மின் நூல்

Friday, October 31, 2008

ஆத்மாவைத் தேடி....13

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

13. சீவனாரும் சிவனாரும்

'உப' என்றால் அருகே என்று பொருள். குருகுலவாசத்தில், குரு தனது சீடர்களை அருகே அமர்த்தி உபதேசிப்பதே வழக்கம். குரு வாய்மொழியாகச் சொல்பனவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்வதான பயிற்சிக்களம் அது. சீடர்களும் குருவின் ஆசார அனுஷ்டான நியமங்களுக்கான பணிவிடைகளைச் செய்து, ஒழிந்த நேரத்தில் இந்தக்கல்வி கேட்டனர். அருகே அமர்த்திச் உபதேசித்ததினால், 'உபநிஷத்துக்கள்' என்று வழங்கப்பட்டன.


முதலில் மூலாதாரமான படைத்தவன், அடுத்து படைத்தவனிலிருந்து வெளிப்பட்ட இந்தப் பிரபஞ்சம், அதற்கடுத்து உயிர் சுமந்து உலவும் அறிவுலக பிரஜைகளான மனிதர்--இந்த மூன்றையும், இந்த மூன்றிற்கானத் தொடர்புகளையும் உபநிஷத்துக்கள் அலசுகின்றன. ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டும். அதை எந்நேரத்தும் மறந்துவிடலாகாது. பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்ட இவை, அந்தப் பழைமையான காலத்து வளர்ச்சிக்கேற்பனவான உண்மைகளைச்சுமந்து கொண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடலாகாது.


வெளிச்சம் கிஞ்சித்தும் இல்லாத கும்மிருட்டில் நின்று கொண்டு, கைக்கு தட்டுப்பட்டதைத் தொட்டுத் தடவி, இது-இன்னது-என்று முயற்சித்து சொன்னது, பல்லாயிரம்ஆண்டுகளுக்குப் பின்னால்,-- இந்தப் பல்லாயிரம் ஆண்டுகால வளர்ச்சிக்குப் பின்னால்--அப்பொழுது சொன்னது சரி என்று நிரூபிக்கப்படுகிறதென்றால், இன்றைய இத்தனை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னான இந்த வளர்ச்சியை, அன்றே அந்தத் தவச் செல்வர்கள் தமது ஞானதிருஷ்டியில் கண்டுவிட்டார்கள் என்பதே நம்மை பேராச்சரியத்தில் மூழ்க வைக்கும் உண்மை. இது அவர்களின் தவத்தினால், மனத்தை ஒருமுகப்படுத்தி அயராது சிந்தனை வயப்பட்டதினால், கிடைத்த செல்வம் என்பதை மறக்கலாகாது.


அத: ஸமுத்ரா கிரயச்ச ஸர்வே: ஸ்மாத்
ஸ்யந்தந்தே ஸிந்தவ: ஸர்வரூபா
அதச்ச ஸ்ர்வா ஓஷதயோ ரஸச்ச
யேனைஷ பூதைஸ்திஷ்ட்டதே ஹயந்தராத்மா


-- இது முண்டக உபநிஷத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.


சமுத்ரம், மலைகள் ஆகிய எல்லாவற்றின் தோற்றம் அவரிடமிருந்தே; பல்வேறு நதிகள், செடிகொடிகள் அனைத்தும் அவரிடமிருந்தே வெளிப்பட்டன. மொத்தத்தில்அனைத்து இயற்கை சக்திகளாலும் சூழப்பட்டதே அந்தராத்மா. இதற்கு அர்த்தம், இறைவனிடமிருந்து வெளிப்பட்ட பஞ்சபூதங்களின் வெவ்வேறு தோற்றங்களே,இந்த இயற்கை தந்திடும் வளம்; மனிதனின் உடம்பும் பஞ்சபூதங்களின் தொகுதியே. இறைவன் இந்த உடனினுள் ஆத்மாவாக இருந்து கொண்டு அருள் பாலிக்கிறான்.


