அது 1957-ம் ஆண்டு.
'ஆனந்த விகடன்' நடத்திய அதன் வெள்ளிவிழா போட்டியில் இரு முதற்பரிசுகளை தன் சிறுகதைக்காகவும் சரித்திர நாவலுக்காகவும் பெற்றவரை தமிழ் எழுத்துலகும் பத்திரிகை படிக்கும் வாசகர் வட்டமும் வியப்புடன் நிமிர்ந்து பார்த்தது. ஜெகசிற்பியன் தமிழ் பத்திரிகைகளின் வெகுஜன வாசகர்களுக்கு அறிமுகமான ஆரம்பக்கதை இது தான்.
பரிசு பெற்ற சிறுகதையின் பெயர் 'நரிக்குறத்தி'.
வெளியூர்களில் நாடோடிகளாகச் சுற்றித் திரியும் அந்த சமூக ஆண்களும் பெண்களும் பாசிமணி, ஊசி, மணிமாலை விற்க தனித்தனியாகச் சென்றாலும் சூரியன் மலைவாயில் விழும் மாலை நேரத்திற்குள் பெண்கள் அவர்கள் கூட்டமாக வசிக்கும் இருப்பிடம் வந்து சேர்ந்து விட வேண்டும். இது அந்த சமூக கட்டுப்பாடு.
பாடிகோடியும் ஆடிகோடாவும் இளம் தம்பதிகள். பாசி, மணிமாலை ஏந்தி விற்கச் சென்ற புது மணப்பெண் பாடிகோடி, ஊர் எல்லை ஆற்றில் திடீர் வெள்ளம் பிரவாகமாய்ப் பொங்கி எழ அக்கரையில் மாட்டிக் கொண்டு இக்கரை வர முடியாமல் தவிக்க, நொப்பும் நுரையுமாக சுழித்து ஓடுகிறஆற்றின் இக்கரையில் ஆடிகோடி.. ஆற்றின் கரையின் இருமருங்க்கிலும் இருவரும் அலமந்து ஒருவரை ஒருவர் ஓடித்தேடி, இரவு முச்சூடும் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கிற விதமாய் "ஆடிகோடா.. பாடிகோடி.." என்று தங்கள் பெயரைக் கூப்பிட்டு கூப்பிட்டு ஓலமிட்டது ஆண்டுகள் பல ஓடிப் போயினும் இப்பொழுதும் சிந்தையில் ஒலிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இரவு அந்தப் பகுதியைத் தன் இருட்டில் விழுங்கத் தொடங்க பின்னிரவும் நெருங்க... நெருங்க.. நரிக்குறத்தி' சோக முடிவைக் கொண்ட ஜெகசிற்பியனின் பேசப்பட்ட கதை.
சரித்திர நாவலுக்கான முதற்பரிசைத் தட்டிச் சென்ற 'திருச்சிற்றம்பலம்' நாவல், ஓவியர் கோபுலுவின் படங்களுடன் அற்புதமாக விகடனில் வெளிவந்து
படிப்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தில்லை நடராஜர் ஆலயத்தை விரிவு படுத்திப் பெரிதாகக் கட்ட விரும்பிய அநபாய குலோத்துங்கச் சோழன், கோயிலில் இருந்த கோவிந்தராஜப் பெருமாளை அகற்றிக் கடலில் அமிழ்த்த முயல , அரச குல போட்டிப் பங்காளிகள் அந்த நிகழ்ச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சி பீடத்தைக் கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சியோயாய் சைவ வைணவ பூசல்கள் கிளப்பப்படுகிற பின்னணியில் பக்தியும், காதலும் பின்னிப் பிணைந்த நாவல். ஏழிசை வல்லபி, காடவராயர், பரிவாதினி, காளத்தி தேவன் போன்ற மறக்க முடியாத பாத்திரப் படைப்புகள்.
