மின் நூல்

Sunday, March 11, 2018

சுஜாதாவைத் தொடர்ந்து....

புதிய பகுதி:

                                ஆரம்பித்து வைக்கும் முன்னுரை             

நாம்    நினைப்பதை எப்படி வார்த்தைகளில் பிறருக்குத் தெரிவிக்கிறோம்  என்பது மிகப் பெரிய கலை.   அதனால் தான் பேச்சுக்கலை அரசியல்வாதிகளுக்கு மிகப் பெரிய  வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது.   அரசியல்வாதிகளால் வெகுதிரள் மக்களுக்கு  பலன் கிடைக்கிறதோ இல்லையோ, அது பெரிய விஷயமில்லை,  பேசத்தெரிந்திருந்தால் போதும் அவர் தன் ப்ரொபஷனில் ஜெயித்து விடுவார் என்று நிச்சயமாய் சொல்லி விடும்  அளவுக்கு அரசியல் உலகில் பேச்சுக்கலை வெற்றிகரமாக வலம் வருகிறது.                                                                                                     

பேச்சுக்கலையைப் போலத் தான் எழுதுகலையும்.  வாசகர்கள் ரசித்துப் படிக்கிற மாதிரி எழுதத் தெரிந்தால் போதும்,  இந்தத் துறையில் வெற்றிக்கொடி நாட்டி விடலாம் என்பது வாசிப்புலகில் பலர் ஏற்றுக்  கொள்கிற கருத்தாகியிருக்கிறது.

'வாசகர்கள் ரசிக்கிற மாதிரி' என்பதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.

1.  வாசகர்கள்  பொதுவாக ரசிக்கக்  கூடியவைகள் என்று சிலது இருக்கின்றன.  (உ-ம்)  'காதல்' போன்ற இனக்கவர்ச்சி விஷயங்களை கையாளுகிற  விதத்தில் கையாளுகிற மாதிரி எழுதுவது,  எதை எழுதினாலும் அதல் நகைச்சுவை கலந்து  எழுதுவது என்பது மாதிரி சில விஷயங்கள்  இருக்கின்றன. இந்த மாதிரி சில சொக்குப்பொடிகளைத் தூவி வாசிப்பவர்களை மயக்கவும் செய்யலாம்.

2.  இரண்டாவது தான் எழுதுவதை வாசகர்கள் ரசிக்கிற மாதிரி எழுதுவது.  வாசகர் பிடிக்குத் தான் போகாமல் தன் பிடிக்கு வாசகர்களை வளைத்துப் பிடிப்பது.  பிடித்த பிறகு தன் ரசிப்புகளை வாசகர்களின் ரசிப்பாக்குவது.

 இந்த இரண்டாவது சொன்ன விஷயத்தில்   எழுத்தாளர் சுஜாதா சமர்த்தர். அவர் அவரது லான்ட்ரி கணக்கை எழுதினாலும்  சுவைபட எழுதுவார் என்பது தெரிந்த விஷயம்  சொல்லப்போனால் சுஜாதாவின் வெற்றியே எழுதுகலையில் துறைபோகிய ஞானத்துடன் தனக்குப் பிடித்ததைச் சொல்லி அதைக் கையாண்ட ரகசியத்தில் அடக்கம்.

இந்த விஷயத்தில் தமிழ் எழுத்துலகில்  சுஜாதா ஒரு  துருவ நட்சத்திரம்.  தனக்கு முன்னாலும் பின்னாலும் தன்னைப்போல் பிரிதொருவர் இல்லாமல் தனித்த நட்சத்திரமாய் ஜொலித்த  தனித்தன்மையான ஆளுமை கொண்ட  தமிழ் எழுத்தாளர்.

அதனாலேயே  தமிழ் எழுத்துலகின்  அவரது இனிய வாசகர்களுக்கு அவர் வாத்தியார் ஆனார்..  பத்திரிகைகளில் கதை  எழுதுவது  தான் எழுத்தாளர்களின் வேலை என்ற நிலையை மாற்றி தாயினும் சாலப்பரிந்து தன் அனுபவத்தில் தான்  பெற்ற கல்வியை தனது அருமை வாசகர்களுக்கும் புகட்டிய  விநோதமான வாத்தியார் அவர்.

எந்தத் துறையிலும் வெற்றி ஒரு போதை.  அந்தப் போதையிலிருந்து விலகத் தெரிந்தவர்கள்,  செய்யும் காரியங்களில் ஒரு தார்மீக பலத்தைப் பெற்றிருப்பார்கள்.  விலகத் தெரிந்திருந்தாலும் சில நிர்பந்தங்களினால் சில சுமைகளை ஏற்க நேரிடவும் கூடும்.   யார் யாரை உபயோகப்படுத்திக்  கொள்கிறார்கள் என்பதின் அடிப்படையில் வேண்டாத சுமைகளையும் ஏற்க நேரிடும்.

