மின் நூல்

Tuesday, November 10, 2009

ஆத்மாவைத்தேடி....15 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

15. எண்ணமும் அதன் விரிவும்.

"இப்பொழுது கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்," என்று மேலும் பேசுவதற்கு விஸ்தாரமான தளத்தை அமைத்துக் கொண்ட மேகநாதன் தொடர்ந்தார்."சிக்கலாகி யிருக்கும் நூல்கண்டு போலத் தோற்றமளிப்பதை, நுனி என்று கண்ணுக்குத் தெரியும் ஏதாவது ஒரு இடத்திலிருந்து இழுத்துப் பார்க்கலாம். இப்பொழுது நம் கண்ணுக்கு தென்படும் ஒரு நுனி, 'எண்ணங்கள்" என்று தெரிவதால், இந்த எண்ண்ங்கள் என்றால் என்ன என்று யோசிப்போம்.

" மூளையின் செல்களில் ஏற்படுகின்ற ரசாயன மாற்றங்களே எண்ணங்கள் என்று சயின்ஸ் சொல்கிறது.. வழக்கிலோ, ஒரு விஷயத்தைப் பற்றிய தொடர்பான சிந்தனைகளை எண்ணங்கள் என்று சொல்கிறோம். இப்படிப்பார்த்தால், ஒன்று தெரிகிறது. ஒன்றின் தொடர்பான சிந்தனை விரிய விரிய எண்ணங்களின் நீட்சியும் அதிகரிப்பது தெரிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய நீட்சியை அதிகரிக்க அதுபற்றிய விவரங்களாகிய அறிவு தேவைப்படுகிறது. அது பற்றிய அறிவு அதிகமில்லாமலிருந்தால் எண்ண விரிவின் ஒரு ஸ்டேஜில் அது அறுந்து விடும். அப்படி அறுந்த இடத்தையே, அந்த விஷயத்தின் முடிவாகக் கொள்ளும். அந்த ஸ்டெஜூக்கு மேலும் அதுபற்றிச் சிந்திக்க முடிந்தவர், முந்தையவரை விட அந்த விஷயததில் அதிக அறிவு கொண்டிருப்பார். ஆக, ஒரு விஷயத்தில் ஒருவர் கொள்ளும் முடிவு என்பது, அவரைப் பொருத்தமட்டில், அவரவர் அதுபற்றிக் கொண்டிருக்கும் அறிவு பற்றியதாகிப்போகிறது... எப்பொழுது அது அறிவு பற்றியதாக ஆகிவிடுகிறதோ, அப்பொழுதே அதற்கு எல்லை--இதுதான் முடிவு-- என்ற ஒன்றில்லாமல் ஆகிவிடுகிறது.

மேகநாதன் முழு உற்சாகத்தோடு தான் சொல்ல நினைப்பதை விளக்க ஆரம்பித்தார். "நம்து உயர்நிலை வகுப்புகளில் கணக்குப் பாடத்தில் நேர்விகிதம், தலைகீழ்விகிதம் என்ற வகை கணக்குக்களைப் போட்டிருப்போம். உதாரணமாக, ஒரு வேலையை முடிக்க ஆகும் நாட்களும், அந்த வேலையைச் செய்ய அமர்த்தப்படும் ஆட்களும் தலைகீழ் விகிதமாகும். அதாவது வேலையைச் செய்யும் ஆட்களின் எண்ணிக்கைக் கூடினால், அந்தக் குறிப்பிட்ட
வேலையை முடிக்கக் கூடிய காலம் குறையும். ஆட்களின் எண்ணிக்கை குறைந்தால், அந்த வேலையை முடிக்கக்கூடிய காலம் அதிகமாகும். அதுபோல், ஒரு மோட்டார் வண்டி செல்லும் வேகத்திற்கு ஏற்ப, அது கடக்கும் தூரம் அமையும். வேகமாகச் சென்றால், ஒரு குறிப்பிட்ட காலஅளவில் அதிக தூரம் கடக்கும்; வேகம் குறைந்தால், அதே கால அளவுக்கு கடக்கும் தூரம் குறையும். ஆக வேகமும், தூரமும் நேர்விகிதமாகும்.