ஜெகசிற்பியனின் முத்திரை பதித்த இன்னொரு சரித்திர நாவல் 'நந்திவர்மன் காதலி'. நந்திக்கலம்பகத்தின் பாட்டுரைத் தலைவன் மூன்றாம் நந்திவர்மன் தான் இந்த வரலாற்று நாவலின் நாயகன். அரியணையைக் கைப்பற்ற நடக்கும் பங்காளிகள் சண்டையில் தமிழ் மொழி மீது கொண்டிருந்த காதலால் தன் பேரில் கலம்பகம் பாடினால் இறந்து படுவோம் என்று தெரிந்திருந்தும் தமிழ்க் காப்பியத்தை அரங்கேற்றி பார்க்க தன் உயிரையும் பணயமாகத் தர சித்தமாகிறான்.
அரசர்களுக்கு வரையறையான தொண்ணூறு பாடல்கள் கொண்ட கலம்பகத்தின் ஒவ்வொரு பாடல் அரங்கேறும் பொழுதும் நந்திவர்மன் ஒரு பந்தலில் அமர்ந்து அதைக் கேட்க வேண்டும் என்பது ஏற்பாடு. ஒவ்வொரு பாடலும் பாடி முடியும் பொழுது மன்னன் அமர்ந்திருக்கும் பந்தல் பற்றி எரி;யும். உடனே மன்னன் அடுத்த பந்தலில் அமர அது பற்றி எரிய அதற்கடுத்த பந்தல் என்று செல்லும் தொடர் வரிசையில் எண்பத்தொன்பதாவது பந்தலுக்கு அடுத்த தொண்ணூறாவது பந்தல் எரியும் பொழுது மன்னனை மாய்த்து விடலாம் என்பது ஏற்பாடு.
நந்திவர்மனைக் கொல்லும் முயற்சியில் தோல்வியுற்ற அவனது முதல் மூன்று சகோதரர்களும் பந்தல் கட்டுகிறவர்கள் போன்று மாறுவேடம் அணிந்து பந்தல்களைக் கொளுத்தி நந்திவர்மனை மாய்க்கத் திட்டமிடுகின்றனர். நாலாவது சகோதரன் காடவன் கவிஞன். அவன் தான் கலம்பகம் இயற்றுகிறான். ஆயினும் கடைசி கட்டத்தில் அவன் மனம் நெகிழ்ந்து இந்த சூதை நந்தியிடமே சொல்லி அறம் பாட மாட்டேன் என்று மறுக்கிறான்.
ஆனால் நந்திவர்மனுக்கோ தன் பெயரில் உருவான
கலம்பகக் காப்பியத்தை அரங்கேற்றிப் பார்க்க ஆசை . அந்த அளவுக்கு தன் உயிரையும் அர்ப்பணிக்க சித்தமாகிறான். இதற்கிடையில் பாண்டிய மன்னன் சீமாற சீவல்லபப் பாண்டியன் தன் பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள இந்த சூழ்நிலையில் தயாராகிறான். அவன் தங்கை வாருணி தேவியும் இதற்கு கூட்டாக செயல்படுகிறாள். இருப்பினும் வாருணி தேவி நந்திவர்மன் மீது கொண்ட காதல் தீயில் கருகி கடைசி தொண்ணூறாவது பாடல் பாடப்பட பந்தல் பற்றி எரியும் பொழுது தீயில் பாய்கிறாள்.
'வானுறு மதியம் அடைந்தது உன் வதனம்
மறிகடல் புகுந்தது உன் கீர்த்தி
கான்உறு புலியை அடைதது உன் வீரம்
கற்பகம் அடைந்தது உன் கால்கள்
தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்தது உன் தேகம்
நானும் என் கவியும் எவ்விடம் புகுவேம்?
நந்தியே நந்தயா பரனே!