அப்படி வேண்டாத சுமைகளாக பத்திரிகைகளின் விருப்பத்திற்கும்  அந்தந்த பத்திரிகைகளின் வாசக வட்ட   எதிர்பார்ப்புகளுக்கும்  ஏற்ப எழுத வேண்டிய நிர்பந்தங்களும் அவருக்கு ஏற்பட்டதை புரிந்து   கொள்ள முடிகிறது. இருந்தும்   பொழுது போக்கு வாசகர்களையும் அணைத்துக்   கொள்கிற விதத்தில் தன் படைப்புகளை வார்த்தெடுத்தது தான் அவரது அசாத்தியமான சாமர்த்தியம்.

சுஜாதாவுக்கென்றே தனித்த ஒரு பாணி உண்டு.  அந்த பாணியை அவருக்கு முன்னால்  நடந்தவர்களின் பாணியாக  இல்லாமல் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டது மட்டுமல்லாமல்,  பின்னால் வந்தவர்களும் தன் அளவுக்குத் தன் பாணியை கைக்கொள்ள முடியாத அளவுக்கு தனக்கே உரித்ததாக அமைத்துக் கொண்ட சிறப்பு சுஜாதாவுக்கு உண்டு.

தனக்கு அறிமுகமான அறிவியல் உலகையும்  தமிழ் மரபுக்கென்றே வாய்த்த ஞானச்செல்வங்களையும் சம அளவில் கலந்து பிசைந்து தன் ரசவாத எழுத்தில் புதைத்து எளிமையான கட்டுரைகளாய் தனது வாசகர்களுக்கு அவர் பரிமாறிய நேர்த்தி  அவருக்கான நமது நன்றியாய் நிலைத்து நிற்கிறது.

அறிவியல் உலகு நாள்தோறும் தன்னுள் வளர்ச்சி கொள்வதையே விஞ்ஞான உண்மையாய் கொண்ட ஒன்று.  ஞான மரபுப் புதையல்களோ அவற்றின் விழுமிய நெறிகளைக் கற்கக்கற்க புதிய கல்வியாய் நம்முள் புதைந்து நம் செயல்பாடுகளில் மாற்றங்களை விளவிக்க சக்தி கொண்டதாய் திகழ்வது.  இந்த இரண்டையும் கலந்து பிசைந்து தனக்கே உரிய பாணியில்  சுஜாதா சொன்ன விஷயங்கள் சுஜாதாவோடு போய் விடக் கூடாது என்பது தான் இந்தத் தொடர் பதிவுகளுக்கான நோக்கம்.

அதனால் சுஜாதா எழுதிய விஷயங்களில் சுஜாதைத்  தொடர்ந்து அவர் விட்ட இடத்திலிருந்து சொல்ல நாம் முயற்சிப்போம்.  ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய விஷயங்களின் தொடர்ச்சியாய் காலத்தின் வளர்ச்சிப் போக்கில் அந்தந்த விஷயங்களில் நாம் கற்றுக் கொண்டதை அலசுவோம்.  இதுவே சுஜாதாவுக்கான பெருமையும் ஆகும்.

வழக்கமான ஓரிரு வரி பின்னூட்டங்களை மறந்து விடுங்கள்.   சுஜாதா சொன்ன விஷயங்களில் அவர் சொன்னதற்குத் தொடர்ச்சியாய் ஒரு கலந்துரையாடல் போலக் கலந்து கொள்ளுங்கள்.

ஒருவர் சொன்னதைத் தொட்டோ, இல்லை சுஜாதா சொன்னதின் நீட்சியாகவோ கருத்துக்கள் அமைந்து அவற்றை அலசும் போக்கில் உங்கள் கருத்துக்கள் நீண்டால் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' கட்டுரைகளின் பிற்கால தரிசனமாய்  அமையும்.

வாருங்கள், நண்பர்களே!  கலந்துரையாடலைத் தொடர வாருங்கள்!


கட்டுரை-- 1

றிவியலில் முக்கியமான கேள்விகளில் ஒன்று மனித குணங்கள்  உருவாவது  பிறப்பிலா, வளர்ப்பிலா என்கிற கேள்வி.

சென்ற இருபதாம் நூற்றாண்டின் பாதிவரை விஞ்ஞானிகள் 'எல்லாமே சூழ்நிலை தான்.  சூழ்நிலை சரியாக அமைந்தால் ஒரு நல்ல மனிதனை உருவாக்க முடியும்.   பிரச்னையே இல்லை' என்று நம்பினார்கள்.  இந்த நம்பிக்கை டி.என்.ஏ. ஆராய்ச்சி வலுப்பட்டதும் கொஞ்சம் பின்வாங்கி விட்டது.   மெல்ல மெல்ல பிறப்பில் நம் வியாதிகள் மட்டுமல்ல குணாதிசயங்களின் காரணங்களும் இருக்கின்றன'  என்று கண்டு கொண்டு  இருக்கிறார்கள்.

பல ஈக்கள், எலிகளிலிருந்து   மானுட இரட்டையர்கள் வரை கவனிக்கும் பொழுது பல ஆச்சரியங்கள் வெளிப்பட்டிருக்கின்றன.  ஒரே தோற்றமுள்ள இரட்டையர்கள் ஒரே சமயத்தில் பிறந்து தோற்றத்தில் வேறுபட்ட  Fraternal twin-- இரட்டையர்கள் இரு வகையினரையும் ஒரே சூழ்நிலையிலும் வேறுபட்ட சூழ்நிலையிலும் வளர்த்து கிடைத்த விவரங்களிலிருந்து தெரியும் தகவல் -- நம் பிறப்பு, குணாதிசயங்களை முப்பதிலிருந்து எழுபது சதவீதம் வரை நிர்ணயிக்கிறது என்பதே.

ஆனால் ஒரு குணத்திற்கு ஒரு ஜீன் என்று சொல்ல முடியவில்லை.  ஒரு வியாதிக்கு  ஒரு ஜீன் என்று சொல்ல முடிகிறது.   உதாரணம் சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்.  ஆனால் குடிப்பழக்கத்திற்கு என்று ஒரு ஜீன் இருக்கிறதா, கோபத்திற்கு  ஒரு ஜீன் உண்டா?--  இப்படி திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை. 

இந்தப் பழக்கங்களுக்குக் காரணம் பிறப்பும் வளர்ப்பும் கலந்தது என்று  சொல்கிறார்கள்.   இருபத்து மூன்று க்ரோமோசோம்களில்   எந்த க்ரோமோசோம் எந்த குணத்தை நிர்ணயிக்கிறது என்பதை  குத்து மதிப்பாகத் தான் சொல்ல முடிகிறது.   உதாரணம்:   'ஆட்டிசம்'  என்னும் ஒரு  மனோவியாதிக்குக் காரணம் க்ரோமோசோம் என்பது  தெரிகிறது.

இந்த ஆராய்ச்சி ஆரம்ப நிலையில் இருக்கிறது-- மாலிக்யுலர் பயாலஜியின் உதவியுடன்.   இந்த தகவல் வங்கி சேரச் சேர  எதிர்காலத்தில் ஒரு ஆள் உங்களைக் கடக்கும் போது காரணமில்லாமல் விரல்களை முறுக்கி  முஷ்டியை உயர்த்தி  '....த்தா டேய்'   என்றால், உன்னுடைய பதிமூன்றாவது க்ரோமோசோம் சரியில்லைப்பா...' என்று சொல்ல முடியும்  என எதிர்பார்க்கிறார்கள்.


                                                                                                        ---  சுஜாதாபடங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

19 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

ஆரம்ப காலம் சுஜாதா என்பவர் ஒரு பெண் எனவே எண்ணியிருந்தேன்:)...

///சுஜாதா சொன்ன விஷயங்கள் சுஜாதாவோடு போய் விடக் கூடாது என்பது தான் இந்தத் தொடர் பதிவுகளுக்கான நோக்கம்.//

அருமை.. நீங்கள் சொல்லுங்கோ படிக்க நாங்க ரெடி..

வல்லிசிம்ஹன் said...

சுஜாதா சார் அளவுக்குத் தொடர அவரின் பிரமையிலிருந்து மீளவேண்டும்.
நீங்கள் அவரைப் பற்றி எழுதி இருப்பதே
பிரமாதமாக இருக்கிறது. மாலிக்யூலர் பையாலஜி இப்போது பேரன் எனக்கு சொல்லிக் கொடுக்கிறான்.
நீங்கள் எழுதுங்கள்.மற்றவர்கள் அறிவு பூர்வமாகத் தொடர்ந்து உரையாடுவதை நான் பின் தொடர்கிறேன் ஜீவி சார்.

கோமதி அரசு said...//சுஜாதாவுக்கென்றே தனித்த ஒரு பாணி உண்டு. அந்த பாணியை அவருக்கு முன்னால் நடந்தவர்களின் பாணியாக இல்லாமல் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், பின்னால் வந்தவர்களும் தன் அளவுக்குத் தன் பாணியை கைக்கொள்ள முடியாத அளவுக்கு தனக்கே உரித்ததாக அமைத்துக் கொண்ட சிறப்பு சுஜாதாவுக்கு உண்டு.//

அவர் போலவே கதை எழுத ஆசைபட்டவர்கள் உண்டு.
நீங்கள் சொல்வது போல் அவருக்கு என்று தனி பாணி வைத்து இருந்தார் மற்றவர்கள் பின் பற்ற முடியாதுதான்.

ஜீவி said...

மனித குணங்கள் உருவாவது பிறப்பிலா இல்லை வளர்ப்பிலா என்று சுஜாதா ஆரம்பித்து வைத்த இந்த டாபிக் அட்டகாசமான ஒன்று.

மனிதனை ஏதோ டெஸ்ட் டியூப் பேபியை உருவாக்குவது போல சூழ்நிலை சரியாக இருந்தால் ஒரு நல்ல மனிதனை உருவாக்க முடியும் என்ற கருத்து பரவலாக இன்றும் நம்மிடையே உலா வருகிறது.

இருந்தாலும் டி.என்.ஏ. ஆராய்ச்சிகளின் தீர்ப்புகள் இந்த சூழ்நிலை சால்ஜாப்புகளை பெருமளவு பின் தள்ளின என்கிறார் சுஜாதா.

அது என்ன டி.என்.ஏ.? டி.என்.ஏ. பற்றி லேசான ஒரு அறிமுகத்தை யாரானும் கொடுக்க முடியுமா?

”தளிர் சுரேஷ்” said...

சுஜாதா ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான தொடராக அமையப்போகிறது வாழ்த்துக்கள்! மனித குணங்கள் உருவாவது வளர்ப்பிலா? இல்லை பிறப்பிலா? என்ற ஆராய்ச்சி சுவாரஸ்யமான விஷயம்.குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற கூற்றை ஏற்றுக்கொண்டால் குரங்கின் சில குணாதிசயங்கள் கொண்ட சில மனிதர்களை கொண்டு அறிய முடியும். டி.என். ஏ என்பது ஒரு மரபணு மூலக்கூறு. டி.என்.ஏ டெஸ்ட் மூலம் இன்னாரின் பிள்ளை என்று நிரூபிக்கும் அளவிற்கு இன்று சாத்தியங்கள் வளர்ந்து இருக்கிறது. இதை முகஜாடையை வைத்தே அன்றைய சுந்தராம்பாள் காலத்து பாட்டிகள் எளிதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். என்னதான் வளர்ப்பினால் குணங்கள் வந்து சேர்ந்தாலும் பிறப்பினால் உண்டான குணம் விலகிப்போகாது என்பது எனது கருத்து.தந்தை- தாய் வழி குணம் சிறிதளவாவது பிள்ளைக்கு ஒட்டியிருக்கும். என் சிற்றறிவுக்கு எட்டியதை பகிர்ந்தேன்! மற்றவர்கள் கருத்துரைகள் வாசிக்க ஆவலோடு இருக்கிறேன்! நன்றி!

நெல்லைத் தமிழன் said...

நம் பிறப்பு, குணாதிசயங்களை முப்பதிலிருந்து எழுபது சதவீதம் வரை நிர்ணயிக்கிறது என்பதே - இருக்கலாம். ஆனால் ஒரே பெற்றோருக்குப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தோடு இருப்பதைப் பார்க்கலாம். அது பெர்முடேஷன் காம்பினேஷனில் அந்தப் பரம்பரையிலிருந்து (அதிலும் கடந்த 4-5 தலைமுறை மேலே வரை. நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. 7 தலைமுறைக்கு முன்புள்ளவர்கள் நம் சொந்தக் காரர்கள் கிடையாது. இது சாஸ்திரத்திலும் உண்டு என்று ஞாபகம்) பல்வேறு கூறுகளை எடுத்துக்கொண்டு பிறக்கிறார்கள். சில காமன் பிஹேவியர் இருக்கலாம். ஆனால் பொதுவாக டிட்டோவாக இருவர் பிறப்பதில்லை. அதனால்தான், இவன் 'அப்பாவைக் கொண்டிருக்கிறான்', 'அம்மாவைக் கொண்டு' என்றெல்லாம் சொல்லுவார்கள். இருந்தாலும், முழுவதும் ஒருவரைக் கொண்டும் பிறப்பது வெகு வெகு அபூர்வம்.

வளர்ப்பினால் குணம் மாறாது. பேச்சு, பழக்கவழக்கங்கள் மாறலாம். (உதாரணமா பேச்சு, சாப்பிடும் வழக்கம், பிறரிடம் பழகுவது போன்றவை). ஆனால் ஒவ்வொருவருக்கும் ஆதாரமான சில குணங்கள் பிறப்பிலேயே வரும். அதனை 'மட்டையால் கட்டி அடித்தாலும் போகாது' என்று பெரியவர்கள் சொல்லுவர்.

டி.என்.ஏ டெஸ்ட் என்பது 100% உறுதியானதல்ல. அதுவும் பெர்முடேஷன் காம்பினேஷனில், அனேகமாக 'இதுதான்' என்று சொல்வார்கள். அதனால்தான் 'தனுஷ்' அந்த டெஸ்டுக்கு ஒத்துக்கொள்ளவில்லை ( நிச்சயம் இவர் பெற்றோர் அல்லர் என்று சொல்லிவிடமுடியும்)

ஜீவி said...

ஒவ்வொரு மனிதனும் வாழையடி வாழையாக இன்னொரு உயிரை சில மாற்றங்களுடன் உருவாக்குகிறான்.

கால்டன் கொள்கை (Galton Theory) என்று ஒன்று உண்டு. தாய் தந்தையர் பண்பில் 50%, பாட்டன்பாட்டியர் பண்பில் 25% சதமும், கொள்ளுத்தாத்தா- கொ.பாட்டியார் பண்பில் 12.5% ஒரு குழந்தையில் படியும் என்று அவர் சொன்னார்.

மரபியலில் எல்லா விஷயங்களையும் முந்திக்கொண்டு செல் (உயிரணு)வருகிறது. செல்லின் நடுவில் உட்கரு,அதைச் சுற்றி சைட்டோபிளாசம், இவற்றிற்கு பாதுகாப்பு சுவராக செல்சுவர்.

உட்கருவில் தான் குரோமோசோம் என்ற இனத்தைத் தீர்மானிக்கும் சமாச்சாரம் பதுங்கி இருக்கின்றது. இதன் எண்ணிக்கை இனத்திற்கு இனம் மாறுபடும். சுண்டெலி என்று அற்பமாக நினைக்கிறோம். மனுஷனுக்கும் சுண்டெலிக்கும் ஆறு குரோமசோம் தான் வித்தியாசம். மனுஷனுக்கு 46-ன்னா சு.எலிக்கு 40. ஆறே குரோமசோம்களில் மனுஷனா சுண்டெலியான்னு தீர்மானம் ஆகிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் வித்தியாசக் கணக்கிற்குச் சொன்னேன். மனிதப் பிறப்பிற்கென்றால் அந்த 46 குரோமசோம் எவன் ஏற்படுத்திய கணக்கோ என்று கனக்சச்சிதமாய் இருக்கும்.

KILLERGEE Devakottai said...

சுஜாதாவின் பாதை தனியோரு பாதையாகவே இருந்தது உண்மை.

மனித குணம் அமைவது வளர்ப்பின் வழியேதான் இருக்க வேண்டும்.

எதற்குமே வழிகாட்டி இல்லாமல் செல்வது சாத்தியப்படாதே...

நமது மூதாதையர்கள் நல்லவர்கள் என்பதற்காக நமது குழந்தையும் அப்படியே வளரும் என்று நம்பி தரங்கெட்ட குடும்பத்தில் வளர்க்க விட முடியாதே...

///எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...
அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே///

ஜீவி said...

@ Killergee

தேவகோட்டைஜி! இந்தப் பதிவை எழுதும் பொழுது இந்தப் பாட்டு தான் என் நினைவுகளில் இருந்து கொண்டே இருந்தது.. நீங்களே சொல்லி விட்டீர்கள்..

நல்ல வார்த்தைகளும் மனத்திற்கு இசைவான கருத்தும் கொண்ட கவிதை தான். அப்படியே இருக்க வேண்டும் என்று நம் மனம் விரும்புவதால் கவிதை வரிகளும் நம் மனக்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுகின்றன.

ஆனால் உடற்கூறு விஞ்ஞான உண்மைகளும் கண்டுபிடிப்புகளும் வேறே. தொடர்ந்து வாசித்து தாங்கள் உரையாட வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி,ஜி!

ஜீவி said...

பாலின குரோமசோன் சேர்க்கைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும். XX (பெண்) XY (ஆண்) சமாச்சாரங்கள். அதனால் விரவமாக அது பற்றி வேண்டாம். இந்த XY-கள் மாறும் போதோ அல்லது ஒரேயடியாக XXXX என்றோ அல்லது XXXy என்று அமையும் பொழுதோ பலவேறு நோய்களுக்கு வழிகோலும். உருவ அமைப்பிலும் வேறு பாடுகள் தோன்றும்.

இடையில் தளிர் சுரேஷூக்கு ஒரு விளக்கம். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று வழக்கத்தில் சொல்வது பழக்கத்தில் ஏற்பட்ட ஒன்று. குரங்கின் வாழ்வுச் சூழ்நிலையின் அடுத்தக் கட்ட வளர்ச்சியே மனிதன் என்று கொள்ள வேண்டும். நான்கு கால்கள் கொண்ட குரங்கின் நின்ற போஸ் (கை இரண்டு, கால் இரண்டு என்று) மனிதன். நின்ற வாக்கில் செய்ய வேண்டிய தேவைகள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்று கொள்ளலே தகும்.

ஜீவி said...

ஜீன்களில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வழி வகைகள் உண்டு. திருமணச் சேர்க்கை அதில் ஒன்று. குடும்ப உறவு முறைகளில் குறிப்பிட்ட சில கேடு பயக்கும் ஜீன்கள் உலா வருவது இயற்கை. கலப்புகளில் விகிதாச்சாரங்கள் அடிப்பட்டுப் போகலாம். அல்லது கூடலாம். ஒரே குடும்ப வம்சாவளியில் யார் வழியிலாவது சில நோய்களுக்கான ஜீன்களின் ஆக்கிரமிப்பு கூட இருக்கும் பட்சத்தில் குடும்ப உறவு முறையிலான திருமணங்களில் அந்த குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் வம்சம் வமசமாகத் தொடர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.
நெல்லை குறிப்பிட்டிருக்கும் 7 தலைமுறை சமாச்சாரம் இதன் அடிப்படையில் தான். மனு
சுமிருதியின் சுலோகம் ஒன்றில் ஏழு தலைமுறைக்கு நெருங்கிய உறவில் திருமணம் வேண்டாம் என்று ஆலோசனை கூறுவது இதனால் தான்.

ஜீவி said...

அது சரி, ஜீன்னா என்ன?..

ஜீன் என்பது சுத்த சுயம்பிரகாச புரத மூலக்கூறு. ஒரு அங்குல அளவை ஐந்து மில்லியன் கூறுகளாகப் போட்டால் அதில் ஒரு கூறு ஒரு ஜீன் என்று கணக்கு சொல்கிறார்கள். இப்படி 1,40,000 ஜீன்களாம் ஒருவர் உடலில்.

எல்லாம் உன் ஜீன் செய்யற வேலைடா என்கிறோம் ரொம்ப சகஜமாக. இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். பிறப்பின் பொழுது உள்ளர்ந்து வரும் ஜீன் என்கிற பொழுது ஏதோ குலப்பிறப்பு அடிப்படையில் என்று கொள்ளக் கூடாது. இதெல்லாம் பிறழ்தல்களாக சொல்லப்பட்ட கருத்துக்கள். பிறப்பு என்பது குழந்தையாய் ஒரு உடலிருந்து இன்னொரு உயிர் பிறந்து வருவது என்று கொள்ள வேண்டும். மனித குலத்தில் ஒரு மனிதரின் மன ஆரோக்கியமே அவர் தம் ஜீனின் ஆரோக்கியம் என்பது என் கணிப்பு.

ஜீனின் வேதியியல் பண்புகள் 19-ம் நூற்றாண்டின் சமீப்த்திய கண்டுபிடிப்பு தான். பிரான் சிஸ் கிரிக், ஜேம்ஸ் வாட்சன், மெளரிஸ் வில்கின்சன் என்று மூன்று --- திலகங்கள்.
(--- கோடிட்ட இடத்தில் உங்கள் மனசுக்குப் பிடித்த எந்த அடைமொழியை வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு அமிலம் தான் மரபு வழி பண்புகளுக்கு மூலமாக அமைகிறது என்று அயராத ஆராய்ச்சிகளின் முடிவாக உலகுக்கு அறிவித்தார்கள். அந்த அமிலத்திற்குப் பெயர் டிஆக்சிரையோ நியுக்கிளிக் அமிலம். இந்த அமிலத்தின் பெயர் சுருக்கம் தான் டி.என்.ஏ. என்ற சகல கலா வல்லவன். இந்த சகல கலா வல்லவனை உலகுக்கு அறிமுகப்படுத்திய மூன்று திலகங்களுக்கும் நோபல் பரிசு கைவலிக்க கைதட்டி வழங்கப்பட்டது.

Thulasidharan V Thillaiakathu said...

நான்கு கால்கள் கொண்ட குரங்கின் நின்ற போஸ் (கை இரண்டு, கால் இரண்டு என்று) மனிதன். நின்ற வாக்கில் செய்ய வேண்டிய தேவைகள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்று கொள்ளலே தகும்.//

இது சரிதான். சிம்பன்சி வகைகளை ஆராய்ச்சி செய்த ஒரு பெண் பயாலஜிஸ்ட் இப்போது பெயர் மறந்துவிட்டது அவர் அவற்றை ஆராய்ந்த போது ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கும் பழங்குடி மக்களின் பல செய்கைகளும் அப்படி இருப்பதாகச் சொன்னதை வாசித்த நினைவு...சிம்பன்ஸி, ஏப், கொரில்ல இவற்றில் எல்லாமே மனிதனின் கொஞ்சம் முன்னோடிகள் வேறு வேறு விதங்களில் எனலாம். ஏப் மூளை பல அரிய கடினமான கணக்குகளுக்குத் தீர்வு காணும் என்றும் ஆரய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏன் பல விலங்குகளின் இன்ட்யூஷன், கேல்குலேஷன் அறிவு என்று பலதும்...மனித இனம் அவற்றிலிருந்து அடுத்த கட்ட 6 ஆவது அறிவு விருத்தி அடைந்த ஓன்று என்றுதான் சொல்லப்படுகிறது...ஆப்பிரிக்க மக்களையும், சிம்பன்சி வகையறாக்களையும் ஒப்பிட்டு கூட சில காணொளிகள் கண்டதுண்டு....முக அமைப்பிலிருந்து நடவடிக்கைகள் வரை....நமக்கு சில சமயம் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு....ஜீன்கல் கூட இருப்பதாக வாசித்த நினைவு. ஆனால் அதன் பின் என்னாயிற்று ஆராய்ச்சி என்று பார்க்கவில்லை....பார்க்க வேண்டும்

அது போன்று க்ளோனிங்க்....இதற்கும் கூட இந்த க்ரோமசொம், பயொடெக், லிருந்து பலவும் உள்ளடங்கிய ஒன்றுதான்...மனிதனே மனிதனை உருவாக்கும் சக்தி கொண்டுவிட்டால் அதில் பல நாச வேலைகள் வரும் என்று அதற்குத்தடை விதிக்கப்பட்டது...

உங்கள் தகவல் பிறவற்றையும் வாசிக்கிறேன் அண்ணா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கில்லர்ஜி மனித குணம் என்பது வளர்ப்பிலும் மட்டுமில்லை....பிறவி குணம் என்று ஒன்று உண்டு அது பல சமயங்களில் மாறுவதில்லை. மூளை என்பதை படித்தால் புரியும். அதன் கெமிஸ்ற்றி படித்தால் பல விஷயங்கள் வியப்பாக இருக்கும்.....நம் தாய் தந்தை போல இருக்கணும் என்றில்லை...சில சமயம் என்னய்யா இது இவன் யாரு பிள்ளை...அம்மையும் போல இல்ல அப்பனைப் போலவும் இல்லை எங்கிருந்து வந்துச்சோ இந்தக் குடுமப்த்துக்கு என்று சொல்லுவதுண்டு இல்லையா...அது எங்கிருந்தோ அல்ல....அக்குடும்பத்தில் உள்ள தகப்பன் வழி அலல்து தாய் வழி மூதாதையர் யாருக்கேனும் உள்ள சில ஜீன்...பல தலைமுறை தாண்டியும் வரரும் வாய்ப்புண்டு. அது போலத்தான் சில நோய்களும் கூட....

கீதா

ஜீவி said...

மனிதனுக்கு 46 குரோமசோன்க்ள என்றால் சிம்பன்ஸி, கொரில்லா இனங்களுக்கு 48 குரோமசோன்கள். சிம்பன்ஸி இனம் தான் மனிதனோடு மிகவும் ஒத்துப் போகிறது. சார்லஸ் டார்வின் சொன்ன குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான்' கூற்று இதனால் தான்.

கட்டிடங்களில் பெயிண்ட் அடிக்கும் பொழுது கயிறு ஏணி உபயோகப்படுத்துவார்கள், இல்லையா?.. அப்படியான ஏணி போலத் தான் இருக்கும் டி.என்.ஏ.யின் அமைப்பு.
டிஆக்சிரைபோஸ் சக்கரை+ பாஸ்பேட் இரண்டும் ஏணியின் நீண்டவாகு பக்க அணைப்புகள். ஏணியின் நடு குறுக்குச் சட்டம் அடினின், குவானின், சைட்டோசின், தைமின் என்ற மென் காரங்களால் ஆனது. உடம்புக்குள் கயிறு ஏணி முறுக்கினாற் போல டி.என்.ஏ. தோற்றமளிக்கும்.

ஜீவி said...

டி.என்.ஏ.க்கு தங்கை போல ஆர்.என்.ஏ. (Ribonucleic acid) ஆர்.என்.ஏ.யில் டி.என்.ஏ.யில் இருக்கும் தைமின் மட்டும் இருக்காது. அதுக்கு பதில் யுராசில் என்னும் மென்காரம். ஆர்.என்.ஏ.க்கு இருப்பிடம் சைட்டோபிளாசம். ஆர்.என்.ஏ.யில் மூன்று வகைகள். தூதுவர் ஆ.என்.ஏ., டி.என்.ஏ. மரபுக் குறீயிடுகளை டெம்ளேட் ஆர்.என்.ஏ.க்கு அனுப்புகிறது. டெம்ளேட் ஆர்.என்.ஏ.வோ புரத உற்பத்தியை ஜாம்ஜாம்மென்று செய்து உயிர்நிலைக்கு உதவுகிறது. மாற்றல் ஆர்.என்.ஏ. என்ற இன்னொரு வகையோ புரத உற்பத்திக்குத் தேவையான அமினோ அமிலங்களை டெம்ளேட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. ஆக புரத உற்பத்திக்கான ஒரு தொழிற்சாலையே இங்கு ஸ்தாபிக்கப் பட்டு இடைவிடாது உற்பத்தி நடந்து கொண்டே இருக்கிறது. போக்குவரத்து வேலையை மாற்றல் ஆர்.என்.ஏ. செய்தால் இந்த டி.என்.ஏ.வோ உட்கருவில் சிம்மாசமிட்டு உட்கார்ந்து கொண்டு தொழிற்சாலையில் உற்பத்தியாகும் புரதம் எப்படி இருக்க வேண்டும் என்று தூதுவர் ஆர்.என்.ஏக்கு ஆணை
பிறப்பித்து வழி காட்டிக் கொண்டிருக்கும்.

ஓ, GOD! மனிதனின் வாழ்நாள் முழுதும் கொஞ்சம் கூட அசராது எப்படி இந்த வேலைகளெல்லாம் முறைப்படுத்திக் கொண்டு நடக்கின்றன என்பது தான் புரியாத புதிர்.

Bhanumathy Venkateswaran said...

மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள். மரபு என்பதை பற்றி பல ஆண்டுகளுக்கு முன் டாக்டர் ஜெயம். கண்ணன் அவர்கள் மங்கையர் மலரில் ஒரு தொடர் எழுதினார். அதில் நாம் ஏன் தந்தையின் கோத்திரத்தை எடுத்துக் கொள்கிறோம், ஏன் தந்தையின் இனிஷியலை குழந்தைகளுக்கு தருகிறார்கள் என்பதையெல்லாம் விஞ்ஞான ரீதியாக மிக அழகாக விளக்கியிருந்தார். அவை எனக்கு முழுமையாக நினைவில் இல்லாததால் இங்கே எடுத்து ஆள முடியவில்லை.

மனோ வியாதி கொண்ட ஒரு பெண்ணுக்கு பிறக்கும் முதல் குழந்தை பெண்ணானால், அந்த குழந்தையும் மனோ வியாதி கொண்டதாக அமைய 90% வாய்ப்பு உண்டாம். பரம்பரை வியாதிகள் ஐந்து தலைமுறை வரை தொடரும் என்கிறார்கள். உடல் பருமன் மூன்று தலைமுறைகள் வருமாம்.

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும் பொழுது, இருவரில் யாராவது ஒருவர் குடும்பத்தில் இருக்கும் வியாதிகள் கன்ஜெனிடல் டிசீஸ் ஆக ஆண் குழந்தைகளைத்தான் பாதிக்கும் என்றும், பெண் குழந்தைகள் அவற்றின் கேரியராக மட்டுமே இருப்பார்கள் என்பதும் ஏன் என்று புரியாத வியப்பு.

பிறவி குணம் என்பதை நாம் modify செய்ய முடியுமே ஒழிய முழுவதுமாக மாற்ற முடியாது. ஆனால் ஒரே குடும்பத்தில், ஒரே பெற்றோர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள் இரண்டு விதமாக இருப்பதும் ஒரு ஆச்சர்யம்தான். இங்கு ஜக்கி வாசுதேவின் விளக்கம் நமக்கு உதவலாம்.

"ஒரு மனிதன் ஒரு செயலை புரியும் பொழுது அதன் தன்மை அவன் உடலில் இருக்கும் ஒவ்வொரு திசுவிலும், ஏன் அவன் உயிர் சக்தியிலும் பதிந்து விடும். அதனால் ஒருவன் நல்ல செயல்கள் புரிந்த பிறகு அவனுக்குப் பிறக்கும் குழந்தை நல்ல பண்புகள் கொண்டதாகவும், அடாத செயல்கள் புரிந்த பிறகு அவனுக்குப் பிறக்கும் குழந்தை போக்கிரியாகவும் இருக்கிறது" என்றார். இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அப்பாதுரை said...

சுஜாதா அரை கிணறு தாண்டும் வழக்கம் கொண்டிருந்தவர். இதை அவர் எழுத்துக்கள் அத்தனையிலும் பார்த்திருக்கிறேன். ஒரு ஆங்கில எழுத்து விடாமல் ஈயடித்தவர். தன பாணியில் எழுதினாலும் அசலை அடிக்கடி மறைத்தவர். எழுத்தை மட்டும் இங்கே ஆய்வதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அவர் எழுத்தில் நிறைய வலிமை இருந்தது. (இப்போது படிக்கும் பொழுது முதல் பக்கத்திலேயே அலுத்து போகிறது - இதைப் பற்றி சுஜாதாவே கருத்து சொல்லியிருந்தார் வாசகர்கள் வளர்ந்து விட்டதாக. இருக்கலாம்) நான் அதிகம் படித்த தமிழ் எழுத்து சுஜாதாவின் எழுத்து தான். என்னை எழுதட் தூண்டிய சிலரின் வாசிப்புகளில் தலைமையானது சுஜாதாவின் எழுத்தே. பிந்நாளில் திஜா அமி ஜெகா சுச போன்றவரின் எழுத்துக்களைப் படித்தபொழுது வெளிப்பட்ட நேர்மை, அந்த நேர்மையின் இதம் சுஜாதாவின் வாசிப்பில் குறையத் தொடங்கியது குறை.

நீங்கள் அழகுறப் பயன்படுத்தயிருக்கும் 'வெகுதிரள்' சொல் சுஜாதாவுக்கும் மிகப் பொருந்தும். பெரும்பான்மையோரைத் தமிழ்ப் படிக்க வைத்தவர் அவர்தான். அந்த ஆதிக்கம் தமிழ் இலக்கிய (ஆ!) போக்கைத் திசை திருப்பியிருக்கிறது என்பது இருபது வருடங்கள் கழித்தே புரிந்தது. அன்றைக்கு சுஜாதா பத்து வரிகளுக்கொரு முறை காரணமே இல்லாமல் ஆங்கிலம் கலந்து எழுதியிருப்பது உறைத்த போது வளர்ந்து விட்டிருந்தேன். இன்றைக்கு ஆங்கிலக் கலப்பில்லாமல் பேச்சு வழக்கே இல்லை என்பது சற்றே உறுத்துகிறது. இதையும் அதையும் முடிச்சு போட முடியுமா தெரியவில்லை.

ஆயிரம் சொன்னாலும் ஜெமோ (ஐயோ!) போன்றவர்கள் இழைக்கும் இலக்கிய கொடுமைகளை சகிக்க வேண்டியிருப்பதை நினைக்கையில் வாசிப்பை விரும்ப வைத்த சுஜாதாவுக்கு கோவில் கட்டலாம்.அப்பாதுரை said...

டிஎன்எ பற்றிய மிக லேசான விளக்கம் இங்கே

Related Posts with Thumbnails