்களின் அனுபவத்தில் விளையும் பிரமிப்பு இது. அந்த மரியாதையில் 'நமக்கு மீறிய ஒரு சக்தி' இருப்பதை தெளிவாக உணர்ந்து அதே நேரத்தில் அறிவியல் அடிப்படையில் சொல்ல முடியாத திகைப்பில் அவர்களின் அனுபவ அறிவில் தட்டுப்பட்டதைச் சொல்கிறார்கள்.

மனம் ஒரு அற்புதமான வஸ்து. அதன் லீலா வினோதங்கள் இன்னும் ஆராய்ச்சியாளர்களுக்கு சிக்கவில்லை. சிக்மண்ட் ப்ராய்ட் போட்ட போடே இன்னைக்கு காலம் வரை மறுப்பேதும் சொல்ல முடியாமல் தாக்குப் பிடித்துக் கொண்டு வருகிறது.
ப்ராய்டைத் தொடர்ந்து நடக்கும் ஆய்வுகள் ஒவ்வொன்றாக புதிர்களை விடுவிக்கலாம்.
இருந்தாலும் தன்னை ஆகிருதி ஆக்கிக் கொண்டு ஆராய்ச்சிகளில் மூழ்குவோர் காலம் மங்கிக் கொண்டு வருவது தான் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்குமான கால நீட்டிப்பை நீட்டிக் கொண்டே வருகிறது.

இன்றைய புதிர்கள் நாளைய கண்டுபிடிப்புகளுக்காகவே; அதே நேரத்தில் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் புதிய புதிர்களைக் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பதையும் சொல்லித் தான் ஆகவேண்டும்.

ஜீவி said...

@ athira மியாவ்

// உலக அழிவு பற்றி ஒரு போஸ்ட் போடப்போகிறேன் விரைவில்:)..//

இப்படிலாம் பயமுறுத்தாதீங்க.. மியாவ் குரலை மீட்டினாலே நிறைய சிரிப்பூக்களை பொலபொலவென்று தூவி விடும். அதனாலே லேசா வர்ற பயவுணர்ச்சியும் காணாமப் போயிடும்..

ஆனா, ஒரு மாற்றத்திற்கு 'உலக அழிவு' பற்றி சிரீயஸாக -- கொஞ்சம் கூட கிச்சு கிச்சு மூட்டாதபடிக்கு-- தகவல்களைத் திரட்டி போட்டுட்டீங்கன்னா, ஜெயமுண்டு பயமில்லை மனமேன்னு கைதட்டறத்துக்கு நாங்க இருக்கோம்..

Welcome.. வாசிக்கக் காத்திருக்கோம்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//'ஒரு யோகியின் சுய சரிதை-இமய குருவின் இதய சீடன்' ஆசிரியர் ஸ்ரீ எம் அவர்கள். மஜன்டா பதிப்பகம். மூலம் ஆங்கிலம். தமிழ் மொழிபெயர்ப்பு ரொம்ப நல்லா இருக்கு.//

நான் கேள்விப் பட்டதே இல்லை. ஆனால் என் சொந்த நூலகத்தில் இந்த மாதிரியான அலசல் டாப்பிக் புஸ்தகங்கள் எக்கச் சக்கம்! ஒவ்வொண்ணா எழுதணும்ன்னு ஆசை இருக்கு.. பார்க்கலாம்.

நாளைக்கு கிரி ட்ரேடர்ஸூக்கு போன் பண்ணி புத்தகம் கைவசம் இல்லேனாலும் வாங்கி வைக்கச் சொல்லிப் போய் வாங்கிக்கறேன்.

நான் எழுதியிருப்பது வரிக்கு வரி அந்த மருத்துவரின் பேட்டி. அந்த பேட்டியிலிருந்து நம்மில் விளையும் எண்ணங்கள் தாம் நமக்கு வேண்டியது.

தகவலுக்கு நன்றி, நெல்லை.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இருக்குமோ என்ற கேள்வி எழுவதே இருக்கும் என்ற சம்சய உணர்வில் தான். அப்படி இருந்து தான் ஆக வேண்டும் என்பதையும் வரலாறு நமக்குப் பாடமாக போதிக்கிறது.

தேவாங்கு, குரங்கு, வாலில்லா குரங்கு என்பதெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று சிறிதே மாறுப்பட்ட குரங்கினம். தேவாங்கிலிருந்து அவற்றின் பரிணாம வளர்ச்சி வாலில்லா குரங்கு வரை நடந்திருக்கிறது. அதுவும் தவிர தேவாங்கு என்று எடுத்துக் கொண்டால் அதிலும் பலவகைப் பட்ட வித்தியாசங்கள். இந்த வித்தியாசங்கள் அதிகரிக்க அதிகரிக்க தனிப்பெயர் கொடுத்து அழைக்கப்படுகிறது.

இன்னொன்று. பரிணாம வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தீர்களென்றால் அவை இயற்கைச் சூழல்களின் நிர்பந்தங்களினாலும், வாழ்வின் தேவையின் அடிப்படையில் ஏற்படும் பயிற்சிகளினாலும் அமைவது புலப்படும். அதே மாதிரி பரிணாம வளர்ச்சியில் மனித வகைகளிலும் படிப்படியாக ஏற்படும் மாற்றங்களே மனித இனத்தின் வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிக்கும்.

தேவாங்கு, குரங்கு, வாலில்லா குரங்கு எல்லாம் non-human primates. நமக்குத் தெரிந்த குரங்குகளிலேயே வெள்ளை மந்தி, கருமந்தி, நாட்டுக் குரங்கு, சிங்க வால் குரங்கு என்று பல வகைகள்.

சகஜமாக நமக்குப் பழக்கப்பட்ட குரங்குகளின் முந்தைய, பிந்தைய இனங்களான தேவாங்கும், வாலில்லா குரங்கும் அவை வாழ்வதற்கு பழக்கப்பட்ட சூழல்களிலும் இருப்பிடங்களிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதே மாதிரி மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் இந்தப் பிரபஞ்சத்தின் எந்தக் கோடியில்லாவது அதற்கேற்ற இயற்கைச் சூழல்களில் நடங்து கொண்டும் இருக்கலாம்.
இது பல நூறு ஆண்டுகள் கடக்கும் ஒரு process என்பதினால் நம்மால் இனம் காண முடியவைல்லையே தவிர நமது கண்ணுக்குத் தெரியாமல் மனித இனத்தின் அடுத்த
கட்டத்தின் முழுமையான வளர்ச்சிக்கான process நடந்து கொண்டு தான் இருக்கும் என்று வரலாற்று உண்மைகளிலிருந்து உணரலாம்.

Bhanumathy Venkateswaran said...

//மனிதன் கம்ப்யூட்டர் என்றால் மூளை தான் ஹார்டுவேர். மனம் தான் சாஃப்ட்வேர்.//

மனம் என்று ஒன்று தனியாக கிடையாது. எண்ணங்களின் தொகுதிதான் அது என்றும் ஒரு கருது உண்டே. அப்படிப் பார்த்தால் மேலே சொன்ன கருத்து அடி வாங்குகிறதே?

கடவுள், மரணம், ஊழிக்காலம் இவை படிக்க, படிக்க அலுக்காத சப்ஜெக்ட்டுகள். சுவாரஸ்யமான பதிவு!

கோமதி அரசு said...

//உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் 'Psycho Kinesis' என்கிற அதீத மனோசக்தி. இதை வைத்துக் கொண்டு தான் மாயமான, புதிரான காரியங்களைச் சிலர் செய்கிறார்கள். பிக்பென் கடிகாரத்தை ஒரு பெண் முறைத்துப் பார்த்தே நிறுத்தியது இந்த அடிப்படையில் தான்.//

வேதாத்திரி மகரிஷி சொல்வது மனம் அவ்வளவு வலிமை வாய்ந்தது.
மனம் தான் பிரம்மம் என்கிறார்


வேதாத்திரி மகரிஷி சொல்வது போல் மனம் , உயிர், தெய்வநிலை ஆகியவை மறை பொருள்கள், அவற்றை விஞ்ஞ்சானத்தால் அறிய முடியாது புலன்களை கொண்டு அறிவது விஞ்ஞ்சானம் புலன்களுக்கு உபகருவிகள் துணையைக் கொண்டு அறிவது விஞ்ஞானம்.
அறிவைக் கொண்டு ஆராய்வது மெய்ஞ்ஞானம் .

ஊழிகாலம் வந்து உலகம் அழிந்து மீண்டும் இறைவன் தோணியப்பராக வந்து மக்களை காப்பாற்றி மீண்டும் உலகத்தை தோற்றுவித்தார் என்று படிக்கிறோம்.
பைபிளில் உலகம் அழியும் சமயத்தில் இறைவன் உயரினங்க்களில் வகைகளில் ஒவ்வொன்றையும் படகில் காப்பாற்றி மீண்டும் உலக தோன்ற வைப்பதாய் சொல்லப்படுகிறது.

மீண்டும் உயிர்தெழும் இந்த உலகம்.



அழிந்தாலும் மீண்டும் உலகம் தன்னை புதுபித்துக் கொள்ளும்.


சுவாரஸ்யமான பதிவு.


ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//ஜீவி சார்... உங்களுக்கு ஒரு இன்டெரெஸ்டிங் புத்தகம் சொல்றேன். 'ஒரு யோகியின் சுய சரிதை-இமய குருவின் இதய சீடன்' ஆசிரியர் ஸ்ரீ எம் அவர்கள். மஜன்டா பதிப்பகம். மூலம் ஆங்கிலம். தமிழ் மொழிபெயர்ப்பு //

நெல்லை! கிரி டிரேடிங்கில் விசாரித்தேன். குறிப்பிட்ட புத்தகத்திற்கு ஆர்டர் செய்திருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் வருமாம். வாங்கிக் கொள்கிறேன்.
நன்றி.

ஜீவி said...

@ Bhanumathi Venkateswaran

//மனம் என்று ஒன்று தனியாக கிடையாது. எண்ணங்களின் தொகுதிதான் அது என்றும் ஒரு கருது உண்டே. அப்படிப் பார்த்தால் மேலே சொன்ன கருத்து அடி வாங்குகிறதே?//

அப்படிப் பார்த்தால் தானே அடிவாங்கும்?.. இந்த டாக்டர் அப்படிப் பார்க்காமல் இருந்திருக்கலாம். மனம் பற்றி நிறையச் சொல்லலாம். எண்ணங்களின் தொகுதி மனம் என்பது அதில் ஒன்று. அவ்வளவு தான்.

நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

எனக்குத் தெரிந்து மனம் பற்றி நிறையச் சொன்னது நமது உபநிஷத்துக்கள் தாம்.

வாசிக்க வாசிக்க எந்தக் கேள்வியும் நம்மில் எழாமல் பார்த்துக் கொள்கிறது. ஸ்ரீராமகிருஷ்ண மடம் எல்லா உபநிஷத்துக்களையும் எளிய தமிழில் அற்புதமாக ஒவ்வொரு உபநிஷத்துக்கும் ஒவ்வொரு புத்தகம் என்று வெளியிட்டுள்ளது.

மகரிஷியின் 'மனவளக்கலை' மூன்று பாகங்களையும் வாசித்திருக்கிறேன். கைவசமும் இருக்கின்றன.

மனம் பற்றி அவ்வப்போது நிறைய பதிவுகள் வர இருக்கின்றன. தொடர்ந்து பேசுவோம். நமக்கும் ஒரு தெளிவு பிறக்கும்.

நன்றி.

ஜீவி said...

@ தி. கீதா

//.எல்லாமே மூளையின் செயல்பாட்டில்தானே அந்த மனம் என்பதும் கூட மூளையின் ஒரு பகுதிதான்..//

அகவயப் பார்வையில் அப்படி இல்லை தானே?..

பயிற்சிகளின் வழியாக மனத்தின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தலாம் அல்லது மட்டுறுத்தலாம் என்று வரும் பொழுது மனத்தை நாம் வசப்படுத்தலாம் என்று தெரிகிறது.

நீங்கள் சொல்கிற படி மனம் என்பது மூளையின் ஒரு பகுதி அல்லது நரம்பு மண்டலத்தின் மூலம் மூளையுடன் அது தொடர்பு உடையதென்றால் மனத்தை நாம் ஆட்டுவிப்பதின் மூலமே மூளை சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு தீர்வு காணலாம் இல்லையா?..

ஸ்தூலமாக மனம் என்ற ஒன்றே இல்லை; அது வெறும் எண்ணங்களின் தொகுப்பு'
என்று பானுமதி அவர்கள் சொல்கிறபடி பார்த்தாலும் எண்ணங்களைச் சீர்படுத்துவதின் மூலமாக மனத்தை வசப்படுத்த வழியுண்டு.

எப்படி இருந்தாலும் மருந்து, மாத்திரை இல்லாமல் மனம் மூலம் சிகித்சைகள் மேற்கொள்ளக் கூடிய காலகட்டம் வரும் போலத் தான் தெரிகிறது.

அப்படி வந்தால் ரொம்பவும் safty யான, செளகரியமான சிகித்சையாக அது இருக்கும்.

மனம் பற்றி உபநிஷத்துக்களின் பார்வையில் ஒரு அலசு அலச வேண்டுமென்றால் என் தளத்தின் வலது பக்க பதிவு நிரல்களில் 'சுயதேடல்' பகுதியில் 93 அத்தியாயங்களாக மூன்று பாகங்களாக கதை போல நீளும் ஓர் ஆராய்ச்சித் தேடல் இருக்கிறது. நேரம் இருப்பின் வாசித்துப் பார்த்தீர்களென்றால் பிரமிப்பீர்கள்.

நன்றி, சகோ.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

வாங்க, வல்லிம்மா.

ரயில் வண்டித் தொடரில் கூட வண்டி தடம் புரண்டால் சம்பந்தப்பட்ட ரெண்டு, மூன்று போகிகள் தான் தண்டவாளத்தை விட்டுச் சாய்கிறது.

குழந்தைகள் விளையாடும் சீட்டுக்கட்டு விளையாட்டில் ஒரு சீட்டு காற்றில் கவிழ்ந்தால் விரிசையாக ஒன்றின் மேல் ஒன்று படுத்து ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒவ்வொரு சீட்டாக கவிழ்ந்து விடும்.

மரணத்தைப் பொறுத்த மட்டில் ரத்த ஓட்டத்தின் பாய்ச்சல் நிறுத்தப்பட அதன் குதியோட்டம் அடங்கும் ஒவ்வொரு பகுதியாக செயலிழந்து போகிறது. மூளைக்கு எட்ட இரண்டு நொடிகள் ஆகலாம் என்பது அதிசயமல்ல.

Clinical death -- biologic death என்று இருக்கிறதல்லவா?.. clinical death ஆகி நாலைந்து நிமிடங்கள் கழித்துத் தான் biologic death ஆகும். இரத்த ஓட்டம் மொத்தமாக வரத்து இல்லாமல் மூளை செயலிழப்பதைத் தான் biologic death என்கிறோம்.

டி.என்.ஏ. அதிரலைகள் இரண்டு நாட்கள் அதிர்வில் இருக்கும் என்பதற்கு சான்ஸே இல்லை என்று ஒரேடியாக அடித்து விடலாமா?.. தெரியவில்லை. அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி, வல்லிம்மா.

Anonymous said...

வணக்கம். .
முன்னர் படித்தது எனினும் படிக்க சுவாரஸ்யமே...
கருட புராணம் படித்தேன் சமீபத்தில்...
நிறைய விஷயங்கள்...மரணம் - அதையொட்டி ..விஞ்ஞானம் தரும் செய்திகள் ...ஒவ்வொன்றும் தரும் தகவல்கள் ஏராளம்..
தங்கள் பணி அருமை...
திருநாவுக்கரசு
கடலூர்

Related Posts with Thumbnails