மின் நூல்

Monday, March 23, 2009

ஆத்மாவைத் தேடி....37

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


37. அதிசய புகைப்படம்

னிம பொருட்கள் ஆராய்ச்சியாளர் சுந்திரமூர்த்தியின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாகத் தொடர்ந்து பேசலானார் உலகநாதன். "நல்ல கேள்விகள். படைப்பின் அதிசய ஆற்றலைச் சொல்லும் அழகான கேள்விகள்" என்று மீண்டும் சொன்னார் உயிரியல் அறிஞர் உலகநாதன். "இந்த மூச்சுவிடல் என்கிற காரியம் உயிரினங்கள் ஜனித்ததிலிருந்து மரிக்கும் வரை இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கிற காரியம். ஆகையால் மூச்சுவிடலான இந்த செய்கைக்கு எந்தவிதத்திலும் எந்தவிதமான குந்தகமும் நேரிட்டுவிடாதபடி இயற்கையின் அமைப்பு நேர்த்தியான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது.

"வெகுசகஜமான மொழியில் சொல்வதானால், வெளிக்காற்றுப் பகுதியிலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் காற்றை உள்மூச்சு என்றும், நுரையீரலிருந்து காற்றுப்பாதைகளில் பயணித்து வெளிப்படும் காற்றை வெளிமூச்சு எனவும் சொல்லலாம். இயல்பாக ஒருவரின் நாசிவழியே உட்சென்று நுரையீரலை நிரப்பும் காற்றை டைடல் காற்று என்பர். வெளிக்காற்று எப்படி
உட்செல்கிறது என்பதைப் பார்ப்போம்.

"உதரவிதானம் நரம்பு உந்துததால் சுருங்கும் பொழுது அது கீழிறங்கி மார்புக்கூட்டின் செங்குத்து அளவு அதிகரிக்கும். இதே நேரத்தில் வெளிப்புற விலா எலும்பு தசை சுருங்குவதால், அவை சார்ந்த விலா எலும்புகள் உயரும். இதனால் மார்புக்கூட்டின் எல்லா பக்க அளவுகளும் அதிகரிக்கும். இதனால் நுரையீரல் விரிவடையும். புளூரா குழிக்குள் இந்த நேரத்தில் காற்றில்லாத ஒரு நிலை, நுரையீரலின் விரிவடைதலைக் கூட்டும்.

"நுரையீரலின் விரிவு, வெளியுலக காற்றின் அழுத்தத்திற்கு கீழாகக் குறைகிறது. அழுத்தம் குறைந்த இடத்தைக் குறிவைத்து நாசி வழி வெளிக்காற்று இயல்பாக உட்புகுகிறது. இதுவே உள்மூச்சு. உள்மூச்சு உள்ளே சென்றதும், நுரையீரல் அதனால் நிரப்பப் படுகிறது. இப்பொழுது விலா எலும்புகளுக்கு இடையே இருக்கும் தசைகள் சுருங்கும். அதனால் விலா எலும்புகள் தாழும். உதரவிதானம் உயரும். மார்புக்கூட்டின் அளவு குறையும். இந்த நேரத்தில் நுரையீரல் சுருங்குவதால், வெளிக்காற்றின் அழுத்தத்தை விட அதிக அழுத்தம் ஏற்பட்டு, நுரையீரலிலிருந்து வெளிப்படும் காற்று வெளிமூச்சாக வெளியேறுகிறது.

"கனிமப் பொருள் அறிஞர் சுந்திரமூர்த்தி அவர்கள் கேட்ட வினாவிற்கு விடை அளித்தாயிற்று. அவர் கேட்காத ஒன்றும் இருக்கிறது. மூச்சு விடலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பது இன்னொரு தகவல். ஆண்களுக்கு உதரவிதான சுருக்கத்தால் மார்புக்கூட்டின் அளவு பெரிதாகிறது. பெண்களுக்கு விலா எலும்பு தசைகளின் சுருக்கத்தால் மார்புக்
கூட்டின் எல்லா பக்க அளவும் அதிகரிக்கிறது.

"நான் தமிழகத்தைச் சேர்ந்தவன். இந்த ஆய்வரங்கில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து ரயிலில் வரும்பொழுது என்னுடன் பயணித்த திலகர் என்றொரு அறிஞர் எனக்கு சிநேகமானார். வெறும் ரயில் சிநேகத்தைத் தாண்டிய ஒன்றாய் பலதுறைபட்ட எண்ணப் பரிமாற்றல்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்கள் உரையாடலில் குறுக்கிட்ட அவர் சொன்ன செய்தி ஒன்றையும் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தச் செய்தி தொடர்ச்சியான இந்த அமர்வில் சொல்வது பின்னால் வரும் உரைகளுக்கு தொடர்புடையதாகவும் உபயோகமாகவும் இருக்கலாம். அந்த அடிப்படையில் இந்தத் தகவலையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலில் சொல்கிறேன்.

"டாக்டர் ஜேக்கப் க்ரெளன் என்று பெயர் கொண்ட அமெரிக்க ரேடியாலாஜிஸ்டை பலருக்குத் தெரிந்திருக்கலாம். இவர் எடுத்த
ஒரு புகைப்படம் உலகப் பிரசித்திப்பெற்றது. நண்பர் திலகர் அதுபற்றிச் சொன்ன தகவலையும், டாக்டர் ஜேக்கப் கிரெளன் தமது ஆராய்ச்சி ஒன்றிற்காக எடுத்த அந்தப் புகைப்படத்தைப் பற்றியும் சொல்கிறேன்.

"தன்னைத் தேடிவந்த நண்பர் ஒருவரை தமது லாப்பில் இருந்த ஒரு நாற்காலியில் அமர வைத்தார் டாக்டர் ஜேக்கப். கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு மேலாக அவருடன் உரையாடிவிட்டு அவர் சென்ற பிறகு, நண்பர் இத்தனை நேரம் உட்கார்ந்திருந்த காலி நாற்காலியை இன்ஃப்ரா ரெட் போட்டோ கிராஃபி மூலம் படம் பிடித்தார்.

"என்ன ஆச்சரியம்! எடுத்த படத்தில் ஒருவர் அமர்ந்திருக்கும் வாகில் நாற்காலியை அடைத்துக் கொண்டு அடர்த்தியாக புகைபோல் வெண்மையாய் விழுந்திருக்கிறது. விஷயம் என்னவென்றால், அவர் நண்பர் நாற்காலியில்
உட்கார்ந்திருந்த நேரத்தில் அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட மின்கதிர் அலைகள் நாற்காலியில் படர்ந்து தேங்கிவிட்டது.

"இந்த இன்ஃப்ரா ரெட் போட்டோ, பிலடெல்பியா டாக்டர் ஜேக்கப் கிரெளனின் தொடர்ந்த ஆராய்ச்சியில் பிற்காலத்தில் பெரும் பங்கு கொண்டது. இறுதியில் இறந்துபட்ட பிறகும் ஒரு மனிதனின் மின்கதிர் அலைகள், அவன் உண்டு உறங்கி உயிர்சுமந்து உலவி வாழ்ந்த வீட்டில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அழியாமல் இருக்கும் என்கிற முடிவுக்கு வருகிறார் டாக்டர்
ஜேக்கப்."

உயிரியல் அறிஞர் உலகநாதன் பேசி முடித்ததும், நெடுநேரம் அவை மொத்தமும் உரைந்து போனாற்போல் அமைதி காத்தது. அந்த நீண்ட அமைதியைக் கலைப்பது போல், கிருஷ்ணமூர்த்தி மேடையேறி, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இன்னும் ஆச்சரியமான பல தகவல்களைக் கொண்டு இந்த உரையின் தொடர்ச்சி தொடரும் என்று அறிவுறுத்தியதும், லேசான சலசலப்புடன் அவை கலையத் தொடங்கியது.

(தேடல் தொடரும்)

10 comments:

Kavinaya said...

அறியாத செய்திகளை சுவாரஸ்யமாக அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

//உட்கார்ந்திருந்த நேரத்தில் அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட மின்கதிர் அலைகள் நாற்காலியில் படர்ந்து தேங்கிவிட்டது.//

இதுவும்தான்.

வடுவூர் குமார் said...

இத்தனை நாள் மூச்சுவிட்டுக்கொண்டிருக்கேன், இப்பதிவை படிக்கும் வரை அது எப்படி நடக்கிறது என்று யோசிக்காமலே இருந்திருக்கேன்.
நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

"மூச்சு விடலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பது இன்னொரு தகவல். ஆண்களுக்கு உதரவிதான சுருக்கத்தால் மார்புக்கூட்டின் அளவு பெரிதாகிறது. பெண்களுக்கு விலா எலும்பு தசைகளின் சுருக்கத்தால் மார்புக்
கூட்டின் எல்லா பக்க அளவும் அதிகரிக்கிறது."
இதுவரை அறியாத புதிய செய்தி....மிக்க நன்றி... அப்புறம் அந்த மின்கதிர் அலைகள் பற்றி.. இதன் தாக்கத்தைதானே நாம் ஆரா என்கிறோம். அதை கணக்கில் கொண்டு மருத்துவம் செய்யும் முறைகள் கூட உண்டு.

Anonymous said...

ஒரு மனிதனின் மின் கதிர் அலைகள் அவன் இறந்த பிறகும் சில காலம் வரை அங்கேயே இருக்கும் என்பது புதிய தகவல். மனிதனின் மரணத்துக்கு பிறகு சில காலம் வரை அவனது முடியும் நகமும் கூட வளர்ந்து கொண்டிருக்கும் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்ப்ட்ட ஒன்று.

அதே போல, ஒரு மனிதன் இறந்த பிறகு அவனது ஆத்மா அவனது வீட்டை சுற்றி வரும் என்றும் அதை நல்லவிதமாக அதனுடைய 'நிரந்தர உறைவிடத்துக்கு' அனுப்ப அவன் இறந்த பதினோராம் நாள் தகுந்த மந்திரங்களை கூறி அனுப்புவது அந்தண சமூகத்தில் ஒரு வழக்கம் உள்ளது. மனிதன் இறந்து ஒரு வருடம் வரை அந்த ஆத்மா ஒரு மிக நெடிய பயணத்தை மேற்கொள்கிறது என்று கருட புராணம் கூறுகிறது. அவன் செய்த பாவ புண்ணியங்களை பொருத்து அந்த பயணத்தின் போது பல்வேறு இடையூறுகளை அந்த ஆத்மா எதிர்கொள்கிறதாம். கூகிளில் ஒரு முறை 'Garuda Puran' என்று அடித்து அதை படிக்க ஆரம்பித்தேன். மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. பிறகுதான் தெரிந்தது இதை பொதுவாக வீட்டில் படிக்க மாட்டார்கள், யாராவது இறந்த 10 நாட்களுக்குள் தான் படிப்பார்கள் என்று.

எத்தனையோ விஷயங்களை 'நவீன விஞ்ஞானத்தினால்' விளக்க முடியவில்லை. ஆனால் நமது வேதங்களிலும் புராணங்களிலும் மிக துல்லியமாக இவற்றை பற்றி உள்ளன. நமது சிற்றறிவுக்கு தான் இவற்றை கிரகித்து கொள்ள முடியவில்லை. தொடர் அருமையாக சென்று கொண்டிருக்கின்றது. வாழ்த்துக்கள்.

ஜீவி said...

கவிநயா said...

//உட்கார்ந்திருந்த நேரத்தில் அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட மின்கதிர் அலைகள் நாற்காலியில் படர்ந்து தேங்கிவிட்டது.//

இதுவும்தான்.

படித்த செய்திகள் நினைவில் படிந்து வெளிப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.
வருகைக்கு நன்றி, கவிநயா!

ஜீவி said...

வடுவூர் குமார் said...
//இத்தனை நாள் மூச்சுவிட்டுக்கொண்டிருக்கேன், இப்பதிவை படிக்கும் வரை அது எப்படி நடக்கிறது என்று யோசிக்காமலே இருந்திருக்கேன்.
நன்றாக சொல்லியுள்ளீர்கள்.//

வாருங்கள், வ.குமார்!
தாங்கள் இந்தத் தொடரைப் படித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

ஜீவி said...

கிருத்திகா said...
//அப்புறம் அந்த மின்கதிர் அலைகள் பற்றி.. இதன் தாக்கத்தைதானே நாம் ஆரா என்கிறோம். அதை கணக்கில் கொண்டு மருத்துவம் செய்யும் முறைகள் கூட உண்டு.//

அடேடே! இதுபற்றி நிறைய தகவல்கள் கைவசம் வைத்திருக்கிறீர்கள், போலிருக்கிறதே.. உங்களிடமிருந்து புதிய செய்திகளைக் கேட்க ஆவலாக இருக்கிறது.. அவையினரிடம் பகிர்ந்து கொள்ளலாமே?..
எதிர்பார்ப்புகளுடன், வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி, கிருத்திகா!

ஜீவி said...

madrasthamizhan said...
//ஒரு மனிதனின் மின் கதிர் அலைகள் அவன் இறந்த பிறகும் சில காலம் வரை அங்கேயே இருக்கும் என்பது புதிய தகவல்.//

இது பற்றி படித்தது மட்டுமே. இன்னும் ஆழப்படித்து அறிய வேண்டியிருக்கிறது.

//எத்தனையோ விஷயங்களை 'நவீன விஞ்ஞானத்தினால்' விளக்க முடியவில்லை. ஆனால் நமது வேதங்களிலும் புராணங்களிலும் மிக துல்லியமாக இவற்றை பற்றி உள்ளன. நமது சிற்றறிவுக்கு தான் இவற்றை கிரகித்து கொள்ள முடியவில்லை. தொடர் அருமையாக சென்று கொண்டிருக்கின்றது. வாழ்த்துக்கள்.//

நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.. ரசிப்பிற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள், சென்னைத் தமிழரே!

Shakthiprabha (Prabha Sridhar) said...

//"இந்த இன்ஃப்ரா ரெட் போட்டோ, பிலடெல்பியா டாக்டர் ஜேக்கப் கிரெளனின் தொடர்ந்த ஆராய்ச்சியில் பிற்காலத்தில் பெரும் பங்கு கொண்டது. இறுதியில் இறந்துபட்ட பிறகும் ஒரு மனிதனின் மின்கதிர் அலைகள், அவன் உண்டு உறங்கி உயிர்சுமந்து உலவி வாழ்ந்த வீட்டில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அழியாமல் இருக்கும் என்கிற முடிவுக்கு வருகிறார் டாக்டர்
ஜேக்கப்." //

தகவல் புதிது. மிகவும் நன்றி. என் நண்பர் ஒருவர் பேச்சு வாக்கில் சொன்ன செய்தி. "ஒரு மனிதன் 20 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்த வீட்டிலிருந்து வேறு வீட்டுக்கு மாற்றலாகிச் செல்கிறான். ஆனாலும் பல நாட்களுக்கு அங்கு அவரது உருவத்தையொத்த ஏதோ ஒரு வீச்சு, அங்கு இருந்தது போல் பலர் உணர்ந்தனர்" என எங்கோ படித்ததைக் கூறினார். நீங்கள் எழுதியதை வைத்து பார்க்கும் போது, I get the relation.

ஜீவி said...

