'ஒரு மொழியின் வளர்ச்சிப் போக்கும் அதற்கான உந்து சக்திகளும்' என்று இந்தத் தொடருக்கு தலைப்பு வைக்கலாம் என்று தீர்மானம் செய்து தலைப்பாக தட்டச்சும் செய்து விட்டேன்.
ஒரு தலைப்பே அதன் உள்ளடக்கத்தைச் சொல்கிற மாதிரியான தலைப்பு அது. ஆனால் இன்றைய வாசக ஆர்வம் இதையெல்லாம் வாசிக்கக் கூடத் தயங்கும் கூட இல்லை, திரும்பியே பார்க்காது என்கிற அச்சத்தில் தலைப்பை மாற்றினேன். குறைந்தபட்சம் இந்த ஆள் என்ன எழுதியிருக்கிறான் என்று பதிவைத் திறந்தானும் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை இந்த தலைப்பு ஏற்படுத்தும் என் கிற நினைப்பில் துணிந்தேன்!
--- ஜீவி .
'ஷ'
=======================
இந்த வடமொழி எழுத்து 'ஷ'' என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. அது நம் கையில் சிக்கி படாதபாடு படுகிறது. வேண்டும் மாமியார், வேண்டாத மாமியார் போல சில நேரங்களில் நமக்கு இந்த 'ஷ' வேண்டும். சில நேரங்களில் வேண்டாம் என்கிற போக்கும் உண்டு. பலர் இந்த 'ஷ'வை தீர்மானமாக எழுத்தில் உபயோகப்படுத்துவதைத் தவிர்த்து விடுகின்றனர். நாளாவட்டத்தில் 'ஷ' எழுத்தே தமிழ் எழுத்து வடிவில் புழக்கத்தில் இராமல் போய்விடும் போலிருக்கிறது.
வடமொழி வெறுப்பா என்று நினைத்தால் அதுவும் இல்லை என்று தெரிகிறது. 'ஷ்'ஷைத் தவிர்ப்பவர்கள், 'ஷ்'க்கு பதில் 'ஸ்'ஸை உபயோகிப்பதால், 'ஸ்'ஸும் வடமொழி தானே என்று ஒரு பக்கம் நினைப்பு ஓடுகிறது.
(உதாரணம்: நாகேஷ் -- நாகேஸ், ராஜேஷ் --ராஜேஸ்) ,
இதில் இன்னொரு முரண்பாடான விநோதம் கூட. பேச்சு வழக்கில் எங்கெல்லாம் 'ஸ', 'ச' வருகிறதோ அங்கெல்லாம் வெகு சரளமாக 'ஷ'வை நகர்ப்புறங்களில் பெரும்பாலோர் உபயோகப்படுத்துகின்றனர். ஷங்கவி, ஷங்கர், ஷக்தி, ஷம்யுக்தா இப்ப்டி.
'ஷ'வைத் தவிரிக்கவே முடியாத சில சொற்கள் உண்டு.
உஷா, பாஷை, கோஷ்டி
தமிழ் எழுத்து 'க்'கைக் கண்டால் ஏகக் காதல் இந்த 'ஷ'வுக்கு. என்ன கெமிஸ்ட்ரியோ தெரியலே,, அந்த 'க்'கை நெருங்கினாலே அதனுடன் ஒன்றரக் கலந்து ஈருயிர் ஓருடலாய் ஒன்றி விடுகிறது..
ரிக் ஷா -- ரிக்ஷா
சில ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும் பொழுது 'ஷ'வை உபயோகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லாது போகும்.
ஷூ, பாலீஷ், .மஷ்ரூம்,
இன்னொரு பக்கம் வடமொழி எழுத்துக்களை தமிழ் படுத்துகிறேன் பேர்வழி என்று அதற்கான தமிழ்ச் சொற்களே மறந்து விடும் அளவுக்கு பரவலாகிப் போயிருக்கிறது.
சில உதாரணங்கள்:
இஷ்டம்' என்பதை இட்டம் என்று வலிந்து தமிழ் படுத்துவதை விட்டு, விருப்பம்' என்று அழகு தமிழில் எழுதலாம்.
வருஷம், என்பதனை வருடம் என்று எழுதாமல் ஆண்டு எனலாம்.
கஷ்டம், 'கட்டம்' ஆவதைத் தவிர்த்து துன்பமாகலாம்.
நஷ்டம், நட்டம் ஆகாமல் இழப்பு ஆகலாம்.
விஷயம் விடயம் என்றோ விதயம் என்றோ ஆகாமல் செய்தி ஆகலாம.
பாஷை எந்த சிதைவும் இல்லாமல் மொழி ஆகலாம்.
இப்படி நிறைய அழகழகான தமிழ் சொற்கள் புழக்கத்திற்கு வராமலேயே நாளாவட்டத்தில் மறக்கப்பட்டு விடுமோ என்று அயர்வாக இருக்கிறது.
தற்சமம், தற்பவம் என்கிற இலக்கண விதிகள் எல்லாம் இருக்கட்டும். வடமொழி எழுத்தைத் தவிர்க்க முயற்சித்து அதற்கு தமிழ் மாற்று எழுத்து எழுதுவது, பலநேரங்களில் நல்ல பல தமிழ்ச் சொற்களையே தவிர்த்ததாகி விடுகிறது.
அந்த வடமொழி சொல்லின் அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய தமிழ் சொற்கள் உபயோகத்திற்கு வராமலேயே மறக்கப்படுகின்றனவே என்று ஆதங்கமாக இருக்கிறது.
தமிழின் தனிச் செல்வம், ழ
=======================
வடமொழி 'ஷ'வைப் போலவேயான நிலை 'ழ'க்கு நேராமல் இருக்க வேண்டும். 'ழ'வை உச்சரிப்பதே பலருக்கு சோதனையாக இருக்கிறது. தொலைக்காட்சி போன்ற மக்கள் நேசிக்கும் ஊடகங்களில் கூட 'ழ'வைச் சரியாக மொழிய வேண்டும் என்றோ அதற்கான பயிற்சியும் பழக்கமும் பெறவேண்டும் என்பதிலோ அக்கறையோ ஆர்வமோ கொள்ளாத நிலையில் இருக்கிறது. 'ழ' தான் இப்படி என்றால் சமீப காலங்களில் 'ள'வும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது.
தமிழுக்கு சிறப்பு சேர்ப்பது 'ழ' எழுத்து. ஆங்கிலத்தில் 'ழ'வை எழுதும் பொழுது, பெரும்பாலும் ஆங்கில 'L' எழுத்தையே உபயோகிக்கிறோம். பத்திரிகைகளில் கூட Tamil Weekly, Tamil Daily தான். தமிழை TAMIZH என்று எழுதுவோர் இல்லை.
புதுச்சொற்கள்
==============
காலத்தின் தேவைகளூக்கேற்ப எல்லா மொழிகளிலும் புதுச் சொற்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. புதியன புழக்கத்திற்கு வருவதற்கு பழையன கழிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
அடுத்த நாளுக்கு இன்றைய நாள் பழசு; இன்றைய நாளுக்கு நேற்றைய நாள் பழசு என்பார்கள். புதுச் சொற்கள் வருகையைத் தவிர்க்க முடியாது. அது காலத்தின் கட்டாயம். தலைக்கவசம்-- தவிர்க்க முடியுமா, நம்மால்?..
இன்னொன்று. எந்த மொழியின் வளர்ச்சியும் அது எந்த அளவு வெகுதிரள் மக்களின் நாவினில் எழுத்தில் புழக்கத்தில் இருக்கிறது என்கிற தகுதி கொண்டே அந்தந்த சொற்களின் ஆயுசு காலமும் தீர்மானிக்கப்படும்.
மொழி ஒன்றும் கண்ணாடி சட்டத்திற்குள் அடைத்து பார்ப்பதல்ல. அழகு பார்ப்பதற்கும் அல்ல. அது அந்த மொழி பேசும் மக்களின் உபயோகத்தில் நீடித்து வாழ வேண்டும். எந்த மொழிக்கும் உயிர் கொடுத்து வாழையடி வாழையாக வளர்ப்பவர்கள் பண்டிதர்கள் அல்ல, அந்த மொழி பேசும் எளிய வெகுதிரள் மக்களே.
எழுத்தாளர் சுஜாதா சர்வசாதாரணமாக தன் எழுத்தில் நிறைய புதுச் சொற்களை வெள்ளோட்டமிட்டுப் பார்த்திருக்கிறார். அவர் எழுதிய 'கிளிக்கினான்' என்கிற சொல் அவரை நினைத்தாலே என் நினைவுக்கு வரும். ஒரு வினையின் காரணமாக அந்த வினைக்கான சொல் உருவாகலாம். சுஜாதா ஒரு வினையின் ஒலியை வைத்தே சொல்லை உருவாக்கியிருக்கிறார்.
நேற்று தினமலரில் 'அலம்பல்' என்ற சொல்லை வாசித்து விட்டு இதற்கு வேர்ச்சொல் என்னவாக இருக்கும் என்கிற யோசனையில் ஆழ்ந்தேன்.
தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இன்று தொலைக்காட்சியில் 'கலாய்த்தான்' என்று கேட்ட சொல் எப்படி உருவாக்கம் பெற்றிருக்கும் என்று யோசனையாயிற்று.
இப்படி நிறைய சொற்கள். இதை வாசிக்கும் அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புழக்கத்திற்கு வந்திருக்கும் புதுச்சொற்களைச் சொல்லுங்கள். அந்த சொல் எப்படியாக உருப்பெற்றிருக்கும் என்கிற கண்டுபிடிப்பையும் சேர்த்துச் சொல்வீர்கள் என்றால் நம்மால் முடிந்தது, பின்னூட்டங்களில் கைத்தட்டலாம்.
(தொடரும்)
18 comments:
நல்ல தொடர். ஆழ்ந்து வாசிப்பதற்குரியது.
//இஷ்டம்' என்பதை இட்டம் என்று வலிந்து தமிழ் படுத்துவதை விட்டு, விருப்பம்' என்று அழகு தமிழில் எழுதலாம்.// - ஹாஹா... இப்படி எல்லா இடத்திலும் செய்யமுடியுமா? உதாரணம் தருவேன் சரியாக இருக்காது.
அலம்பல் - அலம்பு-வினை அலம்பல் இதிலிருந்து வந்தது. அடங்கு, அடங்கல், வணங்கு, வணங்கல்,
அலம்பல் -அதிகம் தேவையற்ற உரையாடலை தொடர்வதை அலம்பல்/புலம்பல் என்று சொல்லுவார்கள் பேச்சுவழக்கில். அருமையான ஆராய்ச்சி. தொடரட்டும் பதிவுகள்.
விவாதத்திற்குரிய பொருள். தொடர்ந்து வாசிப்பேன்.
மொழி என்பது ஒருவருக்கொருவரான தொடர்புக்கானது என்கிற அடிப்படை புரிந்தால் இந்த கஷ்டங்கள், இல்லை இல்லை சிரமங்கள் இருக்காது! ஆங்கிலம் ஏன் இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்றால் அது எல்லா மொழிகளிலிருந்தும் வார்த்தைகளை தயக்கமின்றி எடுத்துக்கொள்கிறது. ஒரு திரைப்படத்தில் சத்யராஜும் வடிவேலும் இந்த மொழி பற்றி பேசுவார்கள். சாப்பிடும் இடத்திலேயே வடிவேலு சிறுநீர் கழித்துவிடுவார்! சற்று ஆபாசமான நகைச்சுவை என்றாலும் நிலைமையைப் புரிய வைப்பது அது!
ஜ பயன்பாடு தொடர்பாக..சில அலுவலர்கள்/மேல் பதவியில் உள்ளோர் வலிந்து சிலவற்றை நம்மீது திணிப்பதுண்டு. அவ்வாறான நிலையில் வடமொழி எழுத்துகளை பயன்படுத்தக்கூடாது என்றும் நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டபோது, நான் சம்புலிங்கம் என்றே என் பெயரை எழுதவேண்டும் என்று கூறப்பட்டது. "எக்காரணம் கொண்டும் என் பெயரை மாற்றமாட்டேன். என் தாத்தாவின் அப்பா பெயர் ஜம்புலிங்கம். அவர் நினைவாக இப்பெயரை என் தாத்தா வைத்துள்ளார். மேலும் என் பெயர் அவ்வாறுதான் எஸ்.எஸ்.எல்.சி.புத்தகத்தில் பதிவாகியுள்ளது" என்று உறுதியாகக் கூறிவிட்டேன். மொழிப்பற்று என்பது வேறு, ஒருவரை இவ்வாறாக நிர்ப்பந்திப்பது என்பது வேறு என்பது என் எண்ணம். அதில் நான் உறுதியாக இருந்தது பலருடைய புருவங்களை உயர்த்த வைத்தது.
//'கிளிக்கினான்' என்கிற சொல் அவரை நினைத்தாலே என் நினைவுக்கு வரும். ஒரு வினையின் காரணமாக அந்த வினைக்கான சொல் உருவாகலாம்.// - சர்வ சாதாரணமாக நான் was whatsapping என்று எழுதுவேன். இப்படித்தான் புதுச் சொற்கள், வினைகள் உருவாகின்றன. தனித் தமிழ் என்று சொல்பவர்களெல்லாம் பொழுது போகாதவர்கள். மேடைல பேசிட்டு, எழுதிட்டு, நைஸா பக்கத்துக் கடைக்குப் போய் 'டீ' குடித்துவிட்டு பசங்களுக்கு பீட்ஸா ஆர்டர் பண்ணுவாங்க. ஒரு பெயர் எப்படி இருக்கிறதோ, அப்படியே எழுதவேண்டும், செய்யுள் எழுதும்போது மாத்திரம் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடலாம்.
@ நெல்லைத் தமிழன் (1)
குறிப்பிட்ட ஒரு மொழிச் சொல்லின் மேல் வெறுப்போ, வேண்டாமையோ இருப்பது ஒருவித
பாசாங்குத்தனம். உண்மையில் அந்த வெறுப்பு இருக்குமெனில், அந்த மொழியில் அந்தச் சொல் நினைவுக்கே வந்திருக்கக் கூடாதல்லவா?..
இஷ்டம் என்று நினைவில் ஒரு சொல் தேங்கி, அதை இட்டம் என்று வலிந்து எழுதி அந்த மொழியின் மேல் வெறுப்பைக் காட்டுவதை விட்டு விட்டு, தனக்குப் பிடித்த மொழியில் விருப்பம் என்றே எழுதப் பழகினால், ஒவ்வொரு சொல்லுக்கும் பிடித்த மொழிச் சொல்லிலேயே சிந்திக்கும் திறமை வளரும் இல்லையா?.. 'இட்டம்' என்று தான் எழுதுவேன் என்று வல்லடி வழக்கு பேசின் பிடித்த மொழிச் சொல்லை ஆசை ஆசையாக எழுத விருப்பம் இல்லை என்று தானே அர்த்தம்?.. பிடித்த மொழிச் சொல்லைப் புழங்கும் விருப்பத்தை விட இன்னொரு மொழிச் சொல்லை தவறாக எழுதுவதில் தான் அதீத விருப்பம் மேலோங்குகிறது என்று தானே இதற்கு அர்த்தம்?
'சுயமரியாதை உணர்வு கொண்டவர், இயல்பாகவே பிறரின் சுயமரியாதையை மதிப்பவராய் இருத்தல் வேண்டும்' என்று ஜெயகாந்தன் சொல்வார். அந்த மாதிரி தான் இந்த மொழி ஆளுமை விஷயமும்.
@ நெல்லைத் தமிழன், தனிமரம்
அலம்பல் எனற சொல்லுக்கு ஆரவாரம், அலட்டல் -- என்று பொருள் கொள்ளலாம்.
கலாய்தல் என்றால் கிண்டல், நக்கல் என்பதைக் குறிப்பிடும் சொல் என்று நினைத்திருந்தேன்.
கலாய்த்தல் என்றால் 'கலந்து ஆராய்தல்' என்று பொருள் படும் நல்ல தமிழ்ச்சொல் அது என்று என் நண்பர் ஒருவர் ஒரு போடு போட்டாரே, பார்க்கலாம், அசந்து போனேன்.
இதெல்லாம் விட கொடுமை தமிழ் பேசத் தெரிந்தாலும், எழுதத் தெரியாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பள்ளி மாணவர்களில் பெரும் பகுதியினர் தமிழை வாசிக்கவும், எழுதவும் தெரியாது இருக்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
இந்த நிலை மாற வேண்டும்.
தொடர்ந்து வாசித்து நண்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களைப் பதிய வேண்டுகிறென்.
@ ஸ்ரீராம்
//மொழி என்பது ஒருவருக்கொருவரான தொடர்புக்கானது என்கிற அடிப்படை புரிந்தால் இந்த கஷ்டங்கள், இல்லை.. //
இந்த அடிப்படை புரிதல் தாண்டி மொழியின் மீதான காதல் எப்படியெல்லாம் நம்மை ஆட்டுவிக்கிறது என்பதை முடிந்தால் பின்னால் பார்க்கலாம், ஸ்ரீராம்.
ஆங்கிலம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ஒரு மொழியின் பரந்து பட்ட வீச்சு பற்றியது என்று கொள்கிறேன். மறுப்பதிற்கில்லை.
இதைத் தாண்டி மொழிச்சிறப்பு என்ற தனித்தன்மைகள் எல்லா மொழிகளுக்கும் உண்டு என்றும் நினைக்கிறேன். ஒரு அலசல் என்று வந்து விட்டால் எல்லா விஷயங்களையும் கணக்கில் கொண்டால் நம் பார்வையும் பரந்து பட்டு விரியும். இல்லையா?
@ Dr. B. Jambulingam, A. R. (Retd)
ஜம்புலிங்கம் என்பது எவ்வளவு ஆத்மார்த்தமான பெயர்?.. அதனை சிதைத்து எழுதச் சொல்லியிருக்கின்றனரே! என்னவென்பது?..
'எஸ்.எஸ்.எல்.ஸி. புத்தகத்தில் அந்தப் பெயர் தான் இருக்கிறது' என்ற சட்ட பூர்வமான வாதத்தை ரசித்தேன். சில விஷயங்களை இப்படித் தான் நாம் எதிர் கொள்ள வேண்டும் என்பதற்கு உங்கள் வாதம் எடுத்துக்காட்டு.
தமிழ் மொழி வளர்ச்சி என்பது எவ்வளவு மேலோட்டமான செயல்பாடுகளில் சிக்கித் தடுமாறுகிறது என்பதை நினைத்துப் பார்க்கவே வருத்தமாக இருக்கிறது.
தங்கள் உணர்வு வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றும் அந்த நினைவுகள் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருப்பது தெரிகிறது.
தங்கள் மனவோட்டங்களைப் பதிந்தமைக்கு நன்றி, ஐயா.
@ நெல்லைத் தமிழன் (2)
//ஒரு பெயர் எப்படி இருக்கிறதோ, அப்படியே எழுதவேண்டும், செய்யுள் எழுதும்போது மாத்திரம் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடலாம். //
தமிழ் மொழியில் மெத்தப் படித்த பண்டிதர்கள் கூட மொழி மீது கொண்ட காதலால் தன் பெயரை மாற்றிக் கொண்ட பொழுது கூட பெற்றோர் தனக்கு வைத்த பெயரின் சாயலில் தான் மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு உண்மை.
சாமி வேதாசலம் -- மறைமலை அடிகளார் (தனித்தமிழ் இயக்கம் கண்டவர்)
சூரிய நாராயண சாஸ்திரி -- பரிதி மாற்கலைஞர்
(இன்னும் சில உதாரணங்களையும் எடுத்துக் காட்டலாம்.)
அலம்பல் என்றால் துலக்குதலா?
தலைப்பு பற்றிய விளக்க வாய் விட்டுச் சிரிக்க வைத்தது. எப்பேற்பட்ட கணிப்பு!
கலந்து ஆராய்தல் என்ற பொருளே வரவில்லையே கலாய்த்தலில்?
மிகவும் சுவாரஸ்யமான, உபயோகமான கட்டுரை.
@ அப்பாதுரை (1)
பாத்திரங்களை அலம்பினார் என்றவிடத்து தற்கால வழக்கப்படி அலம்பல் என்ற சொல்லைத்
துலக்குதல் என்ற அர்த்தத்திலேயே உபயோகிக்கிறோம்.
அலம்பல் என்ற வார்த்தை தற்கால உபயோக வழக்கில் அலட்டல், ஆர்ப்பாட்டம் போன்ற அர்த்தங்களிலேயே புரிந்து கொள்கிற அளவில் பழக்கப்படுத்தி விட்டார்கள்.
@ அப்பாத்துரை
ஜீவகசிந்தாமணியில் ஒரு வரி:
கலாய் தொலை பருகுவார் போல துவன்றினாரே..
-- இந்த இடத்தில் வம்பக்கு இழுத்தல் என்ற பொருளில் 'கலாய்' என்ற வார்த்தை எடுத்தாளப்பட்டிருப்பதை அறிந்தேன்.
கலந்து ஆலோசித்தில் என்பது தான் கலாய்த்தல் என்று பேச்சு வழக்கில் சுருங்கிப் போய் விட்டது என்பது நண்பரின் விளக்கம்,
@ பா.வெ.
சவாஸ்யம் நம் சொல்வதில், எழுதுவதில் தான் இருக்கிறது. (இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்)
சொல்லப்போனால், சுவாரஸ்யப்படுத்துதல் என்பது தான் உண்மை போலும்!..
Post a Comment