மின் நூல்

Wednesday, February 29, 2012

பார்வை (பகுதி-30)

                    அத்தியாயம்--30

"அவங்க வருவாங்க..  நீங்க உள்ளே வாங்க.." என்று அந்தப் பெண் செளஜன்யமாக அழைத்தது ஊர்மிளாவுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.  செருப்பை முன் தாழ்வாரத்தில் கழட்டி விட்டு அவள் நிமிர்வதற்கும் லஷ்மணன் அந்த இன்னொருவருடன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

"ஊர்மிளா! இவர் தான் விஜி! இதோ, 'பார்வை' விஜியைப் பார்த்துக்கோ.." என்றான் லஷ்மணன்.

அவன் சொன்னதைக் கேட்டு ரிஷி சிரித்து விட்டான்.  ஊர்மிளாவைப் பார்த்து "ஹலோ.." என்றான்.

"உங்களை உங்க அந்தக் கதையைப் படிச்சதிலேந்து சந்திக்கணும்னு ஆவலா இருந்தேன்.  இன்னிக்குத் தான் முடிஞ்சது" என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த பொழுது "ஏன் நின்னுகிட்டே இருக்கீங்க.. உக்காருங்க" என்று சோபாவைக் காட்டினாள் அந்தப் பெண்.

"என் மனைவி வித்யா.."என்று ரிஷி தன் மனைவியை அவர்களுக்கு அறிமுகப்படுத்த பரஸ்பரம் நமஸ்காரங்களைப் பறிமாறிக் கொண்டார்கள்.

"லஷ்மணன்! நீங்க யாருன்னு தெரிஞ்சா என் மனைவி ரொம்ப ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போவாங்க.." என்றவன் வித்யா பக்கம் திரும்பி, "அபராஜிதன்னு கதையெல்லாம் எழுதறார் இல்லையா? அவர் தான் இவர்!"என்றான்.

"ஹையோ.. அபராஜிதனா, இவர்?.."என்று திகைத்துப் போய்விட்டாள் வித்யா.
"இவர் வர்றான்னு ஏங்க மின்னாடியே சொல்லலே?"என்று புருஷனிடம் கோபித்துக் கொண்டாள்.

முன்னாடியே சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பாள் என்று ஊர்மிளாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் தன் வியப்பை அடக்கிக் கொண்டு, "பரவாயில்லையே, இவரை முன்னாடியே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கே" என்றாள்.

"என்ன ஊர்மிளா! அப்படிக் கேட்டுட்டீங்க.. அபராஜிதனைத் தெரியாதவங்க தமிழ் நாட்டிலே இருப்பாங்களா, என்ன?" என்று வித்யா குழந்தைத்தன வியப்போடு தலையைச் சாய்த்துக் கேட்டாள். "அபராஜிதன் வந்திருக்கிறாருன்னு இப்போ ஒரு குரல் கூவி விட்டால் போதும்.  இந்த ஸ்டோரே இங்கே குழுமிடும்" என்று சொல்லி விட்டு, லஷ்மணன் உட்கார்ந்திருந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் அமர்ந்து கொண்டாள். "ஸார்.. நேத்திக்குத் தான் உங்களோட 'காந்தளூர் சாலை' இந்த அத்தியாயம் படிச்சேன்.  இளவரசி பெருநிலச்செல்வி கழுத்து மாலையில் பூட்டியிருக்கற லாக்கெட்டில் தானே அவள் பிறப்பு ரகசியம் இருக்கு?.. ஆமாவான்னு சொல்லிடுங்க.. நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்."

"உண்மையைச் சொன்னா அப்படி இல்லைங்க..  இந்த லாக்கெட் சமாச்சாரமெல்லாம் அப்படியிருக்குமோன்னு நீங்க யூகிச்சுக் குழம்பறத்துக்காக திசை திருப்பற வேலை.. நம்பாதீங்க" என்றான் லஷ்மணன்.

"ஓ.." என்று அவள் உதடு குவித்த பொழுது அவள் முகமே ஓவல் சைஸ்ஸூக்கு மாறி ஊர்மிளாவே பொறாமைப்படுகிற மாதிரி அழகாகத் தெரிந்தது. "அப்படியா சமாச்சாரம்?.. பின்னே எதுக்கு அவ சங்கிலிலே ஒரு லாக்கெட் பூட்டியிருக்கறதா சொல்லியிருக்கீங்க.."

"சட்டுனு இப்போ அதுக்கெல்லாம் காரணம் தெரியாது.  ஏதாவது இப்படி ஒண்ணு ரெண்டு எழுதிண்டு போறச்சேயே அங்கங்கே போட்டு வைச்சிருந்தா, சமயத்லே ஏதாவது உபயோகப்படும்.  அதுக்காகத் தான்."

"உபயோகப்படாம போயிட்டா?.."

"உபயோகப்படுத்திக்கறது நம்ம சாமர்த்தியம் இல்லையா?.. அப்படியே உபயோகப்படாட்டாலும் ஒண்ணுமில்லே.  அது அதுவாகவே இருந்திட்டுப் போகட்டுமே? என்ன சொல்றீங்க?.." என்று லஷ்மணன் கேட்ட பொழுது வித்யாவுக்கு அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

'க்ளுக்'கென்று ஒரு சிரிப்பு மட்டும் அவள் தொண்டையில் உற்பத்தியாகி உதடுகளில் வழிந்தது. "ஆமா! எனக்கு இதெல்லாம் தோணலே பாருங்க.. ரசிச்சுப் படிச்சிண்டு வர்றேனா, நீங்க எழுதற ஒவ்வொண்ணுக்கும் மனசு ஒரு காரணம் தேடும். அம்புட்டுத்தான்" என்றாள்.

"அது தான் உண்மையான வாசக குணம் வித்யா" என்றாள் ஊர்மிளா, அவளை உற்சாகப்படுத்தும் விதமாக.

"வாசக குணம்?.. இப்போத் தான் முதல் தடவையா இந்த வார்த்தையைக் கேள்விப்படறேன், ஊர்மிளா!" என்று சொல்லிச் சிரித்தாள் வித்யா. "என்னது.. லைட் ரீடிங் தான்."

"அதனாலே இந்த மாதிரி வார்த்தைகளோட அந்நியப்பட்டுப் போயிட்டீங்க, இல்லையா?"

"அந்நியப்பட்டு?.. இதோ இன்னொரு புது வார்த்தை! உங்களோட கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தா நிறைய புதுவார்த்தைகளை பழக்கப்படுத்திக் கொள்ளலாம் போலிருக்கே!" என்று மறுபடியும் தலை சாய்த்து, புருவங்கள் நெற்றி மேட்டுக்கு ஏறி, வித்யா ஆச்சரியப்பட்ட பொழுது, "ஸோ க்யூட்!" என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா.

"வாசக குணம்னு சொல்லிட்டீங்க.. அப்போ எழுத்தாள குணம்னும் ஏதாவது இருக்கும் இல்லையா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் ரிஷி.

"நாங்க வாசகர்கள். அதனாலே எங்களுக்குத் தெரிஞ்சதைச் சொன்னோம். நீங்க ரெண்டு பேரும் தான் அப்படி ஏதாவது இருந்ததுன்னா சொல்லணும்" என்று நைஸாக கமிட் பண்ணிக் கொள்ளாமல் தெரிந்தே நழுவினாள் ஊர்மிளா.

"ஒரு நிமிஷம்.."என்று வித்யா எழுந்து போய் பிரிட்ஜிலிருந்து பெரிய கோக் பாட்டிலை எடுத்து டைனிங் டேபிளின் மேல் வைத்தாள்.  ஷெல்ப்பிற்குச் சென்று நாலைந்து கிளாஸ் டம்ளர்களையும் எடுத்து கோக்கை நிரப்பிக் டீப்பாயின் மீது கொண்டு வந்து வைத்தாள்.

"வாசகனாய் இருப்பதின் இன்னொரு நிலையே எழுத்தாளன்ங்கறதாலே
அந்த எழுத்தாளன்னுக்குன்னு தனியா ஒரு குணம் இருக்கும்னு நெனைக்கிறீங்க?" என்றாள் ஊர்மிளா.

"இன்னொரு நிலையா?.. இப்போ பாருங்க, இன்னொரு புது வார்த்தை!" என்று சிரித்தாள் வித்யா.

"தான் விரும்பறதைப் படிச்சு சந்தோஷப்படும் பொழுது வாசகன்.  அப்படிப் படிக்கறதினாலே, பார்கறதாலே ஏற்பட நினைப்புகளை எழுத்தில் வெளிப்படுத்தும் பொழுது எழுத்தாளன். இல்லையா?.. ஆக வாசகன்-எழுத்தாளன்னு இந்த ரெண்டு நிலைலேயும் ஒண்ணா இருக்கறதுங்கறது அவங்களோட விருப்பம் தான். விருப்பத்தின் அடிப்படையிலேயே குணம் அமையறதாலே இந்த ரெண்டு நிலைலேயும் பெரிசா குணம் மாறிடாதுன்னு சொல்ல வந்தேன்" என்றாள் ஊர்மிளா.

"நினைப்பும் எழுத்தும் ஒண்ணா இருந்தா நீங்க சொல்ற மாதிரி குணத்திலேயும் வித்யாசம் இருக்காது. ஒப்புக்கிறேன். சொல்லப்போனா அப்படித்தான் இருக்கணும்.  ஆனா---" என்று ரிஷி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது வாசல் பக்கம் ஏற்பட்ட சலனத்தில் சொல்லி வைத்தாற் போல லஷ்மணனும், ஊர்மிளாவும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தனர்.

புத்தகப் பையுடன் உள்ளே நுழைந்த சிறுவன் அவர்களைப் பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்து பின் பக்கத்து ரூமில் பையை வைத்து விட்டு பின்பக்கம் போனான்.

"என் பையன் கெளதமன்.."என்று ரிஷி சொன்ன பொழுது 'வாவ்' என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் ஊர்மிளா. "அப்படியே அம்மா ஜாடை.  இந்த வயதில் உங்களுக்குப் பையனா? உங்களைப் பாத்தா அப்படி நினைக்கத் தோணலை.." என்று வித்யாவைப் பார்த்து அவள் சொன்ன பொழுது வித்யா கலகலவென்று சிரித்தாள்.  'இப்படி வெளிப்படப் பாராட்டியிருக்க வேண்டாமே' என்று லஷ்மணனுக்குத் தோன்றினாலும், அதனால் வித்யா ரொம்ப மகிழ்ந்தமாதிரித் தெரிந்ததால் சமாதானப்பட்டு விட்டான்.

"ஆனா?.. என்ன சொல்ல வந்தீர்கள், விஜி?" என்று ஊர்மிளா கேட்ட பொழுது, "விஜி இல்லே ரிஷி.." என்று திருத்தினாள் வித்யா.

"ரிஷியா?.." என்று ஊர்மிளா திகைத்த பொழுது, "கதையெல்லாம் எழுதறத்தே ரிஷி, விஜியா மாறிடுவார்" என்று சிரித்தாள் வித்யா.

"ஃபைன்.. நான் உங்க பேரே விஜிதானாக்கும் நெனைச்சேன். விஜயக்குமார் விஜியாயிட்டாரோன்னு.. ரிஷி கூட ரேர் நேம் தான்.  இல்லையா?"

"நான் பொறந்தப்போ எங்க மாமா வைச்ச பேராம் ரிஷி.  இந்த விஜி என் மனைவி வைச்சது.  'விஜி'யாய் அவளும் பையனும் இந்தப் பெயரில் ஒளிந்திருக்கிறார்களாம்" என்றான்.

"வி ஃபார் வித்யா.  ஜி ஃபார் கெளதம்.  இல்லையா?.. ஜீவின்னு கூட வைச்சிருக்கலாம் இல்லையா?"

"ஜீவிங்கற பேர்லே இன்னொரு எழுத்தாளர் இருக்கறதாலே அது வேண்டாம்னு நெனைச்சோம். அப்புறம், என் வாழ்க்கைலே முதல் அறிமுகம் வித்யா. அதனாலே அவளுக்கு முதல் இடம்.  அடுத்த அறிமுகம் கெளதம். அதனாலே அவனுக்கு அதற்கு அடுத்த இடம். சரி தானே?"

"அறிமுகமா?"

"ஆமாம். பெயரின் மூலமாகத் தானே ஒவ்வொருத்தரும் நமக்கு அறிமுகம் ஆகறாங்க?.. கல்யாணம் ஆகறச்சே அவ பெயர் மட்டும் தான் எனக்குத் தெரியும்.  நாளாவட்ட வாழ்க்கைப் பயணத்லே அவ எப்படிப்பட்டவள்னு தெரிஞ்சது.  யோசிச்சு யோசிச்சு நாங்க வைச்ச பேர் தான் கெளதம். எப்படிப் பட்டவனா அவன் உருவாகப் போறான்னு..." பின்பக்கம் சென்றிருந்த கெளதம் ஹால் பக்கம் வந்ததினால் ரிஷி சொல்ல வந்ததை நிறுத்திக் கொண்டான் என்று தெரிந்தது.

கைகால் அலம்பி முகம் துடைத்து வந்தான் போலும்.  பளிச்சிட்ட முகம் நிர்மலமாக இருந்தது. ரிஷியின் மகன் ரிஷியை விட சிறந்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா.


(இன்னும் வரும்)

24 comments:

Geetha Sambasivam said...

ஆஹா, கெளதம் கிட்டே ஏதோ ஒளிஞ்சிருக்கே! அதுவும் அவனைக் குறித்த இந்த விமரிசனம். என்ன என்னவோ ஊகங்களைக் கிளப்பிவிட்டது. ஒரு மாதிரி ஊகித்திருக்கேன். சரியானு பார்த்துக்கணும். :)))

//அப்படியே அம்மா ஜாடை. இந்த வயதில் உங்களுக்குப் பையனா? உங்களைப் பாத்தா அப்படி நினைக்கத் தோணலை..//

Geetha Sambasivam said...

ஒரு சிறுகதை எழுதறதே கஷ்டமா இருக்கையிலே இவ்வளவு பெரிய நாவலைத் தொய்வில்லாமல் எழுதறதுக்குத் தனித் திறமை வேண்டும். அதுவும் இந்த அத்தியாயத்தில் இருக்கிறாப்போல் நீங்களே வாசகனாகவும், நீங்களே எழுத்தாளராகவும் இருந்து மூன்றாவது பார்வையில் கதையை ஆய்ந்து ஆலோசித்து அடுத்து என்னனு முடிவு செய்து!

பிரமிப்பா இருக்கு. ஏற்கெனவே சொன்னாப் போல் உங்கள் மாஸ்டர் பீஸ் இதான். வாழ்த்துகள்.

பின்னூட்டங்களைத் தொடரும் ஆப்ஷன் இல்லை. அப்புறமா வந்து பார்த்துக்கறேன்.

கோமதி அரசு said...

"அது தான் உண்மையான வாசக குணம் வித்யா" என்றாள் ஊர்மிளா, அவளை உற்சாகப்படுத்தும் விதமாக.

"வாசக குணம்?.. இப்போத் தான் முதல் தடவையா இந்த வார்த்தையைக் கேள்விப்படறேன், ஊர்மிளா!" என்று சொல்லிச் சிரித்தாள் திவ்யா. "என்னது.. லைட் ரீடிங் தான்."//

வித்யா திடீரென்று திவ்யாவாக மாறி விட்டாளே இதற்கும் ஏதாவது உள் அர்த்தம் இருக்க?

கோமதி அரசு said...

வி ஃபார் வித்யா. ஜி ஃபார் கெளதம். இல்லையா?.. ஜீவின்னு கூட வைச்சிருக்கலாம் இல்லையா?"

"ஜீவிங்கற பேர்லே இன்னொரு எழுத்தாளர் இருக்கறதாலே அது வேண்டாம்னு நெனைச்சோம். அப்புறம், என் வாழ்க்கைலே முதல் அறிமுகம் வித்யா. அதனாலே அவளுக்கு முதல் இடம். அடுத்த அறிமுகம் கெளதம். அதனாலே அவனுக்கு அதற்கு அடுத்த இடம். சரி தானே?"//

ஜீவி சார் பெயர் காரணம் அருமை.

கோமதி அரசு said...

இளவரசி பெருநிலச்செல்வி கழுத்து மாலையில் பூட்டியிருக்கற லாக்கெட்டில் தானே அவள் பிறப்பு ரகசியம் இருக்கு?..//

அந்த காலப் படங்களில் இந்த லாக்கெட் பெரும் பங்கு வகிக்கும்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குழந்தையை கண்டு எடுத்து வளர்ப்பவர்கள் லாக்கெட்டை விற்காமல் பத்திரப் படுத்தி வைத்து இருப்பார்கள்.

சில கதைகளில் அதனுள் படம் இருக்கும். யார் என்ற உண்மை சொல்ல.

நல்ல விறு விறுப்பாய் செல்கிறது கதை.

Anonymous said...

வாசக குணம்னு சொல்லிட்டீங்க.. அப்போ எழுத்தாள குணம்னும் ஏதாவது இருக்கும் இல்லையா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் ரிஷி.

பூக்களாய் வர்ஷிக்கும் வார்த்தைகள் அருமை!

Shakthiprabha (Prabha Sridhar) said...

//தான் விரும்பறதைப் படிச்சு சந்தோஷப்படும் பொழுது வாசகன். அப்படிப் படிக்கறதினாலே, பார்கறதாலே ஏற்பட நினைப்புகளை எழுத்தில் வெளிப்படுத்தும் பொழுது எழுத்தாளன். //

அச்சு அசல் உங்க ஸ்டைல்... எனக்கும் இக்கருத்து உடன்பாடே.

//ஜீவிங்கற பேர்லே இன்னொரு எழுத்தாளர் இருக்கறதாலே அது வேண்டாம்னு நெனைச்சோம்.//

:)))) விஜியின் பெயர் காரணம் இதனுள் ஒளிந்திருக்கிற்து :D

G.M Balasubramaniam said...

வாசகனே எழுத்தாளனாகவும் ,எழுத்தாளனே வாசகனாகவும் இருப்பதிலும் அனுகூலங்கள் இருக்கின்றன. வாத்துக்கள். தொடருகிறேன்.

சிவகுமாரன் said...

மலைப்பாய் இருக்கிறது ஜீவி சார்.
இசை வைத்தியம் ஆரம்பிக்கும் போது எழுந்து போனவன் இப்போது தான் வருகிறேன். கச்சேரியில் பாதியில் எழுந்து போவது , வித்வானை அவமதிப்பது போன்றது. என்னை மன்னிப்பீர்களா?
(விரைவில் விட்டதை எல்லாம் படித்து விடுகிறேன்.)

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

1. யூகங்களின் சிறப்பே அது தான். நனவுலக தெரிதல்கள் கற்பனையின் சிறகுகளைப் பூட்டிக்கொண்டு சுவாரஸ்யம் கொடுப்பது. சரியாயிருந்தால் தனக்குத் தானே 'ஷொட்டு' கொடுத்துக் கொள்வதில் இருக்கும் சுகமே அலாதி தான்.

யூகங்களுங்களுக்கும் கதைகளுக்கும் சின்ன வித்தியாசம் தான். நனவுலக சலனங்களின் பாதிப்பில் முகிழ்த்து அதே சமயம் அந்த நனவுலகிலிருந்து திலிருந்து நழுவி நம் இஷ்ட்டபடியான உலகை சமைப்பது. அப்படியான நழுவல்களும் சமைத்தல்களும் தாம் அவற்றின் அழகே.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம் (2)

நன்றி, கீதாம்மா.

உங்களின் கீர்த்தி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படியான உங்களிடமிருந்து வரும் பாராட்டு, மேலும் தீர்க்கமாக எழுதும் பொறுப்புகளைத் தந்திருக்கிறது என்பதே இப்பொழுது என் எண்ணம்.

தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களை பதிய வேண்டுகிறேன்.

மீண்டும் மிக்க நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

நன்றி, கோமதியம்மா.

நடுநடுவே 'காந்தளூர் சாலை' கதையையும் கோடி காட்ட ஆசை.

உங்களுக்கு அந்தக்கால சில திரைப் படங்களின் நினைவும் வந்து விட்டது அல்லவா?.. ஆமாம், நீங்கள் சொல்கிற மாதிரி, சில பழைய திரைப்படங்களில் லாக்ட்டின் பங்கு மகத்தானது தான். அதுவும், இரட்டை வேடம் என்றால் கேட்கவே வேண்டாம். உரிமைப் பத்திரம் மாதிரி இந்த லாக்கெட் ஒன்றே எல்லாவற்றிற்கும் அத்தாட்சி. ஆனால் படம் முடியப்போகிற தருவாயில், கடைசி கட்டத்தில் தான் லாக்கெட்டின் சாமாச்சாரமே அறியப்படும், இல்லையா?.. நல்ல நினைவுகள்.

ஜீவி said...

@ Anonymous

தங்கள் பெயர் தெரியாதது குறையாய் இருக்கிறது. நன்றி சொல்வதற்காகத் தான்.

பூவனத்தில் பூக்களின் வர்ஷிப்புக்குப் பஞ்சமேது? அத்தனை ஒர்ஷிப்புகளும் அதனால் தான்.

தொடர்ந்து வந்து வாசித்து ரசிக்க வேண்டுகிறேன். உங்களின் பின்னூட்டமே உங்களின் உயர்ந்த ரசனையைச் சொல்வதால் இந்த வேண்டுகோள். வாருங்கள்.

ஜீவி said...

@ Shakthiprabha

பாராட்டின் ஸ்டைலும் அச்சு அசலாக உங்களதே!

அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள்?.. 'விஜி'ன்னு பேர் வைச்சதும், என்ன என்னவெலாமோ செய்ய வேண்டியதாச்சு ஷக்தி!

தொடர்ந்து வாருங்கள். வந்து தங்கள் எண்ணங்களைத் தவறாது பதிந்து விடுங்கள்.

ஜீவி said...

@ G.M.B.

வாசகனாய் இருப்பவன் தான் எழுத்தாளன் ஆக முடியும். எழுத்தாளனாய் இருப்பினும், தொடர்ந்து வாசகனாய் இருந்தால் தான் எழுத்தில் சிறப்பைக் கூட்ட முடியும். இதுவே அடிப்படை விதி அல்லவோ?..

வருகைக்கு நன்றி, தொடர்ந்து வந்து ரசிக்க வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ சிவகுமாரன்

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சிவகுமாரன்! விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிப்பது இன்னொரு வகையான சுவையைக் கூட்டும்.

முடிந்த பொழுதெல்லாம் இந்தப் பக்கம் வந்து பாருங்கள். நன்றி.

ஸ்ரீராம். said...

அபராஜிதன் என்ற பெயர் அபராஜித பல்லவன் பெயரை நினைவு படுத்துகிறது.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் பின்னூட்டமிடுபவர்களும் கதையில் இடம் பெற ஆரம்பிப்பார்களோ.....!

:)))

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அந்த கெளதம் மட்டும் என்னவாம்? சரித்திர அபராஜித பல்லவனை கதை உலகிற்குக் கொண்டு வந்தவர் பெயர் மாதிரி இன்னொரு...

அட! கண்டுபிடித்து விட்டீர்களே! இரண்டாவது சொன்ன ஏற்பாடு தான் நடந்து கொண்டிருக்கிறது!

பாச மலர் / Paasa Malar said...

எனக்கு ஏற்பட்ட மலைப்பில்...
இந்தப் பகுதியின் எந்த வரிகளைப் பற்றிப் பேசுவது என்றே புரியவில்லை....பலமான வார்த்தைப் பிரயோகங்கள்..போகிற போக்கில் கருத்துகள் சொல்லும் விதம்..எழுத்தாள, வாசக குண அலசல்கள்...எதைத் தனியாகப் பிரித்துச் சொல்வது என்றே புரியவில்லை...

பின்னூட்டங்களும் ஒரு படைப்பின் சுவாரசியத்தைப் பன்மடங்கு பெருக்கித் தர முடியும் என்பது உங்களின் கடந்த பதிவுகளை விட, 'பார்வை'யில் மிகவும் சிறப்பாகத் தொடர்ந்து வெளிப்பட்டு வருவது ஒரு தனிச்சிறப்பு...

தவிர்க்க முடியாமல் மீண்டும் ஒரு சுய புராணம்:

இரண்டு பெய்ர்களின் முதல் எழுத்துகளை/ எழுத்து ஒலிகளைச் சேர்த்துப் பெயர் வைக்கும் அனுபவம்....என் மகளின் பெயர்...இப்படித்தான் வைத்தோம்...

இது போன்ற வாசகரின் எண்ணப் பிரதிபலிப்புகள் இதைப் படித்து வரும் அனைவருக்கும் இருப்பதை உயிரோட்டமான பின்னூட்டங்களில் காண முடிகிறது....

எப்போது புத்தகமாக வெளியிடப் போகிறீர்கள்...வெளியிட்டதும் மறக்காமல் தெரிவிக்க வேண்டுகிறேன்...

ஜீவி said...

@ பாசமலர்

ரசனைக்கும், விரிவான அனுபவ பகிர்விற்கும் நன்றி, பாசமலர்!

இணையத்தில் எழுதுவதால் நீண்டு விடாத வேறொரு அமைப்பில் இந்தக் கதை நீண்டு கொண்டு வருகிறது.
புத்தகத்துக்காக எனில் வேறொரு ஃபார்மெட்டில் சேர்க்க வேண்டியதைச் சேர்த்து சுவாரஸ்யத்தை உண்டு பண்ண வேண்டும்.

அப்படி உருவாகையில் நிச்சயம் தெரியப்படுத்துகிறேன்.

சிவகுமாரன் said...

வெகு நாட்களுக்குப் பின்னர் , இடைவெளிவிட்டு படிக்கிறேன். நீங்கள் (ஊர்மிளா) சொல்வது போல கதையோட அந்நியப்பட்டுப் போகிறேன். ஒரு குற்றவுணர்ச்சி. வாசக குணம் இதுவல்லவே என்கிறீர்களா ?
விஜி, ஜீவி ரசித்தேன்.

ஜீவி said...

@ சிவகுமாரன்

முடிந்த பொழுது படித்துக் கூட வாருங்கள். கதையைத் தப்ப விட்டாலும் பாதகமில்லை. கதை ஒரு சாக்கு தான். கதையின் ஊடாக வரும் விஷயங்கள் தாம் முக்கியம். அந்த விஷயம் நம் இருவருக்கும் பொதுவானது. நீங்கள் ஒன்றிப் படித்து விவாதிக்க அப்படியான நிறைய செய்திகள் இருக்கின்றன.

தொடர்ந்து படித்துப் பார்க்க வேண்டுகிறேன். நன்றி.

dondu(#11168674346665545885) said...

//"ஜீவிங்கற பேர்லே இன்னொரு எழுத்தாளர் இருக்கறதாலே அது வேண்டாம்னு நெனைச்சோம்.//
இந்த குறும்புதானே வாணாங்கறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜீவி said...

@ Dondu

அதைச் சொல்வதில் கூட குறும்பு கொப்பளிக்கிறது, பாருங்கள்!

Related Posts with Thumbnails