"இந்த மாதிரி ஒரு நேர்விகிதச் செயலாய் மனிதன் பரபரப்பாய் இருக்கும் சூழல்களில், சுவாசத்தின் வேகம் அதிகரித்து, எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். அதனால் ஒரு முடிவுக்கு வரமுடியாத ஒரு குழப்ப நிலையே நீடிக்கும். இந்த நேரங்களில் மனத்தை அமைதிபடுத்துதல் மூலம் சுவாசத்தின் வேகத்தை சீராக்கினால் எண்ண வேகத்தை மட்டுப்படுத்தி ஒருமுகப் படுத்தலாம் என்று தெரிகிறது. அடுத்த கேள்வி, 'எதற்காக எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்' என்பது. இதற்கு ஒரே பதில் குழப்ப நிலையில் தறிகெட்டுத் திரியும் எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்துதல் மூலம் மனத்தை பரபரப்பிலிருந்து விடுவித்து அமைதி அடையச் செய்து தீர்மானமாகச் செயல்படலாம் என்பதே. புற நோக்கியான கண்களை மூடிக் கொண்டாலும், பல சமயங்க்களில் எண்ண ஓட்டத்தை அறவே கட்டுப்படுத்த முடியாதாகையால், மனத்தை அமைதிபடுத்துதல் மூலம் சுவாசத்தின் வேகத்தை சீராக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. மன்ம் அமைதி நிலையில் பரபரப்பில்லாமல் இருக்கையில், கண்கள் எதிலாவது நிலைக்குத்தி இருந்தாலும் பரவாயில்லை. அமைதியான நிலையில் மனத்தை வைத்துக் கொண்டு, எண்ணத்தை எது குறித்து நீங்கள் யோசிக்கிறீர்களோ, அதில் குவிமையப் படுத்த வேண்டும் என்பதே முக்கியம்.

"முடிவா என்னதான் சொல்றீங்க?"

"ம். யோசிக்கணும்."

"நானும் எத்தனை தடவை கேட்டுட்டேன்.. இன்னும் நீங்க சொல்லப்போறீங்க.."

"அதான் யோசிக்கணும்னு சொல்றேன்லே."

"அப்போ யோசிச்சுச் சொல்லலாம்லே."

"சொல்லலாம் தான்.. ஆனா, நீ எங்கே என்னை யோசிக்க விட்டே?"

"நான் என்ன செஞ்ச்சேன்?.. உங்களை யோசிக்க வேண்டாம்னு தடுத்தேனா?"

"தடுக்கலே.. ஆனா இப்படி 'என்ன சொல்றே ;என்ன சொல்றே'ன்னு பிடுங்கி எடுத்தா நா எப்படி யோசிக்க முடியும்?"

"நா கேக்கறது பிடுங்கலாப் படறதா?"

"படறதோ இல்லையோ, நிம்மதி இல்லாமப் பண்றது. ஆயிரம் பிக்கல் பிடுங்கல்கள். இதுக்கு நடுவே சட்டுனு பதில் சொல்ல முடியறதா.. அதுவும், இது வாழ்க்கைப் பிரச்சனை. சுமதியோட எதிர்கால வாழ்வே இப்போ நாம எடுக்கற முடிவுலேதான் இருக்கு. கொஞ்சம் என்னைத் தனிமைலே விடறியா?.. சாதக பாதகங்களை யோசிச்சு, சாயந்தரத்துக்குள்ளே சொல்றேன்."

"---பெண்ணுக்கு வரன் தேடும் வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒரு தம்பதியருக்குள் நடந்த உரையாடல் இது. அமைதியாக யோசித்தால் ஆழ்ந்து யோசிக்கலாம் என்பது பெற்றவரின் எண்ணம்.

மேகநாதன் குரல், அவையில் அமர்ந்திருப்போரின் நிசப்தத்தில் எடுப்பாகக் கேட்டது. "ஆக, பலசமயங்களில் ஆழ்ந்து யோசிக்க, புறத்தொந்திரவுகள் இல்லாத ஒரு அமைதியான தனிமை தேவைப்படுகிறது என்று தெரிகிறது. இப்பொழுது சயின்ஸ்க்கு வருவோம்.

"மனித மூளையின் வலது பக்கமும் இடது பக்கமும் தனித்தனி செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

"இடது பக்கம், பார்த்தல், கேட்டல், உணர்வுகளை உணர்ச்சிகளாய் உணர்தல் என்று இப்படிப் பார்த்த, கேட்ட, உணர்ந்த செய்திகளைத் தொகுத்தல், தொகுத்தவ்ற்றை எண்ணங்களாக உருவாக்கிக் கொள்ளல் போன்ற செயல்பாடுகளின் நிலைக்களனாகத் திகழ்கிறது. உருக்கொண்ட எண்ணங்களை வலது பக்கத்திற்கு அனுப்புகிறது.

"இடது பக்கத்திலிருந்து பெற்ற முழுமையான எண்ணத்திரள்களைப் பதிவு செய்து கொள்கிற ஆற்றல் பெற்று அதுவே வலதுபக்க மூளையின் வேலையாகிப் போகிறது. இடதுபக்கத்திற்கு தேவைப்படும் பொழுதெல்லாம் அதற்குத் தேவையான தகவல்களை தான் பெற்ற சேமிப்புக் கிடங்கிலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கும் சிறப்பினையும் அது பெற்றிருக்கிறது. தகவல் கிடைக்கப் பெற்றதும், 'ஆ, ஞாபகம் வருதே' நிலை இதுதான்.

"இப்படிப்பட்ட ஒரு ஞாபகம் தான் ஆர்கிமிடிஸூக்கு குளிக்கும் பொழுது தண்ணீர்த் தொட்டியில் வந்தது.. வந்த அந்த ஞாபகம் தான், விஞ்ஞானத்தில் மிதப்புத் திறன் விதியாகிப் போனது.

(தேடல் தொடரும்)

6 comments:

கபீரன்பன் said...

//அமைதியான நிலையில் மனத்தை வைத்துக் கொண்டு, எண்ணத்தை எது குறித்து நீங்கள் யோசிக்கிறீர்களோ, அதில் குவிமையப் படுத்த வேண்டும் என்பதே முக்கியம்//

’ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு’ :)

சுவாச ஓட்டம் எண்ணங்களின் ஓட்டத்தை மாற்றி அமைக்க வல்லது என்பதே நம் நாட்டின் மிகப் பெரும் கண்டுபிடிப்புதான். இதை எவ்வளவு தூரம் வெளிநாட்டினர் புரிந்து கொண்டுள்ளனரோ தெரியாது.

இன்னும் இப்போதுதான் super yoga என்ற பெயரில் நம் தோப்புக்கரணத்தை ஆராய்ந்து வருகிறார்கள் :))

நல்ல விளக்கங்கள். நன்றி

Kavinaya said...

பல சமயங்களில் பிரச்சனையில் முழுகி அதையே சிந்திக்கும் போது கிடைக்காத தீர்வு, அதனை சிறிது நேரம் விட்டு விட்டு வேறு ஏதாவது செய்கையில் சட்டென்று பிடிபடுவதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.

//இப்படிப்பட்ட ஒரு ஞாபகம் தான் ஆர்கிமிடிஸூக்கு குளிக்கும் பொழுது தண்ணீர்த் தொட்டியில் வந்தது..//

இது, அதுதான் போலும்!

ஜீவி said...

கபீரன்பன் said...
//இன்னும் இப்போதுதான் super yoga என்ற பெயரில் நம் தோப்புக்கரணத்தை ஆராய்ந்து வருகிறார்கள் :))//

அப்படியா!..
அவர்கள் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்து,
அந்த முடிவின் வெளிப்பாடாய் நமக்கு தோப்புக்கரணத்தின் அருமைகள் தெரிந்து, பின் 'தோப்புக்கரணப் பயிற்சிகள்' என்று இங்கு பேட்டைக்குப் பேட்டை வகுப்புகள் எடுத்து, 'தோப்புக்கரணத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை; இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது' என்று லேபிள் குத்திய அறிக்கைகள் அளித்து, அனைவரும் பங்கு கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தி, அதில் காசு பார்த்து.. எதையும் காசு-பண நோக்கத்திலேயே கொண்டு வந்து சேர்த்து...சிரிக்கத்தான் வேண்டும்,போங்கள்!
இப்பொழுது வெறும் சிரிப்பு தான்!

எழுத்தாளர் சாவி மட்டும் நம்மிடையே இப்பொழுது இருந்தால், 'வாஷிங்டனில் திருமணம்' மாதிரி ஒரு நகைச்சுவை தொடர் படித்து சிரித்திருப்போம்!

வருகைக்கும, கருத்துக்கும் நன்றி, கபீரன்ப!

கபீரன்பன் said...

ஜீவி ஐயா,

கீழே உள்ள இணைப்பைப் பாருங்கள்

SUPER YOGA

தோப்புக்கரணம் நீங்கள் சொல்வது போல் வியாபாரமாவதற்கு அதிக தினங்கள் ஆகாது :)))

ஜீவி said...

@ கவிநயா..

