மின் நூல்

Thursday, September 25, 2008

ஆத்மாவைத் தேடி....7

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

7. பாட்டனார் மஹாதேவ்ஜி

"வாருங்கள்..வாருங்கள்.." என்று போர்டிகோ வரை வந்து கைகூப்பி வரவேற்றவரைக் கண்டு கிருஷ்ணமூர்த்தி புன்முறுவல் பூத்து பதிலுக்கு நமஸ்கரித்தார்.

"வாருங்கள்.. நான் தான் ராம் மனோகர்.." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவரைப் பார்த்து கிருஷ்ணமூர்த்தி திகைத்தார்.

வயது நிச்சயம் எண்பது இருக்கும். தும்பைப்பூ போல வெள்ளை வெளேர் தாடி; பஞ்சக்கச்சம் போல, ஆனால் நீட்டவாக்கில் இல்லாமல் இடுப்புக்கு அடர்த்தியாகக்கட்டியிருந்தார்; கைவைத்த வெள்ளை பனியன்; கான்வாஸ் ஷூ.

பிர்மாண்டமான தோட்டம் சூழ்ந்த போர்ட்டிகோவை நீங்கி உள் தாழ்வாரத்திற்கு இருவரும் வந்த பொழுது அங்கிருந்த பெண்டுலம் கடியாரம் மணி ஆறடித்தது."ராத்திரி பூரா உங்களுக்குத் தூக்கம் கெட்டுப் போயிருக்கும்.... சிவராத்திரி தான்" என்று மனோகர்ஜி சொல்கையிலேயே, 'சிவனுடன் ராத்திரி' உடல் சிலிர்த்தார்கிருஷ்ணமூர்த்தி. "மனோகர்ஜி! நான் பாக்கியம் செய்தவனானேன்" என்று அவர் வாய் முணுமுணுத்தது.

"நேற்று ராத்திரி போனில் அரியலூருடன் தொடர்பு கொண்டேன். போன் நம்பர் எக்ஸ்சேஞ்ஜில் தான் சொன்னார்கள். உங்கள் மனைவி தான் பேசினார்கள்..ஊரில்எல்லோரும் செளக்கியம்" என்றார் மனோகர்ஜி.

"அப்படியா? ரொம்ப சந்தோஷம்.. தகவல் ஏதேனும் சொன்னார்களா?"

"உங்கள் செளக்கியத்தைக் கேட்டார்கள்.. உங்கள் செளகரியத்தைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள்.. கவலையே படவேண்டாம்; எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் உங்கள் விருப்பப்படி இருந்து விட்டு வரச்சொன்னார்கள்."

"மிக்க நன்றி, ஐயா!"

மனோகர்ஜியின் முகம் மிகவும் பரிச்சயப்பட்ட முகம் மாதிரி கிருஷ்ண மூர்த்திக்குத் தோன்றியது. 'இவரை எங்கே, எப்பொழுது பார்த்திருக்கிறோம்' என்கிற யோசனையிலேயே இருந்தவர், திடீரென்று 'ஓ' என்று தலையைக் குலுக்கி, "உங்கள் உபசாரத்திற்கு ரொம்பவும் சந்தோஷம்!" என்றார்.

"கிருஷ்ணன்ஜி! நான் தங்களை இப்படி அழைக்கலாமா-- உங்களைப் பார்த்ததில், என் சந்தோஷம் எவ்வளவு பெருகிப் போய்விட்டது, தெரியுமா?.. சதஸ்ஸைத் தான்சொல்கிறேன்.. யாரைக் கூப்பிடவேண்டும், என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டுமென்று ஆறு மாசமா மனசிலே அரிச்சிக்கிட்டிருந்த ஏக்கம், ஒருவழியா ஏற்பாடாயிற்று.ஜி! நீங்களும் வந்தாச்சு.. எல்லாம் பகவான் செயல்; அவர் இனி பார்த்துப்பார்" என்றார்.

"உங்களுக்குப் பெரிய மனசு!" என்றார், கிருஷ்ணமூர்த்தி.

"நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.." என்ற மனோகர்ஜி சொன்னார்:"வியாபார உலகம் எனக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது.. அதன் ஏற்ற இறக்கம் என் இரத்த அழுத்தத்தைப் பாதித்தது. அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவர இயற்கை வைத்தியத்தை நாடினேன். ஆஹா! அற்புதமான ஆத்மா! கிருஷ்ணமகராஜ்ஜி என்றொரு யோகி-- அந்த மகான் கிருஷ்ணமகராஜ் என்றால் நீங்கள் கிருஷ்ணமூர்த்தி-- என்னே அந்த கிருஷ்ண பரமாத்வாவின் அருள்! மீண்டும் மீண்டும் எத்தனைஉருக்களில் வந்து அருள் பாலிக்கிறான்!" என்று பரவசப்பட்டவர் தொடர்ந்தார்:

"இமயமலையில் தபஸ்ஸிருந்து திரும்பியவர் அவர்.-- அவர் எனக்கு யோகா என்னும் வரப்பிரசாதம் அருளினார்.. அப்போ எனக்கு அறுபது வயசு. இப்போ எண்பது. இருபது வருஷமா மகராஜ்ஜி குருவா இருந்து கத்துக் கொடுத்த பயிற்சியை விட்டு விடாம செஞ்சிட்டு வர்றேன்.. யயாதி கதை தெரியுமே உங்களுக்கு?.. அவன் தன் பிள்ளை கிட்டேயிருந்து இளமை பெற்றான்; நான் யோகாவிலிருந்து இளமை பெற்றேன்.. தேகம் தேக்கு மரம் மாதிரி ஆயிடுத்து. 'தூர நில்'னு அத்தனை தொல்லைகளையும் தூர விலக்கி வைச்சிட்டேன்.. யோகத்திலிருந்து ஆத்மஞான வெளிச்சத்தோட ஒரு சின்ன ஒளிக்கீத்து கிடைச்சிருக்கு.. அதை ஊதி பெரிசாக்க பெருமுயற்சி செஞ்சிண்டிருக்கேன்.. ம்! ஒருத்தனாலே முடியலே; அதான் இந்த கூட்டு முயற்சி.. சதஸ்!"என்று சொல்லி பரவசப்பட்டார் மனோகர்ஜி

"உங்களைப் பார்த்து நான் நிறையக் கத்துக்கொள்ள வேண்டியிருக்கு.." என்றார் கிருஷ்ணமூர்த்தி.

"ஓ--அப்படியா? நல்லது ஜி. நீங்களும் எனக்கு நிறைய புராணக்கதைகளைச் சொல்ல வேண்டும்.. அதை எல்லாம் கேட்க மிகவும் ஆசையாக இருக்கிறது" என்று சின்னக்குழந்தை போல விழிகள் விரித்து ஆசைப்பட்டார் மனோகர்ஜி. .

"இப்பொழுது நீங்கள் வியாபாரத்லேயே இல்லையா?"

"சுத்தமா இல்லை. அதான் சொன்னேனே, விலகி வந்து இருபது வருஷத்துக்கு மேலே ஆச்சு. என் அந்திம காலத்திற்கென்று கொஞ்சம் சொத்து ஒதுக்கிண்டு மத்த எல்லாத்தையும் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்திட்டேன். இந்த பங்களா-- இதுதான் என் ஞானபீடம்; இங்கிருக்கும் புத்தகாலயம் ஒரு புதையல். இந்த 'மஹாதேவ் நிவாஸ்' - என் பாட்டனார் பெயர் மஹாதேவ்ஜி; மகாவித்துவான். அவரைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். இன்னொரு நாள் சொல்கிறேன். நீங்கள் மிகவும் களைப்பாய் இருப்பீர்கள்.ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.." என்று சொல்லி, "ராம்பிரபு.." என்று உரத்த குரலில் கூப்பிட, வந்த வாலிபனிடம், "கிருஷ்ணன்ஜிக்கு எல்லா வசதிகளும் செய்துகொடு" என்று அனுப்பி வைத்தார்.

"ஆண்டவா! எத்தனை விதம் விதமான பக்தர்கள் உனக்கு!" என்று வியந்து அந்த வாலிபனைப் பின் தொடர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.


(தேடல் தொடரும்)6 comments:

Expatguru said...

படிக்க படிக்க பரவசமாக இருக்கிறது. உள் ஆன்மாவை புரிந்து கொண்ட பக்குவம் இருந்தால் தான் இப்படி அருமையாக எழுத முடியும்.

பிரமாதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

ஜீவி said...

Expatguru said...
//படிக்க படிக்க பரவசமாக இருக்கிறது. உள் ஆன்மாவை புரிந்து கொண்ட பக்குவம் இருந்தால் தான் இப்படி அருமையாக எழுத முடியும்.

பிரமாதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!//

கருத்துப் பகிர்தலுக்கு நன்றி.
தங்கள் பரவசம் குறித்து மிக்க மகிழ்ச்சி. இறை இன்பத்தின் மகிமையும், ஈடுபாட்டுடன் உணர்தலின்
வெளிப்பாடும் அது; எல்லாம் ஈசன் அருள்.. எல்லாப் பெருமையும் அவனுக்கே சேரும்.
தங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"அதை ஊதி பெரிசாக்க பெருமுயற்சி செஞ்சிண்டிருக்கேன்.. ம்! ஒருத்தனாலே முடியலே; அதான் இந்த கூட்டு முயற்சி.. சதஸ்!""
ஆஹா நாம சங்கீர்த்தனத்தின் ஆரம்பத்தையும் அவசியத்தையும் கூறும்போது கூட போதேந்திராள் இப்படித்தான் சொல்கிறார். உண்மையான எழுத்து என்பது வாசகனின் கண்களின் தெரியும் வார்த்தைகளைத்தாண்டிய தளங்களுக்கு எடுத்து செல்வதே அதிலும் ஆத்மார்தமும் ஆத்ம தேடலும் சேரும்போது கேட்கவேண்டியதில்லை... ஜீவி நீங்கள் எங்களுக்கு காட்டிச்செல்லும் பாதைகளின் நீளம் பெரிதானாலும் அதன் தெளிவினால் மிகக்குறவானேதே போன்ற தோற்றம் கிடைக்கிறது. மிக்க நன்றி

ஜீவி said...

கிருத்திகா said...
//ஆஹா நாம சங்கீர்த்தனத்தின் ஆரம்பத்தையும் அவசியத்தையும் கூறும்போது கூட போதேந்திராள் இப்படித்தான் சொல்கிறார்.//

அப்படியா?.. அருமையான தகவல்..
எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்!..மேலதிகத் தகவல்களை அறிய ஆவலாக இருக்கிறது.. கும்பகோணம் அடுத்த கோவிந்தபுரதத்தில் இந்த மகானுடைய பிருந்தாவனம் இருக்கிறதல்லவா?.. கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர சென்றதில்லை.. போய்ப்பார்த்து புண்ணியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புதுத் தகவல்களுக்கு மிக்க நன்றி.

அப்பாதுரை said...

க்ருஷ்ணமூர்த்தியை தெரிந்த மாதிரி இருக்கிறது.

தி.தமிழ் இளங்கோ said...

ஜேகே என்ற கிருஷ்ணமூர்த்தியோ என்று என் உள்மனம் சொல்கிறது. இருந்தாலும் இந்த தொடரின் கடைசி அத்தியாயம் வரை காத்திருப்பேன்.

Related Posts with Thumbnails