மின் நூல்

Wednesday, December 31, 2008

ஆத்மாவை தேடி....29

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

29. புது விஷயம்; புது உலகம்

நீண்ட நேரம் டெலிபோன் ரிஸீவரைப் பிடித்திருந்ததினால் கை லேசாக வலிக்க, ரிஸீவரை இன்னொரு கைக்கு மாற்றிக் கொண்டார், கிருஷ்ணமூர்த்தி.

"மாலு! நான் சொல்ல வர்றதைப் புரிஞ்சிக்கோ.. யாரைப் பாக்கலாம்னு அன்னிக்கு அப்படிக் கிளம்பினேனோ, அவரே, அந்த நீலகண்டனே, 'பைத்தியக்காரா! இங்கே எங்கே வர்றே'ன்னு என்னைத் திசைதிருப்பி விட்டான். மனோகர்ஜின்னு ஒரு பெரியவரைப் பாக்க வ்ச்சான். ஞான விஷயமா இன்னும் நெறைய நான் தெரிஞ்சிண்டு வரணும்னு நெனைச்சானோ என்னவோ, பெரிய பெரிய படிப்பு படிச்ச பண்டிதர்கள் பேசி விவாதிக்கற சபைலே என்னை மேடை ஏத்தி என்னோட மழலையை ரசிச்சான். 'ஆத்மா'ன்னு ஒரு சதஸ் வேறே இங்கே நடக்கப் போறது"

"என்னன்னவோ சொல்றையே?"

"ஆமாம். இங்கே டெல்லிலே ஒரு பெரிய சதஸ் நடக்கப் போறது. மனோகர்ஜிதான் ஏற்பாடு பண்ணியிருக்கார். 'ஆத்மா'ங்கற சப்ஜெக்டை எடுத்திண்டு பல கோணங்கள்லே பண்டிதர்கள்லாம் அலசப்போறா."

"ஹஹ்ஹ்ஹா.." என்று பெரிதாக சிரித்தாள் மாலு. "ஏண்டா, கிருஷ்ணா! கேட்டாலே சிரிப்பு வரலை? பேசறதாவது.. விவாதிக்கறதாவது.. பேசித் தெரிஞ்சிக்கறதாவது.. எனக்குப் புரிபடலை.. ஏண்டா, கிருஷ்ணா, சொல்லு. பேசி, விவாதித்து, புரிஞ்சிக்கற விஷயமாடா, அது? சொல்லு."

"மாலு----"

"கிருஷ்ணா! நீ ஒண்ணை மொதல்லே புரிஞ்சிக்கோ.. அது ஆம்பளையோ, பொம்பளையோ என்னைக்கு அவாளுக்குக் கல்யாணம்னு ஒண்ணு ஆயிடுச்சோ, அன்னிக்கே அவா கூண்டுக்கிளியாயிடறா.. கிரகஸ்தாளாயிடறா.. நாற்பது சமஸ்காரங்களும் தெரிஞ்ச ஒனக்கு நா சொல்ல வேண்டியதில்லே; இல்லறத்தாளோட கடமைகள் நீ அறியாததும் இல்லே.. 'செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்; நல் விருந்து வானத்தவர்க்கு'ன்னு வள்ளுவர் சொல்லலிய்யா?.. வேதசாஸ்திர மந்திரங்கள் எனக்கும் தெரியும்.. சொல்றதுன்னா சொல்லுவேன்.. கல்யாணம் ஆயிடுச்சின்னா, கிரகஸ்தாளாயிருந்திண்டு கடவுளைத் தேடறது தான் அவாளுக்கு இட்ட வழி... இப்படி பொண்டாட்டியை தனியா விட்டுட்டு, தான் மட்டும் துண்டை உதறிப் போட்டுட்டு கிளம்பறதில்லே. தெரிஞ்சிக்கோ."

"நீ என்ன நான் சந்நியாசமே வங்கிண்டு வந்துட்ட மாதிரி பேசறே?.. என்னிக்கு 'ஸப்தபதி' ஜபித்து ராதையோட கையைப் பிடிச்சிண்டு அக்னி வலம் வந்தேனோ, அன்னிக்கேத் தீர்மானமானது அது."

"என்னது?"

"இறப்பு ஒண்ணு தான் எங்க ரெண்டு பேரையும் பிரிக்கக் கூடிய ஒண்ணுன்னு. அது அவளுக்கும் தெரியும். நானும் அடிக்கடி பத்து நாள், பதினெஞ்சு நாள்னு புராணக்கதை சொல்றேன்னு வெளிலே போயிண்டு வந்திண்டிருக்கறது வழக்கமான ஒண்ணுங்கறதாலே, என்னோட இருப்பு அங்கே இல்லாதது அவளுக்கு பெரிசாத் தெரியலே.. எனக்கும் குடும்பத்தை விட்டான இந்த தற்காலிக பிரிவெல்லாம் பழக்கப்பட்டுப் போயிடுத்து.. மத்தபடி மானசீகமா எப்போதும் எந்நேரமும் அவளோடையே தான் இருக்கேன். இன்னிக்கு ஒங்கிட்டே சொல்றேன். தெரிஞ்சிக்கோ."

"---------------"

"அவளோட மட்டுமில்லே.. உங்க எல்லாரோடையும் கூடத்தான். இன்னிக்கு அதிகாலைலே என்னோட கனவுலே நீ வந்தே.. தெரியுமா, சேதி?"

"என்ன சொல்றே, கிருஷ்ணா?"

"ஆமாம்... கனவுலே நீ மட்டுமில்லே... அண்ணா, மன்னி கூடத்தான். அந்த தஞ்சாவூர் ராணி வாய்க்கால் தெரு வீடு.. பெரிசு பெரிசா அந்த ஜன்னல்கள்.. அதெல்லாம் ஒனக்கு நினைவிருக்கா, மாலு?.. ஜன்னல் பக்கத்லே பாய் விரிச்சு நீ, நான், மன்னி-- எல்லாரும் படுத்திருக்கோம்.. சிபிச் சக்கரவர்த்தி கதை சொல்லட்டுமான்னு நீ கேக்கறே--"

"கிருஷ்ணா!---"

"இன்னிக்கு காலம்பற பொழுது விடியறத்துக்கு முன்னாடி வந்த கனவு இது.
பச்சுன்னு இப்பவும் ஞாபகத்லே இருந்து ஒடம்பு சிலிர்க்கறது."

"ஆச்சரியமா இருக்கு, கிருஷ்ணா!"

"எனக்கும் தான்."

"என்னோட ஆச்சரியம் வேறே... சித்தே முன்னாடிதான் அந்த ராணி வாய்க்கால் தெரு மகாத்மியம் பத்தி ராதைகிட்டே சொல்லிண்டு இருந்தேன்.. அப்படியெல்லாம் கதை கேட்டவன், இன்னிக்கு ஊருக்கெல்லாம் கதை சொல்லிண்டு இருக்கான்னு சொல்லிண்டு இருந்தேன்..... ச்சூ... ச்சூ... அந்தக் கழியை எடுத்து அங்கே வை ராதை.."

"என்ன மாலு?.."

"ஒண்ணுமில்லே.. இங்கே பக்கத்லே புறா வளக்கறாப் போல இருக்கு. அதிலே ரெண்டு நம்பாத்து முத்தமே கதின்னு கெடக்கு. 'படபட'ன்னு இங்கேயும் அங்கேயும்ஓடிப்பறந்து, ஹாலுக்கு வந்திடுத்து.. அதான் விரட்னேன்."

இன்னொரு பக்கம் ஃபோனைப் பற்றியபடி கிருஷ்ணமூர்த்தி பிரமை பிடித்து நின்றார்.

"ச்சூ.. ச்சூ.." என்று மாலு புறாவை விரட்டுவது இங்கு கேட்டது. அவள் புறாவை விரட்டுவது கிருஷ்ணமூர்த்திக்கு தன்னையே விரட்டுவது போலிருந்தது.

