மின் நூல்

Wednesday, October 26, 2011

பார்வை (பகுதி-4)

                     அத்தியாயம்--4

ந்த அலறல் என்னுள் ஏற்படுத்திய கிளர்ச்சி விவரிக்க இயலாத ஒண்ணு. 'விஸ்வநாதன் வந்துவிட்டான்' ங்கற சந்தோஷத்தில அந்தஷணமே மோட்டார் மரக்கூடின் வெளிய வரத் துடிச்சுத் திரும்பினேன். தூக்கிய வெல்டிங் மிஷின் தூக்கியபடி அப்படியே 'ஆன்' நிலைலே இருந்தது தான் தப்பாப் போய்ட்டது. முகத்தை மூடியிருந்த கவசம் சரிஞ்சு கீழே விழ, பாதுகாப்பற்றிருந்த என் முகத்தை பளபள பிரகாசத்தோடு வெல்டிங் மிஷினிலிருந்து புறப்பட்ட ஜோதி பொசுக்க, அலறித் துடிச்சு மயங்கி விழுந்திருக்கிறேன்.

என்ன நடந்ததுன்னு பின்னால் தான் தெரிஞ்சது.. என் அலறலைக் கேட்டு வெல்டிங் செக்ஷனின் இருந்த அத்தனை பேரும் ஓடி வந்திருக்காங்க.. மரக்கூண்டைப் புரட்டிப் போட்டு அடியிலே விழுந்து கிடந்த என்னை ஆசுபத்திரிக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கு போய்த் தான் என் இரண்டு கண்களையும் குறி வைச்சுநெருப்பு சுட்டிருப்பது தெரிஞ்சு, முதலுதவி மட்டும் செஞ்சிட்டு, 'ஆப்தமாலஜி' சர்ஜனின் பார்வைக்கு அனுப்பியிருக்காங்க.. அந்த கண் டாக்டரின் சிபாரிசின் பேரில் தான், இந்த ஆசுபத்திரியை விட கூடுதலா வசதிகொண்ட தஞ்சாவூர் கண் மருத்துவமனை ஒண்ணுலே உடனடியாக என்னை அட்மிட் செஞ்சிருக்காங்க...

பார்வை நரம்புகள் முழுசா டேமேஜ் ஆனது தான் பெரிய விஷயமாப் போயிட்டது. இல்லாட்டா, மாற்றுக்கண் அறுவை சிகித்சை செய்திருக்கலாமாம். ஆசுபத்திரியிலலே நெனைவு திரும்பினதும், முதலிலே என நினைவுக்கு வந்தது தம்பி விஸ்வநாதன் தான். உடனே அந்த அலறல் மங்கலா தேய்ந்த நினைவில் தட்டுப்பட்டு விட்டுப்பட்ட தொடர்ச்சியா கொஞ்சம் கொஞ்சமா பீறிட்டுக் கிளம்பித்து. என்னைப் பாக்க பாக்டரிக்கு வந்த விஸ்வநாதன் இப்போ இங்கே தான் இருக்கிறானான்னு தெரிஞ்சிக்கற பாசத்தில் கை பரபரத்தது. அந்த நிமிஷமே அவன் அருகாமையை மனசு ரொம்பவும் விரும்பியது. அவனைப் பார்த்து ஆரத்தழுவ விழைந்த பொழுது தான் அந்தகார இருட்டு சூழ்ந்து என்னை அடிச்சுப் போட்ட உண்மை தெரிஞ்சது.. மனசுக்குள்ளேயே தவிக்கும் என் தவிப்பைக் காணப் பொறுக்காம, நடந்த விவரங்கள சுசீலா தேம்பலுக்கிடையே சொல்லக் கேட்டு மனசு இருண்டது.

கடைசியில் என் தம்பி திரும்பி வரவேயில்லைன்னு தெரிஞ்சது.. மெஷின் செக்ஷனில் இருந்த மெக்கானிக் விஸ்வநாதனை ஒரு வேலைக்காகத் தேடித் தவிச்சிண்டிருந்த போர்மேன் தணிகாசலம் அவனைப் பார்த்த வேகத்தில் அப்படி ஆத்திரத்தில் கூவி அழைத்து அலப்பறை செஞ்சிட்டாராம்.. மெக்கானிக் விஸ்வநாதனைத் தேடிண்டிருந்த ஆத்திரத்தில் தணிகாசலம் கத்த, அந்த விஸ்வநாதன் என் தம்பி விஸ்வநாதன்னு தப்பா புரிஞ்சிண்டு பதட்டத்தில வெல்டிங் மிஷினை என் மேலே நானே போட்டுக்கொள்ள, சை! என்ன ஒரு வேதனை?.. எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போட்டு என்னலாம் நடந்து போச்சுங்கறதை நெனைச்சுப் பார்க்கையில் தன்னிரக்கத்தில் தொய்ஞ்சு போயிட்டேன்.. தொடர்ந்த யோசிப்பு, எனக்கு நானே வருந்துவதை முதலில் நிறுத்தியது. யோசிப்பதைத் தாண்டியதான நிதர்சனம் என்னை நிலைகுலைய வைக்காமல் காப்பாற்றியது. 'இதெல்லாம் நடக்க வேண்டியிருக்கிறது, அதனால் நடந்தது' என்கிற வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக கீற்றாக மனத்தில் சுடர் காட்டி, ஞானத் தீயாகப் பற்றிக் கொண்டது... மன வெளிச்ச விளக்கேற்றி இந்த இருட்டை வெல்ல வேண்டும்ங்கற உத்வேகம் பிறந்தது.

கடைசியிலே சிதைஞ்ச பார்வை நரம்புகளை மீட்டெடுக்க முடியாதுன்னு உறுதியாச் சொல்லிட்டாங்க.. இருந்தாலும் வெப்பம் பொசுக்கினப் புண்களை ஆற்றுவதற்கும் மேற்கொண்டான மேம்பட்ட சிகித்சைக்கு சென்னைக்குப் போய் பார்த்துக்கறது அவசியமான ஒண்ணுன்னு அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அபிப்ராயப்பட்டார். தனக்குத் தெரிஞ்ச ஒரு கண் ஆசுபத்திரி முகவரியும் கொடுத்து அறிமுகக் கடிதமும் தந்தார். நான் வேலைபார்த்த மோட்டார் தொழிற்சாலையின் முதலாளி மேற்கொண்டாகும் அத்தனை வைத்தியசெலவுகளையும் மனமுவந்து ஏத்துக்கத் தயாரா இருந்தார்.

சென்னை வந்தோம். 'இமைகள் மருத்துவமனை'ங்கற அந்த ஆஸ்பத்திரி ஆழ்வார் பேட்டைலே இருந்தது. அங்கே போனப்ப்போ தான் கண் சிகித்சைக்கு மிகவும் கியாதி பெற்ற மருத்துவமனை அதுன்னு தெரிஞ்சது.. மருத்துவமனையை ஒட்டியே மருத்துவ மனை சார்ந்த தங்கும் விடுதி ஒன்றும் இருந்தது. கம்பெனி முதலாளி நாங்க ரெண்டு பேரும் அங்கேயே தங்கிண்டு நான் சிகித்சை பெறுவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செஞ்சிருந்தது, மனுஷ ரூபத்லே கிடைச்ச இறைவனின் கருணைன்னு தான் சொல்லணும்..

முதல் நாள் என்னைப் பற்றி எனக்கு ஏற்பட்ட விபத்து பற்றின்னு எல்லாக் குறிப்புகளையும் தயாரிச்சு, உதவி மருத்துவர் ஒருவர் என்னை ஆரம்ப சோதனைகளுக்கு உட்படுத்தி அன்னிக்கே உள்நோயாளியா அந்த ஆசுபத்திரியில் சேர்த்திட்டாங்க.. அடுத்த நாள் தலைமை மருத்துவர் என் கண்களை சோதனை செய்வார்ன்னு சொல்லியிருந்தாங்க...

அடுத்த நாள் அவங்க குறிச்சிருந்த நேரத்தில தலைமை மருத்துவர் எனக்காக ஒதுக்கியிருந்த அறைக்கு வந்தப்போ தான் எங்களுக்கு ஒரு ஆச்சரியம் இங்கே வந்த இந்த ரெண்டு நாளாக் காத்திருந்தது தெரிஞ்சது.


(இன்னும் வரும்)


8 comments:

ஸ்ரீராம். said...

என்ன சார் மறுபடி முக்கியமான இடத்துல தொடரும் போட்டுட்டீங்க....அளவு கடந்த பிரியமோ பாசமோ வைப்பதன் விளைவு விபரீதமாக இருக்கிறது. தொடர்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எப்படியாவது அவருக்கு கடைசியில் பார்வை கிடைக்க வேண்டுமே என்ற கவலையுடன் தொடர்கிறேன். vgk

G.M Balasubramaniam said...

தொடர்ந்த யோசிப்பு, எனக்கு நானே வருந்துவதை முதலில் நிறுத்தியது. யோசிப்பதைத் தாண்டியதான நிதர்சனம் என்னை நிலைகுலைய வைக்காமல் காப்பாற்றியது. 'இதெல்லாம் நடக்க வேண்டியிருக்கிறது, அதனால் நடந்தது' என்கிற வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக கீற்றாக மனத்தில் சுடர் காட்டி, ஞானத் தீயாகப் பற்றிக் கொண்டது... மன வெளிச்ச விளக்கேற்றி இந்த இருட்டை வெல்ல வேண்டும்ங்கற உத்வேகம் பிறந்தது

கதையினூடே இந்தக் கருத்து எனக்கு மிகவும் பிடித்தது. பாராட்டுக்கள் .தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

'இதெல்லாம் நடக்க வேண்டியிருக்கிறது, அதனால் நடந்தது' என்கிற வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக கீற்றாக மனத்தில் சுடர் காட்டி, ஞானத் தீயாகப் பற்றிக் கொண்டது... மன வெளிச்ச விளக்கேற்றி இந்த இருட்டை வெல்ல வேண்டும்ங்கற உத்வேகம் பிறந்தது.

எத்தனை பேருக்கு இந்த விவேகம் வரும்! ரொம்ப ரசிச்சேன் இந்தக் குறிப்பிட்ட பகுதியை இரண்டு மூன்று முறை படிச்சேன். மன உறுதி அதிகமே.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

'அளவுகடந்த' என்று ஒரு அணை போட்டு பிரியத்திற்கும், பாசத்திற்கும் ஒரு எல்லை வகுத்திருக்கிறீர்கள்.
உணர்வுகள் இல்லையெனில், மனிதன் இல்லை. அது சிலசமயங்களில் கடந்தும் போகும்; கட்டுப்பாட்டிற்குள் இருக்கவும் செய்யும். நடக்கும் விஷயத்திற்கும் நமக்கும் இருக்கும் சம்பந்தம் அந்த அளவுகோலைத் தீர்மானிக்கும். 'கொட்டித் தீர்த்து விடு' என்பார்கள். அடக்கி வைத்தாலும் பல சமயங்களில் ஆபத்தாகிப் போகிறது.
'தான் ஆடாவிட்டாலும், சதையாடும்' என்று பலசமயங்களில் இந்த உணர்வுகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதில்லை.

தொடர்வதற்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ வை. கோபால கிருஷ்ணன்

'எப்படியாவது' என்கிற அந்த ஒற்றை வார்த்தையில் அத்தனை உணர்வுகளையும் தேக்கி வைத்திருக்கிறீர்கள்! ஈடுபாட்டுடன் கூடிய தங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றி, கோபு சார்!

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

உங்களுக்குப் பிடிக்கும் என்று எனக்கும் தெரியும். அதை எடுத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி, ஜிஎம்பி சார்!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

வழி வழியாக வந்திட்ட நமது சாஸ்திரங்கள் சொன்னது தான். அதை ஒரு கதையில் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் வெளிப்பாடாகச் சொல்லும் பொழுது மிகுந்த அழுத்தம் பெறுகிறது. அவ்வளவு தான். இதுவும் உங்களுக்கும் தெரிந்தது தான். அதனால் கதையில் அந்த வாய்மை மொழிகளை தகுந்த இடத்தில் உபயோகித்திருப்பதைப் பாராட்டியதாகக் கொள்கிறேன். பெருமையெல்லாம் பெருமைபெற்ற நமது சாஸ்திரங்களை யேச் சாரும்.

'நடக்க வேண்டியவை நடக்கின்றன' என்று பாஸிட்டிவாக எண்ணம் கொள்வதில், இனி நடப்பவற்றை எதிர்கொள்ளும் சக்தியும் புதைந்திருப்பதைப் பாருங்கள். இது ஒரு மேலாண்மைக் கல்வியே.

தகுந்த இடத்தைத் தேர்ந்து ரசித்தமைக்கு நன்றி, கீதாம்மா.

Related Posts with Thumbnails