மின் நூல்

Wednesday, July 8, 2020

ஜஸ்ட் மிடில் மென்!..


ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும்.

அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டியிருக்கிறது. அப்படியே குற்றாலத்தில் ஒருநாள் தங்கல். ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தை முன்பதிவுக்காகப் புரட்டும் பொழுது, ராமசாமி ஞாபகத்திற்கு வந்து விட்டான்.

அவன் தந்தையை நினைக்கையிலேயே எவ்வளவு அற்புதமான மனிதர் என்று மனசு நெகிழ்கிறது. ஆண்டவன் படைப்பில் மானுடராய் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்ந்த நல்ல மனிதர்களை நினைக்கும் பொழுது நாமும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று நெஞ்சில் சூளுரைத்துக் கொள்வதும் இயல்பான ஒரு செய்கையாகப் போய்விட்டது. ரொம்பவும் மோசமாகப் போய்விடாமல், இப்படிப்பட்ட நல்லவர்களின் வாழ்வுதான் நம்மை வழிநடத்தி காப்பாற்றுவதாகவும் நான் நம்புகிறேன்.

ராமசாமி கொழுத்த செல்வந்தவர்களின் குடும்பத்தில் பிறந்தவன். பரம்பரையே மிட்டா மிராசுதாரர்கள். செலவம் ஓரளவுக்கு மேல் சேர்ந்துவிட்டால், அதுவே மேலும் மேலும் தன்  வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும் இயல்புடையது போலும்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் மா,பலா,தென்னை மரங்கள் சூழ்ந்த மிகப்பெரிய பங்களா அவர்களது. அவர்களின் வீடு என்று சொல்லப்படும் மாளிகையின் வேலியை ஒட்டிய நீண்ட தெருவில் ஒரு வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். வரிசையாக பதினைந்துக்கு மேற்பட்ட பக்கத்துப் பக்கமாக ஒட்டிக்கட்டப்பட்ட வீடுகள்..அத்தனையும் ராமசாமி குடும்பத்துக்குச் சொந்தமானது.

ராமசாமி என் பள்ளித்தோழன் கூட. எங்களது பெரிய ஜமா.   மழைக் காலங்களில் பத்து பதினைந்து பேர்கள் கொண்ட எங்கள் குழு, தினமும் நெல்லை ஜங்ஷன் பகுதியில் இருக்கும்  மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி பள்ளிக்கு போவதும், மாலையில் வீட்டுக்குத் திரும்புவதும் ராமசாமி வீட்டு வேனில் தான். அந்தப் பக்க சிறுகுழந்தைகள் ஆரம்ப பள்ளிக்குப் போவதற்காக  இரண்டு வேன்களைத் தனியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பங்களாவை ஒட்டியவாறே சத்திரம் போல மிகப்பெரிய ஹாலுடன் ஒரு கட்டிடம் இருக்கும். காலையில் கூட்டமாக துண்டும் சோப்புப்பெட்டியுமாக அரட்டை அடித்தபடி தாமிரபரணியில் குளித்துவிட்டு வந்தோமானால், அவரவர் வீட்டிற்குச் சென்று உடைமாற்றிக் கொண்டு இந்த சத்திரம் போன்ற இடத்தில் குழுமிவிடுவோம்.

எல்லோருக்கும் காலை டிபன் அங்கே தான். எப்படியும் தினம் இருபது பேருக்கு மேல் தேறிவிடும். ராமசாமி, ராமசாமியின் தம்பி, அவன் அப்பா, அம்மா சூழ உட்கார்ந்து சாப்பிடுவோம். சமையல்கார சாம்பு மாமா, பளீரென்று வெள்ளை வெளேர் வேஷ்டியும் மேல்துண்டுமாய் நெற்றி நிறைய வீபூதி-சந்தனப் பொட்டுமாய் ஆரோக்கியமாய் இருப்பார். ராஜ உபசாரம் தான். அவர் அவரவரைப் பேர் சொல்லி விளித்து, "தேங்காய்ச் சட்னி போடட்டுமா?.. கொத்ஸூ கொஞ்சம் போட்டுக்கோயேன்"..என்று கேட்டுக் கேட்டு விசாரித்து அன்புடன் பரிமாறுவார். குண்டு கத்திரிக்காயைச் சுட்டு, கட்டித் தயிரில் மூழ்க வைத்துத் தாளித்துக் கொட்டி சட்னிமாதிரி பண்ணியிருப்பார் சாம்புமாமா. அந்த வயசில் எனக்கு ரொம்பவும் அது பிடிக்கும். கேட்டுக்கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்டு சாப்பிடுவேன்.

அந்த சத்திரம் போன்ற ஹாலைச் சுற்றி வந்தால், இடதுப்பக்கக் கோடியில் ஒரு பிள்ளையார் கோயிலை பங்களாக்குள்ளேயே கட்டியிருப்பார்கள்...அந்தப் பிள்ளையாருக்கு தினமும் உச்சிகால பூஜை முடிந்ததும், ஏழை எளியோருக்கு இலை போட்டு எளிமையான சாப்பாடு தினமும் உண்டு..  கிட்டத்தட்ட மத்தியானம் இரண்டு மணி வரை நாலைந்து பந்திகள் நடக்கும். சாப்பிட்டு வயிறு நிறைந்தவர்கள் வாயார வாழ்த்தியது தான், அந்த குடும்பத்தையே எந்தக் குறையுமில்லாமல் வாழ வைத்தது போலும்!..   ராமசாமியின் அப்பாவுக்கு அப்பா, மற்ற சொந்தக்கார உறவுகள் என்று எண்பதைத் தாண்டியவர்களே ஏகப்பட்ட பேர் அந்த குடும்ப்த்தில் வளைய வந்து கொண்டிருப்பர்...  எல்லோரும் ஏதோ வேலையில் ஈடுபட்டு எங்கங்கோ போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள்...  பங்களா பூராவும் எந்நேரமும் கலகலப்புடன் 'ஜேஜே' என்ற கூட்டம் தான்! எல்லோரும் உரக்கப் பேசி உரக்க சிரித்துக் கொண்டிருப்பார்கள்.. ஏழைக் குழந்தைகளுக்கு இரவுப் பள்ளி உண்டு.. அவர்களுக்கு பாடம் படிக்க வகுப்பு போன்ற தோற்றத்துடன் கரும்பலகையும் மேஜை நாற்கலிகளுமாய் ஒரு பெரிய ஹால் உண்டு.. இரவு பள்ளி நடத்தவென்றே, டவுனிலிருந்து நாலைந்து ஆசிரியர்கள் வந்து போவார்கள்...  அவர்கள் வருவது போவது எல்லாம் பங்களா காரில் தான்!..

ஒருநாள், "என்ன இப்படி எல்லோருக்கும் வாரி வழங்குகிறீர்கள்?" என்று யாரோ 'ஒருமாதிரி' கேட்டதற்கு, ராமசாமியின் அப்பா, பரமார்திகமாக மேலே ஆகாயம் நோக்கி கையுயர்த்தி,  "எல்லாம் அவன் கொடுத்தது;  தீரத்தீர இன்னும் கொடுத்திண்டே இருக்கான்..  அவன் என்னிடம் கொடுப்பதைத்தான் நான் நாலு பேருக்குக் கொடுக்கிறேன்" என்று ரொம்ப சுருக்கமாகச் சொன்னார்.  இன்னொரு நாள் சாயந்திரம் இதே மாதிரி கேட்ட இன்னொருவரிடம், "என்ன புதுசா கேட்கறே?..என் தாத்தா..என் தாத்தாக்கு தாத்தா.. அவர்கள் செஞ்சதைத் தானே நானும் செய்யறேன்.. இந்தக் குடும்பமே, ஜஸ்ட் மிடில் மென்! எல்லாம் அவனுக்குச் சொந்தம்..  எந்தக் காலத்திலே யார் செஞ்ச பூர்வபுண்ணியமோ, இந்த மேனேஜ்மெண்ட் பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.." என்று 'பகபக'வென்று சிரித்துச் சொன்னது இன்னும் என் நினைவில் நிழலாடி சிலிர்ப்பேற்படுத்துகிறது..

பிற்காலத்தில் நான் படித்த இந்தப் புறப்பாடலும் நினைவிற்கு வருகிறது:

"நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்,
இனோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி--மனை கிழவோயே!--
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே."

(புறநானூறு--163)

வள்ளல் குமணனைப் பாடி பரிசில் கொணர்ந்த பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் பெருந்தகை, தன் மனையாளுக்குச் சொன்னது, இப்பாடல்.

கொடுத்தவன், வள்ளல்;   பரிசில் பெற்ற புலவனும் அவனை விஞ்சிய வள்ளலாய் இருப்பான் போலிருக்கு என்று மனசு களியாட்டம் போடுகிறது..எப்படிப் பட்ட இனம், இந்த தமிழினம் என்று நெஞ்சு பூரிப்பால் விம்மித் தணிகிறது..  அடடா! அடடாவோ!.. என்ன அருமையான, வரிக்கு வரி பெருமிதத்தைப் பூசிக்கொண்ட வார்த்தைகளால், வார்த்தெடுக்கப்பட்ட கவிதை!...

