மின் நூல்

Friday, April 26, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                                 16     


 வுன் ரயில் நிலைய பார்ஸல் செக்ஷன் பொறுப்பாளர் என்னைப் பார்த்தவுடனேயே  பில்லைப் பார்த்து என்னைக் கையெழுத்துப் போடச் சொல்லி பார்ஸலைத் தந்து விட்டு லேசாகப் புன்னகைத்தார்.  இரண்டு பேரும் பழக்கமாகிவிட்டோம் என்பதற்கு அடையாளம் அது என்று நினைத்து நானும் புன்னகைத்து, "தேங்க்ஸ்.. வரேன், சார்.." என்று விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தேன்.

டவுன் ரயில் நிலையத்திற்கு இடது பக்கம் அதல பாதாளத்திற்கு இறங்குகிற மாதிரி கீழே இறங்கி  திருமணி முத்தாறு தரைப்பாலம் தாண்டி மறுபடியும் சின்ன மேடேறினால் இரண்டாவது அக்கிரஹார-- தேரடித்  தெரு-- சந்திப்பு வந்து விடும். என் ஆஸ்தான  இடம் வந்து கதவு திறந்து பார்ஸலை  டேபிளின் மேல் வைத்தேன்.

எம்.என்.ஆர். அப்பொழுது தான் அவரது கடையின் உள்ளிருந்து வெளியே வந்தார்.  எப்பொழுதுமே அவர் அதிகம் பேச மாட்டார்.  நான் பேச்சுக்  கொடுத்தால் விளக்கம் மாதிரி நிறைய சொல்லுவார்.  இன்றைக்கோ அதிசயமாக "மாதவி வந்து ஒரு வாரம் ஆகப்போறதில்லையா?" என்றார்.

"ஆமாம், சார். அடுத்த வார இஷ்யூ கூட வந்து விட்டது.  இப்போத் தான் ஸ்டேஷன் போய் வாங்கிக் கொண்டு வந்தேன்.." என்றேன்.

"ஒண்ணும் ப்ராபலம் இல்லியே?" என்று சந்தேகக் கொக்கி போட்டார்.

"இல்லே, சார். வாசுதேவன் என்னைப் பார்த்ததுமே கொடுத்திட்டார்.."என்றேன்.

"நல்லது. அப்படியே போகட்டும்.." என்றவர் "நான் சாயந்திரம் வரமாட்டேன். கொஞ்சம் வீட்லே வேலை இருக்கு.. நாளைக்குப் பாக்கலாம்.." என்று சைக்கிளின் ஸ்டாண்டை விடுவித்தார்.

நானும் "பாக்கலாம், சார்.." என்று சொல்லி விட்டு  அவர் கிளம்பியதும் உள் பக்கம் வந்து பார்ஸலைப்  பிரித்தேன்.  இந்தத் தடவை  மாதவியின்  முதல்  பக்கத்தை நீலக்கலரில்  பிரமாதப்படுத்தியிருந்தார்கள்.    எண்ணிப் பார்த்தேன். 30 பத்திரிகைகளும் 3 சின்ன போஸ்டர்களும் இருந்தன.   நாளைக்குத் தான் டெலிவரி பண்ண வேண்டும்.

பொதுவாக பத்திரிகைகளின் கடைகளுக்கான  விற்பனை வழக்கம் முகவர்களுக்கும் கடைக்காரர்களுக்குமான  உறவு  முறையில் அமையும்.  அடுத்தடுத்த இதழ்களை கடையில்  விநியோக்கிக்கும் பொழுது அதற்கு முதல் இதழுக்கான விற்பனைத் தொகையை வசூலித்து விடுங்கள் என்று எம்.என்.ஆர். சொன்ன அறிவுரையின் படி செய்யலாம்  என்றே தீர்மானித்திருந்தேன்.

