மின் நூல்

Tuesday, August 25, 2009

ஆத்மாவைத் தேடி....8 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

8. ஜோதி தரிசனம்

காலைச் சூரியனின் செங்கதிர் பட்டு அந்த சிவன் கோயிலின் கோபுரக் கலசங்கள் தகதகத்தன. அந்தக் கலசங்களின் மேல் பட்டுத்தெறித்த ஒளிக்கதிர்கள் கோபுரத்தின் மேல்பகுதி சிற்பங்களின் மேலும் பட்டு வர்ணஜால ஒளிக்கோலமாய் பிரகாசித்தது.

அந்தப் பிரகாசிப்பின் நடுவே தனியாக, இனம் காணுகிற மாதிரி தான் அந்தக்காட்சி ஒரு வினாடி தட்டுப்பட்டு அவர்களுக்குத் திகைப்பேற்படுத்தியது. அந்தத் திகைப்பில் சிலையாகிப் போன மூவரும் அந்த அற்புதக்காட்சியை தரிசித்த உணர்வில் பேசவும் முடியாது நாக்குழறி தடுமாறினர்.

கோபுரத்தின் நட்டநடுப் பகுதியில், தலைக்கு மேலே உயர கைசேர்த்து நிற்கிற தோரணையில், அந்த ஜோதிப்பிழம்பு அடிபெருத்து, தீக்கொழுந்துகளாய் நுனி குறுகி உயர எழும்பியும் தாழ்ந்தும் பளீரிட்டது.

கண்களில் பட்ட காட்சி மனசில் உறைத்த வினாடியில், "அருணாசலேச்வரா! ஹர ஹர மகாதேவா!.." என்று மெய்விதிர்த்து கன்னங்களில் போட்டுக்கொண்டு கைகூப்பினார் சிவராமன். கிருஷ்ணாவும், மாலுவும் எதுவும் பேச சக்தியற்று சிலையாகிப்போயினர். கூப்பிய அவர்களின் கரங்கள் லேசாக விதிர்விதிர்த்தன.

ஒரு வினாடி நேரத்து தரிசனம் தான்; பிரமையா, உண்மையா என்று பிரித்துப் பார்க்க சக்தியற்று குழந்தையாய் தவிக்கும் மனநிலை; என்ன பேறு பெற்றோம் என்று விம்மித் தணிகிற பெருமிதம். 'ஐயனே...ஐய்யாரப்பனே!' ஈரேழு ஜன்மத்திற்கும் இந்தப் புண்ணியம் போதுமப்பா' என்கிற சாந்தம். பார்த்த காட்சியை திருப்பித் திருப்பி மனசில் ஓட்டிப்பார்த்தும் நினைவில் பிடிபடாமல் போக்குக் காட்டும் விளையாட்டு... என்ன வந்தது, ஏது நடந்தது என்று நடந்ததை மீட்டிப்பார்க்கும் சக்தியற்று தொழுத கை தொழுதபடி இருக்க, மெளனமே அங்கு மொழியாயிற்று.

நூற்றாண்டு காலம் நோன்பிருந்தும் கிடைக்கப் பெறாத தரிசனம்! ஒருநிமிடம் நினைத்து பார்க்கவே மாலுவுக்கு உடல் நெகிழ்ந்தது.. "ஏன்னா, பூமிலேயே எனக்குக் கால் பாவலேன்னா.. என்னமோ செய்யறது.. இப்படிக் கொஞ்சம் உட்கார்ந்திடட்டுமா?" என்று வெளிப்பிராகார மண்டபத்தூண் ஒன்று பற்றி தன்னை நிலைப்படுத்திக் கொள்கிற மாதிரி மூச்சை இழுத்து விட்டு கல்தரையில் உட்கார்ந்தாள்.

அவள் என்ன சொன்னாள் என்று கேட்கும் ஸ்மரணை அற்று, கிருஷ்ணாவின் கைபற்றினார் சிவராமன். "நீ நன்னா பாத்தையா,கிருஷ்ணா?"என்று குழைவுடன் கேட்டார். "அம்மாடி! என்ன அழகு! என்ன தேஜஸ்! என்ன கொடுப்பினை!.." என்று நினைத்து நினைத்து பிரமித்தார்.

கிருஷ்ணாவுக்கு அவர் சொன்னது எதுவுமே மனதில் பதியவில்லை. பற்றிய சிவராமனின் கரத்தை ஆதுரத்துடன் தடவினார். "பரமேஸ்வரா! என்னே உன் கருணை?.. ஏழையின் மேல் எவ்வளவு இரக்கம்?" என்று நெகிழ்ந்தார்.

'ஒருதடவைக்கு இரண்டு தடவையாய் அன்பு வர்ஷித்திருக்கிறது.. தில்லி ரயில்வே ஸ்டேஷனில் அந்த கும்மிருட்டில் நண்பனாய், வழிகாட்டுவோனாய்.. இப்பொழுது ஜோதி ஸ்வரூபனாய்..' 'என்ன தவம் செய்தனை..' என்ற பாடலை சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் தொடைதொட்டுத் தாளம் போட்டு விஸ்தாரமாய் தேன்குரலில் காதுக்கு மிக அருகில் வந்து யாரோ இசைப்பது போலிருந்தது.

'பாடுவது யார்?.. ராதையோ?.. அவள் சாரீரத்தில் இவ்வளவு குழைவு இருக்காதே?.. வேறு யார்?.. மாலுவோ?.. ம்.. மாலு போலத்தான் இருக்கிறது!' என்று மாலுவின் நினைவு வந்து, 'எங்கே?" என்று தேடும் காரியமாய்த் திரும்பிப் பார்த்தார்.

பெரிய யாளி ஒன்று வாய் பிளந்து காலூன்றிப் பாய்கிற தோரணையில் நின்றிருந்த சிற்பத்திற்கு முதுகு காட்டியவாறு மாலு அமர்ந்திருக்கிறது தேசலாய்த் தெரிந்தது.

மாலு மட்டுமில்லை, தூரத்தில் இவர்களை நோக்கி யாரோ வருவதும் பார்வையில் பட்டது. வந்தவர், அருகில் வர வர அவர் மனோகர்ஜி என்பதும் புரிபட்டது.

"நீங்கள்லாம் இங்கே தான் இருக்கீறீர்களா.." என்று ஸ்வாதீனத்துடன் விசாரித்தபடி வந்தவர் "கிருஷ்ணாஜி! சிவராம்ஜிக்கு கொஞ்சநாள் கூட இங்கே தங்க முடியுமா? புது பொறுப்பு ஒண்ணு அவரைத் தேடிவந்திருக்கு.. அவருக்கு செளகரியப்படுமா?" என்று ஆவலுடன் கேட்டபடி சிவராமனின் கைகளைப் பற்றினார்.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails