மின் நூல்

Friday, March 18, 2011

ஆத்மாவைத் தேடி …. மூன்றாம் பாகம்

இது வரை வந்தது..... முன் கதைச் சுருக்கம்.


கிருஷ்ணமூர்த்தி தமிழகத்தின் அரியலூரைச் சேர்ந்தவர். இறைவனின் பெருமை போற்றும் கதைகள் கூறி உபன்யாசங்கள் செய்பவர். அதன் பொருட்டு பல ஊர்களுக்கு பிரயாணப்படுவதால், பெரும்பாலும் வீட்டை விட்டு விலகி வாசம் செய்வதாகவே அவர் வாழ்க்கை ஆகிவிட்டது. அப்படிப்பட்டவருக்கு திடுமென மனத்தில் ஒருநாள், 'இமயமலை கைலாயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும்'என்று லேசாக கீற்று போல் ஒளிவிட்ட ஒரு நப்பாசை திண்மையான எண்ணமாக உருபெற்று நிஜமாகவே கிளம்பிவிடுகிறார்.

கிளம்பியவர் தில்லி ரயில் நிலைய பிளாட்பாரத்தின் ஒரு ஒதுங்கிய மூலையில் பெஞ்ச்சில் அமர்ந்து ஜம்மு தாவி எக்ஸ்பிரஸூக்குக் காத்திருக்கும் இரவில் அப்படியே அயர்ந்து விடுகிறார். அரைத் தூக்கமா, விழிப்பு நழுவிய நிலையா என்று சரிவர புரியாத ஒரு சூழலில் யாரோ ஒரு பெரியவர் தன் அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுத்த தருணத்தில், 'வந்த வேலை முடியவில்லை, கிருஷ்ணமூர்த்தி! இன்னும் நிறைய இருக்கிறது' என்று நினைவூட்டுகிற தொனியில் அவரிடம் சொன்ன நினைவு அவர் நெஞ்சில் தேங்கி விடுகிறது. நினைவு மீண்டு விழிப்புற்ற போது ஜம்மு தாவி எக்ஸ்பிரஸைத் தவற விட்டு விட்டது அவருக்குத் தெரிகிறது.

அதே நேரத்தில் ஸ்டேஷன் மாஸ்ட்டர் ஆள் அனுப்பி அவரைத் தேடுகிறார். தன்னைத் தேடி வந்தவருடன் இரயில் நிலைய அதிகாரியை அணுகிய கிருஷ்ணமூர்த்திக்கு, மனோகர்ஜி என்பவர் தான் நடத்தும் ஆசிரமத்திற்கு அவரை அழைத்துவர கார் அனுப்பிக் காத்திருப்பதாகத் தெரிகிறது. இரயில் நிலைய பிளாட்பார இருட்டில் சூசகமாகக் கிடைத்த ஆக்ஞை இதுதானோவென்று எண்ணுகிறார். எதற்காக இதெல்லாம் என்று சரியாகப் புரிபடவில்லை என்றாலும் அடுத்தடுத்து வழி நடத்துகிற திசையில் செல்ல அவர் மனம் விரும்புகிறது. இந்தப் பிறவியில் தான் செய்தாக வேண்டிய ஏதோ பணி காத்திருப்பது போலவும், அதைச் செய்வதற்கு தருணம் வந்து தான், அதற்காகத் தன்னை அழைத்துச் செல்வது போலவும் அவருக்குத் தோன்றுகிறது. செய்தாக வேண்டிய அந்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் உற்சாகத்துடன் கிருஷ்ணமூர்த்தி வந்தவருடன் கிளம்புகிறார்.