அடுத்த நாள் மாதவியின் இரண்டாவது இதழை கடைகளுக்கு  விநியோகிக்கும் பொழுது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி திருப்பப்பட்டு விட்டன.  அதாவது  30-ல் பதினைஞ்சோ, பதினாறோ தான் விற்றிருந்தது.  ஒரிரண்டு கடைகளிலேயே முப்பதையும் பிரித்துப் போட்டு விட்டால், விற்காது  போய் விடப்போகிறதே என்று பயந்து தான் பரவலாக பலரின் பார்வையில் படட்டுமே என்று பல கடைகளுக்கு விநியோகித்தேன்.   இருந்தும் தேங்கி விட்டது.

பத்திரிகையை விற்ற கடைக்காரர்களுக்கு 10% கமிஷன் தர வேண்டும்.  கமிசனைக் கழித்துக் கொண்டு நாலைந்து பேர் தந்திருப்பார்கள்.  ஓரிருவர்  "நீயே கணக்கு வைச்சுக்கோ.  அடுத்த தடவை சேர்த்து  வாங்கிக்கோ.." என்று சொன்னார்கள்.  அதெல்லாம் போகட்டும்.  செவ்வாய்ப்பேட்டையில் ஒரு  கடைக்காரப் பெரியவர் சொன்னது  பொட்டில் அடித்த மாதிரி இருந்தது.

"தம்பீ!  இது புதுப் பத்திரிகை..  நிறைய விளம்பரம் பண்ணனும்.  கடைக்குக் கடை விக்கறதோ இல்லையோ போஸ்டர் தொங்கி ஒரு பரபரப்பு ஏற்படுத்தணும்.   பிரகாசமான விளக்குகள் எரியும் போது இது சிம்னி விளக்கைக் கொளுத்தி வைச்ச மாதிரி இருக்கு.  பத்திரிகைகாரங்க கிட்டே நிறைய  கடைலே மாட்ற போஸ்டர் கேட்டு வாங்கு.   பிக்-அப் ஆறதுக்கு இதான் நேரம்.  ஆயிடுச்சின்னு வைச்சுக்கோ.. அப்புறம் தன்னாலே ஜனங்களே கேட்டு வாங்குவாங்க.. தெரிஞ்சிக்கோ..." என்று அவர் சொன்னது அலிபாபா குகைக் கதவைத் திறந்த மந்திரமாக எனக்குப் பட்டது.

அதே வேகத்தில் விற்காத  இதழ்களைச் சுமந்து கொண்டு  நூலகம் வந்தவன்  உடனே மாதவி பத்திரிகை பொறுப்பாளர்களுக்கு   இருக்கும் நிலையை அறிவுறுத்தி  இப்படி 3 போஸ்டர்கள் அனுப்பினீர்கள் என்றால் விற்பனை
பாதிக்கும்.  தாரளமாக போஸ்டர்கள் அனுப்புங்கள்.  என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன்.." என்று கடிதம் எழுதி பெரிய கடை வீதி தபால் ஆபிஸில் போஸ்ட் செய்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து மாதவி பத்திரிகையிலிருந்து   கடிதம் வந்தது.    'பத்து பிரதிகளுக்கு  ஒரு போஸ்டர் என்ற கணக்கில்  தான் போஸ்டர் அனுப்ப முடியும்.  எல்லா முகவர்களுக்கும் எந்தக் கணக்கில் போஸ்டர்கள் அனுப்புகிறோமோ அந்தக் கணக்கில் தான் உங்களுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது.  உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக அதிக போஸ்டர் அனுப்ப முடியாது...' என்று கறாராகக் கடிதத்தை முடித்திருந்தார்கள்.

கடிதத்தின் வாசகங்கள் என்னை உறுத்தினாலும் இதற்குள் அடுத்த வாரத்திற்கான 30 பத்திரிகைகள், அதற்கான 3 போஸ்டர்கள் என்று வழக்கம் போல வந்து  சேர அவற்றைக் கடைகளுக்கு வழங்கும் போது இந்தத் தட வை சென்ற இதழின் 20 பிரதிகள் திரும்பி விட்டன.

