மின் நூல்

Sunday, August 11, 2024

இது ஒரு தொடர்கதை -- 16

                                             

"எங்கே விட்டேன்?" என்றார் புரந்தர தாசர்.

அவர் அப்படிக் கேட்டது ரொம்ப நாளைக்கு முன்னாடி பாதியில் விட்ட
பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்கு கேட்கும் கேள்வி போலிருந்தது.

"'சில பேருக்கு இருக்குங்கறதை இல்லேன்னு நிரூபிக்கறதிலேயும், இல்லேங்கறதை இருக்குன்னு நிரூப்பிக்கறதிலேயும் அதீத ஆசை உண்டு. அப்படிப்பட்டவங்க..'ன்னு சொன்னதோடு முடிஞ்சிருக்கு, அப்பா..    இப்போ  அதுக்குத் தொடர்ச்சியா சொல்லு.." என்றாள் வித்யா.

"சொல்றேன்.." என்று லேசாக செருமிக் கொண்டு தொடர்ந்தார் புரந்தர தாசர்.
"அப்படிப்பட்டவங்க இளம் வயசிலே இருந்தே சாமி நம்பிக்கை இருக்கறவங்களாகவோ இல்லை இல்லாதவங்களாகவோ இருந்தா கேக்கவே வேணாம்.  ஏன்னா, இன்னிக்கு வரை இல்லேனும் இருக்குன்னும் லாவண்ய  கச்சேரி நடத்திண்டிருக்கிற விஷயம் இந்த சாமி சமாச்சாரம் தான்.  நீயும் இந்த விஷயத்தைத் தான் சுத்தி சுத்தி வர்றே.. அதுக்குத்தான் கேக்கறேன்.  சமீபத்திலே சுற்றுலா மாதிரி வேற ஊர் எதுக்கானும் போனியா?.. அங்கே போய் ஏதானும் கோயிலுக்குப் போனியா?" என்று நேரடியாகவே மோகனிடம் கேட்க, தான் எழுதுவதை நிறுத்தி விட்டு தன் அப்பாவின் கேள்விக்கு அவன் என்ன சொல்லப் போகிறான் என்கிற ஆர்வம் தனக்கும் ஏற்பட்ட தோரணையில் மோகனைப் பார்த்தாள் வித்யா.

"போனேன்.  ஆனா அதை சமீபத்லேன்னு  சொல்ல முடியாது.. ஆறு, ஏழு மாசத்துக்கு  முந்தி."

"அதெல்லாம் சமீபத்திலே தான்.  மனசிலே நினைவுகள் தேங்கறத்தைப்  பத்தி இந்தக் கணக்கு.  ஆறேழு மாசம்லாம் இந்த  கணக்குக்கு ரொம்ப சமீபத்திலே தான்.  சொல்லு..  எந்த ஊர்?  எந்தக் கோயில்?,,"

"கும்பகோணம் சார்.  சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம்.  அதுக்குப்  போயிருந்தேன்.  கும்பகோணத்துக்குப் போய் சாமி கோயிலுக்குப் போகாம யாரானும் வருவாங்களா?"

"சொல்லு.. எந்தக் கோயில்?.."

"கும்பேஸ்வரர் கோயில் சார்."

"ஆதி கும்பேஸ்வரர் கோயிலா?.. ஆஹா.. என்ன பிர்மாண்ட கோயில் அது?" என்று வியந்து அண்ணந்து மேலே பார்த்தபடி  கைகூப்பினார் புரந்தர தாசர்.   மனசில் கும்பேஸ்வரரை வரித்துக் கொண்டு  கும்பிடுகிற மாதிரி இருந்தது அவரது செயல்.

"நீ கோயிலுக்கு போன  அன்னிக்கு நடந்தையெல்லாம் கொஞ்சம் ஞாபகப்படுத்திச் சொல்லு.. எழுத்தாளன் இல்லியா, அதனாலே அன்னிக்கு நடந்ததெல்லாம் லேசா முயற்சி செஞ்சாலே ஒன்னோட ஞாபகத்துக்கு வரும்ன்னு நினைக்கிறேன்.." என்று சொல்லிவிட்டு மோகனைக் கூர்மையாகப்  பார்த்தார் புரந்தரதாசர்.  உடனே சொல்ல விட்டுப் போனது எதுவோ திடீர்ன்னு நினைவுக்கு வந்த மாதிரி, "ஆங்! எழுத்தாளன்ங்கறதாலே இன்னொரு இடைஞ்சலும் உண்டு.  உன் நினைவிலிருந்து எடுத்துச் சொல்ல முனையும் பொழுது  நீ சொல்ற விஷயங்கள்லே உன்னோட கற்பனை கலக்கறத்துக்கும் சாத்தியம் உண்டு.  அதுனாலே அந்த இடையூறு இல்லாம பாத்துக்கோ.  என்ன நடந்ததோ அதை மட்டும் சொன்னாப்  போதும்.." என்று அவர் சொன்ன பொழுது அடக்க முடியாமல் பீரிட்டு வந்த சிரிப்பை மிக சிரமத்துடன் மோகன் அடக்கிக் கொண்டான்.

அதே சமயத்தில் ஒரு விஷயத்தை ஆராய்வதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டை நினைத்து மனசுக்குள் வியந்து கொண்டான்.  அதையே சிலாக்கிக்கிற மாதிரி, "கரெக்ட், சார்! அந்த எச்சரிக்கையோடையே சொல்றேன்.." என்று அன்று நடந்ததையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வர்ற பாவனையில் முயற்சித்து மோகன் சொல்ல ஆரம்பித்தான்.

"அன்னிக்கு கோயிலுக்குள்ளே நுழைஞ்சவுடனே எனக்கேற்பட்ட ஆச்சரியம்
என்னன்னா, க்யூவ்லே நின்னு தான் தரிசனம் பண்ண வேண்டியிருக்கும்ங்கற
எதிர்ப்பார்ப்புலே ரொம்ப கூட்டமா இருக்கும்ன்னு நெனைச்சேன். ஆனா என் நினைப்புக்கு மாறா கோயில்  ஜன நெரிசலே இல்லாம இருந்தது. காலம்பற எட்டு மணி அளவிலே தான்  இருந்ததாலே, இனிமே தான் ஜனங்க தரிசனத்துக்கு வருவாங்க போலிருக்குன்னு நெனைச்சிண்டேன். கர்ப்பகிரகத்துக்கு வெளிலே இருக்கற பிராகாரத்லே  நாலைஞ்சு பேர் தான் தேறும்,  பிரதட்சணம் பண்ணிகிட்டு  இருந்தாங்க..

"அவ்வளவு பிர்மாண்ட பிராகாரத்திலே இப்படி அங்கங்கே நாலைஞ்சு பேர் ஊர்ந்திண்டிருக்கறது அந்த பிர்மாண்டத்திற்கு அன்னியப்பட்டு 'ஹோ'ன்னு இருக்கற மாதிரி  இருந்தது.  தரைலே பெரிய  பெரிய பூக்களைச் சுமந்திண்டு மாக்கோலம்; போட்ட  கை விரல்களுக்கு  மோதிரம் தான்  போடணும்;  கொஞ்சம் பிசிறு இருக்கணுமே?.. ஊஹூம்.. அவ்வளவு நேர்த்தியா.  பிராகார சுற்றில் கொஞ்சம் உயர்த்திக் கட்டிய கல்மேடை பூரா வரிசை கட்டி லிங்கங்கள். கல்தூண்களில் பின்னங்கால் ஊன்றி எழுந்து நிற்கும் யாளிகள்.   இந்த யாளிகள் எல்லாம் இப்போ எங்கே போச்சுன்னு அந்த சூழ்நிலையிலும் கீற்றாய் எழுந்த  நினைப்பை தலைக்கு மேல் சடாரென்று பறந்த ஒரு  வெளவாலின் சப்தம் கலைத்தது.
 
"தாடி வெச்ச பெரியவர் ஒருவர் இடுப்லே காவி வஸ்தரம் தரித்தவாறு கொஞ்சம் உரத்த குரல்லே தேவார பாட்டுக்களை ராகத்தோட பாடிண்டே பிரதட்சணம் வந்திண்டிருந்தார்.  அந்த  ஏகாந்த சூழ்நிலைலே அவரோட குரல்  இனிமைலே தேவாரப் பாடல்களை கேக்கறது அற்புத அனுபவமா இருந்தது.. அந்த அனுபவத்தை மேலும் மேலும் கிரகிச்சிக்க அந்த  சமயத்லே ரொம்பவும் விரும்பினேன்.  அதுனாலே அவர் குரல் ஸ்பஷ்டமா எனக்குக் கேக்கற டிஸ்டன்ஸை மெயின்டைன் பண்ணிண்டு அவருக்கு பின்னாலே கொஞ்ச இடைவெளி விட்டு நானும் அவரைத் தொடர்ந்து பிரதட்சணம் பண்ணினேன்.  அப்போ ஒருவித  கிரக்கத்தோட பிராகாரத்தை வலம் வந்தது இப்போக்கூட உணர்ற மாதிரி மனசிலே தேங்கிப்  போய்க்  கிடக்கு..."

"ம்.." என்று ஒற்றை வார்த்தையை புரந்தர தாசர் அதிக ஓசையேற்படுத்தாமல் வெளிப்படுத்தியதே மோகன் மேலும்  சொல்வதற்குத் தூண்டிய மாதிரி இருந்தது.

"அந்த ஐயா முன்னே, நான் பின்னேன்னு ரெண்டு பேருக்கும் ஒரு மூணடி வித்தியாசம் தான் இருக்கும்.  கர்ப்பகிரக தரிசனத்திற்கு உள்ளே போகற மாதிரி சின்ன  சின்ன  படிகள் இருந்த இடத்திற்கு அருகில் வந்த பொழுது  சட்டென்று திரும்பி பின்னால் பார்த்தார் அந்தப் பெரியவர் .  மிக அருகில் என்னைப் பார்த்தவர் என் புஜத்தில் கை வைத்து, "வாங்க, உள்ளே போய் சாமி தரிசனம் செய்யலாம்.." என்று என்னையும் அவருடன்  கூட்டிச்  செல்கிற மாதிரி அந்தப்  படிகளில் ஏறி உள்  புகுந்தார்.  நானும் அவருக்கு பின்னாடியே ரொம்ப நெருக்கத்தில் உள்ளே போனேன்."

மோகன் சொல்லிக் கொண்டே வந்தது வித்யாவிற்கு பயங்கர சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கும் போலிருக்கு.  தொடை மீது ஊன்றிய வலது கையால் தாடையைத் தாங்கியபடி தன்னை மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

"சுவாமி சன்னதி பகுதிக்குள் நுழைந்ததும் அந்தப்  பெரியவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராய் காணப்பட்டார்.  தேவாரப் பாடல் அவர் மனுஷ உணர்வைத் தாண்டி அவரிடமிருந்து வெளிப்படுகிற மாதிரி கைகுவித்து கண்ணீர் மல்கப் பாடினார்.  அந்த சமயத்தில் ஐந்தாறு பேர் தான் அங்கிருந்திருப்போம்.  நாங்கள் ஒருவருக்கொருவர் கட்டுண்டு அந்த சந்நதியில் நின்று  கொண்டிருப்பது போலவான உணர்வு என்னை ஆட்கொண்டது. வீபூதி கீற்றுக்கு மேலே சந்தன பொட்டு பளிச்சென்று துலங்கும் சுவாமி அலங்காரம் மனசில் பதிந்து மெய் சிலிர்த்தது. கண் பார்வையில்  பட்டது லிங்கத் திருஉரு  தான்;  ஆனால் சடக்கென்று எங்கள் எல்லோரையும் கட்டிய அந்த உணர்வின் தலைவனாய் இறைவன் மந்தகாச புன்னகையுடன் நிற்பதாக ஒரு வினாடிக்கும் குறைந்த அவகாசத்தில் ஒரு எண்ணம் என்னில் வெட்டி விட்டுப் போனது.  குருக்கள் தீபாராதனைத் தட்டுடன் என் எதிரில் நின்ற உணர்வு கூட  இல்லாமல் நான் இருந்திருக்கிறேன் போலிருக்கு.  அந்தப் பெரியவர் என்னைத் தொட்டு ஏதோ சொன்னதும் தான் என்  நினைவு நிகழ் உலகிற்கு வந்தது போலத் தோன்றியது.  சட்டென்று தீபாராதனைச் சுடரைக் கண்களில் ஒற்றிக்  கொண்டு குருக்கள் கொடுத்த வீபூதியை வாங்கி நெற்றியில் பூசிக்  கொண்டேன்.  திருப்பி கர்ப்பகிரகததிற்குள் பார்த்த பொழுது பளபளவென்ற சுடரொளியில் சுவாமி ஜ்வலிப்பது போன்று தோன்றியது.அங்கிருந்து வெளிவர மனசே இல்லை.  'போலாமா?' என்று  என்னை அந்தப் பெரியவர் கேட்டதும் தான், அவர் சொன்னதைக்  கேட்டு நடப்பது போல சன்னதியை விட்டு அவர் பின்னாடியே வெளியே வந்தேன்."

"அன்னிக்கு நடந்ததைச்  சொல்றேன் பேர்வழின்னு எங்களையும் கும்பேஸ்வரரை தரிசிக்கற மாதிரி கோயிலுக்குள்ளேயே கொண்டு போய் விட்டுட்டே, பையா!" என்று புன்முறுவல் பூத்தார்  புரந்தர தாசர்.

"ஒரு விஷயத்தை ஒரு எழுத்தாளர் சொல்றார்ன்னா மத்தவங்க சொல்றதுக்கும் இவங்க சொல்றத்துக்கும் வித்தியாசம் இருக்குமில்லியா, அப்பா!  ஆனா இதை இவங்க  வீக்னஸா நீ நினைக்காத வரைக்கும்.." என்று வித்யா சொல்ல வந்ததை முடிக்கும் முன் குறுக்கிட்டார் புரந்தர தாசர்.  "சேச்சே.. இந்த நேரஷன் தான் எனக்கு வேணும்.. இம்மியளவு கூட கலப்படமில்லாத இந்த  உணர்வு தான் மோகன் அடைஞ்ச அந்த உணர்வோடையே என்னை யோசிக்கச் செய்யும்.. ப்ளீஸ்,   கன்ட்டினியூ.. அப்புறம்?" என்று புரந்தர  தாசர்  சொன்ன பொழுது வாசல் பக்கம் ஏதோ சபதம் கேட்டது..

"அம்மா வந்தாச்சு, போலிருக்கு, அப்பா!"  என்று வித்யா தன் தந்தையைப்
பார்த்தாள்.

அவள் சொன்னதை கேட்டுக் கொள்ளாத மாதிரி, "அப்புறம் என்ன  நடந்தது,
நீ சொல்லுப்பா" என்று மோகனிடம்  கேட்டார் புரந்தர தாசர்.


(தொடரும்..)


6 comments:

ஸ்ரீராம். said...

அம்மாடி...   ஒரே நாளில் ஒரே மூச்சில் 8 பாகங்களா...    கொஞ்சம் கொஞ்சமாகத்தான் படிக்க வேண்டும்......

என்று எழுதி விட்டு பகுதி 8 க்கு சென்றால் ஏற்கெனவே 2021- ல் வெளியிடப்பட்டது மீள்பதிவாகி இருக்கிறது.  ஆனாலும் முன்கதையை ஊகிப்பது சிரமம்தான் எனக்கு. 

ஒரு முன்கதைச் சுருக்கம் தந்து பகுதி 15 ஐ தந்திருக்கலாம் என்று தோன்றியது.

ஸ்ரீராம். said...

பழைய பகுதிகளில் பின்னூட்டங்களை படித்தபோது ஒன்று தெரிந்தது.  அது ஏன் அப்போது தோன்றவில்லை என்றும் தோன்றியது!

ஜீவி said...

பாதியில் விட்ட தொடர்களை இப்பொழுது தொடர்வதாக உத்தேசம். எந்த அளவுக்கு அது சாத்தியப்படும் என்று தெரியவில்லை. நானும் உங்கள் நிலையில் தான் இருக்கிறேன். ஓவ்வொன்றையும் ஆரம்பத்திலிருந்து படித்துப் பார்த்துத் தொடர வேண்டும். முன் கதை சுருக்கம் வெளியிட்டால் வாசிக்கும் ரசனை போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இருந்தாலும் முடியுமா பார்க்கிறேன்.

கோமதி அரசு said...

//"அன்னிக்கு நடந்ததைச் சொல்றேன் பேர்வழின்னு எங்களையும் கும்பேஸ்வரரை தரிசிக்கற மாதிரி கோயிலுக்குள்ளேயே கொண்டு போய் விட்டுட்டே, பையா!" என்று புன்முறுவல் பூத்தார் புரந்தர தாசர்.//

ஆமாம், கும்பேஸ்வரரை தரிசனம் செய்து விபூதி பிரசாதம் பெற்று கொண்ட உணர்வு.

பழைய பதிவை படித்து பார்க்க வேண்டும்.

Anonymous said...

அப்படியே உங்கள் பழைய பின்னூட்டங்களை இப்பொழுது பார்க்கையில் அதுவும் சுவாரஸ்யமாக இருக்கும் சகோ.
வாசித்து உங்கள் அனுபவத்தைச் சொன்னமைக்கு நன்றி.

ஜீவி said...

மேலே இருக்கும் பின்னூட்ட பதில் நான் போட்டது தான். Anonymous -- என்று வந்து விட்டது.

Related Posts with Thumbnails