மின் நூல்

Friday, November 25, 2011

பார்வை (பகுதி-13)

                    அத்தியாயம்--13

ரு பெரிய நீண்ட கதையைச் சொல்கிற மாதிரியான தோரணையுடன் விஸ்வநாதன் சொல்லிக் கொண்டுவந்ததைக் கேட்க எனக்கும் சுவாரஸ்யத்தைத் தாண்டி வெளியூர்களில் இவன் என்ன கஷ்டமெல்லாம் பட்டு வளர்ந்து வந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. அதனால் இடையிடையே குறுக்கிடாமல் அவன் சொல்வதை மனசில் வாங்கிக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தேன். சினிமா சம்பந்தப்பட்டு அவன் வாழ்க்கை அமைந்ததாலோ என்னவோ அந்த கதை சொல்லும் நேர்த்தி அவனிடம் ஆழப் பதிந்திருந்திருப்பது அவன் பேச ஆரம்பித்தாலே எனக்குத் தெரிந்தது.

"சினிமாவைப் பற்றி அதுவரை எதுவும் தெரியாத என்னை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்ற போது பார்ப்பது எல்லாமே வேடிக்கையாக இருந்தது. பம்பாயின் பிரபல ஸ்டூடியோ ஒன்றின் எக்ஸ்டன்ஷன் மாதிரி இருந்த தனி இடத்திற்கு என்னைக் கூட்டிச்சென்றார் சிவநேசன். அந்த ஸ்டூடியோவின் எல்லா பகுதிகளிலும் இவர் வந்ததும் ஒதுங்கி நின்று வணக்கம் சொல்கிற மாதிரியான ஒரு மரியாதை மற்றவர்களுக்கு இவரிடம் இருந்தது அங்கு நுழைந்தவுடனேயே எனக்குப் புலப்பட்டது.." என்று அவன் சொன்ன போது திருவையாறை விட்டு அவன் போனது கூட ஒருவிதத்தில் நல்லதுக்குத் தான் என்று எனக்கு அந்தசமயத்தில் தோன்றியது. பல இடங்களுக்குப் போனால் தான் பல விஷயங்கள் தெரிய வருகிறது என்கிற அர்த்தத்தில் அப்படி நினைத்துக் கொண்டேன் போலிருக்கு.

"அந்தக் கட்டடத்திற்குள் போனதும் நடு ஹாலில் ஜமக்காளம் போட்டு ஏழெட்டுப் பேர் அமர்ந்திருந்தனர். நடுநாயகமாக இருந்தவர் ஆர்மோனியப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார். பிடிலைப் பிடித்திருந்தவனுக்கும் கிட்டத்தட்ட என் வயசு தான் இருக்கும். அப்புறம் புல்லாங்குழலுடன் இன்னொரு இளைஞன். மற்றும் தபலா, சாரங்கி போன்றவற்றுடன் இன்னும் இருவர். ஆர்மோனியப் பெட்டியுடன் இருந்தவர் சிவநேசனைப் பார்த்தவுடன் அவர் வந்ததை அங்கீகரித்த மாதிரி ஒரு புன்முறுவலுடன் உட்கார்வதற்கு தீண்டுகள் இருந்த பக்கம் கை காட்டினார்.

"அன்று தான் ஒரு திரைப்படப் பாடலுக்கு எப்படி இசை அமைக்கிறார்கள் என்று நான் தெரிந்து கொண்டேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் அங்கு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்த அந்த இரண்டு மணி நேரமும் நேரம் போனதே தெரியவில்லை. ஆர்மோனியப் பெட்டியின் சுருதி கூட்டிய வாசிப்பிற்கேற்ப ஒவ்வொரு வாத்தியமும் தனித்துவமாய் இசைக்கப்படுவதைப் பார்ப்பதே தனி அனுபவமாய் இருந்தது. பாதியில் சடக்கென்று என்னைப் பார்த்து கிளம்பலாம் என்கிற மாதிரி சைகை செய்தார் சிவநேசன். எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருக்கலாமே என்று தோன்றியது. இருந்தாலும் நான் விரும்புவதைச் சொன்னால் ஒருகால் சிவநேசனுக்கு அது பிடிக்காமலிருக்கலாம் என்று பேசாமல் இருந்து விட்டேன். எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவராகவே இருந்தார். இடையில் என்னை ஏதாவது கேட்பது அவர் அடுத்து செய்யப் போவதைத் தெரியப்படுத்துகிறார் என்றே நான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று புரிந்து கொண்டிருந்தேன். ஆகவே அவர் அங்கிருந்து கிளம்புவதற்காக எழுந்திருந்ததும், நானும் அவருடன் கிளம்பி வெளியே வந்து விட்டேன்.

"வெளியே வந்ததும், "நன்றாகப் பார்த்துக் கொண்டாயா? நாளைக்கு நாம் இங்கு வருகிறோம். இந்த குரூப்பில் நீதான் வயலின் வாசிக்கிறாய்.." என்றார்.

"எனக்கு வயலினைத் தனியாக வாசித்துத் தானே பழக்கம்?.. ஒரு குருப்பில் அவர்கள் வாசிக்கிற மாதிரி துண்டு துண்டாக வாசிக்க.." என்று நான் சொல்லி முடிப்பதற்குள் "போகப்போக எல்லாம் பழக்கமாகி விடும்; நான் சொல்லித் தருகிறேன்" என்றார். எனக்கும் அப்படி வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருந்ததால் "சரி" என்றேன்.

"அந்தக் குரூப்பில் வாசித்து பழகியது போக, காலையும் மாலையும் தனிப்பட்ட முறையில் சிவநேசன் எனக்கு பயிற்சியளித்தார். சில நேரங்களில் ஆர்மோனியப் பெட்டியை என்னிடம் தந்து விட்டு அவர் வயலின் வாசித்துச் சொல்லித்தருவார். என்னை இப்படியான முறையில் பயிற்றுவிப்பதில் என்னை விட அவர் அக்கறை கொண்டிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. அதுவே எனக்கு ஆச்சரியத்தைத் தந்து அவரிடம் மதிப்பும் கூடியது.

ஒரு வாரம் போயிருக்கும். ஒரு நாள் காலை சிவநேசன் என்னை அருகில் அமர வைத்து நிறைய விஷயங்கள் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல எனக்கு கேட்க ஆர்வமாக இருந்தது. "மொத்தம் பத்து குரூப்கள். ஒவ்வொரு குருப்புக்கும் பத்து பேர். ஆக, நூறு பேர். எக்ஸ்ட்ராவாக ஒன்றுக்கு மேற்பட்ட வாத்தியங்களை வாசிக்கத் திறமை பெற்றவர்கள் இருபத்தைந்து பேர். உன்னைச் சேர்த்து நூற்று இருபத்தைந்து பேர்கள். நான் திருவையாறு வந்திருந்த பொழுது உன்னைப் பார்த்தது, அந்த தியாகராஜ சுவாமிகள் கருணைன்னு தான் நெனைக்கிறேன். 'நீ தேடிண்டிருக்கற கலைஞன் இதோ இருக்கிறான், பார்'ன்னு அவரே எனக்குக் காட்டிக் கொடுத்த மாதிரி இருக்கு. இந்த பத்து குரூப்பிலும் வயலின் வாசிக்கத் தெரிந்தவர்கள்லே நீ தான் டாப். ஆர்மோனியத்தை அழகா வாசிக்க நான் கத்துக் கொடுத்திடறேன். நீ நன்னா வருவே பார்" என்றார்.

"எனக்கு ஒண்ணும் புரிலே. 'எதுக்கு இந்த க்ரூப்பெல்லாம்?.." என்று அவரிடம் கேட்டேன்.

"'ஒரு இலட்சியத்தை சாதிக்க'.. என்றார் சுருக்கமாக. 'பத்து க்ரூப்பைச் சேர்ந்த நூறு பேரும் நூறு வீரர்கள். வீணை, புல்லாங்குழல், கஞ்சிரா, வயலின்ன்னு ஒவ்வொருத்தர் கைலேயும் ஒவ்வொரு ஆயுதம். அத்தனை பேரும் இந்த இசைக்காக தங்களையே தத்தம் பண்ணினவங்க.. அதிலே நீயும் ஒருவங்கறதே உனக்குப் பெருமை. உனக்கிருக்கிற திறமைக்கு, இந்த இலட்சியப் பிடிப்பும் ஏற்பட்டுட்டா, நீ எல்லாருக்கும் தலைமை தாங்குவே" என்றார்.

"என்ன இலட்சியம்ன்னு நீங்க சொல்லவே இல்லையே?"ன்னு கேட்டேன்.

"சொல்றேன்னு சொல்லிட்டு நிதானமாச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக நானும் அந்த இலட்சியத்திற்கு இழுக்கப்படுவது எனக்கே நன்றாகத் தெரிந்தது.." என்றான் விஸ்வநாதன்.

பொறுமை இழந்து, "அது என்ன இலட்சியம்னு நீயும் சொல்லவே இல்லையே, விஸ்வநாதா?" என்று கேட்டேன்.

இப்பொழுது விஸ்வநாதன் எனக்குக் கைக்கெட்டும் தூரத்தில் நகர்ந்து வந்து உட்கார்ந்து கொண்ட மாதிரித் தெரிந்தது. கொஞ்சம் தீர்க்கமான குரலில் அழுத்தமாக, "சொல்றேன், அண்ணா" என்றான்.


(இன்னும் வரும்)


13 comments:

Geetha Sambasivam said...

அட??? சஸ்பென்ஸ்! :))))))

ஸ்ரீராம். said...

அந்த லட்சியம் என்னன்னு சொல்லவே இல்லையே சார்...!

சிவகுமாரன் said...

எனக்கும் ஆர்வம் மேலிடுகிறது .அது என்ன இலட்சியம் ?

கோமதி அரசு said...

பத்து க்ரூப்பைச் சேர்ந்த நூறு பேரும் நூறு வீரர்கள். வீணை, புல்லாங்குழல், கஞ்சிரா, வயலின்ன்னு ஒவ்வொருத்தர் கைலேயும் ஒவ்வொரு ஆயுதம். அத்தனை பேரும் இந்த இசைக்காக தங்களையே தத்தம் பண்ணினவங்க.. அதிலே நீயும் ஒருவங்கறதே உனக்குப் பெருமை. உனக்கிருக்கிற திறமைக்கு, இந்த இலட்சியப் பிடிப்பும் ஏற்பட்டுட்டா, நீ எல்லாருக்கும் தலைமை தாங்குவே" என்றார்.//

அருமையான உதாரணம்.
நூறு வீரர்களிடம் உள்ள ஆயுதங்கள்
அம்பு மழை பொழிவது போல் இசை மழை பொழிவார்கள்.வெற்றிக்கு சங்க நாதம் முழங்குவார்கள் இல்லையா!

என்ன லட்சியம் அறிய ஆவல்.

G.M Balasubramaniam said...

பேரும் புகழும் தவிர சினிமா உலகில் ஈர்க்கும் லட்சியம் வேறுள்ளதா.?என்னதான் இருந்தாலும் பாசமுள்ள அண்ணன் மற்றும் உறவுகளிடம் சொல்லிக் கொள்ளாமல் போன தம்பியிடம் கொஞ்சம் கோபம்தான்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

அடுத்து வரும் விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக.. அல்லது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காக.. எப்படி
வேண்டுமானாலும் கொள்ளலாம்.
சஸ்பென்ஸ் என்றாலும் சரியே.

தொடர்ந்து வருவதற்கு நன்றி,கீதாம்மா.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சொல்றேன், ஸ்ரீராம்!

ஜீவி said...

@ சிவகுமாரன்

அந்த இலட்சியம் உங்களுக்குப் பிடிக்கும், சிவா!

ஜீவி said...

@ கோமதி அரசு

//நூறு வீரர்களிடம் உள்ள ஆயுதங்கள் அம்பு மழை பொழிவது போல் இசை மழை பொழிவார்கள். வெற்றிக்கு சங்க நாதம் முழங்குவார்- கள் இல்லையா!//

அருமையான காட்சி விவரிப்பு கோமதிம்மா!

//என்ன இலட்சியம்? அறிய ஆவல்.//

அடுத்த பகுதி வரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
உங்களால் அதை உணர முடியும்.

ஜீவி said...

@ G.M.B.

//கொஞ்சம் கோபம் தான்.//

கொஞ்சம் தானே?.. விஸ்வநாதன் அதைச் சரிப்படுத்தி விடுவான்!

வாழ்க்கையே கதையாவதற்கும், கதையே வாழ்க்கையாவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
விஸ்வநாதனின் வாழ்க்கையே கதை ரூபம் கொண்டிருப்பதால் தான், நாம் எதிர்பார்ப்பதெல்லாம் இல்லாமலிருக்- கிறது. அவன் வாழ நேர்ந்த வாழ்க்கைக்கு அவன் என்ன செய்வான், பாவம்!

தொடர் வருகைக்கு நன்றி, ஜிஎம்பி சார்!

மாலதி said...

நீடித்த தொடர்கதை சிறப்பான ஆக்கம் பாராட்டுகள்.

ஜீவி said...

@ மாலதி

தங்கள் முதல் வருகைக்கும், பகிர்ந்து கொண்ட பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க.

தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1964 தீபாவளியில் வெளியான சர்வர் சுந்தரம் படத்தில் எம்.எஸ்.வி அவர்கள் அவளுக்கென்ன ஆகிய முகம் என்னும் பாடலுக்கான ரிக்கார்டிங்கை காட்டியது நினைவுக்கு வருகிறது. அவரதுஒரு சமிக்ஞையில் அத்தனை வயலின்காரர்களும் எழுந்து நின்று வாசிப்பது பிரமாதம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails