மின் நூல்

Saturday, December 19, 2009

ஆத்மாவைத்தேடி....22 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

22. மறுபடியும் அவர்கள்

ங்கியிருந்த கேபின் அற்புதமாக இருந்தது. மெயின் ரோடிலிருந்து உள்ளடங்கி இருக்கும் சாலையில் உயரே வளைந்து வளைந்து ஏற வேண்டியிருந்தது. கொஞ்ச தூரம் அப்படி ஏறித் திரும்பினால் அதற்கு மேல் போகமுடியாதவாறு பாதையை அடைத்துக் கொண்டு இரும்புக்கதவுகள் சாத்தப்படடிருந்தன. கதவு திறப்பதற்கான பாஸ்வேர்டை காரை விட்டு இறங்காமலேயே கைநீட்டி மெஷினில் பதிந்தால், அலிபாபா 'ஓபன் ஸீஸேம்' மாதிரி சாத்தியிருந்த இரட்டைக்கதவுகள் திறந்தன. கதவு தாண்டிய பாதையில் கொஞ்ச தூரம் ஏறித் திரும்பினால் ஒதுக்கப்பட்டிருந்த கேபின் வந்து விடும். இங்கொன்றும் அங்கொன்றுமாக பாதைச் சரிவில், செங்குத்துத் திருப்பத்தில் என்று நிறைய கேபிங்கள் தாம்.

உள்ளே போவதற்குத் தான் பாஸ்வேர்ட் தேவையாயிருந்தது. வெளியே வருவதற்கு அவசியம் இல்லை. உள்ளிருந்து வெளிச்செல்ல வரும் கார்கள் அருகில் வந்ததும் தாமாகவே கதவுகள் திறந்து கொண்டன. அதே மாதிரி கேபினின் மெயின் டோர் திறக்கவும் பாஸ்வேர்டைத் தான் பதிக்க வேண்டியிருந்தது.. 'செக்-இன்', 'செக்-அவுட்'களைக் கவனிக்க யாரும் கிடையாது.. வந்து தங்கிக் கொள்ள வேண்டியது; காலிபண்ணும் பொழுது போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.. இரகசிய வார்த்தைகள் மறந்து போய்விடாமல் இருக்க தமயந்தி பாஸ்வேர்ட்களை கார்ஸீட்டிற்கு பின்னாலேயே காகிதத்தில் எழுதி ஒட்டி வைத்திருந்தாள். கான்டான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் கேபின் இருந்தது; ரோடுக்கு வந்து விட்டால் வெயினஸ்வில் தான்.

தில்லிக்குப் பேசிவிட்டு, எல்லோரும் சாப்பிட்டுக் கிளம்புவதற்குள் மணி பதினொன்று ஆகிவிட்டது. கேபினிலிருந்து கீழிறங்கும் பாதையில் இறங்கி சாலைக்கு வந்ததும் கேஸ் ஸ்டேஷனில் காருக்கு கேஸ் போட்டுக்கொண்டார்கள். சற்று தூரத்திலேயே சாலைக்கு உள்ளடங்கி இருந்த விஸிட்டர் செண்டரைப் பார்த்ததும் எல்லோருக்கும் சந்தோஷம். தமா கணவரைப் பார்த்து, "விவரமெல்லாம் தெரிஞ்ச்சிண்டு வந்து விடலாங்க" என்று காரை குறுக்குப் பாதையில் ஓட்டினாள். தமாவுக்குப் பின்னாலேயே காரை ஓட்டி வந்த கிரிஜாவும் காரை தமாவின் காருக்குப் பக்கத்தில் நிறுத்தினாள். கிரிஜாவிடம் சொல்லி விட்டு அவள் கணவன் பிரகாஷ், தமாவின் கணவன் குமாருடன் செண்டருக்குள் போனான். விஸிட்டர் ஸெண்டரில் போய் ப்ளூ ரிட்ஜ் பார்க்வே பற்றித் தகவல்களைச் சேகரித்துக் கொண்டனர். அங்கு முழுத்தகவல்கள் அடங்கிய கைடும், மேப்பும் கிடைத்தது மிகவும் வசதியாகிப் போனது.

விஸிட்டர் ஸெண்டரை விட்டு ரோடுக்கு வந்த்துமே, வலது பக்கம் திரும்பிய கொஞ்ச தூரத்தில், ப்ளூ ரிட்ஜ் பார்க் வேக்கு மலையேறும் பாதை வந்து விட்டது. நிறைய கொண்டை ஊசி வளைவுகள், உடனே உடனே என்று இல்லாமல் விரவி இருந்தன. இரண்டு பக்கமும் விதவிதமான மரக்கூட்டங்கள்; மஞ்ச மஞ்சரேன்று, கருஞ்சிகப்பிலென்று , சில இன்னும் மஞ்சளோ சிவப்போ அடையாமல் என்று-- இலைகளைச் சுமந்து கொண்டு வரிசை வரிசையாக சாலையின் இருபக்கமும் இருந்த மரக்கூட்டங்கள் பார்க்க பார்க்கப் பரவசம் ஊட்டின.

நீண்ட பாதையில் போகும் வழியிலேயே அங்கங்கே பிர்மாண்ட பள்ளத்தாககுகளைப் பார்க்க வசதியாக பாதையை அகலப்படுத்தி சின்னச் சின்ன கைப்பிடிச்சுவர் கட்டப் ட்டிருந்தது. அப்படிப் பட்ட இடங்களின் பெயர்களை கல்லில் பொறித்து அங்கங்கே பதிததிருந்தார்கள். அதைத் தவிர ஒரு கூட்டமே உட்கார்ந்து உணவருந்துகிற மாதிரி மர பெஞ்சுகள் வேறு. அங்கங்கே தங்கள் கார்களை நிறுத்தி, இறங்கி, பள்ளத்தாக்குகளைப் பார்த்து வியந்து கையோடு வைத்திருக்கும் காமிராக்களில் பார்க்கும் காட்சிகளை சிறைப்படுத்திக் கொண்டு என்று... எல்லா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பலர் நின்று கொண்டிருந்தனர். தமயந்தியும், கிரிஜாவும் தங்களுக்கு பார்க்க வேண்டும் என்று மிகவும் பிடிந்திருந்த இடங்களில் மட்டும் காரை நிறுத்திக் கொண்டிருந்தனர்.

அப்படித்தான் ஒரு வளைவு திரும்பி சற்று தூரத்தில் இருந்த பள்ளத்தாக்குப் பார்வையாளர் இடத்தில் காரை நிறுத்தலாம் என்று அந்த இடத்தை நெருங்கி வந்து காரைப் பார்க் செய்த போது அங்கு நின்று கொண்டு பள்ளத்தாக்குப் பகுதியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இந்திய குடும்பத்தைப் பார்த்ததும் தமாவும் கிரிஜாவும் திகைத்துப் போய்விட்டனர்.

சந்தேகமில்லாமல் இவர்கள் இன்று அதிகாலையில் தாங்கள் கேபினின் பக்கத்து மலைப் பாதையில் பார்த்தவர்கள் தான் என்று இருவருக்கும் நிச்சயமாயிற்று. இப்பொழுது கூட பின் பக்கம் பார்க்கையில் புடவை கட்டிய அந்தப் பெண்ணின் தோற்றம் தன் அம்மா மாலுவைப் போலவே இருந்தது கண்டு தமயந்திக்கு வியப்பு தாளவில்லை.

'இன்று காலையில் தான் அம்மாவுடன் போனில் பேசினோமே' என்கிற நினைப்பு தமயந்திக்கு மற்ற ஆச்சரியங்களை அடக்கிக் கொண்டு மேலோங்கி வருகையில், அந்தப் பெண்ணுடன் இருந்தவர்களை நெருக்கத்தில் பார்க்கையில் தங்கள் தந்தையைப் போலில்லை என்பது இருவருக்குமே நன்றாகவேத் தெரிந்தது.. இருந்தாலும் இவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளூம் ஆவல் அவர்களை உந்தி முன்னால் செலுத்தியது.

இதற்குள் காரை விட்டு இறங்கிய இவர்களை பரிவுடன் பார்த்தபடி தயங்கியபடியே அவர்கள் நின்றிருந்தனர்.


(தேடல் தொடரும்)

2 comments:

கவிநயா said...

ம்... அப்புறம்?

ஜீவி said...

@ கவிந்யா

... அப்புறம் சதஸூக்கான விவாத அரங்கு, விவாத விவரங்கள் குறித்தே நினைவாக இருக்கிறது.அங்கு திரும்ப வேண்டும்.அது தான் பிரதானம், இல்லையா?..

இவர்கள் வேறு வந்தோமா, பார்த்தோமா, போனோமா என்று சுற்றுலாவை சீக்கிரத்தில் முடித்துக் கொள்வதாகத் தெரியவில்லை. எப்படியும் இவர்களுக்கு நாளைக்கு அடுத்த நாள் காபினிலிருந்து செக்-அவுட் செய்தாக வேண்டும். இந்தியாவில் இரவு, அமெரிக்காவில் பகல் என்பது வசதியாகவும் இருக்கிறது.இங்கு இரவு வரையிலான இவர்களின் விவரங்களை முடித்துக் கொண்டால், காலையில் தில்லிக்குப் போய் விடலாம். பார்க்கலாம்.

விசாரிப்புக்கு நன்றி, கவிநயா!

Related Posts with Thumbnails