அதற்குள் மாதவி பத்திரிகை அலுவலகத்திலிருந்து இதுவரை அனுப்பி வைத்திருந்த பிரதிகளைக் கணக்கிட்டு அதற்காக நான் அனுப்ப வேண்டிய தொகையை குறிப்பிட்டு உடனே அனுப்பி வைக்க அறிவுறுத்தி கடிதம் வந்து விட்டது.  ஆக, அந்த பத்திரிகை அலுவலகத்தைப் பொறுத்த மட்டில் அவர்கள் பத்திரிகையை வெளியே அனுப்பி விட்டால் போதும். அது விற்ற மாதிரி தான் கணக்கு என்பது புரிந்தது.  அந்தப் புரிதல் எனது அடுத்த கடித வாசகத்தில் பிரதிபலித்தது.

"அது என்ன 10 பிரதிகளுக்கு ஒரு போஸ்டர் என்று கணக்கு?.. இது புது பத்திரிகை.  இப்படி ஒரு பத்திரிகை வெளிவருகிறது என்ற செய்தியை மக்களுக்குத் தெரிவிப்பதே கடைகளில் தொங்க விடப்படும் அந்த குட்டி போஸ்டர்கள் தான்.  அதனால் போஸ்டர்கள் அனுப்புவதில் கஞ்சத்தனம் வேண்டாம்.  30 பிரதிகளைக் கடைகளில் போடும் போதே 20 பிரதிகள் திரும்பி வந்து விடுகின்றன.  சிரிக்கத் தான் வேண்டும்.." என்று கடிதத்தை முடித்திருந்தேன்.

இந்த எனது கடிதம் அவர்களைச் சீண்டியிருக்க வேண்டும்.  கடிதப் போர் போல பதில் வந்தது.. "சேலம் போன்ற பெரிய  நகரத்தில் வெறும் 30 பிரதிகள் கூட விற்க முடியாத உங்கள் நிலை கண்டு எங்களுக்கு சிரிப்பதற்கு நேரமில்லை.." என்ற நக்கல்.  அவ்வளவு தான் அவர்களால்    சொல்ல முடிந்தது போலும்.   அல்லது இதே போல பல ஊர்களில்   பத்திரிகை விற்பனையாகாத நிலை இருந்ததோ தெரியவில்லை.

'என் முகவர் நியமனத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த இதழ் பத்திரிகைகளை எனக்கு அனுப்ப வேண்டாம்.  அனுப்பினால் பெற்றுக் கொள்ள மாட்டேன்..' என்று மணியாடர் பாரத்தில் குறிப்பு எழுதி, எம்.என்.ஆரிடம் கைமாற்றாக பணத்தை வாங்கி அவர்களுக்கு  அனுப்ப வேண்டிய முழுத்  தொகையையும் பைசா பாக்கியில்லாமல் தீர்த்து வைத்தேன்.

அடுத்த நாள்  என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் நிகழ்ந்தது..


(வளரும்)
20 comments:

ஸ்ரீராம். said...

மாதவி என்றாலே கஷ்டம்தானா? பெயர்க் கோளாறா? மற்ற ஊர்களில் எப்படி விற்றதாம்? போஸ்டர் இருந்தால்தான் விளம்பரம் செய்ய முடியுமா? ஆனால் அந்தக்காலத்தில் வெகு பெரிய வழி ஒன்றும் இருந்திருக்காது.

ஸ்ரீராம். said...

அது சரி, மாதவியின் கன்டென்ட்ஸ் பற்றி இன்னமும் ஒன்றும் சொல்லவில்லை நீங்கள். யார் யார் எழுதினார்கள், என்னென்ன ஆர்டிகிள்ஸ் வரும்? இப்படி விவரம்...

கோமதி அரசு said...

//அது என்ன 10 பிரதிகளுக்கு ஒரு போஸ்டர் என்று கணக்கு?.. இது புது பத்திரிகை. இப்படி ஒரு பத்திரிகை வெளிவருகிறது என்ற செய்தியை மக்களுக்குத் தெரிவிப்பதே கடைகளில் தொங்க விடப்படும் அந்த குட்டி போஸ்டர்கள் தான். அதனால் போஸ்டர்கள் அனுப்புவதில் கஞ்சத்தனம் வேண்டாம். 30 பிரதிகளைக் கடைகளில் போடும் போதே 20 பிரதிகள் திரும்பி வந்து விடுகின்றன. சிரிக்கத் தான் வேண்டும்.." என்று கடிதத்தை முடித்திருந்தேன்.//

நன்றாக கேட்டீர்கள்.

கோமதி அரசு said...

//அடுத்த நாள் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் நிகழ்ந்தது..//

நீங்கள் கேட்டது போல் அனுப்பி விட்டார்களா?
அறிய ஆவல்.

வே.நடனசபாபதி said...

நான் நினைத்தகது போலவே என் நண்பருக்கு ஏற்பட்டது தங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. புதிய இதழ்களை ஆரம்பகாலத்தில் சந்தைப்படுத்தூவது கடினம். நிச்சயம் 50 விழுக்காடு இதழ்கள் விற்கப்பட்டிருக்காது. விற்கப்பட்ட இதழ்களுக்கும் சில கடைகளில் பணம் உடனே தரமாட்டார்கள். போகப்போக அந்த இதழில் வரும் படைப்புகள் வாசகர்களைக் கவரும் வரையில் இந்த நிலை தொடரும். அதனால் தான் சில இதழ்கள் வெளிவருமுன்னே வாசகர்களைத் தொடர்புகொண்டு சந்தா பெற்றுக்கொண்டு அஞ்சல் மூலம் அனுப்புவதுண்டு. தங்களுக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை வைத்து பிற்பாடு சில இதழ்களுக்கு சந்தா சேர்க்க உதவினீர்கள் என அறிவேன்.

தங்களை அந்த இதழின் உரிமையாளர்கள் தொடர்ந்து முகவராக இருக்க வேண்டியிருப்பார்கள் என நினைக்கிறேன். அதுதான் தங்களின் மகிழ்ச்சிக்கு காரணமா என அறிய காத்தீருக்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//மாதவி என்றாலே கஷ்டம்தானா? பெயர்க் கோளாறா? //

என்ன ஸ்ரீராம் இது?.. கண்ணகி என்றாலே கஷ்டம் தானா என்று நான் நினைப்பது போக,
நீங்கள் என்னவென்றால், மாதவி என்றாலே என்கிறீர்கள்? இந்த இரண்டு பேரின் கஷ்டத்திற்குக் காரணமான கோவலன் பாடு குஷி போலிருக்கு!..

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//மற்ற ஊர்களில் எப்படி விற்றதாம்? //

வஞ்சனையில்லாத நம் உழைப்பு நமக்குத் தெரியும். அவர்கள் அச்சடித்த காகிதத்தை 20% கழிவு போக பாக்கிப் பணத்தை வசூலிக்கக் கறாராக இருக்கும் பொழுது அதையெல்லாம் பற்றி யார் கவலைப் பட்டார்கள்?..

//போஸ்டர் இருந்தால்தான் விளம்பரம் செய்ய முடியுமா?//

போஸ்டர் என்று நான் சொல்ல வருவது, படத்தில் காட்டியிருக்கிறேன் பாருங்கள், அது மாதிரி கடைகளில் தொங்க விடப்படும் பத்திரிகையின் உள்ளடக்க விவரத்தைத் தெரிவிக்கும் முழு நீளக் காகிதங்கள். தினசரி பத்திரிகையில் ஒரே செய்தியை ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு விதமாக வெளியிடும். எந்தப் பத்திரிகைச் செய்தி அந்தச் செய்தியை தொங்க விடப்படும் தனது போஸ்டரில் பரபரப்பாகத் தெரிவிக்கிறதோ அந்த தினசரியை இயல்பாகவே வாங்கிப் படிக்கும் ஆர்வம் மக்களுக்கு ஏற்படும், இல்லையா?.. அந்த அளவில் தான் இந்த மாதிரியான போஸ்டர்களின் பங்களிப்பு அவசியமாகிறது.


ஜீவி said...

