மின் நூல்

Saturday, October 29, 2011

பார்வை (பகுதி-5)

                    அத்தியாயம்--5

"நீ சுசீலா இல்லை?" என்று சுசீலாவை முதலில் அடையாளம் கண்டுகொண்டது தலைமை மருத்துவர் தான். அவரின் பெண் குரலைக் கேட்டு, 'ஓ! தலைமை மருத்துவர் பெண் போலும்' என்று நினைத்துக் கொண்டேன்.

"ஆமாம், நீங்க?.."

"அந்த மரியாதையெல்லாம் வேண்டாம், சுசீலா.." என்று சிரித்த மருத்துவர், "என்னடி இப்படி என்னை நீ அடியோடு மறந்து போய்ட்டே?" என்று உரிமை கலந்த அங்கலாய்ப்புடன் சொன்னது எனக்குக் கேட்டது.

சுசீலாவிடமிருந்து பதிலே இல்லை. யோசிக்கிறாள் போலும். நானும் அவர் யாராயிருக்கும் என்று யோசிக்கலானேன். சுசீலாவைத் தெரிந்தவர்களில் பாதிப்பேரை எனக்கும் தெரியும்.

"சரியான 'இதுடி' நீ!" என்று தலைமை மருத்துவர் சுசீலாவைக் கிண்டல் செய்த பொழுது, "ஓ.. கண்டுபிடிச்சிட்டேன்.." என்று சுசீலா சொல்கின்ற பொழுதே, "நீங்க சாந்தி தானே?" என்று நான் கேட்டதைக் கேட்டு "குட்.. அங்கிள் கரெக்டா கண்டுபிடிச்சிட்டாரே!" என்று பதில் வந்ததில் வியப்பின் பூச்சு வெளிப்படையாக எனக்குத் தெரிந்தது.

"நானே சொல்லியிருப்பேன்; அதுக்குள்ளாற அவர் சொல்லிட்டார்!" என்று சுசீலா சொன்னாலும், அவள் தான் அவளுடைய சிறுவயது பிரியத் தோழி சாந்தி என்று நம்புவதில் சிரமப்படுவது போல குரலில் தெரிந்தது.

"எப்படி கண்டுபிடிச்சீங்க, அங்கிள்?"

"உங்கள் பேமஸ் அந்த 'இதுடி' தான் காட்டிக் கொடுதிட்டது."

"பாத்தையா.. இது கூட உனக்குத் தெரியலையே?.. அங்கிளுக்குப் பாரு. எவ்வளவு ஆப்ஸர்வேஷன் பாரு."

"அது தான் இப்போ அவருக்கு ரொம்ப உதவியாயிருக்கு.." என்று கைத்துப்போன சிரிப்பொன்றை சுசீலா உதிர்த்த பொழுது, சாந்தி அவளைத் தேற்றினாள். "கவலையை விடு. அங்கிளோட மெடிகல் ரிப்போர்ட் அத்தனையும் படிச்சிட்டேன். இங்கேயும் சில நவீன டெஸ்ட்கள் எடுக்கறதுக்கு வசதிகள் இருக்கு. நல்ல நல்ல எக்ஸ்ப்ரட் டாக்டர் டீமும் இருக்கு. புண்ணலாம் கிட்டத்தட்ட குணமாயிட்டதாலே கவலை இல்லே.. இதுக்கு மேலே பார்வை கிடைக்கறத்துக்கு நம்மாலே முடிஞ்சதைச் செய்யலாம். இறைவன் கருணையும் ஒண்ணு சேர்றச்சே எல்லாம் நல்லபடியா நடக்கும்"

"எனக்கு எல்லாமே கனவு போல இருக்கு, சாந்தி! உன்னை இங்கே பார்ப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலே. நீ இப்போ சொன்னையே இறைவன் கருணைன்னு.. அதோட முழு அர்த்தத்தை இப்போ நா உணர்றேன்".

"நானும் உன்னை எதிர்பார்க்கலே, சுசீ! ஒண்ணை நெனைக்கறச்சே தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. நான் முந்தாநாளே ஒரு கான்பரன்ஸூக்காக அமெரிக்கா போயிருக்கணும். கடைசி நேரத்லே அது ஒரு வாரம் ஒத்திப்போனதாலே நாலு நாள் கழிச்சுன்னு பிளைட் டிக்கெட்டை மாத்திகிட்டேன். நேத்து தான் அங்கிள் மெடிக்கல் ரிப்போர்டைப் பாத்தேன். பேஷண்ட் ஊர் திருவையாறுன்னு தெரிஞ்சதும் ஏதுடா நம்ம ஊராச்சே, யாரா இருக்கும்னு மனசிலே ஒரு குறுகுறுப்பு இருந்திச்சு. ஆனா, அது அங்கிளா இருக்கும்னு நான் நெனைச்சுக் கூடப்பாக்கலே."

"அப்படியாம்மா.. அப்போ அடுத்த வாரம் நீ--நீங்க-- அமெரிக்கா போயாகணுமா?"

"ஆமாம், அங்கிள்! போயே ஆகணும். இந்த சான்ஸை மிஸ் பண்ணக்கூடாது. இரண்டே வாரத்திலே திரும்பிடுவேன். அதுக்குள்ளே பிரிலிமினரி எக்ஸாம்லாம் பண்ணி முடிச்சிடலாம். டோண்ட் ஒர்ரி.." என்றாள் சாந்தி.

நடக்கற நிகழ்ச்சிகளைப் பாத்து எல்லாமே எனக்கு பிரமிப்பா இருந்தது. எங்கள் கல்யாணத்திலேயே 'இவ தாங்க என் க்ளோஸ் ப்ரண்ட் சாந்தி'ன்னு சுசீலா சாந்தியை கைபிடித்து அணைத்து எனக்கு அறிமுகப்படுத்தியது நினைவுக்கு வந்தது. திருவையாற்றில் எங்கள் வீட்டிற்கு அடுத்த தெருவில் இருந்தாள் சாந்தி. சுசீலாவும் அவளும் ஒண்ணா மியூசிக் கிளாஸுக்கு போய்க் கொண்டிருந்தார் களாம். ப்ளஸ் டூக்கு அப்புறம் சாந்திக்கு மெடிகல் சீட் கிடைத்ததாம். அவள் அப்பா வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்த வியாபாரி ஆகையால் கிடைச்ச வாய்ப்பை சந்தோஷத்தோட ஏத்துக்க முடிஞ்சதாம்.

சாந்தி மெடிகல் முடிக்கறத்துக்குள்ளேயே எங்கள் கல்யாணம். லீவ்லே திருவையாறு வந்தா எங்களை வந்து சந்திக்காம இருக்க மாட்டாள். சாந்தியோட பந்தா இல்லாத ரொம்ப சிம்பிளான குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவள் குடும்ப சூழ்நிலைகளோட ஒப்பிட்டுப் பார்க்கறச்சே நாங்கள் ரொம்ப கீழே. இருந்தாலும் சுசீலா மேலே சாந்தியும், சாந்தி மேலே சுசீலாவும் வைச்சிருக்கிற அன்புக்கு இந்த சமூக அந்தஸ்த்தெல்லாம் குறுக்கே வரலே.

சாந்தியோட அப்பா காலமானதற்கு அடுத்த வருஷம் அவங்க கல்யாணம். சென்னைலே தான். நாங்க ரெண்டு பேருமே போயிருந்தோம். அவள் கணவனும் டாக்டர் தான். கல்யாணமான கொஞ்ச நாள்லே ஏதோ ரிசர்ச்சுக்காக ரெண்டு பேருமே லண்டன் போகப்போவதாக சாந்தி சொல்லியிருந்தாள். எப்போ திரும்பி வந்தாங்கன்னு தெரியாது. ஊரில் இருந்த சொத்துக்களையும் விற்று அவங்க எல்லாருமே மெட்ராஸில் செட்டில் ஆயிட்டதாலே அவ்வளவு தொடர்பு இல்லாம போச்சு.

அறுந்த தொடர்பு இப்போ மறுபடியும் சேர்ந்திருக்கு. ஒவ்வொண்ணும் நடக்கறச்சே எதுக்கு இதெல்லாம்னு தெரியறதில்லே. நாமும் இதான் வாழ்க்கை போக்கு போலன்னு ரொம்ப மூளையை கசக்கிக்கறதில்லே. ஆனா பிறந்து ஞாபகம் தெரிஞ்சதிலேந்து, இப்போ வரைக்கும் நடந்த ஒவ்வொண்ணையும் நெனைச்சுப் பாத்தா ஏதோ இழைப்பின்னல் மாதிரி ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தப்படுத்தி முடிச்சு போட்டிருக்கோன்னு நெனைக்கத் தோண்றது. இதுக்கு அப்புறம் அதுன்னு ஒவ்வொண்ணும் ஏதோ வரிசைக்கிரமத்திலே வரிசைபடுத்தி வைச்சிருக்கிற மாதிரி தெரியறது. எதுக்கு அப்புறம் எதுன்னு தெரியாததினாலே தான் இந்த அல்லாடல் எல்லாமே. தெரிஞ்சிட்டாலும் நிம்மதி நிச்சயம் குலைஞ்சு போய்டும் போலவும் இருக்கு'.

எதுக்கோ சாந்தி சிரித்த பொழுது என் நினைவிழை அறுந்தது. அந்த சிரிப்பைத் தொடர்ந்து, "சரியான இதுடி நீ"ன்னு சுசீலா சொன்ன போது, நானும் சிரித்து விட்டேன்.

"என்ன அங்கிள்?"

"ஒண்ணுமில்லேம்மா. உன்னைப் பார்த்த குஷிலே உன்னோட 'இதுடி' இவளுக்கும் தொத்திகிட்டது பாத்தையா?"

"கரெக்ட் அங்கிள்.."

"நாங்க ரெண்டு பேரும் சிரிச்சே ரொம்ப நாள் ஆயிட்டதும்மா.. அந்த சந்தோஷத்தை எங்களுக்கு மீட்டுக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிம்மா.." ன்னு நான் சொன்னப்போ, அங்கே நிலவின ஒரு நிமிஷ மெளனம் அசாத்திய கனம் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

"அங்கிள்! உங்களுக்கு ஒண்ணு சொல்லணுமே," என்றாள் சாந்தி திடுதிப்பென்று.

"என்னம்மா?.."

"மெடிகல் பக்கம் நான் போய்ட்டாலும், சின்ன வயசிலே சங்கீதத்லே வைச்சிருந்த ஈடுபாட்டை விட்டுடலே.. அவருக்கும் இதிலே ரொம்ப பிடித்தம். நேரம் கிடைச்ச போதெல்லாம் சபா, கச்சேரின்னு போயிடுவோம். தவிர, தியாகராஜ சுவாமிகள் பேர்ல மைலாப்பூர்லே ஒரு மியூசிக் ஸ்கூல் வேறே நடத்திண்டு வர்றோம். கிட்டதட்ட இருநூறு ஸ்டூண்ட்ஸ் படிக்கறாங்க.." என்று மூச்சு விடாமல் சாந்தி சொல்கையில் ரொம்பவும் பெருமையா இருந்தது.

கண்ணால அதையெல்லாம் பார்க்காட்டா என்ன, மனசளவில் அத்தனையையும் ரசிச்சா போச்சுன்னு நெனைச்சிண்டேன். அப்படி ரசிக்கறத்துக்கும் ஒரு சக்தி கிடைச்சிட்ட மாதிரி எனக்கே நன்னா தெரிஞ்சது.

(இன்னும் வரும்)

16 comments:

வல்லிசிம்ஹன் said...

முதிர்ந்த பார்வையில் வரும் இந்தக் கதையை இத்தனை நாட்கள்
நான் படிக்காமல் இருந்திருக்கிறேன்.
மனித மன ஓட்டங்களில் இந்தக் கதை வெகு யதார்த்தமாக இருக்கிறது.
நல்லபடியாக அவருக்கு வாழ்வு அமைய வேண்டும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பார்வை நல்லாவே போக வைக்குது. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

வாழ்க்கையில் சில வார்த்தைகள், சில நொடிகள் மறக்க முடியாதவை. மறந்து விட்டோம் என நாம் நினைப்பவை திடீரென்று வந்து நம்மை ஆச்சரியப் படுத்தும். அந்த “ இதுடி “அது போன்றதாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். தொடருகிறேன்.

G.M Balasubramaniam said...

சிநேகிதியின் கணவர் “அங்கிளா”?வயசு வித்தியாசம் அதிகமோ.?கதையில் ட்விஸ்ட் இருக்கும் போலிருக்கிறதே.

சிவகுமாரன் said...

யின் சந்தேகம் தான் எனக்கும் வந்தது. அங்கிள் பிரயோகம் சரியா?

கதை நன்றாகப் போகிறது. தொடர்கிறேன்

Geetha Sambasivam said...

கதைப்போக்கு ஓரளவு பிடிபடுகிறது. பார்வை மிக துல்லியம்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளின் நேர்த்தியில் தோய்ந்து ஒவ்வொருவரையும் ரசித்து படித்தவர்கள் நீங்கள். ஒரு நாற்பதாண்டு காலத் தமிழ் பத்திரிகை உலகம் உங்களுக்கு அத்துப்படி. உங்களிடமிருந்து வரும் பாராட்டுகள் மேலும் எழுதுவதற்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கின்றன.
தங்களுக்கு மிக்க நன்றி, வல்லிம்மா.

ஜீவி said...

@ வை.கோ.

தங்கள் தொடர் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி, கோபு சார்!

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

உணர்ந்து தாங்கள் சொல்வது சரியே. அப்படியான அனுபவம் ஏற்படுவது உண்டுதான்.

நெருக்கமான பெண்கள் மத்தியில் நேசத்துடன் புழங்கும் ஒரு ஸ்பெஷல் வார்த்தையை உபயோகிக்க நினைத்தேன். சிலர் சில வார்த்தைகளை வழக்கமாக உபயோகப்படுத்துவார்கள். சில வார்த்தைகள் சிலரை அடியாளப் படுத்துவதாகவும் அமைந்து விடுவதுண்டு.

அப்படி ஒரு வார்த்தையாக, இந்த 'இதுடி'யை அமைத்துக் கொண்டேன். அவ்வளவு தான்.

ரசனையுடனான தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, ஜிஎம்பி ஐயா!

ஜீவி said...

@ G.M. Balasubramanaim

தன்னிலும் மூத்த ஒரு மூன்றாம் நபரை விளிக்கும் மரியாதைச் சொல், இந்த அங்கிள்! அவ்வளவுதான்!

சென்னையில் இந்த அங்கிளும், ஆண்ட்டியும் சிறார்களிலிருந்து வயது வந்தோர் வரை கொடிகட்டிப் பறக்கும் ஒரு வார்த்தைப் பிரயோகம்.

சினேகிதியின் கணவரை வேறு எப்படி அழைத்தால் நன்றாக இருக்கும்?.. நீங்களே சொல்லுங்களேன்!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

கதைப் போக்கு உங்கள் போக்கில் பிடிபடுவதற்குக் காரணம், உங்களின் இதுவரை வாசித்தவைகளின் வாசிப்புத் துல்லியமே!

அப்படி லேசில் பிடிபட்டுவிடாமல், வித்தியாசப்படுத்த வேண்டும் என்று தான் நானும் பிரயத்தனப் படுகிறேன்.

பார்க்கலாம்.

ஜீவி said...

@ சிவகுமாரன்

தொடர் வருகைக்கு நன்றி, சிவா!

எனக்கு வயது 70. ஜி.எம்.பி. ஐயாவுக்கு அவர் குறிப்பிட்டிருக்கிறபடி
72. இரண்டு வயதே வித்தியாசம். இருந்தும் அவர் என்னைவிடப் பெரியவர் ஆதலால், பல பின்னூட்டங்களில் அவரை ஐயா என்றே அழைப்பேன்.

வை.கோ.சார் என்னை விட வயதில் சிறியவர். ஆனாலும் பெரியவர். அதனால் அவரை சார் என்றே அழைப்பேன்.

சார் என்னும் ஆங்கில வார்த்தையின் தமிழ் வடிவம் தான் ஐயா. இருந்தும் ஐயா என்று அழைக்கும் பொழுது நம்மை விடப் பெரியவர் ஒருவரை விளிக்கிற மாதிரி இயல்பாகவேத் தோன்றுகிறது, இல்லையா? இந்த ஐயா என்று அழைப்பதை எனக்குப் பழக்கப்படுத்தியவர் பதிவர் குமரன்.
அவரும் பதிவர் கவிநயாவும் என்னை அப்படித் தான் அழைப்பர்.

அதே மாதிரித்தான் அங்கிளும். அதை ஆங்கிலத்தில் சொல்லும் பொழுது தன்னை விடப் பெரியவர் ஒருவரை மரியாதையாக அழைப்பதாகத் தோன்றுகிறது. இதெல்லாம் நாம் அர்த்தப்படுத்திக் கொள்வது தான் என்றாலும் சரியே.

ஒரு டாக்டர் ஒரு நோயாளியை அவர் பெயர் சொல்லி அழைப்பார். இல்லை என்றால், இத்தனாம் நம்பர் கட்டில் பேஷண்ட் என்பார். அதைத் தாண்டியதான தெரிந்து பழக்கப்பட்டவர், இன்று தன் பேஷண்டாகியிருக்கிறார் என்கிற முன்னுரிமையிலும், தன் சினேகிதி சுசீலாவின் கணவர் என்கிற அந்தஸ்த்திலும் தன்னை விட வயதில் பெரியவரை அங்கிள் என்று அழைக்கிறார் என்று கொள்வோம்.

இராஜராஜேஸ்வரி said...

அங்கிளுக்குப் பாரு. எவ்வளவு ஆப்ஸர்வேஷன் பாரு."/
ஒருபுலன் பாதிக்கப்பட்டதும், மற்ற உணர்வுகள் சிலிர்த்து கூர்மையடைந்ததிருக்கின்றன்.

அருமையான ஆற்றொழுக்கான தடங்கலில்லாத கதைப் போக்கு.
பாராட்டுக்கள்..

G.M Balasubramaniam said...

கதையை ஒரே மூச்சில் படிக்க முடியாத சூழலில் இந்த அங்கிள் பிரயோகம் சில ட்விஸ்ட்கள் இருக்குமோ என்று எண்ண வைத்தது.நீங்கள் பதில் கூறிவிட்டீர்கள். நன்றி.

Shakthiprabha (Prabha Sridhar) said...

ஸ்னேகிதியின் கணவர் ஏன் அங்கிள் ஆனார்? பாவம் பெயரைச் சொல்லியே விளிக்கலாமே ...

தொடர்கிறேன்...

ஜீவி said...

@ Sakthiprabha

எந்தப் பகுதியிலோ இதற்குத் தெளிவாக பதிலும் சொல்லியிருக்கிறேன். தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் அவர் கடைசி வரை தன் பெயரைச் சொல்லவே இல்லை!

Related Posts with Thumbnails