மின் நூல்

Friday, March 6, 2009

ஆத்மாவைத் தேடி....36

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


36. டெல்லிப் புறாக்கள்


ண்ணு, ரெண்டு, மூணு என்று மனசுக்குள் விசில் ஒலியை எண்ணிக் கொண்டே வந்து ஐந்து ஆனதும் சமையலறை நுழைந்து குக்கரை நிறுத்திவிட்டு வந்தாள் ராதை.

அவள் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்து கொண்டிருந்தது. மாலு அதைப் பார்த்துவிட்டு,"என்ன, ராதை! உனக்குள்ளேயே சிரிச்சிக்கற மாதிரி இருக்கு?" என்றாள்.

"ஆமாக்கா.. நானே அதைப்பத்தி நெனைச்சிண்டே இருந்தேன். அது எப்படித்தான் தெரிஞ்சதோ, டெல்லிலேந்து லால்குடிக்குப் போன் பண்ணி அவர் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்! அரியலூர், டெல்லி, லால்குடி... ஒருத்தர் நினைப்பு கூட ஊர் ஊரா சுத்துமா, அக்கா?"

ஆய்ந்த கீரையை முறத்தில் ஒதுக்கி வைத்து விட்டு நிமிர்ந்தாள் மாலு.
"நீ நெனச்சு தான் கிருஷ்ணா சொல்லணுமா? ஏன் அவனே நெனைச்சுச் சொல்லியிருக்கக்கூடாதா?"

"அப்படி கூட இருக்கலாம். அதே நேரத்திலே அதையே நானும் நெனைசிண்டிருந்தேனே, அதைச் சொல்றேன்க்கா..அத்திம்பேர் குளிச்சிட்டு ஜபம் பண்ணிட்டு வரட்டும்; அவரை விட்டுச் சொல்லச் சொல்லலாம்னு நெனைச்சிண்டிருந்தேன். அதுக்குள்ளே டெல்லிலேந்து லால்குடிக்குப் பேசி, சுலோ நம்மகிட்டே பேசியும் ஆச்சு."

"அம்மா... கத்திரிக்காய் குழம்புக்குத்தானே அலம்பி வைச்சிருக்கேள்?.. நான் நறுக்கட்டுமா?" என்றபடியே அரிவாள்மணையோடு சுபா ஹாலுக்கு வந்தாள்.

"நல்லவேலை செஞ்சே, சுபா! மொதல்லே அந்த அரிவாள்மணையை இங்கே கொண்டு வந்து வை" என்று கண்டிப்புடன் சொன்னாள் மாலு. "இந்த நறுக்கறது, வெட்டறதுங்கற சமாச்சாரமெல்லாம் கொஞ்ச காலத்துக்கு வைச்சிக்காதே.. ஆகாது. அதுனாலே தான் சொல்றேன். வெண்ணைப் பானையை உருட்ட ஒரு கிருஷ்ணனைப்பெத்துக் கொடு. அது போதும்."
சுபா வெட்கத்துடன் தலைகுனிய, "ராதை! சட்டுனு குழந்தையோட தாத்தா பேரே வாய்லே வந்திடுத்து, பாத்தையா?.. நிச்சயம் ஆம்பளைப் பயல் தான்" என்றாள் மாலு.

"உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும், அக்கா! அதுசரி, இந்தக் காலத்லே ஏது வெண்ணைப்பானை?.. ஆவின் வெண்ணை பாக்கெட் தான் திருச்சிலேந்து வாங்கிண்டு வந்தது பிரிட்ஜ்லே இருக்கு" என்று சிரித்தாள் ராதை.

"வெண்ணைன்னதும் ஞாபகம் வந்தது. வெண்ணை காய்ச்சணும்."


"நான் போய் அதைச் செய்யறேம்மா.. நீங்க பேசிண்டிருங்கோ.." என்று திரும்பினாள் சுபா. "இந்தா, சுபா! ரெண்டு கொத்து முருங்கை இலையும் எடுத்து வைச்சுக்கோ..மறந்திடப் போறது" என்று மாலு முருங்கை இலையை எடுத்துக் கொடுத்தாள்.


சிவராமன் ஜபம் முடித்து பூஜை அறையிலிருந்து ஹாலுக்கு வந்தார்.

"அத்திம்பேர்! நான் கிளம்பட்டுமா?" என்றபடி காலை டிபன் முடித்து ஆபிஸிற்க்கு கிளம்ப தயாராக அர்ஜூன் ஹாலுக்கு வந்தான்.

"சரி, அர்ஜூன். என்னன்னவோ கதையெல்லாம் பேசிண்டு ராத்திரி தூங்கறத்துக்கு ரொம்ப நேரம் ஆயிடுத்து, இல்லையா?.. லால்குடியிலேந்து சுபாவோட அப்பா-அம்மாபேசினா. நீ அசந்து தூங்கிண்டு இருந்தே.. அதான் டிஸ்டர்ப் பண்ணலே.."

"அம்மா சொன்னா அத்திம்பேர். அப்பாவும் அவா கிட்டே பேசிட்டாராம். நான் ஆபிஸூக்குப் போய் சந்தோஷ சமாச்சாரத்தை அவா கிட்டே பகிர்ந்திக்கறேன்."

"கரெக்ட், அர்ஜூன். சுபாவைப் பாத்துக்கோ.. நாங்களும் டெல்லிலே அப்பாவைப் பாக்கறோம். அங்கேயிருந்து பேசறோம்."

"சரி, அத்திம்பேர்!.. நானும் ஸ்டேஷனுக்கு வந்திடுவேன். உங்களைப் பாக்கறேன்."

"சரி. உனக்கு நேரமாச்சு. கிளம்பு"ஹால் பென்ஞ்சில் இருந்த சின்னத் தோல்ப்பையை எடுத்துக்கொண்டு அர்ஜுன் கிளம்பினான். அர்ஜூன் நல்ல உயரம். வாட்டசாட்டமாக நெடுநெடுவென வளர்ந்திருந்தான். வெளி நடைபாதையைத் தாண்டும் பொழுது தலைகுனிந்து தான் போக வேண்டியிருந்தது. பக்கத்திலேயே ஸ்டேஷன். பொடிநடையில் போய்விடலாம்.

"சாயந்திரம் கிளம்பிடுவோம், இல்லையா? ஒருவாரப் பழக்கம் தான். ஆனா எங்கே போச்சுங்களோ, காணோமே பாக்கணுன்னு இருக்கு" என்று சொல்லிக்கொண்டே கீரை ஆய்ந்த இடத்தையும் முற்றத்தையும் சுத்தம் பண்ணிவிட்டு கைலம்பித் துடைத்துக்கொண்டு மாலு ஹாலுக்கு வந்தாள்.

"யாரைச் சொல்றே?"

"அதான்னா.. அந்த ஜோடிப்புறாகளைத் தான். கழுத்திலே வளையத்தோடு சாம்பல் நிறத்லே என்ன அழகாக இருந்ததுகள். ரெண்டு நாளா அதுகளை இந்தப் பக்கமே காணோமேன்னு இருக்கு. எங்கே போச்சோன்னு பாவமா இருக்கு.. சலிச்சிண்டு நா திட்டினதுதான் புரிஞ்சிண்டு இங்கே வருவானேன்னு போயிடுத்தோன்னு குத்த உணர்வாவும் இருக்கு."

கலகலவென்று சிரித்தார் சிவராமன். "சொன்னா ஆச்சரியப்படுவே நீ!
நீ டெல்லி போகப்போறேன்னு தெரிஞ்சிண்டு, உன்னை அங்கே ரிஸீவ் பண்ண உனக்கு முன்னாடியே அதுகள் டெல்லி போயாச்சு!"

மாலு கண்களை அகல விரித்தாள். "என்னன்னா சொல்றேள்?"

"ஆமாம், மாலு! அந்த ரெண்டு புறாவும் டெல்லிலேந்து தான் இங்கே வந்ததாம். வருஷாவருஷம் இந்த ஸீஸன்லே வந்து ரெண்டு வாரத்லே திரும்பிடுமாம். இப்படி ரெண்டு மூணு வருஷமா நடக்கறதாம்."

"ஹிண்டுலே படிச்சேளா?"

"இல்லே. சம்பந்தப்பட்டவா சொல்லித் தெரிஞ்சது."

"ஆச்சரியமான்னா இருக்கு.. பறவைகள்லாம் வேடந்தாங்கலுக்கு வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்போ அரியலூருக்கும் அப்படி ஒரு மவுசு வந்திடுச்சா?"

"வேடந்தாங்கல் விஷயம் வேறே மாலு! அது உலகம் சுற்றும் திருவிழா! ஆனா இந்த புறாக்கள் ரெண்டும் டெல்லிலேந்து வர்றதாம். காலம்பற வாக்கிங் போறச்சே தெரிஞ்சது"

"ராதை! சுபா! அத்திம்பேர் ஒரு நியூஸோட வந்திருக்கார், பாரு. வாங்கோ இங்கே." என்று உள்பக்கம் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

"அப்படியா?.." என்று ஹாலுக்கு ராதை வர, தொடர்ந்து சுபா.

"இப்போ சொல்லுங்கன்னா.. சுவாரஸ்யம்மான ஒண்ணுன்னா, அதை ரெண்டு மூணு பேர் சேர்ந்து ஒரே சமயத்லே கேட்டா அது இன்னும் சந்தோஷம். நீங்க கேட்ட நியூஸை நீங்களே சொன்னாத்தான் அது சரியா இருக்கும். இப்போ சொல்லுங்கோ."

"என்ன மாலு.. கேட்ட செய்திக்கு நீயே சுவாரஸ்யத்தைச் சேர்த்திடுவே, போலேயிருக்கு."

"நீங்க ஆரம்பிக்கறச்சேயே தெரிஞ்சிடுத்து. உங்க கதைங்க மாதிரி நிச்சயம் இதுவும் சுவாரஸ்யமாத்தான் இருக்கும்னு."

"ஓ.. கண்ணு மூக்கு வைக்காம கேட்டதை அப்படியே சொல்லிடறேன்..."

"கண்ணு மூக்கு வைச்சாலும் சரியே.. எனக்கு சுவாரஸ்யமா இருக்கணும். அவ்வளவுதான்."

ராதை சிரித்து விட்டாள். 'நல்ல தம்பதிகள்.. வாழ்க்கையை எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி, அணுஅணுவா ரசிக்கற தம்பதிகள்' என்று நினைத்துக் கொண்டாள்.

"சொல்லட்டுமா.." என்று ஆரம்பித்தார் சிவராமன்.

(தேடல் தொடரும்)

8 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

////"ராதை! சட்டுனு குழந்தையோட தாத்தா பேரே வாய்லே வந்திடுத்து, பாத்தையா?.. நிச்சயம் ஆம்பளைப் பயல் தான்" என்றாள் மாலு.////

:)

//"சொல்லட்டுமா.." என்று ஆரம்பித்தார் சிவராமன்.//

ராதை, சுபா, மாலுவுடன் நாங்களும் கேட்க ஆவலாய்.

Kavinaya said...

// "இந்தா, சுபா! ரெண்டு கொத்து முருங்கை இலையும் எடுத்து வைச்சுக்கோ..மறந்திடப் போறது"//

ஒவ்வொரு விஷயமும் உன்னிப்பா கவனிச்சு விவரமா எழுதறீங்க :) அம்மா வீட்ல செய்வாங்க. இங்க முருங்கை இலைக்கு எங்கே போறது? :)

//"கண்ணு மூக்கு வைச்சாலும் சரியே.. எனக்கு சுவாரஸ்யமா இருக்கணும். அவ்வளவுதான்."//

:) நீங்களும் அப்படியே சொல்லுங்க ஐயா :)

ஜீவி said...

Shakthiprabha said...
////"ராதை! சட்டுனு குழந்தையோட தாத்தா பேரே வாய்லே வந்திடுத்து, பாத்தையா?.. நிச்சயம் ஆம்பளைப் பயல் தான்" என்றாள் மாலு.////

:)

கட்டியங்கூறல் என்பது இது தானோ?

ஜீவி said...

Shakthiprabha said...

//"சொல்லட்டுமா.." என்று ஆரம்பித்தார் சிவராமன்.//

ராதை, சுபா, மாலுவுடன் நாங்களும் கேட்க ஆவலாய்.

காத்திருப்புக்கு நன்றி, சக்திபிரபா!

ஜீவி said...

கவிநயா said...
// "இந்தா, சுபா! ரெண்டு கொத்து முருங்கை இலையும் எடுத்து வைச்சுக்கோ..மறந்திடப் போறது"//

//ஒவ்வொரு விஷயமும் உன்னிப்பா கவனிச்சு விவரமா எழுதறீங்க :) அம்மா வீட்ல செய்வாங்க. இங்க முருங்கை இலைக்கு எங்கே போறது? :)//

நீங்களும் வெகு உன்னிப்பாக கவனித்திருக்கிறீர்கள்! இந்த இடத்தில் உங்கள் அம்மாவை நினைவு கொண்டதும் அருமை!
ஒரு செயலை நினைக்கும் பொழுதே அந்த செயலைச் செய்து வழிகாட்டிய பெரியவர்களின் நினைவு வருகிறது, பாருங்கள்..

மொத்த வாழ்க்கையும் வழிவழியாக வழிகாட்டி அந்த வழியில் கால் பதித்து நம்மை நடக்க வைக்கும் பாடமாகத் தான் தெரிகிறது.

ரசனையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, கவிநயா!

ஜீவி said...

கவிநயா said...

//"கண்ணு மூக்கு வைச்சாலும் சரியே.. எனக்கு சுவாரஸ்யமா இருக்கணும். அவ்வளவுதான்."//

:) நீங்களும் அப்படியே சொல்லுங்க ஐயா :)

சிவராமன் எழுத்தாளர். (இடையில் பட்டும் படாமலும் அப்படியென்று ஒரு வார்த்தையை நுழைத்தாயிற்று)சுவாரஸ்யமாகச் சொல்வதற்கு கேட்க வேண்டுமா, என்ன?

அவர் சொல்லி விடலாம். நீங்கள் தான் சுவாரஸ்யத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும், கவிநயா!

கிருத்திகா ஸ்ரீதர் said...

சுவாரஸ்யமா இருக்கு...

ஜீவி said...

கிருத்திகா said...
//சுவாரஸ்யமா இருக்கு...//

சுவாரஸ்யமா இருப்பது குறித்து எழுத்தாளருக்கு சந்தோஷமா இருக்கு.
தொடர்ந்து வாருங்கள், கிருத்திகா!

Related Posts with Thumbnails