"உன்னை விரும்பி வந்தோருக்கும்,
நீ விரும்பியோருக்கும், உத்தம குணம் கொண்ட
வழிவழிவந்த உற்றோருக்கும்,
பிறர்பசி காணப் பொறாது
குறிப்பாலாயே உணர்ந்து அவர்தம் பசி
போக்கியோர்க்கும்---
இவருக்குத் தான் என்று எண்ணாது
என்னையும் இது குறித்துக் கலக்காது
நீண்ட நாள் கவலையின்றி வாழ இது
நமக்காயிற்று என்றும் எண்ணாது
எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடு--
என் மனைக்கிழத்தியே---  இந்த
செல்வம்?...இது முதிரத்துச் சொந்தக்காரனான
நம் குமணன் நல்கியது, அல்லவா?..


கரன்ஸி நோட்டுகளை அடுப்புப்பற்ற வைத்தாலும் பத்து தலைமுறைக்குக் காணும் சொத்து என்று செட்டிநாட்டுப் பக்கம் பேச்சுக்குச் சொல்வார்கள். அப்படிப்பட்ட செல்வத்தைப் பெற்ற செல்வந்தர்கள் இரக்கத்தின் அடிப்படையிலும், தர்மம் செய்ய வேண்டுமென்கிற இயல்பாக வழிவழிவந்த குடும்ப குணநலனாகவும், வசதிகுறைந்த வறியோருக்குக் கொடுப்பதை தானம் என்பார்கள். வரும் வருமானத்தில் ஒரு சதம் தானத்திற்கு ஒதுக்கி வைப்பதை சில குடும்பங்களில் ஒரு பழக்கமாகவும் கொண்டுள்ளார்கள்.

ஆனால், தானே வறிய நிலையில் இருக்கையில், இன்னொருவரிடம் தன் சொந்த திறமை காட்டிப்பெற்ற பரிசிலை, எல்லோருக்கும் வாரி வழங்குவது என்பது நினைத்துப் பார்க்கவே பெரிய விஷயமாகப் படுகிறது. அதுவும், "வல்லாங்கு வாழ்வோம் என்று எண்ணாது எல்லோருக்கும் கொடுத்துவிடு" என்று சொன்ன பெருஞ்சித்திரனாரின் குணமேன்மை நினைத்து நினைத்து மகிழத்தக்கது.    'இருப்பது தீர்ந்துவிட்டால், இருக்கவே இருக்கிறான், புலவர்களைக் காக்கும் புரவலன் குமணன்! பாடிப் பரிசில் பெறலாம்; பெறுவது என்பது பலருக்குக் கொடுத்து மகிழவே' என்கிற புலவர் பெருமானின் செம்மாந்த பண்புநலனும் ஊடும் பாவுமாய் பாட்டில் பரவியிருப்பதும் உன்னிப்பாய் கவனித்தால் புலப்படும்.

33 comments:

ஸ்ரீராம். said...

இந்தப் பாடல்களுக்கு பொருத்தமான சம்பவங்கள் நம் வாழ்விலேயே கிடைப்பது சுவாரஸ்யம்தான்.

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான பாடல்...அருமையான விளக்கம்..அறியாதன அறிந்தோம்..தொடர வாழ்த்துகள்...

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஸ்ரீராம்! ஒரு பின்னூட்டம் தானே அனுப்பினீர்கள்?.. (ஜஸ்ட் ஐயம் தெளிய. :)) )

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//இந்தப் பாடல்களுக்கு பொருத்தமான சம்பவங்கள் நம் வாழ்விலேயே கிடைப்பது சுவாரஸ்யம்தான்.//

சாகா வரம் பெற்ற இலக்கியங்களின் பெருமையே அது தான்! எக்காலத்துக்கும் பொருத்தமாக இருக்கும். நான் இங்கே குறிப்பிட்டிருக்கும் நெல்லைச் செய்தியானும் 64 ஆண்டுகளுக்கு முன்னான நிகழ்வு. எ.பி. நேர்மறைச் (பாஸிட்டிவ் என்ற வார்த்தையைத் தவிர்க்கிறேன்) செய்திகளில் சில, நிகழ்காலத்திலும் இப்படியான குணநலன்கள் படைத்த அருட்கொடையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தான் நமக்குத் தெரிவிக்கின்றன.
ஆக, நீங்கள் சொல்வது சரிதான்.

ஜீவி said...

@ Yatho Ramani

வாங்க, ரமணி சார்! 'அறியாதன அறிந்தோமா'? நாங்கள் அல்லவா, உங்கள் 'தீதும் நன்றும் பிறார் தர வாரா'வில் தெரியாத செய்திகள் பலவற்றை தெரிந்து கொள்கிறோம்?..