@ ஸ்ரீராம்

//ஆனால் அந்தக்காலத்தில் வெகு பெரிய வழி ஒன்றும் இருந்திருக்காது.//

எனக்குத் தெரிந்து அந்தக் காலத்தில் ஆனந்த விக்டன் பத்திரிகை தமிழக ரயில் நிலையங்களில் நீலக்கலர் பூசிய இரும்புத் தகடு போர்டுகளில் வெள்ளை எழுத்துக்களில்
'இந்த வார ஆனந்த விகடன் வாசித்தீர்களா?' என்று எழுதப்பட்ட வாசகங்களோடு போர்டுகளை பிளாட்பாரங்களில் தொங்க விட்டார்கள். இது தான் அந்நாட்களில் பெரிதாகப் பேசப்பட்ட பத்திரிகை விளம்பரம்.

குமுதம் என்ன செய்தது என்றால் தனது முதல் இதழை இலவசமாகவே மத்திய தர, மேலதட்டு வீடுகளில் விநியோகித்தார்கள். அவர்களின் முதல் இதழ் விற்பனைக்கே வரவில்லை. இலவச விநியோகம் தான். எதையும் முதலில் செய்வது குமுதம் என்ற பெயரை அந்தக் காலத்திலேயே தட்டிக் கொண்டு போன பத்திரிகை அது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//அது சரி, மாதவியின் கன்டென்ட்ஸ் பற்றி இன்னமும் ஒன்றும் சொல்லவில்லை? //

மாதவி ஒரு அரசியல் வார ஏடு. அந்நாட்களில் அரசியல் ஏடுகளுக்கு ஆதர்சமாக இருந்ததே திமுக சார்பான ஏடுகள் தாம். அவர்களின் ஏடுகள் அந்தக் கட்சி சார்ந்த தலைவர்களாலும் அவர்களை ஆசிரியராகக் கொண்டும் நடத்தப் பட்டன. உதாரணமாக மன்றம் என்ற ஏடு நாவலர் நெடுஞ்ச்செழியன் ஆசிரியராக இருந்து வெளிவந்த பத்திரிகை.

மாதவி இதழ் ஈ.வி.கே. சம்பத் அவர்கள் தொடங்கிய தமிழ் தேசியக் கட்சியின் சார்பான ஏடு என்று சொல்லப்பட்டது. இந்த இதழுக்கு திருவாரூர் தியாகராசன் என்பவர் பொறுப்பாசிரியராக இருந்தார். பொதுவாக எல்லா இதழ்களின் செயல்பாடுகளும் அது அதற்கு சம்பந்தப்பட்ட இலாகா (பிரிவு) சம்பந்தப்பட்டிருக்கும்.

பத்திரிகையின் உள்ளடக்கம். பிரசுர சம்பந்தமானவைகளை ஆசிரியர் குழு (எடிட்டோரியல்) பார்த்துக் கொள்ளும்.

விற்பனை, சந்தா அது சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்பெல்லாம் விற்பனை, விளம்பர இலாகா பார்த்துக் கொள்ளும். அதற்கும் ஆசிரியர் குழுக்கும் அறவே சம்பந்தமில்லை.

பெரும் தனக்காரர்கள் தாங்கள் செய்யும் பலவித முதலீடுகளில் பத்திரிகைத் துறையையும் ஒன்றாகக் கொண்டு முதலீடு செய்து உரிமையாளர்களாய் இருக்கும் காலத்தில் இப்பொழுது இருக்கிறோம். பல்வேறு தொழில்களில் முதலீடுகள் செய்கிற மாதிரி பத்திரிகைத் துறையும் ஒரு தொழில் முதலீட்டுத் துறை அவர்களுக்கு. அவ்வளவு தான்.

ஜீவி said...

@ கோமதி அரசு

அந்நாட்களில் திமுகவின் பாதிப்பு (Influence) என்னிடம் படிந்திருந்தது. அவர்களின் பேச்சாற்றலும், எழுத்து வன்மையும், தமிழார்வமும் என்னை வசப்படுத்தியிருந்தன.
இருந்தும் மபொசியின் தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கட்சி போன்றவற்றின் மீதான பரிவு திமுகவின் பாதிப்பு போலவே என்னை பாதித்தன. எல்லாவற்றிற்கும் உறவுப் பாலம் தமிழ் என்ற மூன்றெழுத்து தான் என்று இப்பொழுது உணர்கிறேன். இப்படிப் பிரித்துப் பார்க்கிற தெளிவான analysis அந்தப் பருவத்தில் இல்லை.

எல்லாத் துறைகளிலும் field workers உண்டு. அப்படிக் கடிதம் எழுதின வேகம், இந்த அடிமட்ட உணர்வின் பிரதிபலிப்பு தான். பத்திரிகையின் வளர்ச்சிக்கான ஆணிவேருக்கு நீறூற்ற வேண்டும் என்பதை எனக்கு சுலபமாகப் புரிய வைத்தவர் அந்த செவ்வாய்ப்பேட்டை கடைப் பெரியவர். ஒரு பத்திரிகையின் விற்பனை என்பது சாதாரன விஷயமில்லை.
நானும் ஒரு பத்திரிகையை நடத்துவதில் பங்கு கொண்ட பொழுது இதையெல்லாம் அனுபவ பூர்வமாகவே தெரிந்து கொண்டேன்.

தொடர்ந்து வாசித்து வாருங்கள், கோமதிம்மா.

G.M Balasubramaniam said...

அச்சான எல்லா இதழ்களும்விற்பனை ஆகுமா அப்படி ஆகாவிட்டால் என்ம்ன செய்வார்கள் நஷ்டக்கணக்கா

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

அப்புறம் மாதவி பத்திரிகையை சேலத்தில் நான் எந்தக் கடைகளிலும் பார்த்தாக நினைவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு பத்திரிகை வெளி வரவில்லை என்று நினைக்கிறேன்.

அரசியல் நினைவுகள் நிறைய அலைமோதுகின்றன. என் வசந்த காலமும் அரசியல் பாதி பத்திரிகை பாதி என்று அமைந்த ஒன்று. கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என்ற வாலிப பருவ ஆழமில்லாத அரசியல் சார்பு நிலைகளிலேயே வளர்ந்த பருவத்திலும் பலர் தேங்கி விடுவதுண்டு. நல்ல வேளை என் அளவில் அப்படி நடக்கவில்லை.

பொதுவாக சமய இதழ்கள் முன்னாலேயே சந்தா வாங்கிக் கொண்டு வெளி வரும். நா. பார்த்தசாரதி அவர்களுடன் தொடர்பிலிருந்த பொழுது அந்த மாதிரி அவரின் 'தீபம்' இதழுக்கு நிறைய சந்தாதாரர்கலைச் சேர்த்துத் தந்திருக்கிறேன். தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றம் தொடர்புகளில் இருந்த பொழுது 'தாமரை' பத்திரிகையை இலக்கியம் அறிந்தோரிடைய பிரபலப் படுத்த வேண்டும் என்ற இலட்சிய நோக்கில் பலருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இது பற்றியெல்லாம் அந்தந்த பகுதிகள் வரும் பொழுது சொல்கிறேன்.

பெருந்தொகுப்புகள் கொண்ட புத்தகங்களுக்கு 'முன் வெளியீட்டுத் திட்டம்' என்ற பெயரில்
கொஞ்சம் தள்ளுபடியில் தொகை பெற்றுக் கொண்டு ஒரு ஆதார நிதி திரட்டிப் பின் வெளியிடுவதும் உண்டு.

என் மகிழ்சிக்கான காரணம் வேறே. அது தெரிய வரும் பொழுது நீங்கள் மகிழ்வீர்கள்.

தொடர்ந்து வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, ஐயா.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

//அச்சான எல்லா இதழ்களும்விற்பனை ஆகுமா அப்படி ஆகாவிட்டால் என்ம்ன செய்வார்கள் நஷ்டக்கணக்கா //

நீங்கள் வாசித்ததிலிருந்தே தெரியவில்லாய்யா, யாருக்கு நஷ்டமென்று?..

இலட்சிய நோக்குடன் வெளிவரும் ஆர்வலர்களின் வெளியீட்டுப் பத்திரிகைகளுக்குத் தான் நஷடக் கணக்கே.

அரசியல் பத்திரிகைகளுக்கு Multy Purpose Project மாதிரி பல திட்டங்களும் நோக்கங்களும் உண்டு. அரசியல் என்பதே பல நோக்கங்கள் கொண்ட வியாபாரமாகத் தான் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

பொதுவாக வெகுஜன இதழ்களில் வளர்ச்சி அடையாத இதழ்கள் Return copies வாங்கிக் கொள்வார்கள். அச்சடித்த காகிதங்கள் என்றும் வேஸ்ட் அல்ல. பெரும் சர்குலேஷன் கொண்ட செய்தித்தாட்கள் Recycling-க்கு உபயோகப்படுத்திக் கொள்வார்கள். நம் வீடுகளில் பழைய பேப்பர்களை விற்பனைக்கு வாங்கிக் கொண்டு என்ன செய்கிறார்களோ, அதே மாதிரி தான். எந்த விதத்தில் பார்த்தாலும் பெரும் பத்திரிகைகளுக்கு நஷ்டம் என்பதே இல்லை. சலுகை விலையில் News Print காகிதங்களுக்கு கோட்டா கூட உண்டு.

காகித பிஸினஸ் பெரும் வியாபார நோக்கு கொண்டவை.

மரங்களைக் காப்பதற்காக இப்போது அமுலுக்கு வந்திருக்கும் திட்டங்கள் வரவேற்க வேண்டியவை.

Bhanumathy Venkateswaran said...

மிகவும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள். அந்த வயதிலேயே என்ன தைர்யம்! தெளிவு! பிரமிப்போடும் மகிழ்ச்சியோடும் தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அவர்களின் தமிழ் தான் எல்லோரையும் ஈர்த்தது.

"சேலம் போன்ற பெரிய நகரத்தில் வெறும் 30 பிரதிகள் கூட விற்க முடியாத உங்கள் நிலை கண்டு எங்களுக்கு சிரிப்பதற்கு நேரமில்லை.." என்ற நக்கல்.
ஒரு சிறுவனிடம் அவர்களுக்கு என்ன காறல்.

மாதவி,அரசியல் ஆகிவிட்டது. உங்கள் உழைப்பை மெச்சுகிறேன்.
மகிழ்ச்சி கொடுத்த விஷயம் என்ன வென்று அடுத்தாற்போல்
பார்க்கிறேன்.

நாங்கள் திருமணம் முடித்த வருஷம்,சேலம் வந்தது 1966.இல். நீங்கள் ஸேலத்தை
விட்டுக் கிளம்பி இருப்பீர்கள்.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

தைர்யத்திற்கும் தெளிவுக்கும் காரணாம் வஞ்சனையறியாத உழைப்பு தான்.
தங்கள் மகிழ்ச்சிக்கு என் நன்ரி. தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

அதுசரி.. ஆழ்வார்களின் பாசுரங்கள் அவர்களை ஏன் ஈர்க்கவில்லை?
அவர்களின் கடவுள் நம்பிக்கையின்மையை விட்டு விடுங்கள். அன்னை தமிழின் அட்டகாசமான எழுச்சி அல்லவோ திராவிட வேதமான திருவாய்மொழி?

மொழிவாரி மாகாணங்கள் பிரிந்த பிறகு திராவிடத்திற்கு வேலையில்லாது போனது தான் யதார்த்தம்.

1966-ல் நான் பவானியில் இருந்தேன், வல்லிம்மா. தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

Unknown said...

G00d.keep it up

Thulasidharan V Thillaiakathu said...

செம தைரியமான முடிவு! உங்கள் கடிதத்தின் வரிகள் சரியே. பின்னே விளம்பரம் இல்லாமல் புதுப்பத்திரிகை எப்படி விற்றுப்போகும்? அவர்கள் இன்னும் சற்று வின் வின் சிச்சுவேஷனுக்கு இறங்கியிருக்கலாம்...

உங்கள் அனுபவங்கள் பிரமிக்க வைக்கிறது அண்ணா

அடுத்த அந்த சந்தோஷமான விஷயம் என்ன என்று அறிய ஆவலுடன் போகிறோம் அடுத்த பகுதிக்கு..

கீதா

ஜீவி said...

@ கீதா

இடையில் இடையில் ஆரம்பத்திலிருந்து வாசித்து வருவதற்கு நன்றி.

Related Posts with Thumbnails