மின் நூல்

Friday, March 25, 2011

ஆத்மாவைத் தேடி ….1 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

1. நினைவில் நீந்திய நிலவு முகம்

மயந்தியும் கிரிஜாவும் தங்கியிருந்த காபின் பகுதியிலிருந்து பார்ப்பதற்கு மாதுரி குடும்பம் தங்கியிருந்த காபின் கூப்பிடு தூரத்தில் இருப்பதாகப்பட்டாலும் சரிந்தும் நீண்டும் வளைந்தும் சென்ற ஐந்தாறு கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி மாதுரி குறிப்பிட்டிருந்த அவர்களின் காபினை அடைவதற்கு பத்து நிமிஷங்களுக்கு மேலாகி விட்டது.

தனது காரை ஓட்டிக் கொண்டு தமயந்தி முன்னால் செல்ல அவளைத் தொடர்ந்து பின்னால் தன் காரில் கிரிஜா வந்தாள். பாப்-டார்ட்டை கையில் பற்றிய படியே சிணுங்கிக் கொண்டு வந்த ரிஷிக்கு மணிவண்ணன் அவன் வயசுக்கேத்த ஏதோ விளையாட்டு காட்டிக் கொண்டு வந்தான்.

முன்னால் சென்ற தமயந்தியின் கார் வளைந்து திரும்பி அந்த காபினுக்கு வெளியே நீண்டிருந்த வெற்றுவெளியை அடையும் வரை தாமதித்து பின்னால் சென்று தன் காரையும் வளைத்துத் திருப்பி தமயந்தியின் காருக்கு பக்கத்தில் நிறைய இடம் விட்டு நிறுத்தினாள், கிரிஜா.

அதற்குள் மாதுரி தன் காபின் வாசலுக்கு வந்து வெளியே நின்று கொண்டு இவர்களைப் பார்த்து சிரித்தவாறு வரவேற்றாள். உள்ளே அவள் கணவன் நின்று கொண்டு, "வாங்க.. வாங்க.." என்று எல்லோரையும் அழைத்தான். பின்னால் மாதுரியின் அண்ணனும், பெரியப்பாவும் புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தனர்.

வாசல் பக்க வளைவில் ஷூக்களை கழட்டி விட்டு எல்லோரும் உள்ளே நுழைந்தனர்.

இவர்கள் தங்கியிருக்கும் காபினை விட கொஞ்சம் பெரிதாக இந்தக் காபின் இருந்தது சாதாரணப் பார்வைக்கே தெரிந்தது. "பரவாயில்லையே! எங்களதை விட இந்தக் காபின் பெரிசு தான்!" என்றாள் தமயந்தி, மாதுரியை நெருங்கி.

"அப்படியா.." என்ற மாதுரி வியப்பு காட்ட அருகிலிருந்த சோபாக்களில் அமர்ந்தனர்.

"தமா! இங்கே பார். ஃபயர் பிளேஸ் கூட எவ்வளவு பெரிசா இருக்குன்னு!" என்று கிரிஜா வலது கோடிப் பக்கம் கைகாட்டினாள்.

"ஓ! ஒண்டர்புல்.. எம்மாம் பெரிசு!" என்று தமயந்தி வியந்து ஆமோதித்ததைக் கண்டு சிரித்து விட்டாள் மாதுரி. பெரியப்பா பக்கம் கைகாட்டி, "அப்பா கூட இப்படித்தான் அடிக்கடி 'எம்மாம் பெரிசு'ன்னு தான் சொல்லுவார். ஆரம்பத்திலே எனக்கு இந்த 'எம்மாம்' என்னன்னு புரியலே.. ஒரு நாளைக்கு அவர்கிட்டேயே கேட்டு விட்டேன். கை ரெண்டையும் அகல விரிச்சுக் காட்டி இம்மாம் பெரிசுன்னார். இந்த இம்மாமும் என்னன்னு தெரியலே. நீங்களே சொல்லுங்கள். 'எம்மாம்' என்னன்னு தெரிஞ்சாத் தானே இந்த 'இம்மாமும்' என்னன்னு தெரியும்!" என்று சொல்லி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

சொல்லி வைத்தாற் போல பெரியப்பாவையும் சேர்த்து அத்தனை பேரும் சிரித்தனர். சிரித்து விட்டு பெரியப்பா கேட்டார். "அம்மாடி! சும்மாக் காச்சும் தானே சொல்றே?" மறுபடியும் 'கொல்'லென்ற சிரிப்பு அந்த காபின் பூராவும் படந்தது.

"எதுகை, மோனை இதெல்லாம் எங்க பெரியப்பாவுக்கு அத்துப்படி. பேச ஆரம்பிச்சாலே சரளமா வரும். அதை கேட்டு ரசிக்கறத்துக்காகவே இப்படி ஏதாவது நாங்கள் கிளப்பி விடறதுண்டு.. எங்க பெரியப்பா பெரிய கவிஞராக்கும்!" என்று மாதுரி பெருமையோடு சொன்னாள்.

"அப்படிப் போடு! அவர் ஜிப்பா போட்டிட்டிருக்கறதைப் பார்த்து நான் அப்பவே நெனைச்சேன்.. எழுத்தாளர், கவிஞர் இப்படி ஏதாவது இருக்கும்னுட்டு.." என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு பிரகாஷ் சொன்னான்.

"அதெல்லாம் அந்தக் காலம்! இப்பெல்லாம் இவங்க ஃபேஷனே மாறிடுச்சு. தெரியுமிலே!" என்றான் குமார்.

"எழுத்தும் மாறிடிச்சுல்லே; அதனாலே ஃபேஷனும் மாறிடிச்சு" என்றார் பெரியப்பா கூர்மையாக.

"வாஸ்தவம் தான், நீங்க சொல்றது" என்று குமார் அவர் சொன்னதை ஆமோதித்தான். "ஒரு காலத்திலே தமிழ்லே கதை, கவிதைன்னு எதையும் விட்டு வைக்கலே நான். படிச்சிட்டுத்தான் மறுவேலைன்னு ஒரு கிரேஸ் இருந்தது. இப்போ அதெல்லாம் எங்கே போனதுன்னே தெரியலே; என்ன காரணம்னு எனக்கே சரியாத் தெரிலே. ஒரு ஈடுபாடோட கவனத்தைச் செலுத்திப் படிக்க முடிலே. அவ்வளவு தான் சொல்ல முடியும்" என்றான்.

"அமெரிக்காலே இருந்திண்டு தமிழ் இலக்கியம் பத்தி அதுவும் தமிழ்லேயே ஒரு இலக்கிய விவாதம் ஆரம்பிச்சிடுத்தே!" என்று ஆச்சரியப்பட்டாள் கிரிஜா.

"அந்தந்த நேரத்லே அதைஅதைப் பேசிடணும். கிடைச்ச சான்ஸைவிடக்கூடாது. ஒரு இலக்கியவாதி பெரியப்பா இங்கே இருக்கறச்சே, இப்படிப் பேசற இந்த வாய்ப்பை நழுவ விடலாமா?.. அதான்" என்றான் குமார்.

"ஒரு சாப்பாட்டுப் பிரியன் நான் இங்கே இருக்கேன். என்னைத்தான் யாரும் கண்டுக்கக் காணோம்.." என்று பேச்சை திசைதிருப்பினான் மாதுரியின் அண்ணன்.

மாதுரியும், கிரிஜாவும் கிச்சன் அறைப் பக்கம் போய்விட்டு வந்தனர். ரிஷிக்கு கிரிஜா பாலை பாட்டிலில் ஊற்றிக் கொண்டு வந்தாள். மணிவண்ணன் தட்டு நிறைய தனக்குப் பிடித்த எதையோ வாங்கிக் கொண்டு பின்னால் வந்தான்.

"இதோ.. அபிடைட்டோட ஆரம்பிச்சிடலாம், அண்ணா" என்று வெவ்வேறு தட்டுகளில் சமோசா, கட்லெட் என்று அவள் கொண்டு வர, அவள் அண்ணன் நடுஹாலில் நீண்ட ஒரு டேபிளை நகர்த்த அதன் மேல் கொண்டு வந்தவைகளை வைத்தாள் மாதுரி. தொட்டுக் கொள்ள சட்னி, தக்காளி சாஸ், வெங்காயப் பச்சடி எல்லாம் தனித் தனியாக. ஸ்பூன்கள், ப்ளேட்டுகள், கோக் பாட்டில்கள் எல்லாம் ரெடி.

"என்னங்க.. இந்தியாவிலே இருக்கிற மாதிரியே ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டீங்க போலிருக்கு" என்று எழுந்து ப்ளேட்டையும் ஸ்பூனையும் பிரகாஷ் எடுத்துக் கொண்டான்.

"பச்சடிலே பாருங்க.. கொத்தமல்லியைக் கூட அரிஞ்சு போட்டிருக்கோம். கீழே இறங்கிப் போனா கான்டான்லே அத்தனையும் கிடைக்கிறது. சமோசா கூட நம்ம நாட்டு ஒரு பிரட் கடைலே ஆர்டர் கொடுத்து வாங்கினதுதான்" என்றாள் மாதுரி.

"இந்த சாப்பாட்டு விஷயம் மெயின். அது ஓக்கே ஆயிடுத்துன்னா எங்கே வேணா வேலை செஞ்சு பிழைப்பை ஓட்டலாம்.. என்ன சொல்றீங்க?" என்றான் சுரேஷ்.

"கரெக்ட்.. அதுனாலே தான் நாடாறு மாசம் காடாறு மாசம்ன்னு இருக்கற ஸ்நோவையும், கடும் வெயிலையும் ஒரு பொருட்டா நெனைக்கத் தோணலே. பழகிப் போயிடுத்துன்னா, அது கூட ரசிக்கிற மாதிரி தான் இருக்கு. ஆம் ஐ கரெக்ட்..?" என்றாள் தமயந்தி.

இத்தனையையும் ஒரு மெல்லிய புன்முறுவலுடன் ரசித்துக் கொண்டிருந்தார் பெரியப்பா. கரெக்ட் என்று பிறர் சொல்வதை ஆமோதித்து, தான் சொல்வது சரியா என்று பிறரிடம் சரிபார்த்துக் கொள்ளும் தமயந்தியின் அணுகுமுறை அவருக்குப் பிடித்திருந்தது.

"கரெக்ட், தமயந்தி.." என்று அவள் சொல்வதை ஆமோதித்த மாதுரிக்கு, தமா பேசும் முறை, பேசுகையில் கொஞ்சமே தலையைச் சாய்த்துப் பேசுகிற பழக்கம், அதே நேரத்தில் சொல்லி வைத்தாற் போல சிரிக்கும் கண்கள், வட்ட முகத்தில் தீர்க்கமான அந்த நெற்றி அமைப்பு, நெற்றி முகட்டுக்கு மேலே படிந்து வாரினாலும் நெளிநெளியாய் பளபளத்த கூந்தல் அழகு என்று எல்லாமே வெகு அருகில் பார்க்கும் பொழுது இத்தனை நேரம் தெரியாத ஒன்று தெரிந்து சடாரென்று பொறி தட்டிய மாதிரி தன் உயிரில் கலந்த ஒருவரின் முக அமைப்பை அவள் நினைவுக்குக் கொண்டு வந்தது.

அது சின்ன வயசில் தன் பிஞ்சுக் கரங்களால் அவள் தடவிப் பார்த்த வட்ட முகம். அம்புலி காட்டி அமுதூட்டுகையில் அங்கே பார்க்காமல் கையைக் காற்றில் அளைந்து அளைந்து அவள் ஆசையுடன் தொட்டுப் பார்த்த முகம். சின்ன வயசில் விளையாட்டுத்தனமாய் கழுத்தைச் சுற்றிக் கொண்டு தொங்குகையில், 'வலிக்கறதுடி..' என்று சிணுங்கிய முகம், துள்ளித் திரிந்த அவளது பருவ வயதில் அவளைத் தோழியாய் பார்த்துப் பதைபதைத்த முகம்-- அந்த பெற்ற தாயின் முகச்சாயலைப் போலவே இருந்த இன்னொருவரின் முகத்தை வெகு நெருக்கத்தில் பார்த்த சந்தோஷத்தில் மாதுரியின் மனம் குதி போட்டது.


(இன்னும் வரும்)10 comments:

ஸ்ரீராம். said...

//"வட்ட முகத்தில் தீர்க்கமான அந்த நெற்றி அமைப்பு, நெற்றி முகட்டுக்கு மேலே படிந்து வாரினாலும் நெளிநெளியாய் பளபளத்த கூந்தல் அழகு என்று எல்லாமே"//
பழைய மாயா வரைந்த ஓவியங்கள் நினைவுக்கு வருகிறன.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். மாயா ஓவியங்கள் எனக்கும் நினைவுக்கு வந்தது.
ஸ்ரீராம், மாயா ஒரு ப்ரிண்டிங் ப்ரஸ் வைத்து நடத்தி வருகிறார் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். எங்கள் பேரன் பூணல் அழைப்பிதழ் அங்கே தான் ப்ரிண்ட் செய்தோம்.
அங்கே போன ரெண்டு மூன்று தடவையும் அவரது பழைய ஓவியங்களைப் பர்க்க நேர்ந்தது.
அசோக் பில்லர் பக்கத்தில் இருக்கிறது அவரது ப்ரஸ்.

வல்லிசிம்ஹன் said...

ஜீவி,
கதையை முதல் தடவையாக படிக்கிறேன். இனிமையாக இருக்கிறது.
மற்ற இரண்டு பாகங்களையும் படித்துவிட்டு வருகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆமாம், ஸ்ரீராம்! மாயாவின் ஓவியப் பெண்கள் அத்தனை பேரும் வட்ட முகத்தினரே. அந்த வட்ட முகத்தின் நெற்றியில் தவறாமல் குட்டியூண்டு ஒரு வட்ட பொட்டும் இட்டிருப்பார்.

மாயாவின் இயற்பெயர் மஹாதேவன். ஆனந்த விகடனில் முதலிலேயே ஒரு மஹாதேவன் (தேவன்) இருந்ததினால் ஓவியர் மஹாதேவன், வரைகையில் மாயா ஆனார். மாயாவின் பெயர் பார்த்ததும், வல்லிம்மா சொல்லியிருப்பது தான் என் நினைவுக்கும் வந்தது.

ஆனால் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அந்த வர்ணிப்பை எழுதும் பொழுது வட்ட முகத்திற்கு பொன்னியின் செல்வன் நந்தினியும், நெளிநெளி கூந்தலுக்கு ஓவியர் சாரதியின் ஓவியப் பெண்களும் தான் நினைவில் நின்றனர். மணியம் + சாரதி ஓவியப் பெண்கள் நினைவிலாடிய வர்ணிப்பு அது. உங்கள் நினைவிலும் ஓர் ஓவியரின் நினைப்பு வந்தது யதேச்சையானது என்றாலும் அடிப்படையில் அர்த்தபூர்வமானது.

வருகைக்கும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

வாருங்கள்,வல்லிம்மா.

நான் சொல்ல நினைத்தையே சொல்லி விட்டீர்கள். திருமணமோ, அல்லது பிரம்மோபதேசமோ எதுவாயிருந்தாலும் அந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மாயாவின் கைவண்ணத்தில் இருக்கிற மாதிரி அழைப்பிதழ்களை அமைப்பது மாயாவின் ஸ்பெஷாலிட்டி இல்லையா?..

நானும் அவர் அலுவலகத்தில் அவரது பழைய ஓவியங்களின் வரைவுளைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.

அந்தக் காலத்து வாசிப்பனுவங்கள், அந்தந்த ஓவியங்களுனூடேயே நெஞ்ச்சில் பதிந்து இன்றும் நம்மிடம் பேசிக்கொண்டிருப்பது உண்மைதான்.

தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

//கதையை முதல் தடவையாக படிக்கிறேன். இனிமையாக இருக்கிறது.
மற்ற இரண்டு பாகங்களையும் படித்துவிட்டு வருகிறேன்.//

இந்தப் பகுதிக்கு உங்கள் நல்வரவுக்கு நன்றி, வல்லிம்மா.

ஒட்டு மொத்தமாக படிப்பதற்கு இதுவும் ஒருவிதத்தில் நல்லது தான் என்றாலும் இப்பொழுது படிக்கையில் அந்தந்த நேரத்தில் உங்கள் மனத்தில் படுவதை அங்கங்கு பதிந்து விடுங்கள்! அது நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

தொடர்ந்து வரவேண்டுகிறேன்.

ஸ்ரீராம். said...

என் தந்தையின் கதை ஒன்று அறுபத்தொன்பதுகளில் (நிமிஷங்கள்...வினாடிகள்) விகடனில் வெளிவந்த போது மாயாவின் ஓவியம் அதை கௌரவப் படுத்தியது.

ஜீவி said...

அப்படியா ஸ்ரீராம்! ரொம்ப மகிழ்ச்சி.
தனயன் பெருமைப்படக் கூடிய செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள். '69-களில் அதுவும் விகடனில் என்றால் தேர்ந்த எழுத்துக்களுக்கே சிங்காதனம் கிடைப்பதாய் இருந்த காலம் அது. மாயாவும் விகடனின் ஆஸ்தான ஓவியராய் இருந்த நேரம். என் நினைவுகளைத் திரட்டி யோசித்துப் பார்த்தும் பிடிபடவில்லை. அதனால் தான் பதிலளிக்க தாமதம். நீங்களே சொல்லிவிடுங்கள்.

தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி.

கோமதி அரசு said...

//அந்த பெற்ற தாயின் முகச்சாயலைப் போலவே இருந்த இன்னொருவரின் முகத்தை வெகு நெருக்கத்தில் பார்த்த சந்தோஷத்தில் மாதுரியின் மனம் குதி போட்டது.//

கதை எதிர்ப்பார்ப்பை தூண்டுகிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு

எதிர்பார்ப்புகள் எதிர்பார்ப்பவருக்கு ஏமாற்றம் அளிக்காமல் இருக்க வேண்டும். அதை எதிர்பார்த்தே எதிர்பார்ப்புகளை ஏற்றுக் கொள்கிற மாதிரி ஏற்படுத்த முயற்சிக்கிறேன்.

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கிற பயணத்தில் தொடர் வருகை குறித்து மிக்க மகிழ்ச்சி, கோமதிம்மா.

Related Posts with Thumbnails