மின் நூல்

Friday, May 8, 2009

ஆத்மாவைத் தேடி....42

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

42. வாழ்க்கைப் பட்ட கதை


பெங்களூர் குளிர் மிரட்டாமல் உடலுக்கு இதமாக இருந்தது.


வாசல் பக்கம் சிவராமன் வந்த பொழுது ஈஸிச்சேரில் சாய்ந்தபடி அப்பா பஞ்சாங்கத்தில் ஆழ்ந்திருந்தார். ஸ்டூலில் அமர்ந்து ஷூ-ராக்கிலிருந்து ஷூவை எடுக்கையில் வெளிப்பக்கம் நிழல் தட்டிய மாதிரி இருந்தது.

"மாமி---"

சாக்ஸை மாட்டிக்கொள்வதில் கவனமாயிருந்த சிவராமன் குரல் கேட்டு தலை நிமிர்ந்தான். திகைத்தான். பாவாடை--தாவணிப் போர்த்தி ஓர் அழகு மயில் ஒயிலாகத் தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.

"மாமி இருக்காங்களா?" -- இரண்டே வார்த்தைகள். அதைச் சொல்லி முடிப்பதற்குள் குங்குமமாய் சிவந்த முகத்தில் நாணம் அப்பிக்கொண்டது.

"நீங்கள்?.."

"பக்கத்து வீடு.. புதுசா குடித்தனம் வந்திருக்கோம்." படபடப்பு வெளிப்படையாக வெளியே தெரிந்தது.

"ஓ" என்று உதட்டைக் குவித்த சிவராமன், "உள்ளே வாருங்கள்" என்று அந்தப் பெண்ணிடம் சொல்லி விட்டு உள்பக்கம் பார்த்து "அம்மா!" என்று குரல் கொடுத்தான்.

கையைத் துடைத்தபடி சமையலறையிலிருந்து வெளிவந்த அம்மா, வாசலில் நின்ற பெண்ணைப் பார்த்து முகம் மலர்ந்தார். "வாம்மா, மாலு! வா!.."

வந்த பெண்ணின் பெயர் மாலு என்று தெரிந்தது. சிவராமான் முதன் முதலாய் மாலுவைப் பார்த்தது அப்பொழுது தான்.

அடுத்த தடவை பார்த்தது நவராத்திரியின் ஒன்பது தினங்களில் ஒரு தினம். அன்று கொஞ்சம் லேட்டாய்த்தான் விமானதளத்திலிருந்து திரும்பியிருந்தான்.
வீட்டு உள்பக்கம் நுழைகையிலேயே உள்ளடங்கியிருந்த ஹால் பக்கமிருந்து கர்ணாமிர்தமாக சுருதி சுத்தமாக வந்த குரல் கட்டிப்போட்ட மாதிரி வாசல் சோபாவில் அவனை உட்கார்த்தி வைத்து விட்டது. ஷூவைக் கழட்டினால், அந்த சிறு சப்தம் கூட நாத ஒலியில் நீக்கமற நிறைந்திருந்த அந்த சூழ்நிலைக்கு அபச்சாரமாய் போய்விடுமோ என்கிற உணர்வில் தன்னை மறந்து உட்கார்ந்து விட்டான் சிவராமன்.

நீயே மூவுலகுக்கு ஆதாரம்
நீயே சிவாகம் மந்திர சாரம்


-என்று உணர்வைக் குழைத்த குரலில் உள்ளிருந்து குரல் வந்தது. பாபநாசன் சிவனின் வார்த்தை வரிகளுக்கு உயிர் கொடுத்த உச்சரிப்பு. அதுவும்,

நீயே வாழ்வில் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் சுமுகா, ஓம்கார
கஜவதனா கருணா, சதனா


--என்று சரணத்தில் தன்னையே சமர்ப்பிக்கும் உணர்வு அடிநாதமாய் ஸ்ரீரஞ்சனியில் குழைந்து சங்கமமாகுகையில் சிவராமன் அந்த தெய்வீகக் குரலில் தன்னை மறந்தான்.

உள்ளே அம்மாவுக்கும் உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியிருக்க வேண்டும். "மாலு! நன்னா பாடறே! என்னைக்கும் இல்லாத சந்தோஷமா இன்னைக்கு இருக்கு.. இன்னொரு பாட்டுப் பாடம்மா.." என்று கேட்டுக் கொண்டார்.

உள்ளே ஒரு நீண்ட மெளனம். அந்த ஒரு வினாடி கூட வெளியே சிவராமனுக்கு நீண்ட இடைவெளியாய்த் தெரிந்தது. அடுத்து என்ன பாட்டு என்று அவன் ஆவலாய் எதிர்பார்க்கையில், அருணாசலக் கவிராயர் அழகு தமிழில் கேள்விக் கணைகளோடு நின்றார்.

ஏன் பள்ளி கொண்டீர் ஐயா, ஸ்ரீரங்கநாதா--- நீர்
ஏன் பள்ளி கோண்டீர் ஐயா?


-- என்று குறும்பும், குழைவும், குதூகலமும், சந்தேகமும் ஒன்றாய்க் கலந்து ஓரிழையில் பயணிக்கிற சாதுர்யமாய் மாலு ஆரம்பித்த பொழுது சிவராமனுக்கு நிலைகொள்ளவில்லை. தேர்ந்தெடுத்த மோகனம், மோகமாய் தவழ்ந்து குழைந்து சுருதி பிசகாமல் சுந்தரமாய் திகைத்து நின்றது.

சிவராமன் நினைவில் வில்லேந்திய ஸ்ரீராமன் தடந்தோள் புடைத்து மதுராந்தகம் ஏரிகாத்த ராமனாய் மந்தகாசமாய் நின்றான். கொண்டல் மணிவண்ணனாய் கோசலை குமாரனாய் நின்றான். ஜானகிமணாளன் ஜெயஜெய கோஷம் சுற்றிலும் ஒலிக்க நின்றான். வழிநீண்ட வனாந்தரத்தில், வெளிர்நீல வெட்ட வெளியில் இலக்கற்ற பயணமாய் எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போவது போலிருந்தது.

பாட்டு எப்பொழுது முடிந்தது என்று தெரியவில்லை. மாலுவின் சாரீரம் அலைஅலையாய் எழும்பி நெஞ்சின் உணர்வுகளை மீட்டி விட்ட கனவுலகில்
சஞ்சரித்துக் கொண்டிருந்தான் சிவராமன்.

மாலுவுக்கு வெற்றிலைப் பாக்கு கொடுத்து அவளை வழியனுப்ப அவளுடன் வாசலுக்கு வந்த அம்மா, சிவராமன் சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்து,
"அடேடே.. நீ எப்போடா வந்தே?" என்றாள்.

"கொஞ்ச நேரத்துக்குய் முன்னாடி தான் அம்மா.. சரியாச் சொல்லணும்னா, மாலு பாடிகிட்டிருக்கறத்தே..." என்றான் சிவராமன்.

'மாலு' என்று சொந்தத்தில் நெருங்கிவந்து சொன்ன மாதிரி சிவராமன் தன் பெயரைச் சொன்ன பொழுது மாலுவுக்கு உடம்பு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.

"அப்போ மாலு பாடினதை நீ கேட்டேன்னு சொல்லு."

"ஆமாம்மா.. அந்த பாக்கியம் பெற்றேன். அற்புதமா பாடறாங்க.." என்று சிவராமன் தலை நிமிர, வெட்கத்தில் தலை கவிழ்த்துக் கொண்டாள் மாலு.

சிற்றாடைப் பருவம்; சிரித்த சிவந்த உதடுகள்; ஓவல் முகம்; அதற்கேற்ற அளவெடுத மாதிரி குவிந்த நெற்றி; அந்த நெற்றியில் அலட்சியமாக விட்ட மாதிரி எந்நேரமும் பறந்த இரண்டு மூன்று குழல் கற்றைகள்.

"அம்மா, நான் அப்புறம் வரேன்.." என்று பொதுவாகச் சொல்லிக் கொண்டு மாலு விடுவிடுவென்று போய்விட்டாள்.

அடிநாதமாய் தனது தெய்வீகக்குரலை சித்தத்தில் மாலு விட்டு விட்டுப் போன உணர்வுதான் சிவராமனுக்கு இருந்தது.

நாளாவட்டத்தில் தன் மனத்தைச் சுண்டியிழுக்கிற இந்த இசை போதை ஓர் அம்சமாக மாலுவிடம் படிந்து இருப்பதை சிவராமன் உணர்ந்தான். சிவராமனின் நடத்தையில் காணப்பட்ட மேலான நாகரிகமும் பண்பாடும் மாலுவை மிகவும் கவர்ந்தது.

வாழ்க்கையில் ஒவ்வொரு திருப்பமும் சிவராமனைப் பொருத்தமட்டில் தானே கதவைத் தட்டிக்கொண்டு வந்தது தான். இது வேண்டும், அது வேண்டுமென்று அதீத ஆசை கொண்டான் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஈஸ்வர சமர்ப்பணமான இயல்பான வாழ்க்கை; அவன் ஆசைப்பட்டு லட்சிய வெறியுடன் வசதியில்லாவிட்டாலும் சாதிகக வேண்டுமென்று பிரயாசைப் பட்டுப் படித்தது பொறியியல் படிப்பு ஒன்றுதான். அவன் ஆசைப்பட்டது கிடைத்ததுமே வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்ட திருப்தி ஏற்பட்டுவிட்டது. காய்ந்து கிடந்த நிலம் குளமாகிப் போன திருப்தி.

எம்.இ., டிஸ்டிங்ஷனில் முடித்ததும்--- ஏரோநாட்டிக்ஸில் எம்.இ., அதுவும் எம்.ஐ.டி.யிலிருந்து என்றதும்-- H.A.L--ல்லின் கதவு ராஜமரியாதை காட்டிப் பறக்கத் திறந்து கொண்டது. கை நிறைய சம்பளம், கார் எல்லாம் கொடுத்து, இஷ்டம் போல் செயல்பட அனுமதித்தது---எல்லாமே அவன் எதிர்பார்த்துக் காத்திருந்து நடந்ததில்லை.

இதற்கடுத்தாற் போல அது என்கிற மாதிரி யாரோ பார்த்துப் பார்த்து அன்பு காட்டிச் செய்தது. யாரோ என்ன, எல்லாமே இறைவனின் கருணை!...

அந்தக் கருணை மனசுக்குப் பிடிபட்டுப் போனதில் வாழ்க்கையில் நிதானமும், அமைதியும் வந்து விட்டது. 'வருகிற நேரத்தில் வரும்; வருவதை ஏற்றுக் கொள்வதே நீ செய்ய வேண்டிய வேலை' என்கிற மாதிரியான பரபரப்பற்ற நிதானம்.

ஒருநாள், "ஏண்டா, சிவா! மாலுவைப் பத்தி நீ என்ன நெனைக்கறே?" என்றாள் அம்மா.

பக்கத்திலிருந்த அப்பா ஆவலுடன் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தார்.

மாலு அவனுக்கு வாழ்க்கைப் பட்டதும், அந்த வீட்டில் விளக்கேற்றி வைத்ததும் அப்படித்தான் நடந்தது...

சிவராமன் தோள்பக்கம் லேசாக ஒருக்களித்து சாய்ந்திருந்த மாலு திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தாள்.

"ஏன்னா! டெல்லி வந்தாச்சா!.." என்று அவள் கேட்பதற்குத் தான் காத்திருந்தது போல, ஸீட் பெல்ட்டைக் கட்டிக்கச் சொல்லி அறிவிப்பு தலைக்கு மேலே ஒளிர்ந்தது.

(தேடல் தொடரும்)

9 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

எவ்வளவு அழகான நினைவுகள். நளினமாக வெளிப்படுத்தப்படும் காதலே தனி அழகு தான் :)

அன்புடன்,
ஷக்தி

கிருத்திகா ஸ்ரீதர் said...

மோகனமா இருக்கு....
அப்புறம் ஏன் அந்த அடுத்த கவிதையை பதிவிலேர்ந்து நீக்கீட்டீங்க... ரொம்ப நல்லாருந்தது...

ஜீவி said...

Shakthiprabha said...

எவ்வளவு அழகான நினைவுகள். நளினமாக வெளிப்படுத்தப்படும் காதலே தனி அழகு தான் :)

காதலே மிகவும் நளினமானது; மென்மையானது என்பதால் அதன் இயல்பான போக்கில் அது வெளிப்படும் போது தன் இயற்கையான குத்துவிளக்கு ஜொலிப்புடன் மிளிர்கிறது.
தங்கள் தோய்ந்த ரசனைக்கு மிக்க நன்றி, சக்திபிரபா!

ஜீவி said...

கிருத்திகா said...

மோகனமா இருக்கு....
அப்புறம் ஏன் அந்த அடுத்த கவிதையை பதிவிலேர்ந்து நீக்கீட்டீங்க... ரொம்ப நல்லாருந்தது...

ஒரே வரி விமரிசனமா?.. ஓ.கே.

அந்த கவிதை சமாச்சாரம் தனிக்கதை.
எப்பொழுதோ எழுதிய எனக்கும் மிகவும் பிடித்த கவிதை அது.
இந்த 'ஆத்மாவைத் தேடி'க்கு
நடுவில் அது வேறுபட்ட உணர்வுடன் துண்டாக நிற்பதாகப்பட்டது.
தொடர்ச்சியாகப் படிப்போருக்கு திகைக்கும் இடைச்செருகலாகப் போய்விடப்போகிறதோ என்கிற
உணர்வில் எடுத்துவிட்டேன்.
இந்தத் தொடரை முடித்துக்கொண்டு
பல்சுவைப் பதிவுகளுக்குப் போகலாம் என்று எண்ணம். அதை மீறி அவ்வப்போது இப்படி ஒன்றிரண்டு..
ஒரு மாறுதலுக்காக..

கருத்துக்கு நன்றி, கிருத்திகா!

Kavinaya said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. மாலுவுடைய பாடலை ரசிச்ச விதம் வெகு இனிமை.

//'வருகிற நேரத்தில் வரும்; வருவதை ஏற்றுக் கொள்வதே நீ செய்ய வேண்டிய வேலை' என்கிற மாதிரியான பரபரப்பற்ற நிதானம்.//

அந்த நிதானம் வருவது சுலபமில்லை...

ஜீவி said...

கவிநயா said...

//ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. மாலுவுடைய பாடலை ரசிச்ச விதம் வெகு இனிமை.//

நீங்களும் விரும்பி ரசித்தீர்கள் போலிருக்கிறது.. அதே இராக வரிசையில் பாடிப் பாருங்கள், அற்புதமாக இருக்கும்.

ரசனைக்கு மிக்க நன்றி, கவிநயா!

ஜீவி said...

கவிநயா said...

//'வருகிற நேரத்தில் வரும்; வருவதை ஏற்றுக் கொள்வதே நீ செய்ய வேண்டிய வேலை' என்கிற மாதிரியான பரபரப்பற்ற நிதானம்.//

//அந்த நிதானம் வருவது சுலபமில்லை...//

தொடர்ந்து இந்தத் தொடரைப் படித்து வாருங்கள்.. அந்த நிதானம் கைவரப் பெற இந்தத் தொடர் ஒரு பயிற்சிக் கேந்திரமாக விளங்கப்போவதை உணர்வீர்கள். மிக்க நன்றி.

dondu(#11168674346665545885) said...

//சிவராமன் நினைவில் வில்லேந்திய ஸ்ரீராமன் தடந்தோள் புடைத்து மதுராந்தகம் ஏரிகாத்த ராமனாய் மந்தகாசமாய் நின்றான். கொண்டல் மணிவண்ணனாய் கோசலை குமாரனாய் நின்றான். ஜானகிமணாளன் ஜெயஜெய கோஷம் சுற்றிலும் ஒலிக்க நின்றான். வழிநீண்ட வனாந்தரத்தில், வெளிர்நீல வெட்ட வெளியில் இலக்கற்ற பயணமாய் எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போவது போலிருந்தது.//
Chapeau bas (Hats off expressed in French). கவித்துவமான வரிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜீவி said...

டோண்டு சாரிடமிருந்து வாழ்த்து! அதுவும் பிரஞ்சு மொழியில்!

மிக்க நன்றி, சார்! நான் புதுவையில் சிலகாலம் வசித்திருக்கிறேன். அந்த நினைவுகளை மீட்டுத் தந்தீர்கள்.

Related Posts with Thumbnails