மின் நூல்

Tuesday, November 24, 2009

ஆத்மாவைத்தேடி....17 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

17. பல்லுயிராய் நெடுவெளியாய் பரந்து நின்ற...

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு அவை மறுபடியும் கூடியது. கிடைத்த இந்த நேரத்தில், அத்தனைக் குழுக்களும் ஒன்று கூடி அமர்ந்து அடுத்தடுத்து வருபவனவற்றைப் பற்றி விவாதித்து வரிசைபடுத்திக் கொண்டனர். வரவிருக்கின்ற சதஸூக்கு முன்னான இந்த அமர்வுகளில், இனிக் கூடப்போகும் அமர்வுகளின் காலத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு இந்த வரிசைப்படுத்திக் கொள்ளல் அவசியமாக இருந்தது.

வேகமான விவரமான அலசலுக்குப் பின், மனம், அதைத் தொடர்ந்து ஆத்மா, பின் உபநிஷத்துக்களின் பார்வையில் மரணத்திற்கு பின்னான நிலைகள் என்று இவற்றைப் பற்றி விவரமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது ஒட்டுமொத்த முடிவாயிற்று.

அவரவர் மேற்கொள்ளும் தியானம் போன்ற சுயபயிற்சிகளால் மட்டுமே ஆத்மாவைத் தேடுதலான இந்த யக்ஞம் முழுமை பெறும் என்று மனோகர்ஜி அபிப்ராயப்பட்ட்தால் பேசுவதையும், விவாதிப்பதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்க பயிற்சி வகுப்புகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. வரக்கூடிய நாட்களில் தினமும் மாலை வேளை அமர்வுகளை பயிற்சி வ்குப்புகளாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானைக்கப் பட்டது.

இந்த பயிற்சி வ்குப்புகளில் அனுபவபூர்வமாக அறியக்கூடிய பலன்களையே (Results) ஆதாரமாகக் கொள்ள வேண்டுமெனறும், இப்படிப் பெறக்கூடிய பலன்களுக்கு ஏற்ப விவாதங்களில் பெறக்கூடிய முடிவுகளை தேவையானால் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

எல்லோரும் தமது இருக்கைகளில் அமர்ந்து விட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு மேகநாதன் தனது உரையைத் தொடர்ந்தார். "முன்னால் விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்று நினைக்கிறேன்," என்றவர் கிருஷ்ண மூர்த்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தி விட்டுத் தொடர்ந்தார். "வாழும் வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம். எல்லாவற்றிலும் தானும் வாழ்ந்து கொண்டு என்பதை விட, எல்லாமும் தானே ஆகி என்கிற வார்த்தைத் தொடர் தான் சரியென்று நினைக்கிறேன். இறைவனின் படைப்பு என்பதே, எண்ணிக்கையில் அடக்க முடியாத இலக்கங்களாகத் தன்னைப் பெருக்கிக் கொண்டது தான் போலும். எல்லாவற்றிலும் நீக்கமற தன்னை நிறைத்துக் கொண்ட அவனின் செயலே, அவன் படைப்பாகிப் போனது. அவன் படைப்பிலிருந்து படைப்புக் கூறுகளாய் வெவ்வேறாய் அவனே ஜென்மமெடுத்தது தான் அதிசயம்.

"ஒன்றே பலவாகி பல்கிப் பெருகிய பேரதிசயத்தில், ஒன்றுக்கொன்று முரண்படுகிறதாகவும், அணுகுகிறதாகவும், நெருங்கி நேசிப்பதாகவும், விலகுவதாகவும்---வெவ்வேறான உணர்வுகளைப் படைத்து உலவவிட்டது தான் படைப்பின் பேரதிசயம். ஆழ்ந்து யோசித்தால், உயிர் வாழ்தலுக்கு இதுவே ஒரு விஞ்ஞானத் தேவையாகும்.

பலத்த அமைதியில் மேகநாதனின் குரல் எடுப்பாகத் தெரிந்தது. "ஆணும் பெண்ணும் அவனே ஆயினும் இவையே இருவேறு சக்தியாய் இணைந்து, இன்னொன்றாய் வெளிப்பட்டது இன்னொரு அதிசயம்! இன்னொன்று அவனே ஆன இன்னொன்றுடன் கூடி வேறொன்றாய் வெளிப்பட்டது போல வெளிக்குக் காட்டிக்கொண்டு, அந்த இன்னொன்றிலும் அவனே வெளிப்பட்டது தான் சூட்சுமாய் போயிற்று! அந்த இன்ன்னொன்று இவனே ஆன இன்னொன்றுடன் இணைந்து வெளிக்கு வேறொன்றாய்க் காட்டிக்கொண்டு.... இதுவே படைப்பின் பெருக்கத்திற்கு அறிவியல் ஆயிற்று.

அவையின் உன்னிப்பான கவனிப்பில் மேகநாதன் தொடர்ந்தார்:
"ஆறறிவு மனிதனில் என்று மட்டுமல்ல, ஊர்வன-பறப்பன்-நீந்துவன-உலாவுவன- செடி, கொடி, பாசி, பச்சைப் பசேல் என்று---எதையும் விட்டு வைக்கவில்லை, இந்த ஒன்று பலபடல். விதவிதமாய் வெளிக்கு வெளிப்படுதலே அவன் திருவிளையாடலாய் ஆயிற்று.

"எல்லாம் அவன் ஆட்டமாய் போய் விட்டதில், இது இன்னதுக்காக என்று புரிபடாமலே போயிற்று. ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் விளைவாய் ஒரு நோக்கம் இருந்தது தான் ஆச்சரியம்; கடைசியில் இந்த நோக்கங்களே வாழ்க்கையின் வண்ணப்பூச்சுகளாயிற்று.
வினைகளே விளைவுகளுக்கான, அவை கொடுக்கும் பலன்களுக்கான கேந்திரம் ஆயிற்று. இதுவும் அடிப்படையிலேயே ஒரு விஞ்ஞான உண்மைதான்.

"அவனே தானாகிப் போனதால், 'தானு'க்கு தன்னையே புரிந்து கொள்வது தான் இறுதி இலட்சியமாயிற்று. தன்னைப் புரிந்து கொள்ளலே, அவனைப் புரிந்து கொள்ளல் என்று வேதாந்தம் வியாக்கியானம் சொல்லிற்று.

மேகநாதனின் பார்வை அவையின் நட்டநடுவில் நிலைக்குத்தியது. "தோழியர் பூங்குழலி, நிவேதிதா குழுவினர் இதுபற்றி நிறைய குறிப்புகளைக் கொடுத்து அலசியிருக்கிறார்கள். எனது மனவியல் துறையினரும் அவர்களும் இந்தத்துறையில் ஆர்வமுள்ளவர்களும் ஒன்று சேர்ந்து உபநிஷத்துகள் காட்டும் வெளிச்சத்தில் இனி வரும் அமர்வுகளில் இவற்றைப் பார்ப்போம்.

"இன்று மாலை தனித்தனிக் குழுக்களாக ஒன்று கூடி எடுத்த முடிவுகளின் படி, இனி மாலை வகுப்புகள் தியானப் பயிற்சி வகுப்புகளாக அமையும். அதற்குப் பின் சிறிய இடைவேளைக்குப் பின்னான சிவன் கோயில் பின் மாலை தரிசனத்திற்கும் வசதியாக இது அமையும்" என்று ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியின் சார்பாக அறிவித்துக் கொள்கிறேன்" என்று மேகநாதன் தனது உரையை முடித்துக் கொண்டார்.

மகிழ்ச்சி கலந்த கலகலப்புடன் அவை கலைந்தது.

(தேடல் தொடரும்)

2 comments:

Kavinaya said...

"ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள்", உங்கள் பதிவு நினைவுபடுத்திய வரி.

தியான வகுப்புக்கு நானும்... :)

ஜீவி said...

@ கவிநயா

வாருங்கள், கவிநயா!

ஆஹா! அபிராமி அந்தாதி வரியல்லவா?
சிவமும், சக்தியும் - சிவசக்தியாய் எங்கணும் நிறைந்து...

//தியான வ்குப்புக்கு நானும்... :) //

தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

'தியான வ்குப்புகள்' நேரிடையான பயிற்சி வகுப்புகள் இல்லையா?.. ஆக, அவற்றைப் பயிலும் வாய்ப்பு 'ஆத்மாவைத் தேடி' ஆயும் அந்தக் குழுவினருக்கே இயல்பாக வாய்த்து விட்டது. நம்ம சிவராமன் தான் வகுப்புகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இன்னொன்று. யோக்ங்களின் மேல்நிலை பயிற்சிகளை ஆசிரியரின் (கற்றுத் தேர்ந்த குருவின்) மேற்பார்வையிலேயே கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால், படிப்பறிவு பகுதியாக இல்லாமல் போய்விட்டது. :)

Related Posts with Thumbnails