மின் நூல்

Sunday, September 21, 2008

ஆத்மாவைத் தேடி....6

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

6. எல்லாம் உன் கருணை ஐயா

காரில் உட்கார்ந்ததும் லேசாகக் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தூங்கிவிடக்கூடாதென்று கிருஷ்ணமூர்த்தி மனத்தில் சங்கல்பம் செய்து கொண்டார். நெஞ்சில் நினைப்புகளே ஊர்வலமாகப் போகும் பொழுது தூக்கமாவது, ஒண்ணாவது?..அடிக்கடி புராண கதாகாலட்சேபம் என்று அவர் வெளியூர் பயணங்களிலேயே இருந்து பழக்கப்பட்டு விட்டதால், அனுதின குடும்பப் பொறுப்புகள் நடவடிக்கைகளுக்கு அவர் கூட இருந்து வழிநடத்த வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாது போயிற்று. அந்த காலத்து மன்னர்களைப் பார்த்து கவிபாடி பரிசில் பெற்ற புலவர்கள் கணக்காய் வாரக்கணக்கில் காணாமல் போய், திடீரென்று வானிலிருந்து வந்து குதித்த மாதிரி ஒரு நாள் வீட்டிற்கு வருவார். அன்று தான் அவர் வீட்டிற்கு, தெருவிற்கு, தெரிந்தவர்களுக்கு எல்லாம் விசேஷம்!... கொண்டு வந்த பொருள்கள், அனுபவங்கள் என்றுகடை பரப்புவார்... எல்லாம் ஹாலில் தான்! யார் யாரோ வந்தும், போய்க்கொண்டும் இருப்பார்கள்!.. சாயந்திர நேரமென்றால், வாசல் திண்ணையில் ஜமுக்காளத்தை விரித்து, அமர்ந்து கொண்டு வெற்றிலைச் செல்லமும், தண்ணீர் கூஜாவுமாய் மைக் வைக்காத உபன்யாசம் தான்!... அநத அந்த இடத்தில் நடந்த வகை வகையான அனுபவங்களைக் கோர்வையாக, உற்சாகமாகச் சொல்வார் கிருஷ்ணமூர்த்தி.. அவர் சம்சாரம் ராதைக்கு அவரைக் கண்டாலே ஒரு பிரமிப்பு கலந்த பிரேமை தான்!.. அவர் கதை சொல்கையில் அவர் வாயையும் கையசைவுகளையுமே பார்த்துக் கொண்டு, 'இறைவன் காதுகள் படைத்தது இவர் சொல்லைக் கேட்கத்தான்' என்கிற மாதிரி தெருவடைத்து கொண்டு ஒரு கூட்டமே அசைவற்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்.


அவரது 'கிருஷ்ண ஜனனம்' காலட்சேபம் பிரசத்தி பெற்ற ஒன்று.. அந்த வாசுதேவரும், தேவகியும் கம்சனால் சிறையில் பட்டக் கொடுமைகளையும், நந்தகோபர் இல்லத்தில் விட கொட்டும் மழையில் வாசுதேவர் கூடையில் பச்சிளம் குழந்தை கிருஷ்ணரைத் தூக்கிச் சென்ற சோகத்தையும், கண்களில் நீர்தளும்ப அவரே வாசுதேவராய் மாறி அபிநயத்துடன் நெஞ்சடைக்கச் சொல்லும் பொழுது, கேட்கும் கூட்டமே நெக்குருகி நெஞ்சம் பதைபதைக்கும். தெரிந்திருந்த கதையென்றாலும், அவர் சொல்லும் பொழுது புதுசு புதுசாக ஏதேதோ சங்கதிகள் சேர்ந்த மாதிரி இருக்கும்; அடுத்தது என்னவோ என்கிற எதிர்பார்ப்பில் கூட்டம் ஏங்கித் தவிக்கும்..


மழை பொய்த்தது என்றால், பாரதக்கதை சொல்ல கிராமப்புறங்களில் கூப்பிடுவார்கள். போர் முடிந்து, கதை முடிய மூன்று வாரங்களாகி விடும். அது என்ன அதிசயமோ தெரியவில்லை, கதை முடியும் அன்று கொட்டோ கொட்டென்று மழை கொட்டும்! கதை சொல்ல அழைத்தவர்களுக்கு சந்தோஷமான சந்தோஷம் பொங்கும்.
வீட்டுக்கு இவ்வளவு என்று சேர்த்து வைத்திருந்த பணத்தை வெகுமதியாகக் கொடுப்பார்கள். அம்பதோ, நூறோ எல்லாருடைய பங்கும் இருக்க வேண்டும் என்று இந்த ஏற்பாடு. கை நீட்டி காசு வாங்கும் போது, புராணக்கதை சொல்றதும் ஒரு வியாபாரம்னு ஆகிவிடக்கூடாதுங்கற நெனைப்பு முந்திண்டு வரும். வெகுமதியாகக் கிடைத்த பணத்தில் சரிபாதியை எடுத்து, வருண பகவானுக்கு நன்றியைச் சொல்லி, அந்த கிராமத்திற்கே அவரது பரிசாகத் தந்துவிடுவார் கிருஷ்ணமூர்த்தி. அது அவரது பழக்கம். கதை சொல்லப் பெரியவரைக் கூப்பிட்டால், பாதிப்பணம் கிராம நலனுக்கு வந்து விடும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அவர்களும் கணிசமாகத் தொகையைச் சேர்த்துக் கொடுப்பார்கள்.

நேற்று ராத்திரியிலிருந்து நடக்கும் செயல்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது...சின்ன வயசிலிருந்து கோயில், கோபுரம், தெய்வம் என்றால் மனசுக்குப் பிடித்துப் போன ஒரு விஷயமாகி விட்டது.. நினைவு தெரிந்த பருவத்திலிருந்து, இந்த மயக்கம் தொடருகிறது; அதன் தொடர்ப்பாய், புராணக்கதைகளைப் படிப்பதென்றால், புராண சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கேட்பதென்றால், அப்படி ஒரு ஈடுபாடு! இத்தனை வருஷமாய் நெஞ்சில் சுமந்த கனவுகள் நிதர்சன உண்மையாகி இருக்கிறது.. 'பரமசிவன்- நீலகண்டன்... எல்லாமே பரமாத்மாவின் திருநாமங்கள் அல்லவோ? இந்த ஏழைக்கு அவரிடம் அல்லவோ நெருங்கிப் பேசும் பாக்கியம் கிடைத்திருக்கிறது?... ' என்பதை நினைக்கையிலேயே அவர் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. 'என்னிடம் வர ஏன் அவசரப்படுகிறாய்?.. உன் கர்மாவுக்கான கடமைகளை முடித்து விட்டு வா' என்றல்லவா சொல்லியிருக்கிறார்?' என்கிற நினைப்பே அவர் உடலைச் சிலிர்க்கச் செய்தது.. 'வித்வத் அறிஞர்கள் கூடும் சதஸ்ஸில் கலந்து கொள்ள எனக்கென்ன அருகதை இருக்கிறது?.. புராணக்கதைகளை, படித்ததைச் சொல்லும் வெறும் கதாகாலட்சேபக்காரனல்லவோ நான்?.. அதுவும் நீ போட்ட பிச்சை அல்லவோ?..இந்த ஏழையின் பேரில் எத்தனை கருணை ஐயா உனக்கு?' என நினைத்து நினைத்து உருகினார் கிருஷ்ண மூர்த்தி.


ஜம்மு-தாவி எக்ஸ்பிரஸைத் தவற விட்டது, ஸ்டேஷன் மாஸ்டர் கூப்பிட்டுப் பேசியது, ராம் மனோகர்ஜி அவரை கார் அனுப்பி அக்கறையுடன் அழைத்து வரச் சொன்னது, அவர் ஏற்பாடு செய்திருக்கும் சதஸ்--என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் சம்பந்தமில்லாதது மாதிரி வெளிக்குத் தோன்றினாலும், சங்கிலி போட்டுக் கோர்த்த மாதிரி ஒவ்வொன்றுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக மனசில் படுகிறது.

ஒரு குலுக்கலுடன் கார் நின்றதும் நினைவு இழைகள் அறுந்தன. எதை எதையோ நினைத்துக் கொண்டு வந்ததில் நேரம் போனது தெரியவில்லை; அரைமணி நேரத்தில் வந்து விட்டமாதிரி இருந்தது.


மிகப்பெரிய காம்பவுண்ட் கேட் அருகே கார் நின்று ஒரு நிமிட தாமதத்திற்குப் பிறகு உள்ளே நுழைந்தது. நின்ற அந்த நேரத்தில், "மஹாதேவ் நிவாஸ்" என்று அந்த இடத்திற்கு சூட்டியப் பெயர் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு சுவற்றில் பதித்திருந்ததை கிருஷ்ணமூர்த்தி பார்த்தார்.


(தேடல் தொடரும்)

6 comments:

Kavinaya said...

படிக்கப் படிக்க அவன் அன்பை எண்ணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் போலவே மனசு உருகியது.

ஜீவி said...

கவிநயா said...
//படிக்கப் படிக்க அவன் அன்பை எண்ணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் போலவே மனசு உருகியது.//

இந்த உருக்கம் தான் கிருஷ்ண மூர்த்தியை மேலும் மேலும் அவனையும் அவன் அன்பையும் தேடும் முயற்சியில் ஈடுபடச் செய்தது.
அதற்கும் அவன் அருள் கிடைப்பது தான் இந்தத் தேடுதலின் சாரம்.
தவறாத வருகைக்கும்,கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, கவிநயா!

கிருத்திகா ஸ்ரீதர் said...

அலகிலா விளையாட்டுடையானின்.. கண்கட்டு வித்தைதானே இந்த உலகமே.. அவனின் திருவிளையாடல்களில் ஒன்றே போன்று உருவாகிறது இந்த தொடர். அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடியாமல் அந்த கண நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியோடு எம்மையும் இருக்க வைத்துவிடுகிறது பதிவின் ஓட்டம் (கதை என்று சொல்ல மனது ஒப்பவில்லை).. மிக்க நன்றி.. தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளோம்.

ஜீவி said...

கிருத்திகா said...
//அலகிலா விளையாட்டுடையானின்.. கண்கட்டு வித்தைதானே இந்த உலகமே.. அவனின் திருவிளையாடல்களில் ஒன்றே போன்று உருவாகிறது இந்த தொடர். அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடியாமல் அந்த கண நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியோடு எம்மையும் இருக்க வைத்துவிடுகிறது பதிவின் ஓட்டம் (கதை என்று சொல்ல மனது ஒப்பவில்லை).. மிக்க நன்றி.. தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளோம்.//

உண்மைதான்.. இது கதையல்ல;
கதைபோல சொல்லத் துடிக்கும் ஒரு முயற்சி.. போகப்போக தொய்வில்லாமல் இதைத் தொடர அந்தப் பிறவாயாக்கைப் பெரியோனின் அருள் வேண்டும்.
பயணிக்கையிலேயே, 'எங்கே காணோம்' என்று திரும்பிப் பார்க்கையில், கூடச் சேர்ந்து விட்டீர்கள்.. மிக்க நன்றி..
வாருங்கள், தொடர்ந்து செல்வோம்.

கோமதி அரசு said...

ஆருயிர்க்கெல்லாம் அவன் அன்பில் தானே ஜீவிக்கின்றன ஜீவி அவர்களே!

ஜீவி said...

@ கோமதி அரசு

தொடரைப் படித்துக் கொண்டே வாருங்கள். உங்களுக்குக் கிடைக்கும்
பதிலைச் சொல்ல வேண்டுகிறேன்.

Related Posts with Thumbnails