'இம்'மென்றால் ஒரு கவிதை பிறந்து விடுகிறதே, உங்களிடம்?.. அது எங்ஙனம் சாத்தியப்படுகிறது என்று தெரிந்து கொள்ள ஆவல், கவிஞரே!

G.M Balasubramaniam said...

'இருப்பது தீர்ந்துவிட்டால், இருக்கவே இருக்கிறான், புலவர்களைக் காக்கும் புரவலன் குமணன்! பாடிப் பரிசில் பெறலாம்; பெறுவது என்பது பலருக்குக் கொடுத்து மகிழவே'in a lighter vein நம் பக்க உலா வரும் ஒரு சொல்லும் நினைவுக்கு வருகிறது ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே எதையும் வித்தியாசமாய் நினைப்பவனின் ஒரு குசும்பு பின்னூட்டம்

வெங்கட் நாகராஜ் said...

அந்தக் காலப் பாடல்கள் எக்காலத்திலும் பொருந்தும் விதமாக! சிறப்பான பாடலையும் நிகழ்வுகளையும் இணைத்துச் சொல்லும் உங்கள் பதிவுகள் பிடித்தவை. தொடரட்டும் பதிவுகள்.

நெல்லைத் தமிழன் said...

//செலவம் ஓரளவுக்கு மேல் சேர்ந்துவிட்டால், அதுவே மேலும் மேலும் தன் வளர்ச்சியைத் // - எங்க அப்பா சின்ன வயசுல எனக்குச் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவருக்கு அவரை விடப் பெரியவர், எங்க அப்பா சம்பாதிக்க ஆரம்பித்த காலத்தில் சொன்னாராம், 1 ரூபாய் 1 ரூபாயாக கஷ்டப்பட்டு சேர்த்துவிடு. நூறு ரூபாய் சேர்ந்துவிட்டால், நூத்துக்கு மேலே ஊத்து என்றாராம் (அதாவது நூறு ரூபாய் தானே ஊற்று போல பெருகிவிடும் என்று). எனக்கு நூத்துக்கு மேலே ஊத்து என்ற வார்த்தைகள் மட்டும் நினைவில் இருக்கின்றன.

கோமதி அரசு said...

//இந்தக் குடும்பமே, ஜஸ்ட் மிடில் மென்! எல்லாம் அவனுக்குச் சொந்தம்.. எந்தக் காலத்திலே யார் செஞ்ச பூர்வபுண்ணியமோ, இந்த மேனேஜ்மெண்ட் பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.." என்று 'பகபக'வென்று சிரித்துச் சொன்னது இன்னும் என் நினைவில் நிழலாடி சிலிர்ப்பேற்படுத்துகிறது..//


முன்னோர்கள் செய்தாலும் அதை விரும்பி அடுத்து வந்தவர்களும் தொடர்வது பெரிய பாக்கியம்தான்.
பழம்பாடலும் இப்போதைய நிகழவும் இணைத்து சொல்வது அருமை.

பதிவு அருமை.

மனோ சாமிநாதன் said...

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!
' கொடுப்பவர் எல்லாம் மேலாவார், கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்' என்ற எனக்கு மிகவும் பிடித்த பழைய பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன! மனம் நிறைந்து தன்னிடமிருப்பதை அடுத்தவர்களுக்கு வழங்குவது வரம். இது எல்லோருக்கும் கிடைத்து விடாது. ஆனால் அந்த வரம் தனக்குக் கிடைத்திருக்கிறது என்பதையே பெரிதாக எண்ணாமல் கொடுப்பது தன் பணி என்பது போல வாரி வழங்கிய அந்த குடும்பத்தினரைப்பற்றி அறியக்கொடுத்ததற்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் இது போன்ற அருமையான, இதமான செய்திகள் காதில் விழுவதும் படிக்க நேருவதும் இப்போதெல்லாம் அபூர்வமாக இருக்கிறது!
இன்றுமே அந்தக்குடும்பத்தினரின் தானங்கள் தொடர்கின்றதா?
பொருத்தமாக பெருஞ்சித்திரனாரின் பாடலை இணைத்திருப்பது இந்த பதிவிற்கு மேலும் மெருகூட்டுகிறது!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நிகழ்விற்கேற்ற அருமையான பாடல் பொருத்தம். இத்தகைய பெரியோரைக் காண்பது அரிதே.

அப்பாதுரை said...

குமணனின் வள்ளண்மையும் இங்கே தொற்றா நிற்கிறதோ?

கேணியன்ன பதிவு.

அப்பாதுரை said...

சுட்ட கத்தரிக்காயைத் தயிரில் கலந்து சாப்பிட்டால் அத்தனை சுவையா?

Bhanumathy Venkateswaran said...

அழகான பாடல்.அதற்கு அருமையான் கதை(அனுபவம்?).ஜஸ்ட் அ மிடில் மேன் என்ற உணர்வோடு வழங்குபவர் கையால் பெறுவது ஒரு பேறு.

Bhanumathy Venkateswaran said...

//சுட்ட கத்தரிக்காயைத் தயிரில் கலந்து சாப்பிட்டால் அத்தனை சுவையா?// பின்ன? அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு,உப்பு போட்டு, கடுகு தாளித்து சாப்பிட்டுப் பாருங்கள்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

'in a lighter vein -- என்பது வசதி தான். 'தப்பாய் எடுத்துக் கொள்ளாதீங்கப்பா' என்ற
மெசேஜ் அதில் அடங்கியிருப்பதை உணர முடிகிறது.

அது என்ன?.. 'ஊரான் நெய்யே என் பெண்டாட்டி வாயே' என்பது தான் வாய்க்கு பதில் நாஸூக்காக கையாக மாறி விட்டதோ? 'யார் வீட்டு நையோ தான்; இன்னும் நாலு ஸ்பூன் எடுத்துப் போட்டுக்கோ' என்ற அர்த்ததிலா?..

ஹிஹிஹிஹி..

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

முதலில் சங்கப்பாடலை செலக்ட் பண்ணிக் கொண்டு அதற்கான அர்த்தத்தை வைத்துக் கொண்டு ஒரு நிகழ்வை அல்லது கற்பனையில் ஒரு நிகழ்வுக்கு உருக் கொடுத்து எழுதி விடுகிறேன். அவ்வளவு தான்.;

தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி, வெங்கட்.;

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

வாங்க, நெல்லை. உங்கப்பா சொன்னது சரிதான். எனது அனுபவபூர்வமா அங்கீகாரமும் அது தான். அது தான் பதிவில் வெளிப்பட்டிருக்கு.

'பணம் குட்டி போடும்' என்று சொல்வார்கள். அதுவும் இது தான். ஒரு பிளாஸ்டிக் டப்பா, அல்லது எவர்ஸில்வர் பாத்திரம் எதிலாவது சில்லறையாக காசோ, நோட்டோ வருவதையெல்லாம் போட்டு வையுங்கள். அல்லது ஒரு ஐநூறு ரூபாயை மாற்றினீர்கள் என்றால் கையில் வரும் காசில் புது நோட்டாக இருந்தால் டப்பாவில் வைத்து விட்டு
பழைய நோட்டுகளை செலவு பண்ணுங்கள். டப்பாவில் இருக்கும் நோட்டுகளை மட்டும் எண்ணியே பார்க்கக் கூடாது. அல்லது செலவுக்கும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும்.

இப்படி செய்து கொண்டு வந்தீர்கள் என்றால் பணம் குட்டி போடுவதை அனுபவ பூர்வமாகவே நீங்கள் உணரலாம். செலவுக்குப் பணமே இல்லை, சில்லரையாக காசு இல்லை, அவசரமாக வேண்டியிருக்கிறது -- என்ற நேரங்களில் தவிர டப்பாவிலிருந்து காசை எடுக்கவே கூடாது. வேண்டுமானால் செய்து பாருங்கள். உங்கள் அப்பா சொன்னது நிஜமே தான் என்று தெரியும்.

ஜீவி said...

@ கோமதி அரசு

சிலர் எங்க வீட்டுப் பழக்கம் அதுதாங்க, என்பார்கள். இப்படி நம்ம பழக்க வழக்கங்களில் சில பரம்பரையாகத் தொடர்ந்து வருவது அந்தக் குடும்பத்திற்கென்று ஒரு அடையாளத்தை அல்லது தனித்தன்மையைக் கொடுக்கும்.

ஒவ்வொரு குடும்பமும் இப்படி ஏதாவது நல்ல பழக்கத்தைக் கைக்கொள்வது அந்தக் குடும்பத்திற்கு நல்லது.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ மனோ சாமிநாதன்

இது எப்படி இருக்கு, சொல்லுங்கள். கம்பராமாயணத்தில் பால காண்ட நகர் படலத்தில் கம்பனின் கைவண்ணத்தைப் பாருங்கள்:

தெள் வார் மழையும். திரை ஆழியும் உட்க நாளும்.
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.

--- இதெல்லாம் இல்லை என்பதினால் அதெல்லாம் இல்லை!.. எப்படிப்பட்ட சமுதாய அமைப்பு என்று பிரமிக்கத் தோன்றுகிறது.