இன்னொரு ஸ்லோகம், இறைவன் தான் அனைத்திற்கும் மூலமாக இருக்கிறார் என்கிறது. என்றென்றும் அழிவில்லாத பிரம்மமாய் இருப்பவரும் அவரே. இதயத்தில் வாசம் செய்யும் அவரை அறிந்து கொள்பவன் அனைத்து அறியாமைகளிலிருந்தும் விடுபடுகிறான் என்கிறது.


புருஷ ஏவேதம் விச்வம் கர்ம தபோ ப்ரஹ்ம பராம்ருதம்
ஏதத்யோ வேத நிஹிதம் குஹாயாம்
ஸோ வித்யா க்ரந்திம் விகிரதீஹ ஸோம்ய

--இதுவும் முண்டக உபநிஷத்து ஸ்லோகம் தான்.

'முண்ட' என்றால் களைதல், நீக்குதல் என்று பொருள். அறியாமை இருளை நீக்கி, உண்மைக்கான வெளிச்சத்தை வாரி இறைக்கிறது இந்த உபநிஷதம்.

ஆக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் இறைவனிடமிருந்தே வெளிப் போந்தவை; இறுதியில் அவை அனைத்தும், கடலைச் சேரும் நதிபோல இறைவனையேச் சேர்ந்து, மீண்டும் வெளிப்படும் என்பது தான் தத்துவ நெறி.

ஒடுக்கத்திலிருந்து விடுபட்ட படைப்பு, படைப்பு நிலையை பூர்த்தி செய்தபின்,
மீண்டும் ஒடுக்கத்தினிடையே ஒடுங்கும். இது ஒரு பிரதட்சண நிலை.

"சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனா யிட்டிருப்பரே"
---திருமூலர்

யோகி குமாரஸ்வாமி சுவாரஸ்யத்துடன் மேலும் தொடர கையில் வைத்திருந்த கத்தை காகிதத் தாள்களின் அடுத்த பக்கத்தைத் திருப்பினார்.

(தேடல் தொடரும்)

10 comments:

Kavinaya said...

//இன்றைய இத்தனை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னான இந்த வளர்ச்சியை, அன்றே அந்தத் தவச் செல்வர்கள் தமது ஞானதிருஷ்டியில் கண்டுவிட்டார்கள் என்பதே நம்மை பேராச்சரியத்தில் மூழ்க வைக்கும் உண்மை.//

ஆம் ஐயா.

//ஒடுக்கத்திலிருந்து விடுபட்ட படைப்பு, படைப்பு நிலையை பூர்த்தி செய்தபின், மீண்டும் ஒடுக்கத்தினிடையே ஒடுங்கும்.//

ஒற்றை வரியில் ஒப்பற்ற செய்தியை அடக்கி விட்டீர்களே!

அருமையாகத் திருமூலருடன் நிறுத்தியிருக்கிறீர்கள். அடுத்து...?

ஜீவி said...

கவிநயா said..

அடுத்து?..

அடுத்து, தேடல் தொடர்கிறது, கவிநயா!
தவறாது படித்தவுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு நன்றி.
இந்தத் தொடர் பதிவுகளில் 'நான்' என்கிற பகுதி பூஜயம். பெரியவர்கள், பண்டிதர்கள் சொல்லியிருப்பனவற்றைப் படித்து
புரிந்து கொண்டவைகளை என் போக்கில், ஒரு கதை உருவம் கொடுத்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.
உபநிஷத்துக்களை சொல்லியவர்களே, 'இவை எனது' என்று என்றுமே சொல்லவில்லை. "எங்களுக்கு சொன்னவர்கள் இப்படிச் சொன்னார்கள்" என்றே சொல்கின்றனர்.
வருகைக்கு மிக்க நன்றி, கவிநயா!

Anonymous said...

அருமையான விளக்கங்கள் ஐயா. முதல்முறையாக உபநிஷத் சுலோகங்களுக்கு எல்லாம் அர்தம் புரிகிறது!

கிருத்திகா ஸ்ரீதர் said...