ரொம்ப சரி.. 'ஒரேயடியாக ஒரே விஷயத்தை வெகுநேரம் யோசிக்கிறோம்' என்கிற உணர்வு, சிலநேரங்களில் உள்ளத்திற்கு அயர்ச்சி ஏற்படும்.. அதனால், ஒரு கேப் விடுகிற மாதிரி வேறு வேலையில் ஈடுபடுவது, ஒரு பாசாங்கு தான்..அந்த யோசனை ஆழ்மனத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது..(விடை காணும் வேலை, மூளையின் இடது பக்கப் பகுதியிலிருந்து வலது பக்கத்திற்கு டிரான்ஸ்வர் ஆகிவிட்டது.) பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் ஆழ்மனம் அதற்கு ஒரு விடை காணும் பொழுது 'அம்மாடி.. பிடிப்படடு விட்டதே'என்று யோசனைத் தொடர்ச்சிக்கு ஒரு ரிலீஸ் கிடைக்கிறது; அவ்வளவு தான்.
கிடைத்த விடையை அமுல் படுத்திப் பார்க்கும் பொழுது தான் அது சரியான விடையா இல்லையா என்று தெரியும். சரியான விடை எந்றால், சக்ஸஸ்! உடனே இதற்கு இது விடை என்று ஆழ்மனத்தில் பதிவாகி விடும்; அடுத்து இதே மாதிரி நாம் விழிக்கும் போது நமக்கு வழிகாட்ட.. கிடைத்தது தவறான விடை என்று அதைஅடுத்த அனுபவத்தில் புரியும் பொழுது, மீண்டும் யோசனை தான்;
'இன்னாய்யா,நீ; நன்னாத் தேடிப்பார்' என்று ஆழ்மனத்திற்கே மறுபடியும் ஃபைல் திருப்பப் பட்டு விடும்!
சில நேரங்களில், இந்த மாதிரி ஒரு தற்காலிக ரெஸ்ட் வேண்டி, ஆழ்மனம் சரியாகத் தேடாமல், அல்லது தேடிச்சோர்ந்து, ஒரு 'பாவ்லா'வாக, டெம்பரவரி விடைகளைக் கொடுக்கலாம்; இதனால் விளைவது, 'இந்தாளுக்கு எவ்வளவு அலட்சியம் பாரு' என்று நமக்குப் பழி!

'அனுபவப்பட வேண்டும்' என்பது அடிப்படை விதி.. சுய அனுபவப்பட்டால் தான் ஆழ்மனத்தில் சுய அனுபவத்தினால் விடை கண்ட பதிவு. படித்துத் தெரிந்து கொள்வது எல்லாம், சோதித்துப் பார்க்காத- சோதித்தலுக்குக் காத்திருக்கிற பதிவுகள்!
அதனால், நாம் அனுபவப்பட்டு ஆழ்மனத்தில் பதித்துக் கொள்ளாமல், ஆழ்மனத்தைக் குற்றம் சொல்லியும் பயனில்லை. 'மடப்பயல்! என் புத்தியைச் சொல்லணும்' என்று நம்மை நாமே வருத்திக் கொள்வது தான்! நம் மனத்தை நாம் என்றும் ஏளனபடுத்தக் கூடாது! ஏன் என்று பிறகு சொல்கிறேன்.
ஆர்கிமிடிஸூக்கு எந்நேரமும் இதே சிந்தனை! 'மெய்வருத்தம் பாரார்; பசி நோக்கார்' நிலை.இதற்கு முன்னால் அவர் செய்த சோதனைகளின் அனுபவ விளைவுகளை புரட்டிப் புரட்டிப் பார்த்து அவர் ஆழ்மனம் அவருக்கு அளித்த விடை! ஆழ்மனத்தின் அதிதீவிரச் செயல்பாடு, புறமனத்தையே அந்தசமயத்தில் தூங்கச் செய்து விட்டது, அவருக்கு! அதனால் தான், புறவுலகு நினைவே இல்லாமல், குளித்த நிலையிலேயே 'யுரேகா..யுரேகா'(கண்டு பிடித்து விட்டேன்; கண்டுபிடித்து விட்டேன்) என்று கத்திக் கொண்டு தனது சோதனைச்சாலை நோக்கி ஓடினார் அவர்!

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, கவிந்யா!

ஜீவி said...

கபீரன்பன் said...
ஜீவி ஐயா,

கீழே உள்ள இணைப்பைப் பாருங்கள்

SUPER YOGA

தோப்புக்கரணம் நீங்கள் சொல்வது போல் வியாபாரமாவதற்கு அதிக தினங்கள் ஆகாது :)))//

ஆஹா! ஸூப்பர் பிரைன் யோகா, சூப்பரோ, சூப்பர்! காண வாய்ப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி, கபீரன்ப!

Related Posts with Thumbnails