மின் நூல்

Friday, November 18, 2011

பார்வை (பகுதி-12)

                    அத்தியாயம்--12

குரு பக்திக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். விஸ்வநாதன் தன் குரு மீது கொண்டிருந்த அன்பு அத்தனையிலும் சேராமல் தனித்து தெரிவதாக எனக்குத் தோன்றியது. வயலினை எப்படிப் பிடிப்பது என்பதிலிருந்து விஸ்வநாதனுக்கு பாடத்தை ஆரம்பித்து வைத்தவர் அவர். குருகுல வாசம் மாதிரி அவருடனையே தங்கி, வேண்டிய பணிவிடைகள் செய்து தனயன் தந்தையைப் பார்த்துக் கொள்வது போல அவரைப் பார்த்துக் கொண்டவன் அவன். அவருக்காக தான் பிறந்த வீட்டையே மறந்து வித்தை கற்றுக் கொடுத்த அவரே தனக்கு சகலமும் என்று மனசார எண்ணியவன் அவன்.

அவர் இல்லாத உலகம் சூன்யமாக அவனுக்குப் பட்டதில் ஆச்சரியமில்லை. அவரது காரியம் முடியும் வரை இழுத்துப் போட்டுக்கொண்டு எல்லாமும் செய்திருக்கிறான். சகலமும் அவரே என்று எண்ணியவனுக்கு அவரது கடைசி காலத்தில் சகலமும் அவனே ஆனான். எல்லாமும் முடிந்த பிறகு தஞ்சை மாவட்ட பிரசித்திபெற்ற ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அவரின் நற்கதிக்காக இறைவனை வேண்டி உருகி உருகி வாசித்திருக்கிறான். எல்லாக் கோயிலிலும் அவன் பிரார்த்தனை முடிந்த பிறகு கடைசியில் தியாகையர் சமாதிக்கு வந்து, 'சகல வாத்தியக்காரர்களு க்கும் குருவான குருவே! இவன் குரு, இவன் இப்படி வாசிக்க என்ன பேறு பெற்றானோ என்று என் குருவிற்கு பெருமையளிக்கும்படி வாசிக்க அருள் பாலியும்" என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவரை வணங்கியிருக்கிறான்.

எப்பொழுது எழுந்தானோ, எப்பொழுது தன் பிடிலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தானோ யாருக்கும் தெரியாது. தன் நினைவு மறந்து, தன் நிலை மறந்து ஆவேசம் வந்தவன் போல் அவன் வாசித்து முடித்து அவனுக்குள்ளேயே அந்த வாத்தியம் இசைத்த இசை அடங்கிய தருணம், "தம்பி.." என்று அன்போடு அவனை அழைத்த குரல் அரைகுறை நினைவில் அவனுக்குக் கேட்டிருக்கிறது.

மலங்க மலங்க விழித்தபடியே நிமிர்ந்து பார்த்தவன் ஆஜானுபாகுவாய் செக்கச் செவேலென்று முகம் நிறைய பூத்துக் குலுங்கும் சிரிப்புடன் தன் எதிரே நின்றிருந்த வரை நிமிர்ந்து பார்த்தான். அவருக்குத் தாராளமாய் ஐம்பது வயது இருக்கலாம். பஞ்சக்கச்சம், இடுப்பில் சுற்றிய அங்கவஸ்திரம், திறந்த மார்பு, நெற்றி நிறைய கோணல் மாணல் இல்லாமல் அளவெடுத்துப் பூசியதே போன்ற வீபூதிக் கீற்றுகள், தீர்க்கமான விழிகளின் துளைத்தெடுக்கும் பார்வை என்று ஒரே வினாடியில் உள்வாங்கிக் கொண்ட அவரின் தோற்றம் அவனுள் மிகுந்த மரியாதையைத் தோற்றுவித்திருக் கிறது.

'தாங்கள் யாரோ?' என்று அவன் கேட்க நினைத்ததை பார்வையிலேயே புரிந்து கொண்டவர் மாதிரி, "எனக்கு பம்பாய். ஆராதனைக்குத் தவறாமல் ஜனவரி மாதத்தில் இங்கு வந்து விடுவேன். இந்த முறை முதல் தடவையாகத் தப்பிப் போய்விட்டது. போகாமல் இருக்க மனசு கேட்கவில்லை. அதனால் தான் ஆராதனையெல்லாம் முடிந்து போனாலும் ஓடி வந்து இந்தக் கட்டையை இங்கே சேர்ப்பித்து விட்டேன்" என்றார்.

"அப்படியா?.. தங்கள் அறிமுகம் கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம்."

"தம்பீ! அற்புதமாக வாசித்தீர்கள். உங்கள் பிடில் பேசுகிறது. வழக்கமாக ஆராதனைக்கு இங்கு வரும் பொழுதெல்லாம் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை வித்வான்கள் எல்லாம் சேர்ந்து பாடும் பாக்யத்தை கண்ணால் பார்க்கவும், காதால் பருகவும் அதிர்ஷ்டம் கிடைக்கும். வித்யாசமாக இப்போ வந்த பொழுது உங்களின் தனிப் பிடில் வாசிப்பைக் கேட்டு புளகாங்கிதம் அடைய சந்தர்ப்பம் கிடைத்தது" என்றார்.

"எல்லாம் என் குருநாதர் அருள்" என்று பவ்யமாகச் சொன்ன விஸ்வநாதனை ரொம்பவும் பிடித்து விட்டது அவருக்கு.

அவர் பம்பாயில் திரைப்படத் துறையில் இருப்பவராம். இங்கு தஞ்சாவூரில் தான் பிறந்திருக்கிறார். சிறுவயதிலேயே அவருக்கு இசையில் மிகுந்த ஆர்வமாம். அந்த ஆர்வம் அவரைத் திரைப்படத்துறைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. கோடம்பாக்கம், கோவை பஷிராஜா ஸ்டூடியோ, சேலம் மார்டன் தியேட்டர்ஸ் என்று சுற்றித் திரிந்ததில் சேலத்தில் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஒரு வேலையாக மார்டன் தியேட்டர்ஸ் வந்த பம்பாயைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர், திரும்பிப் போகும் பொழுது தன்னுடன் கூட்டிச் சென்று விட்டாராம். எல்லாம் அவர் சொல்லி விஸ்வநாதனுக்குத் தெரிந்தவை.

விஸ்வநாதனைப் பற்றியும் எல்லா விவரங்களையும் விசாரித்திருக்கிறார். எங்களைப் பற்றி, தன் குருவைப் பற்றி, அவர் காலமானதைப் பற்றி, அவர் அருகாமையை மறக்க முடியாத துயரத்தில் தான் அலைந்து திரிவது பற்றி என்று எல்லாவற்றையும் அவரிடம் சொல்லியிருக்கிறான். அத்தனையையும் கேட்ட அவர், "விஸ்வநாதா! ஒன்று கேட்பேன். மறுக்காமல் சரியென்று சொல்ல வேண்டும்" என்று கேட்டிருக்கிறார்.

இவன் தயங்கியபடியே, "என்ன சொல்லுங்கள்" என்று அவரிடம் கேட்டிருக்கிறான்.

"புதிதாக ஒன்றுமில்லை. இருபது வருடங்களுக்கு முன் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பு அரங்கில், அந்த பம்பாய்க்காரர் என்னிடம் கேட்டது தான். நீ என்னுடன் பம்பாய் வந்து விட வேண்டும். அது தான் நான் உன்னிடம் கேட்கும் வரம்" என்றிருக்கிறார்.

"வந்து?..."

"ஹிஸ்ட்ரி ரிபீட்ஸ் என்று சொல்வார்கள். நான் உச்சாணிக்கொம்பில் ஏறிய கதை உனக்கு நடக்கப் போகிறது. உன்னிடம் இருக்கும் இந்த வாசிப்புத் திறமை தேசமெல்லாம் பவனி வர வேண்டும். அதற்கு நானாச்சு.." என்றிருக்கிறார்.

அந்த சமயத்தில், 'மறுக்காமல் அவருடன் போ!' என்று தன் உள்மனம் தனக்கு உத்திரவிட்டதாக விஸ்வநாதன் என்னிடம் சொன்னான்.

விஸ்வநாதன் இதைச் சொல்லும் பொழுது,"அந்த சமயத்தில் எங்கள் ஞாபகமே உனக்கு இல்லையா?.. வீட்டுக்கு வந்து அதை எங்களிடம் சொல்லிவிட்டுக் கூட அவருடன் நீ சென்றிருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை?" என்று கேட்டேன்.

அதற்கு விஸ்வநாதன் சொன்ன பதில் என்னையும் திகைக்கச் செய்தது. "நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் திருச்சியில் ப்ளைட்டைப் பிடிக்க உடனே கிளம்ப வேண்டும் என்று அவர் அவசரப்படுத்தினார். அதேசமயம், 'ஏன் தாமதிக்கிறாய், உடனே அவருடன் கிளம்பு' என்று தன்னில் ஒரு அறிவுறுத்தல் கிளர்ந்ததாக விஸ்வநாதன் என்னிடம் சொன்னான்.

இன்னொன்றும் சொன்னான். இப்பொழுது தான் அவர் பெயரைக் கேட்க வேண்டும் என்றும் அவனுக்குத் தோன்றியதாம். அந்த உணர்வு வந்ததும் அவர் பெயரைக் கேட்டிருக்கிறான்.

"சிவநேசன்.." என்று அவர் தன் பெயரைச் சொன்னதும், ஆச்சரியத்துடன் மறுபேச்சு பேசாமல் அவருடன் கிளம்பிவிட்டான். இறந்து போன அவனின் குருவின் பெயரும் சிவநேசன் தான். குருவே இன்னொருவர் உருவில் வந்து தன்னை அழைத்துப் போவதாக அவன் உணர்ந்ததாகச் சொன்னான். 'எதுக்காக போகிறோம்' என்பதெல்லாம் அவன் நினைவில் அவ்வளவு சரியாகப் படிந்ததாக அவனுக்குத் தெரியவில்லையாம். 'குரு கூப்பிடுகிறார்; மறுக்காமல் அவருடன் போகவேண்டும்' அது ஒன்றுதான் அவன் நினைவில் நித்யமாகி அவனை உந்தித் தள்ளித்தாம்.

அவனது அந்த நிலைலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தான் வேறு, தன் மனம் வேறு என்று இருக்க முடியாது. தன்னின் எல்லா செயல்களுக்கும் மனம் ஒத்துழைக்கும் என்றும் சொல்ல முடியாது. மனம் வழிகாட்டியாக செயல்படும் தருணங்களில், அந்த வேலை அற்புதமாக முடிந்து விடுவதைக் காணலாம். உடல், உள்ளம், செயல்பாடு என்று மூன்றும் ஒன்று குவியும் தருணங்கள் அவை. அப்படிப் பட்ட சமயங்களில் அது அதை அது அதன் போக்குக்கு விட்டுவிடுவதே புத்திசாலித்தனம் என்பதை அறிந்து, "அப்புறம்?" என்றேன்.

'திருச்சி போகையில் வழியெல்லாம் நிறைய பேசிக் கொண்டே வந்தார். என் குரு மாதிரியான தீர்க்கமான பேச்சு இல்லை அவரது. அவர் பேசுவதில் நிறைய காரியார்தமான விவரங்கள் இருந்தது. அவர் பேசியதில் நிறைய எனக்குப் புரியவே இல்லை. இருந்தாலும், என் குரு என்னில் சொன்னதால் போகிறோம் என்கிற நினைப்பிலேயே இருந்தேன். அப்புறம் தான் உணர்ந்தேன். என் குரு அவரில் இல்லை; என்னில் இருந்து தான் என்னை வழிநடத்துகிறார் என்று. அந்த நினைப்பு வந்ததும் மானசீகமாக குருவை வணங்கினேன்' என்று விஸ்வநாதன் சொன்னான்.

தம்பி சொல்வதை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டே வந்தவன், "அப்புறம்?.." என்றேன்.


(இன்னும் வரும்)









14 comments:

Geetha Sambasivam said...

குருவைத்தன்னில் உணர்ந்து கொண்டவர் உண்மையாகவே ஞானியாகத்தான் இருக்கவேண்டும். குரு அவரில் கலந்து விட்டார்.

G.M Balasubramaniam said...

கதையைப் படித்துக் கொண்டு வரும்போது ஒரு சந்தேகம் எழுகிறது. எண்ண் அலைகளின் ஓட்டம் கதையாக விவரிக்கப்படும்போது கால தேச பரிமாணங்கள் .?சில இடங்களில் நிகழ்கால சிந்தனைகளாகவும் பிறீதோர் இடத்தில் கடந்தகால சிந்தனைகளாகவும் ...இனி விஸ்வநாதனின் கதையைத் தொடருகிறேன்.

ஸ்ரீராம். said...

விஸ்வநாதன் வீட்டில் சொல்லாமல் எப்படிப் போகலாம் என்பதற்கு பதில் சொல்லும் அத்தியாயம். ஆனாலும் அப்புறமாவது ஏதோ ஒரு வகையில் தெரியப் படுத்தியிருக்கலாம் என்றும் தோன்றாமலில்லை! அதற்கும் விடை வரப் போகும் அத்தியாயங்களில் இருக்கலாம்.!

குருவையே நினைத்து குருவாவே மாறி, அதாவது குரு அவருள் இறங்கி இசை மழை பொழிய வைத்து...ரொம்ப நாட்களுக்கு முன்னால் குமுதத்தில் (?) ஒரு கதை படித்த ஞாபகம் வருகிறது. கொஞ்சம் சம்பந்தமில்லாமல் கூட இருக்கலாம்! மனைவியை இழந்த ஒருவர் மனம் தடுமாறி விடுவார். உறவினர்களோடேயே இருப்பார் (தம்பியும் தம்பி மனைவியும் என்று நினைவு) நாளடைவில் மனைவியின் புடைவை எல்லாம் எடுத்து மேலே போர்த்தி என்று திரிவார். தனியறையில் வைத்திருப்பார்கள் அவரை. ஒரு நாள் அந்தப் புடைவை கழுத்தில் சுற்றியே இறந்திருப்பார் அவர். சென்று பார்க்கும் தம்பியும், தம்பி மனைவியும் அதிர்ச்சி அடைந்து விடுவார்கள். அவருக்கும் பெண்மை அடையாளங்கள் வரத் தொடங்கியிருக்கும். அபத்தமான ஒப்பீடு என்று நினைக்க வேண்டாம். தன்னுடன் உயிருக்குயுயராகப் பழகி இறந்தவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததில் அவராக மாறி விடுகிறார்கள், அல்லது அவர்கள் இவர்களுக்குள் இறங்கி விடுகிறார்கள் என்று சொல்ல அந்தக் கதை நினைவுக்கு வந்தது!

உடலும் உள்ளமும் ஒன்றுபடும் தருணம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை!

கோமதி அரசு said...

என் குரு அவரில் இல்லை; என்னில் இருந்து தான் என்னை வழிநடத்துகிறார் என்று. அந்த நினைப்பு வந்ததும் மானசீகமாக குருவை வணங்கினேன்'//

குரு பக்தி சிலிர்க்க வைக்கிறது.

நம்மில் தேடல் இருக்கும் போது குரு தானாய் வருவார் என்பார்கள். வந்த குரு அவரிடமே தங்கி அவரை வழி நடத்தும் போது வேறு என்ன பெருமை வேண்டும்.

கோமதி அரசு said...

என் குரு அவரில் இல்லை; என்னில் இருந்து தான் என்னை வழிநடத்துகிறார் என்று. அந்த நினைப்பு வந்ததும் மானசீகமாக குருவை வணங்கினேன்'//

குரு பக்தி சிலிர்க்க வைக்கிறது.

நம்மில் தேடல் இருக்கும் போது குரு தானாய் வருவார் என்பார்கள். வந்த குரு அவரிடமே தங்கி அவரை வழி நடத்தும் போது வேறு என்ன பெருமை வேண்டும்.

ஜீவி said...

இந்தக் கதையைப் பொருத்த மட்டில், விஸ்வநாதன் தனக்கு சங்கீத ஞானம் கொடுத்த தன் வயலின் குருவுக்கு தன் மனத்தில் தனியாசனம் கொடுத்து அமர்த்தி எந்நேரமும் வழிப்பட்டிருக்கிறான். அவர் உயிருடன் இருந்த காலத்து அவருக்கு சேவை செய்வதை தனக்குக் கிடைத்த பாக்கியமாக நினைத்திருக்கிறான். அவரின் இறப்பிற்குப் பிறகு, அவர் உடல் தான் நிஜத்தில் நடமாடுகிற மாதிரி இல்லையே தவிர, அவரது நினைவுகள் விஸ்வநாதனின் மனத்தில் நிரந்தரமாகத் தங்கி விட்டன. அந்த நினைவுகளாய் அவர் தன்னில் வாசம் செய்வதாக உணர்கிறான். அதனால், 'இதுவா-அதுவா' என்று முடிவெடுக்கிற காரியங்களில் தகுந்த வழிகாட்டித் தன்னை வழிநடத்துவதாக நினைக்கிறான். தன் மனசின் நினைப்புகளாய் கிடைக்கும் அவரின் வழிகாட்டுதலுக்கு மறுபேச்சில்லாமல் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்று நினைக்கிறான். இதுவே ஒருவிதமான ஒபீடியன்ஸாக அவனில் நிலைகொண்டிருப்பதாகக் கொள்ளலாம்.

தங்கள் தொடர்வருகைக்கு நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ G.M.B

கதையின் முதல் பகுதி மட்டுமே நிகழ்கால நடையில். இரண்டாம் பகுதி அதற்கு முதல் நாள் நடந்தது. ஆக, முதல் பகுதிக்கு அது சமீபத்திய கடந்த காலம்.

மூன்றாம் பகுதியிலிருந்து தற்போதைய பகுதியும் இனி தொடர்வதும் என்றோ நடந்தவை.

முதல் பகுதியைத் தவிர மற்ற எல்லாம் இறந்த கால(Past Tense)
நிகழ்வில் எழுதப்பட்டிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் தெரியும்.

இன்னொன்று. இதுவரை வந்த எல்லாப் பகுதிகளுமே அந்தப் பார்வையற்றவரின் நினைவாகவே சொல்லப்பட்டு வருகின்றன. (விஸ்வநாதனின் கதை கூட விஸ்வநாதன் அவரிடம் சொன்னவற்றை அவர் இப்பொழுது நினைத்துப் பார்க்கிற மாதிரி)

இந்த கடந்த கால கதையெல்லாம் முடிந்து நிகழ்காலத்திற்கு வரும் பொழுது, முதல் பகுதி தொடர்பாக நிகழ்கால நடையில் நீளும்.

-- இப்பொழுது உங்களுக்கு சுலபமாகப் புரிபடும் என்று நினைக்கிறேன்.

பகிர்தலுக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆமாம், இனி வருகின்ற அத்தியாயங்களைப் படித்தால், விஸ்வநாதன் விஷயத்தில் முழுசாக நீங்கள் கன்வீன்ஸ் ஆகிவிடுவீர்கள்.

அடுத்து, நீங்கள் இரண்டாவது குறிப்பிட்டிருக்கும் கதை பற்றி. அதை நான் படித்ததில்லை.நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. அற்புதமான கற்பனை. 'குமுதம்'(?) எனில்,
'எல்லார்வி'யினதாக இருக்கலாம்.
அவர் தான் குமுதத்தில் அந்தக் காலத்தில் சங்கீத சமாச்சாரங்களில் இழைத்து மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைகளை எழுதினார்.

சின்ன வயசில் குழந்தைகள் தூங்கும் பொழுது அவற்றின் தூக்கம் கலையாமல் இருக்க, தாயின் புடவையை மடித்து போர்த்திவிடுவார்கள். அந்த புடவையின் ஸ்பரிசத்திலேயே தாயும் தன் பக்கத்தில் இருப்பதாக குழந்தை நினைவில் பதிந்து, அந்த உணர்விலேயே நன்றாகத் தூங்கும்.
அது போலத் தான் இதுவும்.

அவரைப் பொருத்தமட்டில், மனைவி இறந்துபட்டதை பலவந்தமாக மறக்க முயற்சிக்கும் எண்ணம், நாளாவட்டத்தில் தன்னையே மறந்து தன் மனைவி ரூபமாகிப் போகிறார். இதெல்லாம் முடியுமா என்றால், சரியாக நம்மால் சரியாகப் பதில் சொல்லமுடியாது. மனத்தளவில் முடியும். உருவ அளவில் என்றால், அது கொஞ்சம் அதீதக் கற்பனையாகத் தோன்றுகிறது. எழுத்தாளனின் எழுத்தில் எல்லாமே முடியும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது.

'மனம்' என்பதை ஒரு வஸ்து போல எடுத்துக் கொண்டு,விஞ்ஞானக் கூடத்தில் ஆராய்ச்சிக் குடுவையில் போட்டு அலசி ஆராய்ந்தது போல, விதவிதமான பல விநோதப் புதிர்களுக்கு விடை கண்டவர்,
மனோதத்துவ பேரறிஞர் சிக்மண்ட் பிராய்ட். அவர் தான் மூலகர்த்தா.