//ஆனால் அந்த வரம் தனக்குக் கிடைத்திருக்கிறது என்பதையே பெரிதாக எண்ணாமல் கொடுப்பது தன் பணி என்பது போல வாரி வழங்கிய அந்த குடும்பத்தினரைப்பற்றி..//

இது தான் இந்தப் பதிவிற்கான செய்தி. அந்தச் செய்தியை சாறாகப் பிழிந்து தந்தமைக்கு மிக்க நன்றி.

//இன்றுமே அந்தக்குடும்பத்தினரின் தானங்கள் தொடர்கின்றதா?..//

எத்தனை ஆண்டுகள் உருண்டோடி விட்டன! எப்படி அவையெல்லாம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்று நினைப்பதே மனசில் மரத்துப் போனாற் போல இருக்கிறது!.
அவர்கள் சந்ததியினர் வறுமை சுவடு என்பதே வாழ்க்கையில் படியாமல் வாழ்ந்தால் சரி என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது.

நீங்கள் குறிப்பிட்டதும் ஒரு தடவை அங்கெல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. உணர்வு பூர்வமான தங்கள் கருத்துரைக்கு நன்றி, சகோ!..

வே.நடனசபாபதி said...


தங்கள் நண்பர் திரு ராமசாமியின் தகப்பனார் எல்லோருக்கு அள்ளிக்கொடுத்ததை, புறநானூற்றில் புலவர் பெருஞ்சித்திரனார் வள்ளல் குமணனைப் பாடிய பாடலை மேற்கோள் காட்டி எப்படிப் பட்ட இனம், இந்த தமிழினம் என்று நெஞ்சு பூரிப்பால் விம்மித் தணிகிறது என்று சிலாகித்திருக்கிறீர்கள்.

தங்களின் பதிவைப் படித்தபோது,வள்ளல் குமணன் பற்றி ஒப்பிலாமணிப் புலவர் என்பவர் பாடிய பாடல் ஒன்றும் நினைவிற்கு வருகிறது. அந்த புலவர் பெருந்தலைச் சாத்தனார் என்றும் சொல்லப்படுகிறது.

குமணனின் தம்பி இளங்குமணன் அண்ணனின் புகழ் கண்டு பொறாமை கொண்டு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டபோது, காடு சென்று வாழ்கிறான்.அவனது தலையைக் கொண்டுவருவோருக்கு பரிசளிப்பதாக அவன் தம்பி அறிவிக்கிறான் அப்போது பரிசில் வேண்டிவந்த புலவர் அவனைப் பாடி பரிசில் கேட்கும்போது அவருக்குத் தர ஒன்றுமில்லாததால்,அவன் தன் வாளை அவர் கையில் தந்து தன் தலையைக் கொய்து கொண்டுபோய் தன் தம்பிக்குக் காட்டி,வேண்டும் பொருளை பெற்றுச் செல்லுமாறு வேண்டினான் என்கிறது இந்த பாடல்

அந்தநாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய்
இந்தநாள் வந்துநீ நொந்தெனை அடைந்தாய்
தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்ததன்
விலைதனைப் பெற்றுன் வெறுமைநோய் களையே"

நீங்கள் குறிப்பிட்டது போல் இதுபோன்ற பாடல்களை படிக்கும்போது ‘எப்படிப் பட்ட இனம், இந்த தமிழினம்’ என்று நெஞ்சு பூரிக்கத்தான் செய்கிறது.

அருமையான பாடலை மேற்கோள் காட்டி பழம்பெரும் பாடல்களை நினவுக்கு கொண்டுவர உதவியமைக்கு நன்றி!

அப்பாதுரை said...

இப்போ தான் கேள்விப்படுகிறேன் (ஒரு வேளை சாப்பிட்டிருப்பேனோ பேர் தெரியாமல்?)
ரெசிபி தேடிப் பார்க்க வேண்டும்

ஜீவி said...

@ Dr.B. Jambulingam

பாடலுக்கு ஏற்ற நிகழ்வாகத் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தாங்கள் வாசித்தது குறித்து மகிழ்ச்சி.

ஜீவி said...

@ musuzhi

தொற்றா -- ஈகெஎபெஎ தானே?

கேணியன்ன -- உவமையணின்னு நினைக்கிறேன். ரைட்டா, தப்பான்னு நீங்க தான் சொல்லணும். கேணி நீர் அன்ன என்று கொண்டாலும் உ.அணி தானோ?..

ஜீவி said...

@ musuzhi (2)

சுட்ட என்பது இங்கு வதக்கல் என்ற பொருளில்.

வாணலியில் எண்ணை வார்த்து குண்டு கத்திரிக்காயை அதில் இட்டு வதக்க வேண்டும்.
வதக்க வதக்க குழைவாகப் போகும்.

வதக்கியதை பெரிய துண்டுகளாகப் பகுத்துக் கொண்டு கெட்டித் தயுரிலிட்டு கலக்கி வைத்துக் கொண்டு, வற்றல் மிளகாயையும் சேர்த்துக் கொண்டு தயிரில் தாளித்துக்
கொட்டி சிமிட்டா உப்பு சேர்த்துக் கலக்கி வைத்துக் கொள்ளலாம்.

குழப்பு சாதத்திற்கு, குறிப்பாக வற்றல் குழம்பு சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பட அமிர்தமாக இருக்கும்.

சமையலறையில் பார்த்துத் தெரிந்து கொண்டது தான். ஈஸ்வரோ ரக்ஷது.

ஜீவி said...

@ பாவெ

//ஜஸ்ட் அ மிடில் மேன் என்ற உணர்வோடு வழங்குபவர் கையால் பெறுவது ஒரு பேறு.//

கோயில் பிரசாதம் போல, இல்லையா? நீங்க அந்த உணர்வோடு சொன்னது வைரமூக்குத்தியில் சிவப்புக்கல் பதித்த மாதிரி இருக்கு.

ஜீவி said...

@ பா.வெ.

//அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு,//

ஊஸ்ஸ்ஸ்ஸ்.. தாங்காது எனக்கு. பச்சைக்கு பதில் சிவப்பு. சரியா?..

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

புலவர் பெருந்தகை ஒப்பிலாமணி பாடல் மனதை உருக்குகிறது.

நடந்த நிகழ்வை 'வள்ளல் குமணன் இப்படிச் சொன்னான்' என்பது போல கவிதையைக் குமணனுக்கே சொந்தமாக்கி பெருமை படைத்திருக்கிறார். குமணன் சொன்னதை பாடல்
வழி வாசிக்கையிலேயே மனம் பதைபதைக்கிறது.

'கர்ணன் கவச குண்டலத்தையும் கடைசி நேரத்தில் கழட்டிக் கொடுத்த மாதிரி' -- மனதை உருக்கும் பெருமைமிகு வாழ்க்கை தான் வள்ளல் பெருமான்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்தப் பாடல் மட்டும் இல்லையெனில்
இந்நிகழ்வு வரலாற்றுக் குறிப்புகளிலேயே இல்லாமல் போயிருக்கும் இல்லையா?..

தங்கள் ஆழ்ந்த வாசிப்பு உணர்வுக்கு நன்றி,ஐயா!

ஜீவி said...

@ musushi

ரெசிபி எனக்குத் தெரிந்த அளவு கொடுத்திருக்கிறேன்.

ஆனால் ரெசிபிக்கும் சாப்பிட்ட தெளிவிற்கும் சம்பந்தம் இருக்கும் என்று தெரியவில்லை.

இருந்தாலும் முயற்சித்துப் பாருங்கள், துரை சார்.

இராய செல்லப்பா said...

என்னைக் கேட்காமல் நீயே கொடு - என்று நிபந்தனையற்ற உத்தரவு போடும் கணவர்கள் புறனானூற்றுக் காலத்தில் இருந்தார்கள் என்பது பெருமைக்குரிய விஷய்மே.

சரி, திரு நெல்வேலியில் எழுத்தாளர் ர.சு. நல்லபெருமாளுடன் உங்களுக்குப் பழக்கம் உண்டா? ('கல்லுக்குள் ஈரம்', 'நம்பிக்கைகள்')

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் திருநெல்வேலி அனுபவத்தை மிகவும் ரசித்தேன். அந்த அனுபவம் பொருந்திப் போகும்படி அழகான பாடல்! தானம் தருமம், கொடை எல்லாம் தொடர்ந்து வருவது பெரிய விஷயம்.

செல்வம் பெருகும் என்று சொல்வதும் ஒரு சிலருக்குத்தான் அந்த அருள் இருந்தால்தான் பெருகும் என்றும் தோன்றுகிறது.

//இந்தக் குடும்பமே, ஜஸ்ட் மிடில் மென்! எல்லாம் அவனுக்குச் சொந்தம்.. எந்தக் காலத்திலே யார் செஞ்ச பூர்வபுண்ணியமோ, இந்த மேனேஜ்மெண்ட் பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.." //

உண்மைதானே! நல்ல பண்பட்ட உள்ளம்!

உங்கள் திருநெல்வேலி அனுபவம் தொடரும் என்று நினைக்கிறேன்

மிகவும் ரசித்தேன் பதிவை.

கீதா

ஜீவி said...

