மின் நூல்

Friday, February 14, 2020

வசந்த கால நினைவலைகள்

                                                                           44

சென்ற பகுதிகளுக்கு:

https://jeeveesblog.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


சென்ற பகுதி பின்னூட்டத்தில் அந்நாளைய டிரங்க் எக்ஸ்சேஞ்சுகளின் பணிகள் பற்றிச் சொல்வதாகச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.

இன்றைய காலத்தில் ஆதிச்ச நல்லூர், கீழடி போன்ற அகழ்வாராய்ச்சிகளைப் பற்றி பெருமையுடன் பேசுகிறோம்.  பழம் பெருமை என்பது இன்றைய கால கட்டத்தின் நவீன வளர்ச்சிப் போக்கின்  முன்னான கால கட்டத்து வேர்களை   நினைவு கூர்ந்து பெருமைப்படுவது.     'அப்படியாக இருந்தவை எல்லாம் இப்படியாக வளர்ச்சி கொண்டிருக்கிறது' என்ற வளர்ச்சிப் போக்கின் தொடர்புச் சங்கிலியை நினைவில் கொண்டு  பெருமை கொள்வது மனிதகுலத்தின் இயல்பு தான்.

இன்றைய  மொபைல் உலகில் கைக்குள் அடங்கும் ஒரு சாதனத்தை உள்ளங்கையில் அடக்கி ஊர் உலகெல்லாம் தொடர்பு கொண்டு விடுகிறோம்.  ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளியூரில் இருக்கும் நண்பர்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவது என்றால் இவ்வளவு சுலபமாக இருந்திருக்கவில்லை.   நம் வீட்டிலிருந்த தொலைபேசியை நிலைத்தளமாகக் கொண்டு தொலைபேசி நிலையத்தில் டிரங்க் கால் என்று சொல்லப்பட்ட வெளியூர் அழைப்பை பதிவு செய்தே பேச முடிந்திருக்கிறது.

வெளியூரில் இருக்கும் நபர்களோடு தொலைபேசியில் பேச வேண்டுமானால் தொலைபேசி இணைப்பகத்தோடு நமது தொலைபேசியில் தொடர்பு  கொண்டு டிரங்க் கால்  பதிய வேண்டும்.   டிரங்க் கால் பதிவிற்கு என்று  தனி எண் உண்டு.   தொலைபேசி இணைப்பகத்தில் பணியில் இருக்கும் இயக்குனர்  (Operator)  ஒரு வெள்ளை நிற சீட்டில்  எந்த தொலைபேசி எண்ணிலிருந்து எந்த ஊரில் இருக்கும் எந்த  தொலைபேசி எண்ணுக்கு  அந்த எண் தொடர்புடைய யாருடன் பேச வேண்டும் என்பதனைக் குறித்துக் கொள்வார்.  அப்படிக் குறித்துக் கொள்ளும் இந்த வெள்ளை நிற குறிப்புச் சீட்டுக்கு  அவுட்வேர்ட் டிக்கெட்  (Outward Ticket)  என்று பெயர்.  இதே மாதிரி வெளியூர் தொலைபேசி இணைப்பகங்களிலிருந்து  இந்த ஊரில் இந்த தொலைபேசி எண்ணுடன் என்று குறிப்புகளோடு வரும்  டிரங்க் கால்களை குறித்துக் கொள்ளும் சீட்டிற்கு (Inward Ticket)  என்று பெயர்.   ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு டிரங்க் கால் இணைப்பு கொடுக்கும் பொழுது இடையில் இருக்கும் ஊரின் எக்ஸ்சேஞ்சின் வழியாக  இணைப்புக் கொடுக்க வேண்டி நேரிடும்.  அப்படியான இடையிலுள்ள ஊரில்  இந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு என்று டிரங்க அழைப்பின் விவரங்களைக் குறித்துக் கொண்டு அந்த ஊருக்கு இணைப்பு கொடுப்பார்கள்.  அப்படி இடையில் இருக்கும்  ஊரில் பச்சைக் கலர்  சீட்டில் குறித்துக் கொள்வார்கள்.  அந்த பச்சை கலர் சீட்டிற்கு  (Transit Ticket)  என்று பெயர்.  இப்படி குறித்துக் கொண்டு அதற்கேற்பவான இணைப்புகளை (connections) கொடுப்பவர்களுக்கு 
தொலைபேசி இயக்குனர் (Telephone Operator)  என்று  பெயர்.  கோவையில் இரு   மாதங்கள் பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகு  நான்  தொலைபேசி இயக்குனராகத்தான் புதுவையில் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தேன்.

