மின் நூல்

Saturday, December 26, 2009

ஆத்மாவைத்தேடி....24 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

24. தனி உலகம் இது!

லேசாக வெள்ளி முளைக்கும் பொழுதே, மஹாதேவ் நிவாஸ் விழித்துக் கொண்டு விட்டது.

சூரிய நமஸ்காரம், சந்தியா வந்தனம் எல்லாம் முடித்துக் கொண்டு கிருஷ்ண மூர்ததி, சிவராமன் தம்பதிகளுடன் காலை கோயில் தரிசனத்திற்கு கிளம்பும் பொழுது மணி ஆறாகி விட்டது.

மஹாதேவ் நிவாஸின் கிழக்குப்புற வாசலில் உடற்கூறு இயல் அறிஞர் உலக நாதனும் அவரைச் சூழ்ந்து இன்னும் சிலரும் படியிறங்கிக் கொண்டிருப்பது இங்கிருந்தே தெரிந்தது. பக்கத்தில் வந்ததும் தான் அந்தக் கூட்டத்தில் மனவியல் அறிஞர் மேகநாதனும் இருப்பது தெரிந்தது. கிருஷ்ண மூர்த்தியும் மற்றவர்களும் அருகில் வந்ததும், எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒன்று கூடினர். அப்பொழுது மேகநாதன், தம்முடன் இருந்த உளவியல் பேராசிரியர் தேவதேவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். "இன்றைக்கு உரையாற்றப் போவது இவர்தான்" என்று மேகநாதன் சொன்னார். கிருஷ்ண மூர்த்திக்கு முதலிலேயே மேகநாதனின் குழுவிலிருக்கும் தேவதேவனைத் தெரியும் என்றாலும், அவர்தான் அன்றைக்கு விரிவுரை ஆற்றப்போகிறார் என்று தெரியாது. தெரிந்து கொண்டதும், வழக்கமான வாழ்த்துக்களை தேவ தேவனுக்கு தெரிவித்தார். மேகநாதனை நோக்கி, "இதற்கான குறிப்புகளை ஒருங்கிணைப்பா ளர் குறிப்பேட்டில் குறித்துக் கொள்கிறேன்" என்றார்.

"நேற்று மாலை அவை முடிந்த பிறகு அடுத்த நாள் உரை பற்றி எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து விவாதித்தோம். அப்பொழுது இன்னும் பதினைந்து நாட்களுக்கான விவாதப்பொருளை ஒரு சார்ட் மாதிரி தயாரித்துக் கொண்டிருக் கிறோம். உங்கள் ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் அது அப்ரூவ் ஆக வேண்டும். இன்று காலை அமர்வுக்கு சற்று முன்னால் நாம் கூடினால் அதைப் பற்றி முடிவெடுத்து விடலாம்" என்றார் மேகநாதன்.

"அப்போ எட்டரை மணிவாக்கில் உங்கள் அறைக்கு மற்ற
ஒருங்கிணைப்பாளர்களுடன் வந்து விடுகிறேன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி.

"அப்படியே செய்து விடலாம்," என்று மேகநாதன் சொல்வதற்கும், சிவன் கோயிலின் வெளிப் பிராகார வெளியை அவர்கள் நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

தொடுத்த மாலை ஒரு குடலில் இட்டு மாலுவின் கையில் இருந்தது. அவளும் சிவராமனும் தேவாரப் பாடல்களை பண்ணிசைத்து பாடியபடி முன்னால் சென்று கொண்டிருந்தனர். பின்னால் வந்த மற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளவே எல்லோரும் சேர்ந்திசைத்த அநதக் காட்சி பார்பபதற்கும் கேட்பதறகும் அற்புதமாக இருந்தது.

சன்னதியை நெருங்க நெருங்க பூங்குழலி, நிவேதிதா, சாமபசிவம், யோகி குமாரஸவாமி மற்ற குழுவினர் எல்லோரும் சன்னதிக்கு முன்னால் அமர்ந்து திருவாசகம் ஓதிக் கொண்டிருப்பது தெரிந்தது. பின்னால் வந்தவர்களும் அவர்களுடன் கலந்து கொள்ள அவர்கள் உற்சாகம் பீறிட்டது. கொண்டு வந்த பூக்குடலையை சநநிதிக்கு முன்னால் வைத்து விட்டு, மாலுவும் அவர்களுடன் அமர்ந்து கொண்டாள்.

மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய தற்சிறப்புப் பாயிரத்தின் ஆரம்ப அடிகள் அவர்களின் சேர்ந்திசையில் அமுத மழையாகப் பொழிந்தது..

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க... (நமச்சிவாய்..)


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.... (நமசிவாய)

மெதுவாக சீரான ஓசை லயத்துடன் பெண்கள் பகுதியிலிருந்து உச்சாடன அலையெனக் கிளம்பிய நாதவொலி, இரண்டடி இரண்டடியாக அவர்கள் பாடி முடிக்க, அதே அடிகளை ஆண்கள் பக்கம் திருப்பிப் பாட எல்லோருக்கும் திகட்டாத தேனஇசையாக அது தெரிந்தது.


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி.... (நமசிவாய)


சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.... (நமசிவாய)

'முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்..' என்று மீண்டும் அந்த வரியைப் பாடி 'நமசிவாய..' என்று ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் கண்களில் நீர் வழிந்தது. மெய் விதிர்த்து இறைவனின் அருளை அந்த அன்பை செவிவழி துய்த்து நெஞ்சுக் கூட்டில் நிரப்பிக் கொணட புளகாஙகிதம், அததனை பேரின் முகத்திலும் ஈடற்ற பிரகாசமாய் பிரதிபலித்தது.

பண்ணிசைப் பாட்டு முடிந்ததும் நெடியதோர் நீண்ட அமைதி அங்கு நிலவியது. அவரவர் மூச்சொலி கூட வெளியோசையாய் வெளிப்படா வண்ணம், அத்தனை பேரும் ஆழ்துயிலில் ஆழ்ந்துவிட்டதே போன்று அப்படியொரு நிசப்தம். இறைவனுடனான தங்களுக்கான தனிஉலகைச் சமைததுக் கொள்கிற சக்தியை அனைவரும் கைவரப் பெற்றிருந்தனர். தொடர்ந்த அவைக்கூட்ட அமர்வுகளில் அவர்கள் பெற்ற பலன் அங்கே கண்ணுக்குத் தெரிகிற வெளிப்பாடாய் வெளிப்படையாய்த் தெரிந்தது.

தீபாராதனைக்காக கண்டாமணி ஒலித்த பொழுது, பிரியமாட்டாமல் பிரிந்து வந்த உணர்வில் நினைவுலகுக்கு வந்தது போல அவர்கள் எழுந்து நின்றனர். வேறோரு உலகிலிருந்து பிய்த்துப் பிரித்தெடுத்து இங்கு தள்ளப்பட்டது போல பிரமித்து, விழித்து, திகைத்த நிலையில் கருவறையில் ஈசனுக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் தொடர்ந்த தரிசனத்தின் தொடர்ச்சியில் மனமுருகி பிறவா யாக்கைப் பெரியோனைத் துதித்தனர்; கரம் குவித்து 'ஹர ஹர மஹாதேவா!' என்று ஒருசேர ஓங்கிக் குரல் கொடுத்து ஒருவருக்கொருவர் தொத்திக் கொண்ட உத்வேக மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பிரசாதம் வழங்கப்பட்டு அனைவரும் சன்னதியிலிருந்து வெளிப்பட்டு பிராகாரம் வருகையில் இன்றைக்கு என்னவோ அத்தனைபேரின் மனத்திலும் இனம்புரியாத சந்தோஷம் கூத்தாடியது.

நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருப்பது போல அவர்களின் இந்த சந்தோஷத்திற்கும் அவர்களுக்கேத் தெரியாத ஒரு காரணம் இருந்தது.


(தேடல் தொடரும்)
8 comments:

கவிநயா said...

//மெய் விதிர்த்து இறைவனின் அருளை அந்த அன்பை செவிவழி துய்த்து நெஞ்சுக் கூட்டில் நிரப்பிக் கொணட புளகாஙகிதம்,//

பாடலோடு ஒன்றும் அனுபவத்தை அழகா சொல்லியிருக்கீங்க.

//அவர்களின் இந்த சந்தோஷத்திற்கும் அவர்களுக்கேத் தெரியாத ஒரு காரணம் இருந்தது.//

ஹ்ம்... என்ன காரணமோ?

கபீரன்பன் said...

// தனி உலகம் இது!//

ஆமாம். ஒரு தனி உலகத்தையே சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே சண்டை சச்சரவுகள் எதுவுமில்லாமல் அனைவரும் ஆனந்தமாக கருத்தொருமித்து ஒரு தேடல் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்மையிலேயே இப்படி ஒரு சத்சங்கம் இருக்குமானால் .....

எவ்வளவு நன்றாக இருக்கும்!

ஜீவி said...

@ கவிநயா

ரசனைக்கு நன்றி கவிநயா!

இன்னும் பல புதுப்புது சந்தோஷங்களில் பங்கு பெறப்போகிற அவர்களுக்குக் கிடைக்கவிருக்கின்ற வாய்ப்புகளுமே இந்த சந்தோஷத்திற்கும் காரணமாகிப் போவதால் அப்படிச் சொன்னேன்.

ஜீவி said...

@ கபீரன்பன்

உணர்வுகள் விளைவிக்கும் ஆனத்தத்தை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
அந்த ஆனந்தம்,ஒருசேர அதே உணர்வில் திளைக்கும் அத்தனைப் பேருக்கும் அதே ஆனந்தத்தை விளைவிக்கும் இறைவனின் கருணையை என்னென்பேன்?..

ஆழ்ந்த தங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி, கபீரன்ப!

hayyram said...

நல்ல பதிவு

regards,
ram

www.hayyram.blogspot.com

ஜீவி said...

hayyram said...
//நல்ல பதிவு.//

வாசிப்பிற்கும், பங்களிப்புக்கும் மிக்க
நன்றி, hayyram!

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா கூடவே இருந்து செவி மடுத்தது போன்ற உணர்வினைத்தந்தது... மிக்க நன்றி...

ஜீவி said...

@ கிருத்திகா

கூட இருந்தமைக்கு தங்களுக்கும் நன்றி.

Related Posts with Thumbnails