@ இராய. செல்லப்பா

நான் திருநெல்வேலியில் இருந்தது கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் குறைவான காலம் தான். ஒன்பதாவது வகுப்பில் பாதிக்காலம் அங்கு படித்தேன். அரை ஆண்டு தேர்வு பொழுது படிப்பைத் துண்டித்துக் கொண்டு சேலம் வந்து விட்டேன். சேலத்தில் அரை ஆண்டுத் தேர்வுக்ககு முன் அதே ஒன்பதாவது வகுப்பில் சேர்ந்தேன். இதெல்லாம் நடந்தது 1956 ஆண்டு காலத்தில்.

ர.சு. நல்லபெருமாள் அவர்களை அவரது கல்லுக்குள் ஈரம் கதையை கல்கியில் படித்த பொழுது தான் தெரியும். அது 1966 ஆண்டாக இருக்கும் என்று நினைவு. (பத்து ஆண்டுகள் கழித்துத் தான் அவரைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்கிறது.) அதற்குப் பிறகு அதே கல்கியில் அவர் போராட்டம் என்று தொடர்கதை எழுதினார். அது இடதுசாரிகளை மாற்றுப் பார்வை பார்த்த கதை. அதனால் அவ்வளவாக என்னால் அதை ரசிக்க முடியவில்லை.

நான் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி என் பதிவில் தொடர்ந்து எழுதும் பொழுது இது விஷயம் பற்றி ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். கல்லுக்குள் ஈரத்தை ரசித்த என்னால் எதனால் போராட்டம் தொடரை ரசிக்க முடியவில்லை என்று. அதை வாசித்த அமரர் ர.சு.நல்லப்பெருமாளின் திருமகளார் என்னை பின்னூட்டத்தில் தொடர்பு கொண்டார்கள். 'என் தந்தையைப் பற்றி இந்தப் பகுதியில் எழுதுங்கள். நான் அவர் பற்றிய குறிப்புகளை அனுப்பி வைக்கட்டுமா?' என்று கேட்டிருந்தார்கள். எனக்கு 'மகன் தந்தைக்காற்றும் உதவி' திருக்குறள் தான் 'மகள் தந்தைக்காற்றும் உதவியாக' மாற்றி நினைவுக்கு வந்து சிலிர்த்துப் போனேன். 'எனக்கு குறிப்புகள் வேண்டாம்; நானே சேகரித்துக் கொண்டு உங்கள் தந்தையின் எழுத்துச் சிறப்புகளைப் பற்றி எழுதுகிறேன்'என்று குறிப்பிட்டிருந்தேன். தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி நான் எழுதிய பதிவுகள் பிற்காலத்தில் நூலான போதும், அமரர் ர.சு.ந.வின் விவரங்களை பக்கங்கள் அதிகமாகும் நெருக்கடியில் அந்த நூலில் சேர்க்க முடியாது போயிற்று. பக்கங்கள் அதிகமானால் நூலின் விலையைக் கூட்ட வேண்டுமே என்ற பதிப்பகத்தாரின் அச்சம்.

இதெல்லாம் பார்க்கும் பொழுது மீண்டும் அந்தப் பகுதியைத் தொடரலாமா என்று தோன்றுகிறது. இப்பொழுது சங்கப்பாடல்களப் பற்றி எழுதி முடிக்க வேண்டும் என்ற உந்துதல். இதற்கெல்லாம் இடையில் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
பார்க்கலாம், ஐயா. ர.சு.ந.வின் திருமகளார் கேட்டது நினைவில் உறுத்திக் கொண்டே இருக்கத்தான் செய்கிறது. அவரைப் பற்றி நிச்சயம் எழுதத் தான் வேண்டும். நீங்கள் அவரைப் பற்றிக் கேட்டதும் தூண்டுதலாக இருக்கிறேன். செய்கிறேன். மிக்க நன்றி.

ஜீவி said...

@ தி. கீதா

வாங்க, சகோ.

செல்வம் சேர்வதற்கு மட்டுமில்லை, எதற்கும் ஏதோ காரணம் இருக்கத் தான் இருப்பதாகத் தான் தெரிகிறது.

மஹாபாரதம் வாசிக்கும் பொழுதெல்லாம் இந்த எண்ணங்கள் வலுப்பெறும்.

சங்கப் பாடலுக்காக நெல்லை நினைவுகள் மனசில் கிளர்ச்சியுற்றதே தவிர இந்தத் தொடரில் முழுதும் நெல்லைக் காட்சிகள் இல்லை.

இந்தப் பகுதியைத் தொடர்ந்து வாசித்து வாருங்கள். நன்றி, சகோ.






Related Posts with Thumbnails