மின் நூல்

Thursday, April 2, 2020

'ஜீவகீதம்' ஜெகசிற்பியன்

 அது  1957-ம்  ஆண்டு.

'ஆனந்த விகடன்'  நடத்திய அதன்  வெள்ளிவிழா போட்டியில்  இரு முதற்பரிசுகளை  தன்   சிறுகதைக்காகவும் சரித்திர நாவலுக்காகவும் பெற்றவரை தமிழ் எழுத்துலகும்  பத்திரிகை படிக்கும் வாசகர் வட்டமும் வியப்புடன் நிமிர்ந்து பார்த்தது. ஜெகசிற்பியன் தமிழ் பத்திரிகைகளின் வெகுஜன வாசகர்களுக்கு அறிமுகமான ஆரம்பக்கதை இது தான்.

பரிசு பெற்ற  சிறுகதையின் பெயர்  'நரிக்குறத்தி'. 
வெளியூர்களில் நாடோடிகளாகச் சுற்றித் திரியும் அந்த சமூக ஆண்களும் பெண்களும்  பாசிமணி,  ஊசி,  மணிமாலை விற்க தனித்தனியாகச் சென்றாலும்  சூரியன் மலைவாயில் விழும் மாலை நேரத்திற்குள்  பெண்கள்  அவர்கள் கூட்டமாக வசிக்கும்  இருப்பிடம் வந்து சேர்ந்து விட வேண்டும்.  இது அந்த சமூக கட்டுப்பாடு.

பாடிகோடியும்  ஆடிகோடாவும்  இளம் தம்பதிகள்.  பாசி, மணிமாலை ஏந்தி  விற்கச் சென்ற புது மணப்பெண் பாடிகோடி,  ஊர் எல்லை ஆற்றில்  திடீர் வெள்ளம் பிரவாகமாய்ப் பொங்கி  எழ  அக்கரையில் மாட்டிக் கொண்டு இக்கரை வர முடியாமல் தவிக்க, நொப்பும் நுரையுமாக சுழித்து ஓடுகிறஆற்றின் இக்கரையில் ஆடிகோடி..  ஆற்றின் கரையின்  இருமருங்க்கிலும்  இருவரும்  அலமந்து ஒருவரை ஒருவர் ஓடித்தேடி,  இரவு முச்சூடும்  தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கிற விதமாய்  "ஆடிகோடா..  பாடிகோடி.." என்று தங்கள் பெயரைக்  கூப்பிட்டு  கூப்பிட்டு ஓலமிட்டது  ஆண்டுகள் பல ஓடிப் போயினும்  இப்பொழுதும் சிந்தையில் ஒலிக்கிறது.   கொஞ்சம் கொஞ்சமாக இரவு அந்தப் பகுதியைத் தன் இருட்டில் விழுங்கத் தொடங்க  பின்னிரவும்  நெருங்க... நெருங்க..    நரிக்குறத்தி'  சோக முடிவைக் கொண்ட ஜெகசிற்பியனின் பேசப்பட்ட கதை.

சரித்திர நாவலுக்கான முதற்பரிசைத் தட்டிச் சென்ற 'திருச்சிற்றம்பலம்'  நாவல்,  ஓவியர் கோபுலுவின் படங்களுடன் அற்புதமாக விகடனில் வெளிவந்து 
படிப்போரின் உள்ளத்தைக்  கொள்ளை கொண்டது.  தில்லை நடராஜர்  ஆலயத்தை  விரிவு படுத்திப் பெரிதாகக் கட்ட விரும்பிய  அநபாய  குலோத்துங்கச் சோழன்,  கோயிலில் இருந்த  கோவிந்தராஜப் பெருமாளை அகற்றிக் கடலில் அமிழ்த்த முயல ,  அரச குல போட்டிப் பங்காளிகள்  அந்த நிகழ்ச்சியை  தமக்கு  சாதகமாக பயன்படுத்தி  ஆட்சி பீடத்தைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சியோயாய்  சைவ  வைணவ  பூசல்கள் கிளப்பப்படுகிற  பின்னணியில்  பக்தியும்,  காதலும்   பின்னிப்  பிணைந்த நாவல்.  ஏழிசை வல்லபி,  காடவராயர்,  பரிவாதினி,  காளத்தி தேவன்  போன்ற மறக்க முடியாத பாத்திரப் படைப்புகள்.

ஜெகசிற்பியனின்  முத்திரை பதித்த இன்னொரு சரித்திர நாவல்  'நந்திவர்மன் காதலி'.   நந்திக்கலம்பகத்தின்  பாட்டுரைத் தலைவன் மூன்றாம் நந்திவர்மன்  தான் இந்த வரலாற்று நாவலின்  நாயகன்.  அரியணையைக் கைப்பற்ற நடக்கும் பங்காளிகள்   சண்டையில்  தமிழ் மொழி மீது கொண்டிருந்த  காதலால் தன்  பேரில் கலம்பகம் பாடினால் இறந்து படுவோம் என்று தெரிந்திருந்தும்  தமிழ்க்  காப்பியத்தை அரங்கேற்றி   பார்க்க தன் உயிரையும் பணயமாகத் தர சித்தமாகிறான்.

அரசர்களுக்கு  வரையறையான  தொண்ணூறு பாடல்கள் கொண்ட  கலம்பகத்தின் ஒவ்வொரு பாடல் அரங்கேறும் பொழுதும்  நந்திவர்மன் ஒரு பந்தலில் அமர்ந்து அதைக் கேட்க வேண்டும் என்பது ஏற்பாடு.  ஒவ்வொரு பாடலும் பாடி  முடியும் பொழுது மன்னன் அமர்ந்திருக்கும் பந்தல் பற்றி எரி;யும்.   உடனே மன்னன் அடுத்த பந்தலில் அமர அது பற்றி எரிய அதற்கடுத்த பந்தல் என்று செல்லும் தொடர்  வரிசையில்  எண்பத்தொன்பதாவது  பந்தலுக்கு அடுத்த தொண்ணூறாவது பந்தல் எரியும் பொழுது மன்னனை மாய்த்து விடலாம் என்பது ஏற்பாடு.

நந்திவர்மனைக் கொல்லும் முயற்சியில் தோல்வியுற்ற அவனது முதல் மூன்று சகோதரர்களும்  பந்தல் கட்டுகிறவர்கள் போன்று மாறுவேடம் அணிந்து பந்தல்களைக் கொளுத்தி நந்திவர்மனை மாய்க்கத் திட்டமிடுகின்றனர்.   நாலாவது சகோதரன் காடவன் கவிஞன். அவன் தான் கலம்பகம் இயற்றுகிறான்.   ஆயினும் கடைசி கட்டத்தில் அவன்  மனம் நெகிழ்ந்து   இந்த சூதை நந்தியிடமே சொல்லி   அறம் பாட மாட்டேன் என்று மறுக்கிறான்.

ஆனால் நந்திவர்மனுக்கோ  தன் பெயரில்  உருவான
கலம்பகக் காப்பியத்தை   அரங்கேற்றிப் பார்க்க ஆசை .  அந்த அளவுக்கு  தன் உயிரையும் அர்ப்பணிக்க சித்தமாகிறான்.  இதற்கிடையில்  பாண்டிய  மன்னன்  சீமாற சீவல்லபப் பாண்டியன்  தன் பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள இந்த சூழ்நிலையில் தயாராகிறான்.  அவன் தங்கை வாருணி தேவியும்  இதற்கு கூட்டாக செயல்படுகிறாள்.   இருப்பினும் வாருணி தேவி  நந்திவர்மன் மீது கொண்ட காதல் தீயில் கருகி கடைசி  தொண்ணூறாவது பாடல் பாடப்பட  பந்தல் பற்றி எரியும்  பொழுது  தீயில் பாய்கிறாள்.

'வானுறு  மதியம் அடைந்தது   உன்  வதனம்
    மறிகடல்  புகுந்தது  உன்  கீர்த்தி
கான்உறு  புலியை அடைதது உன் வீரம்
    கற்பகம்  அடைந்தது  உன்  கால்கள்
தேன் உறு மலராள்  அரியிடம்  புகுந்தாள்
   செந்தழல்  அடைந்தது உன்  தேகம்
நானும் என் கவியும்  எவ்விடம்  புகுவேம்?
   நந்தியே   நந்தயா  பரனே!


--  என்னும்   நந்திக்கலம்பகப் பாடல்  நந்திவர்மன் கீர்த்தி பற்றியும்  அவன் தேகம் செந்தழல் அடைந்தது பற்றியும் சொல்கிறது.   யார் பாடியது என்று யாத்தவர் பெயர் தெரியாத  நந்திக்கலம்பகம்  தகுந்த யூகத்தையும்  கற்பனையையும்  கிளறி  இந்த நாவலை  நடத்திச் செல்வதற்கு  ஜெகசிற்பியனுக்கு  வழி காட்டியிருக்கலாம்.

வரலாற்று  நாவல்களில்  தீர்மானமான தடம் பதித்தவர்
ஜெகசிற்பியன்.   நந்திவர்மன் காதலிக்குத் தொடர்ச்சியாக 'மாறம் பாவை',  இமயவரம்பன் நெடுஞ்சேரலானை தலைனாகக் கொண்ட  'நாயகி நற்சோணை',  விக்டனில் தொடராக வந்த 'ஆலவாய் அழகன்,  'மகர யாழ் மங்கை',  பத் தினிக்கோட்டம்   என்று இந்த நேரத்தில் ஜெ.சி.யின் சரித்திரப் படைப்புகள் நினைவுக்கு வருகின்றன.

நிறைய சமூக நாவல்கள்.  கூலி விவசாயிகளின்  அல்லாடல்களைச் சொல்லும்   'மண்ணின் குரல்',   கல்கியில் தொடராக வந்த 'சொர்க்கத்தின் நிழல்',  பதிமூன்று இந்திய மொழிகளில்   நேஷனல் புக் டிரஸ்ட்டால் மொழியாக்கம் செய்யப்பட்ட  'ஜீவகீதம்',  புதுமைப்ப்பித்தனைக் கவர்ந்த 'கொம்புத்தேன்'  கல்கித் தொடர்  'கிளிஞ்சல்  கோபுரம்',  அன்றாடங்காய்ச்சிகளின் அவல வாழ்வை  படம் பிடித்துக் காட்டிய  'காணக்கிடைக்காத தங்கம்'  என்று நிறைய சொல்லலாம்.

நாடக உலகிற்கு அவரது பங்களிப்பாக படைத்திட்ட 'சதுரங்க சாணக்கியன்'  பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 

மஹாகவி பாஸனின் மாணவியான  கெளதமி என்னும் நாட்டிய நங்கை,  சாணக்கியனைக்  காதலிப்பதும்,  அது பற்றி அறியாத  சந்திர குப்தன்  கெளதமியின் மீது  பிரேமை கொள்வதும்  இந்த நாடகத்தின் முடிச்சு.

அரசியல் சதுரங்க ஆட்டத்தில்  மட்டுமே குறியாக இருந்த இது பற்றி ஏதும் அறியாத  சாணக்கியன்,  சந்திர குப்தனின் மறுப்பையும் மறுத்து  செலுகஸ்  நிகேடாரின்  அருமைப்  புதல்வி  டயோ பாண்டிஸை அரசியல் காரணங்களுக்காக  சந்திரகுப்தனுக்கு   திரும ணம் செய்விக்கிறான்.  எல்லா சிக்கல்களும் கொண்ட  சாதுர்யமாக  எழுதப்பட்ட இந்த நாடகம்  ஜெகசிற்பியனின்  எழுத்தாற்றலை பறைசாற்றும்.

அரு. இராமநாதன்  அவர்களின்  'காதல்'  பத்திரிகையில் 
அந்நாட்களில்  ஜெகசிற்பியனும் நானும் தொடர்ந்து எழுதுபவர்களாக  இருந்தோம்  என்பது  இனிய நினைவுகள்.  'காதல்' பத்திரிகையின்   பொங்கல் மலரை,   வஸந்த மலர் என்று வெளியிடுவார்கள்.  அப்படியான ஒரு வஸந்த மலரில்  எனது  'பார்வதி அம்மாள் என் அம்மா'  என்ற குறுநாவலும்
ஜெகசிற்பியனின்  குறுநாவலும்   அந்த மலரில் இடம் பெற்ற இரட்டைக்  குறுநாவல்களாக  வெளிவந்தன.   எனது அந்தக்  கதையை வாசித்து விட்டு  ஜெ.சி. எனக்கு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்ததும்   நெகிழ்ச்சியுடன் நினைவில் தேங்கி இருக்கிறது.

அடித்தட்டு  மக்களின்  அவல வாழ்க்கை நிலைகளை உரத்த குரலாய்  பிரகடனம்  பண்ணியது மட்டுமல்ல,  எல்லா நேரங்களிலும்  ஏழை மக்களின்  மீது எல்லையற்ற பரிவு காட்டுகிற  ரட்சகராய்  அவர்  திகழ்ந்ததை சொல்லித் தான்   ஆக வேண்டும்.   காந்தீயத்திலும்,   சர்வோதைய  சிந்தனைகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த  ஜெகசிற்பியன்  தமிழ் எழுத்துலகில்  தாம் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய  சாதனைகள் மறக்க முடியாதவை.

Related Posts with Thumbnails