மகாதேவ் நிவாஸ் என்னும் அந்த ஆசிரமத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. 'ஆத்மாவைத் தேடி' என்னும் தலைப்பில் தில்லியில் மிகப்பெரிய சதஸ் நடத்த மனோகர்ஜி தீர்மானித்திருப்பதும், அந்த சதஸூக்கான முக்கிய பணிகளை ஏற்றுக்கொள்ள அவர் தன்னைத் தேர்ந்தெடுந்திருப்பதாகவும் தகவல் அறிய கிருஷ்ணமூர்த்திக்கு நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே மிகுந்த வியப்பளிக்கிறது. நடப்பதெல்லாம் தெய்வ சங்கல்பம் தான் என்கிற உறுதி அவர் மனசில் கெட்டிப்படுகிறது. இந்த மாபெரும் யக்ஞம் போன்ற உயர்ந்த பணிக்கு தானும் ஒரு துரும்பு போல பங்கெடுத்துக் கொள்ளும் பாக்யம் அருளிய இறைவனின் கருணை நினைத்து மனம் உருகுகிறார். மிகுந்த சிரத்தையுடன் தினமும் அந்த சதஸூக்காக முன்னேற்பாடுகளாக நடக்கும் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது கிருஷ்ண மூர்த்திக்கு மன உற்சாகத்தைக் கொடுக்கிறது. 'கைலாசத்திற்கு பயணம் மேற்கொண்டவன் இங்கு திருப்பப்பட்டது இறைவனின் ஏற்பாடே' என்று நடக்கும் ஒவ்வொரு செயலும் அவருக்கு நிச்சயப்படுத்தி மனதை நெகிழச் செய்கிறது.

கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராதை அவர் மனமறிந்து நடக்கும் குணவதி. மகன் அர்ஜூன், மருமகள் சுபா என்று குடும்ப உறவுகளுக்குத் தன்னைத் தத்தம் செய்தவள். அர்ஜூன் சி.ஏ. பண்ணியவன். அரியலூரில் குடும்பத்தை வைத்துக் கொண்டு தினமும் சொந்த ஆடிட் ஆபீசுக்கு இரயிலில் திருச்சி சென்று வருபவன். திருமணமான அர்ஜூனின் சகோதரி கிரிஜா அமெரிக்காவில் இருக்கிறாள். அவளுக்கு ரிஷி என்று ஒரே பையன்.

கிருஷ்ணமூர்த்தியின் மாமா பெண் மாலதி என்கிற மாலு. அவள் தன் கணவர் சிவராமனுடன் அரியலூர் வந்திருப்பவள் தொலைபேசியில் கிருஷ்ண மூர்த்தியுடன் தொடர்பு கொண்டு, தன் கணவருடன் காசிப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், தில்லி வந்து கிருஷ்ணா தங்கியிருக்கும் ஆசிரமத்திலேயே அவரைச் சந்திப்பதாகவும் சொல்கிறாள். அதன்படியே தில்லி சென்ற இருவரும் அந்த மகாதேவ் நிவாஸின் ஆசிரம நடவடிக்கைகளில் மனம் பறிகொடுத்து அந்த ஆசிரமத்தை நடத்தி வரும் மனோகர்ஜியின் விருப்பப்படி அங்கேயே தங்கி 'ஆத்மாவைத் தேடும்' அவர்களின் தேடலில் தாங்களும் பங்கு கொள்வதில் மன மகிழ்ச்சி கொள்கின்றனர்.

சிவராமன்- மாலு தம்பதியினரின் ஒரே மகள் தமயந்தியும் தன் கணவருடன் அமெரிக்காவில் வாசம் செய்கிறாள். அவளுக்கு ஆறு வயதில் மணிவண்ணன் என்று ஒரே பையன்.

அமெரிக்காவின் ஃபால் சீசன் ரசனைக்காக ப்ளு ரிட்ஜ் பார்க் வே என்னும் இடத்திற்கு கிரிஜாவின் குடும்பமும் தமயந்தியின் குடும்பவும் டூர் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருக்கின்றனர். அந்தச் சுற்றுப்பயணத்தில் தன் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருக்கிற மாதுரி என்கிற பெண்ணை அவர்களுக்கு சந்திக்க நேரிடுகிறது. தமயந்திக்கு அந்த மாதுரி, தன் அம்மா மாலதி மாதிரியே தோற்ற ஒற்றுமை கொண்டிருப்பது வியப்பேற் படுத்துகிறது. மாதுரி தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து ஒரு பகல் உணவில் பங்கு கொள்ள தமயந்தியையும் கிரிஜாவையையும் அழைக்கிறாள்.


(இனி வருவது....)

14 comments:

சமுத்ரா said...

hmm good

ஸ்ரீராம். said...

முன்கதைச் சுருக்கம் கொடுத்ததற்கு நன்றி. தொடர வசதியாக இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

முதல் முறை வருகிறேன். .
தளம் அருமைகாக. எழுத்துக்கள் கோர்வையாக.
அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்..

தொடர்ந்து எழுதுங்கள்..

ஜீவி said...

@ சமுத்ரா..

'hmm..' என்பது தமிழில் 'உம்ம்'.. என்று சொல்கிற மாதிரி யோசனையில் சொல்கிற சொல்லா, சமுத்திரா?..

நன்றாயிருக்கிறது என்று சொன்னமைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆத்மாவைத் தேடும் விவரக் குறிப்புகள் தான் வைரம். கதை என்னவோ வைரத்தைப் பதித்து புரொஜெக்ட் பண்ணிக் காட்ட எடுத்துக் கொண்ட தங்கப் பொட்டுதான்.
இருந்தாலும் அந்த வைரத்தின் மேன்மை கருதி, நன்றாகப் பதித்துத் தரவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. பார்க்கலாம்.

தொடர்ந்து வாருங்கள். நன்றி.

ஜீவி said...

@ அன்புடன் மலிக்கா

'வருக, வருக' என்று வரவேற்கிறேன்.

தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

KABEER ANBAN said...

ஓ ! மூன்றாம் பாகமா!! வெரிகுட். தொடரக் காத்திருக்கிறேன்.

Matangi Mawley said...

enna oru ezhuththu, sir!

கோமதி அரசு said...

ஆத்மாவைத் தேடி மூன்றாம் பாகத்தை முதலிருந்து படிக்க ஆவல்.

முன் கதை சுருக்கம் அருமை.

நீங்கள் வைரத்தை நன்றாக பதித்து தருவீர்கள்.

அதைப் பார்க்க ஆவல்.

ஜீவி said...

@ கபீரன்பன்

ஆமாம், கபீரன்ப! ஒருவிதத்தில் இடையில் நிறுத்தி வைத்திருந்ததைத் தொடர நீங்களும் ஒரு காரணம்.

ஆவுடையக்காளைப் பற்றி நீங்கள் எழுதியவற்றைப் படித்ததும், இந்த
'ஆத்மாவைத் தேடி'த் தொடரைப் பாதியில் நிறுத்திவைத்திருக்கிறோமே என்கிற எண்ணம் இம்சித்தது. உடனே தொடரைத் தொடர்ந்து விட்டேன்.
தொடங்கியது தொடர இறைவனின் அருள் வேண்டும்.

தொடர்ந்து கூட வரவேண்டும். நன்றி.

ஜீவி said...

@ Matangi Mawley

மிக்க நன்றி, மாதங்கி! மூன்றே சொல்லில் பெரும் பலத்தை உள்ளடக்கித் தந்திருக்கிறீர்கள். தொடர்ந்து செல்ல துணையாயிருக்கும். தொடர்ந்து வாருங்கள். தொடர்ந்து செல்லலாம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஆமாம்.. சென்ற இரண்டு பாகங்களைத் தொடர்ச்சியாகப் படித்து விட்டீர்கள், அல்லவா?.. இப்பொழுது அத்தியாயம் அத்தியாயமாகத் தொடர்ந்து படிப்பது இன்னொரு மாதிரியான ரசனையுடன் இருக்கும் தான். மற்ற இரண்டு பாகங்கள் மாதிரி இல்லாமல், இந்த மூன்றாம் பாகத்திலிருந்து புதுமாதிரியான ஒரு முறையில் எழுத நானும் யோசித்திருக்கிறேன். தங்களுக்குப் பிடிக்கும். நிறைய பகிர்ந்து கொள்வோம்.

தாங்கள் அளித்திருக்கும் நம்பிக்கையும் துணையாயிருக்கும்.
மிக்க நன்றி, கோமதி அரசு!

Shakthiprabha said...

மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்....

ஜீவி said...

@ Sakthiprabha

கலந்து கொண்டமைக்கு நன்றி, ஷக்தி.. விரைவில் தொடர்ந்து விடுகிறேன்.

Related Posts with Thumbnails