மின் நூல்

Wednesday, January 7, 2009

ஆத்மாவைத் தேடி....30

ஆன்மீகத்தின் அடுத்த கட்டம் நோக்கி....


30. "உண்மை இல்லை; பொய் உரை இலாமையால்"...


போனை வைத்து விட்டு ராதை திரும்பும் பொழுது, மாலு புறாக்களுக்கு தானியம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்து ராதை சிரித்தாள். "என்ன, அக்கா! கொஞ்ச நேரத்திற்கு முந்தி தான் அதுகளை விரட்டு விரட்டென்று விரட்டினீங்க.. இப்போ என்னன்னா, தானியம்போட்டு சமாதானமா?"

மாலுவும் பதிலுக்குப் புன்னகைத்தாள். "விரட்டாதே... தானியம் போடுன்னு கிருஷ்ணாதான் சொன்னான். அதான்."

"அவரா சொன்னார்?.. ஏனாம்?.. சாப்பிடறதைச் சாப்பிட்டு இன்னும் ஹால் பூரா ரெக்கையைக் கொட்டவா?"

"பக்ஷிகளெல்லாம் 'த்விஜ' பிறவிகளாம்.. விரட்டக்கூடாதாம்."


"அப்படின்னா? 'தவிஜ'ன்னா?.."

"தாய்ப்பறவையிலிருந்து முதலில் முட்டை, பின்னாடி குஞ்சுன்னு இரு பிறப்புகளாம் அதுகளுக்கு."


"ஓ!" என்று உதட்டைக் குவித்தாள் ராதை. 'புருஷன் எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார்' என்று பெருமையாக இருந்தது. "அதுசரி.. அப்படிச் சொல்லிட்டா போதுமா?.. இதெல்லாம் முறத்லே எடுத்து யாரு கொட்டறதாம்?" என்று அங்கங்கே படிந்திருந்த புறா எச்சத்தையும், உதிர்ந்து கிடந்த இறகுகளையும் சுட்டிக்காட்டிக் கேட்டாள்.

"அதுக்குத் தான் நான் வந்திருக்கிறேனே?" என்று சொன்ன மாலு, 'ஏதும் தப்பாய்ச் சொல்லி விட்டோமோ' என்று சடாரென்று உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

"அதையும் அவர் தான் சொன்னாராக்கும்?.. சரியான அக்கா!" என்று சிரித்த ராதையின் விகல்ப்பமற்ற வெள்ளை மனம் மாலுவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மாலுவும் சிரித்து விட்டாள். "அப்படின்னு கிருஷ்ணா சொல்லலே.. வேறொண்ணு சொன்னான். 'மனுஷாள்கிட்டே பறவைகள் நெருங்கறது பாக்கியம்'ன்னு சொன்னான்."


"ஓ' என்று அழகாக உதட்டைக் குவித்தாள் ராதை. "இப்படின்னு எனக்குத் தெரியும். அவர் இப்படி ஏதாவது சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரியும்"

"அர்த்தம் இருக்கும்னு ஏத்துக்கறது சரி. என்ன அர்த்தம்னு தெரிஞ்சிக்க வேணாமா?"

இரண்டு கைகளையும் பரக்க விரித்தாள் ராதை. "தெரிஞ்சிண்டு என்ன ஆகப்போறது? அனுபவப்பட்டவா சொன்னா சரிதான்."

"என்ன ராதை சொல்றே?.. அனுபவப்பட்டவா அனுபவத்தை நீ அனுபவிச்சு அதை இன்னொருத்தருக்குச் சொல்ல வேண்டாமா?"

"யாருக்குச் சொல்லணும், அக்கா?"

"வேறே யாருக்கு.. உன் பையனுக்கு, மாட்டுப்பொண்ணுக்கு, குழந்தைகளுக்கு, என்னை மாதிரி சொந்தக்காரங்களுக்கு, ப்ரண்ட்ஸ்களுக்குனு எல்லாருக்கும்தான்"

ராதை 'கலகல'வென்று சிரித்தாள்.

"என்ன சிரிக்கறே?"

"எவ்வளவு விஷயம் வரிசையாச் சொல்றேள்?.. அதை நினைச்சுத்தான்."

"புலம்பறேன்னு நெனைச்சுச் சிரிக்கறயா?"

