மின் நூல்

Friday, November 14, 2008

ஆத்மாவைத் தேடி....17

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


17. சிருஷ்டியின் ரகசியம்


பேராசிரியர் சாம்பசிவம் தொடர்ந்து பேச அவையோர் உன்னிப்பாகக் கேட்டனர்.

"அணுக்களின் கூட்டமைப்பு தான் அத்தனை பொருள்களும். கலந்து கட்டி பல அணுக்கள் சேருகையில் அப்படிச் சேரும் தன்மைக்கேற்ப அந்தப் பொருளுக்கு வடிவமைப்பு கிடைக்கிறது. ஒவ்வொரு அணுவும் இன்னொரு அணுவுடன் சேர்ந்து கூட்ட அடுக்குகளாகும் அணு சேர்க்கை அற்புதமாக நிகழ்கிறது.

துக்குணூண்டுக்கும் துக்குணூண்டான, நம் கற்பனைக்கும் குறைவாகக் குறுகித்தரித்த ஓர் அணுவின் உட்கரு போன்ற சமாச்சாரம் அணுவின் மையப்பகுதி. எலெக்ட்ரான்,புரோட்டான், நியூட்ரான் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது அணு. புரோட்டான்களும், நியூட்ரான்களும் கலந்தது, அணு மையப்பகுதி. இந்த மையப்பகுதியை எலக்ட்ரான்கள், அதிவேகமாக வட்டமடிக்கின்றன. இப்படி புரோட்டான், நியூட்ரான் சேர்ந்த மையப்பகுதியை எலக்ட்ரான் சுற்றுவதுதான் அந்த அணுவின் இயக்கம்.


ஒவ்வொரு அணுத்துகளுக்குள்ளும் இந்த 'சுற்றல்' இயக்கம் சர்வசதாகாலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உயிருள்ளவைகளில் மட்டுமல்ல, உயிரற்ற ஜடப்பொருள்கள் என்று நாம் கருதும் மரபீரோ, நாற்காலி, இரும்புத்துண்டு என்று அத்தனை பொருள்களிலும் இப்படிப்பட்ட இயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிலும் இந்த எலக்ட்ரான் சுற்று அதிவேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.


உயிர் என்பதே ஒரு கூட்டணுதான். தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் (Replication) தன்மை படைத்த கூட்டணு. இந்த அடிப்படையிலான உயிரை 'செல்' என்கிறார்கள். கல்லுக்குள் இருக்கும் தேரையும் வளர்வதை விட்டு விடுங்கள்.. ஜடப்பொருள்களில் இந்த தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் தன்மை இல்லாவிடினும், நாளாக நாளாக மூப்பு எய்திய மாதிரி சிதைந்து போகின்றதைப் பார்க்கிறோம்.


எந்த ஆற்றலும் எப்பொழுதுமே அழிக்க முடியாத ஒன்று. ஆற்றலின் ஒரே மாற்றம், ஒரு நிலையிலிருந்து இன்னொறு நிலைக்கு மாறுவதே. மாற்றம் ஏற்படுவதே உயிர்ப்புக்கு அடையாளம். தன்னுள் தன்னையே அடக்கிக் கொண்டதான இந்த இயக்க வடிவமே பிரபஞ்சமாகத் திகழ்கிறது. நிலையான நிலையிலிருந்து, இயக்க ஆற்றலாக (Kinetic Energy) மாறி சகலத்தையும் இயக்கிக் கொண்டிருப்பது இந்தப் பேராற்றலே.

யோகி குமாரஸ்வாமி அவர்கள் இறைவன் பிரபஞ்சமாகத் தன்னையே சிருஷ்டித்துக் கொண்டான் என்றாரே, இதுதான் அந்த சிருஷ்டியோ என்று நான் வியக்கிறேன்.


இரும்பு போன்ற திடப்பொருளுக்கு வெப்பமேற்றி பழுக்கக் காய்ச்சினால், திடநிலையில் இரும்பு என்று பெயர் கொண்டிருந்த அது, திரவநிலைக்கு மாறும். மேலும் மேலும் சூடேற்றினால், காற்றாகி காற்றில் கலந்து விடும். நாம் என்ன செய்கிறோம்?.. பழுக்கக் காய்ச்சுவதின் மூலம், இரும்புத் துண்டாகக் காட்சியளிக்கும் அந்த அணுக்கூட்டின் உட்சுழற்சி வேலையான எலக்ட்ரான் சுழற்சியை விரைவாக்குகிறோம். சுழற்சி வேகம் மிகும்போது அதன் ஆற்றலால், அணுக்கூட்டம் சிதைவுற்று ஆவியாகிக் காற்றில் கரைந்து விடுகிறது.

இதே வேலைதான் அண்டப்பெருவெளியிலும் நடக்கிறது. ஆனால் மறுதலையாக; உல்ட்டாவாக.

சுத்தப்பெருவெளியில் உள்ள ஆற்றல், முதலில் அணுக்களாக, அடுத்து அணுத்தொகுதிகளாக என்னும் மூலமாக உருவாகி, அவற்றின் கூட்டுச் சேர்க்கைதான் காற்று, நெருப்பு, திரவம், திடப்பொருள் என மாறுபாடு அடைகின்றன.

இத்தனைக்கும் காரணமான இந்தப் பேராற்றலுக்கு அவரவர் விருப்பத்திற் கேற்ப பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். மெஞ்ஞானமும், விஞ்ஞானமும் சொல்லும் உண்மை இதுவே. அதுமட்டுமல்ல,மெஞ்ஞானமும், விஞ்ஞானமும் கலந்து கைகோர்க்கும் இடமும் இதுதான்.

"எல்லாவற்றிலும் என்னையே காண்கிறேன்" என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதாகக் கீதை சொல்கிறது.

'தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்" என்று இரண்யகசிபுவிடம் பிரகலாதன் சொன்னதும் இதுவே. "


--- தனது உரை முடிந்து விட்டதற்கு அடையாளமாக காகிதக் கற்றைகளை
மடித்து, அவையினரை நோக்கிக் கைகூப்பி வணங்கினார் பேராசிரியர் சாம்பசிவம்.


எல்லோருடைய மனத்திலும் சந்தோஷம் கலந்த திருப்தி நிலவியது. அவையிலிருந்த அத்தனை பிரதிநிதிகளும் எழுந்து நின்று அவருக்குத் தங்கள்
நன்றியையும் மரியாதையையும் தெரிவித்தனர்.


ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வேகமாக மேடையை நோக்கி விரைந்தார்.


(தேடல் தொடரும்)

16 comments:

திவாண்ணா said...

//பழுக்கக் காய்ச்சுவதின் மூலம், இரும்புத் துண்டாகக் காட்சியளிக்கும் அந்த அணுக்கூட்டின் உட்சுழற்சி வேலையான எலக்ட்ரான் சுழற்சியை நிறுத்துகிறோம்.//

ம்ம்ம்ம்...அப்படியா?.....ரெபர் செய்ய வேண்டும்.
ஏதேனும் சுட்டி தர முடியுமா?

ஜீவி said...

திவா said...
//பழுக்கக் காய்ச்சுவதின் மூலம், இரும்புத் துண்டாகக் காட்சியளிக்கும் அந்த அணுக்கூட்டின் உட்சுழற்சி வேலையான எலக்ட்ரான் சுழற்சியை நிறுத்துகிறோம்.//

''ம்ம்ம்ம்...அப்படியா?.....ரெபர் செய்ய வேண்டும்.
ஏதேனும் சுட்டி தர முடியுமா?//

வாருங்கள், திவா!
இது விஷயத்தில் தாராளமாக உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். வார்த்தை அமைப்புகளில் தவறு இருந்தால்,
திருத்திக் கொண்டால் போச்சு.
இப்படிப் பட்ட திருத்தங்கள், இந்தத்
தேடலுக்குச் செழுமையைத் தான்
சேர்க்கும்.
உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"ஜடப்பொருள்களில் இந்த தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் தன்மை இல்லாவிடினும், நாளாக நாளாக மூப்பு எய்திய மாதிரி சிதைந்து போகின்றதைப் பார்க்கிறோம்." பழுதடைந்து போவதும் ஜடப்பொருட்களில் இருக்கும் உயிர்ப்பின் வெளிப்பாடு... ஆஹா என்ன ஒரு பார்வை..ஜடப்பொருட்களுக்குள்ளும் ஜீவ சக்தி உண்டென்பதை அறிந்திருந்தாலும் இத்தகைய பார்வை ஒரு புதிய கோணத்தை தருகிறது.. நன்றி ஜீவி அடுத்தது யார்?????

Kavinaya said...

//எந்த ஆற்றலும் எப்பொழுதுமே அழிக்க முடியாத ஒன்று. ஆற்றலின் ஒரே மாற்றம், ஒரு நிலையிலிருந்து இன்னொறு நிலைக்கு மாறுவதே.//

//யோகி குமாரஸ்வாமி அவர்கள் இறைவன் பிரபஞ்சமாகத் தன்னையே சிருஷ்டித்துக் கொண்டான் என்றாரே, இதுதான் அந்த சிருஷ்டியோ என்று நான் வியக்கிறேன்.//

அருமையான சிந்தனை. அதனைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா. பொருத்தமாக இருக்கிறது. மிக்க நன்றி.

ஜீவி said...

கிருத்திகா said...
"ஜடப்பொருள்களில் இந்த தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் தன்மை இல்லாவிடினும், நாளாக நாளாக மூப்பு எய்திய மாதிரி சிதைந்து போகின்றதைப் பார்க்கிறோம்."

//பழுதடைந்து போவதும் ஜடப்பொருட்களில் இருக்கும் உயிர்ப்பின் வெளிப்பாடு... ஆஹா என்ன ஒரு பார்வை..ஜடப்பொருட்களுக்குள்ளும் ஜீவ சக்தி உண்டென்பதை அறிந்திருந்தாலும் இத்தகைய பார்வை ஒரு புதிய கோணத்தை தருகிறது.. நன்றி ஜீவி அடுத்தது யார்?????//

அடுத்து?..

அடுத்து, 'உயிர்களின் ஜனனத்திலிருந்து' இல்லையா?..

சகோதரி நிவேதிதா அவர்கள்
உபநிஷதங்களிலிருந்து மேற்கோள் காட்டி இதுபற்றி உரையாற்றுகிறார்கள்.
பெரியவர் கிருஷ்ணமூர்த்தி அவ்ர்கள்
இதுபற்றி முறைப்படி அடுத்த பகுதியில் அறிவிப்பு செய்வார்.
தொடர் வருகைகளுக்கு மிக்க நன்றி.

ஜீவி said...

கவிநயா said....
//அருமையான சிந்தனை. அதனைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா. பொருத்தமாக இருக்கிறது. மிக்க நன்றி.//

அத்தனை நன்றிகளும், எனதும் சேர்த்து சாம்பசிவம் ஐயாவுக்குப் போய்ச்சேரவேண்டியது.. 'நானை'க் கடக்க வேண்டிய தொடரில் 'நான்' எங்கே நுழைவது?..
அனந்த கோடி நமஸ்காரங்கள், ஐயா!

திவாண்ணா said...

need not publish:

http://tinyurl.com/5l8sxl

// temperature represents a measure of the average kinetic energy of the molecules of a system. Increases in temperature reflect increases in the vigor of molecular motion.//

//Finally, temperature can be reduced by taking energy out of a system, that is, by reducing the vigor of molecular motion. Absolute zero corresponds to the state of a system in which all its constituents are at rest. This is, however, a notion from classical physics. In terms of quantum mechanics, residual molecular motion will exist even at absolute zero.//

so electrons are not stopped. as far as i know -that is not much in physics- it cant be stopped.

if you know otherwise i will be happy to get educated.
my "strength" lies in acknowledging that i dont know something. :-)) that is how i get educated!

Expatguru said...

//"ஜடப்பொருள்களில் இந்த தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் தன்மை இல்லாவிடினும், நாளாக நாளாக மூப்பு எய்திய மாதிரி சிதைந்து போகின்றதைப் பார்க்கிறோம்."//

யோசித்து பார்க்கும்போது இதன் உண்மை தெளிவாக தெரிகிறது. உயிரே இல்லை என்று நாம் நினைக்கிற பொருட்களுக்கு கூட ஒரு உயிர் இருக்கிறதோ? உதாரணத்துக்கு பல பழமையான கோவில்களில் காலப்போக்கால் சிதைந்து உருமாறி போகின்ற கற்சிலைகளையே எடுத்துக்கொள்ளலாம். அணு மின்நிலையங்களில் உபயோகப்படும் யூரேனியம் போன்ற பொருட்களுக்கு கூட 'உயிர்' உள்ளது என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை (Half life என்று கூறுவார்கள்).

படிக்க படிக்க உறங்கி கிடந்த சிந்தனைகளை தூண்டும் விதமாக அமைந்துள்ளது உங்களது அருமையான இந்த தொடர்.

ஜீவி said...

Expatguru said...
//"ஜடப்பொருள்களில் இந்த தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் தன்மை இல்லாவிடினும், நாளாக நாளாக மூப்பு எய்திய மாதிரி சிதைந்து போகின்றதைப் பார்க்கிறோம்."//

//யோசித்து பார்க்கும்போது இதன் உண்மை தெளிவாக தெரிகிறது. உயிரே இல்லை என்று நாம் நினைக்கிற பொருட்களுக்கு கூட ஒரு உயிர் இருக்கிறதோ? உதாரணத்துக்கு பல பழமையான கோவில்களில் காலப்போக்கால் சிதைந்து உருமாறி போகின்ற கற்சிலைகளையே எடுத்துக்கொள்ளலாம். அணு மின்நிலையங்களில் உபயோகப்படும் யூரேனியம் போன்ற பொருட்களுக்கு கூட 'உயிர்' உள்ளது என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை (Half life என்று கூறுவார்கள்).

படிக்க படிக்க உறங்கி கிடந்த சிந்தனைகளை தூண்டும் விதமாக அமைந்துள்ளது உங்களது அருமையான இந்த தொடர்.//

தொடர்ந்த வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, குரு!
சிதிலமடைந்த சிலைகள் என்று சாதாரணமாக நாம் சொல்லும் சிலைகள் எல்லாம் நீங்கள் சொல்கிறபடிதான் ஆகியிருக்க வேண்டும். பழங்காலத்தில் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு தான் தேர்ந்தெடுத்த கற்களை சிலை வடிக்க உபயோகித்திருக்கிறார்கள்..
அதனால் தான் இவ்வளவு காலத்திற்கு அவை தாக்குப் பிடித்திருக்கின்றன.

குமரன் (Kumaran) said...

திவா ஐயாவின் ஐயமே எனக்கும் வந்திருக்கிறது. பழுக்கக் காய்ச்சும் போது அந்த வெப்பம் இயங்குசக்தியாக மாறி எலக்ட்ரான்களை அவற்றின் சுற்றுப் பாதையிலிருந்து விலக்கி அடிக்க அந்த பொருளில் அணுக்களின் திரட்சி குறைந்து வளிநிலையை அடைகின்றது என்று நினைக்கிறேன். திடப்பொருட்களில் அணுக்களின் திரட்சி மிக அதிகம்; திரவங்களில் அதனை விடக் குறைவு; வாயுக்களில் மிக மிகக் குறைவு.

ஜீவி said...

//இரும்பு போன்ற திடப்பொருளுக்கு வெப்பமேற்றி பழுக்கக் காய்ச்சினால், திடநிலையில் இரும்பு என்று பெயர் கொண்டிருந்த அது, திரவநிலைக்கு மாறும். மேலும் மேலும் சூடேற்றினால், காற்றாகி காற்றில் கலந்து விடும். நாம் என்ன செய்கிறோம்?.. பழுக்கக் காய்ச்சுவதின் மூலம், இரும்புத் துண்டாகக் காட்சியளிக்கும் அந்த அணுக்கூட்டின் உட்சுழற்சி வேலையான எலக்ட்ரான் சுழற்சியை நிறுத்துகிறோம். சுழற்சி நிறுத்தப்படின் அதன் ஆற்றல் மறைந்து ஆவியாகிக் காற்றில் கரைந்து விடுகிறது.//

வாருங்கள், குமரன்,

கருத்துக்கு நன்றி,குமரன்.
இது பற்றி திவா அவர்கள் ஒரு சுட்டியும் கொடுத்திருந்தார்கள்.
அந்த சுட்டியும் கொடுத்திருக்கிறேன்.
இந்த பகுதியை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டீர்களென்றால், மாற்றியமைத்தால் போயிற்று.
இவ்வளவு பெருமுயற்சி எடுத்துக் கொண்டு எழுத சித்தித்திருப்பது சிறு சிறு தவறுகள் கூட இல்லாமல் அமைந்தால், அதன் சிறப்பு இன்னும் கூடவே செய்யும்.
தங்களது அக்கறைக்கும், ஆர்வத்திற்கும் மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

//பழுக்கக் காய்ச்சுவதின் மூலம், இரும்புத் துண்டாகக் காட்சியளிக்கும் அந்த அணுக்கூட்டின் உட்சுழற்சி வேலையான எலக்ட்ரான் சுழற்சியை நிறுத்துகிறோம். சுழற்சி நிறுத்தப்படின் அதன் ஆற்றல் மறைந்து ஆவியாகிக் காற்றில் கரைந்து விடுகிறது.//

நன்றி ஐயா. இந்தப் பகுதியை மட்டும் கீழ்கண்ட மாதிரி மாற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

பழுக்கக் காய்ச்சுவதன் மூலம், இரும்புத் துண்டாகக் காட்சியளிக்கும் அந்த அணுக்கூட்டின் உட்சுழற்சி வேலையான எலக்ட்ரான் சுழற்சியை விரைவாக்குகிறோம். சுழற்சி வேகம் மிகும்போது அதன் ஆற்றலால் அணுக்கூட்டம் சிதைவுற்று ஆவியாகிக் காற்றில் கரைந்து விடுகிறது.

ஜீவி said...

குமரன் (Kumaran) said...

//இந்தப் பகுதியை மட்டும் கீழ்கண்ட மாதிரி மாற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

............//

தகுந்த மாற்றத்தைச் செய்து விட்டேன், குமரன்.. இப்பொழுது கருத்தும் வார்த்தை அமைப்பும்
பொருந்தி வருவதாகத் தெரிகிறது.
தாங்கள் எடுத்துக்கொண்ட பிரயாசைக்கு மிக்க நன்றி.

திவாண்ணா said...

ஜீவி என் மதிப்பில் எங்கோ போய்விட்டார்!
¨நான்/ என்¨ ஐ கழட்டி வைப்பது மிகவும் கடினம்.
எனக்கு பௌதிகம் தெரிந்த அளவில்: அணுத்திரள்கள் எப்போதுமே குதித்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு பொருளின் பரப்பில் இருப்பன குதித்து பொருளின் ஈர்ப்பால் திருப்பி வந்துவிடுகின்றன. பொருளின் உள்ளே ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொள்கின்றன. சூடாகும்போது இந்த குதியல் அதிகமாகும். அதனால் அதிகமாக அணுத்திரள்கள் பரப்பில் இருந்து குதித்து வெளியேறிவிடும். பொருளின் உள்ளே முட்டிமோதல் அதிகமாகி இடம் தருவதற்காக பொருள் விரிவடையும். தொடர்ந்து சூடேறுதல் இருந்தால் படிப்படியாக எல்லா அணுத்திரட்களும் வெளியேறி எதுவும் மிஞ்சாது.
ரொம்ப போர் அடிச்சுட்டேன் போல இருக்கு!
குமரன் சொன்னதுக்கும் இதுக்கும் ஒரே வித்தியாசம்தான். எலக்ட்ரான் சுழற்சிக்கும் ஆவியாதலுக்கும் நேரடி தொடர்பு இல்லை. இது நேரடியாக அணுத்திரள்கள் இயங்குவதை பொருத்தது.
யாராவது அறிவியல் அறிஞரை கேட்டு சரி/ சரியில்லைன்னு சொல்லுங்க!

Shakthiprabha (Prabha Sridhar) said...

////"ஜடப்பொருள்களில் இந்த தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் தன்மை இல்லாவிடினும், நாளாக நாளாக மூப்பு எய்திய மாதிரி சிதைந்து போகின்றதைப் பார்க்கிறோம்."//

இங்கே தான் என் சந்தேகமே ஆரம்பம் ஆகின்றது.

உயிரும் கூட (cell) அணுக்களின் சேர்க்கை என்றால், உண்மையில் தனித் துகளாக செயல்படும் (talkin from the point of view of source) (அல்லது நிலையாய் இருக்கும் போது) போது உயிர் என்று ஒன்று தனியே இல்லை. ஜீவன் என்று ஒன்று தனியே இல்லை. அப்படி என்றால் இறை என்று ஒன்றும் தனியே இல்லை. எல்லாம் கலந்த இந்த இயற்கையே இறை எனும் போது,

ஜடமும், உயிரும் ஒன்று என்று தானே பொருட்படுகின்றது :?

அப்பொழூது, மூல நிலையில் அணுத்துகள் நிலையில், ஜடமுமில்லாத, உயிரும் அற்ற ஒரு நிலையா?

இந்த விளக்கங்கள் மெய்ஞானத்தை, விஞ்ஞானத்துடன் இணைக்கப்படும் போது, எனக்கு இன்னும் சமாதானமாய் கிடைக்கவில்லை :(

இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

ஜீவி said...

Shakthiprabha said...
////"ஜடப்பொருள்களில் இந்த தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் தன்மை இல்லாவிடினும், நாளாக நாளாக மூப்பு எய்திய மாதிரி சிதைந்து போகின்றதைப் பார்க்கிறோம்."//

//இங்கே தான் என் சந்தேகமே ஆரம்பம் ஆகின்றது.

உயிரும் கூட (cell) அணுக்களின் சேர்க்கை என்றால், உண்மையில் தனித் துகளாக செயல்படும் (talkin from the point of view of source) (அல்லது நிலையாய் இருக்கும் போது) போது உயிர் என்று ஒன்று தனியே இல்லை. ஜீவன் என்று ஒன்று தனியே இல்லை. அப்படி என்றால் இறை என்று ஒன்றும் தனியே இல்லை. எல்லாம் கலந்த இந்த இயற்கையே இறை எனும் போது,

ஜடமும், உயிரும் ஒன்று என்று தானே பொருட்படுகின்றது :?

அப்பொழூது, மூல நிலையில் அணுத்துகள் நிலையில், ஜடமுமில்லாத, உயிரும் அற்ற ஒரு நிலையா?

இந்த விளக்கங்கள் மெய்ஞானத்தை, விஞ்ஞானத்துடன் இணைக்கப்படும் போது, எனக்கு இன்னும் சமாதானமாய் கிடைக்கவில்லை :(

இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.//

வாருங்கள் சக்திபிரபா!

தங்களது ஆழ்ந்த வாசிப்பிற்கு நன்றி.

இப்போதைக்கு--- எல்லாவற்றின் உள்ளிருந்து இயங்கும், இயங்க வேண்டியவற்றை இயக்க வைக்கும்,
"சக்தி" என்ன என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்..

உயிரியல் பகுதி தொடர்ந்து வருகையில் உடலின் இயங்கு இயல் பற்றி பேப்பர்கள் சமர்ப்பிக்கவிருக்கும் பேராசிரியர்கள் உங்கள் தேடலுக்கு சமாதானம் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

தொடர்ந்து படிப்பதோடு மட்டுமில்லாமல், சிந்தனையைக் கிளறிவிடும் அலசல்களுக்கும் மிக்க நன்றி, சக்திபிரபா!

Related Posts with Thumbnails