"முதலில் மூலாதாரமான படைத்தவன், அடுத்து படைத்தவனிலிருந்து வெளிப்பட்ட இந்தப் பிரபஞ்சம், அதற்கடுத்து உயிர் சுமந்து உலவும் அறிவுலக பிரஜைகளான மனிதர்--இந்த மூன்றையும், இந்த மூன்றிற்கானத் தொடர்புகளையும் உபநிஷத்துக்கள் அலசுகின்றன." அருமையான அதேசமயம் மிக எளிமையான விளக்கம்.. இத்தகைய விளக்கங்களே மிகக்கடினாமன பாடங்களைக்கூட நாம் புரிந்து கொள்ளும் ஆவலை உண்டாக்குகிறது.

ஜீவி said...

விஜய் said...
//அருமையான விளக்கங்கள் ஐயா. முதல்முறையாக உபநிஷத் சுலோகங்களுக்கு எல்லாம் அர்தம் புரிகிறது!//

வாருங்கள், 'விஜய்'!
தேடலில் நீங்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சொல்லியிருக்கும் செய்தியும் உற்சாகமூட்டுகிறது.
மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

கிருத்திகா said...
//"முதலில் மூலாதாரமான படைத்தவன், அடுத்து படைத்தவனிலிருந்து வெளிப்பட்ட இந்தப் பிரபஞ்சம், அதற்கடுத்து உயிர் சுமந்து உலவும் அறிவுலக பிரஜைகளான மனிதர்--இந்த மூன்றையும், இந்த மூன்றிற்கானத் தொடர்புகளையும் உபநிஷத்துக்கள் அலசுகின்றன." அருமையான அதேசமயம் மிக எளிமையான விளக்கம்.. இத்தகைய விளக்கங்களே மிகக்கடினாமன பாடங்களைக்கூட நாம் புரிந்து கொள்ளும் ஆவலை உண்டாக்குகிறது.//

துண்டாக கதைப்பகுதி 'கட்'டாகி விட்டதே, சொல்லும் முறையில்
ஏதாவ்து தொய்வு ஏற்படுகிறதோ என்று நான் யோசித்ததுண்டு; இதைச் சொல்வதற்காகத் தானே கதை, இது தானே முக்கியம் என்றும் சமானப்படுத்திக் கொண்டேன்.
இரண்டாவதான நினைப்பே சரி என்று உறுதி பட்டிருக்கிறது. இன்னும் நிறைய சொல்ல வேண்டும் என்றும்
தோன்றுகிறது.
மிக்க நன்றி, கிருத்திகா!

திவாண்ணா said...

/துண்டாக கதைப்பகுதி 'கட்'டாகி விட்டதே, சொல்லும் முறையில்
ஏதாவ்து தொய்வு ஏற்படுகிறதோ என்று நான் யோசித்ததுண்டு;//

ஆமாம் கொஞ்சம் க்வான்டம் ஜம்ப் பண்ணி இருக்கீங்க அப்பப்ப! :-)

ஜீவி said...

திவா said...
/துண்டாக கதைப்பகுதி 'கட்'டாகி விட்டதே, சொல்லும் முறையில்
ஏதாவ்து தொய்வு ஏற்படுகிறதோ என்று நான் யோசித்ததுண்டு;//

//ஆமாம் கொஞ்சம் க்வான்டம் ஜம்ப் பண்ணி இருக்கீங்க அப்பப்ப! :-)//


எப்போ வேணா கதைப்பகுதிக்குப் போய்க் கொள்ளலாம்.. ஆனால்,
சொல்ல வந்த விஷயம் முக்கியமானது. அதையும் சலிப்புத் தட்டாமல் சொல்ல வேண்டுமென்பதால் தெரிந்தே இந்த ஜம்ப்.

விரைவில் கதையும் வரும்.

குமரன் (Kumaran) said...

இதுவரைக்கும் வந்த ஜம்ப் அருமையாக இருக்கிறது ஜீவி ஐயா. :-)

ஜீவி said...

குமரன் (Kumaran) said...
//இதுவரைக்கும் வந்த ஜம்ப் அருமையாக இருக்கிறது ஜீவி ஐயா. :-)//

ஓ! இதுவரை வந்து விட்டீர்களா?..
வருகைக்கு மிக்க நன்றி. இது தாண்டியும் வந்து விடுங்கள்.. 'தாண்டுதல்' ஜம்ப் என்கிற கருத்தில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாததில்லை.

Related Posts with Thumbnails