"மாலு.. வேண்டாம்.. புறாவை விரட்டாதே.. பக்ஷிகள் நெருங்குவது பாக்கியம். விரட்டாதே."

"விரட்டாம என்ன செய்யறதாம்?... 'பிலுபிலு'ன்னு முத்தம் பூரா அதுகளோட எறகுத்துண்டுங்க தான். பெருக்கிப் போட்டு மாளலே."

"பக்ஷிகள்லாம் 'த்விஜ' பிறவிகளல்லவோ?.. விரட்டாதே.. சொல்றதைக் கேளு."

கிருஷ்ணமூர்த்தி புறாக்களுக்குப் பரிந்து பேசுவது மாலுவுக்கு ஆச்சரியமாயிருந்தது.. டெல்லி போய் புதுசு புதுசா நிறையத் தெரிஞ்சிண்டு பேசறது போலவும் இருந்தது. வீடு பூராவும் துளியூண்டு துளியூண்டாய் இறகுத் துண்டுகளும், ஒருமாதிரி மூக்கைச் சுளிக்கிற நாற்றமும் அவளுக்கு வயிற்றைக் குமட்டியது. 'அங்கிருந்து பேசலாம்; இங்கிருந்தால் தெரியும்' என்கிற எரிச்சலில், "என்ன சொல்றே?" என்றாள்.

"இங்கே காணுமேன்னு பாத்தேன்... அங்கே வந்திடுத்தா அதுக்குள்ளாறே?" என்று கிருஷ்ணமூர்த்தி ஆச்சரியப்பட்டார்.

"உளறாதே."

"உளறலே. உண்மையைத் தான் சொன்னேன்."

"என்ன உண்மை?"

"விளக்கமா எதுவும் எனக்குச் சொல்லத் தெரியலே.. இதெல்லாம் எப்படிச் சாத்தியம்னும் தெரியலே. ஆனா, நடக்கறத்துக்கெல்லாம் ஒண்ணுக்கொண்ணு ஏதோ கண்ணுக்குத்தெரியாத இழைலே கட்டி வைச்சத் தொடர்பு இருக்கற மாதிரித் தெரியறது."

"புதிர் போடாதே. தெளிவாச் சொல்லு."

"ஃபோன்லே என்ன சொல்றது?.. அதுவும் உணர்றதைச் சொல்றதும் ஓரளவுக்குத் தான் முடியும், மாலு."

"இது சொன்னையே, கரெக்ட்.. உணர்றதைச் சொல்றதும் ஓரளவுக்குத் தான் முடியும்.. சத்தியமான வார்த்தை. இப்போதான் நீ பழைய கிருஷ்ணமூர்த்தி மாதிரி இருக்கே."

கிருஷ்ணமூர்த்தி சிரித்தார். " நா எப்பவும் ஒரே மாதிரியாத்தான் இருக்கேன்."

"அப்படியா?.. வந்து பாத்தா தெரியறது. இன்னொரு விஷயமும் உண்டு, கிருஷ்ணா! வரும் வாரம் நானும் அவரும் அங்கே வர்றோம். திடீர்னு முடிவான ப்ரோக்ராம்... அங்கே வரச்சே, உன்னைப் பாக்கறேன். சரியா?"

"வெல்கம் மாலு.. நானே கூப்பிடணும்னு இருந்தேன். நீயே சொல்லிட்டே. ஒரு வாரம் இருக்கற மாதிரி வா.. புது விஷயம். புது உலகம்."

"அட்ரஸ் சொல்லு. குறிச்சிக்கறேன்."

"ஒரு நிமிஷம்---" கிருஷ்ணமூர்த்தி தூரத்தில் அமர்ந்திருந்த ராம்பிரபுவைக் கூப்பிட்டு விஸிட்டிங் கார்டு வாங்கி, மஹாதேவ் நிவாஸ் அட்ரஸ் சொன்னார்.

"பாக்கலாம், கிருஷ்ணா! நாங்க ரெண்டு பேரும் வர்றோம். சரியா?"

"ரொம்ப சந்தோஷம். ராதை கிட்டே போன் கொடு."

"ராதை--"

"சொல்லுங்கன்னா."

"அடுத்த வாரம் மாலுவும் அவள் அகத்துக்காரரும் இங்கே வர்றாளாம்."

"கேட்டுண்டிருந்தேன்."

"நீ சுபாவைப் பாத்துக்கோ. அர்ஜூன் கிட்டேயும் சொல்லு. வேற விஷயம் ஏதாவது இருந்தா, போன்லே பேசு. சரியா?"

"சரின்னா."

"ஃபோனை வச்சுடட்டுமா?"

"சரின்னா."

(தேடல் தொடரும்)

10 comments:

திவாண்ணா said...

கதை நல்லா போயிட்டு இருக்கு!

ஜீவி said...

திவா said...
//கதை நல்லா போயிட்டு இருக்கு!//

ரொம்ப சந்தோஷம். தங்கள் ரசிப்பிற்கு மிக்க நன்றி, திவா சார்!

Shakthiprabha (Prabha Sridhar) said...

// ஏண்டா, கிருஷ்ணா, சொல்லு. பேசி, விவாதித்து, புரிஞ்சிக்கற விஷயமாடா, அது? சொல்லு.//

:)

:thumbsup:

//"பக்ஷிகள்லாம் 'த்விஜ' பிறவிகளல்லவோ?.. விரட்டாதே.. சொல்றதைக் கேளு."//

'த்விஜ பிறவிகள்'ன்னா என்னன்னு புரியலையே. விளக்குங்கள் ப்ளீஸ்.

ஜீவி said...

Shakthiprabha said...
// ஏண்டா, கிருஷ்ணா, சொல்லு. பேசி, விவாதித்து, புரிஞ்சிக்கற விஷயமாடா, அது? சொல்லு.//

:)

:thumbsup: //

:)
:thanks:

ஜீவி said...

Shakthiprabha said...

//"பக்ஷிகள்லாம் 'த்விஜ' பிறவிகளல்லவோ?.. விரட்டாதே.. சொல்றதைக் கேளு."//

//'த்விஜ பிறவிகள்'ன்னா என்னன்னு புரியலையே. விளக்குங்கள் ப்ளீஸ்.//

அடுத்த அத்தியாயத்தில் இதே கேள்வியை மாலுவிடம் ராதை கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.
கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்.

வருகைக்கும், காத்திருப்புக்கும் மிக்க நன்றி, சக்திபிரபா!

கபீரன்பன் said...

//...பக்ஷிகள் நெருங்குவது பாக்கியம். விரட்டாதே. //

சில வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் குருவிகள் கூடு கட்டிக்கொண்டிருந்த போது தினமும் அவைகளின் சத்தம் அதிகமாயிருந்தது. அப்போது வீட்டிற்கு வந்திருந்த நண்பர் "இது நல்லது சார். எங்க கிராமத்துல சொல்லுவாங்க, வீட்டுல ஏதாவது விசேஷம் நடக்கும்னு "

வேறு ஏதோ காரணத்திற்காக ஓரிரு தினங்கள் முன்புதான் இதைப்பற்றி எழுத நினைத்தேன். இன்னும் விரைவாகவே குறிப்பிடும் சந்தர்ப்பம் வந்துவிட்டது. கிருஷ்ணமூர்த்தி புறாவை கனவிலே பார்த்த மாதிரி ஆகிவிட்டது :-))

மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்.

ஜீவி said...

கபீரன்பன் said...
//...பக்ஷிகள் நெருங்குவது பாக்கியம். விரட்டாதே. //

சில வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் குருவிகள் கூடு கட்டிக்கொண்டிருந்த போது தினமும் அவைகளின் சத்தம் அதிகமாயிருந்தது. அப்போது வீட்டிற்கு வந்திருந்த நண்பர் "இது நல்லது சார். எங்க கிராமத்துல சொல்லுவாங்க, வீட்டுல ஏதாவது விசேஷம் நடக்கும்னு "

வேறு ஏதோ காரணத்திற்காக ஓரிரு தினங்கள் முன்புதான் இதைப்பற்றி எழுத நினைத்தேன். இன்னும் விரைவாகவே குறிப்பிடும் சந்தர்ப்பம் வந்துவிட்டது. கிருஷ்ணமூர்த்தி புறாவை கனவிலே பார்த்த மாதிரி ஆகிவிட்டது :-))

மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்.//

நண்பர் சொன்னது சரிதான்.

குளவிகள் கூடு கட்டினாலும் அப்படி நல்லது நடப்பது உண்டு. இந்த
சகுனக் குறிகளெல்லாம் எப்படி நடைமுறை உண்மையாகின்றன என்பது புரியாத புதிர். இதெற்கென்று எந்த அறிவியல் விளக்கமும் இல்லை என்று தான் நினைக்கிறேன்.

சில வரிகள் தாமே வந்து தம்மைத் தாமே சமைத்துக் கொள்கின்றன.
அதில் இது ஒன்று.

தங்கள் வருகைக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றி, கபீரன்ப!

கிருத்திகா ஸ்ரீதர் said...

"அது ஆம்பளையோ, பொம்பளையோ என்னைக்கு அவாளுக்குக் கல்யாணம்னு ஒண்ணு ஆயிடுச்சோ, அன்னிக்கே அவா கூண்டுக்கிளியாயிடறா.. கிரகஸ்தாளாயிடறா" கிரகஸ்தன்லேர்ந்து தானே வனப்பிரஸ்தம் வாங்கிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனா இப்பெல்லாம் அப்படி விட்டுக்கொடுக்க எந்த மனைவிக்கு மனசு வரும்???

திவாண்ணா said...

in kaliyuga vanaprastham is not allowed.

ஜீவி said...

கிருத்திகா said...

//"அது ஆம்பளையோ, பொம்பளையோ என்னைக்கு அவாளுக்குக் கல்யாணம்னு ஒண்ணு ஆயிடுச்சோ, அன்னிக்கே அவா கூண்டுக்கிளியாயிடறா.. கிரகஸ்தாளாயிடறா" கிரகஸ்தன்லேர்ந்து தானே வனப்பிரஸ்தம் வாங்கிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனா இப்பெல்லாம் அப்படி விட்டுக்கொடுக்க எந்த மனைவிக்கு மனசு வரும்???//

பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்
பிரஸ்தம், சன்யாசம் என்று மனிதனின் வாழ்வெனும் யக்ஞத்தை அந்தக் கால நிலைமைகளுக்கேற்ப நான்கு பகுதிகளாக முன்னோர்கள் பிரித்திருக்கின்றனர். இவற்றில் இரண்டாவதாகிய கிருஹஸ்தாஸ்ரமத்தில் புகுவதற்கான புனித சடங்கு தான் திருமணம்.
திருமணத்திலிருந்து அவர்களது இல்லற வாழ்வு தொடங்குகிறது. சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் நிலையும் தொடங்குகிறது. ஏனைய மூன்று ஆசிரமங்களுக்கும் ஆதரவு நல்க வேண்டிய நிலையில் இருப்பதால்,
கிருஹஸ்தாஸ்ரமமே எல்லாவற்றினும் முக்கியமாகக் கருதப்படுகிறது. அதனால் தான் அது இல்லறதர்மம் என்று அழைக்கப்படுகிறது. பிறவி கொடுத்து, கணவன்-மனைவியாக தங்களைச் சேர்த்து வைத்து இந்த தர்மத்தைக் காப்பாற்ற வாய்ப்பு கொடுத்த இறைவனை இல்லற வாழ்வில் இருந்து கொண்டு பூஜிப்பதே உத்தமமானது.

கல்கத்தாவிலிருந்து கொண்டு கடிதமா?
வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி, கிருத்திகா!

Related Posts with Thumbnails