Shakthiprabha said...

//தகவல் புதிது. மிகவும் நன்றி. என் நண்பர் ஒருவர் பேச்சு வாக்கில் சொன்ன செய்தி. "ஒரு மனிதன் 20 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்த வீட்டிலிருந்து வேறு வீட்டுக்கு மாற்றலாகிச் செல்கிறான். ஆனாலும் பல நாட்களுக்கு அங்கு அவரது உருவத்தையொத்த ஏதோ ஒரு வீச்சு, அங்கு இருந்தது போல் பலர் உணர்ந்தனர்" என எங்கோ படித்ததைக் கூறினார். நீங்கள் எழுதியதை வைத்து பார்க்கும் போது, I get the relation.//

கண்ணுக்குத் தெரிகின்ற ஸ்தூல சரீரத்தைச் சுற்றி சூட்சும சரீரம் ஒன்றும் இருப்பதாக யோக சாத்திரத்தில் சொல்லப் படுகிறது.ஸ்தூல் சரீரத்தையும் சூட்சும சரீரத்தையும் தனித் தனியாகப் பிரிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். யோகப் பயிற்சிகளின் மூலம் சூட்சும
சரீரத்தை வெளிக்கொணர்ந்து உலா விட்டவர்களும் உண்டு!..சூட்சும சரீரத்தை வெளிக்கொண்டு, ஸ்தூல சரீரத்தை வெறும் கட்டையாகக் கிடத்தி இன்னொரு ஸ்தூல சரீரத்தினுள் கூடு விட்டுக் கூடு பாயந்த அற்புதங்களும் பழைய நூல்கள் பலவற்றில் காணக் கிடக்கின்றன.

பிரபஞ்சத்தின் கூறான மனிதனிள்ளும்
பிரபஞ்ச நிறைவான காந்த சக்தி படிந்துள்ளது. உடலினுள் படிந்திருக்கும்
காந்த சக்திக்கும், பிரபஞ்ச காந்த சக்திக்கும் தொடர்பு உண்டு. மூளையின் தூண்டலால் நரம்பு மண்டலம் இயக்குவது இப்படிப்பட்ட மின்காந்த சக்தியின் வெளிப்பாடே.

எண்ணங்கள் மகா வலிமை வாய்ந்தவை. 40 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நமக்கு மிகவும் பழக்கப்பட்ட பிடித்துப்போன வீட்டில் மூளை செல்களில் தேங்கிப்போன அனுபவ சாரத்தில் தோய்ந்து போய் மீண்டும் வாழலாம். அந்த வீடு இப்பொழுது இருக்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் பிரத்யேகமாக ஏதாவது வாசனை இருப்பின் அதுகூட நியூரோன் செல்களில் படிந்து போய் இப்பொழுது அந்த வாசனையை மீட்டு எடுக்கலாம்.

அதிர்ச்சி போல அனுபவமான, பிறவி டுத்து முதலாகத் துய்த்த, பிரமித்த, பரவசப்படுத்திய எதுவும் மூளை செல்களில் படிந்து போய்விடும். ஆற்றல் கொண்டவர்களுக்கு முந்தைய பிறவியில் வாழ்ந்த வாழ்க்கை கூட நினைவில் கொண்டு வர முடியும்
என்கிறார்கள். ஆனால் அது முந்தையப் பிறவியாகத் தெரியாது. எப்போதோ நினைவில் படிந்த நிழலாகத் தெரியும். இதைத் தான் 'நினைவுகள் அழிவதில்லை' என்கிறார்கள். சிறந்த எழுத்தாளர்களுக்கு
பிறர் அனுபவத்தைக் கூடத் தன் அனுபவமாக விவரித்து எழுதும் ஆற்றல் உண்டு.

--இவற்றையெல்லாம் பற்றி தனி ஓர் அமர்வில் விரிவாகப் பார்க்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, சக்திபிரபா!

Related Posts with Thumbnails