மின் நூல்

Wednesday, February 1, 2012

பார்வை (பகுதி-24)

                     அத்தியாயம்--24

"பார்வையிழந்தோரைப் பற்றிய கதைகளை நிறையப் படிச்சிருக்கேன், ஊர்மிளா! நானும் அந்த மாதிரி ஒண்ணிரண்டு கதைகளை எழுதியிருக்கேன். ஆனா இந்தக் கதையோ சந்தர்ப்ப வசத்தால பார்வையிழந்த ஒருத்தரை நாயகனாகக் கொண்ட கதை; அதுவும் அவரே அவரது நினைவுகளைச் சொல்கிற மாதிரியான ஒரு கதை, இல்லையா?" என்று சொல்ல ஆரம்பித்த லஷ்மணன் ஒரு நிமிடம் நிறுத்தினான்.

ஊர்மிளா மடியில் ஒரு சின்ன நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவன் சொல்வதை குறிப்புகளாகக் குறித்துக் கொண்டு வந்தாள்.

"பார்வையற்ற ஒருத்தர் தனது கடந்த கால நினைவுகளை நினைவுப்படுத்திக் கொண்டு சொல்றதா எழுதறது சுலபம்.  ஆனால் அவர் தனது நிகழ்கால நடவடிக்கைகளையும் நேரடியாக வர்ணிக்கிற மாதிரி இந்தக் கதையை எழுதினவர் எழுதினதைப் படிக்க ஆரம்பிச்சவுடனேயே இப்படி எழுதறதர்லே இருக்கற அந்த சிரமம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாப் புரிய ஆரம்பிச்சது.  நானும் எழுத்துத் துறைலே இருக்கறதால தெரியற அனுபவம் இது. எதையும் பார்த்துத் தான் நம்மாலே உள்வாங்கிக் கொள்ள முடியறது, இல்லையா?... ஆனா அவருக்கு அதுக்கான வழியும் இல்லேன்னு தெரியறப்போ தன்னைச் சுத்தி நடக்கற விஷயங்களை உணர்வதினாலே மட்டுமே அதையெல்லாம் எப்படி அவர் கிரக்சிக்கிறார்ங்கறதை துல்லியமா சொல்ல இவர் ரொம்பவுமே முயற்சித்திருக்கார்.  இந்தக் கதை எழுதியதின் சிறப்பம்சங்கள்லே முக்கியமானது அது.."என்று லஷ்மணன் சொல்லிக் கொண்டு வருகையிலேயே, "அதை இந்தக் கதைலே வர்ற நிகழ்ச்சிகளூடேயே ரெண்டு மூணு உதாரணம் காட்டி விளக்கிச் சொன்னா மனசில நன்னாப் பதியுமே?" என்றாள் ஊர்மிளா.

"ரெண்டு மூணு கூட வேண்டாம்.  ஒரு இடத்தைச் சொல்றேன்.  அதுமாதிரி இருக்கிற நிறைய இடங்களை நீயே படிச்சு ரசிக்கலாம்.." என்று சொன்ன லஷ்மணன், அந்த தீபாவளி மலரை எடுத்து, அந்த 'பார்வை' கதை பிரசுரமாகியிருக்கிற பக்கங்களைப் புரட்டினான். "எஸ்.. இப்போ இடத்தை எடுத்துக்கோ.."என்று கதையின் அந்த இருபதாம் பகுதியின் ஆரம்பத்தைப் படிக்க ஆரம்பித்தான்.

'புரொபசர் இன்னும் வரலே. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சுவர் பெண்டுல கடியாரத்தில் அடிச்ச மணியை எண்ணினதிலே மணி ஒன்பதுன்னு தெரிஞ்சது. தம்பி மாடிப்பக்கம் தன்னோட வயலினை எடுத்து வைச்சிண்டு சுருதி கூட்டிண்டிருக்கான் போலிருக்கு...'

-- "இந்த இடத்தை எடுத்துக்கோ.  அந்த பார்வையற்றவர்..." என்று சொல்ல ஆரம்பித்த லஷ்மணன் கொஞ்சம் தயங்கி அவளைப் பார்த்தான். "அவரைக் குறிப்பிட்டுச் சொல்றத்தேலாம், 'பார்வையற்றவர்,  பார்வையற்றவர்' ன்னு அடிக்கடி சொல்றது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.  இந்தக் கதையை எழுதினவர் வேணும்னா அவருக்கு ஒரு பேரைக் கொடுத்திருக்காம இருந்திருக்கலாம்.. நாம அவருக்கு ஒரு பேர் வைச்சிடலாமே! என்ன சொல்றே?" என்று கேட்டு அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.  லஷ்மணனின் கலங்கிய கண்களூடே, அந்த கதாபாத்திரத்தின் மீது அவன் கொண்டிருந்த அன்பு பளிச்சிட்டதை ஊர்மிளாவால் உணர முடிந்தது.

அந்தக் கலக்கம் அவளையும் பற்றிக் கொண்ட நா தழுதழுப்பில்,"நீங்களே அவருக்கு ஒரு பேரை வைச்சிடுங்க.. அவரைக் குறிப்பிட்டுப் பேசறத்தேல்லாம் இனிமே அந்த பெயர் கொண்டே அவரை அழைக்கலாம்.." என்றாள்.

"அதான் சரி.. ம்.. என்ன பேர் வைக்கலாம்?"ன்னு முணுமுணுத்த லஷ்மணன்," "உண்மைலே பார்வைங்கறது என்ன?.. கண்ணால் பார்க்கிற செயலின் பலனைத்தான் பார்வைன்னு பொதுவா நாம வழக்கத்லே கொண்டிருக்கோம்.  ஆனா, யோசிச்சுப் பார்த்தா அப்படி நினைக்கறது கூட ஓரளவு தான் சரின்னு தோண்றது.  ஒரு விஷயத்தைப் பத்தி ஒருவர் கொண்டிருக்கிற எண்ண வளர்ச்சிதான் பார்வைங்கற வார்த்தைக்கு முழு அர்த்தத்தைக் கொடுக்கறதுன்னு தெரியும்.  அப்படிப் பார்த்தா அவருக்கு அறிவழகன்'னு பேர் வைச்சுடலாமா?" என்று கேட்டான்.

"ஓ.. நல்ல பேர் தாங்க.. இனிமே அப்படியே அவரைக் கூப்பிடலாம்.."

"ஒரு வேடிக்கை பாத்தையா?.. இந்தக் கதையை எழுதினவர் யாரோ. பத்திரிகைலே பார்த்தா 'விஜி'ன்னு போட்டிருக்கு.  ஆணோ, பெண்ணோ தெரிலே.  அவ்வளவு வெகுஜன அறிமுகம் ஆகாத எழுத்தாளர் தான்;  டெல்லிலே இருக்கறதா யாரோ சொன்னது ஞாபகம் வர்றது.  அவர் எழுதின கதையைப் பத்தி தொடர்ச்சியா நாம பேசறதே இன்னொரு கதைக்கான அடித்தளமா அமையும் போலிருக்கு... இதை நீ உணர்றையா?"

"எக்ஸாட்லி.. இந்த வினாடி நானும் இதையேத் தாங்க நினைச்சேன்.  உடனே நீங்களும் சொல்லிட்டீங்க.... நம்ம கதையையும் இப்படியே ஆரம்பிக்கலாம்.. எப்படிப் போர்றதுன்னு தான் பாக்கலாமே?"

"நன்னா ஒரு ஷேப் கிடைக்கும்னு தோண்றது.  'காவேரி' பத்திரிகை ஆசிரியர் கூட ஒரு தொடர்கதைக்கு என்னைத் தொணப்பிண்டே இருக்கார். நன்னா வந்தா கொடுத்திடலாம்.. என்ன சொல்றே?"

"கொடுக்கலாம்னா மேலே தொடரணும்.  'பார்வை' பத்தி சொல்லிண்டே வந்தீங்கள்லே.. அதை அப்ரப்ட்டா எங்கே விட்டீங்கங்கன்னு ஞாபகம் இருக்கா?.." என்று கேட்டுக் கொண்டே குறிப்பு நோட்டைப் பார்த்தாள். "ஆங்! அந்த பெண்டுலம் கடிகாரம்..."

அவள் எடுத்துக் கொடுத்த ஞாபகச் சரடைப் பற்றிக் கொண்டான் லஷ்மணன். "எஸ்.. அவரோ பார்வையற்றவர்.  மணி ஒன்பதாகிறதுன்னு அவர் புரிஞ்சிக்கணும்.  கடியாரத்தில் தான் மணியைப் பாக்க முடியும்.  அப்படிப் பாக்க அவரால முடியாது.  அதனாலே கிட்டத்தட்ட இந்த காலகட்டத்தில் மறந்தே போன அந்தப் பெண்டுல கடிகாரம் வர்றது. அந்த ஒலி கொண்டு அவர் நேரத்தை அறியறதா வர்றது.. அதே மாதிரி, மாடிலேந்து வர்ற வயலின் சுருதி கூட்டற ஒலியால் தம்பி மாடிலே இருக்கான்னு உணர்றது. இப்படி காதே அவருக்கு கண்ணா இருக்கறதை பல இடங்கள்லே ரொம்பப் பிரமாதமா உபயோகப்படுத்தியிருக்கிறார்.  நான் கூட இந்த விஷயத்தை எங்கேயானும் அவர் கோட்டை விட்டுடுவாரோன்னு உன்னிப்பா படிச்சேன்.. ஊஹூம்.. ஒரு இடத்லே கூட இந்த விஷயம் ஸ்லிப் ஆகலே.  இந்தக் கதைலே இந்த சாமர்த்தியதை விஜி மெயிட்டன் பண்ணினது தான் அவரோட சூரத்தனமா எனக்குத் தெரியறது.." என்றான்.

"ஓரளவு நல்ல பாயிண்ட்டைத் தான் எடுத்துக் கொடுத்திருக்கீங்க..  இருந்தாலும்.."

"என்ன இருந்தாலும்?.."

"என்னமோ தோண்டித் துருவி சொல்ற மாதிரி இருக்கு.  பளிச்சின்னு கண்ணுக்குப் படற மாதிரி.."

"ஸீ.. அந்த மாதிரி வெளிப்படையா தெரியற விஷயம்ன்னு நிறையச் சொல்லலாம். ஆனா, இந்த மாதிரி உன்னிப்பா கவனித்துச் சொல்றதைத் தான் உன்னோட ஆப்ஸர்வேஷனா எக்ஸாம்லே எடுத்திப்பாங்க.. அன்டர்ஸ்டாண்ட்?.."

"கொஞ்சம் ஏமாந்தா வகுப்பே எடுப்பீங்க போலிருக்கு..?"

"ஏன் அப்படில்லாம் நெனைச்சிக்கறே?..  உனக்கு ஈடுபாடு இருக்கற விஷயத்திலே உனக்குத் தெரியாததை இன்னொருத்தர் கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கறே.. உனக்குத் தெரிஞ்சிருக்கறதை நீ இன்னொருத்தருக்கு சொல்றே... அவ்வளவு தான். ரொம்ப சிம்பிள்"

"ஒவ்வொருத்தர் ஈகோவும் ஒவ்வொரு மாதிரி. நீங்க அப்படி நெனைக்கிறீங்க.. எல்லாரும் அப்படி நெனைக்க மாட்டாங்கள்லே?"

"ஆரம்பத்லே அப்படித் தான் தோணும்.  ஆனா புதுப்புது விஷயங்களைத் தெரிஞ்சிக்கணுங்கற ஆர்வம் வர்றச்சே, தனக்கு அதுவரை அதுபத்தி தெரியாததெல்லாம் எந்த வழிலே தெரிஞ்சாலும் அதுபத்தி மேலும் மேலும் எந்த வழிலேயானும் தெரிஞ்சிக்கணும்ங்கற ஆர்வம் தான் கூடும். இதிலே இன்னொரு ஸ்டெப்பும் இருக்கு.  தனக்குத் தெரிஞ்சதை தான் சொல்றத்தே லாம் அதை இன்னொருத்தர் ஆர்வத்துடன் காது கொடுத்துக் கேக்க ஆரம்பக்கிறச்சே, இன்னொருத்தர் சொல்றத்துக்கும் தான் காது கொடுக்கணுங்கற உணர்வு தன்னாலே வரும்.  நாளாவட்டத்தில் இதுவே பழக்கமாயிடும்.. இப்படி பழக்கமாறது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். நிறைய விஷயங்கள் எங்கெங்கிருந்து எல்லாமோ நம்மைத் தேடி வர்றதை அனுபவபூர்வமா உணரலாம். உலகமே தகவல் கோளமாக இப்போ மாறிண்டு வர்றது தான் உண்மை.  எல்லாரும் எல்லாமும் தெரிஞ்சிக்கிறதுங்கறது அவ்வளவு சாத்தியமில்லாத விஷயமா மாறிப்போச்சு.  அந்த அளவுக்கு நிறைய விஷயங்கள்; அது பத்தின நிறைய தகவல்கள். புதுசு புதுசா ஜனிக்கற தகவல் சரடுகளோட நம்மையும் சேர்த்துக் கட்டிக்கலேனா, நாம மட்டும் தனியா கத்தரிக்கப்பட்டு அந்தரத்லே தொங்கற மாதிரி ஆயிடும்.  அப்படி ஆனா, அப்புறம் போன நூற்றாண்டில்லே நடந்த விஷயங்களைத் தான் இரண்டாயிரத்து பன்னெண்டிலும் பேசற பழமைவாதிகளா நமது அறிவு குறுகிடும்."

"இன்னொண்ணு ஞாபகத்துக்கு வர்றது.  மறந்து போயிடப்போறது. சொல்லிடறேன்.."

"சொல்லு.."

"கிட்டத்தட்ட ஈகோங்கற வார்த்தையோட சம்பந்தப்பட்ட ஒண்ணு தான், அந்தப் பார்வை கதைலே வர்ற ஒரு இடம்.. அந்த அறிவழகனுக்குப் பார்வை திரும்பி கிடைச்சதும் ஒரு வரி வரும்.  'முதல்லே பார்வை இருந்தப்போ எல்லாத்லேயும் எனக்கு இருந்த தன்முனைப்பு, பார்வை இல்லாத போது இல்லாது போனதுன்னு சொல்லி அந்த அவலம் மீண்டும் வந்திடக்கூடாது' ன்னு அவர் நெனைச்சிக்கற மாதிரி ஒரு வரி வரும். அவர் பட்ட கஷ்டங்களே மற்றவர்கள் மேல அவர் கொண்டிருந்த பிடிப்பினாலே என்கிற மாதிரி அவரை உருவாக்கிட்டு, இந்த மாதிரி தன்முனைப்பு கொண்டிருந்த ஆசாமியா அவர் இருந்திருந்தார் என்கிறதை ஏத்துக்க முடியலே.  கதையின் நடுவே நுழைக்கப்பட்ட இந்த ஒத்தை வரி கதைக்கு ஒட்டாம இருக்கறது மட்டுமில்லை,  இது அந்த அறிவழகன் மேலேயே சேற்றைக் குழைத்துப் பூசற மாதிரி இல்லே?"

"குட்! டீப்பாத் தான் படிச்சிருக்கே..  இதான் வேணும்.  நீ சொல்றது சரிதான்.  ஆனா எல்லாத்தையும் கதைலே சொல்லணும்னு அவசியம் இல்லே. அந்த அறிவழகன் அவரது ஆரம்ப வாழ்க்கைலே அப்படி இருந்தார்ன்னு அவரே நெனைச்சிண்டார்ன்னா,  சரின்னு விட்டுட்டுப் போயிட வேண்டியது தான். ரெண்டாவது-- கண் பார்வை அவருக்கு இருந்த காலம், அது இல்லாத காலம், மறுபடியும் வந்த காலம்ன்னு இந்த மூணு பருவத்திலேயும் வாழ்ந்த வாழ்க்கைலே ஏதாவது உள்ளுக்கு உள்ளே இருந்து அவர் உணர்ந்ததா காட்டணும் இல்லையா, அதுக்காக விஜி அப்படி அவர் மனசுக்குப் பட்ட எதையாவது அந்த பாத்திரத்தின் மீது ஏத்திச் சொல்லியிருக்கலாம்.  அந்த மட்டில் இதை எடுத்துக்க வேண்டியது தான்.  என்ன சொல்றே?.."

"ஓக்கே.. அப்புறம் வேறே என்ன இருக்கு?"

"முக்கியமானதை விட்டுட்டேயே?..  அறிவழகனுக்குப் பார்வை போகற இடம்-அந்தப் பார்வை அவருக்கு மீண்டும் வர்ற இடம்-- இந்த இரண்டு இடமும் டாப் இல்லையா?..  எதார்த்தமா, நாம ஏத்துக்கற மாதிரி உணர்வு பூர்வமா எழுதியிருக்கார் இல்லையா?"

"ஆமாங்க.. அதுவும் பார்வை அவருக்கு மீண்டும் வர்ற இடத்திலே, அந்த 'மானஸ சஞ்சரரே..' பாடலை எடுத்தாண்டிருக்கிறார் இல்லையா.. அற்புதம்ங்க.. மனசை அப்படியே உருக்கிடுத்து..  அந்த நேரத்லே, விஜி மனசிலே எப்படித்தான் இந்த 'மானஸ சஞ்சரரே..' வந்ததோ தெரிலே!
அந்தப் பாட்டு அருமையான செலக்ஷன்ங்க... சங்கராபரணம் சினிமாலே அந்தப் பாட்டைக் கேக்கறச்சே அலைஅலையா இசை மனசிலே ரொம்பி ததும்பி கொஞ்சம் கொஞ்சமா வழியற உணர்வை நான் அடைஞ்சிருக்கேன்"

"அடுத்ததா கதையை நகர்த்திண்டு போன பாத்திரங்களா வந்தவங்களைப் பத்தி, குறிப்பா அந்த டாக்டர் சாந்தி பத்தி, நிறையச் சொல்லலாம்.  மொத்தத்திலே இந்தக் காலத்திலே பத்திரிகைலே வர்ற கதைகள்லேந்து இது வேறுப்பட்டு வேறே மாதிரி இருந்தது..  அதுவே இதை எழுதினவர் பத்தியும், அவர் எழுதின கதையைப் பத்தியும் வித்தியாசமா நெனைக்க வைச்சது'ன்னு முடிச்சிடு.  அம்பதுக்கு நாப்பதாவது மார்க் வந்திடும்.. நான் கேரண்டி..."

ஊர்மிளா அந்த அளவுக்கு மதிப்பெண் பெற்று விட்ட மாதிரியே லஷ்மணனைப் பார்த்தாள்.

(இன்னும் வரும்)
15 comments:

கோமதி அரசு said...

ஒரு விஷயத்தைப் பத்தி ஒருவர் கொண்டிருக்கிற எண்ண வளர்ச்சிதான் பார்வைங்கற வார்த்தைக்கு முழு அர்த்தத்தைக் கொடுக்கறதுன்னு தெரியும். அப்படிப் பார்த்தா அவருக்கு அறிவழகன்'னு பேர் வைச்சுடலாமா?" என்று கேட்டான்.//

கண் இல்லையென்றால் என்ன! அவர் தன் அறிவு கண்ணால் எல்லாவற்றையும் பார்த்தும் அறிந்து கொண்டு இருந்தார்.

காதுகள் மூலம் கேட்ட ஒலிகளை
தன் அறிவு கண்ணல் தானே பார்த்து
வந்து இருக்கிறார்.

சரியான பெயரைத்தான் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். ஊர்மிளையும், லக்ஷ்மணனும்.

கோமதி அரசு said...

முதல்லே பார்வை இருந்தப்போ எல்லாத்லேயும் எனக்கு இருந்த தன்முனைப்பு, பார்வை இல்லாத போது இல்லாது போனதுன்னு சொல்லி அந்த அவலம் மீண்டும் வந்திடக்கூடாது'//

எனக்கு இதை தப்பாய் நினைக்க தோன்றவில்லையே!
அப்படியே தன்முனைப்பு இருந்தாலும் அதற்கு ஏதோ காரணம் இருந்து இருக்கும்.

தன் குற்றத்தை உணர்ந்து பார்க்கும் தன்மை வந்து விட்டாலே மனிதன் உயர்ந்து விடுகிறான்.

அறிவழகன் உயர்ந்த மனிதர் ஆகிறார்.

கோமதி அரசு said...

கண்ணாலே பாத்துத் தான் தெரிஞ்சிக்கணும்ங்கறத்துக்கு தேவையில்லாததையெல்லாம் காது பாத்துக்கும். உதாரணமா, சங்கீதத்தை அனுபவிக்கறச்சே, பாத்துத் தெரிஞ்சிக்கறத்துக்கு அங்கே எதுவும் இல்லை. அது கேட்டு ரசிக்கிற விஷயம். உண்மைலே சில நேரத்லே பாக்கறது கூட கேக்கறத்துக்கு இடைஞ்சலா அமைஞ்சு கவனத்தை எங்கேயானும் திருப்பிடும். அந்தத் தொந்தரவு வேண்டானுட்டுத்தான் பலபேர் அதை முழுமையா அனுபவிக்கறச்சே கண் இமைகளை மூடிண்டு அனுபவிக்கறாங்க. கடவுள் கிட்டே வேண்டிக்கறச்சே கூட கையைக் குவிச்சிண்டு கண்களை மூடிண்டு தான் தரிசிக்கறோம்.." என்று டாக்டர் சாந்தி மனத்தில் தைக்கிற மாதிரி சொல்லிண்டு வர்றத்தே,//

லக்ஷ்மணன் நினைப்பது போல் முன்பே டாகடர் சாந்தி சொல்லி விட்டார் 7வது அத்தியாத்தில்.

கண் தெரியாதவர்களுக்கு மற்ற புலன்கள் மிகவும் கூர்மையாக(விழிப்பாக)இருக்கும் என்பார்கள்.

கோமதி அரசு said...

கண்கள் மூடி இருக்கும் போது தான் மற்ற சூழ் நிலைகளால் கவரப்பட மாட்டோம். மனது ஒரு நிலைப்படும்.
டாகட்ர் சாந்தி சொல்வது போல் கண்ணை மூடி இறைவனை வணங்குவதும், கண்களை மூடி பாடலை ரசிப்பதும்.அதனால் தான்.

பாச மலர் / Paasa Malar said...

//ஏன் அப்படில்லாம் நெனைச்சிக்கறே?.. உனக்கு ஈடுபாடு இருக்கற விஷயத்திலே உனக்குத் தெரியாததை இன்னொருத்தர் கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கறே.. உனக்குத் தெரிஞ்சிருக்கறதை நீ இன்னொருத்தருக்கு சொல்றே... அவ்வளவு தான். ரொம்ப சிம்பிள்"//

இந்தக்கதை படிக்கும் போதும்...இப்போதும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தது இது.....

இந்த உணர்வுக்கு மேலும் மேலும் மெருகு சேர்க்கிறது லக்ஷ்மணன் தம்பதியர் உரையாடல்...

நிறைய கற்றுக் கொள்ள முடிகின்றது...வாழ்த்துகளும் நன்றிகளும்..

Shakthiprabha said...

///இந்த விஷயத்தை எங்கேயானும் அவர் கோட்டை விட்டுடுவாரோன்னு உன்னிப்பா படிச்சேன்.. ஊஹூம்.. ஒரு இடத்லே கூட இந்த விஷயம் ஸ்லிப் ஆகலே. ///

நான் அனுபவித்து ரசிச்ச முதல் பாய்ண்ட் இது. appreciation of article ரொம்ப அருமை....ஹ்ம்ம்....கதைக்குள் கதை நல்ல ட்விஸ்ட்....இன்னும் வரும்....இன்னமும் ஏதோ எதிர்பார்ப்பை தூண்டுகிறதே...

G.M Balasubramaniam said...

"ஒரு வேடிக்கை பாத்தையா?.. இந்தக் கதையை எழுதினவர் யாரோ. பத்திரிகைலே பார்த்தா 'விஜி'ன்னு போட்டிருக்கு. ஆணோ, பெண்ணோ தெரிலே. விஜி திருப்பிப்போட்டால் ஜீவி.அலசல் தொடரட்டும் .நானும் தொடர்கிறேன்.

G.M Balasubramaniam said...

"ஒரு வேடிக்கை பாத்தையா?.. இந்தக் கதையை எழுதினவர் யாரோ. பத்திரிகைலே பார்த்தா 'விஜி'ன்னு போட்டிருக்கு. ஆணோ, பெண்ணோ தெரிலே. விஜி திருப்பிப்போட்டால் ஜீவி.அலசல் தொடரட்டும் .நானும் தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

நல்ல ஆழமான விமரிசனம். வரிக்கு வரி கவனித்துச் செய்யப் பட்டிருக்கிறது; செதுக்கப்பட்டிருக்கிறது??

அதே போல் தன் முனைப்புத் தவறில்லை என்றே என் மனதில் படுகிறது. இது பார்வையற்றவர்களுக்கு ஒரு விதத்தில் இறைவன் தந்திருக்கும் வரம் என்றே சொல்லலாம். அவர்கள் பார்ப்பது மூளையால் தானே.

கண்களைத் திறந்து கொண்டு பார்க்கும் உலகம், கண்களை மூடினால் வேறுவிதமாய் நமக்கும் தெரிகிறது அல்லவா? பார்வையற்றவர்களுக்கு உலகமே ஓசை வடிவில் தானே.

Geetha Sambasivam said...

தொடர்வதைப்பார்த்தால் இன்னமும் முக்கியமான ஒன்று சொல்லப்படவில்லை எனத் தோன்றுகிறது. என்னளவில் இந்தக் கதை உங்கள் மாஸ்டர்பீஸ் என்று சொல்வேன். இது ஒவ்வொருவர் "பார்வை"யிலும் மாறுபடும். :)))))))

ஜீவி said...

@ கோமதி அரசு

//சரியான பெயரைத்தான் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். ஊர்மிளையும், லக்ஷ்மணனும்.//

மிகவும் உணர்ந்து பெயருக்கான உங்கள் விளக்கத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

//எனக்கு இதை தப்பாய் நினைக்க தோன்றவில்லையே! அப்படியே தன்முனைப்பு இருந்தாலும் அதற்கு ஏதோ காரணம் இருந்து இருக்கும்.//

ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.
அறிவழகன் போன்றோர் தெரிந்தே எந்த தவறான குணத்தையும் தன்னில் கொண்டிருக்க மாட்டார்கள். அவருக்கே தெரியாமல் அது இருந்தாலும், 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்..' என்று கொள்ள வேண்டிய அளவுக்கு சிறந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. பின்னால் கீதாம்மா, 'இது தவறிலை; இயல்பு தான்' என்கிற மாதிரி சொல்கிறார், பாருங்கள்!

//லக்ஷ்மணன் நினைப்பது போல் முன்பே டாகடர் சாந்தி சொல்லி விட்டார் 7வது அத்தியாத்தில்.//

ஆமாம், இந்த விஷயத்தில் லஷ்மணனும், டாக்டர் சாந்தியும் ஒரே கருத்தைத் தான் கொண்டிருக்கிறார்கள்!
டாக்டர் சாந்தி சொல்லியிருப்பதற்கு உங்கள் எடுத்துக்காட்டும் நன்று.

ஜீவி said...

@ பாசமலர்

உணர்வு கொப்பளிக்கும் வரிகள். இலக்கியங்களின் மீது மிகுந்த பிடிப்புள்ள தாங்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்து வருவதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி பாசமலர்!

ஜீவி said...

@ ஜிஎம்பி

இளம் வயதில் அந்தப் பெயரும் நான் கொண்டிருந்த புனைப்பெயர் தான். கதைகள் அல்லாத படைப்புகளுக்கு அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்தேன். அலசலைத் தாண்டி கதை போகிறது. தொடர்வதற்கு நன்றி.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

//கண்களைத் திறந்து கொண்டு பார்க்கும் உலகம், கண்களை மூடினால் வேறுவிதமாய் நமக்கும் தெரிகிறது அல்லவா? பார்வையற்றவர்களுக்கு உலகமே ஓசை வடிவில் தானே.//

கோமதிம்மாவும் உங்கள் கட்சி தான்.
நீங்கள் இருவரும் சொல்லச் சொல்ல,
அவரே தான் கொண்டிருந்த குறையாக நினைத்தது, குறையில்லை போலிருக்கு என்று இப்பொழுது எனக்கும் நினைக்கத் தோன்றுகிறது.

//தொடர்வதைப்பார்த்தால் இன்னமும் முக்கியமான ஒன்று சொல்லப்படவில்லை எனத் தோன்றுகிறது.//

தொலைத்தூரப் பயணம் இல்லையா?.. அதனால் ஒரு பஸ் மாற்றி வேறு பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். முந்தைய பஸ்ஸை விட இந்த பஸ் கொஞ்சமே நவீனமானது. அவ்வளவு தான்.

//என்னளவில் இந்தக் கதை உங்கள் மாஸ்டர்பீஸ் என்று சொல்வேன்.//

அம்மாடி! எவ்வளவு பெரிய பொக்கே கொடுத்து விட்டீர்கள்! பூக்களின் மணம் ஆளையே தூக்குகிறது. எந்த இக்கட்டிலும் கொஞ்சம் கூட சலிக்காமல் எவ்வளவு எழுதியவர், எழுதிக் கொண்டிருப்பவர் நீங்கள்! அதனால் அடக்கத்துடன் பெற்றுக் கொண்டு தங்கள் பாராட்டைத் தக்க வைத்து கொண்டு, மேலும் சிறக்க எழுத முயற்சிப்பேன். நெஞ்சம் நிறைந்த நன்றி, கீதாம்மா!

ஜீவி said...

@ Shakthiprabha

உன்னிப்பாகப் படிப்பவர் நீங்கள். தங்கள் ரசிப்பிற்குரியதாக இந்தக் கதை இருந்ததில் மகிழ்ச்சி. கதைக்குள் கதையாகத் தோற்றமளிப்பது விடுபட்டு வேறொன்றாக வெளிப்படப் போகிறது.
எதிர்பார்ப்புகளுக்கும், திருப்பங்களுக்கும் இனிப் பஞ்சமில்லை!

தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி, ஷக்தி!

Related Posts with Thumbnails