மின் நூல்

Wednesday, December 7, 2011

பார்வை (பகுதி-15)

                    அத்தியாயம்--15

'நடந்தைவைகள் என்றும் நடந்தைவைகள் தாம்; நடக்கப் போவனவற்றின் நன்மை கருதியாவது நடந்தவைகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நடக்கப் போகின்றவற்றை நல்லவையாக்குவ தில் கவனத்தைச் செலுத்த வேண்டும்' என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

என் தம்பி விஸ்வநாதன் ஜனக்தேவி மீது மூர்த்தண்யத்தோடு காதல் கொண்டு அவர்களுக்குள் திருமணம் முடிந்த விவரங்களைச் சொன்ன அன்று வெகு அமைதியாக நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் அந்தப் பொன்மொழியைத் தான் அப்பொழுதும் நினைத்துக் கொண்டேன்.

எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்து நடக்கப் போவதை அனுசரணையாக நடக்க வைத்தால் தான் எந்த ஒன்றையும் அடுத்த கட்டத்திற்கு உந்தித் தள்ளலாம் என்கிற உணர்வும் அப்பொழுது எனக்கு ஏற்பட்டது.

அந்தக் குழுவில் பியானோ வாசித்த ஐம்பது வயதுப் பெரியவர் ஒருவரின் பெண்ணாம் ஜனக்தேவி; பெரியவரிடம் விஸ்வநாதன் கொண்டிருந்த பரிவு, அவர் பெண்ணின் தனிமனித சுபாவங்களால் கவரப்பட்டு அவளிடம் காதலாக மலர்ந்திருக்கிறது. வேறு மாநில பழக்க வழக்கங்கள், வேற்று மொழி, வேறுபட்ட அணுகுமுறைகள் என்று எல்லாமே வேறாக இருக்க, மனம் மட்டும் வெவ்வேறாய் பிரிந்து போகாமல் ஒன்றுபட்டிருக்கிறது. சொல்லப்போனால், அந்த அத்தனை வேறுகளும் தான் வேற்றுமைகளில் ஒற்றுமையாய் இந்த இரண்டு பேரையும் ஒன்று படுத்தியிருப்பதாகத் தெரிந்து கொண்டேன்.

வாலிபமே தான் செய்வதெல்லாம் சரியென்று நினைக்கும் பருவம் தானே?.. விஸ்வநாதன் அந்தப் பெண் ஜனக்தேவியைத் திருமணம் செய்து கொண்ட பொழுது தனக்கிருந்த மனநிலையை அன்று அதைப்பற்றி சொல்கையில் மிகவும் நேர்மையாக எல்லாவற்றையும் என்னிடம் விவரித்தான்: "அண்ணா! நீங்களும் அண்ணியும் தான் என்னை வளர்த்தவர்கள். நீங்களிருவரும் தான் எனக்கிருக்கும் சொந்தங்கள் என்கிற ஆழ்ந்த உணர்வு என் மனசில் எப்பொழுதும் இருக்கிற மாதிரியே அப்பொழுதும் இருந்தது. அவர்களிடம் கூட அந்த சமயத்தில் அதைப் பற்றிச் சொன்னேன். எல்லோரையும் அழைத்துக் கொண்டு திருவையாறு வந்து அங்கு தான் திருமணத்தை உங்கள் ஆசியுடன் செய்து கொள்ள வேண்டுமென்று ஆரம்ப காலங்களில் எண்ணிக் கொண்டிருந்தேன். போகப்போக, இதுபற்றிய என் நினைப்பில் ஒரு மாறுதல் எனக்குத் தெரிந்தே ஏற்பட ஆரம்பித்தது. ஒருகால் இந்தத் திருமண ஏற்பாட்டை நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்றால், நான் ஜனக்தேவியை மறப்பதை விட, என்னையே நம்பியிருக்கும் அவள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகிவிடும் என்று பயந்தேன். அந்த பயம், நாளாக நாளாக என்னில் இறுகியது. 'முதலில் முடிவெடுத்ததை செயல்படுத்தி விடு; அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று ஆயிற்று. எங்கள் இருவருக்கும் திருமணமான இரண்டே மாதங்களில் அவள் அப்பா திடீரென்று பரவிய விஷ ஜூரத்தால் பாதிக்கப்பட்டு காலமானார். திக்கற்று நின்ற ஜனக்தேவியின் தாயாருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கூடிய பொழுது இவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு திருவையாறு வந்து உங்களிடம் நடந்தவற்றையெல்லாம் விவரிக்கும் திராணியே இல்லாது போயிற்று. அதனால் தான் அண்ணா, கூடப்பிறந்த நம் இருவரிடையே இத்தனைக் காலமும் இப்படியொரு பந்தமற்ற பள்ளம் விழுந்து விட்டதற்குக் காரணம். எங்களை நீங்கள் மன்னித்து ஆசிர்வதிக்க வேண்டும்!" என்று கலங்கினான்.

கைநீட்டி அவன் தோளில் கைவைத்து ஆறுதல் கூறினேன். "விஸ்வநாதா! மனித மனம் என்பது விசித்திரமானது. அது எந்த எந்த நேரத்தில் யார் யார் இடத்தில் எந்த மாதிரியான நினைப்பை விதைக்கும் என்று சொல்ல முடியாது. நீ சொல்வது சரிதான். ஒரு பத்து பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் இந்த விஷயத்தில் இப்பொழுதிருக்கிற முதிர்ச்சி எனக்கு அப்பொழுது இருந்திருக்குமா என்று தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய நமது கணிப்பும் அது நடப்பதற்கு முன்னாடி ஒன்று, நடந்த பின்னாடி ஒன்று என்று தான் இருக்கிறது. வாழ்க்கையை எதிர்கொள்வதில் நமக்கிருக்கும் பெரும் சிக்கல் இது. எந்த விஷயமும் நடப்பதற்கு முன்னாடி, நாம் நினைக்கிற மாதிரியே இது நடக்கும் என்று எண்ணுவதினால் தான் அதில் ஈடுபடுகிறோம். நடந்ததற்கு பின்னாடி, நம் எண்ணத்திற்கு மாறாக அது போனாலும் வேறு வழியின்றி அதற்கேற்றவாறு சரிபடுத்திக் கொண்டு வாழ முயற்சிக்கிறோம். ஏனென்றால், எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை. அதனால் நடந்த நன்மைகளுக்காக சந்தோஷப்படுவோம். இடையில் எத்தனை காலம் ஓடிப்போச்சு, பாத்தையா?.. சங்கரிக்கு இப்போ பதினாறு வயசாறதா?.. உனக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷம் கழிச்சு அவ பிறந்ததா சொன்னே! அப்போ பதினெட்டு வருஷம். இந்த பதினெட்டு வருஷம் கழிச்சு பிரிஞ்சு போன நாம சந்திப்போம்ன்னு நெனைச்சுப் பார்த்திருப்போமா?.. அது நடந்திருக்கு; நடந்திருக்குன்னு ஒத்தை வார்த்தைலே சொல்லறதை விட 'அது எப்பொழுது நடக்க வேண்டியிருக்கோ, அப்போது நடந்திருக்கு'ன்னு சொல்றது பொருத்தமா இருக்கும்" என்று நான் சொன்ன போது, விஸ்வநாதன் மிகுந்த நன்றியுடன் என் இரு கரங்களையும் பற்றிக் கொண்டான்.

அவன் குரல் தழுதழுத்திருந்தது."அண்ணா! இதெல்லாம் அண்ணிக்கு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.. நீங்கள் தான் எல்லாவற்றையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

"இத்தனையையும் என்னிடம் சொல்வதற்குப் பதில் உன் அண்ணியிடம் நீ சொல்லியிருந்தால், இத்தனை நேரம் அவ தான் உன் சார்பாக என்னிடம் பேசி என்னை சரிக்கட்டப் பார்த்திருப்பாள். அதனால் அந்தக் கவலை உனக்கு வேண்டாம். அப்புறம் என்ன ஆச்சு, உங்க இலட்சியமெல்லாம்?.. சிவநேசன் இப்போ எங்கே இருக்கிறார்?" என்றேன்.

"சிவநேசன் தீவிரமாக எங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, நிறையப் பயிற்சிகள் கொடுத்தார். அவர் முயற்சிகள் எதுவும் வீண் போகவில்லை. ஆறே மாசத்தில் எங்கள் வாசிப்பில் நாங்கள் வெகுவாகத் திறமை பெற்றோம். எங்கள் பயிற்சிகள் பற்றி பத்திரிகைகளில் எழுதினார்கள். யாரோ ஸ்பான்ஸர் பண்ணி 'மிஷினா, மனிதனா?' என்று ஒரு கருத்தரங்கு கூட நடந்தது. அந்தக் கருத்தரங்கின் சிறப்பு நிகழ்ச்சியாக, மிஷினை ஒரு பக்கம் இயக்கி, எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களை ஒவ்வொரு வாத்தியமாக இசைக்க வைத்து நடுவர் குழு ஒன்றை வைத்து அலசி ஆராய்ந்தார்கள். கடைசியில் அந்த எலக்ட்ரானிக் மிஷினை விட நாங்கள் வாசித்தது இலய சுத்தமாக நாத சுகமாக இருந்தது என்று நடுவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். அன்று எங்கள் குழுவைச் சேர்ந்த நூற்று ஐம்பது பேர் அடைந்த மகிழ்ச்சி விவரிக்க முடியாத ஒன்று. வானத்தில் பறந்தோம் என்றே சொல்ல வேண்டும்.. ஆனால் அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் ஏதோ சேகரித்த விவரங்களைச் சொல்கிற மாதிரி இருக்கிறது.." என்று கைத்துப்போன குரலில் சொன்னான்.

ஏன் இவனுக்கு கைக்கெட்டிய இலட்சியத்தில் இவ்வளவு ஆயாசம் என்று எனக்குத் திகைப்பாக இருந்தது."அத்தனை பெருமையும் அந்த சிவநேசனுக்குப் போய்ச் சேர வேண்டும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விட்டார் இல்லையா?" என்றேன்.

"இவ்வளவு காலம் கழித்து இந்த விஷயங்களைக் கேட்ட நீங்களே அப்படிச் சொல்லும் பொழுது, அதெல்லாம் நடந்த பொழுது அவரைப் பற்றி நாங்கள் எவ்வளவு பெருமைப் பட்டிருப்போம் என்பதை நினைத்தால் இப்பொழுது கூட எனக்கு நெஞ்செல்லாம் நிரம்பி வழிகிற மாதிரி இருக்கு, அண்ணா! அந்தக் கருத்தரங்கிலேயே அந்த இலட்சிய வெற்றியை நாங்கள் சிவநேசன் அவர்களுக்குக் காணிக்கையாக்கினோம். ஆனால், அவரோ அடக்கமாக அத்தனை சிறப்புகளையும் மறுத்து விட்டார்?"

"ஏன் என்னாச்சு?.. சிவநேசனுக்கு அந்த கருத்தரங்கு ஏற்பாடுகள் எதிலாவாது குறை இருந்ததா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.

"அதெல்லாம் இல்லை. நிகழ்ச்சி பூராவும் அவர் ரொம்ப சந்தோஷத்துடன் வெற்றிக் களிப்பில் தான் இருந்தார். ஆனால் இந்த வெற்றி தன்னால் இல்லை என்று ஆணித்தரமாக அவர் கருத்தரங்கிலேயே மறுத்துச் சொன்னது தான் அதிசயமாக இருந்தது.."

"அப்படி என்ன சொன்னார்?" என்று ஆவலோடு கேட்டேன்.

"சிவநேசன் என்ன சொன்னார் தெரியுமா?.. எல்லா வெற்றிகளுக்கும் காரணம், அந்தந்த நேரத்தில் அடுத்து நடக்கவிருப்பதற்கு கனிந்து வரும் சூழ்நிலைகளும், அந்தக் கனிதலில் என்ன நடக்க வேண்டுமோ அது நடப்பதும் தான்; நூறு டிகிரி வெப்பத்தில் கொதிக்கற நீர் ஆவியாகிற மாதிரியான ஒன்று இது" என்று தன் மேல் கவியும் பெருமையெல்லாம் புறந்தள்ளி ரொம்ப சாதாரணமாகச் சொன்னார். "அந்த எலக்ட்ரானிக் மெஷின் வந்ததும், இத்தனை நாள் வாத்தியக்கருவிகள் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரு ஆழ்ந்த சலனம் ஏற்பட்டது. இந்தக் கருத்தரங்குக்குத் தலைப்புக் கொடுத்திருக்கிறீர்களே, அதான் நிதர்சனமான உண்மை! 'மிஷினா, மனிதனா?' என்ற கேள்வி அத்தனை பேர் மனசையும் குடைந்தது தான் வெற்றிக்கான திறவுகோல். என் மனசிலும் இதே கேள்வி எழுந்த பொழுது, எல்லாரையும் ஒன்று சேர்க்கிற ஒரு ஏற்பாட்டைச் செய்தேன்; அதோடு என் வேலை முடிந்தது. நான் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்றால் இன்னொருத்தர் அதைச் செய்திருப்பார். அவ்வளவு தான். ஆக, எந்தப் பெருமையையும் என் மேல் கவிழ்த்து என்னை உங்கள் கூட்டத்திலிருந்து தனிமைபடுத்தி விடாதீர்கள்! நான் எந்த சக்திமானும் இல்லை; உங்களில் ஒருவன்' என்றார். இப்படி யாரால் சொல்ல முடியும், அண்ணா?.. அதான் சிவநேசன்" என்றான் தம்பி உணர்ச்சி வசப்பட்டு.

'யப்பா.. எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்! இப்படிப்பட்டவர்கள் இருக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம்?' என்று கொஞ்ச நேரம் எனக்கு பேச்சே வரவில்லை. என்னை சரிசெய்து கொண்டு, "இப்பொழுது சிவநேசன் எங்கே இருக்கிறார்?" என்று தம்பியிடம் கேட்டேன்.

"நாளாவட்டத்தில் இந்த எலக்ட்ரானிக் கருவிகளின் ஆக்கிரமிப்பு அதிகமானது. அவற்றின் வருகை, திரைப்பட இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பலவகைகளில் செளகரியத்தைக் கொடுத்தது.. அவற்றைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை தகுதியானது. இத்தனை நாளும் வாத்தியங்களே கதி என்றிருந்தவர்கள் கூட, அந்த மிஷினைக் கையாளுவதில் தங்கள் திறமையைக் காட்டவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த சமயங்களில் படத்துறையிலிருந்து சற்று ஒதுங்கி நான் பம்பாய் சங்கீத சபாக்களில் வாசிக்க ஆரம்பித்தேன். எங்களுக்காக ரேடியோ ஸ்டேஷன் வாசல் கதவுகள் திறந்தே இருந்தன. அவர்கள் அந்த நேரத்தில் எங்களை ஆதரித்ததையும் இப்போ நன்றியோட நெனைச்சுப் பாக்கறேன்.." என்றான் விஸ்வநாதன்.

என்னால் சிவநேசனை மறக்க முடியாமலிருந்தது. சொல்லி வைத்தாற் போல தம்பியும் அதையே குறிப்பிட்டு, "சிவநேசனை தில்லி பல்கலைக் கழகத்தில் கூப்பிட்டு இசைத் துறையில் பேராசிரியர் வேலை கொடுத்தார்கள். அதற்கு பிறகு ரொம்ப காலம் நான் பம்பாயில் இல்லை. இரண்டே வருடங்களில் சென்னை வந்து விட்டேன். இங்கு வந்தவன், பண் ஆராய்சியில் ஈடுபட்டேன். அதையெல்லாம் பற்றி விவரமாக ஒருநாள் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.." என்று விஸ்வநாதன் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது, நாங்கள் இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்த மாடி அறையின் வெளிப்பக்கம் யாரோ வேகவேகமாக படியேறி வந்த அரவம் கேட்டது.


(இன்னும் வரும்)18 comments:

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சட்டுனு ஒரு தொய்வு ஏற்பட்டாற்போல் தோன்றுகிறதே!

ஸ்ரீராம். said...

நீங்கள் முதல் பாராவில் சொல்லியிருப்பது போல நானும் நினைப்பதுண்டு.

நடக்கக் கூடிய மனதுக்குப் பிடிக்காத விஷயங்கள் அந்தந்த கணத்தில் மனதைப் பாதிப்பது அதே விஷயங்கள் கொஞ்ச காலம் கழித்து வேறு வடிவம் எடுப்பது மனித மனதின் அதிசயங்கள், நிகழ்வை ஏற்றுக் கொள்ளும் அதிசயங்கள், அதை பலவீனம் என்று சொல்ல முடியவில்லை. லேட்டாக வரும் ஞானோதயம். இந்த அனுபவங்கள் அந்த நிகழ்வுகள் நடக்கும் சமயத்திலேயே உணர்வுகளைக் காட்டாமல் ஒத்தி வைத்து பின்னர் ஆறப் போட்டு யோசிக்கலாம் என்ற மன உணர்வை மனிதனுக்குக் கொடுக்க வேண்டும். அந்த நிதானத்தை எத்தனை பேர் பெற்றிருக்கிறோம்...பெறுவோம்... அது கடவுளின் கொடைதான்!

வெளிப்படையாகப் பேசி விடுவேன் என்று சிலரும் மறைத்துப் பேச மாட்டேன் என்று சிலரும் பட பட்டெனப் பேசி விடுவார்கள். பிறர் மனம் நோகாமல் பேசுவதும், அந்த இடைவெளியில் நம் மனம் பக்குவப் படுவதும் ஒரு கலைதான்.

கோமதி அரசு said...

மிஷினா, மனிதனா?' என்ற கேள்வி அத்தனை பேர் மனசையும் குடைந்தது தான் வெற்றிக்கான திறவுகோல். என் மனசிலும் இதே கேள்வி எழுந்த பொழுது, எல்லாரையும் ஒன்று சேர்க்கிற ஒரு ஏற்பாட்டைச் செய்தேன்; அதோடு என் வேலை முடிந்தது. நான் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்றால் இன்னொருத்தர் அதைச் செய்திருப்பார். அவ்வளவு தான். ஆக, எந்தப் பெருமையையும் என் மேல் கவிழ்த்து என்னை உங்கள் கூட்டத்திலிருந்து தனிமைபடுத்தி விடாதீர்கள்! நான் எந்த சக்திமானும் இல்லை; உங்களில் ஒருவன்' என்றார்.//

உயர்ந்த மனிதர் தான். இப்படி பட்ட குருவிடம் சீடனாய் இருப்பது பெருமை தான்.

கோமதி அரசு said...

இந்த விஷயத்தில் இப்பொழுதிருக்கிற முதிர்ச்சி எனக்கு அப்பொழுது இருந்திருக்குமா என்று தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய நமது கணிப்பும் அது நடப்பதற்கு முன்னாடி ஒன்று, நடந்த பின்னாடி ஒன்று என்று தான் இருக்கிறது. வாழ்க்கையை எதிர்கொள்வதில் நமக்கிருக்கும் பெரும் சிக்கல் இது. எந்த விஷயமும் நடப்பதற்கு முன்னாடி, நாம் நினைக்கிற மாதிரியே இது நடக்கும் என்று எண்ணுவதினால் தான் அதில் ஈடுபடுகிறோம். நடந்ததற்கு பின்னாடி, நம் எண்ணத்திற்கு மாறாக அது போனாலும் வேறு வழியின்றி அதற்கேற்றவாறு சரிபடுத்திக் கொண்டு வாழ முயற்சிக்கிறோம். ஏனென்றால், எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை. //

நீங்கள் சொல்வது சரிதான் சார். மனித மனம் சூழநிலைக்கு ஏற்ற மாதிரி மனதை மாற்றிக் கொள்கிறது.( பக்குவ பட்டு விடுகிறது.)

சிறு வயதில் சில கோட்பாடுகளை பிடிவாதமாய் பிடித்துக் கொள்ளும் மனது வயதானதும் பிடிவாதத்தை தளர்த்தி கொள்வது இல்லையா!

நமக்கு கொடுக்க பட்ட வாழ்க்கையை முடிந்த வரை நன்றாக பிறரை வருத்தாமல் வாழவேண்டும் இல்லையா!

பார்வைகள் சொல்லும் வாழ்க்கை அனுபவங்கள் அருமை.

சிவகுமாரன் said...

\\\ எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய நமது கணிப்பும் அது நடப்பதற்கு முன்னாடி ஒன்று, நடந்த பின்னாடி ஒன்று என்று தான் இருக்கிறது. வாழ்க்கையை எதிர்கொள்வதில் நமக்கிருக்கும் பெரும் சிக்கல் இது. எந்த விஷயமும் நடப்பதற்கு முன்னாடி, நாம் நினைக்கிற மாதிரியே இது நடக்கும் என்று எண்ணுவதினால் தான் அதில் ஈடுபடுகிறோம். நடந்ததற்கு பின்னாடி, நம் எண்ணத்திற்கு மாறாக அது போனாலும் வேறு வழியின்றி அதற்கேற்றவாறு சரிபடுத்திக் கொண்டு வாழ முயற்சிக்கிறோம்.//

நிதர்சனமான வரிகள்.
காலம் தான் எல்லாவற்றையும் தெளிய வைக்கிறது. காலம் தான் சிறந்த குரு. தேர்ந்த வைத்தியன்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

அடுத்த கட்ட வாசிப்பு தளத்திற்கு பழக்கப்படாத போது தொய்வு மாதிரி தோற்றமளிக்கிறது. அவ்வளவு தான்.
இந்த மாதிரியான வாசிப்புக்களுக்கும் பழக்கப்பட்டுவிட்டால், இதுவும் பழகிவிடும்.

தொடர்ந்து வந்து எப்படி என்று சொல்லுங்கள். பகிர்தலுக்கு நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இதில் இன்னொருவிதமான பார்வையும் இருக்கிறது. நடப்பது குறித்த நம் கணிப்பு. எது குறித்தும் கணிப்பது மனித மனத்தின் இயல்பு. கணித்தபடியே நடந்து விட்டால், 'நான் அப்பவே சொன்னேனில்லையா?' என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்கள்.

பல நடப்புகளுக்கு முழுவிவரங்கள் நமக்குத் தெரியாது. இருந்தும் கணிப்பதற்கு யாரும் தவறுவதில்லை.
அதனால் நம் அளவிலான பல கணிப்புகள் யூகங்களின் அடிப்படையிலேயே.

ஆனால், நடந்த ஒரு நடப்பின் அடுத்த கட்ட போக்கு அப்படியில்லை. உள்மனத்தின் தீவிர ஸ்கேன் ஆற்றலில், இப்படித்தான் அது போகும் என்று 'கிட்டத்தட்ட' அளவில் தீர்மானிக்கலாம். எல்லாவற்றிலும் நாம் கொள்ளும் ஈடுபாடு தான், நடக்கப்போவதின் தொடர்ச்சியை நமக்கு எடுத்துச் சொல்கிறது. நம் சம்பந்தப்பட்ட விஷயம் எனில் இந்த ஈடுபாட்டின் தீவிரம் கூடும் என்பதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு விஷயத்தின் நிகழ்ச்சிப் போக்கை நமக்குப் பிடிக்கிற மாதிரி, அல்லது நாம் நினைக்கிற மாதிரி சொல்வது தான் கதை எழுதுகிற வேலை கூட.
கற்பனையிலேயே ஒரு நிகழ்வை ஏற்படுத்தி, தன் இஷ்டம் போல் அந்த நிகழ்வை நடத்தி வைப்பது.

நீங்கள் சொல்வது மாதிரியும் உண்டு.
அது அடையும் அனுபவங்களின் அடிப்படையில் நிகழ்ச்சிப் போக்கை ஏற்றுக்கொள்வது. ஒன்றை மறுத்த மனம் விஷயத்தெளிவின் அடிப்படையில் அதையே ஏற்றுக் கொள்ளும். இதைத்தான் நீங்கள் ஞானோதயம் என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

ஆமாம், மனத்தை எதற்கும் பக்குவப்படுத்திக் கொள்வதும் ஒரு கலைதான் என்றாலும் அதற்கும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. அந்தந்த நேரத்தில் பக்குவப்பட்ட மனமே, அந்தப் பாடத்தையும் கற்பிக்கும்!

மனம் ஒன்றிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்!

ஸ்ரீராம். said...

//எது குறித்தும் கணிப்பது மனித மனத்தின் இயல்பு. கணித்தபடியே நடந்து விட்டால்,,,//

//இருந்தும் கணிப்பதற்கு யாரும் தவறுவதில்லை.//

இவற்றை கணிப்புகள் என்று சொல்வதை விட எதிர்பார்ப்புகள் என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்? எதிர்பார்ப்புகள் நிகழ்வுகளாவதற்கு வாய்ப்பு நூறு சதவிகிதம் என்று சொல்ல முடியாதே...

நடப்பது எதுவும் நம் கையில் இல்லை, நாம் அதை மாற்ற நினைப்பதும், மாற்றி விட்டதாக நினைப்பதும் கூட மாயைதான் என்று தோன்றும். மாற்றி விட்ட பின் வரும் நிகழ்வுதான் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டதாக இருக்கும்! அதற்காக நாம் முயற்சிகள் எடுக்காமலும் இருப்பதில்லை. ஆனால் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டவைகள் நிகழும்போது அது நம்மால் அல்லது பிறரால் ஏற்பட்ட தவறு என்ற மன மயக்கம் இல்லாமல் இது நடக்க வேண்டியவையே என்ற தெளிவு எப்போதுமே நம் மனதில் இருந்தால் கோபம், ஆத்திரம் ஏக்கம், எதிர்பார்ப்பு போன்ற பலவீனங்கள் மனதில் தோன்றாதே...

ஜீவி said...

@ ஸ்ரீராம் (இரண்டாவது பின்னூட்டம்)

நடந்த எந்த நிகழ்வுக்கும் அப்படியாக அது நிகழ்வதற்கு முன்னாடியான அதன் போக்கு--இயக்கம்-- காரணமாக இருக்கிறது. அது நிகழ்வதற்கான ஆயத்த நிலையும்--அது நிகழ்வதை நோக்கி முன்னேறும் நிலையும்-- நிகழந்து விடுவதும்-- என்று மூன்று நிலைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். இந்த போக்கில் நிகழ்வதை நோக்கிய முன்னேறுதலும், நிகழ்வதற்கு எதிரிடையான நிலையும் என்றும் உண்டு.

இயல்பான எந்த நிகழ்வும் அந்தரத்தில் நிகழ்ந்து விடுவதில்லை. அதற்கான ஆதார வித்து இறைவனின் கொடை. செடியில் மொட்டு மலர்தல் என்பது இயல்பு. நம்முடைய விருப்பத்தின் அடிப்படையில் நிகழ்வதல்ல இது. இறைவனின் அருள். இருப்பினும் அந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்றுதல் போன்ற பராமரிப்பு வேலைகள் நம்மையறியாமலோ அல்லது அறிந்தோ நடந்து அதன் இயல்புச் செயலான பூ பூப்பதற்குக் காரணமாகிறது. இப்படியாக ஆக்கபூர்வமான அத்தனை நிகழ்வூடே, நம் செயல்பாட்டையும் இறைவன் சேர்த்து நம் பங்களிப்புடன் நடப்பதாக ஒரு தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறான். இதற்கு இவை தேவை என்கிற மாதிரியான அப்படியான செயல்கள் நம் உணர்வில் ஒன்றியிருக்கிறது.
இதில் இறைவன் எங்கு வந்தான் என்றால், தண்ணீர் ஊற்றியும், பூ பூக்கும் செடிகளில் கூட பூக்காக செடிகளும் உண்டு. (பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று; பூக்காமல், காய்க்காமல் இருந்த மரம் ஒன்று என்கிற மாதிரி) இதெல்லாம் இயல்பான நிகழ்வுகள்.

கணிப்புகள் எங்கு வருகிறதென்றால்,
நேரிடையாக நமக்கு அனுபவ விவரங்கள் கிடைக்காத விஷயங்களில். மேக மூட்டம் இருக்கிறது; மழை கொட்டித்தீர்த்து விடும் போலும் கறுப்பு வானம்; ஆனாலும் மேகக்கூட்டம் நகர்ந்து
மழை பெய்யாமலும் போய் விடுவது உண்டு. நம் கணிப்பு பொய்த்து விடுவதுண்டு. இந்தக் கணிப்பை எதிர்ப்பார்ப்பாக எண்ணியவருக்கு எதிர்பார்த்தமாதிரி நடக்காது போய்விடுகிறது.

வானிலை நிலையத்தில் கூட 24 மணி நேரத்திற்கு மழை என்று புள்ளி விவரத் தெளிவோடையே சொல்வது, கூட இன்னொரு காற்று மண்டலம் நிலை கொள்வதால் இன்னும் 24 மணி நேரம் என்று நீடிக்கிறது. இயற்கையில் நடைபெறும் எதிர்பாராத ஒரு செயல், விஞ்ஞான பூர்வமான அந்தக் கணிப்பிற்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. இன்னொரு காற்று மண்டலம் நிலைகொள்வதும், கொள்ளாததும் மனிதர் கையில் இல்லை. இந்த சிந்தனையின் நீட்டிப்பு ஆழ்ந்து இருக்குமானால், எதுவுமே நம் கையில் இல்லை என்று தெரியவரும்.

அதனால் தான் இந்தக் கதையில் வரும் சிவநேசன் கூட, நிகழ்வுகளுக்கும், அதன் ஆற்றலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, 'நான் இல்லாவிட்டால், இதே காரியத்தை இன்னொருவர் செய்திருப்பார்' என்கிறார்.

மனிதன் மட்டுமில்லை, இயற்கையின் அத்தனை படைப்புகளும், நிகழ்வுகளுக்கு டூலாகச் செயல்படுகின்றன என்பது தான் உண்மை! 'கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததால் கொடி அசைந்ததா?' என்று ரொம்ப எளிமையாக ஒரு பெரும் தத்துவத்தைச் சொல்லிப் போய்விட்டார் கவிஞர் பெருமான்!

ஈடுபாட்டுடன் கூடிய உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்! பின்னூட்டத்தில் நிறைய பேச முடியவில்லை; இன்னும் கேளுங்கள்; துண்டு துண்டாக நிறையப் பேசலாம்!

G.M Balasubramaniam said...

CERTAIN happenings when they occur are noy digestable. But when and if you can think in retrospect, you can justify them. but that requires a very objective analysis. I have experienced some unpalatable situations. but at later date I am able to reconsile. ( I am away from home and that is why this English comment.)iAM FOLLOWING .

ஜீவி said...

@ கோமதி அரசு

மாறுதலோ, மாற்றிக்கொள்ளலோ இல்லையென்றால், வளர்ச்சி இல்லை. அதைத்தான் இன்னொரு விதத்தில் பக்குவப்பட்டுவிட்டது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர் கள்.

ஆக்கபூர்வமான வளர்ச்சிகளுக்கு இயற்கையிலே ஒரு சக்தி உண்டென்பதால், அது நேர்விகிதத்தில் செயல்பட்டு மேலும் வெற்றிகளைக் குவிக்கிறது.

கதையின் தேர்ந்த பகுதியைத் தேர்ந்து படித்து மகிழ்ந்திருக்கிறீர்கள். சிவநேசனின் அந்த கருத்து பற்றி நண்பர் ஸ்ரீராமிற்கு இட்டிருக்கும் பதிலில் வாசித்து மகிழக் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து வந்து தங்கள் நல்ல கருத்துக்களைப் பதிவதற்கு மிக்க நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ சிவகுமாரன்

'காலங்கள்' நாளும் நிகழும் நிகழ்வுகளின் மேடை ஆதலாலும், அது மாற்றங்களில் முகிழ்க்கும் விஞ்ஞான பூர்வமான உண்மை என்பதாலும், படைக்கப்பட்ட அத்தனை சமாச்சாரங்களின் செயல்பாடுகளின் விளைவுகளும் அதில் பொதிந்திருப்பதாலும் 'காலம்' என்பது அத்தனை மகத்தான பெருமை பெற்றிருக்கிறது.

தேர்ச்சக்கரங்களின் திருப்பல்களுக்கு போடப்படும் 'கட்டை' போல, லேசான நல்விளைவுகளின் நிகழ்வுகள் கூட தொடர்ச்சியான நல் விளைவுகளின் வேகத்தைக் கூட்டும்.அதனால் தான் நல்ல சிந்தை உள்ளவர்களின் பங்களிப்புகள், ஒட்டு மொத்த நல்லனவற்றின் வாழ்வாக மலர்கிறது.

தங்கள் வாசிப்பினூடே இந்தப் பகுதியையும் வைத்துக்கொண்டு தொடர்ந்து வாசித்து மகிழ்வதற்கு நன்றி, சிவகுமாரன்!

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

தாங்கள் சொல்வது உண்மையே. சிலவற்றின் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளக் கூட முடிகிறது. மனமறிந்து எந்தத் தவறும் செய்யாதவர்கள் மட்டுமல்ல, நல்லனவற்றையே தம் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டவர்கள் கூட பட்ட துன்பங்களை நினைக்கையில் மனம் வேதனையுருகிறது.

சில நம் எண்ண ஓட்டத்திற்கு புரிகிற மாதிரியே, பல புரியாமலும் போகிறது. எதற்கு எது என்று முடிச்சுப் போடமுடியாமலும் போவது பல நம் சிந்தனையின் வெகு குறுகிய அடர்வின் தூரத்தைத் தாண்டிய ஒன்றாகவே அமைந்து விடுகின்றன.

எங்கிருந்தாலும் தொடர்ந்து பகிர்ந்து கொள்வது குறித்து மகிழ்ச்சி, ஜிஎம்பி சார்!

பாச மலர் / Paasa Malar said...

பிரமிப்பாக இருக்கிறது...

ஆரம்பத்தில் கொஞ்சம் கனமான உணர்வை ஏற்படுத்திய போதும்....அனாயாசமாகப் போகிற போக்கில் சொல்லிச் சென்ற பல positive ஆன விஷயங்கள் நிறைவைத் தருகின்றன...

நமக்குப் பிடித்தது இன்னும் ஒருவருக்குப் பிடிக்கும் போது/ பிடிக்காது போகின்ற போது....இதற்கான காரணங்கள் என்னெவென்று சொன்ன விளக்கம் அருமை...

பாத்திரங்களுடன் கூடவே பயணிக்கிற ஓர் அனுபவம்...

மனிதனுக்கும் இயந்திரத்துக்குமான போராட்டத்தில் மனிதன் பெறுகின்ற வெற்றி...ஆறுதல்..

கண் சிகிச்சை பற்றி, பின் இசை மற்றும் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள்..தேவையான செய்திகளை விளக்கமாகத் தருகிற உங்கள் முயற்சி..பாராட்டுக்குரியது...

சில கருத்துகள் வழங்கிய மனோதத்துவ அனுபவத்தில் நம் மனதை நாமே உரசிப் பார்த்துக்கொள்கிற அனுபவமும் கிட்டியது...

தொடருங்கள்...வாழ்த்துகள்..

Shakthiprabha (Prabha Sridhar) said...

///இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் ஏதோ சேகரித்த விவரங்களைச் சொல்கிற மாதிரி இருக்கிறது.." என்று கைத்துப்போன குரலில் சொன்னான்.
///

இந்த வரிகளில் உள்ள ஆழம், எனக்கு மிக பரிச்சயமாக தோன்றுகிறது. நானும் அப்படி நினைப்பதுண்டு.

நடந்தவைகள் நடந்தபின் கனவு போல் தோன்றிச் செய்யும் அந்த உயிர்ப்பு நிகழ்காலத்தில் இருந்து விலகிவிடுவது போல்....

தொடர்கிறேன்.

ஜீவி said...

@ பாசமலர்

அனுபவித்த உணர்வுகளை ஆழ்ந்த விமரிசனமாய்த் தந்திருக்கும் பாங்கிற்கு மிக்க நன்றி, பாசமலர்!

தொடர்ந்து வந்து தங்களின் பார்வையைப் பதிய வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ Sakthiprabha

அதே உணர்வில் நூலிழை வழுவாமல், பயணித்திருக்கிறீர்கள்! அதனால் தான் இவ்வளவு துல்லியமாக வர்ணித்திருக்கிறீர்கள்!

இந்த வாரத்திற்கு 'வலைச்சர'த்திற்கு
ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள். வந்த வாய்ப்பில் தடம் பதித்து வென்று வாருங்கள்!

dondu(#11168674346665545885) said...

//நீ சொல்வது சரிதான். ஒரு பத்து பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் இந்த விஷயத்தில் இப்பொழுதிருக்கிற முதிர்ச்சி எனக்கு அப்பொழுது இருந்திருக்குமா என்று தெரியவில்லை.//
தம்பிக்கு குற்ற உணர்ச்சி ஏற்படலாகாது என நினைக்கும் அன்ணன் பெருமைக்குரியவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails