மின் நூல்

Tuesday, November 11, 2008

ஆத்மாவைத் தேடி....16

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


16. சூரியன் வருவது யாராலே?..


சிறிதளவு நீரை அருந்திவிட்டுப் பேராசிரியர் சாம்பசிவம், தனது உரையைத் தொடர்ந்தார்:

"இறைவனே பிரபஞ்சமாகத் தன்னை சிருஷ்டித்துக் கொண்டார் என்று உபநிஷதங்களிலிருந்து மேற்கோள் காட்டி யோகி குமாரஸ்வாமி சொன்னார்.


"இதுலே ஓர் உண்மைபார்த்தீங்களா?.. படைக்கப்பட்ட எந்தப் பொருளும் இயங்காமல் இல்லை. அதுபோலத்தான் இந்த அகண்டப்பெருவெளியில் இருக்கும் அத்தனையும் இயங்கிக் கொண்டேஇருக்கின்றன. வெறுமனே 'இயங்குகின்றன' என்று சொன்னால் மட்டும் போதாது. எப்படி இயங்குகின்றன, எதனால் இயங்குகின்றன என்பதும் அடிப்படை கேள்விகள்.


"இதைச் சொல்லும்பொழுது எங்கத் தமிழ்நாட்டு கவிஞர் ஒருவரோட பாட்டு என் நினைவுக்கு வர்றது. அந்தக் கவிஞர் பிறந்த ஊர்ப்பெயரை முன்னால் போட்டு, நாமக்கல் ராமலிங்கம்பிள்ளைன்னு நாங்க சொல்வோம். சின்னஞ்சிறு குழந்தைகளுக்காக நிறைய பாட்டுகள் எழுதியிருக்கார். அவர் எழுதின பாட்டு ஒண்ணுலே, இந்தக் கேள்வியைக் கேட்டு, சூரியனும், சந்திரனும் வானில் இப்படிச் சுற்றித் திரிகின்றனவே, ஒருநாள் தவறாம எப்படி இது நடக்கறது.. இதெல்லாம் யாராலே நடக்கறது, இந்த வேலைக்கெல்லாம் அதிகாரியா இருந்து செயல்பட வைக்கறது யாருன்னு ஆச்சரியப்பட்டிருக்கார். இதையெல்லாம் தெரிஞ்சிக்கணும்னு குழந்தைகள் மனசிலே ஆர்வத்தை விதைச்சிருக்கார், அந்த அற்புதமான கவிஞர். இது தான் அவரோட அந்தப் பாடல்:


"சூரியன் வருவது யாராலே?.. சந்திரன் திரிவதும் எவராலே?
காரிருள் வானில் மின்மினி போல் கண்ணில் தெரிவன அவையாவை
பேரிடி மின்னல் எதனாலே, பெருமழை பெய்வதும் எவராலே
யாரிதற்கெல்லாம் அதிகாரி அதை நாம் எண்ணிட வேண்டாமோ?"


--இந்தக் கேள்விகளுகெல்லாம் பதில் தெரிந்தால், அண்டசராசரத்தில் இவையெல்லாம் இயங்குவதின் அருமை புரியும். அது புரிந்தால், அடுத்தபடி இந்த இயக்க ஆற்றலின் மேன்மையும் புரியும். ரொட்டீனா நடக்கற இந்த வேலையெல்லாம் நடக்கவில்லை என்றால், தான் என்ன ஆவோம் என்பதும் தெரியும். தெரிந்தால், கையெடுத்துக் கும்பிடத்தோன்றும்.

சூரியனின் வயதை-- ஏறத்தாழ ஐந்தாயிரம் மில்லியன் வருடங்களுக்கு முன்னதானது அது என்று கணித்திருக்கிறார்கள். பத்தாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே முகிழ்த்த பழைமையான விண்மீன்கள் கூட இந்த அகண்டவெளியில் இப்போ இருக்கறதா கணக்குப்போட்டு சொல்கிறார்கள்.
நதிமூலம், ரிஷிமூலம் என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த விண்மீன் களுக்கும், கோள்களுக்கும் மூலம் தான் என்ன?.. இவையெல்லாம் எப்படி ஜனித்தன, இப்படிப்பட்ட நிலையை எப்படி எய்தின என்பதெல்லாம் விண்வெளி பேரதிசயங்களின் அடிப்படையான உண்மைகள்.

அண்டவெளியில் பரவியிருக்கும் துகள்கள் (cosmic dust) பல்வேறு திசைகளில் அலைக்கழிக்கப்படுகின்றன என்றும் அந்த அலைக்கழிப்பில் ஏற்படும் உராய்வில் பரந்த வெளியில் பரவிக்கிடக்கும் மின்காந்த சக்தியால் மூலக்கூறுகளில் அணுக்கள் சேகரமாகின்றன என்றும் சிறிய, பெரிய துகள்கள் ஒன்று சேர்ந்து ஒன்றில் ஒன்று கலந்து கட்டிக் கலக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

பெளதீக மொழியில் அணுக்கூட்டுக்கு மாலிக்யூல்ஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். மின்காந்த சக்தியுடன் மாலிக்யூல்ஸ்க்கு இணைப்பு ஏற்பட்டால் அடர்த்தியாகி அதற்கு உருவம் கிடைக்கிறது. இந்த அற்புத செயலுக்கு தனது சார்பு நிலைத் தத்துவத்தில் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கண்டுபிடித்த சமன்பாட்டைப் பொருத்திப் பார்த்தால் பளிச்சென்று விடை கிடைக்கும். ஆக, பெளதீக விதிப்படி அருவத்திற்கு உருவம் கொடுக்கலாம்.

அணுக்களின் கூட்டமைப்பு தான் அத்தனை பொருட்களும். கலந்து கட்டி பல அணுக்கள் சேருகையில் அப்படிச் சேரும் தன்மைக்கேற்ப அந்தப் பொருளுக்கு வடிவமைப்பு கிடைக்கிறது. அவற்றின் உயிர்ப்புடனான இயக்கத்தால், இயல்பாக அந்தந்த பொருள்களில் அழுத்தம் ஏற்படுகிறது. அழுத்தத்தினால், வெப்பம் உண்டாகி, வெப்பம் மின்காந்த சக்தியாக உருவெடுக்கிறது.

அறிஞர்கள் கூடியிருக்கும் இந்த அவையில், உங்களுக்கெல்லாம் மிகவும் பரிச்சியமான விஞ்ஞான உலகின் பாலபாடங்களை நான் சொல்லிக் கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. இதற்குப் பிறகு நான் சொல்லவிருக்கும் சில தகவல்களுக்கான ஆரம்பமாக இவை இருப்பதினால், ஒரு தொடர்ச்சி கருதி இவற்றைச் சொல்ல வேண்டி நேரிட்டிருக்கிறது என்பதை சொல்ல விரும்புகிறேன்.

மேலும் தொடருவதற்கு முன் நிமிர்ந்து அந்த சபைச் சுற்றி ஒரு முறை நோட்டமிட்டு விட்டு, மைக்கை சரிசெய்து கொண்டார் பேராசிரியர் சாம்பசிவம்.

(தேடல் தொடரும்)11 comments:

திவாண்ணா said...

அணுக்கள்- atoms
அணுத்தொகுப்பு- molecules இல்லையா?

ஜீவி said...

திவா said...
அணுக்கள்- atoms
அணுத்தொகுப்பு- molecules இல்லையா?

சரியே. பேராசிரியர் சாம்பசிவம் என்னவோ சரியாகத்தான் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். நான் தான் அதைத் தவறாகத் தட்டச்சு செய்து விட்டேன். இப்பொழுது தகுந்த திருத்தத்தையும் செய்து விட்டேன்.
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி,
திவா!

jeevagv said...

அழகான நாமக்கல் கவிஞரின் பாடலை பேராசிரியர் குறிப்பிட்டார்.
நாமக்கல்லார் பாடல் தொப்பில் இருந்து, முதல் பாடலை இங்கு குறிப்பிட பொருத்தமாய் இருக்கும்:
உலகெலாம் படைத்துக் காத்தே
உருவிலா தழித்து நாளும்
உண்மையாய் எண்ண மாளா
ஒருவனாய் அருவ னாகிச்
சலமிலா தெண்ணு வோர்க்குச்
சத்திய மயமே யாகித்
தனித்தனி பிரிந்த போதும்
தானதிற் பிரியா னாகி
மலரின்மேல் தேவ னாகி
மாதொரு பாக னாகி
மாலொடு புத்த னாகி
மகம்மதாய் ஏசு வாகிப்
பலபல தெய்வ மாகிப்
பற்பல மதங்க ளாகிப்
பக்குவப் படியே தோன்றும்
பரமனார் பெருமை போற்றி.

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//அழகான நாமக்கல் கவிஞரின் பாடலை பேராசிரியர் குறிப்பிட்டார்.
நாமக்கல்லார் பாடல் தொகுப்பில் இருந்து...//

அடடா! அருமையான பாடல் ஜீவா!
அதுவும்--

"தனித்தனி பிரிந்த போதும்
தானதிற் பிரியா னாகி"

--என்கிற வரிகள் அட்டகாசம்!

நமது முன்னோர்கள் எவ்வளவு ஞானம்
படைத்தவர்களாகவும், எடுத்துக்கொண்ட பொருளை எவ்வளவு விஷயத் தெளிவுடன் அலசுகிறார்கள் என்பதும் தெரிகிறது.

தக்கதோர் பாடலை எடுத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி.

கவிநயா said...

//நமது முன்னோர்கள் எவ்வளவு ஞானம் படைத்தவர்களாகவும், எடுத்துக்கொண்ட பொருளை எவ்வளவு விஷயத் தெளிவுடன் அலசுகிறார்கள் என்பதும் தெரிகிறது.//

ஆமாம் ஐயா. ஜீவா தந்த நாமக்கல்லாரின் பாடல் அருமை. இந்த இடுகைக்கு மகுடம் போல்...

ஜீவி said...

கவிநயா said...
//நமது முன்னோர்கள் எவ்வளவு ஞானம் படைத்தவர்களாகவும், எடுத்துக்கொண்ட பொருளை எவ்வளவு விஷயத் தெளிவுடன் அலசுகிறார்கள் என்பதும் தெரிகிறது.//

ஆமாம் ஐயா. ஜீவா தந்த நாமக்கல்லாரின் பாடல் அருமை. இந்த இடுகைக்கு மகுடம் போல்...

சரியாகச் சொன்னீர்கள், கவிநயா!
எவ்வளவு சுருக்கமாக, எவ்வ்ளவு
அருமையாக நாமக்கல்லார் சொல்லிவிட்டார்!
நீங்கள் சொல்வது போல் இந்தப் பதிவுக்கு அவரின் பாடல், மகுடம் போல் தான் இருக்கிறது.
அதை எடுத்துச் சொன்ன உங்களுக்கும், நாமக்கல்லாரின் பாடலைத் தகுந்த இடத்தில் தந்த
ஜீவாவிற்கும் மிக்க நன்றி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"ரொட்டீனா நடக்கற இந்த வேலையெல்லாம் நடக்கவில்லை என்றால், தான் என்ன ஆவோம் என்பதும் தெரியும். தெரிந்தால், கையெடுத்துக் கும்பிடத்தோன்றும்." அடிப்படையில் தானொன்றுமில்லை, தன்னாலாவது ஏதுமில்லை என்பதுதான் பக்தியின் ஆரம்பம் அதை வெகு அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஜீவி said...

கிருத்திகா said...
//"ரொட்டீனா நடக்கற இந்த வேலையெல்லாம் நடக்கவில்லை என்றால், தான் என்ன ஆவோம் என்பதும் தெரியும். தெரிந்தால், கையெடுத்துக் கும்பிடத்தோன்றும்." அடிப்படையில் தானொன்றுமில்லை, தன்னாலாவது ஏதுமில்லை என்பதுதான் பக்தியின் ஆரம்பம் அதை வெகு அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்.//

சரியான புரிதல் பக்திக்கு மட்டுமல்ல, பல விஷயங்களுக்கு ஆரம்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

மிக அழகாக எழுதியிருக்க்றீர்கள். விஞ்ஞானமும் மெய்ஞானமும் கூடும் இடம்.

ஜீவி said...

Shakthiprabha said...
//மிக அழகாக எழுதியிருக்க்றீர்கள். விஞ்ஞானமும் மெய்ஞானமும் கூடும் இடம்.//

வாருங்கள், சக்திபிரபா!

வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

அண்டங்களுக்குள்ளும், கோள்களுக்கு இடையிலும் ஈர்ப்பு விசை; மனித வாழ்க்கையிலும் ஆசை என்ற கயிற்றில் ஆடும் உறவுகள் என்ற ஈர்ப்பு விசை.

Related Posts with Thumbnails