மின் நூல்

Wednesday, January 13, 2016

இப்போ என்ன புதுசு?

வெகு திரள் பத்திரிகைகளில் ஜெயமோகன் எழுதாதது ஒரு குறையாக இருந்தது.  ஆனந்த விகடனில் 2002- வாக்கில் 'சங்கச் சித்திரங்கள்' என்று அருமையான தொடர் எழுதினார்.  சமீப காலங்களில் 'ஜன்னலில்' அவரைப் பார்த்த நினைவிருக்கிறது.  ஜெயமோகன் வழக்கமாக பெரும் பத்திரிகைகளில் எழுதுவதில்லை.  சிறு பத்திரிகைகளும், அவரது வலைத்தளமுமே அவரது தாயகம்.

இப்பொழுது   'குங்குமம்' பத்திரிகையின் 18-1-'16  இதழில் அவரைப் பார்த்தது பேரானந்தமாய் இருந்தது.  ஜெயமோகனின் 'முகங்களின் தேசம்' என்கிற தொடர் இந்த இதழிலிருந்து துவங்கியிருக்கிறது.

"நான்  2012-ல் ஆறு நண்பர்களுடன் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டேன்" என்று கட்டுரைத் தொடர் ஆரம்பமாகிறது.   "ஈரோட்டின் அரச்சலூரிலிருந்து ஒரு காரில் கிளம்பி கர்நாடகத்தின் சாம்ராஜ்பேட் அருகே உள்ள கனககிரி வழியாக மகாராஷ்டிரம், குஜராத் என வடக்கு நோக்கிச் சென்று,
ராஜஸ்தானிலுள்ள லொதுர்வா என்னும் சிற்றூரை அடைந்து மத்திய பிரதேசம் வழியாகத் திரும்பினோம்.   கிட்டதட்ட 12000 கிலோ மீட்டர்" என்று ஜெயமோகன் குறிப்பிடும் பொழுது அவரது அலாதியான முயற்சி வியப்பாக இருக்கிறது. . இந்தியாவின் தொன்மை வாய்ந்த சமண வணிகப்பாதை இன்னும் இருக்கிறதா என்பதைக் கண்டறிவது தான் பயணத்தின்  நோக்கமாம்.

தென் இந்தியாவின் தக்காண பீடபூமியின் விளிம்பிலிருந்து வட இந்திய  பெருநிலம் நோக்கி 2500 அடி ஆழத்திற்கு செங்குத்தாக இறங்கிச் செல்லும் மெய்சிலிருக்கும் அனுபவம் பற்றி அவர் விவரிக்கும் பொழுது 'த்ரில்'னான உணர்வு..  ஜெயமோகனின் எழுத்து நடையில் அழகியலுக்கு இடமில்லை எனினும் வரிசை வரிசையாக அவர் அடுக்கும் விவரங்களுக்குக் குறைச்சலிருக்காது.  அந்த விவரங்களினூடே  உண்மையின் ஒளிக்கீற்று பளிச்சிடும்.  இந்தக் கோணத்தில் அவரைப் படிப்பதே ஒரு அனுபவமாகிப் போகிறது.  இவர் பெற்ற அனுபவங்களே நம் அனுபவங்களாகிப் போகும் வித்தை இவர் எழுத்தில் நிகழும்.

ஷிண்டேயின் உணவு உபசாரத்தை அவர் வர்ணிக்கையில் கண் கலங்கிப் போகிறது. 'எனக்கு என் தேசம், மனித உள்ளங்க்ளில்  குடியிருக்கும் அன்னபூரணி' என்று பூரித்த நெஞ்சுடன் அவர் சொல்லும் பொழுது விரிந்த பாரத தேசத்து வேரின் தொன்மை வாய்ந்த சிறப்புகள் இன்றும் மங்காது உயிருடன் இருப்பது நாம் அன்றாடம் சந்திக்கும் சின்னச் சின்ன நெருடல்களை மறக்க வைக்கிறது.


குமுதம் 'பக்தி' புத்தாண்டு சிறப்பிதழில் 'பிருந்தாவன யாத்திரை' என்றோரு தொடர் ஆரம்பித்திருக்கிறது.  இந்தத் தொடரை எழுதுபவர் மதிப்பிற்குரிய ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் சார்ந்த பெரியவர் சுவாமி கமலாத்மானந்தர்.

டைரியில் எழுதுவது போலவான குறிப்புகளுடன் தொடரின் ஆரம்பமே சுவாரஸ்யமாக இருக்கிறது.

நந்தகுமாரர் ஆடிக்களித்த இடம் பிருந்தாவனம்.  இங்கு 1907-ல் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் கிளை ஒன்று துவக்கப்பட்டது.   அதன் நூற்றாண்டு விழாவின் நிகழ்ச்சிகள் தொடர்பாக 2007-ம் ஆண்டு தாம் பிருந்தாவனம் சென்ற நினைவுகளைத் தொடராக எழுதுகிறார் சுவாமி கமலாத்மானந்தர்.

ஆக்ராவிலிருந்து மதுரா 55 கி.மீ. தூரத்திலும், மதுராவிலிருந்து 10 கி.மீ. அருகாமையிலும் இருக்கிறது பிருந்தாவனம்.  மதுராவிலிருந்து பிருந்தாவனம் செல்ல 125 இருக்கைகள் கொண்ட இரண்டு பஸ்களை இணைத்தது போன்ற தோற்றம் கொண்ட ரயில் வசதியும் இருக்கிறதாம்.

பிருந்தாவனத்தை ஜப பூமி என்கிறார்கள்.   அங்கு எல்லா நாட்களிலும்  எல்லா நேரங்களிலும் ஜப யக்ஞம் நடக்குமாம்.  வழி நெடுக ஜபமாலை பையில் ஜபமாலையை வைத்து ஜபம் செய்தபடியே செல்பவர்களை சாதாரணமாகப் பார்க்கலாமாம்.  'நாள் பூராவும் நாம சங்கீர்த்தனம் நடந்து கொண்டிருக்கிற திருத்தலம் இது' என்கிறார் சுவாமி கமலாத்மானந்தர்.

கம்சனின் கொடூரங்களிலிருந்து  குழந்தைக் கண்ணனைக் காப்பாற்ற நந்தகோபன் கோகுலத்திலிருந்து குடிபெயர்ந்து வேறிடம் சென்றார்.  நந்தகோபன் குடியிருந்த இடம் என்பதால் அந்த இடம் 'நந்தகாம்' (நந்தனின் கிராமம்) என்று அழைக்கப் படுகிறதாம்.  இந்த நந்த காம் செல்ல புறப்பட்டது வரை இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தை சுவாமிஜி நிறைவு செய்திருக்கிறார்.

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இப்பொழுதே ஆவலாக இருக்கிறது.


'தி இந்து' தமிழ்ப் பத்திரிகையின் பொங்கல் மலர் வெளிவந்து விட்டது.

இன்னும் படித்து முடிக்கவில்லை.  வாசித்து முடித்நதும் இந்த பொங்கல் மலர் குறித்த கறாரான விமர்சனம்  'பூவனம்' தளத்தில் வரவிருக்கிறது என்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன்.



அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்!






20 comments:

ஸ்ரீராம். said...

ரசித்துப் படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஜெயமோகனின் எழுத்துகளில் ஒரு வசீகரம் உள்ளது. படிக்கத் தொடங்கினால் இழுத்துக் கொண்டே சென்று விடும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

எழுத்தாளர் ஜெயமோகன் பற்றி தங்களின் பார்வையில் அறிய முடிந்த தகவல்கள் அருமை.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஷிண்டேயின் உணவு உபசாரத்தை அவர் வர்ணிக்கையில் கண் கலங்கிப் போகிறது. 'எனக்கு என் தேசம், மனித உள்ளங்க்ளில் குடியிருக்கும் அன்னபூரணி' என்று பூரித்த நெஞ்சுடன் அவர் சொல்லும் பொழுது விரிந்த பாரத தேசத்து வேரின் தொன்மை வாய்ந்த சிறப்புகள் இன்றும் மங்காது உயிருடன் இருப்பது நாம் அன்றாடம் சந்திக்கும் சின்னச் சின்ன நெருடல்களை மறக்க வைக்கிறது.//

பாரத தேசத்து வேரின் தொன்மை வாய்ந்த சிறப்புகள் இன்றும் மங்காது உயிருடன் இருப்பது EXCELLENT

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பிருந்தாவனத்தை ஜப பூமி என்கிறார்கள். அங்கு எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் ஜப யக்ஞம் நடக்குமாம். வழி நெடுக ஜபமாலை பையில் ஜபமாலையை வைத்து ஜபம் செய்தபடியே செல்பவர்களை சாதாரணமாகப் பார்க்கலாமாம். 'நாள் பூராவும் நாம சங்கீர்த்தனம் நடந்து கொண்டிருக்கிற திருத்தலம் இது' என்கிறார் சுவாமி கமலாத்மானந்தர்.//

ஆஹா, இதுபோன்ற ஓர் இடத்தையும் சூழலையும் நினைத்துப்பார்க்கவே மனதுக்கு இதமாக உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கம்சனின் கொடூரங்களிலிருந்து குழந்தைக் கண்ணனைக் காப்பாற்ற நந்தகோபன் கோகுலத்திலிருந்து குடிபெயர்ந்து வேறிடம் சென்றார். நந்தகோபன் குடியிருந்த இடம் என்பதால் அந்த இடம் 'நந்தகாம்' (நந்தனின் கிராமம்) என்று அழைக்கப் படுகிறதாம். //

தங்களின் இந்தப்பதிவின் மூலம், குழந்தை ஸ்ரீ கிருஷ்ணன் பால்ய லீலைகள் புரிந்த, புனித ஸ்தலமான ‘நந்தகாம்’ பற்றி அறிந்ததில் ஓர் தனி இன்பம் ஏற்படத்தான் செய்கிறது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'தி இந்து' தமிழ்ப் பத்திரிகையின் பொங்கல் மலர் வெளிவந்து விட்டது.

இன்னும் படித்து முடிக்கவில்லை. வாசித்து மு டி த் த து ம் இந்த பொங்கல் மலர் குறித்த கறாரான விமர்சனம் 'பூவனம்' தளத்தில் வரவிருக்கிறது என்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன்.//

ஆஹா, தாங்கள் கறாராகச் சொல்லியுள்ளது, கறாராக படிக்க வேண்டும் என்ற உந்துதலை இப்போதே எனக்குள் ஏற்படுத்தி விட்டது. :)

//அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி, சார். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும், எங்கள் தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

இந்த வாராந்தரிகளைப் படிப்பதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அனைத்திலும் சினிமா, இல்லைனா அரசியல், மட்டமான செய்திகள். மற்றபடி குமுதம் பக்தியில் ஆரம்பித்திருக்கும் தொடரையும் பார்த்தேன். சக்தி விகடனிலும் சரித்திரக் கதை ஒன்று வருகிறது. அவ்வளவு சுவாரசியம் இல்லை.

ஜெயமோகனுக்கு நீங்கள் விசிறி போல! எனக்கென்னமோ அவர் எழுத்து இப்போதெல்லாம் ஓர் அயர்ச்சியைத் தருகிறது.

ஹிந்து பேப்பர் ஆங்கிலம், தமிழ் இரண்டுமே படிப்பதில்லை என வைத்திருக்கிறேன். :) இத்தனைக்கும் ஆங்கிலத்தில் என் தம்பி (அசோகமித்திரனின் கடைசிப் பிள்ளை) ராமகிருஷ்ணன் தியாகராஜனும், தமிழ் ஹிந்துவில் ஆரம்பகாலத்தில் இன்னொரு சித்தி பிள்ளை, கிட்டத்தட்ட ஐந்து வயது வரை என்னால் வளர்க்கப்பட்டவன் வெங்கடசுப்ரமணியன் எஸ். ஸும் மிகப் பொறுப்பான பதவிகளில் இருக்கின்றனர். வெங்கடசுப்ரமணியனோடு அரசியல் செய்திகளில் முகநூலில் வாக்குவாதம் செய்வதோடு சரி! :) ஹிந்துப் பேப்பரைப் படிக்கும் எண்ணம் தோன்றுவதில்லை. :)

Geetha Sambasivam said...

முகநூலில் பார்த்து இங்கே வந்தேன். :)

Geetha Sambasivam said...

என்னோட பின்னூட்டங்கள் எங்கே? ஃபாலோஅப் மட்டும் வருகின்றன!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

G.M Balasubramaniam said...


எனக்கும் இப்போதெல்லாம் இந்த வாராந்திரப் பத்திரிக்கைகளை வாசிக்கத் தோன்றுவதில்லை. அவை இங்கு எளிதாகக் கிடைப்பதில்லை என்பதுவேறுவிஷயம்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// 'ஜன்னலில்' அவரைப் பார்த்த நினைவிருக்கிறது//

ஓ...
தற்போது 'ஜன்னல்' பத்திரிகையில் வந்ததா?
அடுத்து தற்போது, குங்குமத்தில்?
நல்லது... ஊருக்கு வரும்போது வாங்கிப் படிக்கிறேன், இறை நாட்டம்.

தகவலுக்கு நன்றி!

ஜீவி said...

Krishnamurthy. S. (Goole +)

குமுதம் உள்ளிட்டு இதழ்கள் எதையும் வாசிப்பதில்லை. சுவாமி கமலாத்மானந்தாவின் பிருந்தாவன யாத்திரை பற்றி நீங்கள் எழுதியதைப் பார்த்த பிறகு, அந்தத் தொடரை மட்டும் படிக்க ஆசை.

”தளிர் சுரேஷ்” said...

வாரப்பத்திரிக்கை வாசிப்பு குறைந்து போய் இப்போது மீட்டுக் கொண்டுவருகிறேன்! குங்குமத்தில் ஜெயமோகன் தொடர் பார்த்தேன்! படிக்கவில்லை! வாசிக்க வேண்டும்! வாரப்பத்திரிக்கைகள் இளைத்துப் போனது மட்டுமில்லாமல் ஒருவித சலிப்பையும் தற்போது உண்டு பண்ணுகின்றன. ஜன்னல் இதழ் பரவாயில்லை!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆமென்!.. அந்த வசீகரம் அவருக்கென்றே வாய்த்தது!

ஜீவி said...

@ வை.கோ.

தங்கள் தொடர் வருகைக்கும் தொடர்ந்து இட்ட பின்னூட்டங்களுக்கு நன்றி, வை.கோ. சார்!

வாடகை நூல் நிலையத்திலிருந்து வாங்கி எனக்குப் பிடித்த பகுதிகளை படிப்பது அது பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது சுலபமாக இருக்கிறது. இந்த வருடத்தில் வாசிப்பவர்களை ரொம்பவும் வருத்தாத ஆனால் யோசிக்க வைக்கக்கூடிய சின்னச் சின்ன பதிவுகளாக எழுதுவதே உத்தேசம்.

நன்றி, கோபு சார்!


ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

வாரப் பத்திரிகைகளில் தலைமுறை மாற்றம்! இதுபற்றி நிறையவே எழுதி விட்டேன்!

கதைளாம் கற்பனை பூச்சுற்றல்களை தவிர்த்து நிகழுலக யதார்த்த கட்டுரைகளை விரும்பும் போக்கு இப்பொழுது கூடியிருக்கிறது! அரசியல்+சினிமாப் பகுதிகளை குறைநதுக் கொண்டு கட்டுரைப் பக்கங்கள் இன்னும் கூடினால் தமிழ் வாரப்பத்திரிகைகள் பிரமாதமாக இருக்கும்!

இந்த விதத்தில் விதவிதமான கட்டுரைகளுக்கு 'குங்குமம்' தி பெஸ்ட்! அந்தக்கால முத்தாரத்தின் விரிவு மாதிரியும் எனக்குத் தோன்றும்! விலையும் கொஞ்சம் குறைச்சல்!

'தி இந்து'வின் பொங்கல் மலர் பற்றி எழுதவிருக்கிறேன். தங்கள் தகவலுக்காக. மலர் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

தோன்றுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள். பக்கத்தில் தமிழ்ப் பத்திரிகைகள் விற்கும் கடை ஏதாவது இருந்தால் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லை, தமிழ் நண்பர்களிடம் தமிழ்ப் பத்திரிகை படிப்போர் இருக்கிறார்களா என்று லேசாகத் தேடிப்பாருங்கள். அதுவும் இல்லை என்றால் உறவினர் வீட்டு விருந்துகளுக்குப் போகும் பொழுது அவரிடத்தில் தமிழ் பத்திரிகை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள்.

தமிழ் பத்திரிகை படித்து தொடர்பு விட்டுப் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் இந்த அவெர்ஷன் உங்களிடம் என்று நினைக்கிறேன். வாரந்தர பத்திரிகைகள் படித்தால் உங்களுக்கு பதிவு எழுத நிறைய விஷயங்கள் கிடைக்கும். 'என்ன எழுதுவது என்று யோசனையாகப் போய்விட்டது' என்று அடிக்கடி நினைக்கிறீர்கள் அல்லவா? வாராந்தரிகளைப் புரட்ட ஆரம்பித்தாலே, அந்த யோசனைக்கு இனி இடமில்லை. எதைப் பற்றியும் எழுத ஒரு ஆரம்பப்புள்ளி கிடைத்து விடும். அதை வைத்துக் கொண்டு கோலம் போடுவது உங்கள் பொறுப்பு..

வருகைக்கு நன்றி, சார்!

ஜீவி said...

@ அ. முஹம்மது நிஜாமுத்தீன்

தற்போது இல்லை, நண்பரே! சில மாதங்களுக்கு முன் நான் பார்த்த 'ஜன்னல்' இதழில் அவர் எழுதியிருந்த நினைவு இருந்தது.. அதனால் குறிப்பிட்டேன்.

நல்லது. படித்துப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் தொடருங்கள்.

வை.கோ.சார் தளத்தில் உங்களைப் பார்த்தது. தங்கள் அன்பான வருகைக்கு நன்றி, நண்பரே. இந்தத் தளத்தில் தொடர்ந்து நாம் பேசலாம்.


ஜீவி said...

@ Krishnamurthy. S.

அம்மாடி! எவ்வளவு நாட்கள் ஆயிற்று, உங்களைப் பார்த்து.

எஸ்.ஏ.பி.யைப் பற்றி நான் எழுதியதிலிருந்து, குமுதம் என்றாலே என் நினைவு வந்து விடுவதற்கு நன்றி. அந்த ரசனையும் எஸ்.ஏ.பி. காலத்தோடு போயிற்று....

சுவாமிஜியின் கட்டுரையைப் படித்ததினால் பகிர்ந்து கொண்டேன்.

தாங்கள் நலம் தானே?/,, அன்பான பொங்கல் வாழ்த்துக்கள், சார்!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

தாங்கள் சொல்வது உண்மை தான். இழந்து போன சொர்க்கம் அது. வாரப்பத்திரிகைகளின் பொற்காலத்தை இழந்து போய் நிற்கிறோம் நாம்.

பார்ப்பது, கேட்பது, படிப்பது எல்லாமே அரசியல் + சினிமா காலத்தில் இருக்கிறோம். அதனால் பத்திரிகைகளும் அவற்றையே தேர்ந்தெடுக்கின்றன. எந்தப்பத்திரிகையை புரட்டினாலும் உள்ளடக்கம் இதுவே ஆதலால் நீங்கள் சொல்கிற சலிப்பையும் உணர முடிகிறது.

கைக்கு எட்டுகிற மாதிரி இருந்த 'ஜன்ன'லும் இப்போது எம்பினால் தான் எட்டுகிறது. கலை, இலக்கியம், ரசனை எல்லாமே வியாபார சட்டத்திற்குள் அடைக்கப்படும் போது கிழக்கு எப்போது வெளுக்கும் என்று ஏங்கத் தான் வேண்டியிருக்கிறது.

தங்கள் முதல் வருகைக்கு நன்றி, சார்! தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

அன்புடன்,
ஜீவி

Related Posts with Thumbnails