-- என்னும் நந்திக்கலம்பகப் பாடல் நந்திவர்மன் கீர்த்தி பற்றியும் அவன் தேகம் செந்தழல் அடைந்தது பற்றியும் சொல்கிறது. யார் பாடியது என்று யாத்தவர் பெயர் தெரியாத நந்திக்கலம்பகம் தகுந்த யூகத்தையும் கற்பனையையும் கிளறி இந்த நாவலை நடத்திச் செல்வதற்கு ஜெகசிற்பியனுக்கு வழி காட்டியிருக்கலாம்.
வரலாற்று நாவல்களில் தீர்மானமான தடம் பதித்தவர்
ஜெகசிற்பியன். நந்திவர்மன் காதலிக்குத் தொடர்ச்சியாக 'மாறம் பாவை', இமயவரம்பன் நெடுஞ்சேரலானை தலைனாகக் கொண்ட 'நாயகி நற்சோணை', விக்டனில் தொடராக வந்த 'ஆலவாய் அழகன், 'மகர யாழ் மங்கை', பத் தினிக்கோட்டம் என்று இந்த நேரத்தில் ஜெ.சி.யின் சரித்திரப் படைப்புகள் நினைவுக்கு வருகின்றன.
நிறைய சமூக நாவல்கள். கூலி விவசாயிகளின் அல்லாடல்களைச் சொல்லும் 'மண்ணின் குரல்', கல்கியில் தொடராக வந்த 'சொர்க்கத்தின் நிழல்', பதிமூன்று இந்திய மொழிகளில் நேஷனல் புக் டிரஸ்ட்டால் மொழியாக்கம் செய்யப்பட்ட 'ஜீவகீதம்', புதுமைப்ப்பித்தனைக் கவர்ந்த 'கொம்புத்தேன்' கல்கித் தொடர் 'கிளிஞ்சல் கோபுரம்', அன்றாடங்காய்ச்சிகளின் அவல வாழ்வை படம் பிடித்துக் காட்டிய 'காணக்கிடைக்காத தங்கம்' என்று நிறைய சொல்லலாம்.
நாடக உலகிற்கு அவரது பங்களிப்பாக படைத்திட்ட 'சதுரங்க சாணக்கியன்' பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
மஹாகவி பாஸனின் மாணவியான கெளதமி என்னும் நாட்டிய நங்கை, சாணக்கியனைக் காதலிப்பதும், அது பற்றி அறியாத சந்திர குப்தன் கெளதமியின் மீது பிரேமை கொள்வதும் இந்த நாடகத்தின் முடிச்சு.
அரசியல் சதுரங்க ஆட்டத்தில் மட்டுமே குறியாக இருந்த இது பற்றி ஏதும் அறியாத சாணக்கியன், சந்திர குப்தனின் மறுப்பையும் மறுத்து செலுகஸ் நிகேடாரின் அருமைப் புதல்வி டயோ பாண்டிஸை அரசியல் காரணங்களுக்காக சந்திரகுப்தனுக்கு திரும ணம் செய்விக்கிறான். எல்லா சிக்கல்களும் கொண்ட சாதுர்யமாக எழுதப்பட்ட இந்த நாடகம் ஜெகசிற்பியனின் எழுத்தாற்றலை பறைசாற்றும்.

அரு. இராமநாதன் அவர்களின் 'காதல்' பத்திரிகையில்
அந்நாட்களில் ஜெகசிற்பியனும் நானும் தொடர்ந்து எழுதுபவர்களாக இருந்தோம் என்பது இனிய நினைவுகள். 'காதல்' பத்திரிகையின் பொங்கல் மலரை, வஸந்த மலர் என்று வெளியிடுவார்கள். அப்படியான ஒரு வஸந்த மலரில் எனது 'பார்வதி அம்மாள் என் அம்மா' என்ற குறுநாவலும்
ஜெகசிற்பியனின் குறுநாவலும் அந்த மலரில் இடம் பெற்ற இரட்டைக் குறுநாவல்களாக வெளிவந்தன. எனது அந்தக் கதையை வாசித்து விட்டு ஜெ.சி. எனக்கு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்ததும் நெகிழ்ச்சியுடன் நினைவில் தேங்கி இருக்கிறது.
அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கை நிலைகளை உரத்த குரலாய் பிரகடனம் பண்ணியது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் ஏழை மக்களின் மீது எல்லையற்ற பரிவு காட்டுகிற ரட்சகராய் அவர் திகழ்ந்ததை சொல்லித் தான் ஆக வேண்டும். காந்தீயத்திலும், சர்வோதைய சிந்தனைகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த ஜெகசிற்பியன் தமிழ் எழுத்துலகில் தாம் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் மறக்க முடியாதவை.
18 comments:
காதல் பத்திரிகையில் நீங்களும் ஜெகசிற்பியன் அவர்களும் ஒரே நேரத்தில் உங்கள் படைப்புகளை எழுதி இருப்பது வியப்பான தகவல். பாராட்டுகள்.
ஜெகசிற்பியன் வாசித்ததில்லை. நந்திவர்மன் காதலி மட்டும் வாசித்திருக்கிறேன்.
பழைய நினைவுகளைக்கிளறி விட்டு விட்டீர்கள்! 'திருச்சிற்றம்பலம், மகரயாழ் மங்கை ' படித்து ரசித்திருக்கிறேன். ஆலவாய் அழகனும் மதுராந்தகியும் என்னிடம் இருக்கின்றன. கோபுலுவின் கை வண்ணத்தில் ஏழிசை வல்லபியும் பத்தினி கோட்டத்து வினுவின் ஓவியங்களும் இன்னும் நினைவில் இருக்கின்றன!! கல்கியில் சொர்க்கத்தின் நிழல் வெளி வந்த காலத்தில் அது மிகவும் பேசப்பட்டதும் இன்னும் நினைவில் இருக்கிறது. கோபுலுவும் வினுவும் தான் நான் 'ஏகலைவனாக' ஓவியம் கற்க உந்து சக்திகளாக இருந்தார்கள்!
அரு. இராமநாதன் அவர்களின் 'காதல்' பத்திரிகையில்
அந்நாட்களில் ஜெகசிற்பியனும் நானும் தொடர்ந்து எழுதுபவர்களாக இருந்தோம் என்பது இனிய நினைவுகள். 'காதல்' பத்திரிகையின் பொங்கல் மலரை, வஸந்த மலர் என்று வெளியிடுவார்கள். அப்படியான ஒரு வஸந்த மலரில் எனது 'பார்வதி அம்மாள் என் அம்மா' என்ற குறுநாவலும்
ஜெகசிற்பியனின் குறுநாவலும் அந்த மலரில் இடம் பெற்ற இரட்டைக் குறுநாவல்களாக வெளிவந்தன. எனது அந்தக் கதையை வாசித்து விட்டு ஜெ.சி. எனக்கு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்ததும் நெகிழ்ச்சியுடன் நினைவில் தேங்கி இருக்கிறது.//
ஸ்வாரஸ்யமான, ஆச்சரியமூட்ட்டும் பெருமைக்குரிய விஷயம் இல்லையா...
ஜெகசிற்பியன் பற்றியும் அவரது புத்தகங்கள் பற்றியும் காதல் பத்திரிகை என்று ஒன்று இருந்தது என்றெல்லாம் நிறைய அறிந்து கொள்ள முடிகிறது.
//எனது 'பார்வதி அம்மாள் என் அம்மா' என்ற குறுநாவலும்//
அண்ணா இது உங்களிடம் இப்போதும் இருக்கும் தானே? இதை இங்கு தொடராக வெளியிடலாமே. நாங்களும் வாசிக்கலாமே என்றுதான்
கீதா
நந்திவர்மன் காதலி படித்த நினைவு. அவரது மற்ற புத்தகங்கள் படித்த நினைவில்லை. எனது அம்மா நந்திவர்மன் காதலி பற்றி அடிக்கடி சொல்வார்.
உங்கள் அனுபவங்கள் பிரமிக்க வைக்கின்றன.
நிங்கள் எழுதி வரும் எழுத்தாளர்களின் படைப்பை நான் படித்திந்தாலும் எதுவும் நினைவுக்குவருவதில்லை
அருமை. மிகச்சிறந்த வாசிப்பு அனுபவப் பகிர்வு. அவரது நூல்களை இதுவரை வாசித்தது இல்லை என்றே நினைக்கிறேன். விரைவில் வாசித்து விடுவோம்.
எத்தனை அருமையான நினைவுகள் .நீங்களும் ஜெக சிற்பியனுடன்
பணியாற்றி இருக்கிறீர்களா.
எத்தனை மகிழ்ச்சியான செய்தி.
திருச்சிற்றம்பலம்,ஆலவாய் அழகன் நினைவில் இருக்கிறது.
இந்தத் தொடருடன் வந்த கோபுலு ஐயாவின்
சித்திரங்கள் மனத்தை விட்டு நீங்காதவை.
அந்தப் பத்து வயதில் இவ்வளவு தமிழ்க் கதைகளைப்
படிக்கக் கற்றுக் கொடுத்த தமிழ் ஆசானுக்கு எப்பொழுதும் நன்றி.
பார்வதி என் அம்மா, நாவலை இங்கே
வெளியிட வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன்.
//ஒரு வஸந்த மலரில் எனது 'பார்வதி அம்மாள் என் அம்மா' என்ற குறுநாவலும்
ஜெகசிற்பியனின் குறுநாவலும் அந்த மலரில் இடம் பெற்ற இரட்டைக் குறுநாவல்களாக வெளிவந்தன. //
உங்கள் குறு நாவலை படிக்க ஆவல்.
உங்கள் புத்தக விமர்சனங்கல் எல்லாம் அருமை.
விமர்சனங்கள் அருமை.
பகிர்ந்த கதைகள் படிக்க ஆவல்.
‘ஆனந்த விகடன்' வெள்ளிவிழா போட்டி நடத்தியபோது நான் 9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சிறுகதைக்கான போட்டியில் திரு ஜெகசிற்பியனின் ‘நரிக்குறத்தி’ முதல் பரிசு பெற்று,அந்த கதை விகடனில் வெளி வந்தபோது படித்ததும்,ஆற்றங்கரையில் நின்று அந்த நரிக்குறத்தி தன் கணவனை அழைப்பதை கோபுலு அவர்கள் படமாக வரைந்திருந்ததும் நினைவில் இருக்கிறது.
அந்த கதையைப் படித்தபின் ஏதோ நேரில் அந்த துயர சம்பவத்தை பார்த்தது போன்ற உணர்வை அந்த கதை ஏற்படுத்தியது உண்மை.
அந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘திருச்சிற்றம்பலம்’ என்ற அவரது வரலாற்று நாவலையும் படித்திருக்கிறேன். அவருடைய மற்ற கதைகள் மற்றும் நாவல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
நீங்களும் ஜெகசிற்பியனும் சமகால எழுத்தாளர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி!
@ ஸ்ரீராம்
ஆமாம். அந்தாட்களில் பிரபலமான ஜெகசிற்பியன் குறுநாவலையும் என் குறுந்தாவலையும் ஒரே மலரில் சேர்த்துப் பிரசுரித்திருந்தது எனக்கும் பெருமையாகத் தான் இருந்தது.
அரு. ராமநாதனின் பிரேமா பிரசுரம் துப்பறியும், மர்மக் கதை நூல்களி பிரசுரித்து வந்தது. சிரஞ்சீவி, மேதாவி, பி.டி. சாமி என்று அந்நாளைய மர்மக்கதை எழுத்தாளர்களின் படைப்புகள் பிரமாதமாக இருக்கும். இந்த செட்டில் எனக்கு மிகவும் பிடித்தவர் மேதாவி அவர்கள். காரணம் உங்களுக்கே தெரியும். அவர் எழுத்து நடை.
விஷயங்களைக் கோர்வையாகச் சொலவது எப்படி என்று கற்றுக் கொடுத்தவர் அந்த மேதை.
தேவி பாகவதம், விஷ்ணுபுராணம், சிவபுராணம் என்று தண்டி தண்டியாக குறைந்த விலை பிரசுரங்களை வேறு பிரேமா பிரசுரம் வெளி;யிட்டது. சிந்தனையாளர் வரிசை என்று ஒரு தொகுப்பை வரிசையாகப் பிரசுரித்தது. அதில் டார்வின் பற்றி ஜெகசிற்பியனின் எழுதிய நூலை வெளியிட்டது நினைவில் இருக்கிறது. பிரேமா பிரசுரம் இன்று கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி எதிரில் இருக்கிறது. இப்பொழுதும் அந்த புராணவரிசை புத்தகங்கள் லேசான கூடுதல் விலையில் மறுபிரசுரம் காணுகின்றன. அந்தாட்களில் வேத வியாசரின் ஸ்ரீ தேவி பாகவதம் மூன்று பாகங்கள். ஒவ்வொரு பாகமும் 400 பக்கங்கள் அளவில் வெறும் ரூ. 8/- விலையில். 1979 வருடத்திய நாலாவது பதிப்பு.
எந்த விதத்திலோ அரு. ராமநாதன் அவர்களுக்கு என் கதைகள் பிடித்திருந்தது. நான் அனுப்பிய எந்தக் கதையையும் திருப்பி அனுப்பாமல் பிரசுரித்த இரண்டு பத்திரிகைகளை மறக்க முடியாது. 1) காதல் 2) வான்மதி. வான்மதி நிறைய சோதனை முயற்சிகளைச் செய்ய என்னை ஊக்குவித்தது. 'சில கசப்பான உண்மைகள்' என்று ஒரு தொடர்கதையைக் கூட அதில் எழுதி வந்தேன்.
@ மனோ சாமிநாதன்
அம்மாடி! ஜெகசிற்பியனின் அணுக்க வாசகரை அறிய வந்ததில் பரம சந்தோஷம் எனக்கு. ஒருத்தனாகச் சொல்வதைத் தாண்டி துணைக்கு இன்னொருவரும் கிடைத்த சந்தோஷம் இது. அட! ஓவியம் கூட வரைவீர்களா?.. பிரமாதம்! கோபுலுவும், வினுவும்
மான்சீக குருமார்கள்! (ஒடிசலான இடுப்புக்கும் ஓவல் முக அழகுக்கும் கோபுலு! வட்ட முக, பெரிய விழிகளுக்கு வினு) மானசீக குருமார்கள்! கொடுத்து வைத்தவர் தான்.
வாழ்த்துக்கள், சகோ.
@ கீதா
//அண்ணா இது உங்களிடம் இப்போதும் இருக்கும் தானே? இதை இங்கு தொடராக வெளியிடலாமே. நாங்களும் வாசிக்கலாமே என்றுதான்.. //
1964- வாக்கில் பிரசுரமானது. கிட்டத்தட்ட 56 வருடங்களுக்கு முன். எப்படிங்க இருக்கும்?..
பைண்ட் பண்ணி வைத்திருந்தால், பல இடமாற்றங்களில் காணாமல் போகாது இருந்திருந்தால், இருந்திருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன் கோடம்பாக்கம் பிரேமா பிரசுரம் சென்று காதல் பழைய இதழ்கள் பற்றி விசாரித்தேன். இதழ் நின்று போனதும் கண்டனூருக்கு (அரு. இராமநாதன் பிறந்த ஊர் - இப்பொழுது சிவகங்கை மாவட்டம்) கட்டு கட்டாக எடுத்துச் சென்றதாகச் சொன்னார்கள். ஆனால் இப்பொழுது அதெல்லாம் இருக்குமா என்று அவர்களுக்கே சந்தேகம். புத்தக சேமிப்பு மேதை ஐயா ரோஜா முத்தையா செட்டியார் நூலகத்தில் பழைய காதல் இதழ்களைப் பார்த்ததாக சமீபத்தில் ஒரு தளத்தில் வாசித்தேன். புதுக்கோட்டை நண்பர்கள் யாராவது இதை வாசித்தால் உதவலாம். சென்னை தரமணியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
இப்பொழுது இருக்கும் ஒரே நம்பிக்கை. தேடிப் பார்க்க வேண்டும்.
@ வெங்கட் நாகராஜ்
சென்ற பின்னூட்டத்தில் சகோ. கீதா அவர்களுக்கு பதிலளித்ததைத் தொடர்ந்து புத்தக சேமிப்பு சேவை செய்த ஐயா ரோஜா முத்தையா அவர்களைப் பற்றிய பிரமிப்பில் இப்பொழுது இருக்கிறேன். கூகுளில் தேடிப் பார்த்து அவர் பற்றி வாசித்துப் பாருங்கள்.
நீங்களும் பிரமித்துப் போவீர்கள். எப்படிப்பட்ட மானுடர் எல்லாம் நம் தாய்த் திருநாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று மனம் நெகிழ்ந்து போகிறது.
@ ஜிஎம்பீ
அதுக்கென்ன?.. எல்லாம் இணையத்தில் கிடைக்கிறது. படித்தால் போச்சு. ஆனால் படிக்க மனம் வர வேண்டுமே?.. அதுக்கு இடையூறாக இருப்பது எது என்று கண்டுபிடித்து விட்டால், தடையேதும் இல்லை.
படிக்கலாம்; படிக்கலாம்; படித்துக் கொண்டே இருக்கலாம்.
@ பாரதி
சொல்கிறோமே தவிர, வாசிக்க நிறைய இடையூறுகள்.
மேலே ஜிஎம்பீ ஐயாவுக்கு சொன்ன ஆலோசனையை நானும் கடைபிடிப்பதாக இருக்கிறேன்.
எப்போன்னு தான் தெரியலே!
அருமையான பதிவு. என் பால்ய பருவத்தில் நான் மிகவும் விரும்பி வாசித்த எழுத்தாளர்களில் ஒருவர் ஜெகசிற்பியன். இவரது நாவல்களில் (வரலாறு மற்றும் சமூக) பலவற்றை வாசித்துள்ளேன். இவரது மண்ணின் குரல் நாவலை மட்டும் வாசிக்க வேண்டுமென்று ஆசை. ஒரு போதுமே கிடைத்ததில்லை. அன்று அந்நாவலைத் தேடித்திரிந்ததுண்டு.
@ வ.ந. கிரிதரன்
ஆஹா, வ.ந. கிரிதரன்! நலமா, ஐயா?.. உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு?..
இந்தப் பகுதியில் அது திகைத்ததற்கு மிகவும் சந்தோஷம்.
தாங்கள் அறியாத ஜெ.சி.யையா நான் சொல்லி விடப் போகிறேன்?.. தங்களுக்குப் பிடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
மண்ணின் குரல் -- தேடிப்பார்க்கிறேன். வானதிப் பதிப்பகம் தான் ஜெ.சி.யின் நூல்கள் அத்தனையையும் வெளியிட்டார்கள். தி. நகர் போகும் போது தேடிப் பார்த்து கிடைத்தால் அவர்கள் மூலமாகவே உங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன். தங்கள் பகிர்தலுக்கு நன்றி, ஐயா.
Post a Comment