"ஐயய்யோ.. அப்படி இல்லே, அக்கா! தான் பட்டதை, தெரிஞ்சிண்டதை மத்தவாளுக்கும் சொல்லணும்னும், அவாளும் அதைத் தெரிஞ்சிக்கணும்னும் நெறைய ஆசை இருக்கு,உங்களுக்கு. அதைச் சொல்ல வந்தேன்."

"ரொம்ப அலட்டறேன்னு தோண்றதா?"

"நிச்சயமா இல்லே, அக்கா!.. மத்தவா மேலே எவ்வளவு அக்கறைன்னு ஆச்சரியப்படத் தோண்றது."

"நெஜமாவா சொல்றே?"

"சத்தியமா'க்கா."

"சீச்சீ.. இதுக்கெல்லாம் எதுக்கடி சத்தியம்?" என்று சொல்லியவாறு மாலு ஆதுரத்துடன் ராதையின் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டாள்..

"இதுன்னு இல்லே, ராதை!.. லோகஷேமத்திற்காக நல்லதுன்னு நெனைக்கற பல விஷயங்களை நாம ஒருத்தருக்கு சொல்லி, அவா இன்னொருத்தருக்குச் சொல்லி, இப்படி அந்த விஷயங்கள் பரவறதிலே ஒரு சுயநலமும் இருக்கு, தெரியுமா?"

தன் பெரிய கருவிழிகளை விரித்து ஆச்சரியமாக மாலுவைப் பார்த்தாள் ராதை.

"என்ன அப்படிப் பாக்கறே?"

"இத்தனை வயசு வளர்ந்துட்டேன்; வளர்ந்திட்டது தெரியறதே தவிர, பலது தெரியாமலேயே வளர்ந்திட்டேன். அடுப்பங்கரை, ஆத்துக்காரர் செளக்கியம், மகன், மருமகள்,மகள், மாப்பிள்ளை, பேரன்னு என் வாழ்க்கை போயிடுத்து... சுத்தமா பலது தெரியலே."

"தெரியலைன்னு கைவிரிக்கறதை விட்டுத்தள்ளு. நல்லதைத் தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் இருந்தாப் போதும். அதுவே பெரிய விஷயம். நெறையத் தெரிஞ்சிக்கலாம்."

"சரிக்கா.. இப்படி நாலு பேருக்கு நமக்குத் தெரிஞ்சிக்கறதைச் சொல்றதிலே ஏதோ சுயநலம் இருக்குன்னு சொன்னீங்களே?"


"ஆமாம், ராதை!" என்று முறுவலித்தாள் மாலு. "சரியாச் சொல்லணுன்னா பொதுநலம் கலந்த சுயநலம் அது."

""உம்..." ராதை சுவாரஸ்யமானாள்.

"நாம மட்டும் நல்லது நெனைச்சு, மத்தவாளுக்கு நல்லது பண்ணி, நாம செய்ய வேண்டியதைச் செஞ்சாச்சுன்னு ஓஞ்சுபோய் ஒரு தீவாப் போயிடக்கூடாது. அப்படிப்போனாவிரக்திதான் மிஞ்சும். எதுவும் எதிர்பார்த்துச் செய்யாட்டாலும், 'எவ்வளவு செஞ்சேன், ஒரு நன்றி இல்லையே'ன்னு சுயப்பரிதாபம் தான் மிஞ்சும்."


"சரிதான்."


"செய்யற நல்லதை நாலுபேருக்கிட்டே பகிர்ந்திக்கறதும், முடிஞ்சா நீயும் செஞ்சுப்பாரேன்னு வழிகாட்டறதுமான செயல் நாளாவட்டத்தில் ஒருத்தருக்கொருத்தர் பரவி இதை நியாயம்னு ஏத்திண்டு நல்லதையே நினைச்சு நல்லதையே செய்யற கூட்டம் பெருகப் பெருக, தீமைகளோட தலையாட்டம் தணிஞ்சு ஒழிஞ்சே போயிடும். அப்புறம் கிருதயுகம் தான்."


"பாரதி சொன்னாரே, அந்த கிருதயுகமா? படிச்சிருக்கேன்."


"அதே தான். கம்பராமாயணத்திலே ஒரு அடி வருமே, 'உண்மை இல்லை; பொய் உரை இலாமையால்'ன்னு. கிட்டத்தட்ட அதேமாதிரியான வேறொரு வெர்ஷன் இது. நல்லவை பரவப் பரவ, தீமைன்னா என்னன்னே வர்ற தலைமுறைக்குத் தெரியாமப் போயிடும். அப்புறம் செய்யற காரியங்களுக்கு நல்லதுங்கற பேரே கூட மறைஞ்சு போய், நல்ல காரியங்களோ செய்யற காரியங்களாயிடும்."

"-------------"

குளித்து உடைமாற்றிக் கொண்டு சுபா பாத்ருமிலிருந்து வெளியே வந்தாள். மாமியாரும், பெரியக்காவும் பேசிக் கொண்டிருந்த ஹாலுக்கு வந்தவள், முத்தத்தைப்பார்த்து திகைத்து, "அடேடே! இதுகளெல்லாம் எங்கே போச்சு.. ஒண்ணைக்கூடக் காணோமே?" என்று திகைத்தாள்.

"ஆமாம், சுபா! அந்தப் புறாக்கள்லாம் படபடத்திண்டு இல்லாதது வெறிச்சோன்னு தான் இருக்கு.. நான் பெங்களூர் போயும், அதுகளை மறக்க முடியாது போலிருக்கு.பறவைகள் மனுஷாளை நெருங்கறது பாக்கியம்னு கிருஷ்ணா வேறே சொல்லிட்டானா, அந்த பாக்கியம் கிடைக்கலேயேன்னு......"

"அதான் என்ன பாக்கியம்னு சொல்ல மறந்திட்டீங்களே!" என்று ஞாபகப்படுத்தினாள் ராதை.


"ஆமாம், ராதை.. கிருஷ்ணா சொன்னது சரிதான். யோசிச்சுப் பார்த்தா ஒரு பெரிய உண்மையே தெரியறது, அவன் சொன்னதிலே.."

மாலுவே தொடர்ந்தாள்: "பறவைகள் மனுஷாள் கிட்டே நெருங்கணும்னா, அப்படி அதுங்க நெருங்கற அளவுக்கு அந்த மனுஷன் அதுகளை பயப்படுத்தாம இருக்கணும் இல்லையா? பறவைகள் நெருங்கற அளவுக்கு மனுஷாள் சாத்வீகமா இருக்கறதைச் சொல்ல வந்த வார்த்தை அதுன்னு நெனைக்கறேன்."

"ஓ.. அந்த ஒத்தை வரிலே இத்தனை அர்த்தம் இருக்கா!" என்று வியந்தாள் ராதை.

"நேரடியான அர்த்தம் அதுதான்னு இல்லே.. யோசிச்சுப் பாத்து, இதுக்கு இப்படி இருக்கலாமோன்னு நாம்பளே பண்ணிக்கற வியாக்கியானம் தான்."


ராதை மாலுவை நெருங்கி வந்து அவள் வலக்கரம் தூக்கித் தன் விரல்களுக்குள் பொத்திக் கொண்டாள்: "நீங்க பேசறதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அக்கா!"

"அப்படியா?.. எல்லாம் அவரோடப் பேசிப்பேசிப் பழகிண்டது தான்" என்று மாலு சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வாசல் பக்கம் நிழல் தட்டியது.

வாசல் பக்கமே செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு ஹிண்டுவும் கையுமாக உள்ளே நுழைந்தார் சிவராமன்.

"அத்திம்பேர் கூட வாக்கிங் போயிட்டு வந்தாச்சே" என்றபடியே சமையறைப் பக்கம் நுழைந்தாள் ராதை.

"வழிலே பேப்பர் கடை ஒன்றைக் கூடக்காணோம். பஸ் ஸ்டாண்டு வரை போயிட்டு வரேன்" என்றபடியே ஊஞ்சலில் அமர்ந்தார் அவர்.

(தேடல் தொடரும்)

13 comments:

திவாண்ணா said...

//"தெரியலைன்னு கைவிரிக்கறதை விட்டுத்தள்ளு. நல்லதைத் தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் இருந்தாப் போதும். //

உண்மைதான். எல்லாரும் எல்லாத்தையும் தெரிஞ்சுக்க முடியாது. அவசியமும் இல்லை. கற்றது கைமண்.....

நம்ம வழி என்னவா இருக்கணும்ன்னு தெரிஞ்சாச்சுன்னா அப்புறம் அதை ஒட்டியே அறிவை வளர்த்து கொண்டு போகலாம். அதை செய்ய முடிந்தாலே போதும்.

கபீரன்பன் said...

//'உண்மை இல்லை; பொய் உரை இலாமையால்//

கிருதயுகத்திற்கு கம்பர் விளக்கம் அருமையாக இருக்கு.

//பறவைகள் நெருங்கற அளவுக்கு மனுஷாள் சாத்வீகமா இருக்கறதைச் சொல்ல வந்த வார்த்தை அதுன்னு நெனைக்கறேன்.//

பிற ஜீவன்கள் எல்லாவற்றையும் அதிர்வுகளாலே உணர்ந்து கொள்ளுமாம். அப்படி ஒரு சக்தி மனிதனுக்கும் உண்டு ஆனால் பயன் படுத்திக்கொள்வது மிக மிகக்குறைவு.

ஜீவி said...

திவா said...
//"தெரியலைன்னு கைவிரிக்கறதை விட்டுத்தள்ளு. நல்லதைத் தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் இருந்தாப் போதும். //

//உண்மைதான். எல்லாரும் எல்லாத்தையும் தெரிஞ்சுக்க முடியாது. அவசியமும் இல்லை. கற்றது கைமண்.....

நம்ம வழி என்னவா இருக்கணும்ன்னு தெரிஞ்சாச்சுன்னா அப்புறம் அதை ஒட்டியே அறிவை வளர்த்து கொண்டு போகலாம். அதை செய்ய முடிந்தாலே போதும்.//

வாருங்கள், திவா!

அப்படியா சொல்கிறீர்கள்?..
நான் அப்படி நினைக்கவில்லை.
அப்படி நினைக்காததின் விளைவே
நீண்ட இந்தப் பதிவு.

நம்ம வழி--அதை ஒட்டிய அறிவு என்பதெல்லாம் அறிவின் பன்முகத் தன்மையை முடக்கச் செய்யும் என்பதே எனது புரிதல்.

ஜீவி said...

கபீரன்பன் said...
//'உண்மை இல்லை; பொய் உரை இலாமையால்//

கிருதயுகத்திற்கு கம்பர் விளக்கம் அருமையாக இருக்கு.

//பறவைகள் நெருங்கற அளவுக்கு மனுஷாள் சாத்வீகமா இருக்கறதைச் சொல்ல வந்த வார்த்தை அதுன்னு நெனைக்கறேன்.//

//பிற ஜீவன்கள் எல்லாவற்றையும் அதிர்வுகளாலே உணர்ந்து கொள்ளுமாம். அப்படி ஒரு சக்தி மனிதனுக்கும் உண்டு ஆனால் பயன் படுத்திக்கொள்வது மிக மிகக்குறைவு.//

நன்றாகச் சொன்னீர்கள்.

நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி
படைப்பின் கொடைகள் பல இன்னும் புரிபடாமலும், அறியும் முயற்சிகளிலுமே இருக்கின்றன என்பதும் உண்மை.

ஒரு காலத்தில் அறிந்திருந்த சில விஷயங்கள் கூட
சரியான புரிதல் இல்லாமல், பழங்குப்பையாய் போய்
இப்பொழுது அழிந்து போய் அது பற்றிய தொடர்ந்த அறிவு இன்மையால் அறியப்படாமல் போயிருப்பதும்
இன்னொரு வேடிக்கை.

தங்கள் பகிர்தலுக்கு நன்றி, கபீரன்ப!

Expatguru said...

மிகவும் யதார்த்தமாக கதை சென்றுகொண்டிருக்கிறது. பாராட்டுக்கள், ஜீவி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வழக்கம் போல் சுவாரசியம் குன்றாத பதிவு. தங்கள் பதிவின் மறுமொழிகள் கூட அநேக சமயம் கூடுதல் புரிதல்களைத்தரும் அதன்படி.. கீழ்க்காணும் வரிகளைக்குறித்தான என் பார்வையையும் வைக்க விழைகிறேன்.
திவா---"“நம்ம வழி என்னவா இருக்கணும்ன்னு தெரிஞ்சாச்சுன்னா அப்புறம் அதை ஒட்டியே அறிவை வளர்த்து கொண்டு போகலாம். அதை செய்ய முடிந்தாலே போதும்.”"

ஜீவி---"நம்ம வழி--அதை ஒட்டிய அறிவு என்பதெல்லாம் அறிவின் பன்முகத் தன்மையை முடக்கச் செய்யும் என்பதே எனது புரிதல்."

ரெண்டுமே சரியாகத்தான் தோன்றிற்று ஏனென்று யோசித்துப்பார்த்தால், எல்லோராலும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது, ஆனால் இந்த உணர்வு உள்ளத்தில் தைத்திருந்தால் மட்டுமே அதுவே அறிவில் நிலைபெற்று மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் தன்மையைத்தரும். அதுவே அறிவின் பன்முகத்தளத்திற்கு அடிப்படையாகவும் ஆகும். என்ன சரிதானே நான் சொல்வது.

ஜீவி said...

Expatguru said...
//மிகவும் யதார்த்தமாக கதை சென்றுகொண்டிருக்கிறது. பாராட்டுக்கள், ஜீவி.//

தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி, குரு! தொடர்ந்து செல்வோம்.

ஜீவி said...

கிருத்திகா said...

//வழக்கம் போல் சுவாரசியம் குன்றாத பதிவு. தங்கள் பதிவின் மறுமொழிகள் கூட அநேக சமயம் கூடுதல் புரிதல்களைத்தரும் அதன்படி..//

வழக்கமாக பதிவின் நீட்சி கருதி,
பதிவு தொடப்பாக சொல்ல நினைக்கும் பலவற்றை பதியும் பொழுது தவிர்க்க நேரிடும்.

அவற்றை யாராவது தொட்டால், பின்னூட்டத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுவேன்.
இன்னொன்று. பின்னூட்டத்தில் ஆலாபனை செய்கிற மாதிரி இன்னும்
சில சங்கதிகளைச் சேர்த்து, விட்டதை நிறைவு செய்யலாம்.
இதை ஒரு வசதியாகத் தான் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன்.

இதை வெகு உன்னிப்பாகக் கவனித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி, கிருத்திகா!

ஜீவி said...

கிருத்திகா said...

//ரெண்டுமே சரியாகத்தான் தோன்றிற்று ஏனென்று யோசித்துப்பார்த்தால், எல்லோராலும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது, ஆனால் இந்த உணர்வு உள்ளத்தில் தைத்திருந்தால் மட்டுமே அதுவே அறிவில் நிலைபெற்று மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் தன்மையைத்தரும். அதுவே அறிவின் பன்முகத்தளத்திற்கு அடிப்படையாகவும் ஆகும். என்ன சரிதானே நான் சொல்வது.//

ஒரு மென்பொருள் வல்லுனர் புல்லாங்குழல் வாசிக்கிறார். கெமிக்கல் இன்ஜினியர் ஒருவர் அருமையாகச் சித்திரம் வரைக்கிறார்.
'அட' என்று வியந்து நெகிழும் அளவுக்கு மழலை மேதைகள், தொலைக்காட்சிகளில் மத்தளம் தட்டுகின்றனர். குதிரைக்கு பட்டை போட்ட மாதிரி தன் தொழிலுக்கு தேவையான் அறிவு--அது ஆழமாக இருந்தால் கூட-- அதில் மட்டுமே அக்கரை காட்டுவது, தோய்வது அறிவின் பன்முகத் தன்மையை ரசிக்க முடியாத நிலைக்குக் கூட இட்டுச் செல்லும். சுயநல செருக்கையும் கூட்டும் ஆபத்தும் இருக்கிறது.

நடுரோட்டில் நின்று விட்ட வண்டியை கிளப்ப முடியாமல் கையைப்
பிசைந்து கொண்டு நிற்கையில் எதிர்ப்புறம் கடக்கிறவர் தன் வண்டியை நிறுத்தி விசாரித்ததோடு நிற்காமல், கார் பானெட்டைத் திறந்து எதையோ திருகிப் பழுது பார்க்க அடுத்த நிமிடம் வண்டி ஸ்டார்ட் ஆகிறது. நன்றியுடன் "தாங்கள்.." என்று விசாரிக்கையில், "நான் காட்டரிங் நடத்துகிறேன்" என்கிறார் அவர்.

கடற்கரையில் ஒருநாள் உலாவிக் கொண்டிருந்த அந்த வாலிபனுக்கு அவசர சிகித்சை தெரிந்ததோ, அந்த உயிர் பிழைத்ததோ..

எந்த அறிவு எப்பொழுது கைகொடுக்கும் என்று தெரியவில்லை.
இந்த கணினி உலகில் அறிவுப் புதையலை தோண்டித் துருவி எடுக்க வேண்டியதில்லை; எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில் தான்.
என்ன, சோம்பல் ஒழித்த ஆர்வம் வேண்டும் அவ்வளவு தான்.

இந்த சமூகத்திற்கு எல்லோர் தேவையும் வண்டி வண்டியாக வேண்டியிருக்கிறது. அதற்கு நம்மால் ஆன பங்களிப்பது கடவுள் இட்ட பணி.
அவ்வளவு தான்.

மிக்க நன்றி, கிருத்திகா!

கவிநயா said...

விட்டுப்போன இடுகைகளை இப்போதான் படிச்சேன். நீங்கள் கதை சொல்லும் விதம் வாசிப்பவரைக் கூடவே கட்டியிழுத்துச் சென்று விடுகிறது.

//நல்லவை பரவப் பரவ, தீமைன்னா என்னன்னே வர்ற தலைமுறைக்குத் தெரியாமப் போயிடும். அப்புறம் செய்யற காரியங்களுக்கு நல்லதுங்கற பேரே கூட மறைஞ்சு போய், நல்ல காரியங்களே செய்யற காரியங்களாயிடும்.//

அருமையான சிந்தனை. மிக்க நன்றி ஐயா.

ஜீவி said...

கவிநயா said...
//விட்டுப்போன இடுகைகளை இப்போதான் படிச்சேன். நீங்கள் கதை சொல்லும் விதம் வாசிப்பவரைக் கூடவே கட்டியிழுத்துச் சென்று விடுகிறது. //

//நல்லவை பரவப் பரவ, தீமைன்னா என்னன்னே வர்ற தலைமுறைக்குத் தெரியாமப் போயிடும். அப்புறம் செய்யற காரியங்களுக்கு நல்லதுங்கற பேரே கூட மறைஞ்சு போய், நல்ல காரியங்களே செய்யற காரியங்களாயிடும்.//

அருமையான சிந்தனை. மிக்க நன்றி ஐயா.//

வருகைக்கும் ரசனையுடன் கூடிய பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி, கவிநயா!

குமரன் (Kumaran) said...

சொன்னா கோவிச்சுக்கக் கூடாது. பாலகுமாரனின் நாவலைப் படித்தது போலவே இருக்கிறது இந்தப் பகுதியில் இருக்கும் உரையாடல்கள். எனக்கு பாலகுமாரனின் நாவல்கள் பிடிக்கும்.

ஜீவி said...

குமரன் (Kumaran) said...
//சொன்னா கோவிச்சுக்கக் கூடாது. பாலகுமாரனின் நாவலைப் படித்தது போலவே இருக்கிறது இந்தப் பகுதியில் இருக்கும் உரையாடல்கள். எனக்கு பாலகுமாரனின் நாவல்கள் பிடிக்கும்.//

அப்படியா, குமரன்!

இதில் கோபித்துக் கொள்ள ஒன்றுமில்லை. உங்கள் உணர்வுகள் உங்களுக்குச் சொந்தமானவை அல்லவா?

எழுத்து நடைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற எல்லா எழுத்தாளர்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதனால், எனக்கும் பாலகுமாரனின் புதினங்கள் மிகவும் பிடிக்கும். பாலகுமாரனுக்கு மிகவும் பிடித்த தி.ஜானகிராமனின்
கதை சொல்லும் பாணியும், நடையும் கூட எனக்கு மிகவும் பிடிக்கும். (எனது எழுத்தாளர்கள் பகுதியில் தி.ஜா.வைப்
பற்றி எழுதியிருக்கிறேன், பாருங்கள்)

கதை தஞ்சாவூர்க்காரர்களைக் பாத்திரங்களாகக் கொண்டுள்ளதால்,
அந்தப் பகுதிக்கான சொல்லாடல்களை உரையாடல்களாகக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியும் மற்ற பகுதிகளைப் போல இருப்பதாகத் தான் என் எண்ணம். பேனாவைப் பிடித்து விட்டால் மனசின் குதிரை வேகத்திற்கு கை பரபரத்து ஓடுகிறது.
சொற்களும் ஓடி வந்து த்ங்களை எழுத்துக்களாக்கிக் கொள்கின்றன.
அவ்வளவு தான்.

தங்கள் வருகைக்கும் உணர்ந்ததை எழுதிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, குமரன்!

Related Posts with Thumbnails