இந்த வெள்ளை, சிவப்பு, பச்சை நிற சீட்டுகளுக்கு (Tickets)  உதாரணம் பார்க்கலாம்.  இதற்கு  சேலத்தை ஆரம்ப இடமாக (Originating Place) கொண்டால்--

சேலத்திலிருந்து எந்த வெளியூருக்கும் கொடுக்கப்படும் அழைப்புக்கு (Trunk call)  வெள்ளை நிற டிக்கெட்டில்  பதிவு செய்ய வேண்டும். 

எந்த வெளியூரிலிருந்தும் சேலத்தில் இருக்கும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ள வரும் அழைப்புகளை  சிவப்பு நிற டிக்கெட்டில் பதிவு செய்ய வேண்டும்.

திருப்பூரிலிருந்து  சேலத்திற்கு பக்கத்திலிருக்கும்  திருச்செங்கோடு என்ற ஊருக்கு டிரங்க் கால் வரும் பொழுது திருப்பூரிலிருந்து நேரடியாக திருச்செங்கோடு தொலைபேசி இணைப்பகத்திற்கு  தொடர்ப்பு  கொள்ள முடியாதாகையால்  சேலம் எக்ஸ்சேஞ்சிலிருந்து திருச்செங்கோடு இணைப்பகத்திற்கு தொடர்பு கொடுப்பார்கள்.   அதனால் சேலத்தில் பச்சை டிக்கெட்டில்  விவரங்கள் குறித்துக் கொண்டு திருச்செங்கோடு எக்ஸ்சேஞ்சுக்கு  தொடர்பு கொடுப்பார்கள்.    திருப்பூரில் வெள்ளை நிற டிக்கெட்டிலும்,  திருச்செங்கோடில் சிவப்பு நிற டிக்கெட்டிலும் இந்த அழைப்பு  பதிவு செய்யப்பட்டிருக்கும்.   சேலம் தொலைபேசி இயக்குனருக்கு  பச்சை நிற டிக்கெட்டில் குறிப்புகளை பதிந்து கொண்டு திருச்செங்கோடு இணைப்பகத்திற்கு தொடர்பு கொடுப்பது தான் வேலை.  இணைக்கப்பட்டதும் திருப்பூர்  தொலைபேசி இயக்குனரும்,  திருச்செங்கோடு தொ. இயக்குனரும்
தொடர்பிலிருந்து  அழைக்கும்  தொலைபேசி எண்ணையும்,  அழைக்கப்படும் தொலைபேசி எண்ணையும் தொடர்பு படுத்துவார்கள்.

ஒரு ஊரின் தொலைபேசி எண்ணையும்  இன்னொரு ஊரின் தொலைபேசி எண்ணையும் மட்டுமே   தொடர்பு  ஏற்படுத்துவதற்கு  நம்பர் கால் என்று பெயர்.  இரு பகுதி எண்களுடன் தொடர்பு  ஏற்பட்டதுமே  இருவரும் பேச வேண்டும்.  பேசத் தொடங்கியதிலிருந்து  மூன்று மூன்று நிமிடங்களாக பேசும் நேரம் கணக்கிடப்படும்.  ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு  ஆப்ரேட்டர் லயனில் வந்து  3 minutes over, 6 minutes over  என்று அறிவிப்பு கொடுப்பார்கள்.  ரொம்பவும் அவசியம் என்றால் தான் 6 நிமிடங்களுக்கு மேல் நீட்டிப்பு கொடுப்பார்கள்.   லயன் பிஸியாக இருந்தால் 6 நிமிடங்களுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டு 6 நிமிடங்கள் பேசியதாக அழைப்பு பூர்த்தி செய்யப்படும்.

ஒரு ஊரின் தொலைபேசி எண்ணில் இன்னொரு ஊரின் தொலைபேசி எண்ணிலுள்ள குறிப்பிட்ட நபருடன் பேச   வேண்டுமானால் அதற்கு  பி.பி. கால்  (Particular Person Trunk call)  என்று பெயர்.  எதிர் தொலைபேசியில் அந்த குறிப்பிட்ட நபர் இல்லையென்றால்  PP not available  என்று டிக்கெட்டில் குறித்துக் கொண்டு அரை மணி நேரம் தாமதித்து மறுபடியும் இணைப்பை ஏற்படுத்தி  தொடர்பு கொடுப்பார்கள்.   அந்த இடைவெளியில் அழைக்கப்பட்டவர்  அந்த எதிர் தொலைபேசி எண்ணில் காத்திருக்கும் பட்சத்தில்  குறிப்பிட்ட நபருடன் பேசுவதற்காக இந்த ஏற்பாடு.  அந்த இடைவெளி அரை மணி நேரத்தில் குறிப்பிட்ட நபர் அந்த தொலைபேசிக்கு வரவில்லை என்றால் அழைத்தவருக்கு தெரியப்படுத்தப்படும்.  அந்த நேரத்தில் அழைத்தவர்  விரும்பினால்  தொடர்பு ஏற்படுத்தப்படும்.  விரும்பவில்லை என்றால்  அழைப்பை  கேன்சல் செய்து  விடலாம்.  PP கால்களுக்கு  PP இருக்கும் பட்சத்திலும்,   இல்லாத  பட்சத்திலும்    பேசினால்   PP கட்டணம்  உண்டு.   பேசாமல்   அழைப்பை கேன்சல் செய்து விட்டால் PP கட்டணம் மட்டுமே.  இந்த PP கட்டணம் மூன்று நிமிடங்கள் பேசக்கூடிய ஒரு டிரங்காலின் கட்டணத்தில்  25%  இருக்கும்.

டிரங்கால்கள்  இருந்த  நாட்களில்   கீழ்கண்ட வகையில் அவரவர்   தேவைகளுக்கு  ஏற்ப வசதிகள் இருந்தன.

1.  Ordinary Trunk calls

2.  Urgent  Trunk calls

3.  Lightening Trunk calla

3.  Fixed Time calls

4.  Subscription Fixed Time calls

5.  International Calls

--  இவையெல்லாம் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(வளரும்)

12 comments:

சிகரம் பாரதி said...

அருமை. முதல் வருகை தங்கள் தளத்துக்கு. டிரங்க் கால் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு பின்னால் இத்தனை பெரிய உழைப்பு இருக்கிறது என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன். இதையெல்லாம் வாசிக்கும் போது உங்கள் தலைமுறையுடன் நாங்கள் இருக்கிறோம் என்று நினைக்கும்போது மனதுக்குள் ஒரு பெருமை. தொடருங்கள், தொடர்வோம்...

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம் ◌ா

ஸ்ரீராம். said...

எவ்வளவு நடைமுறைகள்...   கலர்கலராக சீட்டுகள்!  மாற்றி என்டர் செய்தால் போச்!  இதற்கெல்லாம் தணிக்கை இருக்கும் அல்லவா? வீட்டிலிருந்து புக் செய்து விட்டு காத்திருப்போருக்கு இதில் உள்ள நடைமுறைகள் / சிக்கல்கள் தெரியாது!

வெங்கட் நாகராஜ் said...

தொலைபேசி அழைப்பு எத்தனை சிரமமாக இருந்திருக்கிறது அந்த நாட்களில்.

1984-ஆம் ஆண்டு - என் தாத்தா இறந்த செய்தியைத் தெரிவிக்க, விழுப்புரத்திலிருந்து நெய்வேலிக்கு இப்படி ட்ரங்க் கால் வந்தது - அதுவும் நெய்வேலியின் ஒரு தபால் நிலையத்திற்கு. தபால் நிலையத்திலிருந்து ஒரு ஊழியர் வீட்டிற்கு வந்து சொல்ல, நானும் எனது அக்காவும் தபால் நிலையத்திற்குச் சென்று காத்திருந்து தொலைபேசியில் பேசி விவரம் தெரிந்து கொண்டு வந்தோம். அது தான் நாங்கள் முதன் முதலில் தொலைபேசியில் பேசியது அப்போது எனக்கு வயது 13! - எனக்கும் அக்காவுக்கும் போட்டி யார் பேசுவது என - இரண்டு பேருமே பேசினோம்!

இப்போது சிறியவர்கள் கூட சர்வ சாதாரணமாக அலைபேசி பயன்படுத்துகிறார்கள்.

உங்கள் வழி ட்ரங்க் கால் பற்றிய விரிவான தகவல்கள் அறிந்து கொண்டோம். தொடரட்டு நினைவலைகள்.

வல்லிசிம்ஹன் said...


தொலைபேசியின் நீண்ட பயணம் அப்பாடி.... என் தந்தையுடன் பயணப்பட்ட நாட்களை உங்கள் பதிவில் காண்கிறேன். பேசுகிறவர்கள் அந்த நீண்ட பெஞ்சில்
காத்திருப்பது நினைவில் நிறகிறது.
மிக அருமையாக விளக்குகிறீர்கள். நன்றி ஜீவி சார்.

வே.நடனசபாபதி said...

அந்த கால தொலைபேசி இணைப்பகங்களில் இருந்த நடைமுறை பற்றி அருமையாய் விளக்கியுள்ளீர்கள். பல்வேறு தொலைபேசி அழைப்புகள் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

வலை ஓலை said...

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

எனக்கு திருமணமான புதிதில் எங்கள் வீட்டில் டெலிபோன் கிடையாது, என் கணவர் மஸ்கட்டிலிருந்து என்னை அழைக்க வேண்டுமென்றால் பக்கத்து வீட்டிற்கு போன் பண்ணுவார். அவரும் நண்பர் வீட்டிலிருந்துதான் கூப்பிடுவார். நான் பேச வேண்டுமென்றால் போஸ்ட் ஆபிசில் ஐ.எஸ்.டி. புக் பண்ணி விட்டு, அங்கேயே தேவுடு காத்துக்கொண்டிருக்க வேண்டும். சில சமயங்களில் அவர்களே, "அந்த லைன் மிகவும் பிசியாக இருக்கிறது, நீங்கள் வீட்டிற்கு சென்று விட்டு சற்று நேரம் கழித்து வாருங்கள் என்பார்கள்". தொன்னூறுகளில் விடுமுறைக்கு இந்தியா வந்திருந்த பொழுது, நிலை கொஞ்சம் மாறி, பத்தடிக்கு ஒரு எஸ்.டி.டி. , ஐ.எஸ்.டி. பூத்துகள் முளைத்து வெளி நாடுகளுக்கு தோலை பேசியில் அழைப்பது சுலபமாக ஆனதை காண சந்தோஷமாக இருந்தது.   

ஜீவி said...

@ சிகரம் பாரதி

முதல் வருகை தொடரட்டும், சிகரம் பாரதி!

//இதையெல்லாம் வாசிக்கும் போது உங்கள் தலைமுறையுடன் நாங்கள் இருக்கிறோம் என்று நினைக்கும்போது மனதுக்குள் ஒரு பெருமை.. //

ஆழ்ந்த உணர்வுகள். நன்றி, பாரதி!

உங்கள் தள அறிமுகத்திற்கு நன்றி. வருகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆமாம். எல்லாத் துறையும் அப்படித் தான். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. அதுவும் அந்நாளைய தொலைபேசி இணைப்பகங்கள் ஜிலுஜிலுவென்று இருக்கும். மகளிர் மட்டுமே என்று தனியாக்கப்பட்ட தொலைபேசி நிலையங்களில் போராடிப் பெற்ற மகளிருக்கான வசதிகள் எக்கச் சக்கம். பணிக்கான நேர அமைப்புகள் அகால நேரங்களில் இருந்ததினால் அதெல்லாம் சாத்தியப்பட்டன. இன்றைய ஐ.டி. ஊழியர்கள் கூட பெறாத வசதிகள் அவை.

தொலைபேசி இணைப்புகளைத் தொடர்பு படுத்தும் கருவிகள் நிறைந்த இடத்திற்கு கட்டாயம் ஏ.ஸி. தேவை என்பது அடிப்படை விஷயம். இதனால் தொலைபேசி நிலையங்கள் செல்லப் பிள்ளைகள் மாதிரி sophisticated - ஆக இருந்தன.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜன்

@ வல்லி சிம்ஹன்

அடுத்த பகுதியில் PCO-க்கள் பற்றி விவரிக்கிறேன்.

ஜீவி said...

@ நடன சபாபதி

பல்வேறு வகையான தொலைபேசி அழைப்புகள் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும். விவரமாகச் சொல்கிறேன். நன்றி.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

ஆரம்ப காலங்களில் ISD டிரங்க் கால்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. விவரமாகச் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். சொன்னால் அந்த 'தேவுடு காத்த'தெல்லாம் பெரிய விஷயங்கள் இல்லை என்ற புரிதல் ஏற்படும். நாளாவட்டத்தில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், நவீன மய சுனாமியாலும் சில விஷயங்களின் வெளிப்படைத்தன்மை பரவலாக்கப் பட்டிருக்கிறது என்பது தான் விஷயமாகிப் போனது.

அடுத்த பகுதிகளில் வெளி தேசத்து டிரங்க் கால்கள் பற்றிச் சொல்கிறேன்.
தொடர்ந்து வாருங்கள்.

Related Posts with Thumbnails