பிற்காலத்தில் அவர் சொன்னதை அடியொற்றி சொல்லாததெல்லாம் கற்பனையில் அவரவருக்கேற்றபடி
பல்வேறு கதைகளாகின்றன. இப்படியும் நடக்குமா என்று நினைப்பதெல்லாம், ஆழ யோசித்துப் பார்த்தால் 'ஏன் நடக்காது?' என்று தோன்றும். இதுவே அந்தக் கதைகளுக்கான வெற்றி.

ஒரு நிறைவான பகிர்தலுக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ கோமதி அரசு

நன்றி. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

தேடல் இல்லையெனில் எதுவுமே சித்திக்காது என்பது உண்மை.'one step forward' என்பார்கள். ஒரு அடி எடுத்து வைத்தால் கூட எது குறித்த தேடலும் மேலும் முன்னேற இழுத்துக் கொள்ளும். தேடல் அவ்வளவு ஆகர்ஷ்ண சக்தி வாய்ந்தது. அந்த சக்தி தான் நம்மை மேலும் மேலும் இழுத்துச் செல்கிறது.

எழுதுவதை விட்டுத் தள்ளுங்கள். வாசிப்பனுவம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அது கிடைத்தலும் அரிது. அதற்கு உணர்வுபூர்வமாக வாசிப்பதில் ஒன்ற வேண்டும்.

மிக்க நன்றி, கோமதிம்மா.

மெட்ராஸ் தமிழன் said...

"உடல், உள்ளம், செயல்பாடு என்று மூன்றும் ஒன்று குவியும் தருணங்கள் அவை. அப்படிப் பட்ட சமயங்களில் அது அதை அது அதன் போக்குக்கு விட்டுவிடுவதே புத்திசாலித்தனம்".

சத்தியமான வார்த்தைகள். பல சமயங்களில் மனம் ஒன்று கூறும், ஆனால் படித்த இந்த "விஞ்ஞான" புத்தி அதை ஏற்றுக்கொள்ளாது. கடைசியில் மனம் கூறியதே உண்மையாக இருக்கும்.

அழகான எளிய தமிழில் அற்புதமாக எடுத்து சென்று கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஜீவி said...

@ மெட்ராஸ் தமிழன்!

வாருங்கள், மெ.தமிழன்! ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீறிர்கள்; இந்தத் தொடரைத் தாங்கள் படித்து வருவது அறிந்து மகிழ்ச்சி. தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்.

சிவகுமாரன் said...

விஸ்வநாதனின் குருபக்தி சிலிர்க்க வைக்கிறது. அவனின் குருபக்தியின் விளைவாகவேனும் வாழ்க்கையில் முன்னேறி உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். இல்லையெனில் மனம் மிகவும் வேதனைப்படும்.

ஜீவி said...

@ சிவகுமாரன்

'ஒவ்வொரு விடியலும் சொல்கிறதே.. வாழ்வென்றால்..' என்கிற வரிகள் தாம் நினைவுக்கு வருகின்றன.

உங்களின் ஆதங்கம் புரிகிறது. நல்லவர்களைப் பற்றிய நானிலத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது பற்றி அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

தங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, சிவகுமாரன்!

dondu(#11168674346665545885) said...

சிவநேசன் பர்றி படித்ததும், சுஜாதாவின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

பங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் மாருதி காரில் அம்மா, குழந்தை, மனவி சகிதம் பயணம் செய்யும்போது அம்மா காஞ்சீபுரம் வரதராஜ பெருமாளை பார்க்க வேணும் என ஆசைப்பட, பிள்ளையோ நேரம் இல்லை எனக்கூறுகிறான்.

ஆனால் நடுவில் நடந்த ஒரு அசம்பாவிதத்தில் அம்மா பிரிந்துவிட, அவரைத் தேடிக்கொண்டு சென்று, காஞ்சீபுரத்துக்கும் செல்ல வேண்டி வருகிறது.

அப்போது அம்மாவை கண்டுபிடிக்க உதவிய இன்ஸ்பெக்டரை பிள்ளை அவர் பெயர் கேட்க அவர் வரதராஜப் பெருமாள் என்கிறார் என கதையை முடிக்கிறார் சுஜாதா.

அன்புஇடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails