மின் நூல்

Wednesday, February 21, 2018

தமிழகக் கோயில்கள்


கோயில் கட்டிடக் கலை சோழ மன்னர்கள் காலத்து நாளும் வளர்ந்து, நாயக்க மன்னர்கள் காலத்து விரிந்து பின்னர் தேய்ந்திருக்கின்றன என்று சொல்லி காலவரையைக் கணக்கிட்டு விடலாம்.

தமிழ் நாட்டுக் கோயில்களின்  காலத்தை அங்குள்ள மண்டபங்களை, அந்த மண்டபங்களில் நிற்கும் தூண்களை, அத் தூண்களில் உள்ள போதிகைகளை வைத்தே நிர்ணயித்தல் கூடும்.  இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக இச் சுருங்கிய நேரத்தில் நான் பேச விரும்பவில்லை.  கோயில்  கட்டிட அமைப்பில் உள்ள உறுப்புகள் அதன்  பெயர்கள் எல்லாம் சாதாரண மக்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேணும் என்று ஆசைப்படுகிறவன் நான்.

நீண்டுயர்ந்த மலையைக்  கண்டு எப்படி கோபுரம் அமைக்க விரும்பினார்களோ அதுபோல மனிதனது உடல் அமைப்பைப் பார்த்தே கோயிலை நிர்மாணிக்க முனைந்திருக்கிறார்கள் சிற்பிகள்.  நீண்டு நிமிர்ந்த பெருங்கோயில் உறுப்புகள் நல்ல தமிழில் அடி, உடல், தோள், கழுத்து, தலை, முடி  என்று ஆறாகும்.  இதையே சிற்ப சாஸ்திரத்தில் அதிஷ்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி என்று நீட்டி முழக்கி வடமொழியில் சொல்வார்கள்.   நல்ல தரை  அமைப்பே அடியாகும்.  இதனையே அதிஷ்டானம், மசூரகம், ஆதாரம், தலம், பூமி என்றெல்லாம் கூறுவார்கள்.  இந்த அடி மேல் எழுந்த உடலே கருவறை.  இதனையே கால், பாதம், ஸ்தம்பம், கம்பம் என்று கூறுவார்கள்.
கருவறையை திரு உண்ணாழி என்று கல்வெட்டுகளில்  குறித்திருக்கும்.  இந்தக் கருவறையின் மேல் நிற்பதே தோள்  என்றும் பிரஸ்தரம்,  மஞ்சம், கபோதம் எல்லாம்.  அதற்கும் மேலே கண்டம், களம், கர்னம் எனப்படும் கழுத்து.  இதன் மேலே இருக்கும் ஸ்தூபியே முடி.  இவைகள் எல்லாம் என்ன என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதிகள் உண்டு.



இன்னும் இந்த உறுப்புகளை  ஒட்டிய  பல பகுதிகள்  பல  பெயர்களில் விளங்கும்.  திருவுண்ணாழி என்னும் கருவறைச் சுவரின்  வெளிப்  பக்கத்திலே கோஷ்ட பஞ்சரம், கும்ப  பஞ்சரம் என்னும் மாடக்குழிகள் அமைக்கப்படும்.  கருவறை அர்த்த மண்டபம் இரண்டையும் சுற்றி  ஐந்து கோஷ்ட பஞ்சரங்கள்.  இவைகளில் கணபதி, தஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை உருவங்கள் இருத்தப்படும்.  கோஷ்ட பஞ்சரத்திலே இந்த தெய்வ உருவங்களை அமைக்கும் வழக்கம், சோழ மன்னர்கள் காலத்திலே தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.   கோஷ்ட பஞ்சரங்களுக்கு இடையிடையே கும்ப பஞ்சரம், கும்ப  பஞ்சரம், அடியில் குடமும் மேலே சிற்ப  வேலையோடு கூடிய கொடியும் இருக்கும்.   தோள் என்னும் பிரஸ்தாரத்தின் மேலே  கர்ண கூடு, பஞ்சரம், சாலை என்னும் உறுப்புகள் இவைகளின் அமைப்பை எல்லாம் விவரிப்பதை விட கோயிலுக்குச் செல்லும் போது நேரே பார்த்துத் தெரிந்து  கொள்ளுதல் நலம்.

கோயிலுக்குள் இருக்கும் மற்ற பரிவார ஆலயங்களைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள்.  பத்தாம் நூற்றாண்டில் சோழன் விஜயாலயன் காலத்திற்குப் பின் தான் சிவன் கோயில்களீல் அம்பிகைக்கென்று தனி ஆலயங்கள் கட்டப் பட்டிருக்கின்றன.  அதற்கு முந்திய காலத்தில் அம்பிகைக்கு என்று தனிக் கோயில்கள் இருக்கவில்லை.  காஞ்சியில் உள்ள அத்தனை சிவன்  கோயிலிலும் இன்றும் அம்பிகைக்கு சந்நிதி கிடையாது.  எல்லோருக்கும் சேர்த்து ஒரே அம்பிகையாய், ஒப்பற்ற அம்பிகையாய் தனிக் கோயிலில் இருப்பவள் தான் அன்னை காமாட்சி.  சோழ மன்னர்கள் காலத்தில் தான் அம்பிகைக்குத் தனி சந்நிதி அமைத்தார்கள்.  முதலில் பிரதான  கோயிலிலேயே ஒரு சிறு கோயில் கட்டி தெற்கே பார்க்க நிறுத்தினார்கள்.  அதன் பின் அம்பிகை கோயிலை இறைவன் வலப்பக்கத்திலே கட்டினார்கள்.
செய்த தவறை உணர்ந்து பின்னர் அநேகமாக எல்லாக் கோயில்களிலும்
இறைவனுக்கு இடப்பக்கத்திலேயே அம்பிகைக் கோயிலையும் கட்டி இருக்கிறார்கள்.  சோழர்கள் காலத்தில் இறைவனுக்கு இடப்பாகத்திலேயே அம்பிகை கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.  சோழர்கள் காலத்தில்  இறைவனுக்கு இடப்பக்கத்திலிருந்த அம்பிகை நாயக்க மன்னர்கள் காலத்திலே திரும்பவும் வலப்பக்கத்திற்கே வந்து கோயில் கொண்டிருக்கிறாள்.  பெரிய சிவன்  கோயில்களிலே ஆதியிலே கணபதி, முருகன் முதலியவர்களுக்குத் தனித்தனி கோயில்கள் இல்லை.  பின்னர் தான் கோயிலின் தென்மேற்கு மூலையிலே சுப்பிரமணியரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.  நடராஜருக்குத் தனி சந்நிதி என்பதெல்லாம் மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுந்தது தான். தெய்வத் திருமுறைகளை எல்லாம் வகுத்த பின்பே, அடியார்கள், நாயன்மார்கள் எல்லாம் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  நவகிரக வழிபாடு மிகவும் பிற்காலத்திலே தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சிவன் கோயில்களைப் போலவே பெருமாள் கோயில்களிலும் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு தாயார் சந்நிதி இருந்ததில்லை.  இன்றும் ஒப்பிலியப்பன்,  நாச்சியார் கோயில் முதலிய இடங்களில் தனித்த தாயார் சந்நிதி இல்லை என்பது பிரச்சித்தம்.  கருவறைக்குள்ளேயே இருந்த தாயாரைப் பிரித்து அவளைத் தனிக் கோயிலில் இருத்தியதெல்லாம் பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்பு தான்.  ஆழ்வார்களும்,  ஆச்சாரியார்களும் மற்றும் ராமன், கண்ணன், விஸ்வக்சேனர் எல்லாம் தனிக் கோயில்களில் அமர்ந்தது  இன்னும் பிந்திய காலத்திலேயே. 


சமுதாய வாழ்வினை வளர்க்க இக்கோயில்கள்  எப்படி  உதவியிருக்கின்றன என்று தெரிந்து கொள்ளாவிட்டால் இந்தப் பேச்சு பூரணம் அடைந்ததாகாது. நகர நிர்மாணத்திலேயே கோயில்கள் முக்கிய ஸ்தானம்
வகித்திருக்கின்றன.  எந்த ஊரிலும் ஊருக்கு நடுவில் தான்  கோயில். அதைச் சுற்றிச் சுற்றித் தான் தெருக்கள், கடைவீதிகள், வீடுகள் எல்லாம். மதுரையைப் பாருங்களேன்.    நகர நிர்மாணத்திற்கே சிறந்த  எடுத்துக்காட்டு என்றல்லவா மேல் நாட்டு அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். கோயிலின் நான்கு  திசைகளிலும் நான்கு  வாயில்கள். வாயில் ஒவ்வொன்றிலும் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி நாட்டையும் நகரத்தையும் காத்து நிற்கும் காவல் கூடமாக அல்லவா கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள், தமிழர்கள்?..

கோயில்களைச் சுற்றிய வீதிகளில் வியாபாரங்கள் வலுத்திருக்கின்றன. 
வியாபாரம் பெருகப் பெருக நாட்டின் வளம் பெருகியிருக்கிறது.  பல நாடுகளிலிருந்து வியாபாரிகள் தங்கள் தங்கள் பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்து தங்கள் நாட்டில் கிடைக்காத பண்டங்களை இங்கிருந்து வாங்கிப்  போயிருக்கிறார்கள்.  இப்படி வருகிறவர்களது வசதிகளைத் தெரிந்தே கோயிலை ஒட்டிய சந்தைகள், உத்சவங்கள், திருவிழாக்கள் எல்லாம் வளர்ந்திருக்கின்றன.  நல்ல பொருளாதாரக் கண்கொண்டு நோக்கினால் ஒவ்வொரு திருவிழாவுமே ஒரு பெரிய சந்தை தான்.. கூட்டுறவு சம்மேளனம் தான்.

பல பக்கத்திலிருந்தும் மக்கள் இப்படி வந்து கூடக்கூட நாட்டின் வளம்,
நகரத்தின் வளம் பெருகியிருக்கிறது.  வந்தவர்களுக்கு உணவளிக்க அன்னச் சத்திரம் தோன்றியிருக்கின்றன.  கோயிலை ஒட்டிக் குளங்கள், குளங்களை ஒட்டி நந்தவனங்கள் உருவாகியிருக்கின்றன.  இவைகளை நிர்மாணித்தவர்கள் அவரவர்கள் காலத்திற்குப் பின்னும் இவைகள் சரியாக நடக்க நிலங்களை, செல்வங்களை மானியமாக வழங்கியிருக்கிறார்கள். இப்படித் தான் தேவதானங்கள், தேவபோகங்கள் எல்லாம் எழுந்திருக்கின்றன.

கோயில்களால் விவசாயம் விருத்தியடைந்திருக்கிறது. கைத்தொழில் பெருகியிருக்கிறது.   கட்டிட நிர்மாணத்தில் கைதேர்ந்த தச்சர்கள், சிற்பிகள், வர்ண வேலைக்காரர்களுக்கு எல்லாம் கோயில்கள் தக்க ஆதரவாய் இருந்திருக்கின்றன.  கோயில்கள் கலாநிலையங்களாக, கலைக் கூடங்களாக வளர்ந்திருக்கின்றன.  இசையும் நடனமும் கோயில்களின் நித்யோத்சவத்தில் பங்கு பெற்றிருக்கின்றன.  கல்விச் சாலைகள், பொருட்காட்சி சாலைகள் எல்லாம் கோயிலுக்குள்ளேயே அமைந்திருக்கின்றன.  வியாக்யான மண்டபம்,  வியாகர்ண மண்டபம், சரஸ்வதி பண்டாரங்கள் முதலியன கோயில்களுக்குள்ளேயே நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றன.   தென்னார்காடு ஜில்லாவில் எண்ணாயிரத்திலும்,  செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுக்கூடலிலும்  பெரிய  பெரிய கலாசாலைகளே கோயில்கள் ஆதரவில் நடந்திருக்கின்றன.  எண்ணாயிரம் கோயிலில் ஒரு சமஸ்கிருத பாடசாலை நடத்த முன்னூறு ஏக்கர் நிலம் மான்யமாக விடப்பட்டிருக்கிறது.  340 மாணவர்களுக்கு  தங்க இடமும், உண்ண உணவும், உடுக்க உடையும் இனாமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

மக்களது அறிவு  விருத்திக்குக் கல்விச் சாலைகள் ஏற்பட்டது போலவே மக்கள் உடல் நலத்தைப் பாதுக்காக்க மருத்துவ சாலைகளும் கோயில்களுக்கு உள்ளேயே இருந்திருக்கின்றன.  பதினோராம் நூற்றாண்டில் உள்ள ஒரு சோழனது கல்வெட்டிலிருந்து 15 படுக்கைகள், ஒரு மருத்துவர், ஒரு ரண சிகித்சை வைத்தியர்,   இரண்டு தாதியர் கொண்ட ஒரு மருத்துவ சாலையே நடந்திருக்கிறது ஒரு கோயிலில் என்று அறிகிறோம்.    கால்நடை மருத்துவ சாலைகள் கூட கோயில் ஆதரவில் நடந்திருக்கின்றன.

கோயிலை ஒட்டி எழுந்த இந்த ஸ்தாபனங்களையும் நிர்வகிக்க ஸ்தானீர்களும்  காரியஸ்தர்களும் இருந்திருக்கிறார்கள்.  பொருளைக் காவல்  காக்க பண்டாரிகள், பூசைகள் எல்லாம் சரியாய் நடக்கிறதா என்று பார்க்க தேவகர்மிகள், இவர்களுக்கெல்லாம் மேலே அதிகார புருஷர்கள், அவர்களுக்கு ஆலோசகர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.  இப்படி மக்களை எல்லாம் சமுதாய வாழ்விலும், கலை ஆர்வத்திலும், பொருளாதார துறையிலும் ஒன்று சேர்க்கும் பெரிய நிலையமாக அல்லவா இக்கோயில்கள்  உருவாகியிருக்கின்றன?..  இப்படிப்பட்ட ஒரு கலா நிலையத்தை நடு நாயகமாகக் கொண்டே மக்கள் வாழ்வு சிறந்திருக்கிறது என்பது தெரிகிறது.


-- தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ரேடியோ உரை.
    திருச்சி வானொலி நிலையத்தார்  ஒலிபரப்பு.                 


தொ,மு. பாஸ்கரத் தொண்டைமானின்  சில வானொலி உரைகள் புத்தக வடிவில்:

  தமிழ்க் கோயில்கள் தமிழர் பண்பாடு

 நிவேதிதா பதிப்பகம்,  அசோக் நகர், சென்னை-83











நெல்லையம்பதி தரணிக்களித்த தவச்செல்வன்
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.  இவரது இளவல் தான்  பிரபல பொதுவுடமைவாதியும் நெசவாளர்களின் வாழ்வு நிலையை உருக்கமுடன் படம் பிடித்துக் காட்டும்  'பஞ்சும் பசியும்' என்ற அற்புத தமிழ் நாவலின் படைப்பாளியுமான  தொ.மு.சி. ரகுநாதன்.

பாஸ்கரன் இளமையில் நெல்லை'மதுரை திரவியம்  தாயுமானவர் இந்துக் கல்லூரி 'கல்விச்சாலையில் கல்வி பயின்றார்.  சாதாரண எழுத்தராக அரசுப் பணியில் சேர்ந்த இவர் மாவட்ட ஆட்சித் தலைவராக தமது குன்றாத ஆற்றலால் பதவி  உயர்வு பெற்றவர்.

ரசிகமணி டி.கே. சிதம்பரநாதரின் புகழ்பெற்ற 'வட்டத்தொட்டி'  நண்பர்களில் இவரும் ஒருவர்.   கோயில்கள் இவருக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்.   பிரபல 'வேங்கடம் முதல் தென்குமரி வரை' நூல்
இவரின் படைப்பு தான்.  அதே மாதிரி 'வேங்கடத்துக்கு அப்பால்' என்ற அருமையான நூலும் இவரது தான்.  நம் கையைப்  பிடித்துக் கொண்டு கோயில் கோயிலாக படியேறி இறங்கும் உணர்வு இவரது நூல்களை வாசிப்போருக்கு ஏற்படுவது உறுதி.   பாஸ்கர தொண்டைமான்  தஞ்சைக் கலைக்கூடம்  அமைவதற்குப் பாடுபட்டவர்களில் ஒருவர்.

14 comments:

நெல்லைத் தமிழன் said...

இதுவரை அறிந்திராத ஒருவரை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அவர்தம் புத்தகத்தை வாங்கவேண்டும்.

கோவில் பற்றிய அறிமுகம் சிறப்பா இருந்தது. ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னிதி 10ம் நூற்றாண்டுக்கு முன்னமேயே அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஸ்ரீராம். said...

அம்பிகை சோழர்கள் காலத்தில் இடப்பக்கம், நாயக்கர்கள் காலத்தில் வலப்பக்கம். அட!

ஓ... தொ மு பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள் உரையா? குமரி முதல் திருவேங்கடம் வரை என்கிற புத்தகம் இவர் எழுதியதுதானே? வாங்கவேண்டும் என்று முன்பு குறித்து வைத்திருந்த நூல்.

நுண்ணிய, சுவாரஸ்யமான, அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்.

கோமதி அரசு said...

அழகான படங்களுடன் நூல் விமர்சனம் அருமை.
கோவில் வரலாறு படிக்க ஆவலை தூண்டுகிறது.


ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

சமீபத்தில் தமிழக இந்துக் கோயில்கள் பலரும் பலவிதமாகப் பேசும் சூழ்நிலையில் பண்டைய தமிழகக் கோயில்கள் செயல்பட்ட பாங்கு பற்றி சொல்லலாம் என்ற உந்துதலில் இந்தப் பதிவு.

திருவரங்கம் கோயில் பற்றி சிலப்பதிகாரத்திலும், சங்க கால அகநானூற்றிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து 9-ம் நூற்றாண்டு வரை அனைத்து ஆழ்வார்களும் (ஏனோ மதுரகவி ஆழ்வாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை) திருவரங்க ஸ்ரீரங்கநாதரை பக்தி மணம் கமழப் பாடியுள்ளனர். திவ்ய பிரபந்தந்தத்திலோ 247 பாசுரகள் திருவரங்க நாதனுக்கே அர்ப்பணிக்கப் பட்டுள்ளன.

இதற்கு மேலும் விவரித்தால் அது கொல்லன் களத்தில் ஊசி விற்கிற சமாச்சாரமாகிப் போகும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

'குமரி முதல் வேங்கடம் வரை' என்பது நூலுக்குப் பெயர். கல்கியில் வெளிவந்த தொடர் அது.

ஜீவி said...

@ கோமதி அரசு

அந்நாளைய கோயில்கள் வங்கிகளாகக் கூட செயல்பட்டிருக்கின்றன.

நீங்கள் சொல்கிற மாதிரி கோயில் வரலாறுகள், அந்நாளைய சிற்பிகளின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பக்தியில் விளைந்த சிற்பங்கள், மன்னர்களின் ஆர்வ ஈடுப்பாடுகள் என்று எல்லாமுமே வாசிக்க வாசிக்கத் திகட்டாதவை.

Anonymous said...

வணக்கம். .
அருமையான கட்டுரை ...
திருநாவுக்கரசு

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அரிய நூல். அரிய மனிதர். அவசியம் வாங்கிப்படிப்பேன். பகிர்வுக்கு நன்றி.

ஜீவி said...

@ அரசு

அரசு சார், வந்து வாசித்துப் பார்த்து வாசித்த அனுபவத்தைப் பின்னூட்டமாகச் சொன்னதற்கும் நன்றி.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam, A.R (Retd) Tamil University

அரிய மனிதர் என்று நீங்கள் சொன்னது உண்மை.

இந்த நூல் ரொம்பவும் கையடக்கமான நூல், ஐயா. 128 பக்கங்களே கொண்டது.
ஆகமங்களில், குடைவரை, அமைப்பிஉ, கோயில்கள், மாளிகைகள், சரித்திரச் சான்றுகள், சிற்பத்தில் என்று கிட்டதட்ட 66 பக்கங்கள் தொ.மு.பா.வின் அந்நாளைய வானொலி உரைகள்.

தவிர, தென்னிந்திய கோயிற்சிற்பம்- இலக்கணம் என்ற தலைப்பில் ஜே.எம்.சோமசுந்தரம் பிள்ளை, தென்னாட்டுக் கோயிற் சிற்பன் ரூபதத்துவம் என்ற தலைப்பில் திருவாவடுதுறை சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, இலக்கியத்தில் என்ற தலைப்பில் பி.ஸ்ரீ. ஆச்சார்யா,
இசையில் என்ற தலைப்பில் கே. வாசுதேவ சாஸ்திரி, மடாலயங்களில் என்ற தலைப்பில் எஸ். சிவகுமார், தினசரி வாழ்வில் என்ற தலைப்பில் அ.ரா. இந்திரா போன்ற பெரியோர்களிர்களின் அந் நாளைய வானொலி உரைகள் காணப்படுகின்றன.

இலங்கையில் வாழ்ந்த இலக்கிய விமர்சகர் திரு. கைலாசபதி அவர்களின் அந்நாளில் தமிழக கோயில்கள் செயல்பட்ட விதங்கள் பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்த நினைவுகள் மனசில் முட்டி மோதுகின்றன.

தமிழகக் கோயில்களின் சிறப்புகள், அந்நாட்களில் கோயில்களின் பங்கு மக்கள் வாழ்க்கையில் எப்படி ஒன்றரக் கலந்திருந்தது என்பதையெல்லாம் பற்றி 'தி இந்து' தமிழ் ஏட்டில் தாங்களும் ஒரு கட்டுரை எழுதினால் இந்த காலகட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

நன்றி, ஐயா.

முற்றும் அறிந்த அதிரா said...

கோயில்கள் பற்றிய அலசல் புதுமையாக இருக்கு. கோயிலுக்குள்ளேயே வைத்தியசாலை புதுச் செய்தி.

ஜீவி said...

கோயிலுக்குள்ளே வைத்தியசாலை, படுக்கை, மருத்துவர், ரணசிகித்சை, தாதியர் இதெல்லாம் நினைத்துப் பார்க்க முடிகிறதா, பாருங்கள்..

சுருக்கமாகச் சொன்னால் கோயில் என்பது சமூகத்துடன் நெருக்கமாக இணைந்த தவிர்க்கவே முடியாத அம்சமாக இருந்திருப்பது தெரிகிறது.

வாசித்து கருத்தும் நல்கியதற்கு நன்றிங்க.

Thulasidharan V Thillaiakathu said...

இதுவரை அறிந்திராத எழுத்தாளர். எத்தனை தகவல்கள்! அம்பிகையின் இட, வலம் குறித்த செய்திகள்...

கோயில்களுக்குள் பாடசாலை. வைத்திய சாலை அட! என்று சொல்ல வைத்தது. மட்டுமல்ல அந்தக் காலத்தில் ஊருக்கு ஒரு கோயில் நடுவில் இருந்திருப்பதும் தெரிய வருகிறது. இப்படியும் கேட்டதுண்டு. கோயில்களுக்குள் பெரிய மண்டபங்கள், ப்ராகாரங்கள் இருப்பது அந்தக் காலத்தில் மழை வெள்ளம் என்று இயற்கைச் சீற்றத்தின் போது மக்கள் அனைவரும் இந்தப் பிராகாரங்களில் தங்கி அங்கேயே சமையல்கூடங்களில் சாப்பாடு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் வாசித்ததுண்டு. எங்கள் ஊர்ப்பக்கம் (கன்னியாகுமரி அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததால்) இதனை ஊட்டுப்பறை என்று அன்னதானம் செய்யப்பட்டு வந்தது. அதாவது கோயில் அன்னியமாக இல்லாமல், அங்கு வாழ்ந்த மக்கள் சமூகத்தோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக இருந்தது.

அருமையான புத்தக அறிமுகம் ..

கீதா

Pandiaraj Jebarathinam said...

சிறப்பான பதிவு!

Related Posts with Thumbnails